துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

5.12.11

’அறம்’வரிசைச் சிறுகதைகள்-ஓர் அறிமுகம்-4


ஜெயமோகனின் ’அறம்’வரிசைக்கதைகள் பற்றிய பதிவுகளின் தொடர்ச்சி...
நூறு நாற்காலிகள்
குறிப்பிட்ட இந்தச் சிறுகதைகளின் கதை வரிசையில் நம்மை உச்சி முதல் பாதம் வரை உலுக்கியெடுத்துக் கண்ணீர் சுரக்க வைப்பது இந்தப்படைப்புத்தான்..!.சாதியின் கொடிய தீட்டை அரசுப் பணியின் அதிகாரத்தாலோ , உயர்சாதிப்பெண்ணை மணப்பதாலோ கடக்க முடியாமல்....ஆதிக்கக் கிண்டல்களின் நுட்பமான விஷத்தீண்டல்களுக்கு ஆட்பட்டுக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம் காப்பனைப் போல நம்மைச் சுற்றிலும் (உமாசங்கர்-ஐ.ஏ.எஸ்.,சிவகாமி-ஐ.ஏ.எஸ். என..) எத்தனை எத்தனை பேர்!

நாற்காலியில் அமர்ந்து விட்ட பிறகும் -அது ஏதோ கருணைப்பிச்சை என்று மட்டுமே எண்ணியபடி ஆதிக்கம் செலுத்த வக்கற்ற/தகுதியற்ற அடிமை வம்சத்தின் சங்கிலிக் கண்ணியாகவே பாவிக்கும் உயர்/கீழ் அதிகாரிகளின் சாதி மேலாதிக்கம்.,சமூக/அலுவல் தரத்தின் அடுத்த படிக்கட்டை எட்டக் கணவனின் மூன்றெழுத்து துணையாவதால் அவனது சாதியைப் புறந்தள்ளும் மனைவி; 
முற்போக்கு முத்திரைக்காகவே ஏறுக்கு மாறான விடை வந்தும் மதிப்பெண் போடும் தேர்வுக்குழுவினர்...! மிகச் சரியான - அசலான பார்வைகள் அவை என்பதைத் தவிர வேறேதும் சொல்லத் தோன்றவில்லை...

என் மனதில் நிலைத்த சித்திரமாய் ஓலமிட்டுக் கொண்டிருப்பவள் மலத்திலும்,மூத்திர நாற்றத்திலும் துழாவித் துளைந்தபடி சோற்றிலும்.தீனியிலும் மட்டுமே வாழ்வையும் அதன் அர்த்தத்தையும் கண்டு கொண்டிருந்த காப்பனின் தாய்தான்! உயர் சாதியினராகக் கொள்ளப்பட்டவர்கள் மீது வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள நேரும் பயம் கலந்த மரியாதை - தாங்கள் வலுவில் ஏற்க நேர்ந்ததாக அமைந்து விட்டாலும் - அதைத் தாண்டியதாகத் தங்களை மேலாதிக்கம் செலுத்தும் மாற்றுசாதியின் மீதான அருவருப்பு(தான் புழங்கும் அழுகல் பண்டங்களை விட அவளுக்கு இதுவே அருவருப்பூட்டுகிறது), வெறுப்பு ஆகியவற்றையே அவளது நனவிலி மனம் பதிவு செய்து வைத்திருக்கிறது. மருமகள் மீதும்,அவள் நிறத்தின்மீதும்,தம்புரான்கள் தரிக்கும் வெள்ளுடையின் மீதும் ,அவர்கள் அமரும் நாற்காலியின் மீதுமான காழ்ப்பாகவும்,பயமாகவும் ,அசூயையாகவும் அவளிடமிருந்து வெளிப்பாடு கொள்ளும் உணர்வுகள் அந்த ஆழ்மனத் தூண்டலினால் நேருபவையே..

தாய் தூண்டும் வெறுப்பு மற்றும் குரோத உணர்வுகள் அவனுக்குமே பதவியின் குறியீடாகிய நாற்காலியின் மீது ஒரு கையாலாகாத விரக்தி மனப்பான்மையை முதலில் தோற்றுவிக்கிறது;எனினும் பதவி என்ற ஒன்றைப் பற்றிக் கொண்டு , அதன் வழியாக மட்டுமே தன் மீது இதுகாறும் படர்ந்தவற்றைத் தான் கடந்து செல்லமுடியும்.., .போட்டித் தேர்வு எழுதுமாறு குரு தன்னைப் பணித்ததற்கு அதுவே காரணம் என்பதை அவன் புரிந்து கொள்ளும் வகையில் கதை நேர்மறையாக முடிவு பெற்றிருப்பது நம்பிக்கை தருகிறது

ஆயிரம் ...லட்சம் நாற்காலிகளில் இந்த மைந்தர்கள் அமர்ந்து - அப்படி அமரும் எல்லாத் தகுதியும்தமக்கு உண்டு என்றும் உணரத் தொடங்கும்போதுதான்(குறிப்பாக தருமனின் மனைவிசுபா இதை அவனுக்குச் சுட்டிக் காட்டுகிறாள்) எத்தனையோ தலைமுறைகளாக நெஞ்சில் நெருப்புச் சுமந்தபடி இருக்கும் அவர்தம் அன்னையரின் அனல் அடங்கக்கூடும்..! 
.
தாய்-மகன் சந்திப்பு முதலில் நிகழுமிடம்,அழுகலை உண்டதால் மகன் சாவின் பிடியில் கிடக்கும் கட்டத்திலும் கூட.....அவனது முன் தலைமுறையை நினைவுகூர்ந்து ‘இவனும் அவர்களோடு போய்ச் சேர்ந்து விடலாகாதா’என்ற ஒரு கண நினைப்பு தகப்பனுக்குள் தலையெடுக்கும் அந்தக்கட்டம் ஆகியன,கதையின் உணர்வு பூர்வமான கட்டங்களில் மிகவும் பாதித்த பகுதிகள்.

கோட்டி


கொள்கைப் பிடிப்பில் பற்றுறுதி கொண்டவர்கள் எந்தக் காலத்திலும்,சூழலிலும் கோட்டிகளாக மட்டுமே பரிகசிக்கப்படுகிறார்கள்.உலகத்தோடு ’ஒட்ட ஒழுகாமல்’ விலகிப் போய் வேறு திசையில் இயங்குபவர்களைச் சமூகத்தால் அத்தனை சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.தங்களால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற இயலாமை- அவர்களை அறியாமலே அவர்களது மனங்களில் ஏற்படுத்தும் ஆழ்மனக் குற்ற உணர்வு காரணமாக அத்தகையவர்களை அவர்களால் அங்கீகரிக்கவும் கூடுவதில்லை. 
ஆனால்...அறம் என்ற சக்கரத்தின் மையப் புள்ளியும் விசையும் இவ்வாறான கோட்டிகள் மட்டுமே...அதன் வாழும் உதாரணமே இக் கதையில் வரும் பூமேடை ராமையாவின் சித்திரம்.

வணங்கான்
சாதியால் நேரும் ஒடுக்கு முறையைக் கல்வியாலும் அது தரும் பதவியாலும் கடந்து போய்விட முடியும் என்பதை அது பற்றி அறியாமலும்,-அதற்காகத் திட்டமிடாமலும் இயல்பாகச் செய்தும்,அதுவும் கூடக் கை விட்டு விடும் தருணத்தில் அவற்றையே கவசங்களாக்கி நிமிரும் அற்புதத் தருணத்தின்  அருமையான படப்பிடிப்பு,வணங்கான்.யானைமிதிக்குத் தள்ளப்பட்டு மரணத்தின் விளிம்புக்குச்சென்ற ஒரு மனிதன் யானை மீதே ஆரோகணித்துச் செல்லும்போது அந்த மனம் அடைந்திருக்கும் பேரெழுச்சி எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை அந்த உணர்வின் அலைவரிசைக்குள் சென்றாலே முற்றாகப் புரிந்து கொள்ள முடியும்.பல வடிவங்களில்,பல்வேறு வகையாக எதிர்ப்பட்ட தடைகளைக் கடந்து உயர்ந்த அந்தத் தந்தையின் நெஞ்சம் பிறப்பிலேயே மீற முடியாத ஓர் ஆணையாகத் தன் மகனுக்கு வணங்கான் எனப் பெயர் சூட்டி மகிழ்கிறது .
உலகம் யாவையும்
உலகம் யாவையும் சிறுகதை இச் சிறுகதைகளின் வரிசைக்கு முடிவாக-முத்தாய்ப்பாக அமைந்தது தற்செயலாக வாய்த்ததா,வேண்டுமென்றே அமைந்ததா என்பது தெரியாவிட்டாலும் அவ்வாறு நேர்ந்தது வியப்பாகத்தான் இருக்கிறது.கம்ப காப்பியத்திற்கு அடியெடுத்துக் கொடுத்த ’உலகம் யாவையும்’, …இந்தச் சிறுகதை வரிசையின் முடிவுத் தலைப்பானபோதும், அதுவும் கூட உலகக் குடிமக்கள் என்ற உன்னதமான ஒரு புதிய தொடக்கத்துக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது.உலகம் யாவையும் தம்முள் உளவாக்கிக் கொண்டு, பேதம் பாராட்டாத பேரறத்தின் ஆளுகைக்குள் பிரபஞ்சம் முழுதையும் கொணர நினைத்தவராய்  இக்கதையில் வலம் வரும்காரிடேவிஸுக்குள் பூமேடை,யானை டாக்டர்,கெத்தேல் சாகிப் என அனைவருமே உள்ளடங்கி இருக்கிறார்கள்.

இந்த ‘அறம்’வரிசைக் கதைகளின் சரடு,அறம் என்ற இழையாக இருந்தபோதும் இவை அற நூல்களைப் போல அறம் புகட்டுபவை என்றோ நீதி போதனை செய்பவை என்றோ எடுத்துக் கொண்டு விட முடியாது.இக் கதைகளில் ஊடாடும் மனிதர்கள் தங்களுக்கென்று சில ஸ்வ(தனிப்பட்ட )தருமங்களை வரித்துக் கொண்டவர்கள்;அவற்றையே தங்களின் வாழ்நெறியாகக் கொண்டவர்கள்.அதே போன்ற வாழ்க்கையைத்தான் எல்லோரும் வாழ்ந்தாக வேண்டுமென்பது சாத்தியமில்லை.அவ்வாறு சொல்வது நூலின் நோக்கமும் இல்லை.எனினும் இவை காட்டும் மகத்தான மனிதர்கள் பற்றிய வாழ்க்கைச் சித்திரங்கள் இவற்றைப் படிக்கும் வாசக உள்ளங்களில் தனி மனித அறம்,சமூக அறம் என்னும் விழுமியங்களிலிருந்து இன்றைய சமூகமும்,மனிதர்களும் ஒரேயடியாக நழுவிச் சென்று விடலாகாதே என்ற சிறு பதற்றத்தையாவது உண்டாக்கத் தவறுவதில்லை;அதுவே இந்நூலின் வெற்றியுமாகும்.
‘அற’ வரிசைக் கதைகளில் இடம் பெறும் தன்னலம் துறந்த அத்தனை மகானுபாவர்களுக்கும் அவர்களின் திக்கு நோக்கிய வந்தனங்கள்.
‘உண்டாலம்ம இவ்வுலகம்..!

பி.கு;
இதுவரை சொல்லப்பட்டவை ‘அறம்’வரிசைக் கதைகளில் சிலவற்றைப் பற்றிய சிறு அறிமுகமும்,சிறு குறிப்புக்களும் மட்டுமே..இவை குறிப்பிட்ட நூலுக்குள் நுழையத் தூண்டுகோல் மட்டுமேயன்றி நூல் முழுவதையும் படித்து அவரவர் பார்வைக்கேற்ற வாசக அனுபவத்தை -தரிசனங்களைப் பெறுவதே உன்னதமான அனுபவமாக இருக்க முடியும்; மூல நூல் வாசிப்பு ஏற்படுத்தும் அந்தப் பேரனுபவத்தை அது பற்றி எழுதப்படும் எந்த ஒரு கட்டுரையோ குறிப்புக்களோ முழுமையாக அளித்து விட முடியாது.

தமிழகத்தின் முக்கியமான காட்டியல் நிபுணர்களில் ஒருவரான யானை டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, உலகக் குடிமகனாகத் தன்னை அழைத்துக் கொண்ட உலக அமைதிச் செயற்பாட்டாளர் காரி டேவிஸ்-உலகம் யாவையும், சோற்றுக் கணக்கின் கெத்தேல் சாகிப்,பெருவலி காட்டும் இலக்கியவாதியான கோமல் சுவாமிநாதன்,கோட்டி கதை சித்தரிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர் பூமேடை ராமையா,ஓலைச் சிலுவையில் வரும் டாக்டர் சாமர்வெல்,வணங்கானில் இடம் பெற்றிருக்கும் மார்ஷல் நேசமணி ஆகிய உண்மை ஆளுமைகள் வெளிப்படையாகவே அதே பெயர்களால் சுட்டப்பட்டிருப்பவர்கள்;இவர்களைத் தவிரவும் இந்நூலின் கதைகளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மை ஆளுமைகள்பலர் உண்டு;சம காலத் தமிழ் இலக்கியத்தின் போக்கைப் பல்லாண்டுக் காலமாகப் பின் தொடர்ந்து வரும் வாசகர்கள் எளிதாக அனுமானித்து விடக் கூடிய ஆளுமைகள் அவை.( எ.டு-மயில் கழுத்தின் பெண்பாத்திரம் தி.ஜானகிராமனின் மரப்பசுவில் வரும் அம்மணியை நினைவூட்டுவது ).ஆனாலும் அவ்வாறு அனுமானிப்பதை விடவும் முதன்மையான கவனத்திற்குரியது எந்த நோக்கத்தில் அவர்களின் சித்தரிப்பு அமைந்திருக்கிறது என்பதைக் கண்டடைவதே.


இந்நூலிலுள்ள இரு சிறுகதைகள் தனித் தனியே இலவச வெளியீடாகவும்,மலிவுப் பதிப்பாகவும் பிரசுரிக்கப்பட்டு மிகுதியான பொது வாசகர்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பது இந்நூலின் மற்றொரு சிறப்பு.

யானை டாக்டர் சிறுகதை சமூகத்திற்குப் பரவாலாகப் போய்ச் சேர்வதன் மூலம் வன உயிர்கள் குறித்தான விழிப்புணர்வு உண்டாகும் என்ற நோக்கில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள் யானை டாக்டர் சிறுகதையை 40 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகமாக அச்சிட்டு இலவசமாக வினியோகித்து வருகிறார்கள்.(அச் சிறு நூல் வேண்டுவோர் என்னையும் தொடர்பு கொள்ளலாம்.அஞ்சல் வழி அனுப்பி வைக்க இயலும்.)
[பார்க்க;இலக்கிய சூழியல் ஆர்வலர்களின் பார்வைக்கு..].

 நூறுநாற்காலிகள் கதையை தலித் ஆய்வுநூல் வெளியீட்டகமான எழுத்து பிரசுரம் சிறிய மலிவுப்பதிப்பாக அதிகமான பிரதிகள் வெளியிட்டு மக்களிடையே கொண்டுசெல்லவிருக்கிறது.
இணைப்புக்கள்:

‘அறம்’வரிசைச் சிறுகதைகள் -இணையத்தில்...

1 கருத்து :

R. Gopi சொன்னது…

மேடம், உங்கள் வலைப்பூவின் வாயிலாகத்தான் நான் அறம் சிறுகதைகள் பற்றி அறிந்துகொண்டேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரு கட்டத்தில் ஜெமோவின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நான்கு கதைகள் மட்டுமே அப்போது படித்திருந்தேன். மற்ற எல்லாக் கதைகளையும் கடந்த சில தினங்களில் வாசித்து முடித்தேன். நேற்று அதுகுறித்து ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். நான் அதை எழுதிக் கொண்டிருந்தபோது உங்கள் தளத்தில் இருக்கும் அறம் சிறுகதை குறித்த அறிமுகக் கட்டுரைகளைப் பலமுறை வாசித்தேன். என் வாசிப்பில் விட்டுப்போன சில விஷயங்களை அறிந்துகொள்ள உங்கள் கட்டுரைகள் உதவின. மிக்க நன்றி.

நான் எழுதிய பதிவு உங்கள் பார்வைக்கு

http://ramamoorthygopi.blogspot.in/2012/02/blog-post_23.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....