1.11.10

காமர் மந்தியும்,காதல் தலைவியும்

(தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு 2)


சங்கக் காதல் கவிதைகள் வெறும் தன்னுணர்வுப் பாக்கள் மட்டுமல்ல;சமூகச் சித்தரிப்புக்கும் உரிய இடமளிப்பவை அவை.
காட்டாகக் கடுந்தோட்கரவீரனாரின் குறிஞ்சித் திணைக் குறுந்தொகைப்பாடல் ஒன்று.
தலைவியை எவருமறியாமல் சந்திக்க எண்ணும் தலைவன்,மக்கள் சஞ்சாரம் குறைவான இரவுப் பொழுதை அதற்காகத் தேர்ந்தெடுக்கிறான்.
(சங்கக் கலைச் சொல்லாக்கம் அதை 'இரவுக் குறி'எனக் குறிப்பிடும்;பகலில் நிகழும் சந்திப்பு, ’பகல் குறி'என்று வழங்கப்படும்)
இருள் அடர்ந்து செறிந்த மலைக் காட்டுப் பாதையில்..., மழை ஈரம் படந்து பரவிக் கிடக்கும் வழுக்கல் பாறைகளினூடே தன்னந்தனியனாய்த் தன்னைக் காண அவன் மேற்கொள்ளும் பயணம் தலைவியின் உள்ளத்தைத் தீய்க்கிறது.அவன் நடந்து வரும் பாதையோ மிக மிகக் குறுகலானது.ஒரு புறம் நெடிதுயர்ந்து நிற்கும் மலைத் தொடர்கள்;மறுபுறம் ஆளையே விழுங்கக் காத்திருக்கும் ஆழமான பள்ளத்தாக்குகள்.
இதே போன்றதொரு மலைப் பாதையைத் தனது அகநானூற்றுப் பாடல் ஒன்றில்,
''யானைக் கயிற்றுப் புறத்தன்ன கன்மிசைச் சிறுநெறி''
என 
கபிலரும் வருணித்திருக்கிறார் .
யானையின் முதுகின் மீது போடப்படும் புரசைக் கயிறு எத்தனை அகலமானதோ அந்த அளவு மட்டுமே அகலம் கொண்டிருக்கும்குறுகலான  மலைப் பாதையில் நள்ளிருட்டு வேளையில் தனிவழிப் பயணம் செய்து,தன் பொருட்டு உயிரைப் பணயம் வைத்துத் தலைவன் பட நேரும் துன்பம் கண்டு மன உளைச்சலுக்காளாகும் தலைவியின் உள்ளக் குமுறலைக் குறிப்பான ஒரு படிமத்தால் அவனது உள்ளத்தில் அழுத்தமாகப் பதிக்கிறாள் தோழி.
மலை நாடான குறிஞ்சிமண், குரங்குகளின் தாயகம்.
அங்கே குரங்குக் குடும்பம் ஒன்றில் நிகழும் அவல நிகழ்வைத் தன் கற்பனையால் புனைந்து காட்சிப்படுத்துகிறாள் தோழி.
கருமையான கண்களை உடையதும்,மரத்துக்கு மரம் தாவுவதையுமே தொழிலாய்க் கொண்டிருப்பதுமான ஆண்குரங்கு(கடுவன்)ஒன்று அவ்வாறு தாவும்போது தவறி விழுந்து இறந்து போகிறது.அதன் பிரிவைத் தாங்கிக் கைம்மை நிலையில் வாழ விரும்பாத பெண்குரங்கு(மந்தி),தன் இளம் குட்டிகளை....இன்னும் மரம் விட்டு மரம் தாவக் கூடப் பயின்றிராத 
''ல்லா வன் பறழ்''களைத்(பறழ்-குட்டி)தன் சுற்றத்தாரிடம் அடைக்கலமாக ஒப்புவித்து விட்டு ,
ஓங்கி உயர்ந்த மலை உச்சியிலிருந்து வீழ்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறது.
குரங்குகள் தாவுவதும்,தவறி வீழ்ந்து மடிந்து போவதுமாகக் குறிஞ்சி நிலத்தில் அன்றாடம் தலைவன் பார்த்துப் பழகிய ஒரு காட்சியைச் சிறிது புனைவையும் உடன் சேர்த்து அவன் முன்பு படமாய் விரிக்கும் தலைவி,அத்தகைய மலை நாட்டுக்குத் தலைவனே என்று அவனை அழைக்கிறாள்.
''''கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
   கைம்மை உய்யாக் காமர் மந்தி
   கல்லா வன்பறழ் கிளை முதல் சேர்த்தி
   ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
   சாரல் நாட..''
நிலக் காட்சியை வைத்து அவனை விஸ்தாரமாக விவரித்த தோழி ,அடுத்துத் தான் சொல்ல வரும் செய்தியை மிகவும் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறாள்.அவள் அவனுக்குக் குறிப்பாக  உணர்த்த விரும்பிய செய்தி , பாடலின் முதற்பகுதியிலேயே அஞ்சலாகி விட்டதால் நள்ளிரவுப் பொழுதில் நட்டநடு யாமத்தில் இனி வராதே என்ற பொருள்பட,.
''நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே''
என்று சுருங்கக் கூறியபடி, அதன் ஆழத்தைக் கோடி காட்டி விட்டு மட்டும் செல்லும் பாடலின் விரைவான...நறுக்குத் தெறித்தற்போன்ற போக்கு,
சங்கக் கவிதைகளின் அழகியல் கலை நுட்பத்தின் வெளிப்பாடாகச் சிறக்கிறது.

மரத்துக்கு மரம் தாவுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டிருக்கும் வலிமையான கடுவனே அந்த மலைச் சாரலில் தவறி விழும்போது...இருள் கப்பிய மலை நெறியில் தன்னந்தனியே தலைவியைக் காண வரும் தலைவனுக்கும் அபாயம் நேரிட வழியிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி விட்டு ,அதனால் தலைவிக்கு உண்டாகும் அவத்தைகளை மந்தியின் தற்கொலைக் காட்சியின் மூலம் ஒரு படிமமாக முன் வைக்கிறாள் அவள்.

ஆறாம் அறிவற்ற அல் திணை உயிரினமாகிய குரங்கு கூடத் தன் துணைவனின் பிரிவு தாங்க முடியாமல் மடிந்து போகுமென்றால் தனி வழி வரும் தலைவனுக்குத் துன்பம் நேர்ந்தால் அதன் பிறகு தலைவி உயிருடன் இருக்க மாட்டாள் என்பதை எடுத்துக் காட்டி அவளை உடனடியாகத் திருமணம் முடிப்பது ஒன்றே இச் சிக்கல்களுக்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும் என்பதை அவனுக்கு உணர்த்துவதே தோழி கூற்றின் சாரமாக - உட்பொருளாக உறைந்திருக்கிறது.

விலங்குகளின் வாழ்வு நெறிகள் வேறானவை;கணவனோடு இணைந்து குடும்பமாக வாழ்வது.., அவன் பிரிவுக்காக உயிர் துறப்பது, குழந்தைகளைப் பொறுப்பாக உறவினரிடம் ஒப்புவிப்பது போன்ற நெறிமுறைகள் அவை அறியாதவை.
விதவையான தாரை புலம்பலை விரிவாகக் காட்டும் கம்பனும் கூடச் சுக்கிரீவனுக்காகத் தன்னைக் கொல்ல முற்பட்ட இராமனிடம் மனித நெறிமுறைகளுக்கும்,விலங்கு வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைத் துணிவாக முன் வைக்கிறான்.

குறிஞ்சியின் மலைச் சாரலிலேயே ஊறி உட்கலந்த புலவர், இதை அறியாதவரில்லை;எனினும் தலைவனுக்கு ஏற்படக் கூடிய அபாயம்,தலைவியிடம் எத்தகைய தாக்கத்தை உண்டாக்கக் கூடும் என்பதை வெளிக் கொணரவே மலை வாழ் உயிர்களாகிய குரங்குகளைப் புனைவுப் பொருளாகி உள்ளுறை அமைக்கிறார் அவர் .

சங்கச் சமுதாயத்தில் நிலவிய கைம்மைக் கொடுமையின் பதிவாகவும் இப் பாடல் அமைந்திருக்கிறது.
கணவனை இழந்த மகளிரைக் 'கழிகல மகளிர்'(அணிகலன் துறந்தோர்)'உயவற்பெண்டிர்'என்ற தொடர்களாலேயே குறிப்பிடுகிறது சங்க இலக்கியம்.
நீரில் இட்டு வைத்த பழஞ்சோற்றை எள்ளும் புளியும் கூட்டி உண்பதும்,குப்பைக் கீரைகளை உப்பின்றி உண்பதுமே விதவைப் பெண்ணின் உணவுகள் என்கின்றன சங்கப் பாடல்கள்.
உப்பின்றி இடப்பட்ட வெறும் சோற்றை உண்டு, பரற்கற்கள் படர்ந்து பரவிய கட்டாந்தரையில் பாய் படுக்கைகள் இன்றி உறங்குவதே அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வாக இருந்திருக்கிறது.
’அடையிடைக் கிடந்த கைபிழி பண்டம்,வெள்ளென் சாந்தொடு புளிபெய்து     அட்ட வேளை வெந்தையும்’’
‘’பரல் பெய் பள்ளியில் பாயின்றி வதியும்’’
ஆகிய பாடல் வரிகள் இதற்கான ஆவணங்கள்.
பூதப் பாண்டியனின் மனைவி பெருங்கோப் பெண்டு , தன் கணவன் பூதப் பாண்டியன் மடிந்தபோது தீப்பாய முயலுகையில் வெளியிடும் கவிதையிலும் கணவனின் துயருக்காக அவள் படும் வேதனையை விட விதவைத் துன்பத்தைத் தாங்க மாட்டாத அவலமே விஞ்சி நிற்பதைக் காண முடியும்..

கோவலனை இழந்த நிலையில் கண்ணகியும் கூட,
''இன்புறு தன் கணவர் இடரெரி மூழ்கத்
 துன்புறுவன நோற்றுத் துயருறும் மகளி’’ராகிய விதவைப் பெண்டிரைப் போலத் தான்  அவலம் கொண்டு அழிவதை விட,உயிரை விடுப்பதே மேலானது என்றே குறிப்பிடுகிறாள்.

சிந்திக்கும் திறனற்ற ஜீவராசி ஒன்று, கைம்மையைப் பொறுத்துக்கொள்ள முடியாமலிருக்கும் நிலையைச் சுட்டிக் காட்டுவதன் மூலம்,..அந்தக் காலகட்டச் சூழல் முழுவதையுமே மனக் கண்ணுக்குள் கொணர்ந்து விடுகிறார் கவிஞர்.

அன்பான துணையைப் பிரிந்தது மட்டும்தான் மந்தியின் சோகம்;ஆனால் மானுட இனத்தில் விதவை நிலை என்ற கொடும் சிலுவையையும் சுமக்க நேரிடும்போது அப்பெண் எதிர்கொள்ள நேரும் அவலங்கள் மிகக் கொடுமையானவை.

தலைவி இன்னமும் அவனை மண முடிக்கவில்லையென்பது உண்மைதான்.எனினும் மனதுக்குள் அவனையே தன் கணவனாக வரித்தபின் அவனைப் பிரிந்து சமூகத்தின் ஏச்சு பேச்சுக்களைத் தாங்கி அவள் உயிர் தரிப்பது சாத்தியமற்றது என்பதையே தான் முன் வைக்கும் குறிப்புப் பொருளால் தலைவனுக்குப் புரிய வைக்கிறாள் தோழி.

மலை சார்ந்த குறிஞ்சி மண்ணிலேயே ஊறி உட்கலந்து குரங்குக் குடும்பத்தின்  வாழ்க்கையை...அவற்றின் தாவலை...சின்னஞ்சிறு பறழ்க்குட்டிகளை அனுதினமும் பார்த்து அவதானிப்பதையே தன் வாழ்வின் ஒரு கூறாக்கிக் கொண்டிருந்த புலரின் கற்பனை வீச்சு எந்தெந்தத் தளங்களையெல்லாம் தொட்டு விசாலமாகிப் படர்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வதற்கு இப் பாடலில் அவர் அமைத்திருக்கும் அற்புதமான உள்ளுறை ஒன்றே போதுமானது.
  ‘’கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்
   கைம்மை உய்யாக் காமர் மந்தி
   கல்லா வன்பறழ் கிளை முதல் சேர்த்தி
   ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
   சாரல் நாட நடு நாள்
   வாரல் வாழியோ வருந்துதும் யாமே''-
                                   -கடுந்தோட்கர வீரனார்(குறுந்தொகை- 69 )
(கருங்குரங்கு இறந்து விட,பிரிவைத் தாங்காத மந்தி,தன் கல்லாத குட்டிகளை சுற்றத்திடம் ஒப்படைத்து விட்டு,மலை முகட்டிலிருந்து குதித்து உயிர் விடும் மலைச் சாரல் நாடனே!இரவில் வராதே நாங்கள் கவலைப்படுவோம் நீ வாழ்க
-எழுத்தாளர் சுஜாதாவின் எளிய உரை-
  401காதல் கவிதைள்,உயிர்மைவெளியீடு)




11 கருத்துகள்:

நேசமித்ரன் சொன்னது…

அழகு !தெள்ளுதமிழ் நீர் துஞ்சிய இலை தீண்டலாய் வழுக்கி இறங்குகிறது.

அடவிச் சாரலில் வளர் புல் மொய்க்கும் புள்ளின ஆர்ப்பு உள்மீந்து ...

dondu(#11168674346665545885) சொன்னது…

அருமையான பதிவு.

இதை படிக்கும்போது நான் இட்ட “துணைவியின் பிரிவு” என்னும் பதிவு நினைவுக்கு வருகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2005/11/blog-post_19.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

மீனாக்ஷி சொன்னது…

சங்கத் தமிழும், அதை விளக்கும் உங்கள் தமிழும் அழகாக இருக்கிறது. ரசித்து படித்தேன். இது போன்ற சங்க காலத்து பாடல்கள் ஒன்றிரண்டை பள்ளியில் படித்ததோடு சரி. அதன் பிறகு இத்தனை வருடம் கழித்து இப்பொழுதுதான் உங்கள் பதிவில் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த காலத்தில் கைம்பெண் பட்ட கொடுமைகளை பார்க்கும்போது, விதவை திருமணம் என்பது பெண்களுக்கு எப்பேற்பட்ட விடிவு காலம் ஆகி இருக்கிறது. விதவைகள் மறுமணத்திற்கு போராடிய அனைவரையும் வணங்கத் தோன்றுகிறது.
தான் பெற்ற குழந்தைகளை சுற்றத்தாரிடம் ஒப்படைத்து விட்டு உயிரை விடும் மந்தி.....இதை தலைவனுக்கு
தலைவியை விரைவில் மணம் முடிக்க வேண்டுமாறு குறிப்பால் உணர்த்துவதற்காக, தாய்மையை விட காதலை இந்த
இடத்தில் வலியதாக புலவர் காட்டி இருப்பது ரசிக்க வைக்கிறது.
அருமையான பதிவு. மிக்க நன்றி.

வலசு - வேலணை சொன்னது…

இலக்கித் தகவல்களுக்கு நன்றி

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

சங்கஇலக்கியத் தேன் எத்தனை முறை படித்தாலும் போதாது..!

தாங்கள் விளக்கிய விதம் பாடலின் சுவையைக் கூட்டுவதாகவுள்ளது!
அருமை!!

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

இந்த காலத்துல குடும்பத்தைப் பத்தி கவலைப்படாம இரவில் வேகமாக வண்டியோட்டும் ஆண்களுக்கும் சொல்லலாமொ இதை.. :)

மோகன்ஜி சொன்னது…

அருமையான பதிவு சகோதரி!

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வருகைக்கும் கருதுக்களுக்கும் நன்றி நண்பர்களே.
திரு டோண்டுவின் பதிவைக் கட்டாயம் படித்துப் பார்க்கிறேன்.
மீனாக்ஷி!தாய்மையை விடக் காதல் வலியது என்பது ஒரு கோணம்....மற்றொன்று வைதவ்யம் தாங்கி வாழ்வது கடினமென்பது(அக் காலச் சூழலில்)
முத்துலட்சுமியின் மாறுபட்ட சமகாலச் சிந்தனை கூடப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.2000 வருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு பாடல் நம்மை எங்கெல்லாம் அழைத்துப் போகிறது.பாருங்கள்..)

arunmullai சொன்னது…

இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் வழக்கொழிந்து
விட்டதோ? என்று அஞ்சவேண்டியுள்ளது.இப்பாடலில்
வரும் ஒருசொல்கூட இன்று வழக்கில் இல்லையே!

அறிஞர்கள் மட்டுமே இதில் அக்கரை கொள்கின்றர்.
மற்றவர்களெல்லாம் அவசர உணவுக்காரர்கள்.
எதுவசதியோ, அதைமட்டுமே மேய்ந்து விட்டுப்
போகிறார்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வழக்கொழிந்தது என்று சொல்வதை விட..மொழி காலந்தோறும் மாறி வருகிறது என்றும் கொள்ளலாம்.
ஒரு சொல் விளக்கம் விடுபட்டு விட்டது.
’பெரும்பிறிதுறல்’ என்ற அருமையான வார்த்தை.
மரணத்தை,சாவை நேரடியாகச் சொல்லாமல் மங்கல வழக்காக அந்தக் குரங்கு வேறொன்றாக மாறி விட்டது..பெரிதான பிறிதொன்றாக மாறிப்போனது என்று பாடல் எப்படிக் குறிப்பாகச்சுட்டுகிறது பாருங்கள்....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சங்கத் தமிழமுது !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....

பரவலான கவனம் பெற்ற பதிவுகள்