துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.12.12

விஷ்ணுபுரம் விருது விழா-2012

ஜெயமோகனும்,தேவதேவனும்...
தமிழ்ப் புனைகதை இலக்கியத்தின் முதன்மையான ஆக்கங்களில் ஒன்றான 'ஜெயமோகனின் ’விஷ்ணுபுரம்' நாவலின் பெயரால் உருப்பெற்றுள்ள இலக்கிய நண்பர்களின் வட்டம் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்'.ஜெயமோகனின் படைப்புக்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தாலும்,அவரது இலக்கிய ஆளுமையின் பால் விளைந்திருக்கும் ஈர்ப்புக் காரணமாகவும்  பலப் பல ஊர்களிலும் நாடுகளிலும் சிதறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த மனம் கொண்ட நண்பர்களின் குழு ஒருங்கிணைந்து ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு இது.  

இலக்கியக் கூட்டங்கள்,சந்திப்புக்கள்,நிகழ்வுகள் ஆகியவற்றை அவ்வப்போது நடத்துவதன் வழி இலக்கிய வாசிப்புப் பயிற்சியை மேம்படுத்திக் கொள்வதோடு, பிற இலக்கிய,சமூக அமைப்புக்கள் கௌரவிக்கத் தவறிய..அல்லது உரிய வகையில் அங்கீகாரம் தந்திராத இலக்கியப் படைப்பாளிகளுக்கு விழா எடுத்துச் சிறப்பிப்பதையும்,ஒவ்வொரு ஆண்டும் ஜெயமோகன் அவர்களால் அடையாளப்படுத்தப்படும் சிறந்த படைப்பாளி ஒருவருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருது’என்ற ஒன்றை (ரூ.50,000)அளிப்பதும் இவ்விலக்கிய வட்டத்தின் குறிப்பான இலக்குகள்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் திரு ஆ.மாதவனுக்கு இவ் விருது முதன் முறையாக 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற விழாவில் அளிக்கப்பட்டது.2011ஆம் ஆண்டுக்கான ‘விஷ்ணுபுரம் விருது’கரிசல் இலக்கியப் படைப்பாளியாகிய திரு பூமணிக்கு வழங்கப்பட்டது.

2012-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்பட இருக்கிறது. 
டிசம்பர் 22-ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் முன்னிலையில் விழா நடைபெற இருக்கிறது.

விழாவில் நாஞ்சில் நாடன், கல்பற்றா நாராயணன், ஜெயமோகன், விமர்சகர் மோகனரங்கன், இயக்குனர் சுகா, ராஜகோபாலன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்கள் கலந்துகொண்டு தேவதேவனை வாழ்த்த இருக்கிறார்கள்.


விஷ்ணுபுரம் விருதைப் பெறும் கவிஞர் தேவதேவனை வாழ்த்துவதோடு கலை,இலக்கிய ஆளுமைகள் பலரும் பங்கேற்கவிருக்கும் இவ் விழாவுக்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டும் என,'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.

பி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்,முகநூலிலும் வெளியிடக் கோருகிறேன்.


3 கருத்துகள் :

sury siva சொன்னது…

//'விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட'த்தின் ஓர் உறுப்பினர் என்ற உரிமையோடு அனைவருக்கும் அன்பான அழைப்பு விடுக்கிறேன்.

பி.கு;ஆர்வமுள்ள நண்பர்கள் இந்த அழைப்பிதழைத் தங்கள் வலைத் தளங்களிலும்,முகநூலிலும் வெளியிடக் கோருகிறேன்.//

எனது வலையில் இன்று இந்த அழைப்பிதழை சேர்த்திருக்கிறேன்.
இந்த இலக்கிய வட்டத்தில் உறுப்பினராகச் சேருவதன் விவரம் தெரிவிக்கவும்.
நான் விஷ்ணுபுரம் பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்.
அந்த வாரம் அயின் ரான்ட் 2 பதிவு படித்துவிட்டேன்.
அயின் ராண்ட் நூலை நான் படித்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நினைவை புதுப்பித்துக்கொள்ள முயல்கிறேன்.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

எம்.ஏ.சுசீலா சொன்னது…

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தமிழ் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் மற்றும் நண்பர்களால் உருவாக்கப்பட்ட இலக்கிய அமைப்பு.இதன் தலைமை இடம் தற்போது கோவை.2009 ஆகஸ்டில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. வி. அரங்கசாமி."Arangasamy K.V"
இந்த இலக்கியவட்டம் சீரிய இலக்கியத்தை பரப்பும் நோக்கம் கொண்டது. நல்ல எழுத்துக்களையும் எழுத்தாளர்களையும் கவனப்படுத்துவதும் ஆராய்வதும்தான் இலக்குகள். அதன்பொருட்டு கருத்தரங்கங்களையும் ஆய்வரங்கங்களையும் நடத்துகிறது.
இதுவரை நடத்திய நிகழ்ச்சிகள்:
கலாப்பிரியா படைப்புக்களம் (2010) - கோவை (படைப்புகள் மீதான விமர்சன அரங்கம்)
உதகை கவிதையரங்கு (2010) - நாராயணகுருகுலம் - உதகை
நாஞ்சில் நாடன் விழா (2010) - சென்னை
தேவதேவன் கவிதையரங்கு (2011) - திற்பரப்பு
உதகை காவிய அரங்கு (2011) - நாராயணகுருகுலம் - உதகை
யுவன் கவிதையரங்கு (2011) - கன்னியாகுமரி
உதகை இலக்கியப்பயிலரங்கு-நாராயண குருகுலம்(2012)

சித்திரவீதிக்காரன் சொன்னது…

இம்முறையாவது கலந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தேன். ஆனால், 23ஆம் தேதி சித்தன்னவாசல் பயணம் உள்ளதால் வர இயலாது போய்விட்டது.

தேவதேவன் அவர்கள் எங்களோடு சென்றாண்டு மதுரை புத்தகத்திருவிழாவின் போது நடந்த வரிச்சூர் குன்னத்தூர் பசுமைநடையில் கலந்து கொண்டார்.

அவருக்கு விஷ்ணுபுரம் விருது கிடைப்பதில் மகிழ்ச்சி.

பகிர்விற்கு நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....