துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.6.16

தற்கொலை -ஒரு பகிர்வு



இன்று ஒரு துக்க நாள்...

அழுகிய சமூகத்தின் கொடூரமான வக்கிரப்பிடியில் கருகிய, இரு மலர்களாய் ஸ்வாதியும் வினுப்பிரியாவும் முன் நிற்க .... காலை முதல் ஏதும் செய்யத் தோன்றாமல் மரத்துக்கிடக்கிறது மனம்;உறைந்து நிற்கின்றன உணர்வுகள். 

கொலை,தற்கொலை இவற்றைவிடவும்கொடூரம்; ஸ்வாதியை நெட்டைமரங்களெனப் பல மணிகள் , கண்ணெடுக்காமல்  விட்டுச்சென்றதும்  எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கும் குரூர வக்கிரமாய் வினுபிரியாவின்   தந்தையிடம் செல்லிடப்பேசியை பேரம் பேசிய காவலரின் அற்பத்தனமுமே.

ஒரு கொலை; ஒரு தற்கொலை![தினமணி தலையங்கம்]

.’’’ஊமை சனங்களடி!’’என்ற பாரதிவாக்கில்தான் எத்தனை உள்ளொளி !

நான் கல்லூரிப் பேராசிரியராகப்பணியாற்றிய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி இறுதி [ இளங்கலை இறுதி வகுப்பு முதல் முனைவர்பட்டம் வரை ] முடிக்கும் மாணவியரைத் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன் என்ற வாக்குறுதியைக் கல்லூரியின் கடைசி நாளன்று பெற்ற பின்பே  அவர்களை  வழியனுப்பி வைப்பது என் வழக்கம்.’’வாழ்வின் ஏதோ  ஒரு கட்டத்தில் தோன்றக்கூடும் அந்தவகை எதிர்மறைச்சிந்தனையின்போது ஒரே ஒரு நொடி  கண் மூடி  வகுப்பறையில் நான் கேட்ட வரத்தை நினைவில் கொள்ளுங்கள்’’போதும்’’ என்பேன். வகுப்பேநெகிழ்ந்து கண்ணில்நீர் சொரிந்து நிற்கும் புனிதக் கணம் அது. அவர்கள் அந்தத் தூய கணத்தை நினைவுகூரும் அந்த ஒரு நொடிக்குள் மரணத்தின் பாதையிலிருந்து, அவர்களின் மனம் விலகி விடக்கூடும் என்ற எண்ணமும்  குறைந்த பட்சம்  என் மீது வைத்திருக்கும் அன்பினால் அவர்கள் அதை ஏற்கக்கூடும்  என்னும் நம்பிக்கையுமே என்னை அதை நோக்கி இயக்கியவை.   சமூக ஊடகங்கள் அதிகம் மலிந்து போகாத அந்தக்காலகட்டத்திலேயே ,ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாணவியின் தற்கொலை ஏதேனும் ஒரு காரணத்துக்காகநிகழ்ந்து, ஒவ்வொரு மலராய் உதிரும் சோகத்தை மௌனசாட்சியாகக் கண்டு மனம் நொந்த நான் அந்தப்பணியை ஒரு மாறாக்கடமையாகவே செய்து வந்தேன்... இப்போதும் அது குறித்து மாணவியர் கடிதங்கள் எனக்கு வருவதுண்டு,
அதனாலேயே மனம் மிக வலிக்கிறது...

இது தொடர்பாக நான் பேசுவதை விடவும்  ,இது தொடர்பாக இன்று விடியலில் என் வாசகி  ஒருவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சலைப்பகிர்வது மேலும் பொருத்தமாக இருக்கக்கூடும்.என்று எனக்குப்படுகிறது. 

அடுத்த தலைமுறையின் சிந்தனை  வேகம் இன்னும் கூட வீரியம் மிக்கது என்ற எண்ணத்தோடு அந்தப்பகிர்வு...

பள்ளி மாணவியின் சுய மரணம் குறித்து....
வாசகியின் வார்த்தைகளில்....

சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு ஆபாச புகைப்படம் காரணம் பள்ளி மாணவி செய்து கொண்ட தற்கொலை குறித்துத் தாங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். என் கல்லுரிப் பருவத்தில்ஒரு தினம் என் அம்மாவிடம் ஒரு பெண்மணி வந்து,
"உங்க பொண்ணு காலேஜ் போகாம மலைல திரியறதா ஒரு பேச்சு இருக்கே?" என்று வம்பு விசாரித்தார்.
என் அம்மா பொதுவாக சற்று பயந்த சுபாவம் கொண்ட அமைதியான பெண்மணி. வம்பு பேசிய பெண்ணிடம் 
"அப்பிடித்தான் ஊர் சுத்துவாஉங்களுக்கு என்ன வந்துது?" என்று கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
நான் அம்மாவிடம்நீ என்னை அல்லவா கோபிக்க வேண்டும் என்று கேட்டேன். குறைந்தபட்சம்முண்டன்துறைப் பகுதிக்குப் போனேனா என்றாவது விசாரிக்க வேண்டும் என்றேன்.
"சோலி இல்லை?" என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்க நகர்ந்தார். அம்மாவிடம் என்னைக் குறித்து என்று இல்லைஎந்த ஒரு பெண்ணைக் குறித்தும் இத்தகைய வம்பு பேசி யாராலும் ஜெயிக்க இயலாது.
(இப்பொழுது அம்மாவுக்கு வயது எம்பது ஆகிறது. கொஞ்சம் பலஹீனமாகி இருந்தாலும்இந்த சுபாவம் மாத்திரம் மாறவில்லை.)
பிறகு ஒரு தினம் வம்பு விசாரித்த பெண்மணியின் மகள் ஏதோ வம்பில் மாட்டிக் கையும் களவுமாக பிடிபட நேர்ந்தது. அக்கம் பக்கம் எல்லாம் அவமானம் செய்யும்பொழுது அம்மாதான்அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தியது. நடந்ததை மறந்து விட்டு படிப்பில் மாத்திரம் கவனம் செலுத்தும்படிஎன்னோடு படிக்கும் அந்தப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள். அந்தப் பெண்ணின் அம்மாவிடமும்சொந்தக் குழந்தையைப்புரிந்து கொண்டால் பிறத்தியார் குழந்தை மீதும் நம்பிக்கை வரும் என்று கேட்டுக் கொண்டார். என் தந்தையும் அம்மாவின் அதே மனநிலை கொண்டவராகத்தான் இருந்தார். ஆகையால் என்னால் படிப்பிலும்வாசிப்பிலும் கவனம் செலுத்த முடிந்தது. மதுரை காமராசர் பல்கலையில் முதல் ஆறு ராங்குக்குள் இளங்கலை அறிவியலில் மதிப்பெண் வாங்கி ஜெயித்து மேலே மேலே என்று படிக்க முடிந்தது. பாடத்துக்கு வெளியேயும் நிறைய வாசிக்க முடிந்தது.
மேடம்நான் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். என் அம்மா போன்ற ஒரு கிராமத்துப் பெண்மணிக்கு இந்த மனநிலை இருக்கிறது. தேவையற்ற வம்புகள்சுவர் கிறுக்கல் இதெல்லாம் ஒதுக்கித்த தள்ள வேண்டிய விஷயம் என்று. ஒரு வசதியும் இல்லாத பின்தங்கிய மலையோர தமிழக கிராமத்தில்  இது சாத்தியம் என்றால் தகவல் தொடர்பு உலகத்தில் இது மேலும் அல்லவா சாத்தியமாகி இருக்க வேண்டும்ஒரு மாணவனை சிறுநீர் கழிக்கும்பொழுது படம் பிடித்துப் போட்டால் அவன் கவலைப் படுவதில்லை. மாணவி மாத்திரம் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்?

நான் என் சொந்தக்காரக் குழந்தைகளுக்கு இந்த வேண்டுகோளை விடுத்து இருக்கிறேன்.

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு ஒரு வேண்டுகோள்:
இணையத்தில் வெளியாகும் திருட்டு போட்டோவைக் கண்டெல்லாம்  பயப்படாதீர்கள். உங்கள் உடல் ஊராருக்கு காட்டப்படுவது அவமானம் அல்ல என்று உணருங்கள். உடலே ஒரு ரசாயனம்தான். ஆகவே புரோட்டீனும்கார்போஹைட்ரேட்டும் படம் பிடித்துப் போடும்பொழுது யாராவது அவமானப் படுவார்களாஇருப்பினும்உடலை உடல் என்றே உணரும்பட்சத்தில், நீங்கள் இந்த அத்து மீறலை அனுமதிக்காதீர்கள். உங்கள் முகமோ அல்லது முகத்தோடு சேர்ந்து உடலோதரக்குறைவான புகைப்படங்களாக வெளியிடப்பட்டால்அது குறித்து முதலில் காவல் துறைக்கு புகார் அளியுங்கள். காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில்,மேல் முறையீடுஊடகம் என்று செல்லுங்கள். திருடனுக்குப் பாடம் கற்பித்து உங்களைப் போன்ற மற்ற பெண்களைக் காப்பதில் உங்களுக்கே ஒரு மனநிறைவு வருகிறதா இல்லையா என்று பாருங்கள்.

உங்கள் உடல் உறுப்பு சம்பந்தப் பட்ட தரக்குறைவான புகைப்படமோகாணொளியோ இணையத்தில் வெளியிடப்பட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்வது குறித்து பயந்து நடவடிக்கை எடுப்பதெல்லாம் சினிமா கதை. நிலவரம் அப்படி அல்ல. நிலவரம் அப்படியே ஆனாலும் சமூக வலைத்தள யுகத்தில்  நிலவரம் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நீங்கள்அசிங்க புகைப்படம்கக்கூஸ் சுவர் கிறுக்கல் இவற்றிற்கெல்லாம் பயந்து தற்கொலை செய்வதோஅல்லது சக்கைப்போடு போட்டு தமிழ் தொடங்கி இந்திய மொழிகளில் பலவற்றிலும் வெளியான த்ரிஷ்யம் என்ற மலையாள சினிமாவின்  தந்தை போல் கொலையை மறைத்துகாவல் துறையை மாட்டவைப்பதோதான் அவமானம்அசிங்கம். குழந்தைகளே விழித்தெழுங்கள்.

’’காதல் சிறகை ....!''


வளர் இளமைப்பருவம் தொட்டு என் நேசத்துக்குரியது அபிநயசரஸ்வதி..கன்னடத்துப்பைங்கிளி பி சரோஜா தேவியின் நடிப்பு; இன்று படிப்பும் எழுத்தும் சிந்தனையும் [வயதும் கூடத்தான்.!..] கூடிப்போனநிலையிலும் அதில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை
இளமையில் நம்மை ஈர்த்துக்கட்டிப்போட்டு விடும் ஒரு சில ரசனைகள் [அறிவின் பாற்பட்டதாக அல்லாமல் கலைகளின் வயப்பட்டதாக இருந்தால்] அந்த ரசனைக்கு எந்த வயதிலும் தடை இல்லைதானே!.



என் நினைவு மலரத் தொடங்கியபோது என் நெஞ்சில் பதிந்த முதல் படம் .கல்யாணப்பரிசு என்பதாலோ என்னவோ, அதில்... மாடியிலிருக்கும் ஜெமினிக்கு ஒரு சங்கேதமாய் ’’அம்மா போயிட்டு வரேன்’’என்று கல்லூரிக்குக்கிளம்பும்போது குரல் கொடுத்தபடி குறும்புக்காரச் சுட்டிப்பெண்ணாய்,,வலம் வந்த சரோஜா தேவி இன்றுவரை நான் பார்க்கும் தொலைக்காட்சிப்பாடல்களில் எப்போதும் முதலிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டே இருக்கிறார். 

எம் ஜி ஆர் படங்கள் பலவற்றில் வணிகக் காரணங்களுக்காக அவரது நடிப்புத் திறன் வீணடிக்கப்பட்டு விட்ட போதும் அவற்றிலும் கூட வாய்ப்புக்கிடைத்தபோதெல்லாம் அவரது நடிப்புத் திறமை கீற்றுக்களாகவேனும் தெறிக்காமல் போனதில்ல, உ- ம்,அரச கட்டளை, நாடோடி., தொட்டால் பூ மலரும் பாடலில் மின்னும் போட்டிபோட்டுக்குறும்பு காட்டும் முக  பாவனைகள்..,!!

//அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற சில படங்கள் எம்.ஜி.ஆருக்காக மட்டுமின்றி சரோஜா தேவிக்காகவும் பார்க்கப்பட்டவை..
பணத்தோட்டம் படத்தில் வரும்,’’ஒரு நாள் இரவில் கண் உறக்கம் பிடிக்கவில்லை’’ என்ற பாடல் காட்சியில் அவர் மட்டுமே நடித்திருப்பார். எத்தனை பாவங்கள். அருமையாக இருக்கும்.//
என்று எழுத்தாளர் தமிழ்மகன் தனிப்பட்ட உரையாடலொன்றில் சரோஜா தேவியின் நடிப்பைப்பற்றி என்னுடன்பகிர்ந்து கொண்டதுண்டு...




அபிநயசரஸ்வதியின் அபார நடிப்புத் திறமையை வெளிக்கொணர்ந்தவை பெரும்பாலும் சிவாஜியுடன் அவர் பங்கேற்ற கறுப்பு வெள்ளைப்படங்களே.
குறிப்பாக பாலும் பழமும், ஆலயமணி, இருவர் உள்ளம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

‘’கொஞ்சம் அசந்தா இந்த சரோஜா நம்மளத் தூக்கி சாப்பிட்டிறுவா’’ என்று சிவாஜியே ’பாலும் பழமும்’ வேளையில் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.தன் கணவன் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடியாமல் மருத்துவத் தாதியாக வேலைசெய்து அங்கிருந்தும் வெளியேற்றப்பட்ட நிலையில்... தான் ஏற்றியாகவேண்டிய இஞ்செக்‌ஷன்  ஊசியை வாயில் கவ்விப் பிடித்தபடி  கொட்டும் மழையில் வீட்டின் பின்புறச்சுவரில் அவர் ஏறும் அந்தக்காட்சி கூட  ஒருவேளை சிவாஜியை அப்படிசொல்ல வைத்திருக்கலாம். 

காமரா கோணங்களில் ,மிகவும் நெருக்கமாக முகங்கள் மட்டுமே காட்டப்படும்போது [in tight close up] நொடிக்கு நொடி மாறும் பாவனைகளுக்கு அவரிடம் பாடம் பயில வேண்டும்... ’காதல் சிறகை’ பாடலின் காணொளியில் அதை மிகத் தெளிவாகப்பார்க்கலாம். வினாடிக்கு வினாடி பாடல் தொடரத் தொடர மாறிக்கொண்டே போகும் கோணங்களில்....  தவிப்பு , ஏக்கம், எதிர்பார்ப்பு, காதல், விரக தாபம், பாசம் , ஆற்றாமை என அந்த முகத்தில் மாறி மாறி மின்னலடிக்கும்பாவ பேதங்கள்தான் எத்தனை எத்தனை?

பொதுவாக இருவர்  மட்டுமே நடிக்கும் காட்சியில்,  உடன்  நடிப்பவரின் நடிப்புக்கு  ஏற்றபடி ஈடு கொடுத்து வெளிப்படுத்தியாக  வேண்டிய  எதிர்வினை நடிப்புக்கும் கூட,[reaction] அதே அளவு முக்கியத்துவமும் வல்லமையும் உண்டு. நடிப்பில் திறமைசாலிகளும்   கூடத்  தோற்றுப்போவது இதிலேதான்....! ஆனால் அந்தக்கலையும் கூட  சரோஜா தேவிக்கு வசப்பட்டிருப்பதைக்காட்டும் காணொளி , ஆலயமணியில் இடம் பெற்றிருக்கும் ’பொன்னை விரும்பும் பூமியிலே’ பாடல்..




விபத்தில் கால் முடங்கிப்போன கதாநாயகனைச் சக்கர நாற்காலியில் தள்ளியபடி,தோட்டம் சுற்றி  நடந்தாக  வேண்டும்...அவருடைய வேலை அது மட்டும்தான்...பாடல் பாடுவதும் அதற்கேற்ப முகபாவம் காட்டுவதும்  கதாநாயகனின் வேலை மட்டுமே என்று எடுத்துக்கொண்டு எளிதாக  ஒதுங்கி விட முடியும்..! இப்போதெல்லாம் பலரும்  செய்வது அதை மட்டும்தான்.

ஆனால் வண்டியை நகர்த்திச்செல்லும் அந்தப்பேதைப்பெண் தரும்  அற்புதமான அந்த REACTIONS...!!
சொல்லுக்கெட்டாத பரவசம் கிளர்த்துபவை அவை....!
வறுமையில் தொலைந்து போன தன் முன்னாள் காதலுக்கான வருத்தத்தை உள்ளே அடக்கிக்கொண்டு... அதை வலிந்து  துடைத்தெறியும் முயற்சி,
புத்தம் புதிதாய் இப்போது  வர்ஷிக்கும் பாசப்பெருக்கை ஏற்கத் தன்னை  ஆயத்தப்படுத்திக் கொள்ளுதல்,  அதற்குமே கூட விபத்தின் காரணமாக  நேர்ந்து விட்ட எதிர்பாராத சோகத்தை அளவற்ற கருணையுடன் எதிர்கொள்ளல் ,நாயகனை இரக்கமும் அன்புமாய்நோக்கியபடி அவனை அந்தத் துன்பவேளையில் மீட்டெடுத்தல் என்று அடுக்கடுக்காகத் தொடர்ந்து கொட்டும் அந்த எதிர்வினைகள் ..., .REACTIONS.உணர்த்தும்  செய்திகள்தான் எத்தனை எத்தனை....? SIMPLY  SUBLIME!!

வண்ணப்படங்கள் வந்தபின்பு அவரை ரசித்ததை விட என் மனம் அவரது பழைய கறுப்பு வெள்ளைப்படங்களில்மட்டுமே லயித்துக்கிடக்கிறது...

ஒரே ஒரு விதி விலக்காகப்..’புதிய பறவை’.

 ஓர் இளம் கல்லூரி  மாணவியாய்க் கவலைகள் ஏதுமற்ற கட்டற்ற சுதந்திரத்துடன் நான் சிறகடித்துக்கொண்டிருந்த ‘60களின் பின்பகுதியில் என் ’புதிய பறவை’ விவரிப்புக்களை..., குறிப்பாய் சரோஜா தேவியின் ஒவ்வொரு அசைவையும் நான் விஸ்தாரமாய் விவரிப்பதைக்கேட்பதற்கென்றே சக தோழியர் பலரும் எனக்கே  ரசிகர் பட்டாளமாகித்தொடர்ந்து துரத்தி வந்த அந்தநாட்களின் இனிமைகளை நினவுத் தளத்தின் மேலடுக்கில் கொண்டு வந்து என்னுள் களிக்கிறேன்.


இயக்குநர் படங்களாகவே உருவான ‘குலவிளக்கு’- [கே எஸ் கோபால கிருஷ்ணன்] , ‘தாமரை நெஞ்சம்’ -[கே பாலச்சந்தர்].. இவையெல்லாம் சரோஜா தேவியின் நடிப்புத் திறனைப்புரிந்து,கொண்டதால் அவரின் குணசித்திர நடிப்பை வெளிக்கொணர்வதற்கென்றே பிரத்தியேகமாக  உருவானவை...

ஆனாலும் கூட  ‘60களில் என்னைக்கட்டிப்போட்ட, அந்தச்சுட்டிப்பெண் சரோஜா தேவியின் பிம்பம் மட்டுமே காதுகளில் ரீங்கரிக்கும் ’’நான் பேசநினைப்பதெல்லாம்’’ பாடலோடும் ‘காதல் சிறகோ’டும் என்றென்றும் என்னை வசீகரித்தபடி இருக்கிறது.

.
‘  

28.6.16

’’ஒரு கணம் ஒரு யுகமாக.’’-கடிதங்கள்



கணையாழி-ஜூன் 2016 இதழில் வெளியாகி இருக்கும் என்
 ’’ஒரு கணம் ஒரு யுகமாக.’’,சிறுகதை.குறித்த பின்னூட்டங்கள்....

[முகநூல்,மற்றும் வாட்ஸ் அப்பில் வந்தவை];இப்போதெல்லாம் வலைக்கு வந்து பின்னூட்டம்,இடுவது குறைந்து விட்டது..என்னசெய்வது]

கடிதம்-1
வள்ளி
[பணிநிறைவு தமிழ்ப்பேராசிரியர்,எழுத்தாளர்]

ஒருவாழ்வின்  கொடியகணத்தின் வலியை ஸ்தம்பித்துப்பார்க்கும் பெண்ணாக நான் !!.
ஆழமாய் நெஞ்சில் அடிக்கப்பட்டு மெது மெதுவாய் உள்ளிறங்கும் கூரிய ஆணியின் பயணம் போல் வலிக்கிறது .  

ஒரு கணத்தின் கனத்தைச்  சுற்றியே கதை விலகாமல் மையம் கொள்வது சூப்பர்ப்  . எங்கோ ஒன்றை விவரிப்பதில் சற்றே விலகி விடுவார்கள் துளியேனும்   இங்கு அவ்வாறு நிகழவில்லை   நீங்கள் அறியாமல் அமைந்துவிடும் டெக்னிக்எப்போதும் போல . கதையின் வலிமையும் அழகும் அதுதான்.

ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த  கொடுமையை கதவு அடைத்த கணம் உணர்த்துவது அருமை ,
குட்டிக் குட்டி விஷ அம்புகளாய் நிறைய கணங்கள் .  . ஒரு முகத்தின் நான்கு உணர்வுகள் வன்மம் ஏளனம் காமம் கபடம் என்பதன் மூலம்  ஒருகேரக்டரை கண் முன் கொண்டு வருதல் வித்தியாசம் ஷார்ட் . ஸ்வீட் க்யூட் என்பது ஒற்றை வரி விமர்சனம்.

உணரும் மனம் கொண்டவர்களால் மட்டுமே வரிகளில் நின்று ஆழம் காணமுடியும்  பிறரால் தாண்டிச் செல்லும் அபாயமும் உண்டு   அத்தனை அடர்த்தி உணர்வு சுழல்கள் ஒரு கணத்தை மேலும் மேலும் கனமாக்கும் ப்ரசண்டேஷன் சவால்கள் பலவற்றை துணிச்சலாய் தாண்டிய சுலோவின் மிக நுண்ணிய உணர்வு சித்திரிப்பை சற்றே குறைத்து இருக்கலாம்.

 எழுதி முடித்தாயிற்று . புழுவைத் தூக்கி எறிந்து விடலாம் , எழுத்திலிருந்தும் நிரந்தரமாய் எப்போதும் !
அமிர்தம் தரும் நீங்கள் தண்ணீர் தரவேண்டாம் வனம் தாருங்கள்   
அன்பு  
வள்ளி
///////////////////////////////////////////////////////////////////
கடிதம்-2

எழுத்தாளர் உஷா தீபனோடு கதை குறித்த ஓர் உரையாடல்..கீழே

வணக்கம். 

இப்படிச் சொன்னால்தான் இலக்கிய அந்தஸ்துப் பெறும் என்று  நிறையப் பேர் வலிய எழுதுகிறார்கள்....இதுதான் டெப்த் என்பதாக ஒரு முறைமையைக் கொண்டு வந்து விட்டார்கள்.  இலக்கியத்தின் ஆழம் என்று ஏன் வரித்தார்கள் என்று வியப்பாயிருக்கிறது. இன்றைய நவீன இலக்கியம் என்பது அப்படித்தான் இருக்கிறது. தி.ஜா.ரா. வு ம் கு.ப.ரா.வும், கு.அழகிரிசாமியும் சொன்னவைகள் அந்த இடத்தைப் பிடித்துத்தானே இன்றுவரை நிற்கின்றன. வலியப்பின்னிய வாக்கியங்கள் என்று ஏதேனும் அவர்களிடம் சொல்ல முடியுமா?  நவீன இலக்கியம் என்கிறபெயரில் கதைகள் ஏன் இப்படி மாறிப் போயின?  நீங்களும் அப்படிப் பாதிக்கப்பட்டுவிட்டீர்களோ என்றுதான் எனக்குத் தோன்றியது. ஒரு கணம் ஒரு யுகமாய்....கதையின் முதல் ஒரு பக்கம் என்னை அப்படித்தான் நினைக்க வைக்கிறது. ...

இன்னொன்று...

இலக்கியத்தரமாய் கதை விளங்க வேண்டும் என்று எழுதப்பட்ட பெரும்பாலான கதைகள் கணவன்  மனைவி இடையிலான பிணக்குகளை, மன மாச்சரியங்களை, மண விலக்குகளை, பிரிவினைகளை மையம் கொண்டதாகவே இருக்கின்றன. 

கதை நன்றாகவுள்ளது. இன்னும் கொஞ்சம் அவர்களின் ஊடான பிணக்குகளை விரித்திருக்கலாம என்று தோன்றியது.  மகிழ்ச்சி. உங்கள் கதையைப் படித்ததில் என் மனம் ஊக்கம் பெறுகிறது.

என் மறுமொழி

இல்லை உஷா தீபன்.
.கணையாழி கதையில் நிச்சயமாய் வலிந்து எதுவுமே நான் முயலவில்லை. உணர்வுகளின் அழுத்தம் அப்படி ஒரு தோற்றத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கலாம்;அல்லது என் எழுத்துப்பயணத்தின், வாசிப்புப்பயணத்தின் பரிணாம வளர்ச்சியாகக் கூட அது அமைந்து போயிருக்கலாம்.
 [ரஷ்ய நாவல்களை  மொழிபெயர்த்ததால் ஏற்பட்ட மொழி இறுக்கமாகவும் கூட..].
நாமெல்லாம் இலக்கியம் படைக்க வேண்டும் என்பதற்காகவோ அங்கீகரிப்பு புகழ் இவற்றுக்காகவோ எழுதுபவர்கள் அல்ல. உங்களைப் பற்றி எனக்கும் என்னைப்பற்றி உங்களுக்கும் இது குறித்து ஓரளவு தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.மெய்யான அக எழுச்சி அல்லது தூண்டுதல் ஏற்படும் வரை நான் படைப்புப் பக்கம் போவதில்லை;அதனால்தான் மொழியாக்கங்கள் வழி என் மொழியைக்கூர் தீட்டி வருகிறேன்.

அன்புடன்
சுசீலா

மீண்டும்  உஷாதீபன்

உங்கள்  மொழி பெயர்ப்பு, வாசிப்பு அனுபவம் உங்களுக்கு அந்தத் தகுதிகளை வழங்கியிருப்பதை உணர்கிறேன். ஆனாலும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. ஒரு வேளை இதுவும் கூட ஒரு அனுபவமின்மையோ என்று சந்தேகமும் வருகிறது. மண்டையைப் பிய்த்துக் கொண்டு இப்படித்தான் எழுதியாக வேண்டுமா என்றெல்லாம் தோன்றுகிறது. என் கதைகளைப் படித்திருப்பீர்கள். எனக்கென்று ஒரு சரளமான நடை உண்டு. அது எழுதி எழுதி மேற்சென்ற பழக்கத்தில். அந்த வகையில் எழுதினால் போதுமென்று நான் நினைக்கிறேன்.   எனக்கு வந்தது அதுவே. ரஷ்ய நாவல்களை  மொழிபெயர்த்ததால் ஏற்பட்ட மொழி இறுக்க .அனுபவங்கள் எனக்குக் கிட்டாதது என் துரதிருஷ்டமே...! எப்படியாயினும் உங்கள் மீதான மதிப்பில் தலை வணங்குகிறேன். நான் உங்கள் மாணவன்.
நன்றி.
உஷாதீபன்
/////////////////////////////////////////////////
கடிதம்-3
[விமரிசகர்,மொழிபெயர்ப்பாளர்]

முழுவதும் படித்தேன். கதையை விட ஒரு அருமையான தமிழனுபவமாக எனக்கு இருந்தது!
/////////////////////////////////////////////////////////////////
கடிதம்-4

கலைச்செல்வி
[எழுத்தாளர்]
,
தங்களின் சிறுகதையைப் படித்தேன். மிக தரமான இலக்கிய நடைதான் முதலில் என்னை கவர்ந்தது. பிறகு எண்ணங்களின் தன்மையை உண்மையோடு ஒட்டி தாங்கள் செலுத்தியிருந்த விதம். மனம் இப்படிதான் சிந்திக்கும்.. குறிப்பாக பெண்ணின் மனம்.. குறியீடாக உணர்த்தியே கதை சொல்லும் பாங்கு.. நல்ல கதை அம்மா.
/////////////////////////////////////////////////////////////////////////////////////////

கடிதம்-5
தேவராஜ் விட்டலன்
[வாசகர்,எழுத்தாளர்]

அம்மா நீண்ட நாட்களுக்குப் பின் இந்த அதிகாலையில்
இன்றுதான் உங்கள் சிறுகதையை படித்தேன் ,

 வாழ்வில் பெரும் துன்பம் தன்னை
ஆட்கொண்டாலும், அவற்றிலிருந்து தன்னம்பிக்கையால் நற்சிந்தனையாலும் ,
உழைப்பாலும் தன்னை அர்த்தமுள்ளவளாக தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி
வாழ்பவள் சுலோ . இந்த கதாபாத்திரத்தின் வாயிலாக இன்னும் பல விதமான
இன்னல்களுக்கு ஆட்பட்டு வாழ்வில் சிக்கி சின்னாபின்னமாக ஆகும் பல
பெண்களுக்கும் , ஆண்களுக்கும் என அனைவருக்கும் ஒரு தன்னம்பிக்கையைக்
கொடுக்கிறது இந்த கதை .

//‘’வரட்டுமே ..அதனாலே என்ன’’ என்றபடி இளநீரைக்குடித்து முடித்து அவள்
நிமிர்ந்த அந்தக்கணத்தில் சுழலாக உருக்கொண்டு ஓங்கி அறைந்த காற்று
சாலையோரத்துக் குப்பை கூளங்களையெல்லாம் அவள் முகத்தில் விசிறி அடித்தது.
சற்றும் சட்டை செய்யாமல் சாவதானமாக அதையெல்லாம் தட்டி விட்டுக்கொண்டு
நிமிர்ந்தபோது அவள் கையில் இன்னும் கூட விடாப்பிடியாக
ஒட்டிக்கொண்டிருந்தது ஒரு துரும்பு.  துரும்பைக்கிள்ளிப்போட்டபடி
இராவணனோடு  சீதை உரையாடிய காட்சியை மனதுக்குள் ஓட்டியபடி ஒரு கணம் அதை
உற்று நோக்கிய அவள்....உதட்டைக் குவித்து ஊதியபடி அதைப்பறக்க விட்டாள்;
காற்றின் அசைவோடு அது விலகிச்செல்லும் காட்சியை சில நொடிகள் ரசித்தபடி
நின்றிருந்தபோது அந்தக்கொடுமையான கணமும் கூட அவளிடமிருந்து விலகிப்
போயிருந்தது..\\

"கதையின் இறுதியில் வரும் இந்த  உருவகம் தங்கள் மொழி அறிவை காட்டுகிறது"
தொடர்ந்து கணையாழியில் தங்கள் கதை வெளிவர வேண்டும் என வேண்டுகிறேன்


தேவராஜ் விட்டலன்





23.6.16

உயிர் உருகும் ஓலம்....

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஓர் இளம் பெண்ணின் உயிர் உருகும் ஓலம்…!!

வாஷிங்டன் போஸ்டில் வெளியான 
வன்முறைக்கு ஆளான அந்தப்பெண்ணின் கடிதத்தை  , [‘You took away my worth’இடையிடையே தன் கருத்துக்களோடு சேர்த்து இன்றைய தினமணியில் கட்டுரையாக்கித் தந்திருக்கிறார் ஓய்வு பெற்ற நீதியரசி திரு பிரபாஸ்ரீதேவன். மனச்சாட்சி எஞ்சியுள்ளோர் தப்பவிடக்கூடாத கட்டுரை இது,


இது கடிதம் அல்ல; இதயம்

கணவனே ஆயினும் மனைவி.விரும்பாத தருணத்தில் அவளை உறவுக்கு அழைப்பது தார்மீகப்பாலியல் வன்முறை போன்றதே என, அண்மையில் ஒரு சர்ச்சை படித்தேன்...
பொதுமகளாக்கப்பட்டோருக்கும் கூட இது பொருந்தக்கூடியதே.
அந்தப்பிஞ்சுப்பெண் எப்படிப்பரிதவித்திருப்பாள் அவள் வாழ்வே
​ அவளுக்கு ஓர் இருள் கனவாக கொடூர மிரட்டலாக அல்லவா இருக்கும்...அந்தநிலையில் அவனை மன்னிக்கும் உள்ளம்  எப்படி வாய்த்தது...விளங்காத புதிரேவாழ்க்கையும் அவரவர் உள்ளமும்.


//இந்தப் பெண் அந்த நேரத்தில் தங்கையுடன் பார்ட்டி செல்கிறார், மதுவும் அருந்துகிறார். உடனே அதான்... என்று சொல்லக்கூடாது. மது அருந்துவது பலருக்கு வழக்கம் இங்கேயே... குடி குடியைக் கெடுக்கும் என்று நாம் கரடியாக கத்தினாலும். அமெரிக்காவில் அது மிக சகஜம். ஒரு பெண் மது அருந்தினால் அவரை எல்லோரும் அணுகலாம் என்று பொருளல்ல. இதை கருத்தில் வைத்து மேலே படிக்கவும்.//

என்ற அந்த முன்னுரைக்காகவே கட்டுரையாளருக்கு  ஒரு மலர்க்கொத்தை அளிக்கத் தோன்றுகிறது.

காரணம் உடனே கலாசாரக்காவலர்கள்..அவள் ஏன்  அங்குபோக வேண்டும்..ஏன் மது அருந்த வேண்டும் ,​ ....எல்லாம் இந்தப்பெண்கள் இப்படிச்செய்வதால்தான் என்ற உளறலைத் தொடங்கி விடுவார்கள்

 [ பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது என்ற ஜேசுதாஸ் போல,- செலிப்ரிடி என்றால் எதுவும் பேசலாம் போலிருக்கிறது- 

தில்லியின் முனீர்க்காவில் ஓடும்  பஸ்ஸில் மானபங்கம் செய்யப்பட்ட நிர்பயாவை , இரவில் , அவள் ஏன் அப்படிப் போகவேண்டும் என்று கேட்டதுபோல..]


ட்டுரையில் என்னை உறைய வைத்த வரிகள்...

//அவன் நினைத்தானாம் எனக்கு விருப்பமாக இருந்தது என்று. எனக்குப் பிடித்ததாம். இன்றும் அந்த உணர்வை விவரிக்க என் வசம் வார்த்தைகள் இல்லை...என்னைப் புரட்டிப் போட்டு என் ஆடைகளை கழற்றி, இலை முட்களையும் விரல்களையும் என்னுள் நுழைத்து ... நான் எப்படி நிரூபிக்கவேண்டும்? எனக்கு அது பிடிக்கவில்லை என்று.//

/அவர் தந்தை கூறுகிறார்: இருபது நிமிட ஆக்ஷனுக்கு இத்தனை பெரிய தண்டனையா?//என்று....
பாவம் மகனின் ஒலிம்பிக்ஸ் தவறிய சோகம் அவருக்கு...

அவளின் வாழ்க்கையே திசை தடுமாறியதற்கு யார் விடை சொல்வது?

இன்னும் கூட அந்த   மனநிலையிலிருந்து விடுபட முடியாத தத்தளிப்புடன் இருக்கிறேன்..



மூலம்;



21.6.16

’’எதனில் தொலைந்தால்...’’

பல மாதங்களாக நான் என்னையே தொலைத்தபடி அமிழ்ந்து கரைந்து கொண்டிருக்கும் அற்புதமான  பாடல்.இது...!
.



இரவின் அமைதிக்குள் கரைந்தபடி இதில் மட்டுமே தோய்ந்து,கரைய முடிந்தால்  அமிர்தம் .என்ன அதற்கு மேலானதும் கூட வாய்க்கும்
.[அமிர்தம் என்னும்  அந்தச்சொல்லுக்கு சித்ரா தரும் மிக இலேசான அழுத்தமே  காதில் தேன் பாய வைக்கிறதே.]

காதலுக்கு மட்டுமே பொருத்தமானதில்லை என்பதே இப்பாடலின் தனித்துவம். உண்மையானநேசம் எதன் மீது எவர் மீது இருந்தாலும்-
அது,பக்தி பாவனையாகவே இருந்தாலும் ,கூட முற்றிலும் இயைந்து வரும் இந்தப்பாடலை  மனம் தோய்ந்து ஒரு தவம் போலப்பாடியிருக்கிறார் சித்ரா....
[அதிலும் ‘’எதை நான் கேட்பின் ‘’என உச்ச ஸ்தாயியில் எடுத்து விட்டு.- அதே வேளையில்  அந்தத் தருணத்துக்கான நெகிழ்வையும் ,குழைவையும் பரவசச் சிலிர்ப்போடு  வெளிக்காட்டியிருக்கும்,சித்ராவின் ஒட்டு மொத்த அர்ப்பணிப்பு. ஒரு  SUBLIMITY!!  உன்னதக்கணத்தின் உச்சம் தீண்டுவது. ...]

இருளிலிருந்து ஒளியை நோக்கியும்
பொய்மைகளிலிருந்து வாய்மை நோக்கியும்
மரணத்திலிருந்து நித்தியத்துவம் நோக்கியும்
நம்மை நகர்த்தும் அஸதோமா ஸத்கமய மட்டுமல்ல....

தாகூரின் கீழ்க்காணும் வரிகளையும் இந்தப்பாடல் நினைவுபடுத்தத் தவறவில்லை..

“I thought that my voyage had come to its end at the last limit of my power, that the path before me was closed, that provisions were exhausted, and the time come to take shelter in a silent obscurity, but I find that thy will knows no end in me, and when old words die out on the tongue, new melodies break forth from the heart, and where the old tracks are lost, new country is revealed with its wonders.

என் சக்தியின் கடைசி எல்லையில் 
என் பயணம் 
முடிவுக்கு வந்து விட்டது
என் முன்னிருந்த பாதை மூடி விட்டது
சரக்கெல்லாம் தீர்ந்து 
மௌனமான மறைவில் ஒதுங்கவேண்டுமென்று நினைத்தேன்..
ஆனால்...
உன் எண்ணம் வேறு என்பது...
இப்போது புரிகிறது..
பழைய வார்த்தைகள் நாவில் மடிகையில்...
புதிய ராகங்கள் இதயத்திலிருந்து வெடிக்கின்றன..
பழைய பாதைகள் மறந்து போகையில் 
புதிய தேசம் புலனாகிறது...
[கீதாஞ்சலி மொழியாக்க வரிகள்;
எழுத்தாளர் வாஸந்தியின் 
                                                மனிதர்கள் பாதிநேரம் தூங்குகிறார்கள் நாவலிலிருந்து].

 வரிகள் எளியவைதான்...ஆனால் அதை
மறக்க முடியாத ஒரு ஆன்மிக அனுபவமாக்கிய சித்ராவின் குரலுக்கு நன்றி...

இன்றைய சந்தைக்கூச்சல்  மந்தை இரைச்சல் பாடல்களுக்கு இடையில்  வாராது வாய்த்த மாமணியாய் இதைத் திரையில்  ,இடம் பெற வைத்த மணிரத்னத்துக்கும் ரஹ்மானுக்கும் கூட....

இந்தப்பாடல் பாடியது  குறித்தசித்ராவின் அனுபவம்...
https://youtu.be/r_5Wk16jakA



19.6.16

ஒற்றையடித் தடத்தின் பாதங்கள் -யாதுமாகி

ஒற்றையடித் தடத்தின் பாதங்கள் 
யாதுமாகி புத்தகப்பார்வை
ராஜகோபாலன் ஜா,


ஒரு படைப்பினை உருவாக்கும் காரணிகள் எவை என்ற கேள்விக்கான விடை முடிவற்ற சாத்தியங்களைக் கொண்ட விவாதத்தை உருவாக்கும். ஆனால், எது ஒரு உருவாக்கத்தை படைப்பாக மாற்றுகிறது என்பதைக் கூர்ந்து  அவதானித்து விடலாம் என்றுதான் நினைக்கிறேன். "யாதுமாகி" தேவி - உள்ளபடியே மனதில் நிறைந்துவிட்டிருக்கிறார் . வாசிக்குந்தோறும் தனது பாட்டியை, தாயை, சகோதரிகளை எண்ணாமல் எவராலும் புத்தகத்தை மூடிவிட இயலாது. நேரடியாகப் பார்த்து உடன் வளர்ந்த விதத்தால் இந்தக் கதைசொல்லிக்குக் கிடைத்திருக்கும் ஒரு கதைப்போக்கு படைப்புக்கு வலுவூட்டுகிறது. தான் கடந்து வந்த வாழ்க்கையின் மொத்தத்தையும் முழுப்பார்வையாக பார்க்க முடிந்தவனின் லௌகீக விவேகம் அவனது வார்த்தைகளுக்கு மந்திரம் போன்ற கனத்தைக் கூட்ட முடியும். அப்படி ஒரு வாழ்க்கையை விளக்கிய விதத்தில் "யாதுமாகி" தன்னை ஒரு படைப்பாக நிறுவிக் கொள்கிறது


இன்று வரை அறிவில் உயர்ந்த சமூகம் என்ற கருதுகோளை விடாப்பிடியாக கையில் வைத்திருக்கும் ஒரு சாதியில்தான் பெண்களுக்கு அவ்வளவு கொடுமைகள் நடந்தன. உடல் ரீதியிலான வன்முறை என்பதை விடக் கொடிய ஒன்று பிராமண சாதியின் விதவை பெண்களுக்கு சுமத்தப்பட்டிருந்தது. எந்த பிராமணப் பெண்ணும் தனது சுயம் அறிந்து ஒழுகுவது என்பது அனுமதிக்கப்பட்டதேயில்லை. சுயம் அறிவது என்பதே பாபமான ஒரு கருத்தாக அச்சமூகப் பெண்களின் மீது சுமத்தப்பட்டிருந்தது. அதிலும் வைதவ்ய கோலம் பூண்டவர்களுக்கோ வாழும் நாள் ஒவ்வொன்றும் நரகம் என்றே எண்ணத்தக்க அளவு மனதின் சிறகுகள் முறிக்கப்பட்டிருந்தன . இவை எதுவும் வெகு காலத்திற்கு முன்பு நடந்த வரலாறுகள் அல்ல. கடந்த 75, 100 வருட காலங்களில் நடைமுறையில் இருந்த , இன்றும் அதன் சாட்சிகள் மிச்சமிருக்கின்ற ஒரு சமகால நிகழ்வுதான்

ஆனால் , கடந்த 75 ஆண்டுகளில் இந்த நிலை மாற்றம் அடைந்த விதத்தை தாண்டுதல் என்று சொல்வதைக் காட்டிலும் பெரும் பாய்ச்சல் என்றுதான் சொல்லவேண்டும். பூச்சியத்திலிருந்து 360 பாகைக்குத் திரும்பும் வேகத்தில் இன்றைய மாற்றம் சாத்தியமாகி இருக்கிறது. கடந்த தலைமுறையில் பிறந்தவர்களுக்கு விதவைக் கோல கொடுமைகள் அசோகரின் ஆட்சியைப் போன்ற ஒரு வரலாற்று சம்பவம் மட்டுமே.  மாற்றத்திற்கான கருவியாக ஒரு பாதிக்கப்பட்ட சமூகம் எவற்றைக் கைக்கொள்கிறது என்பது மிக முக்கியமான ஒன்று. மாற்றத்தின் விளைவுகளைப் பொறுத்தவரையில் அக்காரணிகள் இன்னும் அதிக முக்கியத்துவம் கொள்கின்றன. இந்த விதத்தில் பிராமண பெண் சமூகம் தனது மாற்றத்துக்கான கருவியாகக் கைக்கொண்டது கல்வியை. கூண்டு திறக்கப்பட்ட சிறுத்தையின் வேகத்தில் அந்தச் சமூகப் பெண்கள் படிப்பு என்பதைப் பற்றிக்கொண்டார்கள்.  அவர்கள் மேல் சுமத்தப்பட்டிருந்த அனைத்துத் தளைகளையும் அவர்கள் கல்வியால், அது தரும் வாய்ப்புகளால் அகற்றும் விதத்தை இன்றுவரை காணமுடியும்

இந்தப்  பாய்ச்சலின் நீளம் அளவுக்கே ஆழமானது இதை சாத்தியமாகத் துணிந்த முதல் தலைமுறை பெண்களின் போராட்டங்களும் , அவற்றுக்குத் துணை நின்றவர்களின் மன உறுதியும்.  இந்திய அளவில் 1800களின் இறுதியில் இந்த மாற்றத்தை ஒலித்த அறியப்பட்ட குரலாக விவேகானந்தர்ராஜா  ராம் மோகன்ராய் , ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் ஆகியோரைக் காண்கிறோம். தமிழக அளவில் இந்தக் குரலை எதிரொலித்தவர்கள் பாரதியும், .மாதவையாவும். ஆனால் இதை சாத்தியப்படுத்தத்  துணிந்த பெண்களின் நிலை பெருமளவில் பேசப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். சகோதரி சுப்புலட்சுமி குறித்து நாம் குறைவாகவே அறிந்திருக்கிறோம். மாதவையாவின் மகள் மீனாட்சி குறித்து இன்னும் குறைவாகவே தெரியும்

அறியப்படாத அந்த முன்னோடிகளை நமக்கு இந்தப் படைப்பு அறிமுகம் செய்வதோடு மட்டுமன்றி அவர்களை நமக்கு மிக நெருக்கமானவர்களாக , மதிப்பிற்குரியவர்களாக நெருங்கச் செய்கிறது . இப்படி வட்டத்திற்கு வெளியே வந்து நின்று போராடிய பெண்மணிகள் இவர்கள் என்றால் வட்டத்திற்கு உள்ளேயே நின்று போராடிய பெண்களை எவரும் அறியவே இயலாது. படைப்பில் வரும் அன்னம்மா அவ்வாறான அனைத்துப் பெண்களின் ஒரே வடிவம். கணவன் இறந்து, சொத்துகளை பிறர் வசம் தந்துவிட்டு , அவரிடமே பணம் வாங்கா கூலியாக உழைத்து, தனது குழந்தைகளின் அடிப்படை தேவைகளைக் கூட கேட்கக் கூசி நிற்கும் அன்னம்மாதான் தனது பால்ய விவாக பெண்ணின் படிப்புக்கு தன்னால் இயன்ற, தனக்குத் தெரிந்த ஒவ்வொரு வழியிலும் முயன்றுகொண்டே இருக்கிறாள். "கம்மனாட்டி படிச்சு கலெக்டராகப் போறாளா ?" எனும் கேள்விக்கு பூமியின் பொறுமையுடன் ஆனால் பாறையின் உறுதியுடன் பணிந்து பதில் பேசுகிறாள். அவளது போராட்டம் , அதன் முறைகள் வேறானவைசகோதரி.சுப்புலட்சுமி, மீனாட்சி போன்றோர் வரலாற்றில் எவ்வளவு உண்மையோ அந்த அளவு உண்மை பேரறியா அன்னம்மாக்களும்.  சகோதரி.சுப்புலட்சுமி, மீனாட்சி ஆகியோரைப் பேசிய அதே விதத்தில் அன்னம்மாவையும் பேசி இப்போராட்டத்தில் அன்னம்மாக்களின் பங்கினையும் படைப்பு நமக்குக் காட்டுகிறது

மாற்றத்தை மனதளவில் ஏற்றுக்கொண்டாலும் இரு வேறு புள்ளிகளில் நிற்க வேண்டிய நிர்பந்தத்தில் எந்தப் புள்ளியை சார்ந்து முடிவெடுப்பது என்ற சிக்கல் இந்த காலக்கட்டத்தில் சில ஆண்களுக்குரியவை. கூட்டத்தில் தனித்து விடப்பட்ட அவர்கள் , தம் குடும்பத்தின் பொருட்டு அக்கூட்டத்தை சார்ந்தும் இருக்க  வேண்டியவர்கள். மாற்றத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் அவர்களது இடமும் தேவியின் தந்தை உருவில் நமக்குக் காட்டப்படுகிறது. கல்வியே மாற்றத்திற்கான கருவி என்பதை சதாசிவம் தனது மகளுக்கு தினமும் சைக்கிளில் வந்து கற்றுத் தரும் இடத்தில் நம்மால் உணரமுடிகிறது


காலமாற்றம் கதையின் போக்கில் முன், பின்னாக நகர்ந்து வருவதை சரியாகக் காட்சிப்படுத்தியிருந்தாலும்  அவற்றுக்கு இடையே இருக்கும் ஒரு தொடர் இழை வெகு பூடகமாக இருக்கிறது. வெறும் தற்புகழ்ச்சி  சுயசரிதையாக முடிந்து போய்விடும் சாத்தியங்கள் கொண்ட கதை இது. ஆனால், சராசரி மானுட உணர்வுகள் கொண்ட பெண்ணாகவே தேவி சித்தரிக்கப்பட்டிருப்பதும், உணர்வு ரீதியிலான அவரது  குழப்பங்கள் சொல்லப்பட்டிருப்பதும் படைப்பினை நம்பகத்தன்மை மிக்க ஒன்றாக மாற்றுகிறது

நாவலின் மையமாகிய தேவி சமுதாயக் கட்டுப்பாடு எனும் விலங்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வானத்தில் உயரப் பறந்தவரில்லை. ஆனால் இன்று மிக இயல்பான ஒன்றாக இருக்கும் ஒன்றைச் சாத்தியப்படுத்த அவர் சந்திக்க நேர்ந்த சவால்கள் , தடைகள் ஆகியவை நாம் அவதானிக்க வேண்டியவை. படைப்பு இந்த இடங்களை இன்னும் அழுத்தமாகக் காட்டவில்லை என்று உணர்கிறேன். லேசாகக் கோடிட்டுக் காட்டுவதோடு அவ்வாறான  இடங்களைப் படைப்பு கடந்து சென்று விடுகிறது.  தேவியின் மனஓட்டம் , அகக் குமுறல்கள், அவற்றை தேவி சிந்திக்கும் விதம் போன்ற எவையும் படைப்பில் வெளிப்படுத்தப்படவில்லை. படைப்பில் பேசப்பட்ட  தேவியின் செயல்களின் வழியே மட்டுமே நாம் அவரது கருத்துகளை யோசிக்க முடிகிறது. காட்சிப்படுத்தப்பட வேண்டிய இடங்களை படைப்பு தாவிக் கடந்து சென்று விடுகிறது அல்லது ஒரு உரையாடல் வழியே குறிப்புணர்த்தி நகர்கிறது. துணைப் பாத்திரங்களின் இடம் சற்று குறுக்கப்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.   தேவியின் சாதனை அளவுக்கே உணர்த்தப்பட்டிருக்க வேண்டிய அவரது ராணுவத் துறை கணவர், அவர் தேவியை ஏற்றுக் கொண்ட விதம்,  படைப்பில் ஒரு புகை படிந்த சித்திரமாய், மாயக் கனவுக் காட்சியாய் மின்னி மறைந்து விடுகிறது. ஒருவேளை, படைப்பின் மையமான தேவியிலிருந்து விலகி விடுவோமோ என்று எழுத்தாளர் ஐயம் கொண்டிருக்கலாம் போலும். தேவி தன்னை உருவாக்கிக்கொண்ட விதத்தை விட , அவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட விதத்தையே "யாதுமாகி" பேசுவதாக நினைக்கிறேன்


இருப்பினும்,  இத்தகைய விடுபடல்களை படைப்பின் வடிவமைப்பும், செய்நேர்த்தியும் ஈடுசெய்கின்றன. படைப்பின் இடையே தரப்பட்டிருக்கும் உண்மையான ஒளிப்படங்கள் , தேவி மற்றும் துணைப் பாத்திரங்களின் உண்மை உருவங்கள், அவை காட்டும் சூழல் ஆகியன படைப்பு சொல்லாமல் விலகிச் சென்ற இடங்களை நமக்கு உணர்த்தி விடுகின்றன. இந்த வடிவமைப்பை படைப்பிற்கு கொண்டுவந்த வம்சி பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்

ஒரு தலைமுறை மாற்றம் என்பது பட்டுப் புழு கூடு உரிப்பது போல எத்தனை வலிந்த பிரயாசைகளைக்  கொண்டிருக்கிறது. ஒற்றையடிப்பாதையை உருவாக்கியவன்தான் தார்சாலை இட்டவனை விடவும் பாராட்டப்பட வேண்டியவன் இல்லையா? ஆனால், ஒற்றையடிப் பாதையை முதலில் கண்டறிந்து உருவாக்கியவன் எவனும் கல்வெட்டு வைத்துக்கொள்ளவில்லை. ஏதுமற்ற பரந்த பூமியில் அவன் உருவாக்கியதை காலம் விரிவாக்குகிறது. இன்றைய சாலைகள் அனைத்துமே பேரறியா  ஒருவன் என்றோ உருவாக்கிய ஒற்றையடித் தடம்தானே .  தேவி தனது காலத்திற்குப் பின்பு வாழும் வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்கான ஒற்றையடிப்பாதையை  உருவாக்கியவர்.  ஒற்றையடிப்பாதைகளை  உருவாக்கிய  எல்லோரையும் போல தேவியும் தான் காலத்தால் முன்னகர்ந்து போவதை, ஏதுமற்ற வெளியில் பாதை கட்டுவதை தன்னியல்பாகத்தான் செய்கிறார். அதில் பெருமிதங்கள் ஏதுமற்ற தன்னியல்பான கடமை உணர்வில்தான் அவர் இருக்கிறார். படைப்பு அதை சரியாகக் காட்டியிருப்பதாகவே எண்ணுகிறேன்


சாலைகளுக்குத்தான் போக்குவரத்து விதிமுறைகளும், காவலர்களும். ஒற்றையடிப் பாதைக்கு முள்ளும், விஷ ஜந்துக்களும், பேய்கள், கள்வர்கள்  குறித்த அச்சங்களும் தான்.  ஆனால் ஒற்றையடிப்பாதை மீதுதானே இன்றைய சாலைகள் அனைத்தும்.  அவ்விதத்தில் ஒற்றையடிப்பாதையை உருவாக்கி நடக்கத் துணிந்த "யாதுமாகி" தேவி வாசித்து நினைவுகூரப்படவேண்டியவரே..

யாதுமாகி, எம்.ஏ. சுசீலா,
வம்சி பதிப்பகம்,
இணையத்தில் வாங்க - நூல் உலகம்உடுமலை

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....