துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.8.10

திறமான புலமையெனில்...’சிகரத்தில் நிற்கும் ஆளுமைஎன்று பாவண்ணன் அவர்களால் குறிப்பிடப்பட்ட சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளரும்,
படைப்பிலக்கியம்,மற்றும் தேர்ந்த திறனாய்வுக்காகவே தனது அசுர உழைப்பின் ஒவ்வோரு அங்குலத்தையும் செலவிட்டு வருபவரும்,
நுட்பமான இலக்கிய தத்துவத் தேடல்களின் பாதையில் பயணிப்பவருமான திரு ஜெயமோகன் அவர்களின் ‘கொற்றவை’நாவலுக்குக் கானடாவின் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு ,  இவ்வாண்டின் புனைவுக்கான விருதை அளித்துத் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இளம் வயதிலேயே ‘கதா’,சரஸ்வதி சம்மான்’ முதலிய விருதுகளைப் பெற்றிருப்பவர் ஜெயமோகன்  என்றபோதும் அரசு சார் அமைப்புக்களான சாகித்திய அகாதமி போன்றவை ஜெயமோகனின் படைப்புக்களை(விஷ்ணுபுரம்,பின் தொடரும் நிழலின் குரல்,கொற்றவை) இன்னமும் கண்டு கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
அதனால் எந்த இழப்பும் ஜெயமோகனுக்கு இல்லை.
உச்சத்தில் இருக்கும் ஒரு சமகால இலக்கிய ஆளுமையை - அவரது ஆகச் சிறந்த படைப்புக்களுக்காகக் கௌரவிக்கும் வாய்ப்பை நம் நாடு தவற விட்டுவிடும் அவ்வளவுதான்..
ஆனாலும் அது பற்றி இங்கே யாருக்கும் அக்கறை இல்லை . விருது பெற மேடைக்குக் கூடச் செல்ல முடியாமலிருக்கும் தண்டூன்றித் தளர்ந்த முதுமையில்...படைப்பூக்கம் வற்றிப் போன சாதாரணமான ஒரு படைப்புக்காக அவசர கதியில் பரிசை வழங்குவதுதானே வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது?
’திறமான புலமையெனில் வெளிநாட்டார் 
அதை வணக்கம் செய்தல் வேண்டும்
என்றான் பாரதி.
அவர்கள் உரிய மதிப்பை,வணக்கத்தைச் செலுத்தி விட்டார்கள்.
நாம்....?.

http://www.jeyamohan.in/?p=7748

4 கருத்துகள் :

'பரிவை' சே.குமார் சொன்னது…

//’திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்’
என்றான் பாரதி.
அவர்கள் உரிய மதிப்பை,வணக்கத்தைச் செலுத்தி விட்டார்கள்.
நாம்....?.//

நாம் எப்பொழுதும் திறமைக்கு மதிப்பளிக்க மாட்டோமே அம்மா. சில்லறைக்கும் அரசியல் சித்து விளையாட்டிய்கு மட்டும்தானே மதிப்பளிப்போம்.
சிறந்த படைப்பு என்றும் வாழும் அம்மா, விருதுகளால்தான் வாழ வேண்டும் என்பதில்லை.

அனிந்திதை சொன்னது…

எழுத்தாளருக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

cheena (சீனா) சொன்னது…

வாழ்த்துக்களா - வாழ்த்துகளா - எது சரி -

சித்திரவீதிக்காரன் சொன்னது…

கொற்றவை அற்புதமான நாவல். எனக்கு மிகவும் பிடித்த ஜெயமோகனின் நாவல். பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....