துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.12.15

விஷ்ணுபுரம் விருது விழா-2015
விஷ்ணுபுரம் விழாவின் ஆறாம் ஆண்டு நிகழ்வு, கவிஞர் தேவதச்சனுக்கு விருதளித்து சிறப்புச்செய்தபடி கச்சிதமான திட்டமிடலுடன் நடைபெற்று முடிந்தது.

தேவதச்சன் பற்றிய குறும்படத் திரையிடல்,அவரது கவிதைகள் குறித்து எழுத்தாளர் ஜெயமோகனும் பிற நண்பர்களும் எழுதிய விமரிசனக்கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு ஆகியவை பிறவிருது விழாக்களில்  காண இயலாத - விருது பெற்றவரின் மீது கூடுதல் கவனம் குவிக்கச் செய்யும் சிறப்பான அம்சங்கள்.

பொதுவாக ஒருவரின் நூலுக்குப் பரிசு வழங்கும் விழாக்களில் எவராவது சிலர் நூலைப் பாராட்டிப்பேசுவது மட்டுமே பெரும்பாலும் நிகழும்;அதிலும் பல வேளைகளில் நூலைச்சரியாகப்படிக்காமல் மேடையில் மேலோட்டமாக எதையேனும் சொல்லிவிட்டுப்போவது....,நூலைத் திருப்பிக்கூடப்பார்க்காமல் ஒப்புக்குப்புகழ்ந்து விட்டுத் தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் அந்த அரங்கில் வளவளத்துக்கொண்டிருப்பது இவையே இன்றைய சூழலில் அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பது விருது பெறும் படைப்பாளிக்கு எந்த அளவு வேதனை தருவது என்பதைப்பல விழாக்களிலும்  நான் கவலையோடு கவனித்து வருகிறேன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்  போன்றதொரு தீவிர இலக்கிய அமைப்பின் செயல்பாடுகள் இன்றைய காலகட்டத்தில் எந்த அளவுக்குத் தேவை என்பதை உணர்த்தும் தருணங்கள் அவை.

ஒவ்வொரு ஆண்டுக்குமான  விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருதுகள் மூன்றுமாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு விடுவதோடு எழுத்தாளர் ஜெயமோகனின் தளத்தில் அவரது படைப்புக்கள் குறித்த முழு விவரமும்- நூல்களை எங்கே பெறுவது,இணையத்தில் அவரது படைப்புகள் கிடைக்குமா மற்றும் விருதாளர் சார்ந்து வெளிவந்திருக்கும் விமரிசனக்கட்டுரைகள்,நூல்கள் போன்ற தகவல்கள் முழுமையாகத் தரப்பட்டு விடுகின்றன;அந்தக்கணம் முதல் தீவிர விஷ்ணுபுர இலக்கிய வாசகர்கள்  விருது பெறுபவரின் படைப்புக்குள் தங்களை ஆழ்த்திக்கொள்ளத் தொடங்குவதும்,அவை சார்ந்த  கருத்துப்பரிமாற்றங்களை,விவாதங்களைத் தங்களுக்குள்ளும், ஜெயமோகனுடனும்  தொடங்கி முன்னெடுத்துச் செல்வதும், விமரிசனக் கட்டுரைகளை எழுதுவதும் வேறெந்த முறை சார் நிறுவனங்களிலும் ,இலக்கிய அமைப்புக்களிலும் நிகழாத ஓர் அற்புதம்.இங்கு எவரும் எவரையும் எதற்காகவும் வற்புறுத்துவதில்லை என்பதும் இத்தகைய இலக்கிய அர்ப்பணிப்பு உணர்வு தன்னிச்சையாக முகிழ்க்கிறது என்பதும் அவ்வாறானவர்களே இதன் பெரும்பாலான உறுப்பினர்கள் என்பதும் இந்த நண்பர்களோடு பழகிய அனுபவத்தில் தெளிந்த உண்மைகள். குறிப்பிட்ட வட்டத்துக்குள் சிறை வைக்கும் கல்விக்கூடத் தயாரிப்புக்களான  கட்டுரைகளுக்கும், இயல்பான ஆர்வத்தில் எழுத்தாளனின் ஆன்மாவுக்குள் ஊடுருவி எழுதப்படும் இவ்வாறான கட்டுரைகளுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் ஈடானது.

விருது விழாவுக்கு முந்தைய நாள் தொடங்கி இலக்கிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து விருது பெறும் படைப்பாளியுடனும் வேறு பல படைப்பாளிகளுடனும் கலந்துரையாடி விவாதம் செய்வதற்கான வாய்ப்பை  உருவாக்கித் தரும் அமைப்பாக  விஷ்ணுபுர இலக்கிய வட்டம் செயல்பட்டு வருவதும் பிற விருது விழாக்களிலிருந்து இந்த விழாவை வேறுபடுத்தும் - உயர்த்தும் பிறிதொரு சிறப்பு. படைப்பாளிகளுடனான உரையாடல்களின்போது ஒரு வார்த்தையைக்கூடத் தவற விட்டு விடக்கூடாது என்ற கூர்ந்த கவனத்துடன் இளைஞர்,நடு வயதினர்,மூத்த குடிமக்கள்..[இப்போது பதின்பருவத்தினரும் கூட] எனக்கூட்டம் முழுவதுமே ஏகாக்கிரகசிந்தையோடு கேட்கும் அழகு....பார்க்கத் திகட்டாதது...வேறெங்கும் காணக்கிடைக்காதது.

ஜெயமோகனின் வாசகர்களால் உருவானதுதான் இந்த இலக்கிய வட்டம் என்றாலும் இந்த உரையாடல்களில் பங்கு பெறுவோரில் கணிசமானவர்கள் அவரது வாசகர்களே என்றபோதும் அவரது எழுத்துக்களோடு மட்டுமே நின்று விடாமல் இலக்கியப்பன்முகப்பார்வைகளை   அறிமுகம் செய்து கொள்ளத்துடிக்கும் ஒரு மிகப்பெரிய இலக்கிய இயக்கமாக  -விஷ்ணுபுர இலக்கிய வட்டம் வலுப்பெற்று வளர்ந்து  வருவதற்கு மூலமுதலாக இருப்பது  திரு ஜெயமோகன் அவர்களின் வழிகாட்டுதலே; இலக்கியத்தின் பல்வேறு போக்குகளையும் [தன் போக்குக்கு மாறுபட்ட எதிர்நிலைப்பாடு கொண்டவற்றையும் கூட], அவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்பாளிகளையும் ஆர்வமுள்ள இளைய தலைமுறைக்கு இந்த இலக்கிய வட்டத்தின் வழி  கொண்டு சேர்த்து வருவது அவரது மகத்தான வழிகாட்டல். கல்விக்கூடங்கள் செய்ய வேண்டியதும்,செய்யத் தவறியதுமான ஒரு செயல்பாடு இது.

இவ்வாண்டும் ,  26ஆம் தேதி சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிறு பிற்பகல் வரை கவிஞர் தேவதச்சனோடு தொடர்ச்சியான உரையாடல்கள் நடந்து கொண்டே இருந்தன. இடையிடையே ஜோ டி க்ரூஸ் ,யுவன் சந்திரசேகர்,லட்சுமி மணிவண்ணன் ஆகியோருடனும்.

தேவதச்சனுடன் கலந்துரைஜெயமோகன்,யுவன் சந்திரசேகர்
கலந்துரையில் மிக எளிமையாகவும்  இயல்பாகவும்  எல்லோருடனும் இணைந்து கொண்டு தன் கருத்துக்களை ஆர்ப்பாட்டமின்றி முன் வைத்தார் தேவதச்சன். ஒரு கவிஞன் அல்லது பொதுவாக ஒரு படைப்பாளி என்பவன்  -விஞ்ஞானம் தத்துவம் என எல்லாத் துறைசார்ந்தவையுமான உலகத்தின் அறிவுச்சேமிப்புக்களில்- குறைந்த பட்சம் பாதியளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அவனது படைப்புக்களின் பல அடுக்குகளைத் தர முடியும் என்றும் அவர் கூறியது என்னைப் பெரிதும் ஈர்த்தது.

தமிழின் தனிப்புலவர்களில் ஒருவரான காளமேகப்புலவரே தன் முன்னோடி என்ற தேவதச்சன்,அவரது பகடியும் ஊர் ஊராய்த் திரிந்தலைந்த  அவரது நாடோடித் தன்மையும் தன்னைப்பெரிதும் கவர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

ஆசு கவி , மதுரகவி,சித்திர கவி,வித்தாரகவி என்ற பல வகைக்கவிதை வகைப்பாடுகளைச் சொல்லி சமகால நிகழ்வுகளுக்கு ஏற்ப அவ்வப்போது பிறரின் வேண்டுகோளால் கவி புனைபவர்களை ஆசு கவி என்றும், பிறரைஇன்புறுத்தப்பாடப்படும் திரைப்பாடல்களை மதுரகவி என்றும் தன்னைப்போன்றோர் எழுதும் கவிதைகளை [scholarly poems] வித்தாரகவிதைகள் என்றும் இன்றைய சூழலில் கொள்ளமுடியும் என விளக்கம் தந்தார். நாவல் என்பது முழுக்கமுழுக்க கதையோடு சம்பந்தம் கொண்ட  ஓர் உரை வடிவம் என்பதால் அதன் இடையே கவித்துவம்  வர வேண்டியதில்லை என்று அவர்கூறியதை அவரது நிலைப்பாடு அது என்று மட்டுமே கொள்ளமுடிந்தது.

ஞாயிறு மதியம் தேவதச்சன் கவிதைகள் பற்றியும் அவரோடான தன் நட்பு பற்றியும் யுவன் சந்திரசேகர் உரையாடிக்கொண்டிருந்தார்.அந்த உரையாடலில் இடம் பெறாத பல தனிப்பட்ட அனுபவங்களை விழாமேடையில் மிகுந்த மனநெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் யுவன்.அறச்சீற்றம் கலந்த நாஞ்சில் நாடனின் உரை,கவிதைக்கலையின் நுட்பங்கள் குறித்த ஜெயமோகனின் சொற்பொழிவு,மன உருக்கத்தோடு கூடிய தேவதச்சனின் ஏற்புரை என மிகத் தரமான ஓர் இலக்கிய விழாஎவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒருமுன்னுதாரணமாக விஷ்ணுபுரம் விருது விழா2015 நடந்தேறியது. இதன் பின்னணியிலும் முன்னரங்கிலும் பங்கு கொண்டு உழைத்த இலக்கிய வட்ட நண்பர்கள் அத்தனை பேரின் உழைப்பும் தீவிர இலக்கிய வேள்வி ஒன்றுக்கான அர்ப்பணிப்பு என்றே சொல்ல வேண்டும்.
விஷ்ணுபுர இலக்கிய வட்டம் 

வானவன்மாதேவி,வல்லபி சகோதரிகளுடன் நான்

அமர்வுகளின்போது.....

விஷ்ணுபுரம் விருது விழா-2013  

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....