7.4.11

’’அன்னக்கிளி உன்னைத் தேடுதே..!’’


தமிழ்த் திரை உலகம் கவர்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் நடிப்புத் திறமைக்காகப் பயன்படுத்திக் கொண்ட விரல்விட்டு எண்ணக் கூடிய மிகச் சில நடிகைகளில் ஒருவர் காலம் சென்ற திருமதி சுஜாதா.

நமக்கு மிகவும் நெருக்கமான ஒரு தோழியைப் போன்ற நடை,உடை,பாவனைகள்,...
.சற்றும் மிகையற்ற இயல்பான நடிப்பு,முகத்திலும்,உடல்மொழியிலும் காட்டும் நுணுக்கமான பாவ பேதங்கள் என அவரது காலகட்டத்திலும்,அவருக்குச் சற்று முன் பின்னாகவும் நடித்துக் கொண்டிருந்த நடிகைகளின் பொதுவான போக்கிலிருந்து மாறுபட்ட யதார்த்தமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி நடிகைகளின் மீது ஒரு கண்ணியமான ஒரு பார்வையை உண்டாக்கியவர் அவர்.
ஒரு வகையில் சொல்லப்போனால்,இயல்பான நடிப்புப் பாணியை வெளிப்படுத்துவதில் சுகாசினி,ரேவதி,ரோகிணி போன்றோருக்கு , அவர் ஒரு முன்னோடி போல அமைந்திருந்தார் என்று கூடச் சொல்ல முடியும்.

சுஜாதாவை அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலச்சந்தர் , ‘70 களின் இடைப்பகுதியில் எடுத்துக் கொண்டிருந்த மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த முதிர்கன்னியரான அலுவல் மகளிரை மிகச் சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதைப் போல அமைந்திருந்த சுஜாதாவின் தோற்றமும் நடிப்பும் கூட அவரது தொடர் வெற்றிக்குக் காரணம் என்று சொல்லலாம்.

பின்னாளில் சிவாஜி போன்ற நாயகர்களின் இல்லத் துணையாகப் பக்கமேளம் அடிக்கும் பாத்திரங்களில் சுஜாதா வந்து போனாலும்,
குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில்,
பெண்ணுக்கு முதன்மை தரும்- பெண்ணை மையமாக்கிச் சுழலும் பல படங்களில் பெரும்பாலும் சுஜாதாவே நாயகியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் அந்தப் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து அவர் நடித்திருக்கிறார் என்பதும் அவருக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்கள்.

தேசிய விருதுகள் சுஜாதாவை வந்தடையாவிட்டாலும் தரமான நடிப்பைத் தேடிப் போகும் பார்வையாளர்களின் உள்ளத்தில் அவருக்கென்று உறுதியான ஓரிடம் இருந்து கொண்டுதான் இருந்தது.

அவள் ஒரு தொடர்கதை,அவர்கள்,அன்னக்கிளி,விதி,நூல்வேலி ஆகிய பல படங்களில் அவர் காட்டும் மிக நுட்பமான முக பாவனைகள் காலம் கடந்து நிலைத்திருக்கும் தன்மை பெற்றவை.
பாலச்சந்தரின் ‘அவர்கள்’ படத்தில் இடம் பெறும் ‘காற்றுக்கென்ன வேலி’ பாடலின் ஒவ்வொரு ‘ஷாட்’டிலும் அத்துமீறும் ஆர்வமும் குறும்பும் கொப்பளிக்க...சுஜாதா காட்டியிருக்கும் வித்தியாசமான 
பாவங்களை ரசித்தபடி அந்தக் கலைஞருக்கு அஞ்சலி!




9 கருத்துகள்:

  1. சுஜாதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறை நிலையோடு நின்று வாழ்த்துவோம் !
    வாழ்க வளமுடன் !
    (நல்ல பதிவு !)

    பதிலளிநீக்கு
  2. //தேசிய விருதுகள் சுஜாதாவை வந்தடையாவிட்டாலும் தரமான நடிப்பைத் தேடிப் போகும் பார்வையாளர்களின் உள்ளத்தில் அவருக்கென்று உறுதியான ஓரிடம் இருந்து கொண்டுதான் இருந்தது.//

    உண்மை. உங்கள் எழுத்துக்களில் ஒரு நல்ல கலைஞருக்கு செய்யப்பட்ட சிறப்பான நினைவஞ்சலி.

    நடிப்பாளுமையும் நல்ல குரல் வளமும் கொண்ட மிகச் சிறந்த நடிகை சுஜாதா. அன்னாருக்கு எனது அஞ்சலிகள்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு சிறந்த நடிகைக்கு நிறைவான அஞ்சலி.

    பதிலளிநீக்கு
  4. அடடா! தெரியாமல் போனதே!
    'அவள் ஒரு தொடர்கதை'யில் அவர் நடிப்பை மறக்கவே முடியாது.

    பதிலளிநீக்கு
  5. 'ganga water cannot be trapped in a shell' என்று subtitle சிரிப்பைத் தந்து ஒரு poignant momentஐக் கலைத்து விட்டது.. எங்கிருந்து translators வருகிறார்களோ!

    பதிலளிநீக்கு
  6. இணையத்திலோ மற்ற பத்திரிகைத் தளங்களிலோ இது பற்றிக் காணாதது வியப்பாகவும் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. தேர்ந்த நடிப்பை மனமாரப் பாராட்டி அக் கலைஞருக்குச் செலுத்திய அஞ்சலியில் இணைந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.
    ஷப்னாஆஸ்மியின்- ஸ்மீதா பாடீலின் இயல்பான நடிப்பைப் புகழ்ந்து பேசும் நம்மவர்கள்..நம்மிடையேயும் கூட அப்படி ஒரு நடிகை வாழ்ந்து மறைவதைச் சரியாகப் பதிவு செய்து பகிர்ந்து கொள்ளத் தவறித்தான் விடுகிறார்கள்.
    என்ன செய்வது..?சுஜாதாவின் மூலதனம் கவர்ச்சியாக இல்லாமல் போய்விட்டதே.
    இணையம் பத்திரிகைகளெல்லாம் தேர்தல் பரபரப்பில் இச் செய்தியை அதிகம் கண்டு கொள்ளவில்லை போலும்..

    பதிலளிநீக்கு