கல்விப்புலங்கள் செய்ய வேண்டியதை..செய்யத் தவறியதை இவ்வாறான ஆத்மார்த்தமான இலக்கியக் கூடுகைகள்தான் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கின்றன...
அரங்கசாமி மற்றும் ஜெயமோகனுடன்,,, |
தற்போது தில்லியில் இருப்பதால் விஷ்ணுபுர வட்டம் நடத்தும் காவிய முகாம்களிலும்,இலக்கிய அமர்வுகளிலும் அதன் சார்பில் நடத்தப்படும் விருது விழாக்களிலும் எப்போதும் தவறாமல் கலந்து கொள்வது எனக்குச் சாத்தியமாவதில்லை. இவ்வாண்டில் ஏதோ ஒரு சூழல் எனக்குச் சாதகமாக அமைய,25,26,27 ஆகிய மூன்று நாட்களும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் நிகழ்ந்த இலக்கிய முகாமில் பங்கேற்க முடிந்தது பெரும் மன நிறைவை அளித்திருக்கிறது.
நாராயணகுரு சிலை-குடிலின் முகப்பில்... |
அமர்வுகள் நடந்த நூலகம்..[தங்குமிடமும் அதுவே] |
எளிய சிறு குடில்கள் |
கம்பராமாயண அயோத்தியா காண்டத்தின் தேர்ந்தெடுத்த சில பாடல்களை அறிய -கற்க முயல்வதும்,தற்கால இலக்கியத்தில் புதுமைப்பித்தன்,
கு.அழகிரிசாமி,தி,ஜானகிராமன்,லா ச,ராமாமிருதம் எனச் சில படைப்பாளிகள் பற்றிய கட்டுரை வாசிப்புக்கள் விவாதங்கள் நிகழ்த்துவதுமே இம்முகாமின் முதன்மை நோக்கங்களாக அமைந்தன. அந்த ஒற்றை இலக்கை நோக்கி மட்டுமே இக் கூடுகையின் மையம் குவிந்திருந்ததும் - விலகும் தருணங்கள் நேர்ந்தபோதும் கூடப் பொறுப்புணர்ந்தவர்களாய் மைய இழையிலிருந்து விலகிச் செல்லாமல் எல்லோருமே கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டதும் அவ்வாறானதொரு சீரான நேர்த்தியை ஜெயமோகன் தொடர்ந்து கொண்டுசென்றதும் இன்றைய தமிழ் இலக்கியச்சூழலில் அபூர்வமாக மட்டுமே நிகழக் கூடியது.
கூடுகையில் பங்கேற்ற ஒரு சிலரைத் தவிர மிகப்பலரும் இளைஞர்கள். தமிழோடும் தமிழ் இலக்கியத்தோடும் நேரடித் தொடர்பில்லாத துறைகளில் பணியாற்றுபவர்கள். பெரும்பாலும் கணினித் துறை சார்ந்தோரே கணிசமானோர். இயல்பாக உள்ளுக்குள் ஊறிப்போன இலக்கிய தாகமும்,புதியன கற்கும் ஆர்வமுமே அவர்களை இங்கு இட்டு வந்திருக்கிறது என்பதால் கருத்தரங்க அறையில்பேசப்பட்ட தகவல்கள் விவாதங்களின் மேல் மட்டுமே அவர்களின் முழுக் கவனமும் குவிந்திருந்ததேயன்றி உல்லாசமானதொரு சுற்றுலாவாக இதை யாரும் கருதவில்லை;இலக்கியத்தைத் தீராத ஆர்வத்துடன் பயில வந்த எளிய மாணவர்களாகவே அனைவரும் தங்களைக் கருதிக் கொண்டனர்.மூன்று நாட்களுக்குள் எந்த அளவுக்கு அறிவுக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்னும் ஆர்வம் ஒன்று மட்டுமே அனைவரிலும் நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்ததை நன்றாகவே கண்டு கொள்ள முடிந்தது..
கம்பனைப் பாடம் கேட்டபடி.. |
நாஞ்சில்நாடன் |
ஜெயமோகன் துவக்க உரை |
இரண்டாம் நாள் மதியமும் இறுதிநாள் முற்பகலும் தற்கால இலக்கியத்துக்காக ஒதுக்கப்பட்டவை. கு அழகிரிசாமி குறித்த கடலூர் சீனுவின் கட்டுரை மிக வளமான மொழிநடையோடு அமைந்திருந்தாலும் 15சிறுகதைகளுக்கும் மேல் அவர் கட்டுரைப் பொருளை விரிவாக அமைத்துக் கொண்டதால் சுருக்க வேண்டியது தேவையாயிற்று. புதுமைப்பித்தன் பற்றிய கட்டுரை வழங்கிய ராஜகோபாலன் மரணம், என்ற ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது புதுமைப்பித்தனின் பார்வை எவ்வாறெல்லாம் படிந்தது என்பதை மிகக் கச்சிதமான போக்கில்-ஆரவாரமற்ற-அதே வேளையில் செறிவான நடையில் முன் வைத்தார். லா ச ரா பற்றிக் கட்டுரை வழங்கிய ஜடாயு,பெண் என்னும் பிம்பத்தை அம்பாளாகக் கண்டு ஆராதித்தவர் லா ச ரா என்னும் கருது கோளை முன்வைத்தார். இறுதிநாளன்று திருச்சிக் கவிஞர் மோகனரங்கன் தி ஜானகிராமனின் மோகமுள்’நாவல் ஒன்றை மட்டுமே சார்ந்து கட்டுரைஅளித்தார்.எனினும் தொடர்ந்து நடந்த விவாதங்கள், மேலே குறிப்பிட்ட நால்வரின் வேறு படைப்புக்கள், வெவ்வேவேறான அவர்களின் கண்ணோட்டங்கள் மற்றும் அழகியல்நுட்பங்கள் ஆகியவற்றை விரிவாக அலசும் முறையிலேயே அமைந்தன.
இம் முகாமின் முதன்மையான மற்றும் இரு அம்சங்கள் நெடுந்தூர காலை-மாலைநடைப்பயணங்களும், [என்னால் மாலை நடையில் மட்டுமே பங்குபெற முடிந்தது]இரவு உணவுக்குப் பிறகு அனைவரும் கூடித் திரு சுரேஷின் பலகுரல் சாகசங்களையும்[இசையும் கூடவே..] ராமச்சந்திரசர்மாவின் தேனிசையையும் ரசித்த அனுபவங்கள்தான்.
அரங்கில் நடந்த அமர்வுகளில் ஜெயமோகன் உரையாற்றவில்லை என்றபோதும் நடைப்பயணத்திலும்-பின்பு அனைவரும் ஒன்று கூடி ஓரிடத்தில் அமர்ந்தபோதும் பேசிய பகிர்ந்து கொண்ட வரலாற்று,இலக்கிய,தத்துவத் தகவல்கள் இன்னுமொரு தனி அமர்வுக்கு நிகரானவை.ஒரு புள்ளிவிவரம் கூட இல்லாமல் இந்த மனிதரின் மூளை எப்படிக் கருத்துக்களால் மட்டுமே பொங்கி வழிந்து கொண்டிருக்கிறதென்ற பிரமிப்பை எற்படுத்திய தருணங்கள் அவை.
நடைப்பயணம்.. அதைத் தொடரும் உரையாடல்கள் |
பங்களூரிலிருந்து மூவர்,சென்னையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் தலா ஒவ்வொருவர்,மற்றும் நான் என ஆறு பெண்கள் இந்த அமர்வில் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்து பங்கேற்க முடிந்ததென்றால் அதற்கான காரணங்கள்.,தனி மனித ஒழுக்கம் கறாராக வலியுறுத்தப்பட்டதும் வந்திருந்த அனைவருமே எங்களிடம் காட்டிய சகோதர வாஞ்சையுமே என்று உறுதியாகச் சொல்லி விடலாம்.இத்தகைய நிலை எங்கும் எப்போதும் தொடருமானால் இலக்கியக் கூட்டங்களில்-குறிப்பாக இத்தகைய முகாம்களில் பெண்கள் பங்கேற்பதில்லை என்னும் வசை நீங்கும்.அத்தகையதொரு கட்டுப்பாடான- மனத்தடைகளற்ற சூழலை அமைத்துத் தந்த திரு ஜெயமோகன் அவர்களுக்குத்தான் நாங்கள் நன்றி செலுத்தவேண்டும்.
முகாம் திட்டமிடப்பட்ட நாளிலிருந்து இறுதிவரை அதே மூச்சாக உழைத்த அரங்கசாமி,சீனிவாசன்,ராம்,விஜயராகவன்,ஊட்டிகுருகுலத்தில் நிகழ்ச்சி நடத்த உதவிய நிர்மால்யா எனப்பட்டியல் பெருகிக் கொண்டே செல்கிறது. ஊட்டியிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமையல் கலைஞர்கள் மூன்று நாட்களையும் கல்யாண வீடாக்கிக் கலகலக்கச் செய்தனர்.[என் வயிறு செய்த வேறுவிதமான’கலகலப்புக்கள்’ நான் அந்த விருந்தைச் சரியாகச் சுவைக்க விடாமல் தடுத்து விட்டன..அது ஒரு தனி சோகம்]
எளிய ஓட்டுக் குடிலின் முன் நின்றபடி உணவு.. |
நீண்ட நடை...
மரக்கிளைகளுக்குள்ளிருந்து தலை காட்டும் குரங்கு |
அப்போது மூத்தவள் என கரிசனத்தோடு என்னைக் கவனித்துக் கொண்ட பழைய புதிய நட்புக்களின் [சிவாத்மா,சுனில்,செல்வராணி,வீரராகவன்..இன்னும் பலர்,,,]கரிசனம்,
நடைப் பயணத்தில் திருச்சி வழக்கறிஞர் செல்வராணியுடன்.. |
சுதா சீனிவாசனுடன்,,, |
திரை இயக்குநர் சாம்,ஆனந்த் உன்னத்,ரீங்கா,செல்வராணி-பின்னால் ராஜகோபாலன் |
கல்விப்புலங்கள் செய்ய வேண்டியதை..செய்யத் தவறியதை இவ்வாறான ஆத்மார்த்தமான இலக்கியக் கூடுகைகள்தான் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கின்றன,
நித்யசைதன்ய யதியின் நினைவிடம் அருகே முகாமில் பங்கு பெற்றோர் ஜெயமோகனுடன்... |
ஊட்டியிலே-கோபியின் பதிவு...
ஊட்டி முகாம்-2012-ஜெயமோகன் தொடர்ப்பதிவுகள்..
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுவிழா
விஷ்ணுபுரம் வட்ட நினைவுகள்...1.
4 கருத்துகள் :
தங்களைச் சந்தித்து உரையாட முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி
விவரங்களுக்கு நன்றி.
இது போன்ற அமைப்புகளின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறீர்கள்.
எப்போதாவது கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்குமா... பார்க்க வேண்டும்.
கல்விப்புலங்கள் செய்ய வேண்டியதை..செய்யத் தவறியதை இவ்வாறான ஆத்மார்த்தமான இலக்கியக் கூடுகைகள்தான் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கின்றன...\\
இதுபோன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்திற்கு நன்றி. தங்கள் பதிவை வாசித்ததும் அந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல் போய்விட்டோமே என்று வருத்தமாய் இருக்கிறது.
இலக்கியக் கூடுகை பற்றிய பதிவு மிக சிறப்பாக இருந்தது. வெகுதொலைவில் இருந்த என் போல்வாருக்கு நேரில் வந்து கலந்து கொண்டது பொன்ற உணர்வை ஏறபடுத்தும் வகையில் அழகான பதிவு.
புத்திலக்கிய வாதிகள் பழைய இலக்கியங்களின் மீதும் காட்டும் ஆர்வம் மிகப் போற்றுதலுக்குரியது. எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவர் கூடுகையில் பங்கேற்றோர் பாராட்டுதலுக்குரியவர்கள்
இந்தக்கூடுகை பற்றிய செய்திகளை அறிமுகம் செய்த பேராசிரியர் சுசீலா அவர்களுக்கு மிக்க நன்றி
நந்தினி மருதம்
நியூயாரக்
கருத்துரையிடுக