துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.11.11

’அறம்’வரிசைச் சிறுகதைகள்-ஓர் அறிமுகம்-2

’அறம்’வரிசைச் சிறுகதைகள் பற்றிய தொடர்ப்பதிவு


யானை டாக்டரும் கூடக் கெத்தல் சாகிபு போல உண்மையான ஒரு சமகால மனிதர்.டாக்டர் கெ.எம்.என அன்போடு அழைக்கப்பட்ட திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கானுயிர் நேசத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர்.
அவரது வாழ்வை அடியொற்றியதே யானை டாக்டர் சிறுகதை.
தான் செய்யும் காரியத்தை -அதன் முழுப்பரிமாணங்களுடன் உள் வாங்கிக்கொள்வது... - அதில் மட்டுமே தோய்ந்து கலந்தபடி...புற உலக இயக்கம்,ஆரவாரம்,அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தை செலுத்தாமல் இருப்பது என அவரும் ஒரு கர்மயோகியாக மட்டுமே காட்சியளிக்கிறார்.

கானக உயிரினங்கள்,பிரபஞ்ச நடனத்தின் இயல்பான அசைவுகளையும்,ஒத்திசைவுகளையும் தரிசனமாக்கித் தந்து கொண்டிருப்பதை அனுதினமும் கண்டபடி அனுபூதி நிலையை எட்டிவிட்ட ஒருவருக்குப் பரிசுகளையும்,விருதுகளையும் துரத்திக் கொண்டு ஓடும் மனிதனின் உலகம் அருவருப்புக்கு உரியதாக இல்லாமல் போனால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
புழுக்களும் பூச்சிகளும் அருவருப்புக்குரியவை அல்ல என்பதை உணர்த்தும் அதே வேளையில் ‘கலக மானுடப்பூச்சிக’ளாகிய மனிதர்களே அதற்கு ஏற்றவர்கள் என்பதையும் முன் வைக்கிறது கதை. 
இந்தக் கதையைப் படித்த பிறகு வழக்கமாகப் புழுக்களையும் பூச்சிகளையும் பார்க்கும்போது ஏற்படும் அசூயையான உணர்வை நிச்சயம் கடந்து சென்று விட முடியும்.


இந்தக் கதையைப் படித்தபோது யானையில்லாமல் சங்க இலக்கியமே இல்லையென்பது உணர்வானதும் சங்கப் பாடல்கள்,பழந்தமிழ்ப்பாடல்கள் பலவும் ஏக காலத்தில் என்னுள் பெருங்குரலெடுத்துப் பிளிறின.
ஆனால் பாடிப்பாடி யானையை வியந்த சங்கமனிதர்களே அதைக்கொன்று வீழ்த்துவதை வீரத்தின் உச்சமாகவும் போற்றிப் பாடியிருக்கிறார்களே! 

‘’கவளம் கொள் யானையின் கை துணிக்கப்பட்டுப்
பவளம் சொரிதரு பை போலத் தோன்றும்’’
என்று களவழிநாற்பதில் துடிக்கத் துடிக்க வெட்டுப்படும் யானைத் துதிக்கையிலிருந்து சொரியும்குருதியைப் பவளப் பை கவிழ்த்தது போல இருந்தது என்று பாட அந்தப் புலவனின் மனம் எப்படித் துணிந்தது?
மேன்மையும்,பெருமையும் கொண்ட வேறு எந்த உயிரையும் விட உயர்ந்த நிலையில் இருந்து மேலாதிக்கம் செலுத்துபவன் தானாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற மூர்க்க வெறியே இவ்வாறான முரண்பாட்டுக்குள் அவனைக் கொண்டு செலுத்தியிருக்குமோ,அதன் மாற்று வடிவம்தான் இன்று கானுயிர்களுக்கு மனிதர்கள் இழைக்கும் இன்னல்களோ என்ற பலவகைக் கேள்விகளை நோக்கி நம்மை நடத்திப் போகும் அரியதொரு படைப்பான இக் கதை தனிப் பிரசுரமாக-இலவச வெளியீடாகவும் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தினரால் கொண்டு வரப்பட்டுள்ளது.
யானைடாக்டர் இலவச நூல் வெளியீடு


.
மிகச் சிறந்த இலக்கியவாதியும்,நாடகக்காரருமான திரு கோமல் சுவாமிநாதனின் இறுதி நாட்களைக் கண்முன் விரிக்கும் பெருவலி,
வலி என்ற உணர்வுக்கு ஒரு தூல வடிவம் 
...!
மாவலிக்கு முன்பு பேருரு எடுத்து நின்ற வாமனனைப்போல வலியினால் உடல் படும் வாதையும் படிப்படியாக வளர்ந்து அடுத்தடுத்த கட்டத்துக்குப் போய்க்கொண்டே இருந்ததைக் கதை படிக்கும் கணங்களில் உணர்ந்து கொண்டே தொடர முடிந்ததை இக் கதை அளிக்கும் பேரனுபவம்.....
கதையின் மையத்தை விட நான் பெற்ற துய்ப்பு அதிலேதான்.
வாழ்நாளில் ஏதேனும் ஒரு கொடிய வலியை அது தரும் துன்பத்தைச் சில நாட்களாவது அனுபவித்துப் பார்த்திருக்கும் எவரும் இக் கதை தரும் மேற்குறித்த உணர்வில் ஒன்ற முடியும்.
என் அனுபவமும் அது சார்ந்ததே..


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....