துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.12.11

விஷ்ணுபுரம் விருது விழா-2011


தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான 'ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்'.ஜெயமோகனின் படைப்புக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தாலும்,அவரது இலக்கிய ஆளுமையின் பால் விளைந்திருக்கும் ஈர்ப்புக் காரணமாகவும்
எங்கெங்கோ பலப் பல ஊர்களிலும் நாடுகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த மனம் கொண்ட நண்பர்களின் குழு ஒருங்கிணைந்து ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது.  
இலக்கியக் கூட்டங்கள்,சந்திப்புக்கள்,நிகழ்வுகள் ஆகியவற்றை அவ்வப்போது நடத்துவதன் வழி இலக்கிய வாசிப்புப் பயிற்சியை மேம்படுத்திக் கொள்வதோடு, பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..அல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறப்பிப்பதையும்,ஒவ்வொரு ஆண்டும் ஜெயமோகன் அவர்களால் அடையாளப்படுத்தப்படும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிப்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் குறிப்பான இலக்குகள்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு இவ் விருது முதன் முறையாகச் சென்ற ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.இவ்வாண்டு 2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’கரிசல் இலக்கியப் படைப்பாளியாகிய திரு பூமணிக்கு வழங்கப்படவிருக்கிறது.


பூ.மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட பூமணி,கோயில்பட்டி அருகிலுள்ள ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்து,பின் கோயில்பட்டியில் குடியேறியவர்.’பிறகு’,’வெக்கை’,’நைவேத்தியம்’ஆகிய நாவல்களும் ‘வயிறுகள்’,’ரீதி’,’நொறுங்கல்கள்’முதலிய சிறுகதைத் தொகுப்புக்களும் இவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்.
இவரது ‘பிறகு’நாவல் இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றிருப்பது;’வெக்கை’நாவல் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
அஞ்ஞாடி என்னும் மிகப் பெரிய நாவல் ஒன்றை வெகு விரைவில் வெளியிடவிருக்கும் பூமணி,தேசிய திரைப்படக் கழகத்தின் (NFDC)நிதி உதவியோடு குழந்தைத் தொழிலாளர் உழைப்பின் அவலம் பற்றிய சித்தரிப்பான ‘கருவேலம்பூக்கள்’என்னும் திரைப்படம் ஒன்றையும் இயக்கி வெளியிட்டிருக்கிறார் என்பதும்,சர்வதேசப் பட விழாக்களில் பங்கேற்று கவனம் பெற்ற திரைப்படம் அது என்பதும் இங்கே குறிப்பிட்டுச் சுட்டத்தக்கது.


விஷ்ணுபுரம் விருதைப் பெறும் எழுத்தாளர் பூமணியை வாழ்த்துவதோடு கலை,இலக்கிய ஆளுமைகள் பலரும் பங்கேற்கவிருக்கும் இவ் விழாவுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.
பி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களில் வெளியிடக் கோருகிறேன்.

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....