துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.12.10

விஷ்ணுபுரம் வட்ட நினைவுகள்...2

ஆ.மாதவனுக்கு ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ’அளிக்கும் விருது விழா நடைபெற்ற கோவை பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரிக் கலையரங்குக்கு மாலை 4.30 தொடங்கியே இளம் இலக்கிய ஆர்வலர்கள் வரத் தொடங்கி விட்டிருந்தனர்.
ஆர்வத்தோடு கூடிய அவர்களது விசாரிப்புக்கள் அடுத்த தலைமுறை மீதான நம்பிக்கையை அதிகப்படுத்துவதாக இருந்தன.
நீண்ட இடைவெளிக்குப் பின்பு கோவை ஞானியை அவரது துணைவியாருடன் சந்திக்க நேர்ந்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.அவரும் மேடைக்குச் செல்லும் முன்புவரை வெகு நேரம் பழைய பாசத்தோடு உரையாடிக்கொண்டிருந்தார்.
முதல் சந்திப்பாக இருந்தபோதும் ஈர்ப்போடும்,பிரியத்தோடும் நெஞ்சுக்கு நெருக்கமாக ஒட்டிக் கொண்டார் திருமதி ஞானி.

ஞானி தம்பதியருடன் நான்..

இந்த இலக்கியக் கூட்டம் பாடலோடுதான் ஆரம்பித்தாக வேண்டும் என்பதில்  தீர்மானமாக இருந்த  அரங்கசாமி,சற்றுத் தயக்கத்தோடு இருந்த ராமச்சந்திர சர்மாவைக் கூட்டத்தில் பாட வேண்டுமென  மதியம் முதலே வற்புறுத்திக் கொண்டிருந்தார்.
அவரது விடா முயற்சி ஒருவழியாக வெற்றி பெற ‘மனதில் உறுதி வேண்டும்’என்ற பாரதி பாடலுடன் கூட்டம் துவங்கியது.
ராமச்சந்திரசர்மா..மனதில் உறுதி பாடலை இசைக்கிறார்..
அந்தப்பாடலும் ,அதற்கான மெட்டும்பலமுறை கேட்டுப்பழகியதுதான் என்றாலும் அன்று எல்லோரையும் பித்தேறிப் பிடித்தாட்டிக் கொண்டிருந்த இலக்கிய மோகத்தின் தலைக்கேறலிலும்,சர்மாவின் உருகிக் கரைந்த குரல் நெகிழ்விலும் பாடலின் ஒவ்வொரு சொல்லும் இதய அடுக்கிற்குள் ஒரு சில்லிப்பை ஏற்படுத்தியபடி வழுக்கிக்கொண்டு சென்றது.

விஷ்ணுபுரம் வட்டத்தின் சார்பில் வரவேற்புரை மட்டுமே வழங்கிய என்னையும் சிறப்பு விருந்தினர்களோடு சேர்த்து மேடையில் அமருமாறு அன்புத் தொல்லை செய்து வற்புறுத்திச்சம்மதிக்க வைத்து விட்டனர் இலக்கிய நண்பர்கள். 


விழாவுக்குத் தலைமை வகித்த கோவை ஞானி வழக்கம்போல நவீன இலக்கியப் போக்குகளைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் பேராசிரியர்களை ஒரு பிடி பிடித்தபோது மேடையிலிருந்த நானும்,பேராசிரியர் வேதசகாயகுமாரும் கூச்சத்தால் நெளிந்து கொண்டிருந்தோம்.
அமைப்புசார் விருதுகளின் குறைபாடுகளும்,அவற்றுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் அரசியலும் கூடக் கோவை ஞானியின் காட்டமான தாக்குதலுக்கு உட்படத் தவறவில்லை.

கேரள நாவலாசிரியர் புனதில்குஞ்ஞத்துல்லா ஆ.மாதவனுக்கு 
விஷ்ணுபுரம் இலக்கிய விருதையும்,ரூ.50,000 பரிசுத் தொகையினையும் வழங்கிச் சிறப்பிக்க
இயக்குநர் மணிரத்னம் ஆ.மாதவன் குறித்து ஜெயமோகன் எழுதிய ‘கடைத்தெருவின் கலைஞன்’(தமிழினி வெளியீடு) நூலை வெளியிட்டார்.
முதல் பிரதியை ஏற்கப் பிரபலங்களைத் தவிர்த்ததும்,ஜெயமோகனின் மிக இளம் வாசகரான ராதாகிருஷ்ணன் என்பவர், நூலின் படியைப் பெறுமாறு அழைக்கப்பட்டதும் வித்தியாசமான சில மாற்றங்கள்.

விருது வழங்கப்படுகிறது...

கடைத்தெருவின் கலைஞன் ’முதற்படியைப்பெறும் இளையவாசகர் ராதாகிருஷ்ணன்...

மருத்துவப் பட்டம் பெற்றிருப்பவரான புனதில் குஞ்ஞத்துல்லா தனக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு மலையாளத்தில் 
பொழிந்து தள்ள அவரருகே அமர்ந்தபடி அதை மின்னல் வேகத்தில் உடனுக்குடன் மிகச் சிறப்பான மொழி வளத்துடன் மொழிபெயர்ப்புச் செய்து தந்தார் ஜெயமோகன்.
திருவனந்தபுரம் சாலைத் தெருவில் பாத்திரம் விற்கும் கடை நடத்திவரும் ஆ.மாதவன் கதாபாத்திரங்களையும் தன் படைப்புக்களில் துலங்கச் செய்வது பொருத்தமானதே என்று குறிப்பிட்ட புனதில் குஞ்ஞத்துல்லா ,கேரள மக்களை விடவும் தமிழ்மண்ணில் மொழியின் மீதான நேசம் கூடுதலாக இருப்பது மனதுக்கு நிறைவளிக்கிறது என்றார் .

நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய செல்வேந்திரனின் தனித்த  வேண்டுகோளுக்காகவோ என்னவோ
(’’உங்கள் கூட்டத்துக்கு வந்தால் நீங்கள் வெறுமே ஒரு புன்னகை மட்டும் செய்துவிட்டுப்போய்விடுவீர்கள் எதுவும் பேசமாட்டீர்கள் என்றான் என் நண்பன்..நீங்கள் அதைப்பொய்யாக வேண்டும்’’-இது செல்வேந்திரன்)
.திரு மணிரத்னம் ஓரளவு அதிகமாகவே பேசினார்.
’’இலக்கியத்திற்கும்,சினிமாவுக்கும் இடைவெளி இருப்பதான விமரிசனம் இருக்கிறது;ஏதோ என்னால்முடிந்தது இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதுதான்’’என்று தொடங்கிய அவர், மனிதர்களின் இருட்டான மன விகாரங்களைக் கதைப்படுத்தியவர் மாதவன் என்பதால்தானோ என்னவோ இருட்டில் படமெடுப்பவன் எனச்சொல்லப்படும் தன்னை இந்த விழாவுக்குஅழைத்திருக்கிறார்கள் என்றார்.ஆ.மாதவனின்’கிருஷ்ண பருந்து’ நாவலைப் படிக்கத் தொடங்கியபோது மொழியின் சிக்கல் தன்னைச் சற்றே துன்பப்படுத்தியதையும்,பிறகு நாவல் தானாகவே தன்னை உள்ளிழுத்துக் கொண்டுவிட்டதையும் எடுத்துக் கூறி அதன் ஒரு சிறிய பகுதியைக் காட்சிப்படுத்த முடிந்தாலும் கூட அது ஒரு நல்ல தமிழ்ப்படமாக அமையக்கூடும் என்றார்.

வாழ்த்துரை வழங்கிய நாஞ்சில்நாடன்,வேதசகாயகுமார் ஆகிய இருவருமே இலகியத் திறனாய்வுத் தளத்திலும்,விருதுக் களங்களிலும் ஆ.மாதவன் போன்ற படைப்பாளிகள் பின்தள்ளப்பட்டதற்கான காரணங்களைப் பல்வேறு சமூகப்பின்புலங்களோடு பொருத்திக் காட்டி ஆவேசமாக உரையாற்றினர்.குறிப்பாக நாஞ்சிலின் பேச்சில் அறச் சீற்றம் கொப்பளித்தது என்றே கூறலாம்.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிய ஜெயமோகன் ,இவ்வாறான ஒரு விருதை மாதவனுக்கு அளிப்பதால் நாங்கள் உயர்வான இடத்தில் இருப்பதாகப் பொருளில்லை;மூத்த முன்னோடிகளுக்கு இளையோர் செலுத்தும் ஒரு எளிய மரியாதையாக மட்டுமே இதைக் கொள்ள வேண்டும்’ என்றார்.

இறுதியாக ஏற்புரை வழங்க வந்த ஆ.மாதவன் உணர்ச்சிகளின் நெகிழ்வில் உருகிக் கரைந்திருந்ததாலும்,மூப்பின் காரணமாகவும் அதிகம் பேசாமல் நன்றி மட்டும் கூறிச் சுருக்கமாகத் தன் உரையை முடித்துக்கொண்டார்.

விருந்தினர்களோடு சேர்த்து விழா ஏற்பாட்டுக்கு உதவிய அனைவருக்கும்     விஷ்ணுபுர வட்டத்தின் செல்வேந்திரன் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியின் முடிவில் - கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்தக் கூட்டத்தின் வெற்றிக்காகச் சோர்வின்றி உழைத்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தினர் அனைவரும் மேடைக்கழைத்துச் சிறப்பிக்கப்பட்டனர்


விஷ்ணுபுரவட்ட உறுப்பினர்கள்..விருந்தினருடன்..

இலக்கியவட்ட நண்பர்கள்..அரங்கசாமி,கிருஷ்ணன்,சந்திரகுமார்,ராமச்சந்திரசர்மா மற்றும்கூட்டத்தினர்..
விழாக்கூட்டத்தினருடன் தில்லி ஜே.என்.யூ.பல்கலைப்பேராசிரியர் நாச்சிமுத்து,
நெல்லை சு.முத்துஆகியோர்..
கூட்டம் முடிந்த பிறகும் பிரிய மனமின்றி ஆங்காங்கே கொத்துக் கொத்தாய்க் கூடிப் பேசிக் கொண்டிருந்த இலக்கிய நண்பர்கள்,
தங்கியிருக்கும் குடியிருப்புக்குச் சென்று உணவு உண்ணும்போதும்,அதைத் தொடர்ந்தும் (மணிரத்னம் மிக எளிமையாகக் கூடவே இருந்தபோதும்)இலக்கிய உரையாடலில் மட்டுமே அனைவரும் காட்டிய ஆர்வம்..
இவையெல்லாம் நீண்ட நாட்கள் நித்தியத்துவம் பெற்ற நிமிடங்களாக நெஞ்சுக்குள் சுழன்று கொண்டே இருக்கும்.
பி.கு;
நவீன இலக்கியக் கூட்டங்களென்றாலே தண்ணி போட்டுவிட்டு வந்து கண்டதையும்,கண்டபடி பேசுவது என்றாகியிருக்கும் 
’புதிய ’கலாச்சாரத்தைக் கட்டுடைப்புச் செய்து கண்ணியம் குன்றாத அருமையான இலக்கிய நிகழ்வொன்றை எவ்வாறு நடத்துவது என்பதற்கு முன்மாதிரியாக அமைந்த இக் கூட்டத்தையும் வட்டத்தையும் நெறிப்படுத்தி வழிகாட்டிய ஜெயமோகனும்,இலக்கியவட்டநண்பர்களும் பாராட்டுக்குரியவர்கள்

2 கருத்துகள் :

suneel krishnan சொன்னது…

இத்தகைய போக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது .பெரும் கூட்டம் கூச்சல் போன்றவை இல்லாமல் ஆத்மார்த்தமாக தேடல் உள்ள சிலர் இணைந்த இந்த விழா.. வரும் காலத்திற்கு ஒரு நல்ல முன்னோடி .

அப்பாதுரை சொன்னது…

க்ருஷ்ணப் பருந்து எழுதியது இவரா! அடடா, தெரியாமல் போனதே?!
நிகழ்ச்சியை முன்னிறுத்தியதற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....