பரவசத்தோடு ஒன் று கூடுதலும்...அந்த இனிய நினைவுகளை எண்ணத்தில் தாங்கியபடியே பிரிதலுமான ’உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்’ வள்ளுவர் சொன்னது போலப் ‘புலவர் தொழில்’ மட்டுமல்ல...புலமையைப் போற்றும் வாசகர்களின் கூடுகையும் அவ்வாறானதுதான்..!
23/12 காலையில் நண்பர்கள் இருந்த இடத்தை நான் அடைந்தபோது தெளிவத்தை ஜோசஃபுடனான உரையாடல் தொடங்கியிருந்தது. ஆங்கிலத்தில் unassuming என்று சொல்வது போலக் கர்வ உணர்வு சிறிதும் அற்ற எளிய மனிதராக-வெகுநாள் பழகிய ஒரு நண்பரைப் போலப் பேசிக்கொண்டிருந்தார் ஜோசஃப். தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக ஜெயமோகன் தளத்தில் அவரது சிறுகதைகள் பலவும் வெளியாகி அவற்றின் மீதான வாசிப்புக்களும் நிகழ்ந்து கொண்டிருந்ததால் பலரும் அவற்றின் மீதான் வினாக்களையும் நெகிழ்வான உள்வாங்கல்களையும் முன் வைத்தபோது, தான் விருது பெறுவதை விடவும் பெருமகிழ்ச்சி அடைந்த நேரமென்று அதைச்சுட்டினார் தெளிவத்தை.
தெளிவத்தை ஜோசஃபின் பேச்சுமொழியில் பிற இலங்கைத் தமிழர்களின் பேச்சுப்பாணி அதிகமில்லை என்பதையும் மதுரைத் தமிழின் கொச்சையும் கூட அவரது பேச்சில் இழையோடியதையும் நான் ஆச்சரியத்தோடு கவனித்துக்கொண்டிருந்தேன்.
ஈழத்தமிழ் என்றால் யாழ்ப்பாணமே பெரிதும் முன்னிறுத்தப்படும்போது மலையகம் சார்ந்த எழுத்துக்கள் அதிகம் கவனம் பெறாது போனதில் வியப்பில்லை. தோட்டக்காட்டான் [தோ.கா],கள்ளத் தோணி[க.தோ]என்ற பெயர்களாலேயே -அதிலும் கூட அந்தச்சுருக்கமான குறியீடுகளாலேயே தாங்கள் சுட்டப்படுவதால் தன் பெயருடன் தங்கள் இருப்பிடத்தையும் சேர்த்துப் பெருமித உணர்வோடு தெளிவத்தை என இணைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டார் அவர். கைலாசபதி,சிவத்தம்பி போன்றோர் அவரது எழுத்துக்களின் மீது வைத்த மதிப்பீடுகள் பற்றிக்கேட்கப்பட்டபோது முற்போக்குச்சார்பு கொண்ட அந்தத் தரப்பிலிருந்தும் கூட அவரது எழுத்துக்கள் மீதான மதிப்பான கணிப்புக்களே வந்திருப்பதை அறிய முடிந்தது.
தெளிவத்தையின் மீன்கள் சிறுகதையும் , குடைநிழல் நாவலும் அதிக வாசிப்புக்குள்ளாகியிருந்ததைக் கூடியிருந்த வாசகர்களின் எதிர்வினைகளின் வழி அறிந்து கொள்ள முடிந்தது.
குடைநிழல் இருந்து, குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து, ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்
பதவி,செல்வம் போன்றவை நிலையற்றவை என்பதைச் சொல்லும் இந்த வெற்றிவேற்கைப்பாடல் வழி நுட்பமான அரசியல் செய்திக்குக் ’குடைநிழல்’ நாவல் வந்து சேர்ந்திருந்தாலும்
’உன் வெண்கொற்றக் குடை உன் வெயிலை மறைப்பதற்கானது அல்ல; குடிமக்களுக்கு நீ பாதுகாப்புத் தர வேண்டும் என்பதற்கான குறியீடே அது’ என்ற பொருளில் அமைந்த பொருத்தமான ஒரு புறநானூற்றுப் பாடலையும்
[’’கண் பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின்மறைக்கொண்டன்றோ அன்றே வருந்திய
குடி மறைப்பதுவே..’’-புறம்;35,சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடியது]
தமிழ்ப்பேராசிரியரான இ பா [தன் விழா உரையில்] எடுத்துக்காட்டினார். மரபிலக்கியப் பயிற்சி நவீன இலக்கியத்துக்கு எந்த அளவு தேவைப்படுகிறது என முதல் நாள் நிகழ்ந்த விவாதத்துக்கு இதுவே கூட ஒரு வகையில் விடையாக இருக்கலாம்.
மதிய உணவுக்குப்பின் எழுத்தாளர்கள் யுவன் சந்திரசேகரும் சுரேஷ் குமார் இந்திரஜித்தும் தங்கள் எழுத்தனுபவங்களைப்பகிர்ந்து கொண்டனர்.
வேறுபட்ட முறையில் கதை சொல்ல விரும்பி - கதையல்லாத கதை வடிவத்துக்குத் தான் முயற்சித்தபோது இலத்தீன் அமெரிக்கக்கதைகள் தனக்கு ஒரு திறப்பை அளித்ததாகக் கூறிய சுரேஷ் குமார் இந்திரஜித் தற்போது தன் கதைக்கூற்று முறையில் ஜெயமோகனின் படைப்புக்கள் வேறொரு வகை மாற்றத்துக்குக் கால்கோள் நாட்டிருப்பதை எடுத்துக்காட்டினார்.
நான் மதுரையில் பணியாற்றியபோது அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக இருந்தவரும் ,எழுத்தாள நண்பருமான சு.வேணுகோபால் பிற்பகலில் வந்து சேர அவரோடு சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தேன்....
சு.வேணுகோபால் |
மாலை நான்கு மணிக்குப்பிறகு நண்பர்களை விழாப்பரபரப்பு தொற்றிக்கொண்டு விட, மணி மேல்நிலைப்பள்ளியின் நானி அரங்கை நோக்கிய பயணம் தொடங்கியது....
விழாவின் வெற்றிக்காக மாதக்கணக்கில் கடுமையாக உழைத்த விஷ்ணுபுரம் நண்பர்களைப் பாராட்டச் சொல்லில்லை...அரட்டைகளில் கூட முழுமையாகப் பங்கெடுக்க முடியாமல் ஓடிக்கொண்டிருந்த அரங்கசாமி,விஜயராகவன்,ராமச்சந்திரஷர்மா,ராஜமாணிக்கம்,சீனிவாசன்,
செந்தில் குமாரதேவன்,செல்வேந்திரன் [இன்னும் பலர்...] எனப் பேசக்களம் அமைத்துத் தந்துவிட்டுப் பின்னணியில் நின்று கொண்ட பல நண்பர்களையும் நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்...
ராமச்சந்திரஷர்மா,அரங்கசாமி |
சுதா சீனிவாசன்,விஜயராகவனின் மனைவி,கடலூர் சீனு..ராஜகோபாலன்,வானவன்மாதேவி,வல்லபி சகோதரிகள் ஆகியோருடனான சந்திப்புத் தருணங்கள் நெகிழ்வானவை.
நட்பொன்றே எங்களைப்பிணைக்கும் சரடு....அது ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் இறுகிக்கொண்டேதான் வருகிறது....
தொலைந்து போனதாக நான் நினைத்துக்கொண்டிருந்த ஒரு நட்பையும் கூட இந்த விழா மீட்டுக்கொடுத்திருக்கிறது..
2008 இல் தில்லியில் எனக்கு அறிமுகமாகி - அப்போது கணினி வசப்படாத தொடக்க நிலைப் போராட்டத்துடன் இணையத்தில் தமிழ் எழுதத் தடுமாறிக்கொண்டிருந்த எனக்கு அதற்கான இணைப்பைத் தந்து உதவி - பல நூல்களையும் என்னோடு படித்துப் பகிர்ந்து கொண்டிருந்தவர் இளம் வாசக நண்பரும் ’ஜெ’யின் வாசகருமான சந்தோஷ்....
2011இல் அங்கிருந்து சென்னை வந்து விட்ட அவரோடு பிறகு எந்தத் தொடர்பு கொள்ளவும் வழி இன்றி இருந்த எனக்கு ஓர் அவரை இங்கே இந்த இரு நாட்களிலும் கண்டதிலும் பேச முடிந்ததிலும் இனிய மகிழ்ச்சி ....
சந்தோஷுடன்... |
பரவசத்தோடு ஒன் று கூடுதலும்...அந்த இனிய நினைவுகளை எண்ணத்தில் தாங்கியபடியே பிரிதலுமான ’உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதல்’ வள்ளுவர் சொன்னது போலப் ‘புலவர் தொழில்’ மட்டுமல்ல...புலமையைப் போற்றும் வாசகர்களின் கூடுகையும் அவ்வாறானதுதான்..!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக