துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.3.09

அம்பையின் "அடவி"மகளிர் தின வாழ்த்துக்கள்

(குறிப்பு:
சுய புலம்பல்களும்,தன்னிரக்க வெளிப்பாடுகளும் மட்டுமே பெண் எழுத்துக்கள் என்ற போக்கை மாற்றிப் பெண் தனது உண்மையான சுயத்தை உணருவதே பெண்ணியம் என்பதைத் தன் புனைவுகள்,மற்றும் கூரிய சமூக ஆய்வுகள் வழியே முன்வைத்து நவீன பெண்ணியத்தமிழ்ப்படைப்புக்களின் திசைதிருப்பியாக விளங்கியவர் அம்பை என்ற புனைபெயர் கொண்ட சி.எஸ்.லக்ஷ்மி. கானடா நாட்டின் 'இயல்' விருதுக்கு இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டுள்ள அவரை இம்மகளிர் தினத்தன்று வாழ்த்துவதோடு அவரது குறிப்பிடத்தக்க படைப்புக்களில் ஒன்றாகிய 'அடவி' என்னும் நெடுங்கதை பற்றிய சில பதிவுகள் தொடர்கின்றன.)

ஓர் அடவியினுள் புதைந்து கிடக்கும் பலவகை அடுக்குகளைப்போல் பல அடுக்குகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருக்கும் புனைகதைப்பிரதி,அம்பையின் நீள்கதையாகிய 'அடவி'.
இக்கதையின் முதன்மைப்பாத்திரமாகிய செந்திரு மேற்கொள்ளும் காட்டுவாசம் ஓர் அடுக்கு; அங்கே சீதை, தன் கதையைத் தானே புனைந்து கொள்வதாக அவள் எழுதும் கதை ஓர் அடுக்கு;காட்டினுள் செந்திரு எதிர்ப்படும் காட்டுவாசிப்பெண்களின் வாழ்வு, பிறிதோர் அடுக்கு.இம்மூன்று அடுக்குகளிலும் மாறி,மாறி சஞ்சரிக்கும் இந்நெடுங்கதை, மரபார்ந்த கதை கூறலைத்தவிர்த்து, சிலதுண்டு துண்டான கணங்களையும்,அவற்றின் நிகழ்வுகளையும்,உணர்வுகளையும் மட்டுமே முன்வைக்கிறது.படைப்பின் மையம் எது என்பதைக்கண்டடையும் பொறுப்பும்,தேடலும் வாசகருக்கே உரியதாகின்றன.
தன் கணவனின் தொழில் சார்ந்த முன்னேற்றங்கள் அனைத்திலும் துணையிருந்து-அவற்றுக்கு மூளையாகச்செயல்பட்ட் செந்திரு,அவனது தொழில் கூட்டாளியாகத் தானும் ஏற்கப்பட்டிருக்க வேண்டிய தருணத்தில் அது மறுக்கப்பட்டுவிட-அதை ஒரு காரணமாக்கிக்கொண்டு, நடுத்தர வயதை எட்டிய நிலையில் 'வானப்ப்ரஸ்த' வனவாசத்தை மேற்கொள்கிறாள்.அங்கே அவள் பெறும் அனுபவங்கள்....,அவளுக்குள் கிளர்ந்தெழும் சிந்தனை ஓட்டங்கள்....,மனக்காட்சியாக அவளுக்கு சித்திக்கும் தரிசனங்கள் ...இவையே இப்படைப்பின் அடிமூலங்கள்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைக்காட்டுவாசத்தில் கழித்த சீதையின் கதை- நாட்டுப்புறக்கதையாடல்கள், இதிகாசக்குறிப்புகள்,மற்றும் சில தொன்மங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மறு வாசிப்பு செய்யப்பட்டு'சீதாயண'மாக மூலப்பிரதியின் இடையிடையே-அதன் யதார்த்தத்தை ஊடறுத்துக்கொண்டு இடம் பெறுகிறது.
சமகாலம், புராண காலம் என்ற இரு களங்களிலும் மறி, மாறிப்பயணப்படும் இப்புனைவு அந்த எடுத்துரைப்புக்களின் வழி முன்வைக்க முயல்வது பெண்ணின் இருப்புக்குறித்த தேடல்களையே.
பிறரின் சுமைகளைச்சுமத்தல்,பிறருக்காக வாழ்தல் என்பதன்றித் தனக்கான ஒரு வெளியைப் பெண் தானாகவே அமைத்துக்கொள்வதும்,தனக்கென்ற ஒரு தேடலை வகுத்துக்கொள்வதும் மட்டுமே அவள் வாழ்வை அவளுடையதாக்கும் என்ற செய்தி,இப்பிரதியின் உட்பொருளாக உறைந்திருக்கிறது.

''நான் லேசாகணும்'' என்கிறாள் செந்திரு.
''ஏதோ ஒரு விஸ்தரிப்பை அவள் அடைய நினைத்தாள்;எல்லா எல்லைகளும் உடைபடும் விஸ்தரிப்பு''என அவளதுமனநிலையைக் காட்டுகிறார் அம்பை.

மரபார்ந்த வாழ்க்கைத்தடத்தில் பழகிப்போன எளிமையான காட்டுவாசிப்பெண்களுக்கும் கூட மேற்குறித்த தேடல்கள் இருப்பதை அவர்களோடு பழகும்போது கண்டுகொள்கிறாள்செந்திரு. கணவர்களோ, பிற குடும்ப நபர்களோ ஊரில் இல்லதபோது அப்பெண்கள் விருந்துண்டு களித்து,மகிழ்ந்து தங்கள் விருப்பங்களுக்கு வடிகால் தேடிக்கொள்கிறார்கள்;தங்களுக்கான தனிப்பட்ட வெளியை அமைத்துக்கொண்டு-அங்கு கிடைக்கும் சுதந்திரமான தனிமையில் மரபுக்கருத்தியல்களைக் கட்டுடைத்து நொறுக்குகிறார்கள்.

வாழ்வின் பல நிலைகளிலும் ஆணுலகால் பந்தாடப்பட்ட சீதையும் , தன் வாழ்வின் இலக்கைதேடித் தானே பயணிப்பதாகத் தன் கதையை அமைக்கிறாள் செந்திரு. பூமி பிளந்து சீதையை விழுங்கியதான புராண அதிநிகழ்வைப் 'பூமியின் அடியே யாரும் எட்ட முடியாத வெகு ஆழத்தில்' சென்று விட்டது போன்ற உணர்வை அவள் பெற்றுவிட்டதாக யதார்த்தப்போக்கில் மாற்றி அமைக்கிறாள் அவள். காமம், குரோதம், பகைமை என அனைத்து உணர்வுகளும் மாறி மனமுதிர்ச்சி அடைந்த ஒரு கட்டத்தில் சற்றும் எதிர்பாராமல் அவள் இராவணனைச் சந்திக்கும்போது,அவன் அவளுக்கு நண்பனாகவே ஆகி விடுகிறான்.
கணவனும்,குழந்தைகளும் பலமுறை தொலைபேசியில் அழைத்தும் காட்டு வாழ்க்கையை விட்டுவர செந்திருவுக்கு மனமில்லை; அவள் உருவாக்கும் சீதையும் அப்படிப்பட்டவளே.அயோத்தி அரசன் இராமனே அவளை அழைத்தும், அனுமனைப் பல தடவை அனுப்பிவைத்தும் காட்டை விட்டுத் திரும்பிச்செல்ல அவள் மனம் ஒப்பவில்லை. செந்திரு, சீதை ஆகிய இருவரும் மேற்கொள்வது....தங்களின் ஆழத்தைத்தாங்களே அறியும் பயணம்; தங்களது வாழ்வைத்தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் முயற்சி.


பொதுவான சமூக நிலைப்பாட்டில், காடு-அடவி என்பவை ஆண்களின் வெளியாகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. காட்டு வாசம் செய்து உண்மையை- தத்துவ ஒளியைத்தேடுவது,அவனுக்குரியதாக மட்டுமே இதுவரை கூறப்பட்டு வந்திருக்கிறது.

''வேட்டையாட, சம்ஹாரம் செய்ய என்று தனியாகப்போனவர்கள் இதிகாச புருஷர்கள் தான்....இதிகாசப்பெண்கள்...அவரவர் கணவன்மார்களுடன் காட்டிற்குப்போயிருக்கின்றனர்........வனவாசம் செய்யும்படி தந்தை உத்தரவிட்டால் வனம் செல்லும் இராமனுடன் சீதைப்பதவிதான் பெண்ணுக்கு; நளனுடன் நடக்கும் தமயந்தியாகத்தன் பெண்ணின் காட்டு விஜயம்; ரிஷியான கணவனுடன் செல்லும் ரிஷி பத்தினி நிலைதான் பெண்ணுக்குரியது. தனியாகப்போனால் தவத்தைக்குலைக்கும் மேனகையாகப் போகலாம்...இல்லாவிட்டால் பெண்ணுக்குக்காடு திக்குத்தெரியாத ஒன்றுதான்.....அவளை ரட்சிக்க ஒருவன் வரவேண்டும் பின்னாலேயே'' ''எல்லாத்தரிசனங்களும், தேடல்களும் ஆண்களுக்குத்தான்; இவள்,ஆயிரம் விளக்கங்கள் தர வேண்டும்...சாக்குச்சொல்ல வேண்டும்...இல்லை,கண்ணனையோ, சிவனையோ வரித்துவிட வேண்டும்''என்கிறார் அம்பை.

பெண்ணைப்பொறுத்தவரை காடு என்பது.. ஒரு தண்டனையாகவும், அவளை அபலையாக்கி ஒதுக்கிவிடும் முயற்சியாகவும் மட்டுமே பழம்புனைவுகளில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. இக்கருத்தாக்கத்தைத்தகர்த்து,காடு என்னும் வெளியையும்,அங்கே மேற்கொள்ளும் அகமுகத்தேடல்களையும் பெண்ணுக்கும் உரியதாக ஆக்கியிருப்பதே அம்பையின் புனைகதைப் பிரதியாகிய 'அடவி'யின் தனித்துவம்.

(சிறுகதையை முழுமையாகப்படிக்க...;'அடவி',காட்டில் ஒரு மான் , சிறுகதைத்தொகுப்பு-அம்பை,காலச்சுவடு பதிப்பகம்,நாகர்கோவில்(முதல் பதிப்பு-ஆக.2000,மறு அச்சு- செப்.2001)

1 கருத்து :

முனைவர் சே.கல்பனா சொன்னது…

அம்மா வணக்கம் ,அம்பை அவர்களின் அடவி விமர்சனத்தைப் படித்தவுடன்,அப்புதினத்தைப் படிக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.பெண்ணை இரண்டாம் தரமாகவே எண்ணும் மனப்போக்கு மாற ஆணுலக மனத்தில் தேவை மாற்றமல்ல விழிப்புணர்வு.இதனை என்று பெறபோகிறார்களோ தெரியவில்லை.பெண் தனது சுயத்தை தேடி அடைவது அவளது வாழ்வின் குறிக்கோளாக அமையவேண்டும்.இதனை ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....