’’தொடர்ந்து வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும்,படைப்பாகவும் ஆய்வாகவும் கொண்டு சேர்த்துத் தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச்செல்பவை இத்தகைய எளிய....ஆத்மார்த்த முயற்சிகளே என்பது இந்த அரங்கின் முடிவில் மேலும் வலுப்பட்டது....’’
இலக்கிய நிழலடியில் ..என்ற தலைப்பில் சென்ற ஆண்டு -2012- ஊட்டியில் எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களைக்கொண்ட எங்கள் விஷ்ணுபுர இலக்கிய வட்டம் நடத்திய இலக்கியக்கூடல் பற்றி முன்பு எழுதியிருந்தேன். அதில்,
’’கல்விப்புலங்கள் செய்ய வேண்டியதை..செய்யத் தவறியதை இவ்வாறான ஆத்மார்த்தமான இலக்கியக் கூடுகைகள்தான் இட்டு நிரப்பிக் கொண்டிருக்கின்றன...’’
என்று நான் குறிப்பிட்டிருந்ததை மேலும் மெய்ப்பிக்கும் வகையில்
ஏற்காட்டில் இவ்வாண்டு ஜூன் 28,29,30 ஆகிய மூன்று நாட்களும் நிகழ்ந்த இலக்கிய ஆய்வரங்கமும் , காவியவாசிப்பும் சென்ற ஆண்டையும் விஞ்சுவதாக , மிகச்சிறப்பான திட்டமிடலுடன் செம்மையாக அமைந்திருந்தன.
ஏற்காடு இலக்கியக்கருத்தரங்கில் பங்கு பெற்றோர் |
கவிஞர் தேவதேவன்,விமரிசகர் மோகனரங்கன்,எழுத்தாளர் நாஞ்சில்நாடன் |
‘’தரைத் தலை இழிந்து அவர்த் தழுவு காதலன்’’
என்கிறான் கம்பன்.
மலையைக் குறிப்பிடுவதற்குத் ‘’தரைத்தலை’’என்னும் சொற்றொடர் கையாளப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டிய நாஞ்சில் நாடன் இத்தகையதொரு தொடர் மலைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதை முதன் முறையாகத் தான் எதிர்ப்படுவதாகக் கூறியபோது....அந்த உண்மை என்னுள்ளும் துலக்கமாயிற்று.
இராவணனின் உள்ளத்தில் சீதை மீதான காமத்தைக் கிளந்தெழச்செய்கிறாள் சூர்ப்பனகை; படிப்படியாக அவன் உள்ளத்தில் அந்தக்காமத்தீ பற்றிக்கொள்வதை, அவனது உள்ளம் சிறித்து சிறிதாக நெகிழ்ந்து வருவதை
’’அயிலுடை அரக்கன் உள்ளம் அவ்வழி மெல்ல மெல்ல
வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெயைப்போல் வெதும்பிற்றன்றே’’
என்று சொல்லிச்செல்கிறான் கம்பன்,.அந்தக்கட்டத்தில் வெண்ணெய் உருகலைக் குறிப்பிட்டுச் சுட்டிய ஜெயமோகன், அங்கே ’வெயிலுடை நாளில் உற்ற வெண்ணெய்’ என வருவதால் , வெயிலில் வைத்த வெண்ணெய் உருகல் என்று கொள்ளாமல் வெயில் காலத்தில் வீட்டுக்கு உள்ளே வைக்கப்பட்டிருக்கும் வெண்ணெய் கூட நெகிழ்ந்து போல அவன் உள்ளமும் அவள் மீது விளைந்த காமத்தால் படிப்படியாகக் குழைந்து போகிறது என்று கொள்வதே ஏற்றது என எடுத்துக் காட்டினார்; ஒரு கவிதையை வெறுமே மேம்போக்கில் கடந்து சென்று விடாமல், அதன் ஆழம் வரை செல்லும்போதுதான் கவிமனத்தையும் அவன் உருவாக்கிய பாத்திர இயல்பையும் விளங்கிக்கொள்ள முடியும் என்பதை நிறுவுபவை அத்தகைய அவதானிப்புக்களே.
ஒவ்வொரு நாளும் காலை அமர்வுகள் ஒன்பதரை மணிக்குத் தொடங்கி மதியம் ஒன்றரை அல்லது இரண்டு மணி வரை கூட நீள்வதுண்டு. அதே போல தினந்தோறும் பிற்பகலில் இரு அமர்வுகள். மதியம் இரண்டரை மணி அல்லது 3 மணி முதல் 5 அல்லது ஆறு வரை ஒரு அமர்வு; பிறகு ஒரு மணி நேர மாலை நடை. [நடைப்பயணத்தின்போது ஜெயமோகனுடன் நிகழ்த்தும் உரையாடல்கள் மிக அற்புதமானவை; அரிதான இலக்கிய,வரலாற்று,தத்துவச் செய்திகள் ஒன்றன் பின் ஒன்றாக அவரிடமிருந்து கொட்டிக்கொண்டே இருக்கும் அந்தத் தருணத்தைதவற விட எவரும் விரும்புவதில்லை என்பதாலேயே நீண்ட நடைக்கும் எவரும் தயங்குவதில்லை;களைப்படைவதுமில்லை]
மாலை நடைக்குப் பின் இரவு 7 மணி முதல் 9 மணி அல்லது அதற்கு மேலும் கூட நீளும் அமர்வுகள். சற்றும் களைப்படையாத உற்சாகத்துடன்.....இன்னும் இன்னும் என்று ஆர்வத்தோடு உள்வாங்கிக்கொண்ட பங்கேற்பாளர்கள் என்று சலிப்புத்தட்டாத ஓட்டத்தோடு நடந்த இலக்கிய விவாதங்கள் இது போன்ற இலக்கியக்கூடுகைகளில் மட்டுமே சாத்தியமாகின்றன என்பதையும் கல்வி நிலையங்கள் நிதி நல்கைக்குழுவோடும் பிற வகைகளிலும் நடத்தும் கருத்தரங்குகளிலேயும் கூட இந்தச்சீர்மையைக் கண்டதில்லை என்பதையும் [ஒரு கல்வியாளராக இருந்த அனுபவத்தில்] மீண்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
இலக்கிய வகுப்பில் .... |
சிறுகதைகளும் கவிதைகளும் உலக இலக்கியம்,இந்திய இலக்கியம்,தமிழ் இலக்கியம் என்ற மூன்று பிரிவுகளிலும் வெவ்வேறு காலகட்டங்களாகப்பிரித்துக்கொள்ளப்பட்டுப் பங்கேற்பாளர்களர்கள் சிலரால் ஆய்வு செய்யப்பட்டன. அமர்வுகளில் வாசிக்கப்பட்ட படைப்புக்களும்[கம்பன் கவிதைகளும்] இலக்கியக்கூடலில் பங்கு பெறுபவர்களுக்கு முன்பே மின் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டு விட்டதால் அவற்றை முன் கூட்டியே வாசித்து விவாதிப்பதற்கேற்ற தெளிவோடு பலரும் வந்திருந்தது மிகவும் ஆரோக்கியமான ஒரு போக்கு.
சிறுகதை அமர்வில் வாசிக்கப்பட்ட படைப்புக்களும் ஆய்வாளர்களும்;
1.செவ்வியல் உலகச்சிறுகதை
[Am I Insane? Guy De Maupassant]
ராஜகோபாலன் ஜானகிராமன்
2.இரண்டாம் கட்ட உலகச்சிறுகதை
வீட்டின் அருகே மிகப்பெரும் நீர்ப்பரப்பு
(SO MUCH WATER SO CLOSE TO HOME) ரேமண்ட் கார்வர்
விஜயராகவன்
விஜயராகவன்
3.இன்றைய காலகட்ட உலகச்சிறுகதை FREE
FRUIT FOR YOUNG WIDOWS
NATHAN ENGLANDER
NATHAN ENGLANDER
சித்தார்த் வெங்கடேசன்
4.செவ்வியல் காலகட்ட இந்தியச் சிறுகதை ஆசாபங்கம் (வங்கம்) தாகூர் கடலூர் சீனு
5.பிற்கால இந்தியச் சிறுகதை
சந்தனுவின் பறவைகள் (மலையாளம்) பால் சக்காரியா
சுனீல் கிருஷ்ணன்
6.முதல் தலைமுறை தமிழ்ச்சிறுகதை- அன்று இரவு புதுமைப்பித்தன் -
ஜடாயு
7.இரண்டாம் தலைமுறை தமிழ்ச்சிறுகதை விகாசம்- சுந்தர ராமசாமி
அருணா
8.மூன்றாம் தலைமுறை தமிழ்ச்சிறுகதை கதை-கந்தர்வன்
தனா
9.நான்காம் தலைமுறை தமிழ்ச்சிறுகதை நீர் விளையாட்டு-பெருமாள் முருகன்
சுதா ஶ்ரீனிவாசன்
சுதா ஶ்ரீனிவாசன்
10.சமகால தமிழ்ச் சிறுகதை இரவில் கரையும் நிழல்கள் -கவின்மலர்
சு.யுவராஜன்
கவிதை அமர்வில் வாசிக்கப்பட்ட படைப்புக்களும் ஆய்வாளர்களும்;
1 உலகக்கவிதை
லியோபோல்டு செங்கோர் (ஆப்பிரிக்கா)
யாராய் இருந்தால் என்ன? – பவுலுஷ் சைலன்ஷ்யாரியஸ்(கிரேக்கம்)
அஸ்திவாரங்கள் – அன்னா அக்மதோவா (ருஷ்யா)
:க மோகனரங்கன்
2 இந்தியக்கவிதை
பழக்கப்படுத்துதல்
சோறு
சோறு
அனிதா தம்பி (மலையாளம்)
மணிகண்டன்
3.தமிழ்க்கவிதை முதல் தலைமுறை
1. பாலை — பிரமிள்
2. என்ற ஒன்று - அபி
2. என்ற ஒன்று - அபி
சீனிவாசன்
4.தமிழ்க்கவிதை இரண்டாம்தலைமுறை
அள்ள அள்ள = கல்யாண்ஜி
மறு பரிசீலனை ஆத்மாநாம்
மறு பரிசீலனை ஆத்மாநாம்
சுரேஷ்
5.சமகாலத்தமிழ்க்கவிதை
தாண்டவம் – இளங்கோ கிருஷ்ணன்
லட்சுமி டாக்கீஸ் -இசை
லட்சுமி டாக்கீஸ் -இசை
கிருஷ்ணன்
1. உள்ளே வைத்து உடைப்பவர்கள் -லிபி ஆரண்யா
2. முன்னொரு காலத்தில் குணசேகரன் என்றொருவன் வாழ்ந்து வந்தான் இசை
லிபி ஆரண்யா
லிபி ஆரண்யா
சாம்ராஜ்
குவைத் நாட்டிலிருந்து சித்தார்த் வெங்கடேசன் |
இலக்கியம் என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல;அது,தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய-அணுகப்பட வேண்டிய ஒன்று என்னும் ஒத்த மனம் கொண்டவர்களின் ஏற்பாடாகவும்,அத்தகையோரின் பங்கேற்பாகவும் அமைந்ததே இந்த இலக்கிய அரங்கின் வெற்றி.
மனதுக்கு மிகவும் நிறைவாக அமைந்த ஏற்காடு இலக்கியக்கியக் கூடலில் புதிய பல நண்பர்களும் கூட நெடுநாள் பழகியவர்கள் போல.நெஞ்சுக்கு நெருக்கமாகிப்போனார்கள். .ஒரு குடும்பம் போன்ற இனிய நெருக்கமும் உறவும் இந்த இலக்கியவட்டத்திலே மட்டுமே சாத்தியம் என்ற விம்மிதம் தொடர்ந்து எழுந்து கொண்டே இருந்தது.
தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் உடல்நிலைக்கோளாறையும் தங்கள் இலக்கிய ஆர்வத்தால் வென்றெடுத்த வானவன் மாதேவி-ஏழிசை வல்லபி சகோதரிகளை இங்கே சந்தித்ததும் அவர்களின் தணியாத இலக்கிய ஆர்வத்தைக்காண முடிந்ததும் ஒரு நல்ல அனுபவம்.
வானதி-வல்லபி சகோதரிகள் |
ஸ்ரீநிவாசன்,சுதா |
உணவு மற்றும் தங்குமிடம்,நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஏற்காட்டில் ஒருங்கிணைத்து மிகச்செம்மையோடு செயலாற்றிய ஈரோடு திரு விஜயராகவன்,பிரசாத்...அரங்கசாமி மற்றும் அனைத்து நண்பர்களின் உழைப்புக்கும் பின்னணியில் இருந்து ஊக்குவது, இலக்கிய ஆர்வம் ஒன்றே என்பது மகிழ்வூட்டுவது.
உணவுக்கூடல் |
தொடர்ந்து வரும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும்,படைப்பாகவும் ஆய்வாகவும் கொண்டு சேர்த்துத் தொடர்ந்து அவற்றை முன்னெடுத்துச்செல்பவை இத்தகைய எளிய....ஆத்மார்த்த முயற்சிகளே என்பது இந்த அரங்கின் முடிவில் மேலும் வலுப்பட்டது....
7 கருத்துகள் :
அம்மா அவர்களுக்கு,
பயனுள்ள இலக்கிய நிகழ்வை தவறவிட்டுள்ளேன் என்ற உணர்வை தங்களது பதிவை வாசித்த பொழுது அறிந்து கொண்டேன்.
எனினும் தாங்கள் கொடுத்துள்ள தெளிவான பதிவுகள் வாசிப்பை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது.
நன்றி
அன்புடன்
தேவராஜ் விட்டலன்
சுசீலாம்மா,
சுருக்கமாக, அழகாகத் தங்கள் பார்வையை அளித்திருக்கிறீர்கள். சீக்கிரமே, இலக்கியப் பரிமாற்றங்களின் சாரங்களையும் தாருங்கள்!
இலக்கியநிகழ்ச்சி பற்றிய என் வலைப்பதிவு நீண்டு விட்டதால் ஒவ்வொரு நாளும் இரவு வேளைகளில் நிகழ்ந்த இனிய இசை பற்றிச் சொல்ல விடுபட்டு விட்டது; பல நண்பர்களும் கர்நாடக மற்றும் திரையிசைப்பாடல்களை இரவு ஒரு மணி இரண்டு மணி வரை அதி அற்புதமாகப்பாடிக்கொண்டிருந்தார்கள்.அங்கே பாடப்பட்ட பாடல்கள் பலவும் என் இளமை மற்றும் வளரிளமைக்காலத்தில் என் நேசத்துக்குரியவை என்பதால் பொழுது மறந்து நானும் மிகவும் ஒன்றி ரசித்தேன்....
முதல்நாள் இரவு இலேசான தலை சுற்றல் இருந்ததால் படுக்கச்சென்றுவிட்டேன்; இரண்டாம் நாள்,வேள்விக்கூடத்தில் எரியும் தீப் போல அரங்குக்கு வெளியே வெட்ட வெளியில் நெருப்பு மூட்டி மிதமான குளிரில் இரவின் மோனத்தில் ‘’எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா’’. ‘’மலரே மௌனமா’’; போல எனக்கு மிகவும் பிடித்த ரசனையான பாடல்களை இரவு 12.30 வரை கேட்டுக்கொண்டிருந்தது,வாழ்வின் இறுதி வரை மனதில் உறைந்திருக்கும் கணங்களில் ஒன்று.[பிற நண்பர்கள் மூன்று மணிக்கு மேலும் விழித்திருந்ததாகச்சொன்னார்கள்]
நண்பர் ராமின் குரல் எப்போதுமே என்னைக்கிறங்க அடிப்பது; இப்போது ’பசுமைப்புரட்சி’நூலை எழுதிய சங்கீதா ஸ்ரீராமுமும்.அந்தப் பட்டியலில் சேர்ந்து கொண்டார்.
முதல்நாள் சங்கீதாவின் ‘’துன்பம் நேர்கையில்’’ மட்டும் கேட்க விடுபட்டு விட்டது.அடுத்து எப்போதாவது கேட்க வேண்டும்.
சுரேஷ் என்னும் நண்பரின் அபாரமான மிமிக்ரி திறமையும்[நம்பியார்,நாகூர் ஹனீஃபா, மேஜர் சுந்தரர்ராஜன்,கமல்ஹாசன்,எஸ் பி பி எனப்பல குரல்கள்] அவர் இசைத்த பாடல்களும் என்றென்றும் மறக்க முடியாதவை.
அழகிய இலக்கியப் பகிர்வை அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் அம்மா...
பகிர்வுக்கு நன்றி.
இலக்கிய நிழலடியில்' கலந்து கொள்ள முடியவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. தமிழின் முக்கிய ஆளுமைகள் பலரை சந்திக்கும் வாய்ப்பும் கைநழுவிப்போனதே என்ற வருத்தமும் சேர்ந்து கொள்கிறது.
பகிர்விற்கு நன்றி.
இலக்கிய நிகழ்வுகளை பதிவு செய்தமைக்கு மகிழ்ச்சி இது போன்ற நிகழ்வுகளில் என்னை போன்றவர்கள் கலந்துகொள்ளமுடியுமா மேடம்
வேல்முருகன்!பதில் எழுதச் சற்று தாமதமாகி விட்டது.இலக்கிய வாசிப்பும் ஆர்வமும் உள்ளவர்கள் எவரும் இது போன்ற அமர்வுகளில் பங்கேற்க முடியும்.குறிப்பிட்ட இந்த அமர்வுகள் ஜெயமோகனின் வாசகர்களைக்கொண்ட விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தால் நிகழ்த்தப்படுவது என்பதைக்குறிப்பிட்டிருக்கிறேன்; ஜெயமோகனின் தளத்தில் இது பற்றிய அறிவிப்பு வந்ததும் பதிவு செய்து விட வேண்டும்;50,60 பேர்களுக்கே அனுமதி என்பதால் இடங்கள் உடன் நிரம்பி விடும்.அதனால் விரைந்து செயல்பட வேண்டும்.தொடர்ந்த வாசிப்பும் இலக்கியத்தை வெறும் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ளாத மனப்போக்கும் வேண்டும்.அவ்வளவே...
கருத்துரையிடுக