துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.4.16

பி.சுசீலா- ஆன்மா தொடும் அற்புதம்இளமைக்காலத்தில் ஒன்றின் மீது  பிடிப்பும் பற்றும் ஏற்பட்டு விட்டால்..தொடர்ந்து பல மாற்றங்கள் வளர்ச்சிகள் ஆகியவற்றுக்குப் பழகிப்போய் அவற்றை ரசிக்கத் தொடங்கி விட்டாலும் நெஞ்சில் நிலைத்துப்போன பழைய ரசனைகள் மட்டுமே  இனிமையான சுகமான நாஸ்டால்ஜிக் நினைவுகளைக் கிளர்த்திக்கொண்டிருக்கும்.

சுசீலாவின் பாடல்களோடு எனக்குள்ள பந்தம் நான் உயர்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது தொடங்கியது; மயில் வாகனன்,
கே எஸ் ராஜா போன்றோர் அறிவிப்பாளர்களாக இருந்த இலங்கை வானொலிக்குக் கிட்டத்தட்ட நான் ஒரு வெறி பிடித்த ரசிகையாகவே ஆகிப்போயிருந்த காலகட்டத்தில் அது மேலும் வலுப்பெற்றது.

மாலைப்பொழுதின் மயக்கத்திலே  தொடங்கி கங்கை அமரனோடு பாடும் சோலைப் புஷ்பங்களே வரை என்னை ஈர்க்காத சுசீலாவின் பாடல் எதுவுமே இல்லை என்பதால் இங்கே பட்டியல் தர நான் முயலப்போவதில்லை.

என் பதின் பருவத்தில் முதன் முதலில் நான் மனம் கலந்து ரசித்த சுசீலாவின் பாடல் ‘நான் பேச நினைப்பதெல்லாம்..’’[பாலும் பழமும்]. அது உண்மையான காதலின் மகத்துவத்தை உணரச்செய்தபடி வெகு காலம் என்னை ஒரு கற்பனை மயக்கத்தில் ஆழ்த்தி வைத்திருந்தது. அதுபோல....’தண்ணிலவு தேனிறைக்க’ வும் என் நெஞ்சை மயிற்பீலியால் வருடிக்கொண்டிருந்தது.

‘பண்பாடும் பறவையே என்ன தூக்கம்’ [அரச கட்டளை], சங்கே முழங்கு பாடலில் [கலங்கரை விளக்கம்] ஒலிக்கும் சுசீலாவின் குரல் -’’திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்’’ என்ற பாரதிதாசனின் வரிகள்- இவையெல்லாம் உரிமைக்காகப்போரிடும் உத்வேகத்தை என்னுள் வலுப்படுத்தியது.

கதவுகள் இல்லாத காட்டுராணி கோட்டையும் கட்டுப்பாடு இல்லாத சிட்டுக்குருவி பாடலும் [சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு-சவாலே சமாளி] ’ஒரு விடுதலை பெற்ற உல்லாச உணர்வுக்கு இப்போதும் கூட என்னை இட்டுச்சென்றுகொண்டிருப்பவை.

‘’மாலைப்பொழுதின்’’ பாடலை சுசீலா தொடங்கும் உச்ச ஸ்தாயியும்,
 நெஞ்சம் மறப்பதில்லை பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் அவரது ஹம்மிங்கும் அதில் அவர் கொடுக்கும் அசைவுகளும்  ’’நாளாம் நாளாம் திருநாளாம்’’பாடலின் இடைஇடையே அவர் தரும் ஹம்மிங்களும் எவராலும் தொட முடியாத உச்சங்கள்....

தமிழ்க்காதலுக்கு நான் ஆட்பட்டபின் இதுவரை எத்தனை பாடல்கள் கேட்டிருந்தாலும் சுசீலாவின் குரலில் ஒலிக்கும் ‘’தமிழுக்கும் அமுதென்று பேர்’’ [பஞ்ச வர்ணக்கிளி] பாடலைக்கேட்ட மாத்திரத்தில் என் நாடி நரம்புகள் தானாகவே சிலிர்த்துக்கொண்டு விடும்...
பின்னாளில் அவர் பாடிய ’’அமுதே தமிழே’’பாடலும்தான்!

நான் தாயானபோதும் பிறகு பாட்டியானபோதும் தூளி ஆட்டிக்கொண்டே குழந்தைகளுக்குப் பாடும் தாலாட்டுக்கள் சுசீலாவின் ’’மலர்ந்தும் மலராத’’வும்[பாசமலர்] ’’அத்தை மடி மெத்தையடி’’யும்[கற்பகம்] மட்டும்தான்...!! விடிய விடிய குழந்தைகள் தூங்காமல் இருந்தாலும் கூடத் திரும்பத் திரும்ப இந்த இரண்டு  பாட்டுக்களை மட்டுமே நான் தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பேன். [அது அவர்களுக்காகப்பாடியதா அல்லது எனக்கு நானே பாடிக்கொண்டேனா என்பது என்னவோ இன்னும் ஐயம்தான்]

மலர்ந்தும் மலராத பாடலில் ’சிறகில் எனை மூடி அருமை மகள் போல’என்ற வரிகளையும்....’’என்ன நினைத்து என்னை அழைத்தாயோ..’’,’’சொன்னது நீதானா’’ [நெஞ்சில் ஓர் ஆலயம்] போன்ற பல பாடல்களில் தானே அந்த அனுபவத்துக்கு ஆட்பட்டது போல சுசீலா பாடும் பாணி நம்மைக்கரைத்து விழிநீரைப்பெருகச்செய்யக்கூடியது.

சுசீலா 17000க்கு மேற்பட்ட பாடல்களைப்பாடி இன்று கின்னஸில் இடம் பெற்றிருக்கிறார்.அவருக்கு வாழ்த்துச்சொல்ல வாய்த்தது இசை ரசிகர்களின்
நற்பேறு. அதையும் விட மிகச்சிறந்த விருது 60 ஆண்டுகளுக்கு மேலும் [1950இல் அவர் முதல் பாடல் பாடியதாக இன்று படித்தேன்] தொடர்ந்து அவர் பாடல்களைக்கேட்டு வரும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றிருப்பதே....!

பாடலுக்கான கதைச்சூழலை மனதில் உள் வாங்கி ஊன் கலந்து  உயிர் கலந்து  அதே உணர்வுகளைப்பாடலோடு ஒன்ற விட்டபடி ஒவ்வொரு சொல்லும் தெளிவாய்ப்போய்ச் சேரும்படி பாடியிருப்பதே காலம் கடந்தும்  சுசீலா பாராட்டப்படக்காரணம். இன்றைய இளம் பாடகிகள் நினைவில் இருத்த வேண்டிய செய்தி இது.

கின்னஸ் சான்றுடன் சுசீலா
 பத்மபூஷண் விருது வாங்க பி சுசீலா தில்லி வந்திருந்தபோது தில்லி தமிழ்ச்சங்கம் அவருக்குப் பாராட்டு விழா நடத்தியது.  அந்தக் காலகட்டத்தில் தில்லியில் வசித்த நானும் அதில் கலந்து கொண்டேன். அருகில் சென்று கை குலுக்கப் பேராவல் இருந்தும் பெருங்கூட்டத்திடையே செல்ல ஏதோ ஒரு கூச்சம் தடுக்க விலகி நின்றேன். என் ஆர்வத்தைப்புரிந்து கொண்ட என் தோழி ஒருவர் தமிழ்ச்சங்கக்கட்டிட முகப்பில் என்னை நிறுத்தி வைத்து  பி சுசீலா கார் ஏற வந்த கடைசி நிமிடத்தில் அவர்கள் மீது நான் கொண்டுள்ள மதிப்பைக்கூற அவரும் அதை ஏற்று உடன் காரை விட்டு இறங்கி என்னோடு கை குலுக்கி நான் தந்த திருக்குறளைக்கண்ணில் ஒற்றி மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்.வாழ்வில் நான் பரவசம் கொண்ட கணங்களில் அதுவும் ஒன்று !!

இன்றும் சுசீலாவின் பாடலைக் கேட்காமல் எனக்கு ஒருநாளும் கழிவதில்லை.

சுசீலாவைப்போலவே இளமைக்காலம் முதல்  என் விருப்பத்துக்குரியவராக இருந்து வரும் நடிகை சரோஜாதேவிக்கு சுசீலா பாடிய ‘’காதல் சிறகைக் காற்றினில் விரித்து’’பாடலை [சுசீலா பாடல்களில் என் முதல் விருப்பமான]
 - ஆன்மாவைத் தொடும் அற்புதமான இந்தப் பாடலை - வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....