துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.11.11

’அறம்’வரிசைச் சிறுகதைகள்-ஓர் அறிமுகம்-1


பிரபஞ்சத்தில் ரத்தமும் சதையுமாய் நமக்கு முன் வாழ்ந்து நடமாடிய உண்மையான சில மனிதர்களை - அவர்களின் வாழ்க்கைச் சித்திரங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அவற்றோடு தனது புனைவுகளையும் ஒருங்கிணைத்தபடி சிறுகதைகளாக்கும் பாணியைக் கையாண்டபடி ’அறம்’வரிசைச் சிறுகதைகள் வரத்தொடங்கிய புதிதில்,’’ஜெயமோகனின் தளத்தில் சிறுகதை மழையாய்க்கொட்டத் தொடங்கி விட்டது.பார்வையை வேறெதிலும் திருப்ப முடியாதபடி மனிதர் தன் எழுத்தால் வசியம் செய்து கட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார். ஜெயமோகனைப் பொறுத்தவரை, இது கதை உதிர் காலம்.!’’என்றும்,’
’ஆழ்ந்த வாசிப்புக்கு மட்டுமே அர்த்தமாகிறவை ஜெயமோகனின் படைப்புக்கள்'’என்ற பொதுவான வாசகக் கருத்தாக்கத்தைத் தகர்த்தெறிந்து,எளிமையான நேரடிப் புனைவுகள் பலவும் அவரிடமிருந்து ஜனிக்கும் இந்தத் தருணத்தைப் பிடித்துக் கொண்டு புதிய வாசகர்கள் அவரது எழுத்துக்களுக்குள் பயணப்படலாம் என்றும் முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.


புயல் வேகத்தில் வர்ஷித்தபடி...அகம் சிலிர்க்க வைத்து ஆன்மத் தூய்மை செய்த அச் சிறுகதைகள் சிலவற்றின் மீதான என் வாசிப்புக்கள் இனி...

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் நிலவி வந்த ஒரு மரபு ’அறம்’பாடுதல் .’தங்கள் புலமைத் திறனும் எழுத்தின் வீச்சும் ஒருவரை வாழ்விக்கவும்,தாழ்விக்கவும் வல்லது என்ற புலமைச் செருக்கு அல்லது
தங்களது படைப்பின் மீது கொண்ட அசாத்தியமான நம்பிக்கை அகத் தூண்டுதலளிக்க ,அதன் வழிகாட்டுதலுடன் தங்கள் அறச் சீற்றத்தைப் பாடல்களில் பதிவு செய்த புலவர்களும் ,அந்தச் சீற்றத்தின் வெம்மையால் தாக்குண்ட அரசர்களும் வாழ்ந்திருந்த வரலாறுகள் நம்மிடையே உண்டு.
இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் தன் தாய்வழி உறவுகளை ஒழித்தபோது அதில் வாரிசாக இருந்த ஒரு கவிஞன், நந்தியைப்பற்றி அறம்பாட அவ்வாறு எழுந்த நூலே நந்திக்கலம்பகம். நந்திக் கலம்பகப் பாடல்கள் முழுவதுமே அறம் வைத்துப் பாடப்பட்டவை என்ற உண்மையை நன்கு தெரிந்திருந்தும் , தமிழைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே நந்திவர்மன்,தன் அரண்மனையிலிருந்து மயானம் வரை ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு பந்தல் போடச் சொல்லிகேட்டுக் கொண்டே மயானம் வரை சென்றான் என்றும், ஒவ்வொரு பந்தலை விட்டு அவன் நகரும்போதும் அது எரிந்தது என்றும் கடைசிப்பாடலை அவன் சிதை மீது அமர்ந்து கேட்டான் என்றும் இலக்கியக் குறிப்புக்கள் கிடைக்கின்றன...
அறம்பாடுதல் என்ற பழ மரபின் வேர் பற்றியிழுத்து இன்றைய நவீனச் சிறுகதைக்கண்ணியில் தொடுத்து அறம் சார்ந்த பல கேள்விகளை முன் வைக்கிறது,அண்மையில் தனது இணையத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டிருக்கும் ‘அறம்’ சிறுகதைவறுமையில் வாடிய சமகாலப் படைப்பாளி ஒருவரை நம் மனக் கண்முன் நிழலாட விட்டபடி,  அவர் யாரென்று கண்டுபிடிக்கும் ஆர்வத்தூண்டலைக் கதையின் முற்பகுதி ஏற்படுத்தினாலும், அதை விடவும் உக்கிரமான தருணங்கள் அடுத்தடுத்து நேர்ந்து கொண்டே போக...,முன்னதைக் கை விட்டு விட்டு ,மனித குலத்தின் சாஸ்வதமான கேள்வியாகிய எது அறம் என்ற தேடலுக்குள் நம்மை மூழ்கடித்து விடுகிறது சிறுகதை.
அறம் பாடும் புலவன்,அறமாகவே வாழ்ந்த ஆச்சி என்று அந்தக் கதை விரிக்கும் பாத்திரச்சித்திரங்கள்,இரு அறங்களும் ஒன்றோடொன்று மோதி முரணுதல்,
இறுதியில் புலவனின் அறம் கூற்றாகி விடாமல் ஆச்சியின் அறம் அரண் செய்து காத்தல், 4 அணாவுக்கும்,8 அணாவுக்கும் நம் முன்னோடிக் கலைஞர்கள் , போகாத வாசலுக்கெல்லாம் போக நேர்ந்த கொடுமைகள், .
படைப்பாளியின் கொடிய வறுமை அப்போதைக்கு அவன் படைப்பைச் சாய்த்தாலும் அவன்அறம் பாடும் வேளையில் புற்றிலிருந்து சிலிர்த்தெழும் நாகம் போல அது முன்னைக் காட்டிலும் பன்மடங்கு வீரியம் கொண்டு - தன்னைத்தானே உசுப்பிக் கொண்டு சிலிர்த்தெழுதல்,
கதையின் காட்சிப்படுத்தல், உரையாடல், தஞ்சை மண்ணின் - படைப்பாளிகளின் பின்புலம் என இக் கதையின் வாசிப்பனுபவம்... ஒரு பரவசப் பேரானந்தம்.
இதை விடவும் உன்னதமான உக்கிரமான வாசிப்பின் தருணங்களைத் தரும் ஜெயமோகனின் கதைகள் பல இருக்கலாம் என்றாலும் குறிப்பிட்ட இந்தக் கதை நம்முள் நிகழ்த்தும் மாயமும் , என்றென்றும் நிலையான மானுட அறத்தின் சன்னதமேறிய வெளிப்பாடும் நம் உள் நரம்புகளுக்குள் ஒருகண அதிர்வையாவது ஏற்படுத்தாமல் நழுவிச் சென்று விடுவதில்லை.
‘அறம்’ பிரபஞ்ச வாழ்வின் ஒரு சிறு துளி!
வாழ்க்கையின் சத்தியத்தைப் பேசும் துளி..!.
அன்று அறம் பாடிப் பற்ற வைத்த நெருப்பு , இங்கும் பற்றிக் கொள்ளத்தான் செய்கிறது...நம் உள்மனங்களில் ..!இச் சிறுகதை ஏற்றி வைக்கும் அறிவின்சுடராய்,மெய்யறத்தின்துலக்கமாய்..


சோற்றுக்கணக்கு
திருவனந்தபுரத்தில் சிறியதொரு உணவு விடுதி நடத்தி வரும் கெத்தேல் சாகிப் குரான் நெறிப்படி தான் போடும் சோற்றுக்குக் கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளாமல்...தன் உணவகத்தில் வந்து உணவருந்துபவர்களுக்கெல்லாம் வாரி வழங்கும் ஒரு சூபி.
ஆனாலும் அதனால் எந்த இழப்புமின்றி அங்கே செல்வமே குவிகிறது.அது பற்றியும் அவருக்குக் கவலையில்லை.வந்தோர்க்கு வயிறார,சுவையாக உணவு படைக்கும் தர்மம் ஒன்று மட்டுமே அவர் வரித்துக் கொண்டிருக்கும் ஒரே அறம்.
அப்படி ஒரு அறநெறியைத் தான் நேர்ந்து கொண்டிருப்பதான உள்ளுணர்வைக் கூட வெளிக்காட்டாதபடி தனது செயல் ஒன்றில் மட்டுமே குறியாய் இயங்கும் கர்மயோகி அவர்.

மேற்படிப்புக்காக உறவினர் வீட்டில் தங்கி’இடிசோறு’சாப்பிட நேர்ந்த ஒரு மாணவன் ,அங்கிருந்து தப்பி வந்து சாகிபிடம் தஞ்சமடைகிறான்.
உணவகத்தில் அவர் வைத்திருந்த உண்டியலில் அவ்வப்போது அவனால் இயன்ற பணத்தைப் போட்டுக் கொண்டே வந்தாலும் சோற்றுக் கணக்குப் பார்க்கும் அவனது உள்ளம் அதைச் சரிவரத் தீர்க்காத குற்ற உணர்வில் குமைகிறது.

வறுமை மற்றும் சிக்கனத்தின் காரணமாகத் தன் தாய் அளந்தளந்து போட்ட அன்னத்தை மட்டுமே உண்டு பழகியிருந்த அவன் கட்டற்ற கருணை வடியும் அவர் கரங்களில் மட்டுமே தாய்முலைப் பாலைத் தரிசிக்கிறான்; சுவைக்கிறான்.
படிப்பு முடிந்து நல்ல வேலை கிடைத்ததும் அவரது சோற்றுக் கணக்கைத் தீர்க்கக் கட்டுக்கட்டாய்ப் பணத்துடன் வந்து இரு உண்டியல்களை அவன் நிறைத்தபோதும் அவரிடம் அதற்கான எதிர்வினை ஏதுமில்லை.தான் தற்போது வேலையில் சேர்ந்திருப்பது..வேறு தகவல்கள் ஆகியவை பற்றி அவருக்கு எந்த 
அக்கறையும் இல்லை;

தன் வழக்கமான போக்கில் வாடிக் கிடக்கும் வயிறுகளை நிரப்பும் வேலை ஒன்றில் மட்டுமே நிஷ்காமிய் கர்மியாக முனைந்திருக்கும் அவரைப் புரிந்து கொள்ள முடிவதாலேயே அதையெல்லாம் அவரிடம் தெரிவிக்க வந்து விட்டுச் சொல்லாமலேயே விலகிப் போய்விடுகிறான்.அது அவருக்குத் தேவையற்றது என அவன் உணரும் கணம் அற்புதமான பதிவு.

இந்தக் கட்டத்தில் மிகக் குறைந்த ஒரு காலகட்டத்தில் மட்டுமே அவனுக்குத் ’தண்டச்சோறு’போட்ட மாமி - இப்போது வறுமையில் நொடித்துப் போனவளாய் அவன் முன் வந்து தான் போட்ட சோற்றுக் கணக்கை நினைவூட்டிச் செஞ்சோற்றுக்கடன் தீர்க்க அழைப்பு விடுக்கிறாள்.
சோற்றுக் கணக்கைச் சற்றும் பாராத கெத்தேல் சாகிபிடமிருந்து அவன் பெற நேர்ந்த ஞானம் எந்த வகையான முடிவை நோக்கி அவனை இட்டுச் செல்கிறது என்பதே கதையின் இறுதிக் கட்டம்.
போடாத சோற்றுக்குப் பெண்கட்டத் துடித்த மாமியும்,
போட்ட சோற்றுக்குக் கணக்கே பார்க்காத சாகேபும் 
இச் சிறுகதையில் இரு துருவ சித்திரங்கள்.
மண்ணில் இவ்விரு வகை மனிதரும் உண்டு.ஆனாலும் சாகேபு போன்ற மனிதர்கள் அபூர்வமாகத்தான் ஜனிக்கிறார்கள்.ஒரு சொட்டுக் கண்ணீரையாவது உதிர்க்காமல் இந்தப் படைப்பைக் கடந்து போய்விட முடியாது என்பதே இதன் வெற்றி.


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....