துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.11.11

ஜெயமோகனின் ‘அறம்’

திரு ஜெயமோகனின் அறம் வரிசைச் சிறுகதைகளின் தொகுப்புநூல் வெளியீட்டு விழா 26ஆம் தேதி சனிக்கிழமையன்று ஈரோட்டில் நடைபெற்று முடிந்திருக்கும் இந்தத் தருணத்தில் அந்தக் கதைகள் இணையத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த இந்த ஆண்டின் தொடக்க காலகட்டமும்,அந்தக் கதைகள் வெளியிடப்படும் இரவு 12 மணிக்காக ஒவ்வொரு நள்ளிரவும் கண்விழித்துக் காத்திருந்த பொழுதுகளும் பெரும்பாலும் உண்மை மனிதர்கள் சார்ந்த அந்தக் கதைகளின் பாத்திரங்கள் யாரெனக் கண்டுபிடிக்கும் சவாலில் முனைந்து பல நேரங்களில் அதில் வெற்றி கண்டபோது குழந்தைத்தனமாக மகிழ்ந்ததும்,கதை படித்து முடித்த சூட்டோடு அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி என் உணர்வுகளைப் பூரணத்துவம் பெறச் செய்துகொண்ட நிறைவில் ஆழ்ந்த கணங்களும் நெஞ்சில் படமாய் விரிந்து கொண்டிருக்கின்றன.

திருவண்ணாமலையிலுள்ள வம்சி வெளியீடாக வரும் இந்நூல் வெளியீட்டு விழாவுக்குப் போகமுடியாதகுறை இருந்தபோதும் ஜெயமோகன் முன்னிலையில்,திருவண்ணாமலையிலேயே வைத்து நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களின் (ரீங்கா-உன்னத்)திருமணத்தின்போது -அப்போதுதான் அச்சிலிருந்து வெளிவந்த புது மணத்தோடு அந்த நூலைப் புது மணத் தம்பதியர் தங்கள் திருமண அன்பளிப்பாக வந்திருந்தோர்க்கு வழங்கி விட்டதால்-அதில் நானும் கலந்து கொள்ள வாய்த்ததால்-இணையத்தில் சுடசுடப் படித்தது போலவே நூலையும் புத்தம்புதிதாக முதலிலேயே பெற்று அதில் ஜெயமோகனின் கையெழுத்தையும் பெற்று விட முடிந்தது இனியதோர் அனுபவம்.

ரீங்கா-உன்னத் திருமணத்தில் ‘அறம்’
உடன் ஜெயமோகன்,எழுத்தாளரும் வம்சி பதிப்பாளருமான திரு பவாசெல்லதுரை
தனக்கு ஏற்பட்ட குறிப்பிட்ட மன எழுச்சியின் உந்துதலால் ஒரே உச்சநிலையில் இருந்தபடி நாற்பது நாட்கள் எழுதியதாக ஜெயமோகன் குறிப்பிடும் ‘அறம்’வரிசைச் சிறுகதைகள் இணையதளத்தில் தொடர்ச்ச்சியாக வந்து கொண்டிருந்த வேளையில் ’’பல்லாயிரம் வாசகர்களை அவை ஒன்றரை மாதம் ஓர் உன்னத மனநிலையில் நிறுத்தியிருந்தன’’என்கிறது நூலின் உள்ளட்டை.ஆயிரக்கணக்கான அந்த வாசகர்களில் ஒருத்தியாக ’அறம்’நூல் பல லட்சம் உள்ளங்களில் புதிய தரிசனங்களின் மின்னல்கீற்றைப் புலர வைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்....

விஷ்ணுபுரம் இலக்கியவட்டநண்பர்களுடன்...
 அறம் சிறுகதைத் தொகுப்பை வாங்க.....
 http://www.jeyamohan.in/?p=22295

இணையத்தில் இச் சிறுகதைகள் வெளிவந்தபோது அவற்றில் சில குறித்து நான் எழுதிய குறிப்புக்கள் தொடரும் அடுத்த பதிவில்...
.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....