13.11.14

’’பெண்களுக்குப் பிடிக்கும்” ........

கோவையிலுள்ள ’கோணங்கள்’ திரைப்படக்கழகம் சென்ற மாதம் திரையிட்ட  இத்தாலிய இயக்குநர் டிஸீக்கா[Bicycle Thieves இயக்கியவர்] வின்  ''Two women'' படத்தைக்காண நானும் சென்றிருந்தேன். 
[படம் பற்றிய பார்வை  வேறு பதிவில்]

’கோணங்கள்’ நிகழ்வுக்கு நான் செல்வது முதல்முறை என்பதால் குறுந்திரை அரங்கம் உள்ள பள்ளிக்குச்சென்று திரையிடப்படும் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். ஓரிரு நடு வயது ஆண்கள் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தார்கள்; அவர்களுக்குக் குறிப்பிட்ட இடம் தெரியுமா எனக்கேட்டேன்...அவர்கள் வழி சொன்னதோடு நிற்காமல் தொடர்ந்து இப்படிச் சொன்னார்கள்..

‘’ம் போங்க போங்க..நீங்க எல்லாம் அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்’’

அடுத்து அவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய உரையாடல் வழி அவர்களுக்கு டிஸீக்காவைப்பற்றியும் தெரியவில்லை,அந்தப்படத்தின்சாரமும் தெரியவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன்.....

உண்மையில் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் - அநாதரவான நிலையில் ஊர் ஊராக இடம் பெயர்ந்தபடி தவிக்கும் ஒரு தாயும் அவளது பதின்பருவ மகளும் நேசப்படையினரின் கூட்டு பலாத்காரத்துக்கு ஆட்படும் கொடுமையை முன் வைக்கும் படைப்பு அது. தாய்க்கு மகள் மீதான நெஞ்சுருக்கும் நேசம் படத்தில் பதிவாகியிருந்தபோதும்  அங்கே உண்மையில் விமரிசனத்துக்கு உள்ளாக்கப்பட்டது இராணுவத்தினரின் இராக்கதப்பாலியல் வெறி.

தலைப்பை மட்டுமே வைத்து ’இது உங்களுக்கான படம்’ என்று அவர்கள் எப்படிச் சொன்னார்கள் என்பது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.

ஆனால் அது எப்போதும் அப்படித்தான் இருக்கிறது..!!.
பெண் சார்ந்து எது எழுதப்பட்டாலும்....அல்லது காட்சிப்படுத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கானதில்லை....பெண்ணுக்கு மட்டுமே உரியது என்கிற அந்த மனோபாவம்.

பெண் எழுதும் கதை,கவிதை,கட்டுரைகளைப்படிப்பதும் கூட அப்படித்தான்....!

சொல்வனம் இணைய இதழில் அண்மையில் வெளியான எழுத்தாளர் அம்பையின் பேட்டியில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

//எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சொல்வார்: உங்கள் எழுத்து என் வீட்டுப் பெண்களுக்குப் பிடிக்கும்” என்று. அதாவது அவர் ஓர் உயரிய வாசகர். அவர் இலக்கிய தளத்துக்கு நான் உயரவில்லை என்கிறார். இன்னொரு நண்பர் “நீங்கள் வீட்டுக்கு வந்தது பிடித்திருந்தது. உங்கள் பேச்சு முக்கியமாகப் பெண்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது” என்று கூறினார்.//-

அம்பையின் அதே அனுபவம் எனக்கும் பல முறை நேர்ந்திருக்கிறது. 
இன்னும் பல பெண்களுக்கும் கூட இது நிகழ்ந்திருக்கலாம்.

என் கதைத்தொகுப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் ஆண் அறிவுஜீவிகள் - அவர்கள் எழுத்தாளர்களாகட்டும்..
கல்விப்புலம் சேர்ந்த பேராசிரியர்களாகட்டும்,
பொதுத்தளத்தில் இருப்பவர்களாகட்டும்...
அவர்கள் யாரானாலும் அடுத்த முறை சந்திக்கும்போது 
இலேசான கோணல் சிரிப்போடு ’’உங்க கதையை  என் வைஃப் விழுந்து விழுந்து படிக்கிறா..அவளுக்கு ரொம்பப்பிடிச்சிருக்காம்’’
என்பார்கள். 

அதாவது அதன் உட்பொருள் - அம்பை சொன்னது போல 
ஒன்று....
அவரது இலக்கிய மட்டத்துக்கு அது உயரவில்லை/அல்லது உயரும் தகுதி ஒரு பெண்ணின் எழுத்துக்கு இல்லை  என்பதாக இருக்கலாம்.
ஆனால்....புரட்டிப்பார்த்துக் கொஞ்சமாவது  படிக்காமல் ஒரு அராஜக முன் முடிவோடு பெண்களின் இலக்கிய மட்டத்தை இவர்கள் எப்படி நிர்ணயிக்கிறார்களோ அது ஒரு புதிர்தான்.

இரண்டு..
பெண் எழுத்தின் உள்ளடக்கம் அவர்களின் மனச்சான்றைத் தொந்தரவு செய்வதாகவும்  இருக்கலாம்;ஓரிரு முறை அப்படி அனுபவப்பட்ட பிறகு ’எதற்கு வீண் தொந்தரவு’என்று அதைப்படிக்காமலே தங்கள் வீட்டுப்பெண்களுக்குக்கொடுத்து விடுவார்களாக இருக்கலாம்.அப்பொழுதும் அதைப்படித்து அவர்கள் ‘கெட்டுக்கிட்டு’ப்போய் விடக்கூடாதே என்ற பயம் அவர்களிடம் இருந்துகொண்டுதான் இருக்கும்.

’’உங்களப்பத்தியே இன்னும் எத்தனை காலம்தான் எழுதிக்கிட்டிருக்கப்போறீங்க.....உலகத்தை சமூகத்தைப்பத்தி எழுதுங்க’’
என்று இலவச புத்திமதி சொல்ல வருபவர்களும் இருக்கிறார்கள்...
இவர்களின் சமூகத்தில்..
இவர்களின் உலகத்தில் பெண்ணுக்கு இடம் இல்லை போலிருக்கிறது..!



12.11.14

டால்ஸ்டாயின் ‘கரடி வேட்டை’



10.11.14 தேதியிட்ட சொல்வனம் இணைய இதழில்[116]-பெண்கள் சிறப்பிதழ்-2
என் மொழிபெயர்ப்பில் டால்ஸ்டாயின் ‘கரடி வேட்டை’[The Bear Hunt – Leo Tolstoy (Written c.1872] கதை  வெளியாகி இருக்கிறது.

சொல்வனத்துக்கு நன்றி...

தொடர்புடைய பதிவு;
சொல்வனம் பெண்கள் சிறப்பிதழ் 1இல்..[115]


10.11.14

குருகும் உண்டு ....

பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-11

கடற்கரை மணல் வெளிகளிலும்,தோட்டத்துப் புல் வெளிகளிலும் ஒருவனும்,ஒருத்தியும் ஜோடியாகச் சஞ்சரிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தது...ஒரு காலம்.

இன்றோ நிலைமை...தலை கீழாக மாறிக் கிடக்கிறது !
இரண்டு பெண்கள்,ஒரு ஆண்-
இரண்டு ஆண்கள் ,ஒரு பெண்-
இப்படிப்பட்ட முக்கூட்டணிகளே தனிமையான இடங்களில் ஏராளமாகப் பெருகிப் போய்க் கிடக்கின்றன.
இவர்களின் நோக்கம் என்ன ?
 நட்பா?காதலா?
நட்பென்றால் தனியிடம் தேடி ஒதுங்கிச் செல்ல வேண்டிய தேவையில்லை.
காதலென்றால் இன்னுமொரு ஆணுக்கோ,பெண்ணுக்கோ அங்கே என்ன வேலை?
உடனிருக்கும் மூன்றாம் நபர்,நெருங்கிய நண்பன் அல்லது தோழியாகவே இருந்தாலும்,அவரவர் மனங்கள் மட்டுமே உணரக்கூடிய
அந்தரங்கத் தூய்மை கொண்ட காதல் பரிமாற்றங்கள்... அடுத்தவர் முன்னிலையில் சாத்தியம்தானா?

குறுந்தொகையின் ஒரு காட்சி கண்முன் நீள்கிறது.
நீண்ட நாட்களாகத் தன்னைப் பார்க்க வராத தலைவனின் நினைவில் ஏக்கமுற்றிருக்கிறாள் ஒரு தலைவி.
மனத்தின் ஒரு மூலையில் அவன் தன்னைக் கை விட்டு விட்டானோ என்ற மிக இலேசான நெருடலும் கூட......
தானும்,அவனும் சந்தித்துக் காதல்மொழி பேசிக் களித்திருந்த அந்தத் தருணத்துக்குச் சாட்சியாக வேறு யாருமே உடனில்லை.
அவனுக்கும்,அவளுக்கும் மட்டுமே தெரிந்திருக்கும் ஒரு இரகசியக் கணம் அது.
அதை அவன் மறுத்துவிட்டால்,பொய் கூறிப் பிழைத்துவிட்டால் வேறு சாட்சிகளைத் தேடிக் கொண்டு அவள் எங்கே செல்ல முடியும்?
நினைவு அடுக்குகளைத் துழாவிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது சட்டென்று அவளுக்கு ஒரு தடயம் கிட்டிவிடுகிறது.

அவர்கள் சந்தித்தது...தனிமையான ஒரு நீர்நிலைக்குப் பக்கத்தில்.
ஆள் அரவங்களே அற்றுப் போயிருந்த அந்த இடத்தில்,
மீன் பிடிக்கும் வேட்கையுடன் ஒரு நாரை(குருகு)மட்டும் தண்ணீருக்குப் பக்கத்தில் தவம் செய்து கொண்டிருந்த காட்சி அவள் நினைவுத் திரையில் படமாய் விரிகிறது.

ஆனால்...அதிலும்  ஒரு ஏமாற்றம்!
அந்தக் குருகும் கூட...ஓடுமீன் ஓட உறுமீன் வருவதையும்,அதைப் பிடிக்கப் போகும் தருணத்தைதயும்தான் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்ததே தவிர அவர்களின் காதல் விளையாட்டுக்கு அது ஒன்றும் சாட்சியாகி விடவில்லை.

தனக்குத் துணைவரச் சாட்சியில்லாமல் போய்விட்டதே  என்ற ஏமாற்றத்தை விடவும்....நல்ல வேளையாக அல்திணைப்(சிந்திக்கும் அறிவற்ற) பொருளாகிய அந்தக் குருகு கூடத் தங்களைப் பார்த்து விடவில்லை என்பதிலேயே பெருத்த நிம்மதி அடைகிறாள் நுட்பமான நாண உணர்வு கொண்டிருக்கும் அந்தச் சங்கத் தலைவி.

’யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’’-குறுந்தொகை25(கபிலர்)

இதே போன்ற செய்தி, ஒரு நற்றிணைப் பாடலிலும் உண்டு.
நாள்தோறும் தலைவியைத் தொடர்ந்து சந்தித்துவரும் தலைவன்,ஒரு நாள் அவளை ஒரு புன்னை மரத்தடியில் சந்திக்க,அவள் நாணத்தோடு அங்கிருந்து நழுவப் பார்க்கிறாள். அதற்குக் காரணம்,அந்தப் புன்னைமரம்,அவளது தாய் நீரூற்றி வளர்த்த மரம்.
‘’இம்மரம் உன் தமக்கையைப் போன்றது ‘’
என்று சொல்லிச் சொல்லியே அவளை வளர்த்திருக்கிறாள் அவள் தாய்.
தமக்கையை அருகில் வைத்துக் கொண்டு காதல் புரிவதைத் தகாத செயலாக நாணிக்கூச்சம் அடைகிறாள் அந்தப் பெண்.

’’நும்மினும் சிறந்தது நுவ்வை(உன் தமக்கை)யாகுமென்று
அன்னை கூறினள் புன்னையது நலனே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே’’-நற்றிணை172

புனிதமான தங்கள் நேசத்துக்கு உயிரற்ற பொருட்களும்....வாய்பேச முடியாத ஐந்தறிவு உயிர்களும் சாட்சியாவதைக் கூடச் சங்கக்காதலால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
காரணம்.... அந்தரங்கம் புனிதமானது!

இணைப்பு;
சங்கக்காதல்(நற்றிணை)

6.11.14

கோவை இதழில் ஒரு குறிப்பு


http://epaper.newindianexpress.com/283025/The-New-Indian-Express-Coimbatore/04062014#page/17/2



2.11.14

விட்டலனின் வாசிப்பில் அசடன்

திரு தேவராஜ் விட்டலன் -

இளம் தலைமுறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு கவிஞர்;கதைஞர்.கட்டுரையாளர். அயராத தொடர்ச்சியான வாசிப்பை மட்டுமன்றி தொடர் எழுத்துமுயற்சியையும் ஒரு வேள்வியாகக் கொண்டிருப்பவர். வடக்கு வாசல்,கணையாழி,பயணம் முதலிய இதழ்களில் இவரது கவிதைகள்,கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.மாற்று சினிமா மற்றும் உலகத் திரைப்படங்கள் மீது தணியாத ஆர்வம் கொண்டிருப்பவர்.

இந்திய இராணுவத்தில் பணியாற்றும் எங்கள் ஊருக்குப்பக்கத்து ஊர்க்காரரான [மதுரை-திருமங்கலம்]விட்டலனின் அறிமுகம் தில்லியில் இருக்கும்போதுதான் எனக்கு நேர்ந்தது. பழகத் தொடங்கிய நாள் முதல் ஒரு மகனைப்போன்ற பாச உணர்வுடன் என்னுடனும் எங்கள் குடும்பத்துடன் பிணைந்து விட்ட விட்டலன் என் எழுத்து மற்றும் மொழியாக்க முயற்சிகளிலும் ஆர்வம் கொண்டு அவற்றின் மீதான தன் கருத்துக்களை அவ்வப்போது பதிவு செய்து என்னைத் தொடர்ந்து உற்சாகமாக இயங்க வைத்துக்கொண்டிருப்பவர்.குற்றமும் தண்டனையும்மொழிபெயர்ப்பை ஒரேமூச்சில் முடித்து விட்டு அசடன் எப்போது வரும் என்று என்னைத் துளைத்தெடுத்துக்கொண்டிருந்தவர்.  விருதுநகர்-மல்லாங்கிணறு பகுதியிலிருந்து வெளிவரும் பயணம் இதழில் ‘சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்’என்னும் தொடரை நான் தொடர்ந்து எழுதி வருவதற்கு அடிப்படைக்காரணமே தேவராஜ் விட்டலன்தான்.

அவரது படைப்பிலக்கிய ஆர்வத்தையும் என் மீது அவர் கொண்டிருக்கும் பாசத்தையும் உணர்ந்திருந்த வடக்கு வாசல் இதழின் ஆசிரியர் திரு யதார்த்தா பென்னேஸ்வரன் ,என் தேவந்தி சிறுகதைத் தொகுப்பை வடக்கு வாசல் வெளியீடாக - 2011இல் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களைக்கொண்டு தில்லி தமிழ்ச்சங்கத்தில் நடத்தியபோது முதல்பிரதியைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை விட்டலனுக்கு வழங்கி சிறப்பித்தார்.

தேவந்தியைப் பெறும் விட்டலன்

விட்டலனின் வாசிப்பில் அசடன் மொழிபெயர்ப்பு குறித்த அவரது கருத்துக்களை அவரது தளத்திலிருந்து இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

படித்ததை பகிர்வோம் – அசடன்

’’தமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.’’
அசடன் நூலை ( நாவலை ) கடந்த ஒரு வருடமாக தூக்கிக் கொண்டு திரிந்த எனக்கு அந்நாவலை முழுமையாக உணர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆவல் பல நாட்களாக இருந்து வந்தது. பனி விழுந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் ஜனவரி மாத இறுதியில் அசடன் நவலை படிக்கத் துவங்கினேன்.
அனைவரையும் நேசிக்கவும், தனக்கு துன்பம் தருபவர்களை மன்னிக்கவும், எளிமையான சாந்தமான குணத்தோடும் முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட மிஷ்கின் தனது அதீதமான உணர்ச்சிகளின் அலைக்கழிப்பால் சராசரி மனிதனாக வாழ இயலாமல் துன்புறுகிறான். சராசரி மனிதர்களோடு ஒப்பிடுகையில் அவன் முட்டாளாக உள்ளான்.
இளவரசன் மிஷ்கின் பரம்பரையில் வந்த ‘ லேவ் நிகலெயவிச் மிஷ்கின் ’ ஸ்விட்சர்லாந்திலிருந்து பீட்டர்ஸ்பெர்க் நகரத்திற்கு வருகிறான். பீட்டர்ஸ்பெர்க் நகரத்தில் இருக்கும் ‘ லிசாவெதா ப்ரகோஃபியன்னா ’ வை சந்திக்க வேண்டியும், அவர் தனக்கு ஆறுதல் அளிப்பார் என்ற நம்பிக்கையுடனும் இரயிலில் பயணித்து
வருகிறான்.
இரயில் பயணத்தில் ரோகோஸின்னையும், லெபதேவையும் சந்திக்கிறான். ரோகோஸின் தான் திருமணம் செய்யப் போகும் நஸ்டாஸியா பற்றி நிறையப் பேசுகிறான். பார்க்க மிகவும் பரிதாபமான தோற்றத்தோடு இருக்கும் மிஷ்கினை, தன்னை இளவரசன் எனக் கூறிக் கொண்டிருக்கும் மிஷ்கினை பரிகாசத்தோடு அனைவரும் பார்க்கிறார்கள். அவனை கேலி செய்கிறார்கள். இருப்பினும் மிஷ்கின் அப்பொழுதும்
அவர்களுக்கு தனக்கான பதிலை மிகவும் சாந்தமாக சொல்லிக் கொண்டிருக்கிறான்.
பீட்டர்ஸ்பர்க் நகருக்கு வந்ததும், தளபதி இவான் ஃபியோதரவிச் இபான் சினை சந்திக்கிறான். தளபதி இபான்சின் இராணுவத்தில் மிக முக்கியமான பதவியில் இருப்பவர். மிஷ்கின் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தான் மிஷ்கின் பரம்பரையில் வந்தவன் எனவும், லிசாவெதா ப்ரகோஃபியன்னாவை சந்திக்க ஆவலோடு இருப்பதாகவும் கூறுகிறான். அவனை சந்தேகத்தோடு முதலில் பார்த்த இபான்சின், மிஷ்கினின் அறிவார்ந்த பேச்சைக் கேட்ட பின்னர், அவனை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கிறார்.
இபான்சினை சந்திக்கும் பொழுது அங்கே இருந்த கன்யாவையும் சந்திக்கிறான் மிஷ்கின். அவர்கள் நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி பேசுகிறார்கள். அவளது புகைப்படம் அங்கு தொங்கிக் கொண்டிருந்தது. அழகிய முகம், ஆனால் பரிதாபமானவள் என அவளைப் பற்றி மிஷ்கின் கூறுகிறான். உனக்கு எப்படி நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவை தெரியும் என இபான்சினும் , கன்யாவும் கேட்கின்றனர். அதற்கு இரயிலில் வரும்போது ரோகோஸின் மூலம் நஸ்டாஸியா வைப் பற்றி அறிந்து கொண்டதாகக் கூறுகிறான். அவளது அழகிலும், அந்த முகத்தில் மறைந்திருக்கும் ஏக்கத்தையும் பார்த்து அதனால் கவரப்பட்டு அவளைக்
காதலிக்கத் துவங்குகிறான் மிஷ்கின்.இங்கே நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா வைப் பற்றி கொஞ்சம் கூறியாக வேண்டும். நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரம். டாட்ஸ்கி என்ற பெரும் செல்வந்தனின் அலுவலகத்தில் பணிபுரிந்து இறந்து போன அலுவலரின் மகள் நஸ்டாஸியா. அழகி. முதலில் நஸ்டாஸியாவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட டாட்ஸ்கி, பின் அவளது அழகில் மயங்கி அவளது
வாழ்வை நாசமாக்குகிறார். நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவிற்கு விபரம் தெரிந்த பின் தன் வாழ்க்கை மிகவும் அர்த்தமற்ற ஒன்று எனவும், யாருக்கும் தன்னால் எந்தப் பயனும் இல்லை என எண்ணிக் கொண்டு, தன்னை இந்த நிலைமைக்கு ஆக்கிய டாட்ஸ்கியை துன்பப்படுத்துகிறாள். பின்னால் மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் நடந்து கொண்டு தன்னை மிகவும் நேசிக்கும் மிஷ்கினையும், ரோகோஸின்னையும்
அலைக்கழிக்கிறாள்.
இபான்சின் குடும்பத்தில் மூன்று அழகிய பெண்கள் உள்ளார்கள். மூவரும் இபான்சின் குழந்தைகள். அவர்கள் அலெக்ஸாண்ட்ரா இவானோவா, அடிலெய்டா இவானாவோ, அக்லேயா இவானாவோ. இவர்களில் அக்லேயா மிகவும் அழகியாகவும், குறும்புத்தனம் நிறைந்த பெண்ணாகவும் உள்ளாள். முதலில் மிஷ்கினைப் பார்த்து எப்போதும் கேலி செய்து கொண்டு இருந்தாலும், பின்னாளில் மிஷ்கினை காதலிக்கத் தொடங்குகிறாள். காதல் திருமணம் வரை செல்கிறது. மிஷ்கினின் உடல் நலக் குறைவால் திருமணம் தடைபடுகிறது. இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்கள் நாவலில் நிறைந்துள்ளன.
மலைகளையும், இயற்கையையும் ரசிக்கிறான். மனித மனத்தில் குவிந்து கிடக்கும் அழுக்குகளை சுட்டிக் காட்டுகிறான். செ­னிடரின் மருந்துவமனையில் மன நோயாளியாக இருந்த பொழுது அந்த கிராமத்தில் இருந்த காச நோயால் பாதிக்கப்பட்ட ஏழைப் பெண்ணான மேரியின் கதையை கூறும் பொழுது மனம் நெகிழ்வுறுகிறது.
ஊரே வெறுத்து ஒதுக்கிய அந்த பெண்ணை மிஷ்கின் தன் அன்பின் வழியாக நேசித்து அவளுக்கு உதவி புரிகிறான். மிஷ்கின் வழியாய் தங்கள் தவறினை உணர்ந்த ஊர் மக்கள் பின்னால் மேரிக்கு உதவி செய்கின்றனர். குழந்தைகளை அவளோடு பேச அனுமதிக்கின்றனர். நாவலில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகளும் உள்ளன. நஸ்டாஸியா ஃபிலிபோவ்னாவின் விருந்தில் ஒரு விளையாட்டு விளையாடப்படுகிறது. அது, வாழ்வில் தான் இதுவரை செய்த மோசமான செயலைப் பற்றி அனைவரின்
முன்பும் எந்த ஒரு ஒளிவுமின்றி சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையோடு. ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தான் செய்த மோசமான செயல்களை, வருந்தத் தக்க செயல்களை கூறுகின்றனர்.
கதையின் நாயகனான மிஷ்கின் உண்மையின் வடிவமாகவும், மன்னிக்கும் மனப்பான்மையோடும் வாழ்கிறான். தஸ்தயேவ்ஸ்கி இயேசுவை மனதில் நிறுத்திக் கொண்டுதான் மிஷ்கின் என்ற கதாபாத்திரத்தை உருவாக்கினார் என கூறப்படுவதும் உண்டு.நஸ்டாஸியா ஃபிலிபோவ்னா தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு ரோகோஸின்னோடு ஓடிவிட்டாலும் அவளுக்காக வருத்தப்படுகிறான். அவள் நல்ல மனம் படைத்தவள் எனவும் கூறுகிறான். அக்லேயாவுடன் ஆன மிஷ்கினின் திருமண நிச்சயதார்த நிகழ்வைப் படிக்கும் போது மனம் முழுவதும் ஒரு பதட்டம் நிரம்பி விடுகிறது. தன்னை முழுமையான மனதோடு காதலிக்கும் அக்லேயா வை மிஷ்கின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நாவலைப் படிக்கும் வாசகர்கள் மனதில் எண்ணத் தோன்றுகிறது,ஆனால் நாவலில் அவ்வாறு நிகழவில்லை.
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாவ்லிஷ்ட்டேவ் ( மிஷ்கினை வளர்த்தவர். மிஷ்கினை மருத்துவரின் கண்காணிப்பில் விடும் வரை அவனுக்கு பாதுகாப்பாய் இருந்தவர் ) பற்றிய அவதூறான பேச்சை கேட்க இயலாமல், மிஷ்கின் மனதினுள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகளை எல்லாம் கொட்டித் தீர்த்தான். மிஷ்கினின் பேச்சு ஆவேசம் மிக்கதாய் இருந்தது. அவன் நடுங்கிக் கொண்டும், வார்த்தைகளை சரியாக உச்சரிக்க இயலாமல் மூச்சு வாங்கிக் கொண்டும் தொடர்ந்து பேசுகிறான். அவனது இந்த திடீர் ஆவேசத்தை தொலை தூரத்தில் இருந்து கொண்டு நடுங்கிக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறாள் அக்லேயா. விருந்தினர்கள் பார்வையில் அவன் முட்டாளாகத் தெரிந்தாலும், அவனது பேச்சில் உன்னதமான கருத்துக்கள் வந்து கொண்டிருந்தன. பேச்சுத் திறமையை விடவும், நேர்மையாக பேசும் குணம்தானே வேண்டும் எனவும், தலைவர்களாக வேண்டுமென்றால், நாம் வேலைக்காரர்களாக இருப்போம் எனவும் குறிப்பிடுகிறான்.
இவ்வாறு தொடர்ந்து ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கும் போதே தள்ளாடி கீழே விழுகிறான். தஸ்தயேவ்ஸ்கி அந்தக் காட்சியை இவ்வாறு விவரிக்கிறார்.அக்லேயா மிக விரைவாக அவனிடம் ஓடினாள். சரியான சமயத்தில் அவனை தன் கைகளில் தாங்கிக் கொண்டாள். அவள் முகமெல்லாம் பயத்தால் உருக்குழைந்து, சிதைந்து போனபடி நடுங்கிக் கொண்டிருந்தது. அவள் துரதிருஷ்டசாலியான அந்த மனிதனின் ஆத்மா வீழ்த்தப்படும் ஓலத்தை கேட்டாள். நாவலின் இறுதியில் மிஷ்கின் மீண்டும் மன நோயாளியாக ய­னிடரிடமே
வந்து சேர்கிறான்.நாவலை முழுமையாகப் படிக்கும் பொழுது பல உணர்வுகள் மனதில் வந்து குடியேறுகின்றன. பரந்து விரிந்த விவரணைகள், ஒவ்வொரு காட்சியையும், மனிதர்களையும் தஸ்தயேவ்ஸ்கி விவரித்திருக்கும் முறைகள் மனதைக் கவர்கினறன. தன்னை ஒரு மகா கலைஞன் என்று நூற்றாண்டுகள் கடந்தும் நிரூபித்துக் கொண்டுள்ளார் தஸ்தயேவ்ஸ்கி. நாவலின் முதல் நூறு பக்கங்களை படித்துக் கடந்துவிட்டால், உலகெங்கும் உள்ள மனிதர்களின் உணர்வுகள் ஒன்று போல்தான் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
தஸ்தயேவ்ஸ்கியை புரிந்து படிப்பதே சிரமமான காரியம். ஏனெனில் மனிதனின் மன ஆழத்தை துளைத்து, அவற்றுள் உள்ள எண்ணங்களை எழுதியவர். அத்தகைய எழுத்துகளை மொழிபெயர்ப்பது எளிமையான செயல் அல்ல. தமிழின் மிகவும் எளிமையான, இனிமையான, வளமான நடையில் மொழி பெயர்த்துள்ளார் பேராசிரியை எம்.ஏ. சுசிலா அவர்கள். ஏற்கனவே குற்றமும் தண்டனையும் நாவலை தமிழில் மொழி பெயர்த்தவர். கனடா இலக்கியத் தோட்டம் விருது, திசை எட்டும் விருது, ஜி.யு. போப் விருது என அசடன் நாவலுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. இலக்கியத்தையும், சமுதாயத்தையும், மனிதத்தையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நாவல் அசடன்.
*****
நூல் வெளியீடு : பாரதி புக் ஹவுஸ், E – 59 / 3 -4, மாநகராட்சி வளாகம்
பெரியார் பேருந்து நிலையம், மதுரை ‡ 625 001
அலைபேசி : 97893 36277
*****

தொடர்புள்ள பதிவுகள்;
அசடன் - விருதுகள்
இரண்டு பயணங்கள்