துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.12.10

விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழாசமகாலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில்
திரு ஜெயமோகன் அவர்களுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.
'ரப்ப'ரில் தொடங்கிக் 'கொற்றவை' வரை நீண்டு
'அசோக வன'மாக வளர்ந்து வரும் அவரது நாவல்கள்,
கதா’முதலிய விருதுகளைப் பெற்றிருக்கும் அவரது அரிய சிறுகதைகள்,
தமிழின் குறுநாவல் பரப்பை அர்த்தச் செறிவு கொண்ட பல ஆக்கங்களால் விஸ்தீரணப்படுத்தியுள்ள அவரது படைப்புத் திறன்,
வரலாறு,தத்துவம் எனக் கனமான பல உள்ளடக்கங்களையும் கூட வாசிப்புக்கு எளிதானவையாக்கி இணையத்தில் நாளும் அவர் எழுதிக் குவிக்கும் கட்டுரைகள்,
இலக்கியத்தகவல்கள் 
இவை அனைத்தும் ஒரு புறமிருக்க...
..
இன்றைய புனைகதை இலக்கியத்தின் மிகத் தேர்ந்த விமரிசகராகவும் இருப்பது ஜெயமோகனின் தனிச் சிறப்பு நாவல் கோட்பாடு பற்றிய அவரது நூல் குறித்து வெளியான எனது
சொல்வனம் கட்டுரையில் 
’’வெற்றிச் சூத்திரத்துக்கான சூட்சுமம் சொல்லத் தெரிந்தவன் பெரும்பாலும் நல்ல வித்தைக்காரனாக இல்லாமல் போய்விடுவதே பொதுவான உலக நியதி. இதிலும் கூட விதி விலக்காக இருப்பதே ஜெயமோகனைத் தனித்துவமாகக் காட்டும் சிறப்பு’’
எனக் குறிப்பிட்டிருந்தேன் .

இலக்கியப் படைப்புக்களின் சூட்சுமங்களை அறிந்து வைத்திருக்கும்  படைப்பாளிகளில் சிலர், அவற்றைப் பகிர்ந்து கொள்ள விருப்பமில்லாதவர்களாகவோ அல்லது அதற்கான மன எழுச்சியும்,செயலூக்கமும் இல்லாதவர்களாகவோ இருப்பதுண்டு.

சில வேளைகளில் அதற்குச் செலவிடும் நேரத்தில் புதிய ஆக்கங்களை உருவாக்கி விடலாமே என்பது கூட அவர்களது எண்ணமாக இருக்கலாம்.
இன்னும் சிலர் , தங்களுக்குத் தெரிந்த படைப்புத் தொழில் நுட்பங்களை வெளிப்படுத்தி விளக்கமளிக்க உண்மையிலேயே அறியாதவர்களாகவும் இருத்தல் கூடும்.

இந்தப் போக்குகளிலிருந்து முற்றாக மாறுபட்டிருப்பவர் ஜெயமோகன்.
படைப்புக்களின் சூத்திரத்தை ஓர் ஆசானின் நிலையிலிருந்து போதிக்கும் அவரது பல நூல்களும்('நாவல் கோட்பாடு','நவீனத் தமிழ் இலக்கிய அறிமுகம்',’எழுதும் கலை’), 
கட்டுரைகளும்
இன்று மெய்யான இலக்கிய வாசிப்பிலும்,எழுத்திலும் தீவிர முனைப்புக் காட்டும் பல இளைஞர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
(பேராசிரியராகப் பணியாற்றிய காலத்திலும்,தனிப்பட்ட படைப்பாக்க முயற்சிகளின்போதும் ,ஆய்வுக்கட்டுரை உருவாக்கங்களிலும்,வழிகாட்டுதல்களிலும் எனக்கும் மிகவும் உதவிய நூல்கள் அவை)
சென்ற தலைமுறையில் கிட்டத்தட்ட இதே போன்றதொரு பணியை மேற்கொண்டு எழுத்தார்வமும்,இலக்கிய ஆர்வமும் கொண்ட இளம் தலைமுறையை ஓரளவு வழிநடத்திக் கொண்டிருந்தவர் திரு சுஜாதா அவர்கள்;
இன்று , இன்னும் பல தளப் பரிமாணங்களோடு விரிவும் ,ஆழமும் கூடியதாக அப் பணியைச் செய்து -
அடுத்த தலைமுறையின் உள்ளத்தில் கனலும் இலக்கியச் சுடரைச் சரியான பாதையில் தூண்டிவிடும் அருஞ்செயலை ஆற்றி வருகிறார் ஜெயமோகன்.

தொடர்ந்து வரும் தலைமுறைகளின் எழுத்துக்கு வழிகாட்டுவதோடு , தான் கடந்து வந்திருக்கும் முன்னோடி எழுத்துக்களையும் நினைவுகூரத் தவறாதவர் ஜெயமோகன்.
தனது இலக்கிய முன்னோடிகள் சீரமைத்த பாதையிலிருந்து பயணத்தைத் தொடங்கி அவர்கள் எட்டமுடியாமல் போன தொலைவுகள் பலவற்றைக் கண்டடைந்து , அவர்கள் சாதிக்க இயலாமற்போன பல இலக்குகளை அசுர சாதகமான தனது இடைவிடா வாசிப்பு மற்றும் எழுத்துக்களால் எட்டி விட்டபோதும் தான் ஏறி நிற்பது தனது இலக்கிய ஆசான்களின் தோள்களில் என்பதை அவர் ஒருபோதும் மறந்ததில்லை.  
நவீன இலக்கிய முன்னோடிகள் வரிசையில் புதுமைப்பித்தன் தொடங்கிப் ப.சிங்காரம் வரை தொடர்ச்சியாக அவர் எழுதியுள்ள ஏழு விமரிசன நூல்களுமே
(இலக்கிய முன்னோடிகள் வரிசை -7 நூல்கள்-தமிழினி வெளியீடு)
முதல்சுவடு[புதுமைப்பித்தன்],
கனவுகள்,இலட்சியங்கள்[மௌனி,ந.பிச்சமூர்த்தி,கு.ப.ராஜகோபாலன்],
சென்றதும்,நின்றதும்[லா.ச.ராமாமிர்தம்,க.நா.சுப்ரமணியம்,தி.ஜானகிராமன்,
நகுலன்]
மண்ணும்,மரபும்[கு.அழகிரிசாமி,ஜெயகாந்தன்,கி.ராஜநாராயணன்]
நவீனத்துவத்தின் முகங்கள்[அசோகமித்திரன்,சுந்தரராமசாமி,ஜி,நாகராஜன்]
அமர்தல்,அலைதல்[மு.தளையசிங்கம்,அ.முத்துலிங்கம்]
கரிப்பும்,சிரிப்பும்[நீல.பத்மநாபன்,ஆ.மாதவன்,ப.சிங்காரம்]
இதற்குச் சான்றாக அமைந்திருப்பவை.
சமகாலப் புனைவிலக்கியம் குறித்த விளக்கத்தைப் பெற விழைபவர்கள் எவரும் இந்நூல்களை வாசிக்காமல் அத்தகைய தெளிவை அடைந்து விட முடியாது என்று துணிந்து சொல்லக்கூடிய தகுதி இந்நூல்களுக்கு உண்டு.
குறிப்பிட்ட இந்த ஆக்கங்களிலும் கூடத் தான் எடுத்துக்கொண்ட படைப்பாளிகளின் நிறை,குறை ஆகிய அனைத்தையும் கறாரான - துல்லியமான நடுநிலையான விமரிசனப்பார்வையுடன் மட்டுமே வாசகப் பார்வைக்கு முன் வைத்திருக்கிறார் அவர்.

தமிழ் இலக்கியப்பரப்பைத் தனது பலதரப்பட்ட ஆக்கங்களால் செழுமைப்படுத்தி வரும் திரு ஜெயமோகனை சாகித்திய அகாதமி,ஞான பீடம் போன்ற அமைப்புக்கள் இன்னும் கண்டுகொள்ளாமலிருப்பது - அதுவும் கூட ஒரு வகையில் தமிழுக்கே உரிய 'தனிச்' சிறப்புத்தான்.
வயது முதிர்ந்து தளர்ந்து போன இலக்கியவாதிகளுக்கு ...,அதிலும் தங்களது படைப்பூக்கமெல்லாம் வற்றிப்போன பிறகு அவர்களிடமிருந்து வெளிப்படும் நூல்களுக்கு விருதளிக்கும் கொடுமையே நாளும் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாமெல்லாம் மௌன சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஜெயமோகன் அதற்காகக் கவலை கொண்டவரல்ல;அவரது வாசிப்பும் எழுத்தும் அதை நோக்கியதும் அல்ல.
அமைப்பு சார் விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும் அவர் எதிர்க்குரல் எழுப்புவது 'சுயநல நோக்கில்'எனக் குழு அரசியல் பேசுபவர்கள் ஒரு புறம் இருந்தாலும் அவர் குரல் தருவது ,
இன்னும் முறையான எந்தப் பரிசுக்கும் அங்கீகாரத்துக்கும் உரியவர்களாக இனம் கண்டு கொள்ளப்படாமல் விடுபட்டுப் போயிருக்கும் தனது முன்னோடிகளுக்காக மட்டுமே என்பதை அவரைத் தொடர்ந்து வாசித்து வரும் இலக்கிய ஆர்வலர்களும் ,நண்பர்களும் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதனால் பிறந்திருப்பதே 
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.


ஜெயமோகனின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான 'விஷ்ணுபுரம்'நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இந்த இலக்கிய நண்பர் வட்டம் , பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..
அல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறபிப்பதையும்,இலக்கியக் கூட்டங்கள்,அமர்வுகள்,நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதையும் தனது இலக்காகக் கொண்டு-புற நெருக்குதல்கள் ஏதுமின்றித் தானாகவே முகிழ்த்திருக்கும் ஓர் இலக்கிய அமைப்பு.
’’சென்ற ஜனவரி 2010 ல் கோவை நண்பர்கள் மரபின் மைந்தன், அரங்கசாமி, அருண் ஆகியோர் முன்முயற்சி எடுத்து கோவையில் என் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அது ஒரு வாசகர் சந்திப்பு. அதற்கான நிதி நண்பர்களிடமிருந்தே திரட்டப்பட்டது. அந்த நிதி தேவைக்கு அதிகமாக வந்து மிஞ்சியது. அதை எனக்கு ‘பொற்கிழி’ யாக அளிப்பதாகச் சொன்னார்கள். அதைப் பெற்றுக்கொள்வது முறையல்ல, நல்ல முன்னுதாரணமும் அல்ல என்று எனக்கு பட்டது.
ஆகவே அந்த நிதியைக்கொண்டு வேறு சில இலக்கிய நிகழ்வுகளை நடத்தலாமென்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் வளர்ந்து இன்னும் கொஞ்சம் நிதி சேர்த்து ஓர் அமைப்பாக உருவாக்கினார்கள். அதுவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இந்த அமைப்பின் நிர்வாகம், அமைப்பு எதிலும் எனக்கு தொடர்பு இல்லை. ஆனால் என் கருத்துக்களுடன் ஒத்துப்போகிற என் நெருக்கமான நண்பர்கள் என் கருத்துக்களை முன்னிறுத்தி நடத்தும் அமைப்பு இது’’
என இந்த வட்டத்தின் தோற்றுவாய்க்கான அடிப்படையைத் தனது 

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்


என்னும் தனது இணையப்பதிவொன்றில் ஜெயமோகனே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் அவர் அடையாளப்படுத்தும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிக்க வேண்டுமென்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் இலக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது.
இவ்வாண்டு அதன் தொடக்கமாகத் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 
மூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு
 ’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ முதன்முறையாக வழங்கப்படவிருக்கிறது
 • புனலும் மணலும

 • கிருஷ்ணப் பருந்து,

 • தூவானம் ஆகிய நாவல்களையும்


  • மோகபல்லவி 

  • கடைத்தெருக்கதைகள்

  • காமினிமூலம் 

  • மாதவன் கதைகள் 

  • ஆனைச்சந்தம் 

  • அரேபியக்குதிரை முதலிய சிறுகதைத் தொகுதிகளையும் உருவாக்கி அளித்திருப்பவர் ஆ.மாதவன். 

(அவரது சிறுகதைகளின் முழுமையான தொகுப்பைத் தமிழினி வெளியிட்டிருக்கிறது)
ஆ.மாதவன்..

திருவனந்தபுரம் நகரின் சாலைத் தெருவில் கடை நடத்தி வரும் 
திரு மாதவன், அந்தத் தெருவைப் பின்புலமாகக் கொண்டே தனது பெரும்பான்மையான கதைகளை அமைத்திருப்பதால் ’கடைத்தெருவின் கதைசொல்லி’யாக விமரிசகர்களால் சுட்டிக் காட்டப்படுபவர். 
சாலைத் தெருவாசிகளை ஆ.மாதவன் தன் எழுத்தின் மூலம் அழியாத ஓவியங்களைப் போல சாஸ்வதமாக்கிவிட்டார். தமிழ் இலக்கியத்தில் ஒரேஒரு தெருவைச் சுற்றியே தன் படைப்புலகை உருவாக்கிய தனிஒரு எழுத்தாளர் மாதவன்! 
சொல்லித் தீராத கதைகள், அந்தத் தெருவில் ஊறிக்கொண்டிருக்கின்றனபோலும்! எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள், மனிதர்களின் சுபாவம் தெருவில் படிகிறதா... அல்லது, தெருவின் சுபாவம் மனிதர்களைப் பற்றிக்கொள்கிறதா எனத் தெரியாதபடி, சாலைத் தெருவும் அதன் மனிதர்களும் விசித்திரமாக இருந்தார்கள்’’என்று மாதவனின் படைப்புக்கள் குறித்துத் தனது ’
கதா விலாச’த்தில் விவரிக்கிறார்’ திரு எஸ்.ராமகிருஷ்ணன்.

திரு ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா, இம்மாதம் 19 ஆம் நாளன்று கோவையில்
 (பி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரிக் கலையரங்கம்-மாலைஐந்து மணி)நிகழவிருக்கிறது.
நவீனத் தமிழ் இலக்கியத்தின் போக்கைத் தொடர்ந்து அவதானித்து வருபவரும்,சிறந்த படைப்பாளியும்,விமரிசகருமாகிய திரு கோவை ஞானியின் தலைமையில் நடைபெறும் இவ்விருது விழாவில் 
மளையாளமொழியின் தேர்ந்த நாவலாசிரியரான நாவலாசிரியர் 
புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆ.மாதவனுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கவிருக்கிறார்.
 திரு ஜெயமோகன்,எழுத்தாளர் நாஞ்சில் நாடன்,திறனாய்வாளர் பேராசிரியர் வேதசகாய குமார் ஆகியோர் ஆ.மாதவனை வாழ்த்திப் பேசவிருக்கின்றனர்.
ஆ.மாதவன் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள
 'கடைத் தெருவின் கலைஞன்'என்னும் நூலைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு மணிரத்னம் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புச் செய்யவிருக்கிறார்
 விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் விழா விருந்தினர்களுக்கு வரவேற்புரைஆற்றும் பொறுப்பு எனக்கும்,நன்றியுரை வழங்கும் பணி 
நண்பர் செல்வேந்திரனுக்கும் அளிக்கப்பட்டிருகிறது.
(மிக அண்மையிலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இணைந்த எனக்கும் இந்நிகழ்வில் ஒரு பங்கு வழங்கிச் சிறப்பித்திருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் என் நன்றிக்கு உரியவர்கள்.)

புலமைக் காழ்ப்பற்ற மனோபாவத்துடன் -
ஒரு இலக்கியப்படைப்பாளியின் சார்பாக -
அவரது கருத்துக்கள் மீது பிடிப்புக் கொண்ட இலக்கிய ஆர்வலர்களின் வட்டம்
 மற்றொரு சக படைப்பாளிக்குச்சிறப்புச் செய்யும் இக்கூட்டத்தில் இலக்கிய ஆர்வலர்கள் அனைரும்
பங்கு பெற வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன். 

 இணைப்புக்கள்;

3 கருத்துகள் :

Unknown சொன்னது…

நல்ல முயற்சி. ஆ.மாதவனுக்கு வாழ்த்துக்கள்.இன்றைய சூழலில் இது மிகவும் அவசியமானது என்பதில் சந்தேகமில்லை.

பாஸ்கர்.

Thenammai Lakshmanan சொன்னது…

வாழ்வின் கடைக்கோடியில் வழங்கப் பெறும் விருதுகள் பற்றிய சாடல் அருமை அம்மா..

மாதவன் சாருக்கும் ஜெமோவுக்கும் வாழ்த்துக்கள்..

மோகன்ஜி சொன்னது…

இந்த அமைப்பு பற்றி ஜெயமோகன் சார் தளத்தில் படித்தேன். நீங்கள் ஜே.மோ.வைப் பற்றி எழுதியிருப்பது அட்சரலட்சம் பெறும்.அவரின் இந்த முயற்சிக்கு என் பாராட்டுக்கள். விழாவில் நீங்கள் பங்கேற்பதற்கும் வாழ்த்துக்கள். இந்த விருது ஏற்பாட்டுக்கு ஜே.மோ சொன்ன காரணங்கள் ரொம்பவே சிந்திக்க வைத்தன. நீங்களும் அவர் கருத்தை மேம்படுத்தியிருக்கிறீர்கள்.மின்னஞ்சலுக்கு நன்றி சகோதரி !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....