துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.12.14

ஆழத்தை அறியும் பயணம்- விஷ்ணுபுரம் விருது விழா-2014

’’ஓர் ஆளுமைக்குப் பண முடிப்போ விருதோ வழங்குவது மட்டுமே விருது விழாக்களின் உண்மையான நோக்கம் அல்ல; விருதை விடவும் அவரைப்பெருமைப்படுத்தக்கூடியது அவரது படைப்புக்களின் ஆழம் நோக்கிச்செல்வதே என்பதைத் தங்கள் ஞானக்கூத்தன் கவிதை வாசிப்பாலும் அவர் குறித்த ஆவணப்படத்தாலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்….’’

இந்த ஆண்டு  கவிஞர் ஞானக்கூத்தனுக்கு விருது வழங்கும் விஷ்ணுபுரம் விருது விழா[2014]...மிகுந்த துல்லியத்தோடும் கச்சிதமான செறிவான உரைகளோடும் நிறைவாக அமைந்திருந்தது. 

திரு புவியரசு,பாவண்ணன்,சா கந்தசாமி, டி.பி.ராஜீவன்,ஜெயமோகன்,கவிஞர் இசை ஆகியோரின் உரைகள்,திரு ஞானக்கூத்தனின் ஏற்புரை என அனைத்துமே - திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்ட தீவிரத் தன்மையோடு ஓர் இலக்கியக்கூட்டம் என்பதன் தரம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக விளங்கின. திரை இயக்குநர் வசந்தபாலனும் கூடியிருந்த இலக்கிய ஆளுமைகளுக்கிடையே எளிமையோடும் தன்னடக்கத்தோடும் தன் கருத்துக்களை முன் வைத்தார். விஷ்ணுபுர நண்பர் வினோதின் தயாரிப்பில் ஞானக்கூத்தனைப்பற்றி உருவான ‘இலை மேல் எழுத்து’ ஆவணப்படம் அரங்கில் திரையிடப்பட்டது. அது,விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் தொப்பியில் மற்றுமோர் இறகு.

விருது விழாவுக்கு முந்தைய நாளே நண்பர்களின் வருகையாலும் எழுத்தாளர்களோடான உரையாடல்களாலும் அனைவரும் தங்கியிருந்த ராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் களை கட்டத் தொடங்கியிருந்தது.அன்றுமாலை 27/12/14 அங்கிருந்த அரங்கிலேயே என் ‘யாதுமாகி’நாவல்வெளியீட்டு விழாவும் இருந்ததால் அது தொடர்பான வேலைகளுக்கு இடையே அவ்வப்போது அந்த உரையாடல்களைக்கேட்டுக்கொண்டிருந்தேன் நான். அன்று காலை சற்றுத் தாமதமாகச் சென்றதால் பாவண்ணனோடு நிகழ்ந்த பகிர்வுகளைத் தவற விட நேர்ந்தது.தேநீர் இடைவேளைக்குப்பின் கவிஞர் புவியரசு அவர்களோடான சந்திப்பு மிகவும் சுவாரசியமூட்டுவதாய் அமைந்திருந்தது. வானம்பாடிக்கவிஞரான புவியரசு,தனக்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவராய் வேறொரு இலக்கியப்பள்ளியைச் சேர்ந்தவராய் ஞானக்கூத்தன் இருந்தாலும் அவரோடு தான் கொண்டிருந்த நட்பின் ஆழம் பற்றி எடுத்துரைத்தார். புவியரசு அவர்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் இருப்பதால் அது சார்ந்த பல வினாக்கள் அவரிடம் வைக்கப்பட்டன. வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பதன் அபத்தத்தைச் சுட்டிக்காட்டிய அவர் ஆங்கில வழி மொழி பெயர்க்கையில் ஆங்கில மொழியின் நீண்ட வாக்கியங்களையும் தொடர்களையும்  துண்டு துண்டாகச் சிறு சிறு தொடர்களாக்கிப்படிக்க ஏற்ற வகையில் தருவதே நல்ல பெயர்ப்பாக இருக்க முடியும் என்றார்.


கவிஞர் புவியரசு அவர்களோடு... 

மதிய உணவுக்குப்பின் மாலை 4 மணி வரை நாவலாசிரியர் சு வேணுகோபாலுடன் உற்சாகமான விவாதங்களில் நண்பர்கள் ஈடுபட்டனர்; பொய்யான மிகையான பாவனைகளையும்  பாசாங்குகளையும் தவிர்த்த வெளிப்படையும் எளிமையும் வாய்ந்த பேச்சு சு வேணுகோபாலுடையது.அதை ரசித்து மகிழாதவர் எவருமில்லை. எழுத்தில் தீ என்ற சொல் இருந்தால் அது எரியும் –புகையும் மணம் நாசிக்கு எட்ட வேண்டும் என்பது தனக்கு உணர்வான பிறகு ’வேணுகோபால் எழுதினால் அதில் அவனது மண் வாசம் வீசியே ஆக வேண்டும்’ என்று தான் முடிவு கட்டிக்கொண்டதாக மிக இயல்பான மிதமான குரலில் தன் படைப்பனுபவங்களை விவரித்துச்சென்றார் அவர்.
சு வேணுகோபாலுடன் 
மாலை நடந்த எனது நூல்வெளியீட்டுக்குப்பின் மலையாளக்கவிஞர் திரு ராஜீவனோடு உரையாடல் தொடங்கியது.கவிதையில் படிமங்கள் குறித்த சில தெளிவுகளைப்பெற அந்த உரையாடல் உதவியது.


28 காலை தொடங்கி திரு ஜெயமோகனுடன் அவரது வெண்முரசு பற்றியே நண்பர்கள் தொடர்ந்து உரையாடிய வண்ணம் இருந்தனர். சென்னை விமானத்தில் ஏற்பட்ட தாமதத்தால் எழுத்தாளர் சா கந்தசாமியும் ஞானக்கூத்தனும் நேரே விழா அரங்கிற்கே வர வேண்டிய நிலை ஏற்பட்டதால் அவர்களோடான கருத்துப்பகிர்வு கைகூட வாய்ப்பின்றிப்போயிற்று. எனினும் ஞானக்கூத்தனின் பல கவிதைகள் உரக்க வாசிக்கப்பட்டு அவை பற்றிய பல வகை விளக்கங்கள் பலரிடமிருந்தும் தொடர்ச்சியாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன.


 விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்….
ஓர் ஆளுமைக்குப் பண முடிப்போ விருதோ வழங்குவது மட்டுமே விருது விழாக்களின் உண்மையான நோக்கம் அல்ல; விருதை விடவும் அவரைப்பெருமைப்படுத்தக்கூடியது அவரது படைப்புக்களின் ஆழம் நோக்கிச்செல்வதே என்பதைத் தங்கள் ஞானக்கூத்தன் கவிதை வாசிப்பாலும் அவர் குறித்த ஆவணப்படத்தாலும் நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்….

28.12.14

யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா-படங்கள்-1


என் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா
கோவையில் 27 மாலை சிறப்பாக நடைபெற்றது
நிகழ்வின்  புகைப்படங்கள் சில...


யாதுமாகி’ நாவலின் வெளியீடு
பாவண்ணன் வெளியிட ஜெயமோகன் பெற்றுக்கொள்கிறார்
உடன் வம்சி பதிப்பாளரும் மொழிபெயர்ப்பாளருமான கே வி ஷைலஜா

மனதில் உறுதி வேண்டும் பாடலோடு நிகழ்ச்சி தொடங்குகிறது....

விழாவில் வரவேற்பு நிகழ்த்தும் இலக்கிய வட்ட நண்பர் சுரேஷ்



நாவலின் வெளியீட்டு விழாவில் உரையாற்றும் எழுத்தாளர் திரு ஜெயமோகன்
பாவண்ணன் உரை

நாவல் வெளியீட்டு விழாவைத் தொகுத்து விழாவைத் தொகுத்து வழங்கும் என் மகள் மினு பிரமோத்-சுங்கம்,மற்றும்கலால்துறை கூடுதல் ஆணையர்
என்மருமகனும் வனத்துறை உயர் அதிகாரியுமான திரு பிரமோத் கிருஷ்ணன் திரு ஜெயமோகனுக்கும் பாவண்ணனுக்கும் சிறப்புச்செய்கிறார்

வெளியீட்டு விழாவில் உரையாற்றும் கே வி ஷைலஜா

என்னுரை


’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழாவில் என் தோழியும் பேராசிரியருமான பாத்திமாஉரையாற்றுகிறார்

என் தோழியும் பேராசிரியருமான அனுராதா உரையாற்றுகிறார்
எழுத்தாளர் திரு பவாசெல்லதுரையுடன் நான்.
நூல்முகப்பட்டையை வடிவமைத்த பவா-ஷைலஜாவின்மகன் வம்சிக்கு நினைவுப்பரிசு வழங்கும் தருணம்.
விழாவில் வரவேற்பு நிகழ்த்தும் இலக்கிய வட்ட நண்பர் சுரேஷ்
ராஜகோபாலனின் கட்டுரையை வாசிக்கும் செந்தில்குமாரதேவன்
மனதில் உறுதி வேண்டும் பாடலைப்பாடி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த ஆனந்த்- அவரை கௌரவிக்கும் சாமிராஜ்

என் நண்பரும் வளரும் எழுத்தாளருமான தேவராஜ் விட்டலன் ஜெயமோகனிடமிருந்து நூலைப்பெறுகிறார்

நிகழ்வின்போது....



24.12.14

’யாதுமாகி’- நாவல் வெளியீடு

வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கும் 
என் ’யாதுமாகி’ நாவலின் வெளியீட்டு விழா
அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
அனைவரும் வருகை புரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன்.


யாதுமாகி நூல் வெளியீட்டின் நிகழ்ச்சிக்குறிப்பு

நாள்;27.12.2014

மாலை 5 30

இடம்;ராஜஸ்தானி யாத்ரி நிவாஸ் அரங்கம் , ஆர் எஸ் புரம் , கோவை
[மதுரை ஐ ஃபௌண்டேஷனுக்கு எதிரில்]

நூல்;’ நாவல்- ‘யாதுமாகி’

வரவேற்பு; திரு கோவை சுரேஷ்

பாரதி பாடல்- வானதிஶ்ரீ

நூல் வெளியீடு 

திரு பாவண்ணன் வெளியிட திரு ஜெயமோகன் முதல்பிரதியைப்பெற்றுக்கொள்கிறார்.
வாழ்த்துரை
 1.திரு ஜெயமோகன் 
2.திரு பாவண்ணன் 
3.திருமதி கே வி ஷைலஜா-எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்[வம்சி பதிப்பகம்]
விமரிசன உரை- 
1.திரு ராஜகோபாலன்-எழுத்தாளர்,விமர்சகர்
2.திருமதி பாத்திமா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக்கல்லூரி,மதுரை
3.திருமதி நா அனுராதா-தமிழ்ப்பேராசிரியர்[ப நி],பாத்திமாக்கல்லூரி,மதுரை
ஏற்புரை
எம்.ஏ.சுசீலா
நிகழ்ச்சித் தொகுப்பும் நன்றியுரையும்-
மீனு பிரமோத் இ வ ப,
கூடுதல் ஆணையர்,கலால் மற்றும் சுங்கவரித்துறை,கோவை

21.12.14

திண்ணை இணைய இதழில் ’யாதுமாகி’ ....




திண்ணை இணைய இதழில் ’யாதுமாகி’ நாவல் பற்றி வெளியாகியிருக்கும் தேனம்மை லட்சுமணனின் கட்டுரை

சுசீலாம்மாவின் யாதுமாகி-தேனம்மை லெக்ஷ்மணன்


 ‘80களில் என் அன்பு மாணவியாக இருந்தபோது தேனம்மை என்னோடு எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம்

18.12.14

கசாப்புக்காரர் -ஆஷா பூர்ணாதேவி

ஆஷா பூர்ணாதேவியின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றான இது, வங்காளக்கூட்டுக் குடும்பங்களில் பெண் நிலை பற்றியது . தான் பெண்ணாக இருந்தபோதும் பெண் சார்ந்த இன்னொரு தரப்பையும்  எடுத்துக்கொண்டு நடுநிலையோடு பேசியிருக்கிறார் ஆசிரியர்; பெண்ணின் மீட்சி அவளிடமிருந்துதான் வர வேண்டும் என்பதையும் கழிவிரக்கம் தேவையில்லை என்பதையும் உணர்த்தும் அருமையான படைப்பு இது.
ஆங்கில வழி நான் தமிழாக்கம் செய்த இப்படைப்பை சொல்வனம் இதழ் வெளியிட்டிருக்கிறது.
                                                    கசாப்புக்காரர் [ ‘Koshai’]
அழுகை ….அழுகை…!
ஓயாத …..ஒழியாத அழுகை ! 
சகிக்கமுடியாத……., காரணமே தெரியாத இடைவிடாத அழுகை ! இப்படிப்பட்ட அழுகை உங்கள் மனதைப் முறுக்கிப் பிசைந்து வலிக்க வைப்பதையும், இரக்க மேலீட்டால் கண்ணீர் சிந்த வைப்பதையும் விட எரிச்சலூட்டுவதாகவும் உங்களை வெறுப்படைய வைப்பதாகவுமே இருக்கும். ஆனாலும் …நிறைய நேரம் செல்லமாகத் தட்டிக்கொடுத்து,இதமான வார்த்தைகள் பலவும் சொல்லி இந்த அழுகையை நிறுத்த ஏதாவது ஒருமுயற்சி செய்துதானாக வேண்டும்…! ஆனால் அந்த முயற்சிகளெல்லாம் எப்போதுமே வெற்றியடைந்து விடும் என்றும் சொல்லி விடவும் முடியாது.
நோயாளியான தன் குழந்தைப்பையனை வைத்துக்கொண்டு பொறுமை எல்லை கடந்து போனநிலையில் தவித்துக்கொண்டிருந்தான் சமரேஷ்; ஆனால் கமலா..எங்கேயுமே தென்படவில்லை.
சமையலறையில் அப்படி என்னதான் மிதமிஞ்சிய வேலைகள் இருந்துவிடக்கூடும்? சமரேஷுக்கு உண்மையிலேயே அது விளங்கவில்லை. குடும்பத்தில் இருக்கும் இன்னும் இரண்டு மருமகள்களோடு அவனுடைய விதவைச் சகோதரியும் இருக்கிறாள்; மற்ற வேலைகளுக்குக் கூடமாட உதவியாக வயதில் மூத்த அவனுடைய மாமாபெண் ஒருத்தியும் அந்த வீட்டில் இருக்கிறாள். அப்படியும் கூட சமையல் அறையில் தான் இருந்துதான் ஆக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் கமலா குழந்தையை ஏன் விட்டு விட்டுப்போக வேண்டும் என்பது சமரேஷுக்கு இன்னும் கூட ஒரு புதிராகத்தான் இருந்தது.
தரையை ஓங்கி உதைத்தபடி அங்கே சட்டென்று நுழைந்து விடலாமா என்ற ஆவேசத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டிருந்தான் அவன். ஆனால்….மற்றவர்கள் முன்னிலையில் அப்படி நடந்து கொண்டு ஒரு நாடகத்தனமான காட்சியை அவன் அரங்கேற்றினால் பிறகு கமலா அதற்காகத் தன்னைத்தான் கடிந்து கொள்வாள் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஒருவேளை அந்தச்செயலால் அதிகமாகப் புண்பட்டுப்போகும் அவள், வேண்டுமென்றே இன்னும் கொஞ்சம் காலதாமதம் செய்து விட்டால்…அப்புறம் சமரேஷால் அதற்கு மேல் எப்படி சமாளிக்க முடியும்?
மகன் போடும் கூக்குரல்கள் அதிகரித்துக்கொண்டே சென்றன. அடுப்படியில் வேலை செய்வதற்காகக் கதறிக்கொண்டிருக்கும் குழந்தையின் அழுகையைக் கண்டு கொள்ளாமல் புறக்கணித்துக்கொண்டிருக்கும் மனைவியின் வித்தியாசமான நடவடிக்கை சமரேஷுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு புறம் அவள் மீது கோபம் பொங்கி வந்தாலும் – அவள் குழந்தையை விட்டு விட்டு விருப்பமில்லாமல் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருப்பது ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தினால் மட்டுமே என்பதையும் தன் உள்ளத்தின் ஆழத்தில் அவன் உணர்ந்துதான் இருந்தான்.
சமரேஷின் சொந்தக்காரர்களெல்லாம் அவ்வளவு கொடுமைக்காரர்களா என்ன…? இப்படி எதையுமே கண்டு கொள்ளாமல் அசட்டையாகவா இருப்பார்கள் அவர்கள்…? மனிதர்கள்…..அதிலும் குறிப்பாகப்பெண்கள் ..இப்படி இதயம் இல்லாதவர்களாக இருப்பது சாத்தியம்தானா ?
சற்று தூரத்தில் சமையல் அறையில் இருந்த கமலாவின் பதட்டம் சிறிது சிறிதாகக்கூடிக்கொண்டே சென்றது. உச்ச ஸ்தாயியில் உயர்ந்து கொண்டே செல்லும் குழந்தையின் ஓலமும் அவன் போடும் கூச்சலும் அவளையும் எட்டாமல் இல்லை.ஆனாலும் அவளால் என்ன செய்ய முடியும்? இன்று சமைக்க வேண்டியது அவளுடைய ‘முறை’. அதிலிருந்து விலக்குப்பெறுவதற்கு ….தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ‘முறை’யை விட்டு விலகிச் செல்வதற்கு அவளுக்கு அனுமதி கிடைக்கப்போகிறதா என்ன? ஒருக்காலும் இல்லை.
‘என்ன…? நீ ஒருத்தி மட்டும்தான் கைக்குழந்தைக்காரியா…?
இந்த உலகத்திலேயே வியாதிக்காரக்குழந்தையைப் பார்த்துக்கிற அம்மா நீ மட்டும்தானா?
ஆனா ஒண்ணு மட்டும் நெஜம்…! இந்த உலகத்திலேயே ரொம்ப மோசமா செல்லம் கொடுத்துக்கெட்டுப்போன ஒரு குழந்தை உன்னோடதுதான்!’
கமலாவை நோக்கி வீசப்படுபவை இப்படிப்பட்ட வார்த்தைகள்தான்.
குறிப்பாக எல்லோருக்கும் மூத்தவளான அவளது ஓரகத்தி.
அடுப்பில் சுடுவதற்காகத் தேய்த்து வைக்கப்பட்ட சப்பாத்திகள் நிறைந்த ஒரு தட்டைக் கமலாவின் பக்கம் தள்ளி விட்டுக்கொண்டே அவள் பேசினாள்.
‘’ சே….என்ன ஒரு அழுகை ! கடவுளே…! இப்படி ஒரு கத்தலா….? இந்தவீடே செவிடாப்போயிடும் போல இருக்கே? சின்ன மருமகளோட பையன் ரொம்ப சாது …..அப்படித்தானே ? பார்த்தா…எலும்பும் தோலுமா வவ்வால் மாதிரி இருக்கான்,ஆனா..குரலைப்பாரு…விரிசல் விழுந்த கண்டாமணி மாதிரி’’
தட்டில் தேய்த்து வைக்கப்பட்டிருந்த ரொட்டிகளையும் அருகே குன்றுபோலக்குவித்து வைக்கப்பட்டிருந்த உருண்டைகளையும் வன்மத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் கமலா.பெருமூச்சொன்றை உதிர்த்தபடி சலிப்பான தொனியில்’’என்னன்னே தெரியலை..இன்னிக்குன்னு இப்படிக் கிறுக்குத்தனமா நடந்துக்கறான் அவன். ஒருவேளை வெளியே சொல்லத் தெரியாம ஏதாவது ஒரு வலியோ தொந்தரவோ அவனைக் கஷ்டப்படுத்துதோ என்னவோ’’என்றாள்.
அதைக்கேட்ட அவளது மூத்த ஓரகத்தி தன் முகத்தைச்சுளித்துக்கொண்டு அவளுக்குப் பழிப்புக்காட்டினாள். ‘’ சின்ன மருமகளே…! மூளை கெட்ட தனமாப்பேசாதே. உன் பையன் தினம் தினம் இப்படித்தான் அழுதுக்கிட்டிருக்கான். தன்னோட அம்மா எப்பவும் தன்னோடயே உட்கார்ந்திருக்கணும்னு ஆசைப்படறான் அவன். அவனுக்குக் காய்ச்சலும் இல்லை…வேறெந்த வியாதியும் இல்லை. சும்மா தேவையில்லாம நாள் முழுக்கக் கத்திக் கூப்பாடு போட்டுக்கிட்டிருக்கான். நானும்தான் என்னோட ஆயுசிலே எத்தனையோ குழந்தைகளைப் பாத்திருக்கேன்…ஆனா உன்னோட பையனைப்போல ஒரு குசும்புக்காரனைப் பாத்ததே இல்லை’’
அந்த நேரம் பார்த்து பூஜை அறையிலிருந்து சமையலறைக்குள் பிரவேசித்த கமலாவின் விதவை நாத்தனார் அங்கே நடந்து கொண்டிருந்த உரையாடலின் எந்தநொடியையும் தவற விட்டு விடாமல் தானும் அதில் கலந்து கொண்டாள்.
‘’காதே செவிடாப்போற மாதிரி இப்படி ஒரு பயங்கரமான சத்தம் இருந்தா அப்புறம் நான் எப்படித்தான் பூஜைபண்றது…..சே….போயும் போயும் இப்படி ஒரு பிள்ளையைப் பெத்திருக்கே பாரு..! அது சாகத்தான் லாயக்கு….நெஜமாவே அது ஒரு மனுஷ ஜன்மமா……இல்லே ஏதாவது ஒரு மிருகமான்னே தெரியலை.’’
கமலாவின் நாத்தனார் அப்படி ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தது கொஞ்சம் குரூரமானதுதான் என்றாலும் அதில் ஒரேயடியாக உண்மையில்லை என்றும் சொல்லிவிட முடியாது. வீடு முழுவதும் வியாபித்திருந்த அந்த ஓலக்குரல் ஏதோ ஒரு வினோதமான விலங்கு எழுப்பும் சத்தத்தைப்போலத்தான் இருந்தது. இனம் புரியாத அந்த ஓலத்துக்குக் காரணம் என்னவென்பது யாருக்குத் தெரியும்? மருத்துவரும் கூட அதற்கு முன்பு தோற்றுத்தான் போனார்; ஆனாலும் அதைகௌரவமாக ஒத்துக்கொள்வதைவிட்டுவிட்டு ஏதோ ஒரு ‘அலர்ஜி’ காரணமாக இருக்கலாம் என்று மேலெழுந்தவாரியாக அறிவித்து முடித்துக்கொண்டு விட்டார். அவர் பயன்படுத்திய –தாங்கள் கேள்விப்பட்டிராத அந்தப் புதிய வார்த்தைப்பிரயோகத்தைக் கேட்டபிறகு அந்தக்குடும்பம் அந்தப் பிரச்சினையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை; உண்மையில் அதைப்பற்றிக் கவலைப்படவுமில்லை.
அந்தக் குழந்தையின் கதறல் ,இப்போது சினத்துக்கும் பரிகாசத்துக்கும் உரிய ஒன்றாகவே மாறிப்போய்விட்டிருந்தது. ஆரோக்கியமான ஒருகுழந்தையை வேண்டுமென்றே திட்டமிட்டு ஒரு நோயாளிக்குழந்தையைப்போல ஆக்குபவள் கமலாதான் என்றும் அதற்கு அந்தக்குழந்தையும் கூட உடந்தையாக இருக்கிறது என்றுமே அங்கிருந்த எல்லாரும் முடிவு கட்டிக்கொண்டிருந்தனர்.
நாத்தனாரின் கொடூரமான சொற்களால் கண்ணீர் மல்கிக்கொண்டிருந்தாள் கமலா; அதற்குச்சரியான பதிலடி கொடுக்கவேண்டுமென்று அவள் துடித்துக்கொண்டிருந்த அந்த நேரத்தில், அழுது கரைந்து கொண்டிருந்த – மெலிந்து போயிருந்த அந்தக்குழந்தையைக் கையில் ஏந்தியபடி உள்ளே நுழைந்தான் சமரேஷ்; அதை முரட்டுத்தனமாகக் கதவருகிலேயே கிடத்தி விட்டுக்கத்தினான்.
‘’என்ன …..சாவு விருந்து போட எல்லா ஏற்பாடும்பண்ணி முடிச்சிட்டியா இல்லையா……? இந்த வேலையை வேற யார் கிட்டேயாவது விட்டுட்டு வர உன்னாலே முடியாதா …? இப்படி விஸ்தாரமா சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கிறதுக்குப் பதிலா கடையிலேயிருந்து காய்ஞ்ச ரொட்டித் துண்டை வாங்கி சாப்பிட்டா அது என்ன தொண்டைக்குழிக்குள்ளே எறங்காமேபோயிடுமா’’
சமரேஷின் பொறுமை எல்லை கடந்து சென்றுவிட்டது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.தன் கோபத்தையெல்லாம் கொட்டித் தீர்த்து விட்டு அங்கிருந்து வெளியேறினான் அவன்.
சமையல் அறையில் இருந்த எல்லோரும்கணநேரம் வாயடைத்துப்போனபடி இருந்தார்கள்; ஆனால்…அது கணநேரம் மட்டும்தான். அடுத்த நொடியிலேயே மூத்த ஓரகத்தி தன் அருவருப்பான கீச்சுக்குரலில் கத்தத் தொடங்கியிருந்தாள்.
‘’போம்மா போ .., என் செல்லப்பொண்ணே !! இந்த வீட்டுச்சின்ன மருமகளே போ! நல்லாப் போய் உன்னோட கண்ணான குழந்தையை மடியிலே போட்டுக்கிட்டு உட்கார்ந்துக்கோ. உன் பையனோட புண்ணியத்திலே நம்ம எல்லாரோட இராத்திரிச் சாப்பாடும் சாவு விருந்தா மாறப்போறதை நல்லா பார்த்துக்கிட்டே இரு. இப்படிப்பேசினதுக்கு பதிலா இனிமே தன்னோடபெண்டாட்டி சமையல் பண்ணணும்னு யாரும் எதிர்பார்க்கக்கூடாதுன்னு குழந்தையோட அப்பா நேருக்கு நேராவே சொல்லியிருக்கலாமே….வேணும்னே தன்னோட பிள்ளையைக் கிள்ளி விட்டு அழ வச்சிட்டுஅப்பறம் நம்ம கிட்டே வந்து இப்படி நிஷ்டூரமா ஏன் பேசணும்?’’
கை கழுவிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக்கொள்வதற்காகக் கமலா அவசரமாக எழுந்துசென்றாள்; அந்த மாதிரி வார்த்தைகளைக்கேட்டதில் அவளுக்குள் கோபம் குமுறிக்கொண்டுவந்தது. கதவருகே கிடந்தபடி இன்னும் சிணுங்கிக்கொண்டிருந்த குழந்தையை ஓங்கி ஒரு போடு போட்டுவிட்டு மீண்டும் தன் வேலைக்குத் திரும்பிச் சென்றாள் அவள். ஆனால் அது அவள் மகனைக் கட்டுப்படுத்தக் கொஞ்சமும் உதவவில்லை; அவளை அதற்காகப் பழிவாங்குவதைப் போலவே அவன் பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்ததும் அங்கே என்னதான் நடக்கிறதென்று பார்ப்பதற்காகக் குடும்பத்திலிருந்த மற்றவர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். நாள் முழுக்க-இரவும் பகலும் எந்த நேரமும் அந்தக்குழந்தை ஓயாமல் அழுதுகொண்டே இருப்பது வழக்கம்தான் என்றாலும் இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது அதன் கூக்குரல் உச்ச ஸ்தாயியை எட்டியிருந்தது. சின்ன மருமகள் எங்கேதான் போய்விட்டாள் என்று அவர்கள் ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இறுதியில் ஒரு வழியாக – வேலை செய்து கொண்டிருப்பதைப்போன்ற பாவனைகளையெல்லாம் விட்டு விட்டுக் குழந்தையை சமாதானப்படுத்த இறங்கி வந்தாள் கமலா.
‘’இதுக்கு பதிலா ஒரேயடியா நீ செத்து ஒழிஞ்சு இந்தக்கூப்பாட்டுக்கெல்லாம் ஒரு முழுக்குப்போட வேண்டியதுதானே’’ என்று கண்ணீர் மல்கக் கத்தியவள் மறுபடியும் ஒரு தடவை அதை பலமாக அடித்துவிட்டு சமையலறையை விட்டுச் சென்றாள்.
அறைக்கு வந்த பிறகு கணவனோடு வாக்குவாதம் செய்து சண்டை போடுவதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள் கமலா;ஆனால் சமரேஷை எங்கேயுமே காணவில்லை.
வீட்டு விஷயங்கள் பொறுக்க முடியாதபடி போகும்போது வெளி உலகத்துக்குத் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு ஆண்களுக்கு எப்படியோ கிடைத்து விடுகிறது. நான்கு சுவர்களுக்குள் மட்டுமே சிறைப்பட்டுக்கிடக்கும் அநாதரவான பெண்ணுக்கு அப்படிப்பட்ட ஆறுதல் கிடைப்பது கடினம்தான்.ஆனால்….அவர்களுடைய பொறுமை மட்டும் எல்லை தாண்டிச்செல்லக்கூடாதா என்ன?
என்னசெய்வதென்றே புரிபடாத நிலையில் திகைத்துப்போயிருந்த கமலா, முனகிக்கொண்டிருந்த குழந்தையைப்பாதி தூக்கிக்கொண்டும் பாதி இழுத்துக்கொண்டும் மூன்றாவது மாடியிலிருந்த கூரை வேய்ந்த மேல்மாடிக்குச்சென்றாள்.
அவள்,அங்கேயே…….அப்படியே உட்கார்ந்திருப்பதுதான் தேவை என்றால்……கீழே இருக்கும் குடும்பத்தாருக்கு அதுதான் நிம்மதியைத் தரும் என்றால் அவள் அவ்வாறேசெய்யவும் கூடத் தயாராக இருந்தாள். சக்தியெல்லாம் வடிந்து போய் ஜீவனே இல்லாமல் இருந்த அவளால் அதற்கு மேலும் தன் அழுகையைக்கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
சைத்ர மாதத்துக்காற்று குளுமையாகவும் இனிமையாகவும் வீசிக்கொண்டிருந்தது. இரவு ஒன்பது மணியாகியிருந்தது. அந்த மேல்மாடியின் கூரைக்கடியில் இதுவரையில் தான் அனுபவித்து வந்த தவிப்பையெல்லாம் தணிக்கக்கூடியதான பேரமைதி ஒன்று திடீரென்று தன்மீது கவிந்து கொண்டதைப்போல உணர்ந்தாள் அவள். வீட்டின் கீழ்ப்பகுதியில் அவள் அனுபவித்து வந்த துயரங்கள், அழுக்கும் அசிங்கமுமான அந்த உலகம் – அதற்கெல்லாம் மாற்றாக இங்கே மேலே, ஒரு புதிய உலகத்தைத் தான் கண்டு கொண்டு விட்டதைப்போல அவளுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் – கீழேயுள்ள கடினமான வீட்டு வேலைகளில் சிறைப்பட்டுக் கிடப்பவர்களிடமிருந்து நழுவிக்கொண்டுவருவதற்கு வாய்த்திருக்கும் தற்காலிகமான கணங்கள் மட்டுமே அவை என்ற உண்மையையும் அந்த அமைதிக்கு நடுவே அவள் புரிந்துதான் வைத்திருந்தாள்.
அழும் குழந்தையைத் தன்னருகே கிடத்தியபடி தானும் அழுது கொண்டிருந்தாள் கமலா. சிறிது நேரம் அப்படியே கழிந்த பிறகுதான்….குழந்தையின் அழுகை தானாகவே நின்று போயிருந்த அதிசயம் அவளுக்கு உறைத்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு அவனைத் திரும்பிப் பார்த்தபோது ஏதோ ஒரு கட்டத்தில் அழுதபடியே அவன் தூங்கிப்போயிருக்க வேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள்.
கமலாவுக்குள் சட்டென்று ஒரு சிந்தனை ஓடியது. வீட்டில் இருக்கும் கரிபடிந்த அழுக்கான அடைசலான அறைகளில் புழுக்கமாக இருந்ததனால்தான் அவன் அப்படி இடைவிடாமல் அழுதிருப்பானோ? குழந்தைக்குச் சளி பிடிக்கக்கூடாது என்று பயந்து கொண்டே அதை எப்போதும் போர்வை மடிப்புகளுக்குள் பொதிந்து வெம்மையாகவே வைத்திருப்பான் சமரேஷ். பாவம்….சூடு தாங்காமல் அந்த ஜீவன் கஷ்டப்பட்டிருக்க வேண்டும்.மறுநாளிலிருந்து தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வீட்டு வேலைச்சுமைகளுக்கு நடுவில் எப்படியாவது யாருக்கும் தெரியாமல் கொஞ்ச நேரத்தையாவது பிய்த்துத் திருடிஒதுக்கிக்கொண்டு இந்த மாடிக்கு வந்து குழந்தையைத் தூங்க வைத்து விட வேண்டுமென்று உறுதி எடுத்துக்கொண்டாள் கமலா. அதன் அருகில் நகர்ந்து சென்று தன் முந்தானையால் அதற்குப் போர்த்தி விட்டாள். சமரேஷ் வந்து தன்னை சமாதானப்படுத்திக் கீழே இருக்கும் குடும்பத்தாரோடு சேர்த்துவைக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டுமென்றும் முடிவு கட்டிக்கொண்டாள்.
சண்டை போட்டு விவாதம் செய்யுமாறு வீட்டிலுள்ளவர்களைத் தூண்டிவிட்டு விட்டு – அவர்கள் தொடுக்கும் தாக்குதல்களையெல்லாம் தனியே எதிர்கொள்ளுமாறு அவளை விட்டுவிட்டுத் தான் மட்டும் தப்பித்துப்போய்விட்ட சமரேஷை அவள் இன்னும் மன்னித்திருக்கவில்லை.
இரவின் அடர்த்தி கூடிக்கொண்டே வந்தது. முன்னிரவில் மெல்லிதாக வீசிக்கொண்டிருந்த காற்று இப்போது வலுத்திருந்தது;அதில் குளிரும் கூடியிருந்தது.உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மீது நிலவொளி சாய்வாகப்படர்ந்திருந்தது.அமானுஷ்யமான அந்த வெளிச்சத்தில் பார்க்கும்போது குழந்தையின் உருவம் வினோதமாகத் தென்பட்டது. கணநேரம் திடுக்கிட்டுப்போன கமலாவை மயிர்க்கூச்செறியும் திகிலும் பயமும் ஆட்கொண்டன. குழந்தைக்குக் கவசமாக இருக்க எண்ணியதைப்போல அதை நெருக்கமாக அணைத்துக்கொண்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள் அவள்.
தன்னையும் அறியாமல் சற்று நேரம் கண்ணயர்ந்திருந்த அவள் உலுக்கப்பட்டவள் போல விழித்துக்கொண்டபோது சமரேஷ் குனிந்து குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தது கண்ணில் பட்டது. ஆனால் கீழே போய் சாப்பிடும்படி அவளை சமாதானம் செய்வதற்கோ தன் குடும்பத்தாரைக் குற்றம் சொல்வதற்கோ –எதற்குமே அவன் முனையவில்லை.
அமைதியாக வீசிக்கொண்டிருந்த காற்றைத் துளைத்துக்கொண்டு அவனது முரட்டுத்தனமான குரல் மட்டும் இப்படிக்கத்தியது.
‘’என்ன இது…..? இப்படி ஒரு விரிப்புக்கூடப்போடாம வெறும் தரையிலே போய்க் குழந்தையைப் படுக்க வச்சிருக்கே…? அவனை சாகடிச்சிடலாம்னு நெனக்கிறியா?’’
கமலா எந்த பதிலும் சொல்ல விரும்பாதவளாய் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவள் எப்போதுமே எதையும் சுலபமாக விட்டுக்கொடுத்து விடுவதில்லை; அதிகநேரம் கெஞ்சி,சமாதானம் செய்த பிறகு பேசுவதே அவள் வழக்கம்.
‘’அவனைக் கீழே கூட்டிக்கிட்டுவா. டாக்டர் வந்திருக்கார்’’
‘’என்னது…டாக்டரா..?’’
புண்பட்டுப்போயிருந்த தன் சுய உணர்வுகளை அதற்கு மேலும் வளர்த்துக்கொண்டு செல்ல அவளால் முடியவில்லை.
தான் இருந்த இடத்திலிருந்து வேகமாய் எழுந்தவள்,
‘’அப்படீன்னா…நீங்க ….டாக்டரைக்கூப்பிடவா போயிருந்தீங்க’’
என்று நடுங்கும் குரலில் அவனிடம் கேட்டாள்.
‘’பின்னே நான் என்ன சும்மா எங்கேயோ உலாவப்போயிட்டேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தியா ? அதிருக்கட்டும்….என்ன கொடுமை இது? அவனுக்கே காய்ச்சல் பொரிஞ்சிக்கிட்டு இருந்தது’’ என்றபடி குழந்தையைத் தூக்கிக் கொள்வதற்காகக் குனிந்தான் சமரேஷ். அதன் மெலிவான உடல் மீது அவன் விரல்கள் உராய்ந்தபோது அவன் குரல் அச்சத்தால் கனத்துப்போயிருந்தது.
கமலா ஏதோ கனவில் இருப்பவளைப்போலக் குழந்தையை அவனிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காகக் கைகளை நீட்டினாள். அவனோ அவளிடமிருந்து அதைப்பிடுங்கிக்கொண்டு செல்பவனைப்போல அதை அகற்றிக்கொண்டான்.
கடுமை நிறைந்த குரலில் ‘’விடு அவனை’’என்றான்.
குளிர்ந்து போய் விறைத்துக்கிடந்த குழந்தையின் தொடுகை , தொடர்ந்து வரப்போகும் ஏதோ ஒரு பெரிய அபாயத்தின் அறிகுறியைப்போல பயங்கரமாக அச்சமூட்டியது.
மருத்துவருக்கு முன்னால் இருந்த படுக்கையில் குழந்தையைக் கிடத்தியபோது அவன் முகம் பீதியின் விளிம்பில் உறைந்திருந்தது.
‘’டாக்டர்….! அவனோட கழுத்து விறைப்பா இருக்கு..’’
அப்படி ஒரு அமைதி…….அப்படி ஒரு திகிலூட்டும் நிசப்தம்! மிக மோசமான துயரத்தின் மௌனத்தில் நிரம்பிக் கிடந்தது அந்த வீடு. தங்கள் காதுகளை எரிச்சலோடு பொத்திக்கொள்ள வேண்டிய தேவை இப்போது அந்தக் குடும்பத்தில் யாருக்கும் இல்லை. அங்கே நிரந்தரமாக நின்றுபோயிருந்தது அந்த அழுகைமட்டுமல்ல,…..அந்த வீட்டிலிருந்த அனைவருமே அமைதியாகி விட்டிருந்தனர். மறைவான ஏதோ ஒரு மூலையிலிருந்து மட்டும் மெல்லிதான கீற்றுப்போன்ற இலேசான விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
ஆனால்…..எத்தனை நாட்களுக்குத்தான் வீடு அப்படி நிசப்தமாக இருக்கமுடியும்? ஒரு குடும்பம் என்பது எண்ணிக்கையில் அடங்காத எத்தனையோ தனி நபர்களின் விருப்பங்கள், தேவைகள் ஆகிய சிக்கலான கலவைகளால் அல்லவா கட்டமைக்கப்பட்டிருக்கிறது? சின்னஞ்சிறிய ஒரு ஜீவனின் இழப்புக்காக அது எத்தனைகாலம்தான் துக்கம் கொண்டாடிக்கொண்டிருக்கமுடியும்? மேலும் ஒரு துக்கத்தின் அளவு எந்த எல்லை வரை செல்ல வேண்டும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததுதானே? அற்ப ஆயுள் கொண்டவர்களுக்கு அவர்களுக்கேற்றதுதான் கிடைக்க முடியும். குழந்தையின் இறப்புக்காக துக்கம் அனுசரிப்பதும் கூட அதற்கேற்றபடிதான்!
காலப்போக்கில் அந்த விஷயமே மறக்கப்பட்டுப்போய் ….எந்தமாற்றமுமே இல்லாத இயந்திர கதியில் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. சமையலறையில் கமலாவின் ’வேலை முறை’ என்ற சடங்கு மாத்திரம் என்றென்றைக்குமாய்த் தகர்ந்து போயிருந்தது. அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த வேலைகள் மற்றவர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டு அவள் தனியே விடப்பட்டிருந்தாள். பிரமை பிடித்தவளைப்போலத் தன் அறைக்குள் அடைந்து கிடந்த கமலாவின் ஒவ்வொரு நாளும் முடிவில்லாத வெறுமை மண்டிய கடலைப்போல நீண்டு கொண்டிருந்தது.
ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய சமரேஷ் வியர்வையில் நனைந்து போயிருந்த தன் சட்டையைக்கழற்றி வீசியபடி அவளிடம் கேட்டான்.
“ஆமாம்…எத்தனை காலத்துக்குத்தான் நீ இப்படியே இருக்கப்போறே….உன் உடம்பை வீணடிச்சுக்கிட்டு – இப்படி கொஞ்சம் கொஞ்சமா பாழடிச்சுக்கிட்டே. இருக்கிறதிலே ஏதாவது அர்த்தம் இருக்கா…..ஒருவேளை திடீர்னு பெரிசா ஏதாவது வியாதி வந்துட்டா நல்லா இருக்கும் நெனக்கிறியா”
கணவனின் வார்த்தைகள் கமலாவை விஷம் போலத்தீண்ட அவள் எழுந்து உட்கார்ந்தாள்.
“சரிதான்…..நீங்களும் மத்தவங்க மாதிரியே லாபநஷ்டக் கணக்கு பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா…..அப்படீன்னா பழையபடி நான் என்னோட வேலைக்குத் திரும்பிப் போகணும்….என்னோட சுமையை மறுபடி சுமக்க ஆரம்பிக்கணும்னு கூட சொல்லிடுவீங்க போல இருக்கே….”
“நான் ஒண்ணும் அப்படியெல்லாம் சொல்லலை . நீ இப்படியே இருந்தா ரொம்ப முடியாமல் போய்ப் படுக்கையிலே விழுந்திடுவேன்னுதான் அப்படி சொன்னேன்…”
“உங்களோட உண்மையான உணர்ச்சிகளை மறைச்சுக்கப் பாக்காதீங்க. அதையெல்லாம் அப்படி ஒண்ணும் மறைச்சுக்கவும் முடியாது.எனக்கு ஏற்பட்டிருக்கிற இழப்பிலே உங்களுக்கெல்லாம் துக்கம் பொங்கிக்கிட்டு வருது….இல்லே? சே..எல்லாரும் சரியான சுயநலக்காரங்க…..!
இந்த வீட்டிலே இருக்கிற நீங்க எல்லாருமே வெறும் மிருகங்கதான்……!
கல்லு மனசோட இருக்கிற மிருகங்கள்…! இப்பல்லாம் நான் என்னோட ரூமுக்குள்ளேயே – ஒரு சுண்டுவிரலைக்கூட அசைக்காம படுத்துக்கிட்டுத்தான் கெடக்கேன். அதனாலே இந்த வீடு இப்ப என்ன ஸ்தம்பிச்சா போயிடுச்சு….? அப்புறம் ஏன் இந்த வீட்டு வேலை செய்யறதுக்காக என்னோட குழந்தையைப் பார்த்துக்க முடியாமப்போச்சு….? கடைசி நாள் வரைக்கும் நான் அந்த அடுப்படியிலே வேலை பார்க்க வேண்டியதாத்தான் இருந்தது. ’பாவம்….அவளோட குழந்தை செத்துப்போய்க்கிட்டிருக்கு….அவ போகட்டும்’னு ஒருத்தர் கூடச் சொல்லலியே . கசாப்பு விக்கறவங்க….நீங்க எல்லாருமே மட்டமான கசாப்புக்காரங்கதான்”
சமரேஷ் எதுவுமே பேசாமல் அமைதியாகவே உட்கார்ந்திருந்தான் .மனைவி சொன்ன வார்த்தைகளில் நெகிழ்ந்து போய் விடாமல் அவள் சொன்ன எதுவுமே காதில் விழாதவனைப்போல இருந்தான் அவன். ஒருமுறை கூட அவன் அவளிடம் மன்னிப்புக் கோரவும் இல்லை,தன் குடும்பத்தாரைத் தாக்குவது போலவும் அவன் பேசவில்லை.
கமலா எல்லாவற்றையும் சொல்லி முடித்தபிறகு அவனிடம் மெல்லிதான ஒரு புன்னகை மட்டும் அரும்பியது .வழக்கமாகப் பெண்களின் இதழ்களில் மட்டுமே காணக்கூடிய கேலிப்புன்னகை அது;அந்தப் புன்னகையை ஒரு ஆணின் முகத்தில் காண்பது சகிக்க முடியாததாக இருந்தது.அதே புன்னகையைத் தொடர்ச்சியாகத் தன்னிடம் தவழ விட்டபடி சமரேஷ் பேசினான்.
“கசாப்புக்காரங்க நாங்க இல்லே …..அது நீதான்”
“என்னது நானா”
“ஆமாம்…நீயேதான்…..! நீங்க எல்லாப் பெண்களுமேதான். நீ பெத்த குழந்தை அப்படி உடம்பு சரியில்லாம அழுதுக்கிட்டிருந்தபோது கூட நீ அதை கவனிக்காம இருந்ததுக்குக் காரணம் மத்த பெண்கள் உன்னைப்பத்திப்பேசறதையும் திட்டறதையும் உன்னாலே தாங்கிக்க முடியாததனாலேதான். பெண்களான நீங்க எதை வேணும்னாலும் பொறுத்துக்குவீங்க. கண்ணுக்கு எதிரிலே சொந்தக்குழந்தை கஷ்டப்படறதைக்கூடப் பொறுத்துக்குவீங்க….ஆனா….மத்தவங்க உங்களை வையறதையும் பரிகாசமாப் பேசறதையும் மட்டும் உங்களாலே தாங்கிக்க முடியாது. அன்னிக்கு அவங்க பேசின கொடூரமான வார்த்தைகளைக் காதிலேயே போட்டுக்காம…..வீட்டு வேலையை விட்டுட்டு வந்து உன் குழந்தையை மட்டுமே நீ கவனிச்சிருந்தியானா….அதுக்காக உன்னை யாராவது தூக்கிலேயா போட்டிருப்பாங்க? ஏதோ கொஞ்ச நாள் , கொஞ்ச நேரம் கத்தியிருப்பாங்க…சபிக்கக்கூட செஞ்சிருப்பாங்க.
ஆனா….அதனாலே என்ன ? உன்னோட குழந்தைக்காக அந்தக்கஷ்டத்தை உன்னாலே பொறுமையாய்த் தாங்கிக்கிட்டிருக்க முடியாதா? ஆனா….நீ அப்படி செய்யமாட்டே….! எதுக்காக செய்யணும்? குடும்பப்பெண்ங்கிற பெருமைக்காக……தியாகிப்பட்டத்துக்காக உன்னோட குழந்தையையே கூட நீ காவு கொடுத்திடுவே. ஆனா….உனக்குப்பிரியமான ஒருத்தரோட நல்லதுக்காக எல்லா இடைஞ்சல்களையும் தாங்கிக்கிட்டு எதிர்த்து சண்டை போடற துணிச்சல் மட்டும் உனக்கு வராது. புருஷனையும் குழந்தையையும் விட தங்களோட சொந்தப்பெருமையும் கௌரவமும் மட்டும்தான் ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமானதா இருக்கு. இந்தப்பெண்கள்தான் எவ்வளவு சுயநலவாதிகளா இருக்காங்க….? தங்களைத் தவிர வேற யாரையுமே அவங்களாலே அன்பு செய்யவும் முடியாது, தங்களோட பிரியத்தைக்கொடுக்கவும் முடியாது’’
ஒரு துண்டை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான் சமரேஷ். திகைத்துப்போனவளாய் அவன் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தாள் கமலா.
தன்னை நியாயப்படுத்திக்கொள்வதற்காக – மிகுந்த கவனம் எடுத்து அவள் கட்டியிருந்த கோட்டைக்குக் கடைசியில் இப்படி ஒரு முடிவா நேர வேண்டும்..?
ஒரே அடியில் அதைத் தரை மட்டமாக்கித் தகர்த்துப்போட்டு விட்டான் சமரேஷ். செங்கல்லால் கட்டப்பட்ட வீட்டைப்போல இல்லாமல் சீட்டுக்கட்டு வீட்டைப்போல அது குலைந்து போய்விட்டது. அந்த சீட்டுக்களுக்குக் கல்லைப்போன்ற வலிமை இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டிருந்த அவள் அவற்றை வைத்தே உணர்ச்சிகளால் ஆன ஒரு சுவரையும் வேறு எழுப்பியிருந்தாள்…..ஆனால்….எல்லாமே இப்படி சரிந்து விழுவதற்குத்தானா? என்ன கேவலம் இது…..எத்தனை துன்பகரமானது இது..?
தன்னுடைய நோயாளிக்குழந்தைக்கு வஞ்சகம் செய்தவள் அவள்….! அவனை சாவை நோக்கித் தள்ளியவள் அவள்….! தன் சுயநலமான நடத்தையால் நடந்த எல்லாவற்றுக்குமே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டியவள் அவள்…! இவ்வளவையும் வைத்துக்கொண்டு தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக அவள் முறையிட்டபோது சமரேஷ் அவளைக் குற்றவாளியாக்கித் தூற்றி விட்டுப்போய் விட்டான்….
நன்றி; சிறுகதையின் மொழிபெயர்ப்பை வெளியிட்ட சொல்வனம் இணைய இதழுக்கு [115]
[SOURCE THE MATCH BOX-SELECTED STORIES OF ASHA PURNA DEVI,TRANSLATED BY MONABI MITRA -RUPA AND CO., N.DELHI] 
தொடர்புடைய இடுகைகள்

17.12.14

நிலாமுற்றத்தில்......

கோவையிலுள்ள பி எஸ் ஜி கலைக்கல்லூரியில் விடுதி மாணவர்களுக்காக வாரம் ஒரு முறை நடத்தப்படும் நிலாமுற்றம் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நேற்று மாலை சென்றிருந்தேன். தஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் இனிய பணி...

விடுதியில்தங்கும் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஆர்வமுள்ளோர் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வு என்பதால் வந்திருந்த மாணவ மாணவிகள் எல்லோருமே[கிட்டத்தட்ட நூறுபேர் இருக்கலாம்]மிகுந்த ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் உரையைக்கேட்டதோடு ஆழமான பல வினாக்களையும்  முன் வைத்தது ஆச்சரியப்படுத்தியது;வளரும் தலைமுறையின் படிப்பார்வம் சமூக அக்கறை ஆகியவற்றின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.[ஆனால் அவர்களில் தமிழ்மாணவர் ஒருவர் கூட இல்லை என்பதில் மனம் கனக்கவும் செய்தது]

சிறப்பு விருந்தினரின் உரையோடு மட்டுமல்லாமல் மாணவர்களில் ஒருவரின் படைப்பை அரங்கேற்றல்,பொது அறிவு வினா விடை,சங்க சித்திரமாய் ஒரு பாடலை விளக்கம் செய்தல்,குறள் விளக்கம் ஆகிய இளையோரின் பங்கேற்புக்கும் இடம் தருகிறது நிலாமுற்றம். நேற்று காலை நடந்த தாலிபானிய தாக்குதலை வீதிநாடக பாணியில் பத்தே நிமிடங்களில் பேராசிரியர் ராமராஜின் துணையோடு மாணவர்கள் நடித்துக் காட்டியது நெஞ்சை நெகிழ வைத்தது,

மாதம் ஒருமுறை இலக்கியக்கூட்டம் நடத்தவே பல அமைப்புக்களும் திணறிக்கொண்டிருக்கும் சூழலில் எதிர்காலத் தலைமுறையின் பல்துறை வளர்ச்சியைக்கருத்தில் கொண்டு வாரந்தோறும் அரங்கேறி வரும் நிலாமுற்றம் நிகழ்வு மிகப்பல ஆண்டுகளாக இந்தக்கல்லூரியில் நடைபெற்று வருகிறது என்பதை அறிந்தபோது பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்.நாஞ்சில்நாடன் போன்ற படைப்பாளிகள் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்கள்.

ஆசிரியப்பணியை ஒரு தொழிலாக மட்டுமே கருதி விடாமல்....மிகுந்த ஈடுபாட்டோடும் இளைய தலைமுறை மீது கொண்ட மெய்யான கரிசனத்தோடும் இதை முன்னெடுத்துச்செய்து வரும் பேராசிரியர் ராமராஜ் போன்றவர்கள் இப்போதும் இருப்பதாலேயே - என்னால் இன்னமும் கூட பேராசிரியர் , முன்னாள் பேராசிரியர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள முடிகிறது...
பேராசிரியர் ராமராஜ்,மாணவப்பொறுப்பாளர் மற்றும் நான்

16.12.14

யாதுமாகி- மேலும் சில பதிவுகள்

 பாவண்ணன்
மரிக்கொழுந்துகளையும் மலர்களையும் மாற்றி மாற்றி வைத்துக் கட்டிவைத்த பூமாலைபோல, செறிவான மைய அனுபவங்களை முன்னும் பின்னுமாக இணைத்திருப்பதால் இறந்த காலமும் நிகழ்காலமும் தனித்தனி அத்தியாயங்களாக இணைந்துகொள்கின்றன. கல்வியும் விவேகமும் ஒருவருடைய வாழ்க்கையின் தரத்தையும் தகுதியையும் ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்துக்கு மாற்றி வைத்துவிடும் தன்மை கொண்டவை. சிக்கலான சூழல்களில், அவற்றை அவர் அடைந்த விதத்தில் பெருங்கதை விரிகிறது.யாதுமாகிநின்றாய் காளிஎன்பது பாரதியின்வரி. காளி ஆளுமையாக நிற்பதற்குக் காரணம், அவள் யாதுமாக நிற்பதுதான்.

தேவி என்னும் சிறுமி ஓர் ஆளுமையாக உருவாகி நிலைகொள்ளும் விதத்தை படிப்பவர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதியும் விதமாக தீட்டியுள்ள கோட்டுச் சித்திரத்தை என்னால் முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. வழக்கமாக இத்தகு ஆளுமைகளை நிஜ வாழ்வில் காணும்போது மிகவும் நெகிழ்ந்து, தெய்வத்தைப் பார்க்கும் பக்தனைப்போல கெளரவமாக தள்ளியிருந்து பார்த்துவிட்டுச் செல்வேன். எனக்குத் தெரிந்த பலரிடமும் அந்த ஆளுமையைப் பற்றிப் பகிர்ந்துகொள்வேன். ‘யாதுமாகி’ விவரிக்கும் அன்னை ஆளுமையை எழுத்தின் வழியாக என்னால் முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது.
 பாவண்ணன்
ஜெயமோகன்
ஜெயகாந்தனின் யுகசந்தியை இக்கதை நினைவூட்டுகிறது. அக்கதையின் மிக முக்கியமான படைப்பம்சம் ஜெயகாந்தன் அதற்குச்சூட்டிய தலைப்பு. யுகசந்திப்புப் புள்ளியின் பிரச்சினைகள் அவை என அவர் கண்டடைந்த தரிசனம் முக்கியமானது. ஒரு காலகட்டம் சென்று மறைய இன்னொன்று உருவாகி வரும் பொழுது. அதன் இடுக்கில் மாட்டிக்கொண்ட மானுட உயிர்களின் வலியும் தனிமையும். இந்நாவலில் மூன்று தலைமுறைகள் வழியாக காட்டப்படுவது அந்த யுகசந்திதான். அதன் முதல் களப்பலி தேவி. அடுத்து அவள் மகள்.மூன்றாம் தலைமுறை அவ்விரு தலைமுறையின் துயரை உண்டு, அவர்களை மிதித்துத் தாண்டிவிடுகிறது

இந்நாவலில் அவர்களுக்கு நிகழ்பவற்றை ஆணாதிக்கச் சமூகத்தின் கொடுமைகள் என்றோ ஆண்திமிரின் விளைவுகள் என்றோ சொல்லிவிடலாம். ஆனால் அவை சென்றயுகத்தின் எடை என்ற புரிதலே மேலும் வலுவான சித்திரத்தை அளிப்பது. 

அந்த எடையை இப்பெண்கள் எதிர்கொள்ளும் விதம் மகத்தானது. கரும்பாறையை மெல்ல மெல்ல தளிரும் வேரும் கொண்டு பிளந்து உடைக்கும் செடிபோல. நட்பு வேராகவும் கல்வி இலைகளாகவும் இருக்கிறதெனப்படுகிறது. 

ஆஷாபூர்ணாதேவியின் மூன்று தொடர்நாவல்கள் இந்திய இலக்கியத்தில் சாதனைகள் என்று சொல்லப்படுகின்றன. பிரதமபிரதிசுருதி, சுபர்ணலதா பகுள் கி ககானி. அவை இதேபோல நூற்றாண்டின் எடையை தாங்கி மீண்ட மூன்றுதலைமுறைப்பெண்களின் கதைகளைச் சொல்கின்றன. இந்நாவல் இன்னும் விரிந்திருக்கலாம். இன்னும் ஆழ்ந்தும் சென்றிருக்கலாம். ஆனால் இந்த நேர்மை மிதத்தன்மை காரணமாகவே நாம் வாசித்துள்ள பிறநாவல்களுடன் இணைந்து விரியும் தன்மை கொண்டிருக்கிறது.
ஜெயமோகன்


14.12.14

யாதுமாகி- அணிந்துரை



[யாதுமாகி நாவலுக்கு எழுத்தாளர் காவேரி அவர்கள் எழுதிய அணிந்துரையின் சில பகுதிகள்]
’’முன்னோக்கி ஓடும் கங்கை’’-

எழுத்தாளர்,
புது தில்லி


‘யாதுமாகி’நாவலின் சிறப்பான அம்சங்களில் ஒன்று அதன் அமைப்பு.  நேர்கோட்டு எழுத்தைத் தவிர்த்து முன்னும் பின்னுமாய்ச் செல்வதால் கடந்த கால சம்பவங்களைப் புதிய அநுபவ முதிர்ச்சியுடன் பின்பார்வையிட அது உதவுகிறது. 

தேவியின் மகள் சாருவின் மூலம் தற்கூற்றாக சொல்லப்படும் இந்த நாவலில், தாய் பற்றி எழுதும்போது இயற்கையாக வரும் நெருக்கம் ,அதே வேளையில் அவரது வாழ்க்கையை சற்று விலகி நின்றும் பார்வையிடும் திறம் இவை இரண்டும் சேர்ந்து நாவலுக்கு ஒரு முழுமையை அளிக்கின்றன.இதனாலும் தேவியின் உருவ அமைப்பு இன்னும் கூர்மையாகிறது.


'தேவி' என்ற தனித்துவம் கொண்ட பெண் தனக்கான பாதையைத் தானே வகுத்துக்கொண்டு, தன் வாழ்க்கையைத் தானே எழுதிக் கொள்கிறார்.அவரது வாழ்வை வரலாறு போல அளிக்கிறார் அவர் மகள் சாரு. ஆசிரியர் எம்.ஏ.சுசீலாவின் 'யாதுமாகி' நாவலில் இது தற்கூற்று முறையில் சொல்லப்படுகிறது.

ஆங்கில மஹாகவி வில்லியம் ஷேக்ஸ்பியரைப்பொறுத்தவரை ’நம் விதியை நிர்ணயிப்பது நம் ஆளுமையே ’ - character is destiny . தற்கால உளவியல் அறிஞர்களும் நம் வாழ்வை சீராக அமைத்துக்கொள்ள நம‌க்கு self-actualization [சுய உருவாக்கம் ] என்னும் ஆரோக்கியமான திறமை மிகவும் தேவைப்படுகிறதென்ற ஆலோசனையை வழங்குகிறார்கள்.இவர்கள் குறிப்பிடும் self-actualization தேவிக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது.வாழ்க்கை என்பது நம் தலைவிதியின்படி அதிருஷ்ட/துரதிருஷ்ட திசைகளில் இட்டுச் செல்லும் என்ற சோம்பேறித்தனமான கருத்தை முற்றிலும் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையும்,துணிவும்,முற்போக்கான மனப்பான்மையும்,ஆளுமையும் கொண்டு செயல்படும் தேவிக்கு வாழ்க்கை பல வாயில்களைத் திறந்து கொடுக்கிறது.தனது ஆழமான இலட்சியங்களைத் தன் கொள்கைகளின்ப‌டி நிறைவேற்றிக்கொள்ள தன்னைச் சுற்றி இயங்கி வரும் அநீதிகள்,அசிங்கங்க நடவடிக்கைகள்,கொடூரங்களைக் கடந்து சகதி படிந்த தடாகத்தில் தூய்மையுடன் மலரும் வெண்தாமரை போல அவள் துலங்குகிறாள்.


நாவலின் மையம் தேவி.நாவலின் முதுகுத் தண்டும் தேவி.நாவலின் பொருள்பரப்பும் தேவியே.கல்விக்குத் தடை விதிக்கும் குடும்பம் மற்றும் சமூகத்தின் கொடுமைகளை அசாதாரண வலுவுடன் சகித்தபடி மேலே சுழலும் மீன் மீது மட்டுமே கண்களைப் புதைத்த அர்ச்சுனன் போலக் கல்வியே குறியாக தேவி செயல்படுவது நம்மை சிலிர்க்க வைக்கிறது.

பெண்களுக்குக் கல்வி தேவையில்லை என்ற பிற்போக்கான மனப்பான்மையில் தொய்ந்து கிடந்த இருண்ட சகாப்தம் அது.கூடவே பெண்களுக்குக் கல்வி புகட்டினால் அதன் விளைவாக அவர்கள் விதவைகளாகக்கூடும் என்ற பயமும்,மன வக்கிரமும் தமிழ்நாட்டிலும்,வங்காள மாநிலத்திலும் பரவலாக வேரூன்றியிருந்தது.
குடும்பப் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பது தேவையற்றது என்று கருதும் அதே வேளையில் அவளுடைய வருமானத்தைப் பயன்படுத்திக்கொள்ள வஞ்சக உறவினர்கள் தயங்கியதில்லை....ஆனால் தேவி புத்தகப்படிப்பில் மட்டும் புத்திசாலியில்லை; இயல்பான உலகியல் ஞானம், அதனால் விளைந்த முன்னெச்சரிக்கை உணர்வு - இவை எல்லாவற்றையும் விட முக்கியமான மனோதிடம் ஆகியவை தன் காலில் நின்றாக வேணாடும் என எண்ணும் அவரது சுதந்திர மனப்பான்மைக்கு வலுவூட்டுகின்றன.


தேவியிடம் பூமியின் மேல்பரப்பில் பாதங்கள் நன்றாகப் பதிந்திருக்கும் ஒரு முதிர்ச்சியைக் காண்கிறோம்.கல்வி மட்டும் போதாது என்ற விவேகம் அவரை ஒரு நிலையான நல்ல வேலையைத் தேடத் தூண்டுகிறது. அதற்கு வேண்டிய அயராத உழைப்பையும் அவரிடம் காண்கிறோம்.அதெல்லாம் தன் வாழ்க்கைக்கு எத்தனை தேவை என்பதை 
‘’நான் வாழ்க்கை பூரா என்னோட அண்ணா தம்பிகளோட இருந்துண்டு சமையல்கட்டே கதின்னு காலம் முழுக்க மாவரைச்சுண்டு இருந்திருப்பேன்…’’என்று ஒரே ஒரு வாக்கியத்தில் நறுக்கென்று சொல்லி முடிக்கிறார்.

தனது உயர்ந்த இலட்சியங்களை செயலாக்குவதற்கு வேண்டிய ஒழுங்கு,தெளிவான சிந்தனைகள் மற்றும் மனோதிடம் எல்லாமே தேவியிடம் தாராளமாக வாய்த்திருக்கின்றன.அவளுக்கு நேர்ந்த வாழ்க்கைப்போராட்டங்களில் பாதிப்பங்கு இன்னொரு பெண்ணுக்கு நேர்ந்திருந்தாலும் கூட அவள் நொறுங்கி மடிந்து போயிருப்பாள்.

கதையில் வரும் பாத்திரங்களைப் பொறுத்தவரை நம் மனத்தில் நிலைத்து நிற்பவர்களில் ஒருவர் இளம் விதவைப்பெண்களுக்கு ஒரு புகலிடமாக ஐஸ் ஹவுஸ் விடுதியைத் திறம்பட நடத்தி வந்த சுப்புலட்சுமி அக்கா.தேசம் பாராட்டிய பெண் திலகம்;விதவைப்பெண்களுக்கு ‘சாவித்திரி பாடம்’கற்பிக்கத் துணிந்த அபூர்வப்பிறவி. 

தன்னை முற்றிலும் ஐஸ் ஹவுஸ் விடுதிக்காகவே சமர்ப்பணம் செய்து கொண்ட இன்னுமொரு அபூர்வப் பெண்மணி சுப்புலட்சுமி அக்காவின் சித்தி வாலாம்பாள்.இளம் வயதில் விதவையாகி மற்ற இளம் விதவைகளுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும்  மறுமலர்ச்சியும் தர முன்னிற்பவள்.சுவாரசியமான பேச்சும் நகைச்சுவை உணர்வும் கொண்ட அருமையான ஒரு பாத்திரம் தேவியின் தோழி சில்வியா

மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒருவர் நள்ளிரவில் திடீரென்று கதவைத் தட்டிப் பசியுடன் அடைகளை விழுங்கும் கிட்டு என்ற கிருஷ்ணன்.தேவியை மறுமணம் செய்து கொள்ள ஊக்குவித்த நற்சிந்தனையுடைய உண்மையான நண்பர்.இந்தக்கதாபாத்திரங்கள் அனைவரும் நாவலை வளமாக்குபவர்கள்.

ஆசிரியர் சுசீலாவின் மொழி ஆளுமை மிகச்சிறப்பானது.அந்தணக் குடும்பச்சூழல்,அதற்கென்றே தனிப்பட இருக்கும் நிஷ்டூரம் கலந்த வாய்த் துடுக்குகள், எடக்கான அதிகப்பிரசங்கித்தனமான பேச்சுக்கள் ஆகியவற்றை இவரது மொழி அநாயாசமாகச்சித்தரிக்கிறது.அதே போல மற்ற சாதிகளுக்கு ஏற்றபடியும் ஆசிரியர் மொழியை லாவகமாக மாற்றிக்கொள்வது நாவலுக்கு யதார்த்தமான ஒரு தன்மையைத் தருகிறது.


தோட்டம்,செடிகள்,மலர்கள் ஆகியவற்றின் வருணனையில் ஆசிரியரின் அபார அழகுணர்வு மிளிர்வதைக்காண்கிறோம். தேவிக்குள் புதைந்திருக்கும் இலட்சியங்கள்,உயர்ந்த மதிப்பீடுகள் ஆகிய எல்லவற்றையுமே அவர் சொந்தக்குழந்தைகளைப்போல சிரத்தையுடன் பராமரிக்கும் பூந்தோட்டத்திலும் பார்க்கலாம்.அதை ரசிக்கும் பெண் சாருவின் உரைநடை மணம் பரப்புகிறது.தேவி தன் வீட்டைச் சுற்றி அமைத்துக் கொண்ட தழைந்த தோட்டத்தில் சங்குபுஷ்பம்,நந்தியாவரட்டை,செம்பருத்தி,பவழமல்லி,பிறகு அவருக்கு ரொம்பவும் பிடித்தமான ‍இருட்டில் மயக்கமூட்டும் ரகசியம் போல மடலவிழ்க்கும் நைட்க்வீன் எல்லாமே பூத்துக் குலுங்கும்.
நாவலின் இறுதியில் தேவி உயிர் துறந்த வேளையிலும் ''ஒரு பூ உதிர்வதைப்போல அம்மா உதிர்ந்து போனாள்'' என்று சாருவுக்கு ஒரு மலர்தான் நினைவுக்கு வருகிறது.

வாசகர்களான நமக்கு நிர்மலமாக சலசலத்து ஓடும் நதியை நினைவூட்டுகிறாள் தேவி. சில தருணங்களில் இளம்பெண் தேவியின் குன்றாத உற்சாகத்தையும் கல்வித் தாகத்தையும் கவனித்த அவளது அம்மா பிரமித்துப் போகிறாள்.தன் சகோதரன் தேவியின் மாமா சகுனி போல தேவியின் கல்விக்குத் தடை விதித்தாலும் தேவி வேறு சில உபாயங்களைத் தானே தேடிக்கொள்ளும்போது ''கட்டற்று ஓடிக்கொண்டிருக்கும் காவேரி அந்தச் சின்ன வாய்க்கால்களிலும் கூட வெள்ளமாய்ப் பாய்ந்து போய்க்கொண்டிருக்''கும் காட்சி சட்டென்று அன்னத்திற்கு முன்வருகிறது.பிறகு ரிஷிகேசத்தில் சாரு நாவலின் கடைசி வாக்கியத்தை எழுதி முடிக்கும்போது தேவி போன்ற ஒரு ஒப்பற்ற பெண் கங்கையாகிறாள்.
'' திரும்பிப் பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறாள் கங்கை …..''

நாவலைப்பெற
யாதுமாகி- வம்சி பதிப்பகம்
vamsibooks@yahoo.com
32, Vettavalam Road,
ALC Teacher Training Institute (opp)
Tiruvannamalai,
Tamilnadu - 606601
Phone : 04175 251468



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....