துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.12.14

இயல்விருதும்,சாகித்திய அகாதமி விருதும்

மனதுக்கு நிறைவான மிக மகிழ்ச்சியான இரு விருதுச்செய்திகள் கிடைத்திருக்கின்றன!!

கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது இவ்வாண்டு தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும்,
என் நண்பரும்,வழிகாட்டியுமான 
திரு ஜெயமோகன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கனடா இலக்கியத் தோட்ட அறிவிப்பு
http://www.tamilliterarygarden.com///கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்திர இயல் விருது இவ்வருடம் (2014) திரு. பா. ஜெயமோகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சமகாலத்தில் ’எழுத்து அசுரன்’ என்று வர்ணிக்கப்படும் இவர் புதினங்கள், சிறுகதைகள்,  அரசியல், வாழ்க்கை வரலாறு, காப்பியம்,  இலக்கியத் திறனாய்வு, பழந்தமிழ் இலக்கியம், மொழியாக்கம், அனுபவம், தத்துவம், ஆன்மீகம், பண்பாடு, திரைப்படம்  என தமிழ் இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் தனது எழுத்தின் மூலம் ஆழமான முத்திரையை தொடர்ந்து பதித்து வருகிறார்.  இந்த விருதைப் பெறும் 16வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர்  சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு.தியடோர் பாஸ்கரன் , டொமினிக் ஜீவா  போன்றவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.இயல் விருது’ கேடயமும், 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா  ரொறொன்ரோவில் 2015 ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.//

விருதுகளையெல்லாம் கடந்த சிகரங்கள் பலவற்றை எட்டியிருப்பவர் திரு ஜெயமோகன். தன்  அகவெழுச்சியின் தூண்டுதலால் மட்டுமே இயங்கியபடி தமிழ் மொழியின் எல்லா சாத்தியங்களையும்  தனது எழுத்தின் மூலம் வெளிக்கொணர்ந்தபடி அசுர சாதனை படைத்து வருபவர்....  


மகாபாரதத்தை நாவல்வடிவில் எழுதி இணையத்தில் தொடர்ந்து பத்துஆண்டுகள் வெளியிடும் மிகப்பெரும் முயற்சியை 2014 புத்தாண்டின் தொடக்கம் முதல் எழுத்தாளர் ஜெயமோகன்  மேற்கொண்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே.ஒரே ஆண்டுக்குள் அந்த நாவல் வரிசையின் முதல் மூன்று பகுதிகளாக முதற்கனல்,மழைப்பாடல்,வண்ணக்கடல் ஆகியவை நிறைவடைந்ததோடு கண்ணனைப்பற்றிய துணை நாவலாக நீலமும் மலர்ந்து விட்டிருக்கிறது.  [நவீனத்தமிழின் விசுவரூபம்]


விருதுகளால்  சிலருக்குப் பெருமை கிடைக்கிறது;
வெகு சிலர் மட்டுமே விருதுகளுக்கே பெருமை சேர்க்கக்கூடியவர்களாக இருப்பவர்கள்..
இயல் விருதுக்குப்பெருமையும் கௌரவமும் சேர்த்திருக்கும் திரு ஜெயமோகன் அவர்களுக்கும்,
அவருக்கு இவ்விருதை வழங்கியிருக்கும் கனடா இலக்கியத் தோட்ட அமைப்புக்கும் என் வணக்கமும் வாழ்த்துக்களும்...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இவ்வாண்டுக்குரிய இந்திய அரசின் சாகித்திய அகாதமி பரிசைத் தனது அஞ்ஞாடி நாவலுக்காக- எழுத்தாளர் பூமணி பெறவிருக்கிறார்.
பொருத்தமான படைப்பாளியும் பொருத்தமான படைப்பும் விருதுக்குத் தேர்வாகியிருப்பது நிறைவூட்டும் செய்தி.
பூ.மாணிக்கவாசகம் என்ற இயற்பெயர் கொண்ட பூமணி,கோயில்பட்டி அருகிலுள்ள ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்து,பின் கோயில்பட்டியில் குடியேறியவர்.’

பிறகு’,’வெக்கை’,’நைவேத்தியம்’ஆகிய நாவல்களும் ‘வயிறுகள்’,’ரீதி’,’நொறுங்கல்கள்’முதலிய சிறுகதைத் தொகுப்புக்களும் இவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்.

இவரது ‘பிறகு’நாவல் இலக்கியச் சிந்தனைப் பரிசைப் பெற்றிருப்பது;’வெக்கை’நாவல் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.


தேசிய திரைப்படக் கழகத்தின் (NFDC)நிதி உதவியோடு குழந்தைத் தொழிலாளர் உழைப்பின் அவலம் பற்றிய சித்தரிப்பான ‘கருவேலம்பூக்கள்’என்னும் திரைப்படம் ஒன்றையும் இயக்கி வெளியிட்டிருக்கிறார் பூமணி;அது சர்வதேசப் பட விழாக்களில் பங்கேற்று கவனம் பெற்ற திரைப்படம் 

திரு பூமணி அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....