துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

9.4.15

ஜே கே என்ற கிரியா ஊக்கி-1


என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பேராசான் ஜெயகாந்தன் என்னும் ஜே கே இனி இல்லை என்பதை நினைக்கவே கனக்கிறது.

ஜே கேயின் நூலனத்தும் என் அலமாரிக்குள்ளும் மனதுக்குள்ளும் சேமிக்கப்பட்டிருக்கும் வரை அவர் சார்ந்த நினைவுகள் அனைத்தும்  என்னுள் இருக்கும் வரை ஜே கே என்னிலிருந்து எப்படி எங்கே போய்விட முடியும் என்று எண்ணியே ஆறுதல் கொள்கிறேன்....

என் தமிழ்க்காதல் வளர்ந்து வந்த பதின் பருவத்தில் எழுதுகோலை ஏந்தும் ஆர்வத்தை என்னுள் கிளர்த்திய முதல் ஆசான் பாரதி...

அந்த பாரதியைத் தன் ஆசானாக வரித்துக்கொண்டிருந்த ஜே கே
’60களின் இறுதியில் என் சமகால ஆசானாக எனக்குள் சிம்மாசனமிட்டு தன் ஸ்தானத்தை வலுவாக நிலைநிறுத்திக்கொண்டார்..

ஜே கேக்கு முன்னும் பின்னும் எத்தனையோ எழுத்தாளர்களைப்படித்திருந்தாலும் இன்னும் படித்துக்கொண்டிருந்தாலும் ஜே கே  மீது நான் கொண்டிருக்கும் அன்பும் ஆதரிசமும் மிக மிக விசேடமானது;
என் உள்மனம் மட்டுமே உணரக்கூடிய அதை விண்டு சொல்வது வீண்.

ஜெயகாந்தனை நான் ஜே கே என்று சொல்லும்போதெல்லாம் ஜே கிருஷ்ணமூர்த்தியைக் குறிப்பிடும் வார்த்தையல்லவா அது என்று கேட்ட  நண்பர்கள் உண்டு..
ஆனால் என் ஜே கே  , என்றென்றும் ஜெயகாந்தன் ஒருவர்தான்;
அவரது எழுத்துக்கள் கற்றுத் தராத ஆன்மீகத்தை,சமூகஅக்கறையை,மானுட நேயத்தை,மனித மன நுட்பங்களை வேறெந்த ஆன்மீக குருவோ நூலோ ஒருபோதும் எனக்குக்கற்பித்ததில்லை;அது சாத்தியமும் இல்லை.

எங்கோ இருந்தபடி என்னை இயக்கிய  தொலைதூரத்து துரோணராக அவரும்..
எட்டாத எங்கிருந்தோ அவரை அண்ணாந்து வியந்தபடி எழுத்தைக் கற்க முயன்று கொண்டிருந்த ஏகலைவியாக நானும் இருந்த காலம் மாறி அந்த சிம்மத்தை நேரில் காணும் - பேசும்-  உரையாடும் .பேறும் வாழ்வில்  வாய்த்ததே என்று அந்தத் தருணங்களை  இப்போது கண்பனிக்க நினைவு கூர்கிறேன்....

என் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘புதிய பிரவேசங்க’ளை 19994இல் வெளியிட்டபோது
‘’மனித நேயத்தின் சிகரம் தொட்ட ஜெயகாந்தனுக்கு’’
என்ற சொற்களோடு அவருக்கே சமர்ப்பணம் செய்திருந்தேன்.

இன்றும் என்றும் இனி நான் எழுதும் எல்லா வார்த்தைகளும் அவருக்கே சமர்ப்பணமாகட்டும்...

ஜே கேயின் இறுதிப்பயணம் தொடங்கும் இந்த வேளையில்
நினைவுகள் சுமந்த மனம் களைத்திருக்கிறது....
அவரோடான நினைவுகளையும் அவர் படைப்புச்சார்ந்த நினைவுகளையும் அடுத்தடுத்துத் தொடர் பதிவுகளாகப் பகிர எண்ணியபடி ,
நண்பர் ரவி சுப்பிரமணியன் எடுத்திருக்கும்
’’எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக்கலைஞன்’’ என்ற ஜே கே பற்றிய ஆவணப்படத்தை நண்பர்களோடு பகிர்ந்தபடி அந்த மகா கலைஞனுக்குக் கண்ணீரோடு விடை தருகிறேன்...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....