எதை எப்படி எழுதினாலும் முழுமையாகச் சொல்லி விட முடியாத அற்புதத்தருணங்கள் 21,22 ஆகிய நாட்களில் நேர்ந்தவை.
21/12, காலை
11 மணி அளவில் நான் அங்கு போய்ச்சேரும்போதே ஜெயமோகன் மற்றும் தேவதேவனோடான உரையாடல்
தொடங்கி விட்டிருந்தது. அரை மணிநேரத்துக்குள்ளாகவே சென்னையிலிருந்து விமானம் மூலம் வந்து
சேர்ந்து விட்ட இந்திரா பார்த்தசாரதி, தன் வயதையும் களைப்பையும் பாராமல் எங்களோடு இயல்பாகக்
கலந்து கொண்டு எங்களில் ஒருவராகவே ஆகிப்போனார்..
![]() |
இ பாவுடன் -ஜெயமோகன்,தேவதேவன்,நான்,ஈரோடு கிருஷ்ணன்,சாம்ராஜ் மற்றும் நண்பர்கள்.... |
தாங்கள் நேசிக்கும்
படைப்பாளியை முன் நிறுத்தாமல் அவரது படைப்பை முன் நிறுத்தும் அமைப்பாகவும் அந்தப்படைப்பின்
பெயரால் விருது தரும் அமைப்பாகவும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைந்திருப்பது தனக்குள்
ஏற்படுத்தியிருக்கும் மகிழ்ச்சியை முதலில் வெளிப்படுத்திய இ.பா.,வுக்கு இலக்கியஆர்வம்
கொண்ட பல இளைஞர்களை ஒரே இடத்தில் ஒருசேரப்பார்ப்பதிலும் அவர்களோடு உரையாடுவதிலும் விளைந்த
பரவசமே தொடர்ந்து பேசுவதில் சோர்வின்றி ஊக்கப்படுத்தியிருக்க வேண்டும்.[தில்லியில் இருந்தபோது என் நண்பரும் எழுத்தாளருமான ‘காவேரி’லட்சுமி கண்ணனோடு - ஔரங்கசீப்-உருது நாடக அரங்கேற்றத்துக்காக அங்கே வந்திருந்த இ பாவை சந்திக்கச்சென்றிருக்கிறேன்;அப்போது அவரால் தொடர்ச்சியாக இத்தனை நேரம் பேச முடியும் என்று எண்ணிக்கூடப்பார்த்ததில்லை;அவரை சிரமப்படுத்தக்கூடாதென்ற எண்ணத்துடன் அரைமணிக்கு மேல் அவருடன் செலவிடவில்லை;அப்போது தவறிய வாய்ப்பு இப்போது வாய்த்ததில் மகிழ்ச்சி...]
ஒரு தாத்தாவிடம்
கதை கேட்கும் சுவாரசியத்துடன் இ பாவின் பேச்சில் அனைவரும் லயித்துக் கிடந்தோம்; அடுக்கடுக்காய்ப்
பல சம்பவங்களையும் மனிதர்களையும் பற்றிச் சொல்லிக்கொண்டு போனாலும் யாரையும் குறிப்பிட்டுப்
பழிக்காமல் தன் நகைச்சுவையாலும் மெல்லிய எள்ளல்களாலுமே அவற்றைத் தாண்டிக்கொண்டு சென்றார்
அவர்.
![]() |
இ பாவுடன் நாஞ்சில் நாடன் |
கும்பகோணத்தில்
பெற்ற கல்வி, அங்கே தி ஜா தனக்கு ஆசிரியராய் வாய்த்தது….என்று தன் இளமைப்பருவத்தை விவரித்த
இ பா., தான் தமிழுக்கு வந்த கதையையும் சொல்லத் தவறவில்லை. தானாகவே கற்றுக்கொண்டு விடக்கூடிய
மொழியாக ஆங்கிலத்தை எண்ணியதாலேயே கல்விப்புலம் சென்று அதைப்படிக்கத் தோன்றவில்லை என்றும்
தமிழ் இலக்கணம் அவ்வாறானதில்லை என்று கருதியதால் முதுகலை நிலையில் அதை சிறப்புப்பாடமாக
ஏற்றதாகவும் குறிப்பிட்ட இ பா, மிகக்கடினமானதென்று கருதப்படும் சேனாவரையரின் தொல்காப்பிய
உரையை வசப்படுத்தித் தந்த தன் தமிழாசிரியரையும் நினைவு கூர்ந்தார்.
கணையாழிக்கூட்டங்கள்….பல்கலைக்கழக அனுபவங்கள் என்ற பலதரப்பட்ட அனுபவங்களோடு அரசியல் சார்ந்த பல நாவல்களை அவர் எழுத தில்லி வாழ்க்கையே அடித்தளமாகியிருக்கிறது என்பதால் அது சார்ந்து முன்வைக்கப்பட்ட பல கேள்விகளுக்கும் சளைக்காமல் விடை தந்து கொண்டே இருந்தார் அவர். [எப்போதோ 20,25 வருடங்களுக்கு முன்பு தான் எழுதிய ஒரு நாவலைப் படித்து அதில் நுட்பமாகக் கேள்வி கேட்கும் இலக்கிய வாசகர்களின் கூட்டம் தன்னை ஆச்சரியப்படுத்தியதை இறுதிநாள் கூடுகையின்போதும் இ பா பகிர்ந்து கொண்டார்] தனது எழுத்துத் தடத்தில் பயணித்து தில்லியிலும் உடன் இருந்த ஆதவன்,சம்பத் ஆகியோருடனான தொடர்பு பற்றியும் இ பா குறிப்பிட்டார்.
தன் மனதுக்கு நெருக்கமான கவிஞர்களாக ஷேக்ஸ்பியர்,கம்பன்,இளங்கோ,பாரதி
என நால்வரைப் பட்டியலிட்ட அவர், பாரதி தன்னைக் கவர்ந்த அளவுக்கு தாகூர் கவரவில்லை என்றார்.ஜெயமோகன் தளத்தில் வெளியான பாரதி மகாகவியா’ என்னும் விவாதத்தை அறிந்து வைத்திருந்த அவர்
’ஜெ என்ன சொன்னாலும் பாரதிதான் என் ஆதர்சம்’ என்றார்.அதே போலத் தமிழ் எழுத்துரு விவாதத்தையும் தெரிந்து வைத்திருந்த அவர் போலந்தில் தமிழ் கற்பிக்கத் தான் கையாண்ட முறையை ஒட்டிய ஜெயமோகனின் பார்வை தொலைநோக்குக்கொண்டதென்றார்.
தமிழ் நவீன நாடகத்தின்
முக்கியமான ஆளுமை இ பா என்பதால் மழை,போர்வை போர்த்திய உடல்கள் ஆகிய அவரது நாடக ஆக்கங்கள் சார்ந்த பல சுவையான தகவல்களும் அவரிடமிருந்து வெளிப்பட்டன.
![]() |
இலகுவான ஒரு மனநிலையில் இ பாவுடன்..... |
21/12 பிற்பகல் நேரம், நாஞ்சில் நாடன் எங்கள் பேச்சின் மையப்புள்ளியாக மாறிப்போனார். அண்மையில் தமிழினி வெளியீடாக வந்திருக்கும் அவரது சிற்றிலக்கியங்கள் பற்றிய நூல் குறித்து -அதன் தேவை குறித்து வினா எழுப்பி விவாதத்தைத் தொடங்கி வைத்தார் ஜெயமோகன். சிற்றிலக்கியங்கள் பலவும் ஒரே வகைப்பாட்டின் பலதர வெளிப்பாடுகளாக- stereotype ஆக, - ஒரு உலாவைப்போல நிறைய உலாக்கள், ஒரு பிள்ளைத் தமிழ் போலப் பல பிள்ளைத் தமிழ்கள் என்று இருந்தாலும்,அவற்றில் பலவும் நுகர்வுக்கலாசாரத்துக்கும் சிற்றின்ப வேட்கைக்குமே முதன்மை தந்தாலும் ஒதுக்கி விட முடியாத செழுமையான மொழிக்கூறுகளை உள்ளடக்கிய பல படைப்புக்கள் அவற்றிலும் உண்டென்ற நாஞ்சில் நாடன், குமரகுருபரரின் மொழி ஆளுமை, பள்ளு இலக்கியத்தின் அங்கதம், இதுவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்காத ஆண்டாள் பிள்ளைத் தமிழ்,பரவலாகப்பேசப்படாத அற்புதத் திருவந்தாதி,சதகங்கள் ஆகிய பலவற்றை அவற்றுக்கு சான்றாக முன்வைத்தார்.
21/12 இரவு உணவுக்குச்
சற்றுமுன்பு தெளிவத்தை ஜோசஃபும் அவரது மனைவியும் வந்து சேர்ந்தனர். உணவுக்குப்பின் நீண்டுகொண்டு
சென்ற அந்த உரையாடலைத் தவற விட்ட நான்
மறுநாள் காலை நிகழ்ந்த சந்திப்பிலேயே பங்கேற்க முடிந்தது.
[22/12 சந்திப்புக்கள் அடுத்த பதிவில்..]
[22/12 சந்திப்புக்கள் அடுத்த பதிவில்..]
1 கருத்து :
அருமை!
கருத்துரையிடுக