துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.2.09

ஏழாம் உலகமும்,நான் கடவுளும்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, முதன்முதலாக எழுத்தாளர் திரு.ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலைப்படித்தபோது சொற்களால் விவரிக்க இயலாத,கனமான உணர்வுகளின் ஆக்கிரமிப்புக்கு நான் ஆட்பட்டிருந்தேன்.. எதிர்பாராத ஒரு கணத்தில்,எங்கிருந்தோ திடீரென்று ஓங்கி ஒருஅறை வாங்கியதைப்போன்ற திகைப்பும்,பிரமிப்பும் என்னை ஆட்கொண்டிருந்ததோடு,மனதை முறுக்கிப்பிழியும் வேதனையும்,வலியும் அவற்றுடன் கூடவே சேர்ந்துகொண்டிருந்தன.

அன்றாட வாழ்வில் ,ஒரு இரக்கப்பார்வையையோ, சில சில்லறைக்காசுகளையோ வீசிவிட்டு அத்துடன் பொறுப்புக்கழிந்துவிட்டதாகக் கற்பித்துக்கொண்டபடி, நாம் மிகச்சாதாரணமாகக்கடந்து போகும் பிச்சைக்காரர்களின் உலகம்-வறுமை,பசி ஆகியவற்றால் மட்டும் கட்டமைக்கப்படவில்லை; அவர்களின் வாழ்வை வேறு சில சக்திகளும் கூட நிர்ணயம் செய்துகொண்டிருக்கின்றன என்ற உண்மையைப் பொட்டில் அடித்துப் புரிய வைத்தது அந்த நாவல். என்னை மிகவும் பாதித்துத் தூங்கவிடாமல் அடித்த அந்தப் படைப்பைப்பற்றி ஒத்த அலைவரிசையில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றால், அந்த நாவலைப் படிக்கும் மன உரம்,துணிவு எங்களிடம் இல்லை என ஒதுங்கிப்போனவர்களும்,புறங்காட்டி ஓடியவர்களுமே மிகுதி. மெய்யான கண்ணீரையும் ,கஷ்டங்களையும் -அவற்றின் அத்தனை பரிமாணங்களுடனும் எடுத்துரைக்கும் ஒருபடைப்பைத் தேவையில்லாமல் படித்து வீணான மனத்தொந்தரவுகளை அனாவசியமாக ஏன் வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்பது கூட அவர்களின் எண்ணமாக இருந்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட தரப்பினரையும் கூட அந்த நாவலைத்தேடிப்போக வைத்திருக்கிறது 'நான் கடவுள்' திரைப்படம் என்றால் ,அந்த ஊடகத்தின் வீச்சும்,வலிமையுமே அதற்கான காரணங்கள் என்பதை எளிதாகப்புரிந்து கொண்டுவிடலாம்.ஒரு நல்ல நாவலைத்தேடிப்போகச்செய்ததன் வழி, தான் சமூகத்திற்கு இழைத்திருக்கும் எத்தனையோ தவறுகளுக்குத் தமிழ் சினிமா ஒருவகையில் பிராயச்சித்தம் செய்துவிட்டதாக இதை எடுத்துக்கொண்டாலும் கூடத் தவறில்லை.. இத்தனைக்கும் 'நான் கடவுள்', முழுக்க முழுக்க ஏழாம் உலகத்தை மட்டுமே மையம் கொண்டிருப்பதல்ல.இரண்டின் மையப்புள்ளிகளும் வேறுவேறானவை என்பதை நாவலை முழுமையாகப் படித்தால் அறிந்து கொண்டுவிட முடியும்.
ஜெயமோகனின் சித்தரிப்பில் விரியும் பிச்சைக்காரர் உலகத்தை, அதன் பின்னணிகளை ,அவர்கள் வெறும் சரக்குகளாகவும், உருப்படிகளாகவும் மாற்றப்பட்டு- (சிலவேளைகளில் அவ்வாறு உருவாக்கப்பட்டும்கூட)பண்டமாற்று செய்யப்படும் அவலக்கொடூரங்களை மட்டுமே அந்த நாவலிலிருந்து எடுத்துக்கொண்டு, தான் உருவாக்கிய 'ருத்ரன்'என்ற அகோரி சாமியின் கதையை அதனுடன் முடிச்சுப் போட்டுத் தன்போக்கில் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லிக்கொண்டு போகிறார் பாலா.ஆனால் ஏழாம் உலகம், தீர்வு என்று எதையும் முன்வைக்கவில்லை; பிச்சைக்காரர்கள், பரஸ்பர பண்டமாற்றுக்கு ஆட்படும்போது ஒருக்கால் சாத்தியமாகக்கூடிய மிகக்கொடுமையான-குரூரமான பின்விளைவு ஒன்றை மட்டுமே போகிற போக்கில் பூடகமாகக்காட்டிவிட்டு நாவல் முடிந்து விடுகிறது. பொதுவான மட்டத்தில் பரவலாக அறிமுகம் ஆகாத ஒரு உலகத்தை அதன் சகல பரிமாணங்களுடனும் யதார்த்தமாக முன்வைத்து,அதன் வழி,சமூக மனச்சாட்சியைச்சற்றே அசைத்துப்பார்க்கும் வேலையை மட்டுமே நாவல் செய்தது. நாவலைப்படித்தவுடன், அதைப்பற்றிய என் மனப்பதிவுகளைக்கடிதத்தின் வழி எழுத்தாளரிடம் பகிர்ந்து கொண்டபோது அவர் கீழ்வருமாறு எனக்கு மறுமொழி அனுப்பியிருந்தார்.
''ஏழாம் உலகம்,மனிதனைப்பற்றிய ஒரு ஆய்வு. அவனுக்கு என்று உள்ள சமூக வாழ்வு முற்றிலும் இல்லாமல் ஆன பிறகு ,எதுவுமே அவனுக்கு எஞ்சாதபோது,அவனில் எஞ்சுவது என்ன-அதுவே உண்மையான மனித சாரம்-என்ற தேடல்.''
திரையில்,அதுவும் குறிப்பாக வணிகப்படங்களில் இத்தகைய ஆன்மீகத்தேடல்களுக்கு உறுதியாக இடமில்லை என்பதால்,நான் கடவுள் படமும் ருத்ரன் வழங்கும் தண்டனை அல்லது மோட்சங்களின் வழி, திரைக்கே உரிய விசேஷ குணங்களுடன் முடிவை நாடகப்படுத்திவிடுகிறது.
சட்டத்தைத்தன் கையில் எடுத்துக்கொள்ளும் வழக்கமான தமிழ்ப்படப்பாணியின் வேறொரு பதிப்பாகவே இது அமைந்திருக்கிறது.
ஜெயமோகனே குறிப்பிட்டிருப்பதைப்போல உறுதியாக இது பாலாவின் படம் மட்டும்தான்.
அகோரி கதைப்பின்னலும்,ஏழாம் உலகம் நாவலின் பின்புலம் ஒன்றும் இணைந்து உருவாகியுள்ள படம் இது.

குறிப்பிட்ட இந்த இரண்டு தளங்களிலுமே ஜெயமோகன் வலுவாக இருப்பதால்,தனது நாவலின் கதைக்களத்தைப்போலவே மற்றொரு களத்துக்கும் வசனம் எழுதுவது அவருக்கு மிக இயல்பாக சாத்தியமாகியிருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளிலுமே ஊசிவழி ஊடுருவும் நூலைப்போல மிக இலகுவாக நுழைந்து செல்கின்றன அவர் எழுதியுள்ள உரையாடல்கள். பிச்சைத்தொழிலையும் கூடக்கழிவிரக்கத்துடனும்,சுய புலம்பல்களுடனும் எதிர்கொள்ளாமல்,சமூகத்தையும், தங்களைக் கைவிட்ட கடவுளர்களையும் கேலி செய்வதன் வாயிலாக, அவர்கள் கடந்து போவதை அங்கதக்கூர்மையுடன் வசனங்களாக வடித்திருக்கும் ஜெயமோகனின் எழுதுகோல்,தத்துவார்த்த களமான பிறிதொன்றிலும் அதே வீரியத்துடன் செயல்பட்டிருக்கிறது. நையாண்டிகள், நக்கல்பேச்சுக்கள், தீவிரம் கலந்த தத்துவ விசாரங்களின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவங்கள்,நடப்பியல் எள்ளல்கள்( குறிப்பாக கோர்ட் காட்சி,காவல் நிலையக்காட்சி-)''கருத்தைக்கேட்டுட்டு ஓட்டை மட்டும் போட்டாங்க,ஒருத்தரும் அதுபடி நடக்கலியே''என்று சிவாஜியும்,''கணேசா உன் நடிப்பை மட்டும் யாருக்குமே கொடுக்காம போயிட்டியே'என்றுஎம்.ஜி.ஆரும் மாறி,மாறிப்பேசும் காட்சி,அங்கதத்தின் உச்சம்.அதுபோல நீதிபதியும்,இன்ஸ்பெக்டரும் உரையாடும் வரிகள்,நடப்பியலின் நயமான பகடிகள்.
படிகளில் அமர்ந்தபடி பிச்சைஎடுப்பவர்கள் அடிக்கும் கிண்டல்கள் -இந்தச்சமூகத்தையும்,எங்கோ இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கடவுளர்களையும் நோக்கி அவர்கள் தொடுக்கும் விமரிசனங்களாக மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. (''பிச்சை எடுக்கிறவன் கிட்டேயே பிச்சை எடுக்கிறான் பாருடா'',என்றும் ,அம்பானி பற்றி- ''அதெல்லாம் செல்லு விக்கிறவங்க உனக்கு ஒண்ணும் தெரியாது' என்றும் அந்தச்சிறுவன் கூறும் இடங்கள்,நயமான கேலிகள்..).

தங்களைப்பார்த்து இரக்கப்படுபவர்களை அல்லது தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய இந்தச்சமூகத்தை இப்படிப்பட்ட எள்ளல்களின் வழியாகவே அவர்கள் கடந்து செல்வதாக ஜெயமோகன் தனது வலையில் எழுதியிருந்ததைப் படித்தபோது அவரது அண்மைப்படைப்பாகிய 'ஊமைச்செந்நாய்' என்னும் நெடுங்கதை ஒரு நிமிடம் என் நினைவில் வந்து போயிற்று. 'ஊமைச்செந்நா'யில், தன்னை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துபவனை,அவன் அளிக்க முன்வரும் உயிர்ப்பிச்சையை மறுப்பதன் வாயிலாகக்கடந்து போகிறான் அந்த அடிமை; இங்கே தங்கள் நையாண்டிகளின் வழியே தங்களின் இழிநிலையைக் கடந்துபோகிறார்கள், இவர்கள்.

ஏழாம் உலகம் நாவலை வாசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில்,நாவலாசிரியர் உருவாக்கிய வித்தியாசமான அந்த உலகத்தைப்பற்றிய மனக்காட்சிகளும், பிம்பங்களும் என்னுள் படிப்படியாக விரிந்துகொண்டே வந்தன. எழுத்து ஊடகமும்,காட்சி ஊடகமும் வேறுபடும் இடம் அது. படிப்பவனின் மனோதர்மத்திற்கேற்பப் பல காட்சிப் புனைவுகளை உருவாக்கிக்கொள்ள இடம்தரக்கூடியது எழுத்து;ஆனால், தான் காட்டுவதைக் காண மட்டுமே வாய்ப்புத்தருவது திரை.அதனாலேயே 'நான் கடவுள்'படத்தைக்காண எனக்குள் பல மனத்தடைகள் இருந்தன.படத்தைப்பார்ப்பதால் எனக்கென்று நான் உருவாக்கி வைத்திருந்த மனக்காட்சிகள் கலைந்துவிடுமோ என்ற அச்சம். ஆனால் ஒரு இயக்குனராக பாலா காட்சிப்படுத்திய அந்த உலகம் என் கற்பிதங்களுக்கு நெருக்கமாகவே இருப்பதைப் படத்தைப் பார்த்த பின்பே அறிந்து கொண்டேன். படத்தின் முழுக்கதையும் நாவலைத்தழுவியதில்லையென்றாலும்...நாவலிலிருந்து எடுத்துக்கொண்ட களத்தைத் துல்லியமாக-படைப்பாளியின் புனைவுக்குப்பக்கத்தில் காட்ட பாலா மிகவும் சிரத்தையோடு நேர்மையாக உழைத்திருக்கிறார் என்பதை அந்தச்சித்தரிப்பின் ஒவ்வொரு காட்சியிலும் காண முடிந்தது.பலவகையிலும் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள் பலரையும் ஒருங்கிணைத்து, அவர்களைத் திரையில் நடிக்கவும் வைப்பதென்பது, அத்தனை எளிதாக சாத்தியமாகிவிடாத ஒரு அசாதாரணமான சாதனைதான்.

முழு நாவலையும் தழுவித்திரைப்படம் செய்வதாக அறிவித்துவிட்டு,எழுத்தின் ஆன்மாவையே குலைத்துப்போட்டுப் படைப்பாளியை நோகடித்த படங்கள்,தமிழ் உலகிற்குப் புதியவை அல்ல.அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டு 'ஏழாம் உலக'நாவல் களத்தை எழுத்தாளனின் கற்பனையோடு ஒத்திசைவு பெற்றதாகக் கட்டமைக்கக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதற்காகவும், பலரும் முன்வைக்கத் தயங்கும் அதிர்ச்சிகள் நிறைந்த ஒரு உலகைத் துணிந்து காட்சிப்படுத்தி -வெகுஜன மனச்சாட்சியில் ஒரு சில அதிர்வு அலைகளையாவது ஏற்படுத்த முற்பட்டதற்காகவும் பாலாவை உண்மையாகவே பாராட்டத்தான் வேண்டும்.
வாசக எதிர்வினைகள்;
உங்களது தேர்ந்த விமரிசனத்தைப் படித்தேன். இங்கு வேறு ஒரு திரைப்பட விழா நடந்து கொண்டிருப்பதால் அது முடிந்த பிறகு படத்தைப் பார்க்க வேண்டும்மற்றவை யாவும்
நலம்.நன்றியுடன்,சிவகுமார்.

நல்ல விமர்சனம்.முனைவர் சே.கல்பனா.

3 கருத்துகள் :

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

நல்ல விமர்சனம்

geethappriyan சொன்னது…

வணக்கம் அம்மா
நல்ல விமர்சனம்
இதே எண்ணம் தான் எனக்கும் படம் பார்த்த பின்னர் ஏற்ப்பட்டது.
அந்த எழுத்தாளர் எவ்வளவு நொந்து இருப்பார்.
நான் இது குறித்து எழுதிய விமர்சனம் படித்து விட்டு கருத்து சொன்னால் மகிழ்வேன்.
http://geethappriyan.blogspot.com/2009/06/100-ways-you-can-improve-environment.html

பெயரில்லா சொன்னது…

''ஏழாம் உலகம்,மனிதனைப்பற்றிய ஒரு ஆய்வு. அவனுக்கு என்று உள்ள சமூக வாழ்வு முற்றிலும் இல்லாமல் ஆன பிறகு ,எதுவுமே அவனுக்கு எஞ்சாதபோது,அவனில் எஞ்சுவது என்ன-அதுவே உண்மையான மனித சாரம்-என்ற தேடல்.''-ஜெயமோகன்

எழுத்தாளனின் கருணை இவ்வளவு ஆழமானதா,அதிர்ந்து போய்விட்டேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....