9.11.25

நினைவுத்திரை-1

 ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடான பெண் எழுத்து மாத இதழில் நான்  எழுதி வரும் நினைவுத்திரை தொடரின் முதல் பகுதி...

(முழுவதும் படிக்க பின்னூட்டம் ஒன்று) 

நினைவுகள் போர்த்திய நெடுந்திரையைச் சற்றே விலக்கிப் பார்த்துத் தமிழ் இலக்கியத்திற்குள் பயணம் செய்தால் சங்க இலக்கிய காலம் முதல் காப்பியங்கள்சமய இலக்கியங்கள்சிற்றிலக்கியங்கள்தனிப்பாடல் திரட்டுக்கள்தமிழில் உரைநடை இலக்கியம் தளர்நடை போடத் தொடங்கிய 19ஆம் நூற்றாண்டின் இறுதி, 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் என்று நவீன காலகட்டத்திற்கு முன்பு எழுந்த பல இலக்கியங்களிலேயும்  கூடப் பல பெண்ணியக் குரல்கள் ஆங்காங்கே மின்னல் கீற்றுக்களாக - சிறு சிறு தெறிப்புகளாகவேனும் பதிவாகி இருப்பதைக் கண்டுகொள்ள இயலும்.

எண்பதுதொண்ணூறுகளில் கோட்பாட்டு ரீதியாக வளர்ச்சி பெற்ற பெண்ணியக் கருத்தாக்க அளவுகோல்களை அவற்றோடு பொருத்திப் பார்ப்பது சரியான மதிப்பீடாக இருக்க இயலாது என்றபோதும் பாதிப்புக்கு ஆளான பெண்களின் அக உணர்வுகளும், மனக் கொந்தளிப்புகளும் பால் பேதம் இன்றி ஆண் பெண் என இரு சாரார் எழுதிய எழுத்துக்களிலும் அந்தந்தக் காலச் சூழல்களுக்கு ஏற்பத் தொடர்ந்து வெளிப்பட்டுக்கொண்டுதான் இருந்திருக்கின்றன

"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல"என்றபோதும் பழமை என்பதாலேயே அது நிராகரிக்கப்பட வேண்டியதுமுற்போக்குவாதத்துக்கு முற்றிலும் முரணானது என்று எண்ணுவதும் பிழையானதே.  அப்படிப்பட்ட கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு அந்த இலக்கியப் பக்கங்களுக்குள் பயணம் செய்தால் பெண்ணியம் என்ற சித்தாந்தம் வேரூன்றி வலுப்பெறுவதற்கு முன்பே பெண் சார்ந்த ஒடுக்குமுறைக்கு எதிரான பல குரல்களைசில கலகக் குரல்கள் உட்பட - நம்மால் இனம் கண்டு கொள்ள இயலும்அந்தக் குரல்கள் எங்கோ ஒரு மூலையிலிருந்து யாரோ ஒருவரிடம் இருந்து மெலிதாக மிக மெலிதாகவே ஒலித்தாலும் அவற்றுள் பலவும் எளிதில்  புறந்தள்ளி விட்டுப் போய் விட முடியாத ஆழமான பல செய்திகளை உள்ளடக்கி இருப்பவை ; நமக்கும் அவற்றை உணர்த்துபவை

 புனைவெழுத்தில் உதித்த கற்பனைப் பாத்திரங்களின் குரல்கள்தானே  என்று அவற்றை ஒதுக்கிவிடாமல்,  யதார்த்த வாழ்வில் நம் கண் முன்பு உயிருடன் உலவிய உண்மையான பல பெண்களின் மாதிரிகளே அவை என்பதை நினைவில் கொண்டால் அந்தக் குரல்களின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையும்,  நியாயமும் நமக்குப் புலனாகும்.

 கால ஓட்டத்தில் மறந்து போன /அல்லது மறைக்கப்பட்ட  /அல்லது மறக்கடிக்கப்பட்ட  அப்படிப்பட்ட  பெண்ணியத் தெறிப்புக்கள் சிலவற்றைப் பொதுவெளியில் கவனப்படுத்தி அசைபோடத் தூண்டுவதே இந்தத் தொடரின் நோக்கம்.

 வாழ்வே கேள்விக்குறியான பல இதிகாச காவிய பாத்திரங்களில் ஒருத்தி சகுந்தலைமகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும்  சகுந்தலையின் கதையில் காவிய அழகுக்காக ஒரு சில மாற்றங்கள் செய்திருக்கிறது காளிதாசனின்  சாகுந்தலம்.

 பொது  வழக்கில் நிலவி வரும் சகுந்தலை பற்றிய அடிப்படையான கதை அனைவரும் அறிந்து வைத்திருப்பதுதான்.

தந்தை விசுவாமித்திரரால் தாய் மேனகை புறக்கணிக்கப்பட்டு விட,அந்தத்  தாயால் அனாதையாகக்  கானகத்தில் விடப்பட்டு கண்வ முனிவரின் பாதுகாப்பில் வளர்ந்தவள் சகுந்தலை .காட்டில் வேட்டையாட வந்த அரசன் துஷ்யந்தனும் அவளும் எவரும் அறியாமல் கந்தருவ மணம் செய்து கொள்கின்றனர். தங்கள் காதலின் அடையாளமாகவும், தங்கள் திருமணத்தை உறுதி செய்யும் வகையிலும்  அரச முத்திரை உள்ள மோதிரம் ஒன்றை அவன் அவளுக்கு அணிவிக்கிறான். சிறிது காலம் கழித்து அரசியாக அவளை  அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு விடைபெற்றுச் சென்ற  அவன் நீண்ட காலமாகியும் திரும்பி வராதததால்  அவனுக்குப் பிறந்த தன் ஆண்   மகவை எடுத்துக்கொண்டு கண்வ  முனிவர் மற்றும் அவரது சீடர்களின்  துணையோடு அவனைத் தேடிச் செல்கிறாள் சகுந்தலை. அவனோ அவளை முழுவதுமாய் மறந்து விட்ட நிலையில் இருக்கிறான். துஷ்யந்தனைப் பிரிந்த காலத்தில் அவனது நினைவாகவே கனவுலகில் மிதந்து கொண்டிருந்த சகுந்தலை, ஆசிரமத்துக்கு வருகை புரிந்த துர்வாசருக்கு நல்ல முறையில்  விருந்தோம்பல் செய்யத் தவறியதால் அவர் இட்ட சாபமே அதற்கான காரணம் என்கிறது சாகுந்தலம். எவனது நினைவு அவளது தன்மறதிக்குக் காரணமாயிருந்ததோ அவனே அவளை மறந்து விடுவான் என்பதே அவர் இட்ட சாபம்.  ஆசிரமத்தில் இருந்தோர் அவரிடம் அவள் சார்பில் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள, துஷ்யந்தன் அளித்த மோதிரத்தை  அவனிடம் காட்டினால்  பழைய நினைவு அவனுக்கு மீளும் என்று சாப விமோசனமும் அளித்திருக்கிறார் துர்வாசர்.ஆனால் சகுந்தலை அவனைத் தேடிப் படகில் பயணம் செல்லும்போது அந்த மோதிரம் ஆற்றில் விழுந்து விடுவதால், தன்னை யார் என்று நிறுவுவதற்கு எந்த சாட்சியமுமே இல்லாமல் போகிறது அவளுக்கு. அவன் தகாத வார்த்தைகளால் அவளைப் பழிக்க அங்கிருந்து திரும்பிச் செல்கிறாள் அவள். பின்னாளில் ஆற்றில் மீன் பிடிக்கும் ஒருவனிடம் அந்த மோதிரம் கிடைத்து அது அரசனின் கைக்கும் வந்து சேர, சகுந்தலை பற்றிய துஷ்யந்தனின் நினைவு மீள்கிறது. அவளைத் தேடி வரும் அவன், வீரனான தன்மகன் பரதனையும் கண்டுகொள்ள, பிரிந்த மூவரும் ஒன்றுசேர்வதாகக் கதை முடிகிறது

 பாரதக் கதையிலும் சாகுந்தலத்திலும் மோதிரத்தைத் தொலைத்த கையறு நிலையில் செய்வதறியாமல் இருக்கும்  சகுந்தலை தன்னை அவனுக்கு நினைவூட்டுவதற்காகத் தாங்கள் உடனிருந்த காலத்து நினைவுகள் பலவற்றையும் அவனிடம் எடுத்துரைக்கிறாள், அவனோடு விவாதிக்கிறாள்,அவனிடம் மன்றாடுகிறாள். ஆனால் எதையுமே  அவனால் நினைவு கூர முடியவில்லை. அரசியாக வேண்டும் என்ற  கனவில் அவள் இருந்ததாலேயே அரசனான தான் அவளைக் காதலித்து மணந்ததாகத் தன் மீது அபாண்டமாகப் பழி சுமத்துகிறாள் என்று கூறி அவள் பேச்சை உறுதியாக மறுதலித்தபடி அவளை ஏற்க மறுத்து விடுகிறான் அவன். அரண்மனையிலிருந்தும் அவளை வெளியேற்றப்  பணிக்கிறான்.  

 


இந்த முதல் அரண்மனைச் சந்திப்பில் சகுந்தலை பேசுவது மட்டுமே பாரதத்திலும் சாகுந்தலத்திலும் பதிவாகியிருக்க, துஷ்யந்தன் பேசிய அவதூறான பல சொற்களால் அவள் பட்ட காயங்களையும், அதற்கு அவள் ஆற்றிய எதிர்வினையையும் மட்டுமே மையப்படுத்தி, ஐம்பதுகளின் இறுதியில் ஓரங்க நாடகம் ஒன்று தமிழில் எழுதப்பட்டிருக்கிறது என்பது பலருக்கு வியப்பூட்டும் புதிய செய்தியாக இருக்கலாம். மீனவன் வழி மோதிரத்தைக் கண்டு துஷ்யந்தன் நினைவு மீட்சி பெற்றதாகச் சொல்லப்பட்ட பிறகு  துஷ்யந்தனும் சகுந்தலையும் சந்திக்கும் இறுதிக் கட்டம் மட்டுமே நினைவுத் திரை ‘ என்ற பெயர் கொண்ட அந்த நாடகத்தில் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. அதை எழுதி இருப்பவர் தமிழ் மரபிலக்கியத்தில் - குறிப்பாகக் கம்பனில் மிகுந்த தேர்ச்சியும், புலமையும் கொண்ட அறிஞரும் - தூத்துக்குடி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவருமான  திரு அ சீனிவாசராகவன் என்பதும் பலரும் அறியாத செய்தியாகவே இருக்கக்கூடும்.

 நாடகத்தில் விரியும் அவர்களது  இரண்டாவது சந்திப்பின்போது சகுந்தலை தன் முயற்சியால் வீரனாக வளர்த்தெடுத்திருக்கும் மகன் பரதனைத்  தன் வாரிசாக்கிக்கொள்ள ஆவல் கொள்கிறான் துஷ்யந்தன். பரதனை அவன் வசம் ஒப்புவிப்பதில் அவளுக்கு எந்தவிதமான  தயக்கமோ,தடையோ இல்லை. ஆனால் கௌரவர் சபை நடுவே துகிலுரியப்பட்ட பாஞ்சாலியாக,  அக்கினிப் பிரவேசம் செய்ய ஆணையிடப்பட்டபோது அதிர்ந்து  நின்ற சீதையாக.. அரசவை நடுவே அவனது மனைவி இல்லை என்று நிராகரிக்கப்பட்ட காயம் இன்னும் கூடப் பச்சைப் புண்ணாக அவள் உள்ளத்தில் தங்கியே இருக்கிறது. மறதிக்கான காரணங்களைச் சொல்லி அவளை அவன் எப்படி சமாதானப்படுத்தப் பார்த்தாலும் , தன் மனைவியாக, நாட்டின் அரசியாக அவளை ஏற்றுக் கொள்வதாக அழைப்பு விடுத்தாலும் அவள் மனம் அதை ஏற்க மறுக்கிறது. எந்த அரச பதவிக்காக அவள் தன்னை ஏமாற்றுவதாகவும், பொய்கள் பல சொல்லிப் பாசாங்காய் நடிப்பதாகவும்  அவன் பழி கூறினானோ அதே அரச பதவி கைக்கெட்டும் நிலையில் இருந்தும் அதை ஏற்பதை விடவும் தனது சுய மதிப்பையே மிகவும் பெரிதாக, உயர்வாக நினைக்கிறாள் அவள்.

’’இன்று நீங்கள் சொல்வதை உடன்பட்டு நான் உங்களுக்கு மனைவியாகி விடலாம் . ஆனால் அன்று ஊரார்  அனைவரும் நிறைந்திருந்த சபை நடுவே நீங்கள் என்னைப் பற்றிக் கூறிய கொடுமையான குரூரமான வார்த்தைகள் என் உள்ளத்தில் எப்போதும்,என்றென்றும்  எதிரொலித்துக் கொண்டேதான் இருக்கும். மனமாரக் காதலித்த உங்களோடு இயல்பான, சராசரியான ஒரு மணவாழ்க்கை வாழ அது என்னை அனுமதிக்காது, அந்த நினைவுகள் ஒரு திரையாக மாறி என்னை அதிலிருந்து  தடுத்துக் கொண்டே  இருக்கும், அதை மீறி உங்களோடு வாழ்வது  எனக்கு சாத்தியமில்லை’’என்று  அமைதியாகச் சொன்னபடி தன் தாய் மேனகையோடு சகுந்தலை அங்கிருந்து கிளம்பிச் செல்வதாக முற்றுப் பெறுகிறது அந்த  நாடகம்.

 மகன் மீது கொண்ட பாசம்,  காதலித்தவனோடு இணைந்து - அதிலும் அரசியாக வாழும் அரிதான வாய்ப்பு இவற்றையெல்லாம் விட மேலானதும், ஒரு பெண்ணுக்கு முதன்மையானதும் அவளது தன் மதிப்பே என்பதை அந்தப் பெண்ணின் கூற்றாகவே  ஒலிக்க விட்டிருக்கும் இந்த நாடகம், அது எழுதப்பட்ட காலகட்டத்தில் ஒலித்திருக்கும் ஒரு புதுமையான  குரல் என்றுதான் சொல்ல வேண்டும்.

 நாடகம் முழுவதும் நினைவு என்பது ஒரு மெல்லிய திரையாக ஊடாடியபடியே இருக்கிறது. காதல் நினைவுகள் சகுந்தலையின் மீது ஒரு திரையாகக் கவிந்தபடி யதார்த்த வாழ்க்கையை மறைத்தபோது- -சாபத்துக்கு ஆட்பட வேண்டி இருந்த அந்தக் காலகட்டத்தில்-  சகுந்தலை ஒரு  மெல்லியலாளாக.., கனவு காணும் இளம்பெண்ணாக மட்டுமே இருந்தாள். 'நீர் வழிப்படூஉம் புணை'போலக் காலம் அவளைத்  தன் ஓட்டத்தில் இழுத்துச் சென்றபோது அவள் உரம் பெற்றவளாகித் திண்மையைக் கைக்கொண்டாள். எப்படிப்பட்ட நினைவுகள் தன்னை மென்மையாக்கினவோ  அவற்றுக்கு நேர் எதிரான - அவற்றிலிருந்து  முற்றிலும் மாறான கொடிய நினைவுகளின் தாக்குதலுக்கு ஆட்பட நேர்ந்த போது, குரூரமான வாழ்வின் நிஜம் முகத்தில் அறைந்தபோது அந்த நினைவுகளையே ஒரு திரையாக்கித் தனக்கு ஒரு கவசம் போல ஆக்கிக்கொண்டு அவனிடமிருந்து - அந்த பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விடுகிறாள் அவள்

 முன்னேற்றம் பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் இன்றைய சமகாலச் சூழலிலும் கூட இத்தகைய அற்பத்தனங்களுக்கு இரையாகும்  பல சகுந்தலைகள்  இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பெண் என்பவள், விரும்பும்போது நெருங்குவதற்கும், விலக்கும்போது ஒதுங்கிச்  செல்வதற்கும்  உரிய ஓர் அற்பமான பண்டம் இல்லை என்பதைச் சுருக்கமான தன் சொற்களின் வழியாகவும், செயல் வழியாகவும் உணர்த்தியபடி   இந்த நாடகத்தில் விடை பெற்றுச் செல்லும் சகுந்தலை, வாழ்வில் எதையும் விட மேலானது சுய கௌரவம் ஒன்றே என்பதையும் பெண் என்ற ஒரே காரணத்தால் அதைக் காவு கொடுக்க வேண்டிய தேவையில்லை என்பதையுமே எல்லோருக்கும் நினைவூட்டிக் கொண்டிருக்கிறாள்.

 வியாசரும் காளிதாசரும் சொல்லத் தவறிய அல்லது பொருட்படுத்தியிராத சகுந்தலையின் மன ஓட்டங்களை, அவமதிப்புக்களால் அவளுக்குள் நேர்ந்த இறுக்கத்தை, அதனால் அவள் எடுக்க நேர்ந்த திடமான முடிவை - சென்ற நூற்றாண்டின் இடைப்பட்ட காலச்சூழலில் வாழ்ந்த  ஆண் எழுத்தாளர் ஒருவர் இனம் கண்டதோடு,  அதை எழுத்திலும் பதிவாக்கி இருக்கிறார் என்பது பெண்ணிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகிறது..

                                              

                                  *************************

         

 

                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக