25.10.09

18நாட்கள்,10நாடுகள்..(4)

முதலாம் நாள்:
இலங்கை-கொழும்பு(தொடர்ச்சி)


கொழும்புவின் பல்பொருள் அங்காடியில் பயணிகளை விட்டுவிட்டு,ஓய்வாகத் தேநீர் பருகிக் கொண்டிருந்த எங்கள் உள்ளூர் வழிகாட்டி , தனியாக என்னிடம் மாட்டிக் கொண்டு விட...,ஈழப் புலிகளின் அழிவைப் பற்றியும் ,புலித் தலைவரின் மரணம் குறித்தும் அவர் அறிந்திருக்கும் செய்திகளைக் கேட்டேன்;பிரபாகரனின் மரணம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படாத மர்மம் பற்றியும் அவரிடம் வினவினேன். பிறவற்றை மிக இலேசாக மழுப்பிவிட்ட அவர்,பிரபாகரனின் உடலை மட்டும் தானே நேரில் பார்த்ததாகக் கதை விடத் தொடங்கினார்.அவரிடம் அதைத் தவிர வேறதையும் எதிர்பார்க்க முடியாதென்ற சலிப்புடன் மெல்ல அங்கிருந்து நழுவி...எதிர்ப் புறம் அங்காடிக்கு அருகே சாலையோரத்தில் இருந்த கொய்யாப்பழ வண்டியை நாடிச் சென்றேன்.

சராசரியாக நாம் பார்க்கக் கூடிய கொய்யாக்களை விட அளவில் பல மடங்கு பெரிதாக இருந்த அந்தப் பழங்களின் விலை -( இந்திய மதிப்பை விட சிங்களப் பணத்தின் மதிப்பு குறைவுதான் என்றபோதும்)-மிக மிக அதிகமாகவே இருந்தது.ஆனாலும் சீன உணவு விடுதியில் நான் உட்கொண்டிருந்த பற்றாக்குறையான உணவின் காரணமாகப் பசி,என் வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்தது.மேலும் பழம் விற்றுக் கொண்டிருந்த தமிழ்ப்பையனின்(அவனுக்கு 18,19 வயதிருக்கலாம்)களையான சிரித்த முகம் ,அவனுடன் கொஞ்ச நேரம் உரையாடும் ஆவலையும் என்னுள் தூண்டி விட்டிருந்தது.
பழம் உண்மையிலேயே அபூர்வமான சுவையுடன் மிக மிக நன்றாகத்தான் இருந்தது(பாரீஸ் வரையிலும் கூட அந்தப்பழங்கள் சில நேரங்களில் எனக்குப் பசியாற்றி உதவின).

அவற்றைத் தினந்தோறும் தலை மன்னாரிலிருந்து கொண்டு வருவதாகச் சொன்ன அந்த அந்த முஸ்லிம் பையன்,நாங்கள் தமிழர்கள் என்பது தெரிந்ததும் ,எங்களிடம் பிரியத்தோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவற்றை அழகாகக் கூறு போட்டு, உப்பு,மிளகாய் தூவித் தந்தான்.
அவனிடமும் பிரபாகரன்பற்றி நான் பேச்செடுக்க....சட்டென்று ஒரு கணம் என்னை ஏறிட்டுப் பார்த்துவிட்டு,
’’காந்தியைக் கூடத்தான் சுட்டுட்டாங்க’’
என்றான்.
அடுத்த கணமே
‘’இதோட நாலு தடவ சுட்டாச்சு’’
என்றும்சேர்த்துக் கொண்டான்.

இவன் ,புலித் தலைவரைக் காந்தியோடு சமநிலப்படுத்துகிறானா அல்லது அப்படி ஒரு மரணத்தையே நம்ப மறுக்கிறானா....,புரியவில்லை.
ஆனால்....சில பிம்பங்கள் நமக்குள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்கள்,எந்தச் சக்தியாலும் அழிக்க முடியாத வலுவான பதிவுகள் என்பது மட்டும் எனக்கு அப்போது தெளிவாகப் புரிந்தது.

பேருந்தில் ஏறத் தயாராக வந்த சக பயணிகள் சிலரிடமும் கொய்யாவின் சுவை பற்றிச் சொல்லி,அவனது விற்பனைக்கு ஓரளவு உதவ முற்பட்டேன். அப்போதைய நிலையில் என் இலங்கைத் தமிழ்ச் சகோதரனுக்குஎன்னால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்.

இரவு மணி 1.30க்குப் பாரீஸ் கிளம்பும் விமானத்தைப்பிடிக்க வேண்டுமென்பதாலும்,ஆறு மணிக்கு மேல் அடங்கி விடும் அந்த ஊரில் அதற்குமேல் எதையும் பார்க்க இயலாது என்பதாலும்,வெள்ளவத்தையிலுள்ள ஒரு விடுதியில் (Global tower hotel)ஆறு மணி முதல் இரவு ஒன்பதரைவரை நாங்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
என் கேள்விகள் எழுப்பிய தூண்டுதலாலோ,நாங்கள் தமிழ்ப் பயணக் குழு என்று கருதியதனாலோ....போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அவரவர் இருப்பிடங்களில் மீள் குடியமர்த்தும்பணி மும்முரமாக நடந்து வருவதாக (அவர் சொன்ன கணக்கு 4 லட்சம்.இக்கட்டுரை எழுதும் இந்த அக்டோபர் மாதம் வரையிலும் கூட அந்தப் பணி இன்னும் சரியாக முழுமை பெறவில்லை) விடுதிக்குச் செல்லும் வழி நெடுகச் சொல்லிக் கொண்டே வந்தார் அஜித்.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான கடைகள்,அவர்கள் வழிபடும் கோயில்கள் என்று அந்தவெள்ளவத்தைப் பகுதி முழுக்கத் தமிழர்களே அதிகம் நிறைந்திருப்பதால் அதற்குக் ‘குட்டி யாழ்ப்பாணம்’என்ற பெயர் கூட உண்டென்று சொல்லி எங்களைக் கொஞ்சம் குளிர வைக்க முற்பட்டார் அவர்.’சிங்களவரான எங்களுக்கு எல்லாத் தமிழரோடும் பகையில்லை...தீவிரவாதிகளோடு மட்டும்தான்’ என்று,தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களுக்கெல்லாம் ஏதேதோ பதில்களை..சமாதானங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்.அவர் நிலையில் அவரால் வேறு எதைத்தான் சொல்லிவிட முடியும்?

கடற்கரைச் சாலையில் அமைந்திருந்த அந்த விடுதியிலிருந்து புலப்பட்ட சுற்றுப் புறமும் இயற்கைக் காட்சியும் அற்புதமாக இருந்தன.

இலங்கைக்குள் நுழைந்தது முதல் ‘இலங்கையில் இருக்கிறோம்’என்ற உணர்வு(feel)எனக்கு அவ்வளவாகக் கிடைக்கவே இல்லை;அத்தகையதொரு உணர்வு கிடைத்த முதல் தருணம் அது.





ஆனாலும் ’கடல் வாசல் தெளிக்கும் அந்த வீட்டின்’(நன்றி-வைரமுத்து-கன்னத்தில்முத்தமிட்டால்) முற்றத்தில் நின்று , மறிந்து வரும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது...இனம்விளங்காத கனமும்,துயரமும் இதயத்தைப் பிசைந்ததென்னவோ உண்மை.

’’தெற்குமாகடலுக்கு நடுவினிலே அங்கோர் கண்ணற்ற தீவினிலே..............
‘’நாட்டை நினைப்பாரோ-எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ அவர்
விம்மி விம்மி அழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே’’


என்று பீஜித்தீவின் கரும்புத்தோட்ட அழுகுரலைப்பற்றிப் பாரதி பதிவு செய்த வரிகளே அந்தக்கடலலை முழக்கத்திலும் கலந்து வருவதைப் போல எனக்குத் தோன்றியது.

பிற பயணிகள் ஓய்வெடுப்பதிலும்,குளித்து முடித்துத் தங்களை அடுத்த பயணத்துக்குஆயத்தம் செய்து கொள்வதிலும் முனைந்திருந்தனர்.
உறைந்து போன மனத்தோடு , விடுதியின் மூன்றாவது மாடியில் அமைந்திருந்த அறையின் ஜன்னல் வழியே,கடலையே வெகு நேரம் வெறித்துக் கொண்டிருந்த நான் என்னையும் அறியாமல் சற்றுக் கண்ணயர்ந்தபோது..இரவு உணவுக்கான அழைப்பு..!
அந்த உணவும் எனக்கு ஏற்றதாக இல்லாமல் போகவே,வெறும் சோறும்,தயிருமாவது கிடைக்குமா என்றுதேடிப்போன எனக்கு இரண்டு தமிழ்ப் பணியாளர்கள் ஓடோடி வந்து உதவினர்.அன்போடு உபசரித்த அவர்களோடுசற்றுப்பேச்சுக் கொடுத்தபோது,கொழும்பிலுள்ள சொத்துசுகங்களையெல்லாம் விட்டு விட்டு ஓடிய தமிழர்கள் சிலரின் கண்ணீர்க் கதைகளைச் சுற்றுமுற்றும் பார்த்தபடி சிறிது தயக்கத்துடன் என்னிடம் பகிர்ந்து கொண்டனர்.

இரவு உணவோடுஎங்கள் இலங்கைத் தங்கல் முடிந்து விட, இரவு ஒன்பதரை
மணி அளவில் பண்டாரநாயகா விமன நிலையம் நோக்கிஎங்கள் பேருந்து கிளம்பியது.

இலங்கைப் பயணம் அப்படிக் ’குறுகத் தறித்த குறள்’போலச் சுருக்கமாக முடிந்து போனதில் எனக்குச் சற்று வருத்தம்தான்.ஆனால் உள்ளபடி,எங்கள் ஐரோப்பியச் சுற்றுப் பயணத்தில் இலங்கை முதலில் இடம்பெற்றிருக்கவே இல்லை.இணைப்பு விமானத்திற்காகக் காத்திருக்கும் நேரத்தை
மிகச் சிறிய ஒரு கொழும்புச் சுற்றுலாவுக்குப் பயன்படுத்தி நாங்கள் இன்னொரு நாட்டையும் கொஞ்சம் காண்பதற்கு வழியமைத்துக் கொடுத்திருந்தது எங்கள் சுற்றுலா அமைப்பு.(Shalom travels,Chennai).
ஏதோ சிறிது நேரமாவது இலங்கையின் ஒரு சிறு பகுதியையாவது காண முடிந்ததே ...அது வரையில் மகிழ்ச்சிதான்.

ஆனாலும்....
இலங்கையின் அழகை...அதன் ஜீவனை ...அதன் உயிர்த்துடிப்பை உள்ளபடி உணர்ந்து ரசித்து உள்வாங்கிக்கொள்ள.....
முதலாவது....இன்னும் சில நாட்களாவது கட்டாயம் வேண்டும்;

இரண்டாவது,கொழும்பை மட்டும்...அதன் ஒரு சில பகுதிகளை மட்டும் ஒரு அரை நாள் அவகாசத்தில்பார்த்து முடிவுக்கு வந்து விடாமல், தீவின் முக்கியமான வேறு சில இடங்களையாவது பார்க்க வேண்டும்;

இதையெல்லாம் விட முக்கியமாக....அதற்கான நல்ல மனநிலை வாய்த்திருக்கவும் வேண்டும்.(துரதிருஷ்டவசமாக நான் எத்தனை முயன்றும் தற்போதைய இலங்கைச் சூழல் அப்படிப்பட்ட மனநிலையிலிருந்து என்னை அன்னியப்படுத்தியே வைத்து விட்டது)

என்றாவது ஒரு நாள்,காலம் கனியும்போது....
தமிழர் உரிமையோடு சமத்துவம் பெற்று வாழும் அந்தத் திருநாளில் இலங்கையை மட்டுமே சுற்றிப்பார்க்க மகிழ்வான மன நிலையோடு நிதானமாக அங்கு வந்தே தீருவேன் என்று எனக்கு நானே சூளுரைத்துக்
கொண்டபடி,

கால்செருப்பிலிருந்து,கை வளையல் வரை கழற்றி வைக்கும் கடுமையான விமானநிலையப் பரிசோதனைகளுக்கு உட்பட்ட பிறகு, பாரீஸ் செல்லும் ஸ்றீலங்கன் விமானத்தில் ஏறிஅமர்ந்தேன்.
(பயணம் தொடரும்)

இனணைப்புக்கள்;

18நாட்கள்,10நாடுகள்.(1)

18நாட்கள்,10நாடுகள்(2)

18நாட்கள்,10நாடுகள்(3)

2 கருத்துகள்:

  1. உங்கள் இலங்கை பற்றிய கருத்துக்கள் சரியே. அடுத்தமுறை வர முன்னர் பதிவிடுங்கள். நங்கள் சுட்டிக் காட்டுகிறோம். சைவ உணவுடன்.

    பதிலளிநீக்கு