துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

18.3.26

நினைவுத்திரை- 4

பெண்கள் முன்னிலைப்படுத்தப்படும் - பெண் முதன்மைப்பட்ட ஒரு சமூக அமைப்பு (தாய் வழிச்சமூகம் அல்ல) உருவானால் அது எவ்வாறு இருக்கக்கூடும் என்பதைக் கற்பனையில் கண்டு, அத்தகையதொரு  கனவு மயமான  குறிக்கோள் (Utopian)சமுதாயத்தை 1945 காலகட்டத்திலேயே தனது நாவல் வழி முன்வைத்திருப்பவர்  மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான வ.ரா எனப்படும் வ.இராமசாமி ஐயங்கார் என்பது பரவலாகப் பலரும் அறியாத ஒரு செய்தியாக இருக்கலாம். நடப்பியல் தன்மையிலிருந்து மிகவும் வேறுபட்டதாக,அதிபுனைவு நிலையில் எழுதப்பட்டிருக்கும் அவரது   ‘கோதைத் தீவு’, தமிழ் நாவல் வரலாற்றில் ‘உயர் கனவு’ நாவல்  வகைப்பாட்டில் முதலாவது என்ற சிறப்புத் தகுதியையும் பெற்றிருக்கிறது.


இந்திய நாட்டின் விடுதலைப் போராளிகளில் ஒருவரான  வ.ரா., பாரதியின்

சீடர். முதலில் மணிக்கொடி இதழின் ஆசிரியராகவும் பிறகு வீரகேசரியின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். பாரதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவராகத்தான் வ.ரா., பெரும்பாலும் அறியப்படுகிறாரரே அன்றி ஒரு படைப்பாளி என்ற அவரது பக்கம் -ஒரு சில ஆய்வுகள் தவிர- பொதுவான இலக்கியப் பரப்பில் மிகவும்  குறைவாகவே கவனப்படுத்தப்பட்டிருக்கிறது.

சுந்தரி (1917), விஜயம்(1934), சின்னச்சாம்பு(1942) என இவர் எழுதிய அனைத்துப் புதினங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளே முன்னுரிமை பெற்றிருக்கின்றன. இவற்றைப் பிரச்சாரப் போக்குடையவை என்று திறனாய்வாளர்கள்  மதிப்பிட்டாலும் சமூக மாற்றத்தில் கொண்டிருந்த தீவிரமான நாட்டமே அத்தகைய போக்கைக் கைக்கொள்ள இவருக்குத் தூண்டுதல் அளித்திருக்க வேண்டும். “சமூக சீர்திருத்தத்தில் நம்பிக்கையோ விதவைக் கதைகளில் அனுதாபமோ அற்ற தன்னைக் கூட சுந்தரி என்ற நாவலின் நோக்கம் நெகிழச் செய்து விட்டது” என்பார் விமரிசகரான க.நா. சுப்ரமண்யம்.


தன் காலகட்டத்தில் நிலவிய பெண்களின் அவல  நிலையை  மேற்குறித்த நாவல்களில் நடப்பியல் போக்கில் காட்டியதோடு வ.ராவின் உள்ளம் அமைதியுறவில்லை. எதிர்காலத்தில் பெண் உயர்நிலை அடைவதை ,ஆட்சி செலுத்துவதை, பெண் ஆதிக்கம் முதன்மை பெறும் சமூக அமைப்பு உருவாவதைக் கற்பனையிலாவது கண்டாக வேண்டும் என்று  அவர் கொண்ட விழைவின் விளைவாக உருவான படைப்பே கோதைத்தீவு என்னும் ‘உயர் கனவு’ நாவல். 


‘இலட்சிய சித்திரம்’ என்று ‘கோதைத்தீ'வை மதிப்பிடும் தமிழ் நாவல் ஆராய்ச்சியாளர்களான திரு சிட்டியும், சிவபாதசுந்தரமும் "இலக்கிய உணர்வின் பயனாக நாவல்கள் பிறந்து வந்த ஒரு காலகட்டத்தில் பெண்ணுரிமையை இலட்சியப்படுத்தி ஒரு சோதனை நாவலாகக் கோதைத் தீவை எழுதியவர் வ.ரா" என்று குறிப்பிடுகின்றனர். புதுமைப் பெண்ணைப் பற்றி பாரதி கண்ட கனவு  கவிதையாக உருப்பெற்றது போலவே 

வ.ரா. கண்ட கனவு, நாவலாக  வடிவம் பெற்றிருக்கிறது. 


நாடு விடுதலை பெற வேண்டுமென்றால்,சமூக விடுதலை- குறிப்பாகப் பெண் விடுதலையே அதற்கு  அடிப்படையாக  அமையக்கூடியது என்ற நிலைப்பாட்டிலும் பாரதியை அடியொற்றிச் செல்லும் வ.ரா.,

‘ஆணோடு பெண் சரி நிகர் சமானமாக வாழ்ந்திருந்தால் இந்த நாட்டின் ஆட்சி நம்மவர்களின் கையை விட்டுப் போயிருக்காது’என்ற தனது    ஆதங்கத்தை நாவலின் முன்னுரையில் பதிவு செய்கிறார். புனைவின் வழியாகவாவது அந்த ஏக்கத்தைப்  போக்கிக்கொள்ள அவருள் விளைந்த அகத்தூண்டுதலும், மன எழுச்சியுமே ‘கோதைத்தீவு’  எழுந்ததற்கான அடிப்படைக் காரணிகள்.


"கோதைத் தீவு என் நீண்ட கால முயற்சி, 

நம் நாட்டில் பெண் அடிமையாகப் பிறக்கிறாள் வளர்கிறாள், இறக்கிறாள் அவளுக்கு சொத்துரிமை கிடையாது. இளமையிலேயே தாலி இழந்தால் மறு விவாக பாத்தியம் கிடையாது. மேல்படிப்பு படித்து உயர்ந்த உத்தியோகங்களுக்கு அவர்கள் வர முடியாது. வாய்விட்டு சொல்ல சந்தர்ப்பமும் தைரியமும் உண்டாகுமாகில் பெண்கள் என்ன சொல்வார்கள் என்பதையும்,என்ன செய்வார்கள் என்பதையும் ‘கோதைத்தீவு’ என்ற கற்பனையின் மூலமாக என் சகோதர ஆண்மகன்களுக்கு எடுத்துக் காண்பிக்க எத்தனித்திருக்கிறேன்.” என்று தன் நோக்கத்தைப் படைப்பின் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறார் வ.ரா.


இந்த நாவலின்  கதை மிகவும் சுருக்கமானது. நாடோடியாய் அலையும் கணபதிராயன்,  தன்னைப்போலவே ஊர் ஊராய்ச் சஞ்சரிக்கும் பூபதிராயனைத் தற்செயலாய் எதிர்ப்படுகிறான்.  பெண் விடுதலையில் ஆர்வம் கொண்டிருக்கும் பூபதிராயன், பெண் ஆட்சி செய்யும் நாடு உண்டா என்று தேடிக் கண்டுபிடிக்க விருப்பம் தெரிவிக்க, இருவருமாய்க் கூச்சல்பட்டி என்ற ஊரை வந்து அடைகிறார்கள். அங்கே நடந்த பொதுக்கூட்டத்தில் கோதைத்தீவைச்  சேர்ந்த மாணிக்கக் கோதையாரின் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு, அந்தத் தீவுக்குச் செல்கிறார்கள். அங்கே அவர்கள் காணும் காட்சிகள், கலந்து கொள்ளும் நிகழ்வுகள்,அங்கே நிலவும் பழக்க வழக்கங்கள்  ஆகியவற்றின் வழியே கோதைத் தீவில் நிலவும் மாறுபட்ட சமூக அமைப்பை எடுத்துக்காட்டுகிறார் வ.ரா.


கற்பனைச் சமூகமான கோதைத் தீவின் வாழ்க்கைத் தத்துவமே பெண் சுதந்திரத்தை மையம் இட்டதாக அமைந்திருக்கிறது.மரபு வழிச்சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு மாற்றாக இந்தப் புதிய சமுதாயம் பெண்களாலேயே உருவாக்கப்படுவதை நாவல் இவ்வாறு விவரித்துக்கொண்டு போகிறது.


" இந்தத்  தீவுக்குத் துவக்கத்தில் நூறு பெண்கள் வந்தார்கள் அவர்கள் உழைத்துப் பாடுபட்டு நாரிபுரியின்(தீவின் தலைநகரம்)அடித்தளத்தை உண்டாக்கினார்கள். இந்த நூறு பெண்களும்  ஏன் இங்கு தனியாக-  துண்டாக ஆண்களைக் கூடக் கூட்டிக்கொள்ளாமல் வரவேண்டும்? ஆண் மக்கள் பெண்களைப் படுத்தும் பாட்டைப் பொறாதவர்களாய் இந்த நாட்டுக்குக் குடியேறி வந்தார்கள். பத்து ஆண்டுகள் வரை தாங்களே உழைத்துப் பயிர் செய்து நாரிபுரியைக் கண்டார்கள்.  பத்து ஆண்டுகளுக்குப் பின், பெண் விடுதலையில் நாட்டம் உள்ள ஆண் பிள்ளைகள் இங்கு வந்தனர். அவர்கள் நூறு கன்னிமார் வகுத்த சட்ட திட்டங்களை ஒப்புக்கொண்டு வாழ்ந்து வந்து இவர்களுடன் மண உறவு செய்து கொண்டார்கள்."


பெண் விடுதலைக்கு ஆண்டாளையே முன்னோடியாகக்  கொள்ளும் கோதைத் தீவு மக்கள், அவள் பெயரையே அந்தத் தீவுக்குச் சூட்டியிருக்கிறார்கள். 

ஆண்களின் ஆதிக்கப் போக்கையும் சிறுமைக் குணத்தையும் கண்டு மனம் நொந்து அவர்களைப் புறக்கணிப்பதற்காகவே ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்  கண்டாய்’ என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடியதாக நாவலில் மீள்வாசிப்பு செய்கிறார் ஆசிரியர். இந்தக்காரணத்தினாலேயே புதியதாக உருவான பெண்ணாதிக்கம் நிலவும் சமூக அமைப்பு அவள் பெயரால் கோதைத் தீவு என்று வழங்கப்படுகிறது.


பெண் விடுதலை பற்றிய ஆசிரியரின் எண்ணங்கள் குறிக்கோள் நிலையில் வெளிப்படப்பட்டபோதும், பெண்மைச் சமத்துவமற்ற நிலையினை நடப்பியல் கண்ணோட்டத்திலும் நாவல் சித்தரிக்கிறது. 

"பெண்ணை இந்த தேசத்திலே மனுஷ ஜென்மம் கொண்டவளாகவே கருதவில்லை. அவள் ஆண் பிள்ளையின் சொத்தாகத்தான் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறாள்" என்று கணபதிராயனும் பூபதிராயனும் நிகழ்த்தும் உரையாடலில் சுட்டும் ஆசிரியர்,அடிமை நிலைக்குத் தாழ்த்தப்பட்ட காரணத்தினாலேயே கணவனுக்குத் துணையாக இருக்க இயலாமல் சுமையாக மாறிப் போகிறாள் பெண்  என்றும்  குறிப்பிடுகிறார்.


நடப்பியல் சமூகத்தில் பெண்ணுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டதையும்,பொருளாதாரப் பாதுகாப்பு இன்மையால் முறை பிறழ்ந்த உறவு கொள்ளும் நிலைக்கு அவள் தாழ்ந்ததையும், பெண்ணைத் தேவதாசி ஆக்கும் கொடுமையையும் விரிவாக எடுத்துக்காட்டி அவளுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையை விளக்கும் நாவல், அத்தகைய சமூகத்துக்கு மாற்றாக  ஒரு இலட்சிய சமூகத்தை நம் கண்  முன் விரித்துக்கொண்டு போகிறது. முழுவதும் குறைகளே  நிரம்பிய ஒரு சமூகத்தை நடப்பியல் நிலையிலும்,குறைகள் சிறிதும் அற்ற பூரணத்துவம் பெற்ற ஒரு சமூகத்தைக் கனவு நிலையிலும் நாவல் சித்தரிக்கிறது. நடப்பியல்  ஆணாதிக்க சமூகத்தில் நிலவும் குறைபாடுகள் களையப்பட்டுப் பெண்ணுரிமைத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுவதை விரிவான பல கோணங்களில் வ.ரா விவரித்துக் காட்டுகிறார்.


கோதைத்தீவில், பெண் சார்ந்தவையே முதன்மை பெற்றாலும் ஆணினத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கும் போக்கு இல்லை. ஆனால் இங்கே வாழும் ஆண்கள் பெண்களை மதிப்பவர்களாக ,அவளது சுதந்திரப்போக்கை ஏற்பவர்களாக இருந்தாக வேண்டும் என்பது மட்டும் கட்டாய விதிமுறையாக  வலியுறுத்தப்படுகிறது. நடப்பியல் சமூகத்தில் பெண் இழிவு படுத்தப்படுவது போலக்  கற்பனைச் சமூகத்தில் ஆண் இழிவுபடுத்தப்படுவதில்லை. பெண்ணைப் போலவே அவனும் சமூகத்தில் உரிய அந்தஸ்தும் கௌரவமும் பெறுகிறான்.


கட்டாயத் திருமணம், சீதனம் ஆகிய கொடுமைகள் இந்தச்சமூகத்தில் இல்லை. திருமணங்கள் அவரவர் விருப்பப்படியே நிகழ்கின்றன. திருமண வயது 20 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. காதல்,கலப்புத் திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை, திருமணங்கள் சுயம்வர முறையில் நடைபெறுகின்றன. அத்துடன் கூடவே பெற்றோர் சம்மதமும் கேட்டுப் பெறப்படுகிறது. கணவனை இழந்த   மனைவியும், மனைவியைஇழந்த கணவனும் திருமணம் செய்து கொள்வதற்குத் தீவின்  சட்டம் அனுமதிக்கிறது. விதவை என்ற சொல் பெண்ணுக்கு மட்டுமே வழங்கப்படுவதால் அது தவிர்க்கப்பட்டுக் கணவனை இழந்த பெண் மூளி என்றும் மனைவியை இழந்த கணவன் மோழை எனவும் ஒத்த நிலையில் அங்கே அழைக்கப்படுகின்றனர்..

"கைம்பெண் நிலைமை சாஸ்வதமான நிலைமை. எனவே அதற்கு சொல் ஏற்பட்டுவிட்டது. தாரம் இழந்த புருஷன் நீண்ட காலத்துக்கு மறு விவாகம் செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. எனவே அந்த நிலைமை சாஸ்வதம் இல்லை, ஆகவே அதற்குத் தனியாக சொல் தேவையாக இருக்கவில்லை" என்று மனைவியை இழந்த கணவனுக்குத் தனிப்பெயர் எதுவும் வழங்கப்படாததற்குக் காரணமும் சொல்லப்படுகிறது. மறுமணம் புரியும் உரிமை இருபாலருக்கும் அளிக்கப்படுகிறது.


குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும்  ஒத்த பங்கு அளிக்கப்படுகிறது. அரசியல் பொறுப்பிலும், சமயக் கடமைகளிலும் போர்த் தொழில் பயிர்த் தொழில் ஆகியவற்றிலும் பெண்ணும் பொறுப்பேற்கிறாள். நாவல் எழுதப்பட்ட குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆணுக்கு மட்டுமே உரியது என மரபு வழி சமூகத்தில் கருதப்பட்ட பல செயல்களைப் (படகோட்டுதல்,காவல் துறையில் பங்கு ,அரசியல் நிர்வாகம், பயிர்த்தொழில் பயிற்சி, போர்ப் பயிற்சி, தேகப் பயிற்சி, நீச்சல், கோயில் பூசை, குஸ்தி விளையாட்டு) பெண்களும் மேற்கொள்கிறார்கள். அதே போலப் பெண்ணுக்கு மட்டுமே உரியவை என ஒதுக்கப்பட்டு இருந்த பொறுப்புக்கள் - குறிப்பாக சமையல் முதலியவை ஆணுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.

"இந்த நாட்டில் முக்கியமாக ஆண் பிள்ளைகளுக்கு ஓராண்டு கட்டாய சமையல் பயிற்சி போதிக்கப்படுகிறது. எந்த வீட்டிலும் ஆணுக்குத் தோதில்லாத சமயத்தில் பெண்ணும் பெண்ணுக்குத் தோதில்லாத சமயத்தில் ஆணும் சமைக்க வேண்டும். ஒருவரும் முணுமுணுக்கலாகாது.”

இரு பாலாருக்குமே கட்டாய இராணுவப்பயிற்சி அளிக்கப்படுகிறது.


 "சுதந்திரமுள்ள பெண்களுடன் பிறவி முதல் பழகி வரும் ஆண் குழந்தைகள் திமிருடனும் பொய் கவுரவத்துடனும் வளர மாட்டார்கள்" என்ற நோக்கத்துடன் இளமைப் பருவம் முதலாகவே ஆண் பெண் குழந்தைகள் வேறுபாடு இன்றி வளர்க்கப்படுகிறார்கள். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பயிலும் பள்ளிகளே சமூகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணுக்கு இன்றியமையாமல் இருக்க வேண்டிய உணர்வுகளாகச் சொல்லப்படும் போலி நாணம்,பொய்க்கூச்சம் முதலிய உணர்வுகள் இங்கே முற்றிலுமாய் அகற்றப்படுகின்றன.

‘ நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று கவி பாடிய பாரதி போல,  'நாணம் என்று சொல்லே இந்த நாட்டில் வழங்கப்படுவதில்லை அதற்கு தேவையான சந்தர்ப்பமும் உணர்ச்சியும் இந்த நாட்டில் கிடையாது’ என்கிறது நாவல். கூச்சப்பட்டுக் கொண்டு ஆண்களோடு பழகுவதைத் தவிர்க்காமல் வயதொத்த ஆண்களும் பெண்களும் மரியாதையுடனும், கூச்சம் இல்லாமலும் பேசிக்கொள்வார்கள். பெண்களை ஏளனப்படுத்தும் இழிவுபடுத்தும் ஆண்கள் மட்டுமே இங்கு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.


பெண்ணினத்தை இழிவு படுத்தும் இலக்கியங்கள் தீவில் உறுதியாகத் தடை செய்யப்படுகின்றன. 

" பெண்ணுக்கு உயர் உதவி கிடையாது என்று கூறும் நூல்களும் புராணங்களும் இந்த நாட்டில் தலை காட்ட முடியாது. பட்டினத்துப் பிள்ளையார் பாடல்களை இந்த நாட்டில் எவரும் படிக்கலாகாது என்பது கண்டிப்பான உத்தரவு.கம்பன் புகழேந்தி தாயுமானவர் எழுதிய நூல்கள் பரிசோதிக்கப்பட்டுப் புதிய பதிப்புகள் இயற்றப்பட்டு  வருகின்றன’’ என்பது நாவல் முன் வைக்கும் ஒரு தனித்துவம். தையலை உயர்வு செய்யும் பாரதிக்கும் ஔவைக்கும் ஆண்டாளுக்கும் இங்கே விழா எடுக்கப்படுகிறது.

 

பெண்ணிய நோக்கில் பழைய புராணக் கதைகளுக்குப் புது விளக்கங்களும்,  மறுவாசிப்புக்களும் தரப்படுகின்றன. பொது இடங்களில்  நடைபெறும் நாடகங்களிலும் கூட  அவற்றுக்கே முதன்மை தரப்படுகிறது. இராமாயணத்தில் இடம்பெறும் துணைப்பாத்திரமான  அகலிகையின் கிளைக்கதை, மணிக்கொடி எழுத்தாளரான புதுமைப்பித்தனால் சாப விமோசனம் என்ற சிறுகதையாகக் கற்பனை வடிவம் பெற்றது போலவே பிறிதொரு மணிக்கொடி எழுத்தாளரான 

வ.ராவின் வழியாக நாவலில் பெண்ணியக் கண்ணோட்டத்தில்  மாற்றம் பெறுகிறது.  தீவில்  நிகழும் நாடகம் ஒன்றில் அகலிகையின் வழக்கு மறு ஆய்வு செய்யப்படுவதாகவும், அகலிகையின் இளமையைத் தன் தவவாழ்க்கையால் வீணாக்கியதோடு அவளைக் கல்லாகுமாறும் சபித்த கௌதமனே குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் தன் படைப்பில் கற்பனை செய்கிறார் வ ரா.


ஆணாதிக்க சமூகம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்கு மாறாகப் பெண்ணாதிக்கம் பெற்ற சமூகம் பொதுவான பிற வகைகளிலும் முன்னேற்றம் அடைந்து தன்னிறைவு பெற்றிருப்பதையும் நாவல் விரிவாக விளக்குகிறது. ஏற்றத்தாழ்வற்ற சமூக அமைப்புக்கு எடுத்துக்காட்டாக எல்லோருக்கும் ஒரே வகையான வீடுகள், சாராயக்கடைகள் இல்லாமல் இருப்பது, காவல் நிலையங்களில் குற்றவாளிகள் கண்ணியமாக நடத்தப்படுவது, கல்விச்செலவை அரசே ஏற்பது , ஒவ்வொருவருக்கும் நிலம் வீட்டு மனை ஆகியவை ஒதுக்கப்படுவது , அவரவர் நிலங்களை அவரவரே உழுது பயிரிடுவது,திருமணம் மரணம் ஆகிய இரண்டு செலவுகளும் ஊர்ப் பொதுச் செலவாகப்பகிர்ந்து கொள்ளப்படுவது என்பது போன்ற பல சீர்திருத்தங்கள்,  பெண் முதன்மை பெற்ற கோதைத்தீவின் சமூக அமைப்பில் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன. வீட்டுக்கென்று மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்த பெண், தலைமைப் பொறுப்பேற்றுச் செயல்படும்போது பெண் சமூகம் மட்டுமன்றி ஒட்டு மொத்த சமூகமே சீர்மையும் செம்மையும் பெறும் என்பதே நூலாசிரியர் இதன் வழி உணர்த்த விரும்பும் செய்தி.


மாற்றங்கள் பல நேர்ந்திருக்கும் இன்றைய சூழலில் வைத்துப்பார்க்கும்போது  வ.ரா முன் வைத்திருக்கும்  பல சீர்திருத்தங்கள் நமக்கு மிக எளிதானவையாக.., பொருட்படுத்த வேண்டாதவையாக,ஏன்…வேடிக்கையானவையாகக்கூடத் தோன்றலாம்.  ஆனால் இன்றைய நிலையிலும் பெண்ணியவாதிகளால் தொடர்ந்து வற்புறுத்தப்பட்டுச் செயலாக்கம் பெறாமலிருக்கும் பல திட்டங்கள், முற்போக்கு நிலைப்பாடுகள் ஆகியவற்றை - இந்திய விடுதலைக்கும் முற்பட்ட ஒரு காலகட்டத்திலேயே கூரிய எதிர்கால நோக்குடன் சிந்தித்து, வித்தியாசமான தனது படைப்பின் வழியாக அவர் முன்னெடுத்திருப்பதும், இன்றைய பின் நவீனச்சிந்தனைகளில் ஒன்றான புராண மறுவாசிப்புக்கள் போன்றவை நாவலில் இடம்பெற்றிருப்பதும் அந்தப்படைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி, நிராகரிக்க முடியாத ஒன்றாக அதை ஆக்கிவிடுகின்றன. 


அரசியல் சமூக அமைப்புக்கள் அப்பழுக்கின்றிச் செயல்படும் ஓர் அதீத அற்புதத் தீவை 1516 ஆம் ஆண்டில் கற்பனையாகப் படைத்துக் காட்டிய சர் தாமஸ் மூரின் Utopia வைப் போலவே எல்லா வகையிலும் மேம்பட்ட ,உயர் நிலை எய்திய  ஒரு பெண்முதன்மைச்  சமூகத்தின் இலட்சிய உருவகமாக- ஒரு பரிசோதனை முயற்சியைப்போல  வ.ரா உருவாக்கிய  கோதைத் தீவும்

பெண்ணிய இலக்கிய வரலாற்றில் என்றென்றும் பதிவு செய்யப்பட வேண்டிய அரிதானதொரு ஆவணமாக, அவரது கனவைச்சுமந்தபடி  நிலைத்திருக்கும். 


           **************************



28.1.26

படிக்கட்டு-மொழியாக்கச் சிறுகதை

சொல்வனம் இணைய இதழில்-25.01.26 வெளியாகியிருக்கும் என் மொழியாக்கச் சிறுகதை

படிக்கட்டு
                     


மூலம்
: வங்கமொழியில்- ஆஷாபூர்ணாதேவி
ஆங்கில வழி தமிழாக்கம்- எம் சுசீலா

இது நடந்து பத்து வருடங்கள் ஆகியிருக்கும்.
நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்த உலகிற்கு மேல்.., ஆகாயத்தின் ஏதோ ஒரு மூலையில் இரண்டாம் உலகப்போரின் கருமேகங்கள் திரளத்தொடங்கி விட்டன என்பது பற்றி எதுவுமே தெரியாதவர்களாய் முழுக்க முழுக்க அமைதியான சூழலில் நாங்கள் வாழ்ந்து வந்தோம். கடைகளிலிருந்து அரிசியோ துணியோ வாங்குவது கூட சட்டத்துக்குப் புறம்பானதாக ஆகி விடும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. வாங்கும் சக்தி மட்டும் ஒருவருக்கு இருந்தால் புலிப்பாலை வாங்குவது கூட சாத்தியமே என்பதை மட்டுமே அறிந்து வைத்திருந்தோம். அடிப்படை மருந்துகளுக்குக் கூடத் தட்டுப்பாடு ஏற்படும் காலம் வரப்போகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் எங்களிடம் இல்லை. சாமானிய மக்களின் சொத்து முழுவதும் போர்க் குண்டு வீச்சில் புகையாகி விடப்போகிறது என்று அந்தக்கடவுள்களே சொல்லியிருந்தாலும் நாங்கள் முன்பு அதை நம்பி இருந்திருக்க மாட்டோம். நாட்டு மக்களெல்லாம் கட்டிய துணியோடு மட்டுமே நிற்கப்போகும் ஒரு நாள் வரக்கூடும் என்பதை எங்களில் மிகுந்த கற்பனை வளம் கொண்டவர்களால் கூட அனுமானித்திருக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்.

வசதி படைத்த சமூகத்தினர் சிலர் ,எங்கள் அடிமை நிலை குறித்து வெளிப்படையாகப் புலம்பி அலட்டிக் கொண்டிருந்தபோதும் எங்களைப்போன்ற புத்திசாலிகளுக்கு அது ஒரு பொருட்டாகவே படவில்லை. மாதம் பிறந்ததும், முதல் தேதியன்று சம்பளக்கவரோடு நான் வீட்டுக்குள் நுழையும் நேரத்தில் இந்த உலகத்தையே ஆண்டு கொண்டிருக்கும் ஒரு பேரரசனைப் போன்ற ஓர் உணர்வே எனக்கு ஏற்படும்.

அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பெசதியும் அவளது தாயும் எங்களை நாடிக் கண்ணீரோடு வந்தது அந்த நாளிலேதான்.

அவர்கள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பல வருடங்களுக்கு முன்பு எங்கள் முன்னோர்கள் கட்டியிருந்த வீடுகளில் வாடகைக்குக் குடியிருந்தவர்கள். பிழைப்புத் தேடி கல்கத்தா வரும்படி சூழ்நிலை அவர்களை நிர்ப்பந்தப்படுத்தியிருந்தது. அந்த நிலையில் எங்களைத் தவிர அவர்கள் வேறெங்கேதான் போவார்கள்? கிராமத்து வீட்டில் எங்களுக்கென்று எஞ்சியிருந்த மிக மூத்த, நோயுற்ற உறவினர்கள்தான் பெசதியின் தாய்க்கு எங்கள் முகவரியைக் கொடுத்திருந்தார்கள். அதை வைத்துக்கொண்டு எங்களைத் தேடிக் கண்டுபிடிக்க அவள் அரும்பாடு பட வேண்டியதாக இருந்தது.

எங்களுக்குத் தங்கறதுக்கு இடம் மட்டும் எப்படியாவது கொடுத்திடுங்க அக்கா. இல்லேன்னா, உருப்படியில்லாத இந்தப் பெண்ணோட இந்த இடத்திலே இருந்து நான் நகரக்கூட மாட்டேன்என்று என் இளம் மனைவியின் காலில் விழுந்து மன்றாடியபோது மேலே சொன்ன விவரங்களையெல்லாம் விரிவாக விளக்கிச் சொன்னாள் அவள்.

இவையெல்லாம் நடந்தது பத்து வருடங்களுக்கு முன்பு என்பதை முதலிலேயே நான் சொல்லியிருக்கிறேன். அப்போது என் மனைவியின் உடலில் இளமை இருந்தது, இதயத்திலும் இரக்கம் இருந்தது. பிறரிடம் பரிவு காட்டுவது போன்ற நற்பண்புகளெல்லாம் நகைப்புக்குரியது, பைத்தியக்காரத்தனமானது என்றெல்லாம் அவள் நினைக்கவே இல்லை. அதனால் மனம் நிறைந்த அன்போடு அன்று அவள் அவர்களிடம் பேசினாள்.
அதைப்பத்தி என்ன இப்போ?இங்கேயே எங்களோட இருந்திட்டுப் போங்களேன், எங்க கிட்ட வராம வேற யாரைத் தேடிப் போவீங்க நீங்க?”என்றவள் எங்கள் மகனை நோக்கி,
அந்தப்பொண்ணோட முகம் எப்படி வெளிறிக்கிடக்கு பாரு தம்பி..நீ அவளுக்குக் கொஞ்சம் பிஸ்கட்டும் மிட்டாயும் பலகாரமும் கொண்டு வந்து தரலாம் இல்லையாஎன்றாள்.
பெசதிகொஞ்சம் தண்ணி குடிக்கிறியாஎன்று அவளைக்கேட்டாள்.
பிஸ்கட்டுகளையும் பிற தின்பண்டங்களையும் ஆர்வத்தோடு சாப்பிட்டு முடித்து ஒரு செம்பு தண்ணீரையும் அருந்திய பிறகு, பெசதி சிறிதுஆசுவாசம் அடைந்தாள். பிறகு, தனக்குப் புதிதாக அறிமுகமான அந்த அத்தையைக் கண்கொட்டாமல் பார்த்தவள்,
அட..இவங்கதான் எப்படி தேவதை மாதிரி…, வெள்ளைக்காரங்க மாதிரி இருக்காங்கஎன்றாள்.

அதற்குப பின்பு பெசதியின் தாய் எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டாள் என்று சொல்லத் தேவை இல்லை.

அந்தப்பெண்மணி நன்றி உணர்வு இல்லாதவள் என்று என்னால் பொய் சொல்ல முடியாது. கல்கத்தாவைச் சேர்ந்த பணிப்பெண்கள் யாருமே இந்த அளவுக்குத் தன்னலம் இல்லாமலும், நன்றியுணர்வோடும் வேலை செய்வார்கள் என்று கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. அவள் செய்யும் கடுமையான வேலைகளுக்கு நாங்கள் தரும் சொற்ப ஊதியத்துக்கு இந்த அளவுக்கு நன்றியோடு வேலை செய்வதென்பது எளிமையான கிராமத்து மனிதர்களால் மட்டுமே முடியும்.

சில சமயங்களில் என் மனைவி அவளிடம் இவ்வாறு சொல்லுவதுண்டு.
முழு நேரமும் ஏதாவது ஒரு வேலை செஞ்சுக்கிட்டு, ஏதோ கவலைப்பட்டுக்கிட்டே இருக்கீங்களே அது ஏன் பெசதி அம்மா? இதுக்கு முன்னாலே எங்க கிட்டே வேலை பார்த்த ஆளுக்கு சாப்பாடு, துணிமணி , சம்பளம் இதெல்லாம் கொடுக்காம இருந்தோம்னா நெனக்கிறீங்க? எல்லாத்தையும் கொடுத்தும் அவன் எந்த வேலையையுமே ஒழுங்கா செஞ்சதில்லை

அப்படியெல்லாம் சொல்லாதீங்க அக்கா, நாங்க தங்கறதுக்கு நீங்க இடம் கொடுக்காம இருந்திருந்தா இத்தனை பெரிய ஊரிலே நான் எங்கே போய் எந்த இடத்தைக் கண்டுபிடிச்சிருப்பேன்? இது ஒரு ஊர் மாதிரியே தெரியலை எனக்கு, ஒரு ராட்சசனோட குகை மாதிரியில்லே தெரியுது. இதோட தெருக்களைப் பார்த்தாலே எனக்கு நடுங்குது. இதிலே..என்னோட குழந்தையை நான் எங்கே கூட்டிப் போயிருப்பேன்? எல்லாரும் எங்களை விரட்டித்தான் அடிச்சிருப்பாங்க. நீங்க ரொம்ப இரக்கம் உள்ளவங்க. ரெண்டு வேளை டீ,பலகாரம், தலைக்கு எண்ணெய்இப்படியெல்லாம் வேற யார் தருவாங்கஎன்று உடனே இரக்கப்படும் வகையில் பதில் அளிப்பாள் பெசதியின் தாய்.

உண்மையில் அந்தச்சிறுமியும் நிறைய வேலை செய்தாள் என்றே சொல்லவேண்டும். எலும்பும் தோலுமாக…,ஒல்லியான தேக வாகு கொண்டிருந்த பெசதி, வசதியான சூழலில் வாழ்ந்திருந்தால் நிச்சயம் இத்தனை வேலைகள் செய்திருக்க மாட்டாள். இங்கோ நாள் முழுவதும் மாற்றி மாற்றி அவள் ஏதோ வேலை செய்து கொண்டே இருந்தாள். அவளுக்கு எப்படித்தான் இவ்வளவு நேரம் கிடைக்கிறதோ என்று நானே ஆச்சரியப்படுவேன். துணி துவைப்பது, படுக்கையை சீர் செய்வது, தேநீர் தயாரிப்பது என்று பலவும் பெசதியின் வேலைகளாகவே ஆகி விட்டிருந்தன.

எங்கள் மகன் ஒரு ராஜகுமாரனைப் போல எடுத்ததெற்கெல்லாம் அவளையே ஏவியபடி இருந்தான்.
முழு நாளும் இப்படி அவளுக்கு வேலை சொல்லிக்கிட்டெ இருக்கியே, அவங்க இங்கே வர்றதுக்கு முன்னாலே என்ன செஞ்சேன்னு யோசிச்சுப்பாரு. என் காதிலே விழறதெல்லாம்பெசதி,பெசதிந்னு நீ ஓயாம கூப்பிடறதுதான்என்று சில சமயம் அவனிடம் நான் சொல்வதுண்டு.

அதுக்கு நான் என்ன செய்யறது? எப்ப பார்த்தாலும் ஏதாவது வேலை செஞ்சுக்கிட்டே இருக்கறது அவளுக்குப் பிடிச்சிருக்கு. இல்லேன்னா அடிக்கடி என் கிட்ட வந்துஎன்ன செய்ய என்ன செய்யந்னு அவ ஏன் கேக்கறா? “ என்று அலட்சியமாய்ப் பதில் தருவான் அவன்.

எங்கள் மகன் அவளை விட வயதில் மூத்தவனா என்பதெல்லாம் எனக்கு சரியாகத் தெரியாது. ஆனால் அந்தஸ்தில் அவனை விடத் தான் தாழ்ந்தவள் என்ற உணர்வு அவளிடம் இருந்ததால், அவனை அண்ணா என்றுதான் குறிப்பிடுவாள். சில நாட்களில் எங்களுக்கும் அது பழகிப் போய்விட்டதால் அது பற்றி வியப்பேதும் ஏற்படவில்லை.

ஆனாலும்..,இவையெல்லாம் நடந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. வருடங்கள் பாட்டுக்கு அவற்றின் போக்கில் உருண்டோடிக் கொண்டிருந்தன. பூமி தினமும் சுழன்று கொண்டிருப்பது பற்றியோ , அன்றாட வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பது பற்றியோ பொதுவாக நாம் கண்டுகொள்ளாததது போலவே நாங்களும் எங்களைச் சுற்றி நடப்பதைக் கண்டு கொள்ளாமல்தான் இருந்தோம். பாவாடைக்கு மீறிப் புடவை கட்டும் நங்கையாக பெசதி வளர்ந்து விட்டதையோ, முழுநாளும் பூனைக்குட்டி போல எங்கள் காலடியையே சுற்றிச்சுற்றி வந்தபடி நிறுத்தாமல் ஏதாவது பேசிக்கொண்டே இருந்த முந்தைய நாட்களைப் போல இப்போது அவள் இல்லை என்பதையோ நாங்கள் கவனத்தில் கொள்ளாமலேயே இருந்தோம்.

அதை நான் எப்போது கவனித்தேன் தெரியுமா? போர்ச்சூழல் காரணமாக நாங்கள் வெளியேற நேர்ந்தபோதுதான்..!

குண்டு வீச்சுத் தாக்குதல் குறித்த பயம் இல்லாத பாதுகாப்பான இடம் தேடி, என் உறவினர்களிடமும், முன்பின் தெரியாதவர்களிடமும், சில நாட்களே பழகியவர்களிடமும், பல காலம் பழகியவர்களிடமும் நீர் மருட்சி கொண்ட ஒரு நோயாளியைப்போல நான் மன்றாடிக்கொண்டிருந்த அந்த நேரத்திலேதான் என் மனைவி அவளுக்கிருந்த அந்த பயத்தை என் முன் வைத்தாள்.
நாங்க தலை மறைவா இருக்க எங்கே இடம்கிடைக்கப் போகுதோ தெரியல..நான் என் பையனோட எங்கே வேணும்னாலும் போயிட முடியும்.ஆனா..பெசதி? அந்தப்பொண்ணு இப்ப ரொம்ப வளர்ந்திட்டா. பதினாறு வயசுக்காரி மாதிரி உயரமா இருக்கா. அவளை எங்கே கூட்டிக்கிட்டுப் போறது? நம்மோட சொந்த ரத்தபந்தம்னா அப்ப அது வேற. இவளோ நம்ம கிட்ட வேலை பார்க்கிறவளோட பொண்ணு. அவங்களை நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்களாவே நாம நினைச்சாலும் மத்தவங்களும் அப்படி நினைப்பாங்கன்னு சொல்ல முடியாது இல்லியா? “
எனக்கு அவள் கூற்றிலிருந்த உண்மை புரியாமல் இல்லை.

அது கவலை தரும் விஷயம்தான். ஆனாலும் இப்படிப்பட்ட நேரத்தில் அவர்களை அநாதரவாக விடுவதற்கும் என்னிடமிருந்த மனிதாபிமான உணர்வு இடம் தரவில்லை. உதவி தேவைப்படும் வேளையில் அப்படி அவர்களைப் புறக்கணித்து விட முடியாது. ஆனால் அது அத்தனை எளிதான காரியமாக இல்லை. நிலையாக இருக்கும் ஒரு தோட்டத்திலிருந்து களைகளை எடுத்து வீசுவது போல என் மனைவியையும், மகனையும் வேறு யாருடைய குடும்பத்திலாவது நான் வலிந்து திணித்து விடலாம், ஆனால் என்னிடம் வேலை பார்ப்பவளையும், அவள் மகளையும் நான் அப்படி வெளியேற்ற முடியாது. நான் அந்தப்பேச்சை எடுத்ததுமே உறவினர்கள் என்னை எதிரியைப் போலப் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.

கடைசியில் பல சிக்கல்களுக்கிடையே அவர்களுக்கு ஒரு ஏற்பாடு செய்து முடித்தபோது பெசதியின் தாய் பற்றி இனிமேல் நான் கவலைப்படத் தேவையில்லை என்பது எனக்கு விளங்கியது. தானாகவே ஒரு ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள் அவள் . எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த மனிதர், தன் குடும்பத்தை கிராமத்துக்கு அனுப்பி விட்டு வீட்டைப்பார்க்க ஆளில்லாமல் தவித்துக் கொண்டிருந்தார். ஒண்டிக்கொள்ள ஒரு கூரை தந்ததற்கு நன்றிக்கடனாக, அவரது வீட்டுப்பராமரிப்பு, சமையல் முதலிய வேலைகளை பெசதியின் தாய் ஏற்றுக்கொண்டாள்.

அவளைப் பற்றிய பொறுப்பு எனக்கும் இருந்ததாக நினைத்ததால் அவளை எதற்கும் எச்சரித்து விடுவது நல்லதென்று ஒரு நாள் இப்படிச் சொன்னேன்.
பெரிய நகரத்திலே இருக்கிற ஜனங்கள் எப்படிப்பட்டவங்கன்னு புரிஞ்சுக்கறது அத்தனை சுலபம் இல்லை. அவங்களோட நிஜமான நோக்கம் என்னன்னு நமக்குத் தெரியாது. நாங்க உனக்கு அடைக்கலம் தர முடியாத நிலையிலே இருக்கிற இந்த நேரத்திலே நீ அநாவசியமா எந்த சிக்கல்லேயும் மாட்டிக்காம இருக்கணும்னு நினைக்கறேன்

அவளோஅதையெல்லாம் பத்திக் கவலைப்படாதீங்க அண்ணா. அந்த வீட்டிலே இருக்கிற மனுஷர் ரொம்ப கௌவரமானவராத்தான் இருக்கார்என்று புன்னகையோடு சொன்னபடி நான் கொண்டிருந்த பயங்களையெல்லாம் ஒரே நிமிடத்தில் புறந்தள்ளி விட்டாள்.
அவரது கௌரவம்மதிப்பு இவை பற்றியெல்லாம் அவளுக்கு எப்படித் தெரிந்தது, அவற்றை அவள் எப்படிக்கண்டு பிடித்தாள் என்பது பற்றி எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் இனிமேல் அது என் கவலையில்லை என்பது உறுதிப்பட்டு விட்டதால், குளிர் ஒடுக்கும் ஒரு மாலை நேரத்தில், நரிகளும் பாம்புகளும் வெற்றிடங்களும் நிறைந்த ஒரு தொலைதூரக்கிராமத்தில் என் மனைவியையும்,மகனையும் விட்டு விட்டு நான் மட்டும் நகரத்துக்குத் திரும்பினேன். நான் தங்குவதற்கு ஓர் உணவகத்தில் இடம் தேடிக்கொண்டேன். அதுவரை நாங்கள் வசித்த வீடு என் சொந்த வீடுதான் என்றாலும் நான் மட்டுமே அதில் தனியாகத் தங்கியிருக்க முடியாதில்லையா?

அதற்குப்பிறகு நடந்ததையெல்லாம் இங்கே விவரித்துக்கொண்டு போவது தேவையற்றது.

செய்தித்தாள்கள், அரசாங்க அறிக்கைகள்,பொய்யான வதந்திகள் ஆகியவை உண்மையான போர் நடப்புகள் பற்றித்தரும் விதம் விதமான தகவல்களால் ஒவ்வொரு குடும்பமும் எப்படிப்பட்ட குழப்ப நிலையில் இருந்தது என்பது இப்போதும் கூட எல்லோருக்கும் நினைவிருக்கும். உயிர் வாழ்வதற்காக உயிரையே பணயம் வைத்துக்கொண்டு இருந்தபின், தனியாக மடிந்து போவதை விடக் குடும்பத்தோடு சேர்ந்து செத்துப்போவதே மேல் என்பது உணர்வில் உறைத்தபின்.., எங்களுக்குப் பரிச்சயமான சூழ்நிலையில் வாழ்வதற்காக என் குடும்பத்தை ஒரு வழியாக நகரத்துக்குக் கூட்டி வந்தேன். கைவிடப்பட்டது போல், புறக்கணிப்புக்கு ஆளானது போல் இருந்த நகரம், மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. வெள்ளப் பெருக்கைப்போல மனிதக்கூட்டம் பெருகி வந்து நகரத்துக்குள் திரும்ப வந்து சேர்ந்தது.

எங்கள் அக்கம்பக்கத்தில் , இதுவரை எங்களுக்கு அறிமுகமான …,தெரிந்த குடும்பங்களை விட, பழக்கமில்லாத முகங்களே அதிகம் தென்பட்டன.

பெட்டியிலிருந்து பொருட்களைப் பிரிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே.
அனோங்கோ பாபு வீட்டுக்குப் போய் நாங்க திரும்பி வந்து விட்டோம்னு பெசதி அம்மா கிட்டே சொல்லுங்கஎன்றாள் என் மனைவி. ஒருவேளை அவளுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டிருக்கலாம். ஒன்றரை ஆண்டுகள் கழித்துத் திரும்பி வந்திருக்கும்போது சீர்குலைந்து கிடந்திருந்த வீட்டை ஒழுங்கு செய்வது அவ்வளவு சுலபமில்லைதான். அப்படி நாம் கூப்பிட்ட உடனேயே அவள் வந்து விடுவாளா என்ற சந்தேகத்தை நான் கிளப்பியபோது,
வருவாளோ மாட்டாளோன்னு ஏன் சொல்றீங்க? நாம இப்படி இந்த இடத்தை விட்டு போக வேண்டி வந்திடுச்சேன்னு அன்னிக்கு அவ எப்படி அழுதா தெரியுமா?”

ஆனால் பெசதியின் தாயைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அனோங்கோ பாபுவின் உறவினர் ஒருவரது குடும்பம் கலகத்தாவுக்குத் திரும்பி வந்ததும், அவர்களிடம் அவள் வேலைக்குச் சேர்ந்து விட்டாள் என்று கேள்விப்பட்டேன். இனிமேல் அவள் இல்லையே என்று வருத்தப்படுவதைத் தவிர வேறேதும் செய்வதற்கில்லை. நாங்கள் வீட்டை விட்டுப் போக நேர்ந்ததாலேயே துரதிருஷ்டம் பிடித்த அவள் வேறெங்கோ போய்த் தொலைந்து விட்டாள்.

வீட்டில் குவிந்து கிடந்த ஏராளமான வேலைகள் எங்கள் முதுகை ஒடித்தன. தினமும் மாலை வேளைகளில் அன்றாடம் செய்தாக வேண்டிய பல வேலைகளையும் பட்டியல் போடும் என் மனைவி, பெசதி அம்மாவின் நல்ல குணங்களையெல்லாம் புகழத் தொடங்கி விடுவாள். முடிவில்,
இப்ப மட்டும் அவளோட அட்ரஸ் இருந்தா,,,? “ என்று வருத்தத்தோடு முடிப்பாள்.
நான் ஒரு வேளை சரியான இடங்களில் தேடிப்பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் அப்போது அவள் முக பாவனையில் வெளிப்படும்.

ஆனால் இத்தனை பெரிய நகரத்தில் அவளை எங்கே என்று நான் தேட முடியும்?

மனமார வேண்டிக்கொண்டால் கடவுள் வரம் கொடுக்கும், நேரில் கூட வரும் என்று சொல்வதைப் போல.. எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு நாள் பெசதியின் அம்மா திரும்பி வந்தாள்.

ஒரு மாலை நேரத்தில் நான் வீடு திரும்பியபோது,
இன்னிக்கு பெசதியோட அம்மா என்னைப் பார்க்க வந்திருந்தாஎன்றாள் மனைவி.

அடஅவ இங்கே வந்தாளா? கடைசியா கடவுள் கண் திறந்து பார்த்திட்டார் போல இருக்கு. சம்பளத்தைக் கொஞ்சம் அதிகமா கூட்டித்தரேன்னு நீ கட்டாயம் சொல்லியிருப்பேன்னு நினைக்கிறேன். பழைய ரேட்டெல்லாம் இப்போ மாறிப் போச்சு

உங்களோட சௌகரியத்தைத் தவிர வேற எதையுமே யோசிக்க மாட்டீங்களா நீங்க? அவ இங்கே வேலை செஞ்சாநீங்க சொன்னபடி சம்பளம் அதிகமாத் தரலாம்னுதான் நானும் நெனச்சேன். ஆனா இனிமே எல்லாம் அவ வீடு பெருக்க மாட்டா, சமையல் கூட செய்யறதில்லையாம். வீடு மேற்பார்வை மட்டும்தானாம். அவ பார்க்கிற வேலை எவ்வளவு சுலபமானதுன்னு நான் சொன்னா நீங்க ஆச்சரியப்படுவீங்க. அவ எப்படி நல்லா உடுத்தியிருக்கா தெரியுமா? வெள்ளை வெளேர்னு முழுக்கைச் சட்டை, அழகான பூப்போட்ட நல்லரகப் புடவை…! அப்புறம் பெசதி? இங்கே நாம பார்க்கிற பள்ளிக்கூடத்துப் பசங்களை விடப் பிரமாதமா இருக்கா. கோடு போட்ட புடவை, பூப்போட்ட சட்டை..கை நிறைய வளையல்…, இன்னும் கேளுங்க , குதிகால் உயரமான செருப்பு..! ஒரு காலத்திலே நமக்குத் தெரிஞ்சவளா இருந்த அதே பெசதிதான். ஆனா முன்னே மாதிரி இப்ப பேசக்கூட இல்லை. அவ வேலை பார்க்கிற வீட்டுக்காரரே பெசதி பள்ளிக்கூடம் போறதுக்குப் பணம் கட்டிடறாராம். அது தவிர குரலுக்கு வேற அவ ஏதோ பயிற்சி எடுத்துக்கறா போல இருக்கு, உண்மையாவே அவளோட குரல் இப்போ எப்படி இனிமையா இருக்கு தெரியுமா? என்னிக்காவது ஒரு நாள் அவளுக்கு ரேடியோவிலே கூட சான்ஸ் கிடைக்கும் பாருங்க

எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
போரால் நேர்ந்த பல சலசலப்புகளும் மாற்றங்களும்தான் அவர்களின் அதிருஷ்டத்தை இப்படிப் புரட்டிப் போட்டிருக்க வேண்டும்.

ஆனால்..இது நடந்தும் பல நாட்கள் ஓடி விட்டன.

எங்கள் வாழ்க்கையிலும் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. நாங்கள் நினைத்தது போல எங்கள் மகனை உருவாக்க முடியவில்லை. பள்ளிப்படிப்பை இடையே இரண்டாண்டுகள் விட நேர்ந்ததால் தொடர்ந்து அவனால் சரியாகப் படிக்க முடியவில்லை. கஷப்பட்டுப் படிப்பதைப் போல சில நாட்கள் வீட்டில் பாவனை காட்டியவன் பிறகு அடியோடு அதை விட்டு விட்டான். வீட்டில் வைத்துப் பயிற்சி கொடுக்க ஆசிரியர்களை ஏற்பாடு செய்தும் அதுவும் உதவவில்லை. இந்தச்சின்ன வயதில் குறுக்கு வழியில் வெற்றி பெற ஆசைப்பட்டு அதைத்தேடத் தொடங்கி விட்டான் அவன்.

அவனது அம்மாவின் உடல் நலமும் இப்போது முன்னைப் போல் இல்லை. நானும் அண்மையில் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தேன்.

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறெங்கோ திசை மாறிப் போய்க்கொண்டிருந்தாலும் இது நிச்சயமாக என் கதை அல்ல.
இது பெசதி, மற்றும் அவள் அம்மாவின் கதைதான்

இப்பொழுது நிகழ்காலத்துக்கு வருவோம்.

எந்த வேலையும் இல்லையென்றால் மதிய உணவுக்குப்பிறகு சிறிது நேரம் தூங்குவது என் வழக்கம். இன்று தூங்கும்போது பரிச்சயமான குரல்கள் கேட்டு சட்டென்று விழிக்துக்கொண்டேன். ஜன்னல் வழியே பார்த்தபோது என் ஊகம் சரிதான் என்பது தெரிந்தது. முன்பொரு நாள் பெசதியின் அம்மா கண்ணீரோடு எந்த வாசல் முற்றத்தில் எங்கள் காலடியில் வந்து விழுந்தாளோ அதே இடத்தில் இப்போது தாயும்,மகளும் உட்கார்ந்திருந்தனர்.

பெசதியின் அம்மா, வெள்ளை நிற முழுக்கை சட்டையும் சின்னக்கறுப்புக் கரையோடு கூடிய புடவையையும் அணிந்திருந்தாள். அவளது பெண் என்ன உடுத்தியிருந்தாள் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் அவள் வைத்திருந்த கைப்பை மிகவும் விலை உயர்ந்தது என்பது மட்டும் கண்ணில் பட்டது.

என் மனைவி சொன்ன ஏதோ ஒரு விஷயத்துக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தாள் பெசதியின் அம்மா.
நீங்க இவ்வளவு கஷ்டத்திலும் நெருக்கடியிலும் இருக்கீங்கங்கறதைக் கேக்க எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு. ஒரு தடவை என்னை வந்து பார்க்கச்சொல்லி அண்ணன் கிட்டே சொல்லுங்க, என்னாலே ஒருவேளை ஏதாவது உதவி செய்ய முடியுதான்னு பார்க்கிறேன். சினிமா உலகத்திலே இருக்கிற எல்லாருக்கும் என்னோட மண்டாலிகா மேலே நல்ல மதிப்பு இருக்கு. அவ சொன்னா மேனேஜர் காது கொடுத்துக் கேப்பார். அவளோட பேரும் ஃபோட்டோவும்தான் இப்ப எல்லா பேப்பர்லேயும் வருதே, நீங்க பார்க்கலியா? ம்ம்ம். என்ன சொல்றீங்கநீங்க சினிமாவே பார்க்கறதில்லியா..? ஆமாமாம், இந்த நிலையிலே அது உங்களாலே எப்படி முடியும்? நான் வேணும்னா பாஸ் வாங்கித் தரேன், ஒரு நாள் போயிட்டு வாங்க. ஆமாம்..உன்னோட புதுப்படத்தோட பேரு என்ன பெசதிஇல்லே இல்லேமண்டாலிகா? “

மண்டாலிகா என்ற பெசதி…,தன் கைக்குட்டையில் இருந்த முகப்பவுடரைக் கழுத்தில் ஒற்றியபடியே,
“ ‘போருக்குப் போ..’ அதுதான் பேருஎன்றாள்.

ஆமாமாம், அதுவேதான். என்ன செய்யறது? இந்தமாதிரிப்பேரெல்லாம் என்னாலே ஞாபகம் வச்சுக்க முடியறதில்லை. ஒரு நாள் ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு இவ என்னையும் கூட்டிக்கிட்டுப் போனா. அப்பா…! எத்தனை அற்புதமான இடமா இருந்தது அது? இவளை எல்லாரும் எத்தனை ஆர்வமா பார்த்தாங்க தெரியுமா? என்ன இருந்தாலும் இவ கதாநாயகி இல்லியா? மேனேஜர் கிட்ட அவ ஒரு வார்த்தை சொன்னாப் போதும், அஞ்சு பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்திடுவா. உங்க பையனுக்கு சரியான வேலை அமையலைன்னு சொன்னீங்க.., அவன் விருப்பப்பட்டா டிக்கெட் விக்க வேணும்னா போகலாம்.
ஆமாம்இதெல்லாம் என்னம்மா கொண்டு வந்திருக்கீங்க ? ஐயையோ ,டீயெல்லாம் நான் இந்த நேரத்திலே குடிக்கிறதில்லையே. இனிப்புக்களும் வேண்டாம், எனக்கு வயத்துக்கு ஒத்துக்கறதில்லை, நெஞ்செரிச்சல், வாயுக்குத்து இதெல்லாம் இருக்கு. என்னது..மண்டாலிகாவுக்கா? ஐயோ..? அவ இப்போ எல்லாம் இனிப்பையே தொடறதில்லை. ஸ்வீட் சாப்பிட்டா அவளோட குரல் கெட்டுப் போயிடும்னு அவளோட வாத்தியார் சொன்ன நாளிலே இருந்து அவ இனிப்பையே தொடறதில்லை. என்னது..டீயா? அவ இந்த மாதிரி டீயெல்லாம் இப்போ குடிக்கிறதில்லை. உள்ளதிலேயே உசந்த ரகம் மட்டும்தான் குடிக்கிறா. பாவம் நீங்க…! எதுக்குதான் தேவையில்லாம இதையெல்லாம் செஞ்சீங்களோ? சரி, நாங்க கிளம்பறோம், அப்புறமா ஒரு தடவை வரோம்மா. ஸ்டூடியோவிலே இருந்து எங்களுக்கு இப்ப கார் வந்திடும் . நாங்க வந்தோம்னு அண்ணன் கிட்ட சொல்லிடுங்க. மண்டாலிகா, நம்ம வீட்டு அட்ரஸை இவங்க கிட்டே கொடுத்திட்டியா? என்ன செய்ய, உங்களை இப்படி ஒரு நிலைமையிலே பார்க்க எனக்கு வருத்தமாதான் இருக்கு. என்ன இருந்தாலும் என்னோட சொந்த கிராமத்து ஜனங்களாச்சே நீங்க ! “

நான் திகைத்துப் போயிருந்தது போலவே என் மனைவியும் வியப்பில் வாயடைத்துப் போய் ஊமையாகி இருக்க வேண்டும். இல்லாவிட்டால்அவள் பேசிய ஒரு வார்த்தையாவது என் காதில் விழுந்திருக்காதா என்ன?

***********************************

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....