3.5.10

புத்தகத் திருநாளில் (2)

இணையத்தில் அறிமுகமாகித் தனது குழிவண்டுகளின் அரண்மனை என்ற கவிதை நூலை எனக்கு அனுப்பி வைத்திருக்கும் மற்றொரு நண்பர் பத்திரிகைத் துறையில் பணியாற்றும்
திரு த.அரவிந்தன்.(தாவரம் , த.அரவிந்தன் என இரு வலைப்பூக்களிலும் தனது படைப்புக்களைப் பதிவேற்றி வருகிறார் அரவிந்தன்)

கவிதை என்பது உணர மட்டுமே கூடியது.
அதிலும் குறிப்பாகப் பல மாற்றங்களுக்கும் உட்பட்டுவரும் தற்காலக் கவிதை மொழி ஆழ்ந்த வாசிப்பால் அக நோக்குப் பயணத்தால் உள் வாங்கிக் கொள்ளக் கூடியது.
அதனால் அரவிந்தனின் கவிதையை ஆய்வுக்கு உட்படுத்தி அலசிக் கொண்டிருக்காமல்...வியாக்கியானங்கள் தந்து விளக்காமல் ஒரு சில கவிதைகள் மட்டும் வாசகப் பார்வைக்கு முன்வைக்கப்படுகின்றன.

படிவம்

மணல் வீடு கட்டி
குழந்தைகள் விளையாடுகிறார்கள்.

ஒரு விண்ணப்பப் படிவத்தில்
பெயரில்லாத
ஒரு பெயரை
தகுதியில்லாத
ஒரு தகுதியை
நிரந்தரமில்லாத
ஒரு முகவரியை
நம்பிக்கையாய்
ஒருவன் பூர்த்தி செய்கிறான்

மணல் வீடு கட்டி
குழந்தைகள் விளையாடுகிறார்கள்

பாரம்

மிதித்தபடியே
இறக்கி வைக்கப்படும்
பலரின் பாரங்களால்
காய்ந்து
கருகி விடுகின்றன
மைதானத்துப் புற்கள்

வெளியேறும் பாடல்கள்

கறுப்பு வெள்ளை
கட்டைகளுக்குப் பின்னே
பல நூறு பாடல்கள்
வௌவ்வால்கள் போலத்
 தொங்கிக் கொண்டிருந்தன
பிடித்தவொரு பாடலைத் தேர்ந்து
அவன் இசைக்கத் தொடங்க
பிற பாடல்கள்
வெளியேறிப்
பறந்து போயின
வேறு பல வாத்தியக்கட்டைகளுக்கு.

மரம் ஈனும் குழந்தை

வெயிலோடு கலந்து
மரம் ஈனுகிறது
கொழுகொழுவென
நிழற்குழந்தை

ரசிக்காவிட்டால்
ஒரு துயரமும் இல்லை

மிதிகளால் அழும்
குழந்தையைத் தூக்கி
இப்படியும் அப்படியுமாக
அசைத்து
காற்று தாலாட்டுகிறது.

’’அரவிந்தனின் கவிதைகள் தனிவழியில் உருவாகி இருப்பவை.....
கவிதை எப்போதும் புதுமையை எதிர்நோக்கி நிற்கிறது என்பதும் புதிதாக வரும் கவிஞன்,இந்தப் பொதுமொழியைக் கடந்து  தன்னுடையதான  கவிதை மொழியை நிறுவ வேண்டியது கட்டாயமாகிறது என்பதும் கவிதையாக்கத்தின் சவால்கள்.
இந்தச் சவால்களைத் தன்னுடையதான மாற்று வழியில் அரவிந்தன் எதிர் கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சான்றளிக்கின்றன.’’
என்று நூலின் அணிந்துரையில் கவிஞர் சுகுமாரன் குறிப்பிடுவதற்கான காரணங்கள் இதிலுள்ள கவிதைகளைப் படிக்கப் படிக்க வெளிச்சமாகும்.

திரு அரவிந்தன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

நூல் வெளியீடு;

‘குழிவண்டுகளின் அரண்மனை’
த.அரவிந்தன்,
அருந்தகை,
E 220,12th street,
Periyar Nagar,
Chennai 600 082

1 கருத்து: