துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.12.10

விஷ்ணுபுரம் வட்ட நினைவுகள்...1.

விழாவுக்கு முன்...
இலக்கிய உரையாடல்களையும்,விவாதங்களையும் மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் ஓர் இலக்கிய அமைப்பை நண்பர்களோடு தொடங்க வேண்டும்,அல்லது அவ்வாறானதொரு வட்டத்தில் இணைய வேண்டும் என்பது நெடு நாட்களாகவே என் உள்ளத்தின் தொலைதூரக்கனவுகளில் ஒன்றாக இருந்து கொண்டிருந்தது.
ஏதேதோ காரணங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்க , எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பற்றி அறிந்து கோவை நண்பர் திரு அரங்கசாமி அவர்களின் துணையோடு அண்மையில் அந்த வட்டத்தில் என்னையும் இணைத்துக் கொண்டேன்
.
.
 கோவையில் விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்வை ஒட்டி என் கோவை,மதுரைப் பயணமும் தற்செயலாக அமைந்துவிட, குறிப்பிட்ட இலக்கிய வட்டத்தின் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பும்,விழாவில் பங்கேற்கும் வாய்ப்பும் ஒருசேரக் கிடைத்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாயிற்று.
பொது நிகழ்வாகப் பி.எஸ்.ஜி.பொறியியல் கல்லூரிக் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் ஒரு புறமிருக்க...அதைவிடவும் மிகுந்த நிறைவையும்,உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது எழுத்தாளர்கள் ஆ.மாதவன்,ஜெயமோகன்,நாஞ்சில்நாடன்,திரு எம்.எஸ்.,விமரிசகர் வேதசகாய குமார் ஆகியோருடன் கால நேரப்பிரக்ஞை கடந்தவர்களாய்...சுகமானதொரு சங்கீதக் கச்சேரியில் லயித்துப் போய்க் கிடப்பது போல இலக்கிய வட்ட நண்பர்கள் ஒருங்கிணைந்து பேசிக் கொண்டிருந்த கூடுகை.
முதல் நாள் 18 ஆம் தேதியன்று ஆமாதவன்,நாஞ்சில் மற்றும் ஜெயமோகனுடன் இலக்கிய வட்டத்தினர்...
முதல் நாள் 18 ஆம் தேதியன்றே ஜெயமோகனும்,மாதவனும் வந்து விட்டிருந்ததால் அப்போதே வந்த அன்பர்கள் சற்றுக் கூடுதலான இலக்கிய இன்பத்தைப் பெற்றிருக்க, 19 காலை கோவை சென்றடைந்ததால் எனக்குக் கொஞ்சம் இழப்புத்தான்.விழா நடைபெறும் வளாகத்தின் அண்மையில் இருந்த கோரல் குடியிருப்பில் நண்பர்கள் தங்கியிருப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை முன்கூட்டி அறியாததால் வேறொரு இடத்தில் தங்கியிருந்தேன் நான்.

இருந்தபோதும் இயன்றவரையில் நண்பர் வட்டத்தில் நிகழும் இலக்கியப் பரிமாற்றங்களைக் கேட்டு விட வேண்டும் என்று கோவை வந்து சேர்ந்த ஓரிரு மணி நேரத்துக்குள் அந்த நண்பர்குழாமில் என்னையும் ஐக்கியப்படுத்திக் கொண்டேன் ..

ஜெயமோகனைத் தவிர வேறு யாருடனும் நேரடி அறிமுகமில்லாத என்னை அங்கிருந்த இலக்கிய வட்டத்தினர் ஏதோ நெடுநாள் பழகியவர்களைப் போல நட்போடு எதிர்கொண்டு போலித்தன்மைகள் அற்ற மெய்யான சகஜ பாவத்தோடு பழகிய பாங்கும் , அவர்களது அன்பான மொழிகளும் முற்றிலும் புதிதான அந்தச் சூழலில் சற்றுக்கூட அந்நியமாக உணரத் தேவையில்லாதபடி என்னை அப்படியே மூழ்கடித்துக் கொண்டுவிட்டன.

இலக்கியத்தைப் பேசுவது ஒரு சுகமென்றால் ஒத்த மனம் படைத்தவர்களோடு சேர்ந்து கொண்டு ....இலக்கியம் பற்றிப் பேசப்படுவதைக் கேட்டுக் கொண்டே இருப்பதும் சுகமான ஓர் அனுபவம்தான்.
அன்று அப்படிப்பட்ட மனநிலையிலேதான் - பேசுவதை விடப் பெற்றுக் கொள்ள்வதிலேதான் நாட்டம் கொண்டவளாக நான் இருந்தேன்.

.
கூடத்தினுள்ளே நுழைகையில் விருது பெறும் எழுத்தாளர் மாதவன்,நடுவில் வீற்றிருக்க வேதசகாயகுமாரும்,ஜெயமோகனும் பொன்னீலனின் புதிய நாவல் குறித்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
நீல.பத்மநாபன் வழி என்னைப் பற்றி ஓரளவு கேள்விப்பட்டிருந்த
திரு ஆ.மாதவன்,நீல.பத்மநாபனின் அன்பு விசாரிப்பை முதலில் எனக்கு அஞ்சல் செய்தார்.
பொனீலனின் 'மறுபக்கம்'என்னும் புதிய ஆக்கம்,நாவலுக்குரிய கலைத்தன்மை பெற்றிருக்கிறதா என்பது குறித்த விவாதம் நீண்டுகொண்டே போய் இறுதியில் அதை முழுமையாக வாசித்த பிறகே அது பற்றிய கணிப்பை உறுதிப்படுத்த முடியும் என்ற ஒருமனதான கருத்தோடு நிறைவுக்கு வந்தது.

இலக்கிய ரசனைக்கு இருக்கைகள் முக்கியமில்லை...

தனது எழுத்து அனுபவங்களை,
தொழிற்சங்க அலுவலக அனுபவங்களை,
அதிகார உயர் மையம், தனக்கு அடுத்துள்ள மட்டத்தை நடத்தும் போக்கை.... என்று பலதரப்பட்ட விஷயங்களை ஜெயமோகன் சற்றும் அலுப்புத் தட்டாமல் சுவாரசியமாக விவரித்துக்கொண்டே சென்றபோது,
இன்னும் பொதுவெளியில் முகம் காட்டியிராத ஒரு நடிகனும் கூட அவருள் உறைந்திருப்பதை
(தனது இணையக் கட்டுரைகளில் அது பற்றி அவர் குறிப்பிட்டிருந்தாலும்)
நான் நேரடியாகக் கண்டு கொண்டேன்.

படைப்பூக்கம் என்னும் குதிரை ஒரு படைப்பாளியை மேலெழுப்பிச் செல்லும்போதே முடிந்தவரை பறந்து விட வேண்டும் என்றும்,அந்த குதிரை எந்த சமயத்தில் எப்போது கைவிட்டுவிடும் என்பதை யாராலும் சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்ட ஜெயமோகன்,
இப்போது தானே நினைத்தாலும் ஒரு பத்தியளவு கூட எழுத முடியாமல் போய்விட்ட நிலையை ஜெயகாந்தன் தன்னிடம் கூறியதை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு எழுத்தாளனிடமுமே எழுதப்படாத கதைகள் அல்லது எழுதத் தொடங்கித் தொடரப்பட முடியாத கதைகள் இருந்து கொண்டுதான் இருக்குமென்றும்,தன் வசமும் அவ்வாறான கதைகள் உண்டு என்றும் அவர் கூறியது (அவரைப் பொறுத்த வகையில் )எனக்குச் சற்று ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது.

வீட்டுச் சுழலில் மனைவி,மற்றும் குழந்தைகள் ஒருபுறம் இயங்கிக் கொண்டிருக்கும்போதுதான் தன்னால் எழுத முடிகிறதென்றும்,அவர்கள் இல்லாத வெறுமைச் சூழல் தன் படைப்பாக்கத்துக்குத் துணை செய்வதாக இல்லை என்றும் அவர் எங்களிடம் பகிர்ந்து கொண்டது சம்பிரதாயதாயமாக நிலைவிவரும் சில கருத்துக்களுக்கு நேர்மாறாக இருந்தது.

படைப்பாளியிடம் தன்னிச்சையாகப் பொங்கிவரும் உணர்வுகளை எந்தத் தணிக்கைக்கும் திருத்தங்களுக்கும் உட்படுத்தாமல் அவன் எழுதும் முதல் பிரதியே (first draft)உயர்வானது,உண்மையானது என்றும்
மீண்டும் மீண்டும் திருத்தங்கள் செய்வது செயற்கையான தொழில்நுட்ப அழகியலுக்கு...புறப்பூச்சுக்குத்தான் உதவுமேயன்றிப் படைப்பின் ஆன்மாவை முன்வைக்க இயலாததாகிவிடும் என்றும் அவர் வெளியிட்ட கருத்துக்கள் கொஞ்சம் சிந்திக்க வைத்தன.
காரணம் editing and re-editing செய்து கொண்டே இருப்பதுதான் சிறந்தது என்ற வகைப்பாட்டில்-school of thought-நீண்ட காலமாகப் பழகிப் போனவள் நான்.
(லா.ச.ரா அவர்கள் ஒரே கதையை 60 முறை திருத்தம் செய்து எழுதியதாகச் சொன்னதை நான் எடுத்துக் காட்டியபோது அது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது)

இடையறா வாசிப்பு,எழுத்து,பயணங்கள் இத்தனைக்கும் இடையில் களைப்பின் சாயலே கொஞ்சமும் தோன்றாமல் புத்துணர்ச்சியோடு இருக்கவும்,உற்சாகம் குன்றாமல் தொடர்ந்து உரையாடவும் ஜெ.மோவால் மட்டும் எப்படிமுடிகிறது என்று நாங்களெல்லாம் வியந்து கொண்டிருக்க .....
’இயங்கிக் கொண்டே இருக்கும் வரை -கடுமையாக வேலை செய்துகொண்டே இருக்கும் வரை தான் களைப்பாவதில்லை என்றும் ஏதோ காரணத்தால் எழுதாமல்,பயணிக்காமலிருந்தால் மட்டுமே தான் சோர்வாகி விடுவதாகவும்’ எங்களுடன் பகிர்ந்து கொண்டார் அவர்.

சுழன்று சுழன்று எங்கெங்கோ சென்று கொண்டிருந்த விவாதங்களுக்கு இடையே கேரள நாவலாசிரியர் புனதில் குஞ்ஞத்துல்லா அவர்களும்,பிறகு இயக்குநர் மணிரத்னமும் வந்து சேர ஜெயமோகன் அவர்களுடன் வேறு அறைக்குச் சென்றுவிட- மதிய உணவு நேரம் வரை-பிற நண்பர்களெல்லாம் -கூடி வெவ்வேறு தளங்களில் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தோம்.

இன்றைய சூழலில் சில இலக்கிய வட்டங்களும் கூட்டங்களும் அடிப்படை கண்ணியம் கூடக் காக்கத் தவறி விடுவதால் பெண்பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே போய்விடுகிறது.
அன்று அந்த வட்டத்தின் தனித்த உரையாடல் கூடுகையில் கலந்துகொண்ட ஒரே பெண் நான் மட்டும்தான்;எனினும் குறிப்பிட்ட இந்த
விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு தனக்கென வகுத்துக் கொண்டிருக்கும் அடிப்படையான உயர்நெறிகள் பரவலான வெளிச்சத்துக்கு வருகையில் இன்னும் நிறையப் பெண்கள் இவ்வாறான இலக்கியவட்டங்களில் பங்கு பெற மனத் தடைகளின்றி முன் வருவார்களென நம்புகிறேன்.அதற்கு முற்றிலும் தகுதி படைத்த ஓர் அமைப்பாக -போதை,தனிமனித தூஷணைகள்,குழு-இலக்கிய அரசியல் ஆகியவை தவிர்ந்ததாய்- தீவிர இலக்கியத்தை மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் ஓர் அமைப்பாக இவ்வட்டம் உருவாகியிருப்பதைக் காலம் ஒருநாள் உறுதியாக நிறுவிக் காட்டும்.

உணவுக்குப் பின்பு மணிரத்னத்தின் முன்னிலையில் நடந்த சிறியதொரு இசைக் கச்சேரியை-அது நடக்கப்போகிறது என்பதை அறியாமல் -தவற விட்டு விட்டு அறைக்குச் சென்றுவிட்ட நான் மாலை நடந்த விருது விழாவில் அது பற்றி அறிந்து பெரிதும் வருந்தினேன்.
விருது விழா..
அடுத்த தொடர்ப்பதிவில்....

5 கருத்துகள் :

Unknown சொன்னது…

அன்புள்ள சுசிலாம்மாவுக்கு ,
உங்கள் வருகை எங்களுக்கு மிக மகிழ்ச்சி. நீங்கள்தான் நெடுநாள் பழகிய "பாட்டியை" போல பேசி, சிரித்து எங்கள் அனைவரையும் ஏற்றுக்கொண்டீர்கள். உங்கள் வயதை நாங்கள் எப்படி கடக்க வேண்டும் எனபது உங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. -இருட்டிலேயே படம் எடுத்த ராஜகோபாலன்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

விழாவுக்கு வந்தவர் மணிரத்னம் என்பதால் நாம் இருவருமே இருட்டில் படம் எடுத்து விட்டோம் போலிருக்கிறது ராஜகோபாலன்.
பாட்டியின் நன்றிகள்.

Unknown சொன்னது…

இலக்கிய பயணம் சிறப்பாய் அமைந்தமைக்கு
வாழ்த்துக்கள்..
அன்புடன்
தேவராஜ் விட்டலன்

suneel krishnan சொன்னது…

படிக்கும் பொழுதே அந்த சூழல் எப்படி மகிழ்ச்சியாக இருந்தது என்று உணர முடிகிறது ..ரொம்ப சந்தோஷம் அம்மா

பெயரில்லா சொன்னது…

சிறிய இசைக்கச்சேரியை மட்டுமே ரசிக்க முடிந்தது. காலையில் நடந்தவற்றில் கலந்து கொள்ள முடியவில்லை.

விழாவில் உங்களின் பேச்சு அருமை!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....