துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

14.8.15

எழுத்தென்னும் சிற்றகல்...


நான் செய்து வரும் தஸ்தயெவ்ஸ்கி மொழிபெயர்ப்பு வரிசையில்

                                                குற்றமும் தண்டனையும்,


                                                               அசடன்

என்னும் இரு பெரும் நாவல்கள் முன்பு வெளிவந்தன.

தற்போது  மூன்றாவதாக 
‘’'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'’’
என்னும் குறுங்கதை மொழியாக்கத் தொகுப்பு நற்றிணை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது.

அதற்கு நான் எழுதியுள்ள முன்னுரை......

எழுத்தென்னும் சிற்றகல்...

மனிதமனங்களின் ஆழங்காண முடியாத இருட்டு மூலைகளை அவற்றுள் பொதிந்திருக்கும் மகத்துவங்களை எழுத்தென்னும் சிற்றகலால் துலக்கி அவற்றின் மீது மனித நேய ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சிய உலக இலக்கியப் பெரும்படைப்பாளி, ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி. அவரது ஒவ்வொரு படைப்பையும் படிக்க நேரும் கணமும்,அதை விட நுண்மையாய் வாசித்து அதைத் தமிழில் பெயர்க்கும் கணமும் என் வாழ்வுக்கு அர்த்தம் சேர்ப்பவை; என் அகத்தை விசாலப்படுத்தி அகந்தையைச் சிதைத்துப்போடுபவை. 

தஸ்தயெவ்ஸ்கியின் மொழிபெயர்ப்பில் முனையும்போது அவரது எழுத்துக்குள் அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவர் பெற்ற அகக்காட்சிகளை அவர் உணர்த்த விரும்பிய செய்திகளை அவரது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காணமுடிவதும் ஓர் அரிய அனுபவம். திரும்பத் திரும்ப அவரது வெவ்வேறு ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் நான் என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கான காரணம் அதுவே. தனது மிகப்பெரிய நாவல்களில் மட்டுமன்றி சிறுகதைகள்,குறுநாவல்கள் ஆகியவற்றின் வழியாகவும் கூட சாமானியர்களின் வாழ்விலிருந்து நாம் பெறக்கூடிய மாபெரும் தரிசனங்களை அவர் நமக்குக்காட்சிப்படுத்தி விட்டுப்போயிருக்கிறார். அத்தகைய சில படைப்புக்களை என் ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பில் தொகுப்பாக்கி வெளியிடுவதில் குறிப்பான ஆர்வம் காட்டி என்னையும் அச்செயலில் விரைவாக முனைவதற்குத் தூண்டிய நண்பர் திரு யுகன் அவர்களுக்கும் இந்நூலை சிறப்பாக வெளியிடும் அவரது நற்றிணை பதிப்பகத்தார்க்கும் என் நன்றி

13.8.15

'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'-புதிய நூல்




நான் ஆங்கில வழி மொழியாக்கம் செய்திருக்கும் தஸ்தயெவ்ஸ்கியின் குறும் படைப்புக்கள் சிலவற்றை
'தஸ்தயெவ்ஸ்கி கதைகள்'என்னும் தலைப்பில் நூலாகத் தொகுத்து சென்னையிலுள்ள நற்றிணை பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

இவ்வாண்டு வெளியாகி இருக்கும் என் புதிய நூல் இது.

நூலில் தஸ்தயெவ்ஸ்கியின் 
HONEST THIEF,
GENTLE CREATURE,
CHRISTMAS TREE AND A WEDDING
ஆகிய மூன்று கதைகளின் மொழியாக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல் இரண்டும் கிட்டத்தட்ட குறு நாவல்கள்,
மூன்றாவது படைப்பு சிறுகதை

அதன் இணைப்பு
கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும்
http://www.masusila.com/2012/03/1_21.html
http://www.masusila.com/2012/03/2_21.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....