3.4.18

‘யாதுமாகி’-ஒரு மதிப்புரை

எம்.ஏ.சுசீலாவின் ‘யாதுமாகி’

[நன்றி- http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/28623-2015-06-04-03-13-05]



நாவலின் சுருக்கம் :
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்த தேவி என்னும் பெண்மணியைப் பற்றிய கதை. ஒன்பது வயதில் அவரின் பால்ய விவாகம், ஒரு வருடத்திற்குள்ளே அந்த கணவரின் மரணம். அதன் பின் அவளின் தகப்பனார், பெண்ணுக்கு, தன் தாயின் பேச்சைக் கேட்டு தான் செய்துவைத்த பால்யவிவாகத்தால் மனம் வருந்தி, அவளைப் படிக்க வைக்கிறார்.
பள்ளிப்படிப்பு முடியும் தருவாயில் தகப்பனாரும் இறந்து போய்விட, வீட்டில் முடக்கப்படுகிறாள். மீண்டும் தன் தமையனின் துணையுடன் கல்லூரி படிப்பை முடித்து, ஆசிரியராய் பணியாற்றத் தொடங்குகிறார். மறுமணமும் செய்துக் கொள்கிறார் ஒரு ராணுவ அதிகாரியை. அவருக்கும் இது இரண்டாவது திருமணமே.
அவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறாள். அதன் பிறகு கணவரின் மரணம், அம்மாவின் மரணம் என்று அடுத்தடுத்து. மகள் படித்து உயர்ந்து கல்லூரியில் பேராசிரியை ஆகிறார். அவளின் திருமணம் இவரைத் தாயாய் மதிக்கும் ஒருவருடன் அமைகிறது. ஆனால் அது வெளிவேஷம் எனப் புரிந்துப் போகிறது. அவன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தாதால், மகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறது.
இப்போது மகள், பேத்தி என இருவரையும் சேர்த்தே சுமக்கும் ஒரு பொறுப்பினை தாங்கி, முன்னோக்கி நகர்கிறார். இதுதான் இந்த நாவலின் அம்சம்.
சுயசரிதை நூல்கள் :
மகள் தன் தாயின் வாழ்க்கையை எழுதியிருக்கும் ஒரு சரிதை, கதை வடிவில் புனையப்பட்டுள்ளது. வாழ்ந்த காலகட்டங்களை நினைவு கூறுதல் மாதிரிபட்ட சுயசரிதை சார்ந்த புனைவுகள் அதிகம் வந்திருக்கிறது ஆங்கிலத்தில். அம்மாவுடைய oral story telling யை வாய்மொழி வழியாய் வருவதை கதைப்படுத்துதல். அப்போது, அதில் இருந்த மனிதர்கள், தேதிகள், அந்த வாழ்வியல் நிகழ்வுகள், காலகட்டங்கள், சேர்த்து தொகுத்தல்.
இப்படி ஒரு biographical கதை எழுதும் போது, எழுதுபவர்கள் ஒரு worksheet மாதிரி தயார் செய்வது வழக்கம். எந்த வருடம் என்ன நடந்தது என்ன நிகழ்வு அது அதை கதையின் களத்திற்குள் கொண்டு வருவது யாரை எதை முதன்மைப்படுத்தி கதையை கொண்டு செல்வது என்பது குறித்த ஒரு அலசல் இருக்கும். அதை இங்கும் கடைபிடித்திருக்கிறார் ஆசிரியர். 
அவர் வைத்திருக்கும் தலைப்புகள் அதைச் சொல்லி செல்கின்றன. சென்னை 1926, திருவையாறு 1935, காரைக்குடி 1948 என்பதாய் இருக்கிறது.
வகைப்படுத்துதல் :
வகைப்படுத்துதலை இரண்டு வகையாக்கியிருக்கிறார்.
ஒன்று, அத்தியாயங்களை ஆண்டுகளின் வரிசையில் வைக்காமல், அத்தியாயங்களின் தன்மையுடன் ஒருங்கிணைத்திருக்கிறார்.
இரண்டாவது, சில அத்தியாயங்கள் படர்க்கை வழக்கிலும், அதாவது அந்த தாயின் பார்வையிலும் சிலவை இந்த நாவலை எழுதியதை அமையும் மகளின் பார்வையிலுமாய் .வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாடுகள் :
அடுத்ததாய், இந்த மாதிரி சுயசரிதை நாவல்களில், சில கட்டுப்பாடுகள் இருக்கும்.
அந்த காலத்தில் மகளுக்கு தன் தாயின் மீதான அனுபவம் மிக குறைவாகவே இருக்கும். நல்ல புரிதலுடன் பேசுவது மிக குறைவே. தாய் சொல்லிக் கேட்டது, தானாய் அறிந்தது மற்றும் அவர் தோழியிடம் கேட்டு தெரிந்தது என்று தொகுத்து, அதைத்தான் புனைவுப்படுத்த முடியும்.
மகளின் பார்வையில், அவள் பள்ளி இறுதி படிக்கும் போது, தன் தாய் எப்படியிருந்தார், கல்லூரி சமயம், மேற்படிப்பு சமயம், கல்லூரியில் வேலை சேர்ந்த சமயம், அவளின் பெண்ணே பெரிய பிள்ளையாகி மேற்படிப்பு செல்லும் போது என்று ஒவ்வொரு காலகட்டங்களிலும் தாயின் செயல்களை, தன்னோட பார்வையில், தன் வாழ்க்கையை தாயுடன் இணைத்து கதை உணர்வுகளுடன் மிக நேர்த்தியாக சுயசரிதை என்பதே இல்லாமல், புனைவு செய்யப்பட்டு இருக்கிறது.
கதாப்பாத்திரங்கள் :
தேவியின் அம்மா, தன் மகளின் பால்ய விவாகத்தின் போது வெறும் ஒரு மௌன சாட்சியாக இருக்கிறார். அவர்களின் திருவையாறு வீட்டின் சூழல், அந்த முப்பதுகளில் இருந்த பெண் மதிப்பீடுகள் உறவுகளை மீறாமை எல்லாமே அவளின் தாயிடம் காண முடிகிறது. 
மௌனமான பெண்மணியாக அவரை அடுத்தடுத்த காலகட்டங்களில் கொண்டு செல்கிறார். ஆனால் சிறிது முன்னேற்றத்துடன். தேவி கல்லூரி படிக்க தன் மகன் எடுக்கும் முனைப்பை ஆதரிக்கிறார் மௌனமாகவே
இதை உணரும் தேவியின் மனநிலை அவரின் இறப்பின் போது தேவியின் அழுகை மற்றும் தன் மகளிடம் ‘அவரால் முடிந்ததை அவர் செய்தார்’ என தன் தாயைப் பற்றி சொல்வதிலும் தெரிகிறது.
ஆண் கதாபாத்திரங்கள் மிக குறைவாக இருக்கிறது. அவற்றை subtle characterization என்னும் அமிழ்ந்து போன பாத்திரப் படைப்பே கொடுத்திருக்கிறார்.
முதலில் அவரின் தகப்பனார், அடுத்ததாய் இரண்டாவது கணவர், அடுத்தது அவரின் மருமகன்
தகப்பனார், தன் தாயின் பேச்சைக் கேட்டு தன் மகளுக்கு பால்ய விவாகம் செய்து வைத்துவிடுகிறார். அந்த காலகட்டத்தின் விளைவு அவர் அப்படி நடந்துக் கொள்வது. இத்தனைக்கும் அவர் கல்லூரியில் வேலை பார்க்கிறார். ராஜாராம் மோகன்ராய் போன்றோரின் கூட்டங்களுக்கு சென்றும் வருகிறார். ஆனாலும் அவரால் தன் தாயின் பேச்சை மீற முடியவில்லை. ஆசிரியர் அவர் மேல் குறையோ குற்றச்சாட்டோ வைக்கவில்லை. மருமகன் இறந்துபோன பிறகு, தன் தவறை நினைத்து வருத்தப்பட்டு அவளை படிக்க வைக்கிறார். அதனால் அந்த ஆண்மகனின் மீது நமக்கு ஒரு மரியாதையை உண்டு பண்ணுகிறார் ஆசிரியர்.
அடுத்தது அவரின் இரண்டாவது கணவர். ராணுவத்தில் வேலைப் பார்க்கிறார். ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை இழந்தவர். அதிகமாக பேசியதாக காட்டவில்லை. புத்தகங்களுடனே இருக்கிறார். தன் சொந்த மகளிடமே அதிகமாய் பாசம் காட்டுவதில்லை. வந்து சாப்பிட்டுவிட்டு மாடிக்கு சென்றுவிடுகிறார். அவரின் மகளை தாய் தான் பேசு என்று அழைத்து செல்கிறார்.
அந்த பாத்திரப் படைப்பு ரொம்ப அழகா பண்ணியிருக்காங்க. அவர் குழந்தையே அவரிடம் வரும் போது எப்படா அப்பா நம்மை கீழே போய் விளையாட சொல்லுவார் என்று எதிர்ப்பார்த்து நிற்கும். கல்யாணி பாட்டி அந்த காலகட்டத்து துறை சார்ந்த பணியில் இருப்பவர்களின் கம்பீரம் அது. அதை அருமையாய் கோடிட்டுவிட்டார் இதில். அவரின் ஒரு குணம் - பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்து, தேவியை வேலைக்கு போக அனுமதித்தது,  அவங்களுக்கு எந்த விதமான தொந்தரவும் செய்யாமல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றது. மௌனமாய் ஒரு மனிதர் சாதனைவாதியாக தோன்றுகிறார்.,
மூன்றாவது ஒரு கதாபாத்திரம், அவரின் மருமகன். அவனை மிகவும் நம்புகிறார் முதலில், தன் பெண்ணை கட்டுவதற்கு தான் இவ்வளவும் செய்கிறான் என்பது தெரியாமல், தன்னை தாயாய் பாவிக்கிறானே என்னும் எண்ணத்தில் அவனை உதவிகள் செய்ய அனுமதிக்கிறார். மேலும் அவன் தன் மகளை திருமணம் செய்ய கேட்கும் போது தன் பெண்ணை சரி சொல்ல கேட்கிறார். மகள் மறுக்கவே, விட்டுவிடுகிறார். அதன் பிறகு திருமணமும் ஆகி, அவரையே அவன் கேவலப்படுத்தி பேசும்போது மகள் உடைந்து அவனை தன் வாழ்க்கையை விட்டு விலக்குகிறார்.
மூன்றாவதாய் காண்பித்த இந்த ஆணின் கதாபாத்திரம் ஏற்கனவே காட்டிய இருவரை விட வித்தியாசப்பட்டு, ஒரு காலத்தில் அவரை சுற்றியிருந்த fringes உறவுகளில் இருந்த ஆண்களின் கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறது. அப்போ வாழ்ந்த ஆண்களின் மனநிலையை தன் மரும்கனிடமும் காண்கிறார்.
சிறப்புகள்  :
எதையும் பெரிதாய் மனதிற்குள் கொண்டு செல்லாமல், தன் மகள், பேத்தி ஆகியோரை உயர்த்த முன்நோக்கியே பார்த்து வாழ்கையை கொண்டு செல்கிறார்.
அடுத்து என்னவென்று பார்க்க வைக்கிறார். இந்த கதையின் கருவே அதுதான் அடுத்ததை நோக்கி வாழ்க்கையை செலுத்துதல். பழைய நினைவுகளிலேயே தங்கிவிடாமல், அடுத்ததை நோக்கி பயணிப்பது.
அப்போதுதான் நாமும் நிமிர்ந்து நம்மை சுற்றி, நம்ம நம்பி இருப்பவர்களையும் தூக்க முடியும். நூலின் முடிவில் கூட திரும்பியே பார்க்காமல் முன்னோக்கி மட்டுமே ஓடிக் கொண்டிருக்கிறாள் கங்கை என்ற வார்த்தைகள் புது உலகத்தை காட்டும். அந்த வார்த்தைகளுக்கு இருக்கும் அழுத்தம் இந்த கதையில் நான் உணர்ந்தேன்.
யாதுமாகி, என்னும் சொல்லில் அந்த பெண்மணி இந்த கதை முழுவதும் யாதுமாகி நிற்கிறாள்.
இன்னும் ஒரு அருமையான விஷயம் புகைப்படங்கள். மிகவும் செம்மையான கோணத்தில் கதையைக் கொண்டு செல்ல உதவுகின்றன.
ஆசிரியரின் பலமே அவரின் மென்மையான எழுத்துகள்தான். எங்கும் அவர் சமூகத்தைக் குறை சொல்லவோ குற்றம் சாட்டவோ இல்லை. காலபோக்கில் நடக்கும் மேம்பாடுகளை மட்டுமே சொல்லிச் செல்கிறார் இந்த சுய சரிதையில். பெண்ணின் மனதிடம் உறுதியாக இருக்கவேண்டும் என்பதையும், எங்கும் பின்தங்காமல், தேங்கி நின்றுவிடாமல் கடமையைச் செய்து முன்னேறிக் கொண்டே செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் சுசீலம்மா.
இந்த சுயசரிதை அவரின் தாயைப் பற்றியது. இதை சுயசரிதையாக மட்டும் அளிக்காமல் புனைவுகள் அதிகம் செய்து, சமூகத்திற்கு தேவையான ஒரு உந்துசக்தியாய் படைத்துள்ளார்.
படிப்பதற்கும் பொக்கிஷபடுத்துவதற்கும் சிறந்த நூல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக