துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.12.11

விஷ்ணுபுரம் விருது விழா-சில பதிவுகள்...

பொதுவாகத் தங்களையும்,தங்கள் எழுத்துக்களையும் முன்னிறுத்திக் கொள்வதில் மட்டுமே குறியாக இருப்பவர்கள் எழுத்தாளர்கள் என்கிற வசையைத் தகர்த்தெறிந்தபடி முன்னகர்ந்து சென்று கொண்டே இருக்கிறது  ஒவ்வொரு ஆண்டும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நிகழ்த்தும் விருது விழா.
பூமணிக்கு விருது வழங்கும் பாரதிராஜா
உடன் ஜெயமோகன்,எஸ்ரா,யுவன்
கரிசல் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர்கள் ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,யுவன் சந்திரசேகர்,கோவை ஞானி,கன்னடக் கவிஞர் பிரதீபா நந்தகுமார், அயோத்திதாசர் மன்றத்தைச் சேர்ந்த அலெக்ஸ்  ஆகியோர் பூமணி குறித்தும் அவரது படைப்புக்கள் பற்றியும் ஆற்றிய ஆத்மார்த்தமான உரைகள் குறித்து விழாவில் கலந்து கொண்ட பல நண்பர்கள் நெகிழ்வோடு பதிவு செய்திருக்கிறார்கள்.தங்களினும் மூத்த - முன்னோடியான படைப்பாளி ஒருவருக்கு எடுக்கப்படும் விழாவில் பங்கேற்பதும் அவரது எழுத்துக்களின் பலவகைப் பரிமாணங்களை வாசகர் முன் வைத்து அந்தப் படைப்புக்களுக்குள் அவர்கள் பிரவேசிப்பதற்கான வாயிலைத் திறப்பதுமான ஆரோக்கியமான சூழல் இவ்வகை விழாக்களின் பயனாக நேர்வது மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது.

பூமணியின் படைப்புலகம் குறித்த முழுமையான சித்திரத்தை அளிக்கும் ‘பூக்கும் கருவேலம்’என்னும் ஜெயமோகனின் நூல் ஒன்றும் விழாவில் வெளியிடப்பட்டிருப்பது - மேலெழுந்த வாரியாக நடத்தப்படும் சம்பிரதாயமான பாராட்டுவிழாக்களிலிருந்து இவ் விழாவை வேறுபடுத்துவதோடு இந்நிகழ்வின் தீவிரத் தன்மையையும் சுட்டுகிறது.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த வாசகர்களும், இந்நிகழ்வுக்காக முன் கூட்டியே கோவை வந்த வேறு பல ஆர்வலர்களும் பூமணியின் எழுத்துக்களைப் படித்து அவை குறித்து அவரோடு உரையாடும் நுட்பம் பெற்றவர்களாக விளங்கியது பூமணியையே ஆச்சரியப்படுத்துவதாக அமைந்திருந்ததாக விழா குறித்த தன் பதிவில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன் .
//அவ்வளவு பெரிய இளைஞர் கும்பல் , அவரை நன்றாக வாசித்து நுணுகி ஆரய்ந்து தொடர்ந்து அவரை சூழ்ந்து அமர்ந்து அவரிடம் பேசியது அவரால் நம்பவே முடியாத ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருவரிடமும் அவர்கள் உண்மையாக வாசித்தார்களா என்பது போலக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் வாசித்த நுட்பம் தெரிந்தபோது பிரமிப்பு. //
http://www.jeyamohan.in/?p=23330
சாகித்திய அகாதமி போன்ற அமைப்புக்கள் நடத்தும் விருது விழாக்களிலும்,அவை சார்ந்த தொடர் பாராட்டு விழாக்களிலும் கூடப் பாராட்டுப் பெறும் படைப்பாளியின் படைப்புக்களைப் படித்தவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை;கல்விப் புலத்திலும் கூட இது போன்ற பல கசப்புக்களை நான் எதிர்ப்பட்டிருக்கிறேன்.ஒரு எழுத்தாளரைப் பேச அழைத்து விட்டு அவரிடமே அவரது நூல்கள் எவை என்று கேட்பது,ஒரு படைப்பாளியை ஆய்வுக்காக நேர்காணச் சென்று விட்டு அவர் எழுதிய குறிப்பிட்ட படைப்பு சிறுகதையா நாவலா என்று தெரிந்து கொள்வதற்கான குறைந்தபட்ச முயற்சிகளைக் கூட மேற்கொள்ளாமல் அசட்டுத்தனமான பல கேள்விகளை முன் வைத்து அவரைக் காயப்படுத்துவது அல்லது கோபப் படுத்துவது;
//தமிழகக் கல்வியாளார்கள் குறிப்பாகப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சமகால எழுத்தாளார்களான பூமணி, ஜெயன், எஸ்.ரா மற்றும் யுவன் போன்றவர்களைப் வருகை தரும் பேராசிரியர்களாக (visiting professors) நியமித்து சமகால இலக்கியத்தை மாணவர்களுக்குப் பரிச்சயப்படுத்த வேண்டும் //[நன்றி- வடகரை வேலன்]
என்று இதே விழாவில் கோவை ஞானி அவர்கள் முன் வைத்திருக்கும் கருத்து இதை ஒட்டியதாகவே இருக்கிறது.கல்வித் துறையில் இருப்பவர்கள் இக் குறைபாடுகளைத் தவிர்ப்பதோடு தங்கள் மாணவர்களையும் சரியான கோணத்தில் வழிநடத்த வேண்டும் என்று என் பணிக் காலத்தில் புலம்பித் தவித்திருக்கிறேன்.என்னால் இயன்றவரை எனக்கு வாய்த்த மாணவியரை அவ்வாறே வழிகாட்டியும் இருக்கிறேன்.கல்விப் புலம் செய்ய வேண்டிய பணியை-செய்யத் தவறிய செயலை இது போன திட்டமிட்ட ஒருமுக நோக்குடன் நிகழ்த்தப்படும் இலக்கியக் கூட்டங்கள் சாதித்து வருவது உண்மையிலேயே நிறைவளிக்கிறது.

நோபல் பரிசே வாய்த்தாலும் கூட - அதைக் காட்டிலும் ஒரு எழுத்தாளனை ஆனந்தம் கொள்ளச் செய்வது அவனது எழுத்துக்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன என்பதும் அவை பற்றிப் பேசப்படுகின்றன என்பதும்தான்.அந்த வகையில் இது போன்ற ஆழமான விழாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சென்ற ஆண்டு முதன்முறையாகத் திரு ஆ. மாதவனுக்கு இவ் விருது வழங்கப்பட்டபோது என்னால் அதில் கலந்து கொள்ள முடிந்தது.இம் முறை ‘’அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்’’போலப் பழைய நினைவுகளை மீட்டியபடி இருந்த எனக்கு நண்பர்கள் அனுப்பி வைத்த படங்களும்,பதிவுகளும்,மேலும் பல மின்னஞ்சல் எதிர்வினைகளும் அங்கு நேரில் செல்ல முடியாத குறையை ஆதங்கத்தை ஓரளவு போக்கியிருக்கின்றன.

இருந்தாலும் இது ஒரு விழா மட்டுமல்ல...ஓர் இலக்கியக் கூடுகை.
நிகழ்ச்சி நடக்கும் நேரம் மட்டும் இங்கே கணக்கில் கொள்ளப்படுவதில்லை.நிகழ்வின் முன் பின்னாகப் பல இலக்கிய ஆளுமைகளைச் சந்திக்க முடிவது,நேரம்,காலம்,பசி,உறக்கம் என்ற பிரக்ஞை இன்றி மணிக் கணக்கில் அவர்களோடு நீண்டு செல்லும் இலக்கிய உரையாடல்கள்,அதனால் கிடைக்கும் கேள்விக்கொள்முதல்கள் ஆகியவையும் இவ் விழா சார்ந்த சம்பவங்களில் முக்கியமானவை; இந்த ஆண்டு அந்தப் பேரனுபவத்தைத் தவற விட்டுவிட்ட நான் அடுத்த நிகழ்ச்சிக்காக இப்போதே என் காத்திருத்தலைத் தொடங்குகிறேன்...
பூக்கும் கருவேலம் நூல்வெளியீடு

விழாவுக்கு முன்பான இலக்கிய விவாதங்கள்
ஜெ மோ,கோவை ஞானி,எஸ்.ராவுடன் வாசகர்கள்

காண்க;

நன்றி; விழாவில் பங்கேற்ற நண்பர்கள் அனுப்பி வைத்த புகைப்படங்கள் பதிவுகளுக்கு...


2 கருத்துகள் :

Radhakrishnan சொன்னது…

//சாகித்திய அகாதமி போன்ற அமைப்புக்கள் நடத்தும் விருது விழாக்களிலும்,அவை சார்ந்த தொடர் பாராட்டு விழாக்களிலும் கூடப் பாராட்டுப் பெறும் படைப்பாளியின் படைப்புக்களைப் படித்தவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள் என்பது ஒரு கசப்பான உண்மை//

பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி. எழுத்துகள் சாதிக்கட்டும்.

R. Gopi சொன்னது…

மேடம், நீங்கள் இம்முறையும் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

விழா முடிந்தும் மறுநாள் விடிகாலை வரை ஜெமோவிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட 'பிறகு', 'வெக்கை' நாவல்களின் எல்லா அம்சங்களும் விவாதிக்கப்பட்டன.

என் நினைவில் இருந்ததைத் தொகுத்து நானும் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வாசிக்கவும். மிக்க நன்றி.

http://ramamoorthygopi.blogspot.com/2011/12/2011_21.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....