துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.5.09

ஜெயமோகனின் 'பத்ம வியூகம்'

''இந்தப் போர் ஒரு மாயச் சுழி.....மனிதர்களால் போரைத் தொடங்க மட்டுமே முடியும்....இன்று வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை......''

'மனித வாழ்க்கை என்பதே வெளியேற வழி தெரியாத ஒரு பத்ம வியூகம்தான்'

நவீன தமிழ்ப்புனை கதை வெளியில் , நெடுங்கதை என்ற குறு நாவல் வடிவத்தைக் கலை நேர்த்தியுடனும் , புது உத்திகளிலான கதைக் கூறு முறைகளிலும் கையாண்டு செழுமை சேர்த்து வருபவர் திரு ஜெயமோகன்.

'பத்ம வியூகம்' என்ற அவரது குறு நாவல், அதில் இடம் பெறும் படிமங்களாலும் ,வாசகனுக்குள் அவை உண்டாக்கும் வேறுபட்ட மனக் காட்சிகளாலும் தனித்த கவனத்தைப்பெற்றிருக்கிறது.

அக முகத் தேடல்களை அதிகம் பெற்றிருப்பதோடு , ஆழ்ந்த பல தள வாசிப்புக்களுக்கும் இடம் தருவதாக அமைந்துள்ள இக் கதைப் பிரதி , வெளிப்படையான முதல் வாசிப்பில் , மகாபாரதப் பின்புலத்தையே இயங்கு தளமாக நம் முன் விரிக்கிறது.

குருட்சேத்திரப் போர்க் களத்தில் , பத்ம வியூகத்திற்குள் நுழைவதற்கு மட்டுமே அறிந்து விட்டு ,அதிலிருந்து வெளியேறும் வழி தெரியாமல் மாண்டு போன தன் மகன் அபிமன்யுவிற்கு நீர்க்கடன் கழிக்க , கங்கைக் கரைக்குப் போகிறாள் அவன் தாய் சுபத்திரை. அங்கே - வியாச முனிவரின் வழியாக - அது , பிறவிகள்தோறும் அவனைத் தொடரும் விதி என்பதை அறிந்து அதிர்ச்சியுறுகிறாள். அடுத்த பிறவிலாவது அந்த விதியை வெல்லும் முறையை அவனுக்குக் கற்பித்தாக வேண்டுமென அவள் தாய் மனம் துடிக்கிறது. வியாசரின் துணையோடு - 'பிறவிகளின் சுவ'ரைத் தாண்டிப் பார்க்கும் ஆற்றல் கொண்ட ஒரு முனிவரின் உதவியைப் பெற்று , அவர் மூலம்- அடுத்த பிறவிக்குள் தன் மகன் புகுந்து விடும் முன்பாவது பத்ம வியூகத்திலிருந்து வெளியேறும் வழியை அவனுக்குக் கற்பித்து விடக் கடும் முயற்சியை மேற்கொள்கிறாள் அவள்.
மாயக் காட்சி ஒன்றால் அவள் மகன் தற்பொழுது ஏறியுள்ள கருபீடத்தைத் தாமரை மலராக்கிக் காட்டும் முனிவர் , அந்த மலரிலுள்ள இரண்டு புழுக்களில் ஒன்று அவளது மகன் எனச் சுட்டிக் காட்டி , அந்த மலர் கூம்புவதற்கு முன்பு அவள் பேச நினைப்பதை அவனிடம் பேசியாக வேண்டுமென்பதைக் கண்டிப்பாகக் கூறுகிறார். அதற்குள் தற்பொழுது மகனுடன் இருக்கும் பிறிதொரு இரட்டைப்பிறவி (இரண்டு புழுக்களில் மற்றொன்று) யாரென அறிந்தாக வேண்டும் என்ற ஆர்வம் சுபத்திரையிடம் பிறந்து விடுகிறது.

போர்க் களத்தில் தன் மகனால் கொல்லப்பட்ட கோசல மன்னன் பிருகத் பாலனே அடுத்த பிறவியில் அவனுக்குச் சகோதரனாகப் போகிறான் என்பதை முனிவர் மூலம் உணர்ந்ததும் , தான் கூறவந்ததை மறந்து ,''உன் இரட்டைச் சகோதரனே உன் எதிரி மகனே ! அவனிடம் கவனமாக இரு '' என்று கூவி விடுகிறாள் அவள்.உடனே சுதாரித்துக் கொண்டு பத்ம வியூகத்தின் புதிர் பற்றி அவள் அவனிடம் கூறத் தொடங்கும் முன் மலர் கூம்பி விட....., அவன் விதி பழையபடி மாற்றமின்றித் தொடர்கிறது.

பகைமையை மீண்டும் அவன் உள்ளத்தில் பதிய வைத்ததன் வழி - வேறோர் பத்ம வியூகத்திற்குள் அவன் சிக்கிக் கொள்ளவே அவள் வழி செய்து விட்டாள் என்பதைக் கண்ணன் குறிப்பாய் உணர்த்துவதுடன் கதை முடிகிறது.

மேலோட்டமான இந்த வாசிப்பு நிலையிலிருந்து அடுத்தடுத்த வாசிப்புத் தளங்களுக்கு நகர்ந்து இப் புனைவின் ஆழங்களுக்குள் பயணம் செய்கையில் பலப்பல பத்ம வியூகங்கள் நம் முன் விரிகின்றன.

எந்தக் கட்டத்தில் தொடங்கியது என்றே கூற முடியாதபடி எளிமையாய்த் தொடங்கிவிடும் போரும் , போட்டியும் , குரோதமும் , பகைமையும் , ஆங்காரமும் , சபதமும் மனிதர்கள் எளிதில் வெளியேற இயலாத பத்ம வியூகங்களாகி அவர்களைப் பொறியில் சிக்க வைத்து விடுவதோடு , அடுத்தடுத்த அழிவுகளின் விளைச்சலுக்கும் விதை போட்டபடி தொடர்வதை இக் குறு நாவல் அழுத்தமாக உரைக்கிறது.

துரௌபதியின் சபதம் முடிந்தாலும் , கிருபரும் அசுவத்தாமனும் வைத்த நெருப்பு , அவளது ஐந்து புதல்வர்களை எரிக்கிறது ; தொடர்ந்து கொலைவெறியோடு அலைகிறான் அசுவத்தாமன்.

''இந்தப் போர் ஒரு மாயச் சுழி.....மனிதர்களால் போரைத் தொடங்க மட்டுமே முடியும்....இன்று வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை......இந்தக் கணம் கால தேவன் வந்து போர் துவங்குவதற்கு முன்பிருந்த தருணத்தை அளிப்பதாகச் சொன்னால் அத்தனை பேரும் தங்கள் எதிரிகளை ஆரத் தழுவிக் கண்ணீர் உகுப்பார்கள்''
என்ற நாவல் வரிகள் , சமகாலத் தீவிர வாத வன்முறை நிகழ்வுகளுக்கும் , உலகின் பல நாடுகளில் நிகழும் போர்ச் சூழல்களுக்கும் மிகவும் நெருக்கமானவை. இலங்கை வாசகர்களிடையே இக் கதை தனித்த கவனத்தைப் பெற்றிருப்பதாகத் தமது நூல் தொகுப்பின் முன்னுரையில் ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பதும் இக் கருத்துக்கு அரண் சேர்க்கிறது.

போரைத் தவிர்த்து நாவல் புலப்படுத்தும் மற்றொரு பத்மவியூகம் , சுபத்திரையின் வாழ்க்கை. அர்ச்சுனனின் பெண் சார்ந்த பலவீனங்களை அறிந்திருந்தும்
''அறிய முடியாத ஆபத்துக்களும் , இன்பங்களும் நிரம்பிய ஒரு வாசலைத் திறக்கும் துடிப்புடன்''
அவனோடான வாழ்வு என்ற பத்ம வியூகத்திற்குள் நுழைகிறாள் சுபத்திரை. அதிலிருந்து வெளியேறும் வழி தனக்குத் தெரியுமா என்ற ஐயம் அவளுக்குள் எழுந்தபோதும் அதன் நிச்சயமின்மையே அவளை ஈர்க்கும் சக்தியாகி விடுகிறது. சிக்கிக் கொண்டுவிட்ட உறவுச் சுழலிலிருந்து மீட்சி என்பதே அவளுக்கு இல்லாமல் ஆகி விடுகிறது.

சுபத்திரையின் தனி வாழ்வு ஒரு புறமிருக்குப் பொதுவான தளத்தில் பார்க்கப் போனாலும் கூட....
'மனித வாழ்க்கை என்பதே வெளியேற வழி தெரியாத ஒரு பத்ம வியூகம்தான்'என்ற தத்துவப் பொருண்மையினையும் இப் படைப்பு மறை பொருளாக்கித் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது.

மிகு புனைவு , மிகை யதார்த்தம் ஆகியவை இன்றைய புனைகதை எழுத்தாளர்களால் பெரிதும் கையாளப்படும் போக்குகள். இது பற்றிக்குறிப்பிடும் எஸ் . ராமகிருஷ்ணன்,
''கதைகளின் வழியே பிரதிபலிக்கப்படும் வாழ்வியல் யதார்த்தத்தை விலக்கி , நிஜம் - கற்பனை என்ற பேதங்களைக் குலைத்து யதார்த்தத்திற்குள் அடைபட மறுக்கும் வாழ்க்கையின் புதிர், அற்புதம் , மீ மாயத் தன்மை ''ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகும் கதை உலகம் இது என்கிறார்.

ஜெயமோகனின் 'பத்ம வியூக'மும் இத்தகைய அதிதன்மை கொண்ட மாய யதார்த்த வாதப் போக்குகளைத் தொன்ம நிகழ்வுகளின் அடிப்படையில் கட்டமைத்திருந்தபோதும் ,அப் புனைவுக் கூறுகள் படைப்பாளியின் கலை நுட்பத் தேர்ச்சியை வெளிக்காட்டுவதோடு அமைந்து விடாமல் அவற்றினூடே சமூக..வாழ்வியல் விமரிசனங்களையும் செய்திருப்பதே இக் கதைப் பிரதியை மிக முக்கியத்துவம் கொண்டதாக ஆக்கியிருக்கிறது.
பத்மவியூகம் குறுநாவலை முழுமையாய்ப்படிக்க.....

ஜெயமோகன் குறுநாவல்கள் முழுத் தொகுப்பு, உயிர்மை வெளியீடு.

1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

//''இந்தப் போர் ஒரு மாயச் சுழி.....மனிதர்களால் போரைத் தொடங்க மட்டுமே முடியும்....இன்று வெளியேறும் வழி எவருக்கும் தெரியவில்லை......இந்தக் கணம் கால தேவன் வந்து போர் துவங்குவதற்கு முன்பிருந்த தருணத்தை அளிப்பதாகச் சொன்னால் அத்தனை பேரும் தங்கள் எதிரிகளை ஆரத் தழுவிக் கண்ணீர் உகுப்பார்கள்''//

உறுதியாக.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....