பெண்ணின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்பதாக ஒரு கருத்து இப்பாடலில் இடம் பெற்றிருப்பதாகவும் அந்தக் கருத்துப் பிழைக்காக இறைவனுடனேயே வாதாட நக்கீரர் துணிந்ததாகவும் வழங்கி வரும் தொன்மையான ஒரு பழங்கதையே அந்தத் திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகளுக்கும் ஆதாரமாகியிருக்கிறது.
பாடலின் வெளிப்படையான பொருள் கீழே....
இதைப் படித்து விட்டுப் பாடலையும் ஒரு முறை ஆழ்ந்து படித்தால்....பெண்ணின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்னும் கருத்தாக்கம் பாடலில் எங்குமே தலை காட்டவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.காதலியுடன் மகிழ்வாக இருந்த தருணத்தை எண்ணிப் பரவசமடைந்திருக்கும் நிலையில் அவள் கூந்தலின் மணத்தைத் தலைவன் பாராட்டுகிறான்..இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கச் சமுதாயத்தில் அவன் காணுமிடமெல்லாம் மலர்கள்;அவற்றில் தேனுண்ணும் வண்டுகளின் கூட்டம்.அவற்றைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கிறது; இந்தத் தும்பிகள்தான்.எத்தனை மலர்களில் வாசம் நுகர்கின்றன ..? ஆனாலும் நான் நுகர்ந்த என் தலைவி கூந்தலின் நறுமணம் அவற்றுக்கு வந்து விடுமா என்ன’என்று தனக்குத் தானே சிலிர்ப்போடு சொல்லிக் கொள்கிறான் அவன்...தலைவி கூந்தலின் நறுமணம் உலகிலுள்ள எல்லா மலர்களையும் விடக் கூடுதலானதாக அவனுக்குத் தோன்றும் அற்புத மயக்கமான காதலின் தருணம் அது.அப்படியும் கூட அந்த மணம் இயற்கையானது என்று எந்த இடத்திலும் பாடல் சொல்லவே இல்லை;அதைக் குறிப்பாக ஊகிக்கவும் இடம் தரவில்லை.
தும்பிகள் பல மலர்களின் வாசத்தையும் தனித் தனியே நுகர்கின்றன...ஆனால் தலைவி பல காலமாகவே பலவகை மலர்களை ஒருங்கே இணைத்துச் சூடிவந்ததனாலும்,அவ்வப்போது நறுமணப் பொருட்களைப் பயன்படுத்தியதாலும் கூட அவளிடம் அவற்றுக்கு மீறிய ஒரு வாசம் வந்திருக்குமல்லவா?
இந்தப் பாடலின் ஆசிரியர் பெயர் இறையனார் என்று இருப்பதால் அது கடவுளாகத்தான் இருக்கக் கூடும் என்று நம்மவர்களின் கற்பனைக் குதிரை வேகமெடுத்து விட்டிருக்கவும் சாத்தியமிருக்கிறது.
தவறான சில கருத்துக்களும்,கதைகளும் நம்மில் தொற்றிக் கொண்டு அவையே காலப் போக்கில் புனிதங்களாகநிலைத்து விடுவதற்கு இப் பாடலும் ஒரு எடுத்துக்காட்டு.
தனது ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் சிறு நூலில் மேற்குறித்த கருத்தை நயம்பட விளக்கியிருப்பவர்,தற்போது நூற்றாண்டு கண்டு வரும் தமிழறிஞர் அமரர் மு.வரதராசனார் அவர்கள்.
‘’கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
மு வ. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, பற்பல மலர்களிலிருந்தும் தேனைத் தேடித் தேடி எடுப்பதைப்போல ஆய்வு செய்பவன் பல இடங்களிலிருந்தும் முயற்சியோடும் உழைப்போடும் தகவல் திரட்ட வேண்டும்; பிறகு அவ்வாறு திரட்டிய தகவல்களை நன்கு ஆராய்ந்து தன்னுடைய சுயச் சார்பு/சுய விருப்பம் ஆகியவை கலக்காமல்[காமம் செப்பாது] - அவற்றிலிருந்து தான் கண்டறிந்தது எதுவோ அதை மட்டுமே நடுவு நிலையோடு காய்தல் உவத்தல் இல்லாமல் முன் வைக்க வேண்டும்.
ஆனால் நாமோ நம் விருப்பத்துக்கேற்ப சங்கப் பாட்டையே அல்லவா வளைத்துப் போட்டிருக்கிறோம்?
பேராசிரியர் மு வ உருவாக்கிய நூற்றுக்கணக்கான நூல்கள் இருந்தாலும் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது கொங்கு தேர் வாழ்க்கை என்னும் இந்தச் சின்னஞ்சிறு நூலே....

12 கருத்துகள்:
மிகவும் ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி!
//எப்படியோ நம்மில் வந்து ஒட்டிக் கொண்ட ஒரு கதையோடு இந்தப் பாடலை முடிச்சுப் போட்டபடி...நாம்தான் அதை வைத்து மேன்மேலும் சுவாரசியமான கதைகளைப் பின்னிக் கொண்டு அலைகிறோம்...கூந்தல் என்பதே பின்னலுக்குரியதல்லவா?// :)
எவ்வளவு அழகாக, ரசனையோடு எழுதி இருக்கிறார்!
நன்றி மீனாட்சி...
மூலக் கருத்து மட்டுமே மு வவுடையது.அதை எடுத்துச் சொன்னது என் வார்த்தைகளே.
குறிப்பாக நீங்கள் எடுத்துக் காட்டியிருக்கும் //எப்படியோ நம்மில் வந்து ஒட்டிக் கொண்ட ஒரு கதையோடு இந்தப் பாடலை முடிச்சுப் போட்டபடி...நாம்தான் அதை வைத்து மேன்மேலும் சுவாரசியமான கதைகளைப் பின்னிக் கொண்டு அலைகிறோம்...கூந்தல் என்பதே பின்னலுக்குரியதல்லவா?//என்ற வரி என்னுடையது.எனவே உங்கள் அன்புப் பாராட்டும் என்னையே வந்தடைகிறது..
என் பாராட்டு உங்களை வந்தடைந்ததில் எனக்கு இன்னும் மகிழ்ச்சியே. பிரமாதமாக எழுதி இருக்கிறீர்கள்.
சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்திட்டமைக்கு மன்னிக்கவும்.
உங்களுக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
மேடம்
உங்கள் அளவிற்கு எனக்குத் தமிழ் புலமை, அறிவு குறைவு.
ஆனால், பாடலை நான் இவ்வாறு அர்த்தம் கொள்கிறேன்
ஒரு வேளை, செயற்கை நறுமணப் பொருளால்/எண்ணையால்/ ஹேர் ஜெல்லால் , தலைவியின் கூந்தலுக்கு மணம் ஏற்பட்டு இருந்தால், தலைவன் இவ்வாறு அல்லவா பாடி இருப்பான்.
இந்தத் தலைவி பயன் படுத்தி உள்ள ஹேர் ஜெல்லை/ பாரசூட் ரோஸ் எண்ணையை விடவும் மணம் பொருந்திய பூவை நீ வேறெங்கும் கண்டதுண்டா.
உங்கள் நகைச்சுவை உணர்வுக்குப் பாராட்டுக்கள்;எனினும் எந்தச் சூழலில் தலைவன் அதைச் சொல்லுகிறான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாதென்றே நம்புகிறேன்.
மேடம்
என் முந்தைய மறுமொழியில் நான் தெளிவாகச் சொல்ல வில்லை என எண்ணுகிறேன்.
தலைவன் பாடும் பாடலில் , தலைவியின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உள்ளது என்ற பொருள் மறைந்து உள்ளது.
செயற்கை/இயற்கை நறுமணப் பொருள்கள்/ வேறு பல மலர்கள் தொடர்ந்து சூடுவதன் மூலம் தான் கூந்தலில் மணம் ஏற்பட்டு இருக்குமானால், தலைவன் பாட்டை மாற்றி அல்லவா பாடி இருப்பான்.
தலைவனுக்கு அந்த நறுமணப் பொருட்கள் /வேறு பல மலர்கள் பெயர்கள் தெரிந்து இருக்கும், எனவே அந்த பொருட்கள்/மலர்கள் பெயரைப் பாடலில் குறிப்பிட்டு இருப்பான்.
நான் சொல்ல வருவது, திரைப் படத்தில் சரியாகவே பாடலை/பாடலின் பொருளைக் கையாண்டு உள்ளார்கள் என்பதே
திரைப்படத்தில் பாடலைத் தவறாகக் கையாண்டார்கள் என்று நான் சொல்ல வரவில்லை;திரைப்படத்துக்கும் முன்னதாகவே-அதற்கும் மூலமாக தருமி குறித்த மேற்குறித்த வரலாற்றுக் கதை வழக்கில் உள்ளது.[உரைக் குறிப்புக்களிலும் அதைக் காணலாம்]அதையே திரைப்படமும் பயன்படுத்தியிருக்கிறது.ஆனாலும் அந்த வரலாற்றுக் கதையும் ஒரு புனைவே,பாடலுக்குள் அதற்கான அகச் சான்றுகள் ஏதுமில்லை என்பதையே மு.வ.சொல்கிறார்.தலைவியின் அழகைப் புகழ்ந்து பாராட்டும் மனநிலையில் இருக்கும் தலைவன் அவள் பயன்படுத்தும் நறுமணப் பொருட்கள் /வேறு பல மலர்கள் இவற்றையா பட்டியலிட்டுக் கொண்டிருக்கப் போகிறான்..?சங்கப் பாடலில் மனநிலையே முதன்மை பெறுவது;பிற அனைத்தும் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படக் கூடியவையே..
My understanding is that misinterpretation of any poem is not that uncommon! Unless the author himself/herself clarifies what he/she really meant we don't know what the author meant really!
இறையனார், பெண்களின் கூந்தலில் இயற்கை மணம் இருப்பதாக பொருள் கொண்டிருக்கலாம் என்பதை முழுமையாக நாம் மறுக்கலாகாது. இறையனார் என்பவர் ஒரு பதிண்ம வயது வாலிபனாக (அரைகுறை ஞானம் உள்ளவராக) இருந்து இருக்கலாம். பெரிய தமிழறிஞராக, தமிழ் மேதையாக இருந்து இருக்கனும்னு ஒண்ணும் இல்லையே?
எனிவே, நல்ல பகிர்வுங்க!
BTW, these days people go and bring something from Hollywood and "earn" a "great creator" certificate from some other so-called "experts". APN's this adapted, manipulated creation, thiruviLaiyaadal was WAY better Despite all the flaws, thiruviLaiyaadal is a classic and will live for EVER, imho!
[புத்தாண்டு வாழ்த்துக்கள்]
பூவுக்கு மணம் இயற்கையான குணம். கூந்தலை மலர் என்ற காரணத்தால் இந்தப் பாடலில் தலைவியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு என்ற கருத்தைச் சொல்வதாகத் தான் தோன்றுகிறது.
பகிர்வுக்கு நன்றி.
”கொங்குதேர் வாழ்க்கை” நூல் குறித்த தகவல்களைத் (பதிப்பகம், ஆண்டு) தர இயலுமா?
இணையம் வழியாகத் தேடி தகவலைப் பெற முடியவில்லை.
மு வ நூல்களையெல்லாம் முன்பு பாரிநிலையம் வெளியிட்டார்கள்.அப்போது மிகச் சிறிய நூலாக இதைப் பார்த்திருக்கிறேன்.இப்போது கிடைக்குமா தெரியவில்லை.பழைய நூலகங்களில் கிடைக்கக் கூடும்.
//மு வ. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, பற்பல மலர்களிலிருந்தும் தேனைத் தேடித் தேடி எடுப்பதைப்போல ஆய்வு செய்பவன் பல இடங்களிலிருந்தும் முயற்சியோடும் உழைப்போடும் தகவல் திரட்ட வேண்டும்; பிறகு அவ்வாறு திரட்டிய தகவல்களை நன்கு ஆராய்ந்து தன்னுடைய சுயச் சார்பு/சுய விருப்பம் ஆகியவை கலக்காமல்[காமம் செப்பாது] - அவற்றிலிருந்து தான் கண்டறிந்தது எதுவோ அதை மட்டுமே நடுவு நிலையோடு காய்தல் உவத்தல் இல்லாமல் முன் வைக்க வேண்டும்.//
நன்றி மேடம்.அருமையான தகவல்கள்.
கருத்துரையிடுக