துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.12.10

விஷ்ணுபுரம் விருது விழா...இன்று


.
தமிழ் இலக்கியப்பரப்பைத் தனது பலதரப்பட்ட ஆக்கங்களால் செழுமைப்படுத்தி வரும் திரு ஜெயமோகனை சாகித்திய அகாதமி,ஞான பீடம் போன்ற அமைப்புக்கள் இன்னும் கண்டுகொள்ளாமலிருப்பது - அதுவும் கூட ஒரு வகையில் தமிழுக்கே உரிய 'தனிச்' சிறப்புத்தான்.
வயது முதிர்ந்து தளர்ந்து போன இலக்கியவாதிகளுக்கு ...,அதிலும் தங்களது படைப்பூக்கமெல்லாம் வற்றிப்போன பிறகு அவர்களிடமிருந்து வெளிப்படும் நூல்களுக்கு விருதளிக்கும் கொடுமையே நாளும் அரங்கேறிக் கொண்டிருப்பதை நாமெல்லாம் மௌன சாட்சிகளாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
ஜெயமோகன் அதற்காகக் கவலை கொண்டவரல்ல;அவரது வாசிப்பும் எழுத்தும் அதை நோக்கியதும் அல்ல.
அமைப்பு சார் விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு ஆண்டும் அவர் எதிர்க்குரல் எழுப்புவது 'சுயநல நோக்கில்'எனக் குழு அரசியல் பேசுபவர்கள் ஒரு புறம் இருந்தாலும் அவர் குரல் தருவது ,
இன்னும் முறையான எந்தப் பரிசுக்கும் அங்கீகாரத்துக்கும் உரியவர்களாக இனம் கண்டு கொள்ளப்படாமல் விடுபட்டுப் போயிருக்கும் தனது முன்னோடிகளுக்காக மட்டுமே என்பதை அவரைத் தொடர்ந்து வாசித்து வரும் இலக்கிய ஆர்வலர்களும் ,நண்பர்களும் தெளிவாகப் புரிந்து வைத்திருப்பதனால் பிறந்திருப்பதே 
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்.


ஜெயமோகனின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான 'விஷ்ணுபுரம்'நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இந்த இலக்கிய நண்பர் வட்டம் , பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..
அல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறபிப்பதையும்,இலக்கியக் கூட்டங்கள்,அமர்வுகள்,நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதையும் தனது இலக்காகக் கொண்டு-புற நெருக்குதல்கள் ஏதுமின்றித் தானாகவே முகிழ்த்திருக்கும் ஓர் இலக்கிய அமைப்பு.
’’சென்ற ஜனவரி 2010 ல் கோவை நண்பர்கள் மரபின் மைந்தன், அரங்கசாமி, அருண் ஆகியோர் முன்முயற்சி எடுத்து கோவையில் என் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். அது ஒரு வாசகர் சந்திப்பு. அதற்கான நிதி நண்பர்களிடமிருந்தே திரட்டப்பட்டது. அந்த நிதி தேவைக்கு அதிகமாக வந்து மிஞ்சியது. அதை எனக்கு ‘பொற்கிழி’ யாக அளிப்பதாகச் சொன்னார்கள். அதைப் பெற்றுக்கொள்வது முறையல்ல, நல்ல முன்னுதாரணமும் அல்ல என்று எனக்கு பட்டது.
ஆகவே அந்த நிதியைக்கொண்டு வேறு சில இலக்கிய நிகழ்வுகளை நடத்தலாமென்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் வளர்ந்து இன்னும் கொஞ்சம் நிதி சேர்த்து ஓர் அமைப்பாக உருவாக்கினார்கள். அதுவே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இந்த அமைப்பின் நிர்வாகம், அமைப்பு எதிலும் எனக்கு தொடர்பு இல்லை. ஆனால் என் கருத்துக்களுடன் ஒத்துப்போகிற என் நெருக்கமான நண்பர்கள் என் கருத்துக்களை முன்னிறுத்தி நடத்தும் அமைப்பு இது’’
என இந்த வட்டத்தின் தோற்றுவாய்க்கான அடிப்படையைத் தனது 

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்


என்னும் தனது இணையப்பதிவொன்றில் ஜெயமோகனே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் அவர் அடையாளப்படுத்தும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிக்க வேண்டுமென்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் இலக்குகளில் ஒன்றாக இருந்து வந்தது.
இவ்வாண்டு அதன் தொடக்கமாகத் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 
மூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு
 ’விஷ்ணுபுரம் இலக்கிய விருது’ முதன்முறையாக வழங்கப்படவிருக்கிறது
  • புனலும் மணலும
  • கிருஷ்ணப் பருந்து,
  • தூவானம் ஆகிய நாவல்களையும்

    • மோகபல்லவி 
    • கடைத்தெருக்கதைகள்
    • காமினிமூலம் 
    • மாதவன் கதைகள் 
    • ஆனைச்சந்தம் 
    • அரேபியக்குதிரை முதலிய சிறுகதைத் தொகுதிகளையும் உருவாக்கி அளித்திருப்பவர் ஆ.மாதவன். 
(அவரது சிறுகதைகளின் முழுமையான தொகுப்பைத் தமிழினி வெளியிட்டிருக்கிறது)
ஆ.மாதவன்..

திருவனந்தபுரம் நகரின் சாலைத் தெருவில் கடை நடத்தி வரும் 
திரு மாதவன், அந்தத் தெருவைப் பின்புலமாகக் கொண்டே தனது பெரும்பான்மையான கதைகளை அமைத்திருப்பதால் ’கடைத்தெருவின் கதைசொல்லி’யாக விமரிசகர்களால் சுட்டிக் காட்டப்படுபவர். 
சாலைத் தெருவாசிகளை ஆ.மாதவன் தன் எழுத்தின் மூலம் அழியாத ஓவியங்களைப் போல சாஸ்வதமாக்கிவிட்டார். தமிழ் இலக்கியத்தில் ஒரேஒரு தெருவைச் சுற்றியே தன் படைப்புலகை உருவாக்கிய தனிஒரு எழுத்தாளர் மாதவன்! 
சொல்லித் தீராத கதைகள், அந்தத் தெருவில் ஊறிக்கொண்டிருக்கின்றனபோலும்! எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நிகழ்வுகள், மனிதர்களின் சுபாவம் தெருவில் படிகிறதா... அல்லது, தெருவின் சுபாவம் மனிதர்களைப் பற்றிக்கொள்கிறதா எனத் தெரியாதபடி, சாலைத் தெருவும் அதன் மனிதர்களும் விசித்திரமாக இருந்தார்கள்’’என்று மாதவனின் படைப்புக்கள் குறித்துத் தனது ’
கதா விலாச’த்தில் விவரிக்கிறார்’ திரு எஸ்.ராமகிருஷ்ணன்.

திரு ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கும் விழா, இம்மாதம் 19 ஆம் நாளன்று கோவையில்
 (பி.எஸ்.ஜி தொழில்நுட்பக்கல்லூரிக் கலையரங்கம்-மாலைஐந்து மணி)நிகழவிருக்கிறது.
நவீனத் தமிழ் இலக்கியத்தின் போக்கைத் தொடர்ந்து அவதானித்து வருபவரும்,சிறந்த படைப்பாளியும்,விமரிசகருமாகிய திரு கோவை ஞானியின் தலைமையில் நடைபெறும் இவ்விருது விழாவில் 
மளையாளமொழியின் தேர்ந்த நாவலாசிரியரான நாவலாசிரியர் 
புனத்தில் குஞ்ஞப்துல்லா ஆ.மாதவனுக்கு விருது வழங்கிக் கௌரவிக்கவிருக்கிறார்.
 திரு ஜெயமோகன்,எழுத்தாளர் நாஞ்சில் நாடன்,திறனாய்வாளர் பேராசிரியர் வேதசகாய குமார் ஆகியோர் ஆ.மாதவனை வாழ்த்திப் பேசவிருக்கின்றனர்.
ஆ.மாதவன் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள
 'கடைத் தெருவின் கலைஞன்'என்னும் நூலைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் திரு மணிரத்னம் அவர்கள் வெளியிட்டுச் சிறப்புச் செய்யவிருக்கிறார்
 விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் விழா விருந்தினர்களுக்கு வரவேற்புரைஆற்றும் பொறுப்பு எனக்கும்,நன்றியுரை வழங்கும் பணி 
நண்பர் செல்வேந்திரனுக்கும் அளிக்கப்பட்டிருகிறது.
(மிக அண்மையிலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் இணைந்த எனக்கும் இந்நிகழ்வில் ஒரு பங்கு வழங்கிச் சிறப்பித்திருக்கும் நிர்வாக உறுப்பினர்கள் என் நன்றிக்கு உரியவர்கள்.)

புலமைக் காழ்ப்பற்ற மனோபாவத்துடன் -
ஒரு இலக்கியப்படைப்பாளியின் சார்பாக -
அவரது கருத்துக்கள் மீது பிடிப்புக் கொண்ட இலக்கிய ஆர்வலர்களின் வட்டம்
 மற்றொரு சக படைப்பாளிக்குச்சிறப்புச் செய்யும் இக்கூட்டத்தில் இலக்கிய ஆர்வலர்கள் அனைரும்
பங்கு பெற வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன். 

 இணைப்புக்கள்;

4 கருத்துகள் :

தேவன் மாயம் சொன்னது…

வாழ்த்துகள்!

தேவராஜ் விட்டலன் சொன்னது…

அம்மா
திரு. மாதவன் அவர்களின் படைப்புகளை தேடி தேடி வாசிக்க வேண்டும் என
மனதில் கட்டுக்கடங்கா ஆவல் உள்ளது. இந்த கடிதம் எழுதும் போது விழா நல்ல முறையில் முடிந்திருக்கும் என எண்ணுகிறேன்.

என்றென்றும் வாசிப்பை
நேசிக்கும் அன்பன்
தேவராஜ் விட்டலன்.

அப்பாதுரை சொன்னது…

ஜெயமோகன் படித்ததே இல்லை. அவர் பெயரும் சமீப அறிமுகம் தான். அவர் எழுத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டது இந்த அறிவிப்பு. மாதவன் கதைகளை அடுத்த முறை சென்னை போகும் பொழுது வாங்க வேண்டிய பட்டியலில் சேர்த்திருக்கிறேன்.

விழா நன்கு நடைபெற வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... சொன்னது…

வாழ்த்துகள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....