21.6.10

’அசடன்’ ஒரு முன்னோட்டம்

இளவரசன் மிஷ்கின்/இடியட்
இரண்டு ஆண்டுக்காலம் நீண்டு போன பணி நிறைவுற்றிருக்கிறது.

மாமேதையும்,உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியருமான தஸ்தாயெவ்ஸ்கியின் இடியட் நாவலை (அசடன்) முழுமையாக மொழியாக்கம் செய்து  முடித்திருக்கிறேன்.
 இத் தருணம் ஒரு வகையில் நிறைவளித்தாலும் நாவலுக்கு நெருக்கமாகப் போய் அதோடு ஒன்றியிருந்த கணங்கள் முடிவுக்கு வந்து விட்டதே என்ற வருத்தத்தையும் கிளர்த்துகிறது.

2006இல் தஸ்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலை மொழியாக்கம் செய்திருந்தேன்.அது 2007இன் இறுதியில் வெளிவந்து இலக்கிய வட்டத்தில் வரவேற்புப் பெற்றது.
'குற்றமும் தண்டனையும் மொழியாக்க அனுபவம்
http://masusila.blogspot.com/2008/10/blog-post_31.html

குற்றமும், தண்டனையும் - கடிதங்கள்
http://masusila.blogspot.com/2009/03/blog-post_24.html

குற்றமும் தண்டனையும் மேலும் கடிதங்கள்
http://masusila.blogspot.com/2009/04/blog-post.html

குற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்
http://masusila.blogspot.com/2009/05/blog-post_20.html

அதனால் விளைந்த ஊக்கமே என்னையும்,பதிப்பகத்தாரையும் இடியட் நாவலை மொழிபெயர்க்கும் தூண்டுதலை அளித்தது.

குற்றமும் தண்டனையும் நாவலை விடவும் அளவில் பெரிய நாவல் இடியட்.(4பாகங்கள்).
மேலும் அந்த நாவலைப் போல ஒரே சீரான  ஒருமுகத் தன்மை அற்றதாய்ப் பல்வேறு முடிச்சுக்களும் பலரின் உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவை இடியட்.

பல இடங்களில் திணறவும் தடுமாறவும் வைத்தாலும் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தாயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க ஒண்ணாதது.

என் கையெழுத்துப் பிரதியாக 1400 பக்கங்களைத் தொட்டிருக்கும் ’அசடன்’ அச்சுக்காகப் பதிப்பாளர் வசத்தில் இப்பொழுது இருக்கிறது.
2,3, மூன்று மாதங்களில் அச்சுக் கோத்துப் பிழைதிருத்தம் செய்து முடித்து ஆண்டு இறுதிக்குள் - புத்தகக் கண்காட்சிக்கு முன் - அது வெளிவந்துவிட
வேண்டுமென்பதே என் விழைவும்,பதிப்பகத்தாரின் விழைவுமாகும்.

என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒப்பற்ற இப் பணியை என் வசம் ஒப்புவித்த
மதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கு இப் பதிவின் வழி என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிஉணர்வை உரித்தாக்குகிறேன்.

குற்றமும் தண்டனையும் போலவே மிகச் சிறப்பான பதிப்பாக - உரிய திரைப்படக் காட்சிப் படங்களுடன்- ‘அசடன்’நாவலையும் அவர் வெளியிடவிருக்கும் நாள் நோக்கி வாசகர்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

முன் பதிவு மற்றும் நூலைப் பெற முகவரி;
Mr.Duraippaandi,
BARATHI BOOK HOUSE,
D - 28 , CORPORATION SHOPPING COMPLEX(SOUTH INSIDE),
OPP.PERIYAR BUSSTAND,MADURAI-625 001

8 கருத்துகள்:

  1. வாழ்த்துக்களும் நன்றிகளும் அம்மா..

    பதிலளிநீக்கு
  2. புத்தகக் கண்காட்சிக்கு முன் - அது வெளிவந்துவிட
    வேண்டுமென்பதே என் விழைவும்,பதிப்பகத்தாரின் விழைவுமாகும்.//
    உங்கள் விருப்பம் நிறைவேறி நல்லபடி அச்சேறட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நாங்களும் காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நல்ல பணியை முடித்து இருக்கிறீர்கள். புத்தகக் கண்காட்சிக்கும் முன் புத்தகம் வெளி வர எல்லா வல்லவன் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள்! மேலும் இலக்கியப் பணி தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்.. நீங்கள் குறிப்பிட்டிருந்தபடி குற்றமும் தண்டனையும் இந்த மாதம்தான் வருவித்தேன். அதை படிக்கத் துவங்குமுன், இடியட் முடிந்துவிட்டது தமிழில் என்பது மகிழ்ச்சியான செய்தியே. தொடரும் உங்கள் தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ஜமாலன்.

    பதிலளிநீக்கு
  7. ஆவலுடன் காத்து இருக்கிறேன்

    பதிலளிநீக்கு