துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.8.13

’அசடன்’- மேலும் ஒரு விருது

தஸ்தயெவ்ஸ்கி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்....

காலத்தால் அழியாத அவரது இடியட் நாவலின் மொழியாக்கமான ‘அசடன்’ மூன்றாவதாக ஒரு விருதை வென்றிருக்கிறது. 
எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் வழங்கும் மொழியாக்கத்துக்கான ஜி யூ போப் விருது ‘அசடன்’ மொழியாக்கத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது வரை ’அசடன்’ மொழியாக்கத்துக்குக் கிடைத்துள்ள விருதுகள் மூன்றாகியிருக்கின்றன ;

1.னடா இலக்கியத் தோட்ட விருது
2.திசை எட்டும் விருது
3.ஜி யூ போப் விருது

 24.08.2013 முற்பகலில் காட்டாங்கொளத்தூரிலுள்ள எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வளாகத்தில் பரிசளிப்பு விழா நடைபெறவிருக்கிறது.

உண்மையில் அச்சமாக இருக்கிறது....
இந்தத் தரத்தையும் எதிர்பார்ப்பையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமே என்ற மலைப்பும் திகைப்பும் கூடவே எழுந்து திகிலூட்டுகிறது....

அளவிலும் விலையிலும் பெரியதான ’குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கம் இரண்டாவது பதிப்பு வர முடிந்தபோதே தமிழ் வாசகர்களிடையே மொழிபெயர்ப்புக்களுக்கான அங்கீகாரம் கூடி வருவதை உணர்ந்து கொள்ள முடிந்தது; அதனாலேதான் அதை விடவும்  பெரிதான அசடன் மொழியாக்க முயற்சியில் கால் பதிக்கும் துணிவு எழுந்தது.

’அசடன்’நாவலை மொழிபெயர்த்து முடித்துத் திரும்பிப்பார்த்த அந்தக்கணம் நினைவுக்கு வருகிறது; என் கையெழுத்தில் 1200 பக்கங்கள் என்பதும், அது எப்படி முடிந்தது என்ற வியப்பும் ஒரு பக்கம் எழுந்தாலும் தஸ்தயெவ்ஸ்கி என்னும் கதைசொல்லியின் கதைக்கூற்று மாயத்தில் நான் என்னை இழந்து தன்வயமற்றுக் கரைந்து போனதாலேயே அதைத் தமிழில் பெயர்க்க முடிந்திருக்கிறது என்பது நன்றாகவே புரிகிறது.மனித மனங்களின் கரை காணா ஆழங்களைக் கண்டு தெளிந்து தன் எழுத்தில் வடித்து அதை என் என் உள்ளுணர்வுக்குப் புகட்டி - அதன் வழி என்னைக் கருவியாக்கித் தமிழில் தான் வெளிப்பட்ட தஸ்தயெவ்ஸ்கிக்கு என் நன்றி...

எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் படைப்பிலக்கியத்துக்கு வழங்கும் புதுமைப்பித்தன் விருது எழுத்தாளர் திரு ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதைத் தொகுப்புக்கும், ,சிறந்த தமிழறிஞர் விருது கோவை ஞானிக்கும்,அயலக இலக்கிய விருது எழுத்தாளர் திரு அ முத்துலிங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருப்பதாக ஜெயமோகனின் தளத்தில் செய்தி வெளியாகி இருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது. இம்மூவருமே என் எழுத்துப்பயணத்தோடு ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டவர்களாக இருப்பதே அதன் காரணம்.

நான் பேராசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், எழுத்து,மொழியாக்கம்,வலைத்தளம் எனப்பல தளங்களிலும் இயங்கத் தொடர்ந்து எனக்கு உந்து சக்தியளிக்கும் உற்ற நண்பராகவும் வழிகாட்டியாகவும் விளங்கி வருபவர் திரு ஜெயமோகன்; இடியட் நாவலுக்கு அசடன் என்ற தலைப்பைச் சூட்டலாம் என்பது தொடங்கி அப்பெரும்பணியை முடிக்கும் வரையிலும் அவரது பல வழிகாட்டுதல்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.’அசடனும் ஞானியும்’என்னும் அவரது முன்னுரையைத் தாங்கியே அசடன் நூல் வெளிவந்திருக்கிறது.அவருக்கு என் நன்றியைத் தெரிவிப்பதோடு,அவரது தளத்தில் வெளிவந்தபோது மிகுந்த ஈடுபாட்டோடு நான் படித்துக்கொண்டிருந்த ‘அறம்’ வரிசைக்கதைகள் அடங்கிய சிறுகதைத்தொகுப்புக்காக அவர் பெறவிருக்கும் விருதுக்காகவும்  அவரை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.

[அறம் குறித்து நான் எழுதிய பதிவுகளின் இணைப்பு;
ஜெயமோகனின் ‘அறம்’
‘அறம்’வரிசைச் சிறுகதைகள் ஓர் அறிமுகம்-1
அறம்’வரிசைச் சிறுகதைகள் ஓர் அறிமுகம்-2
அறம்’வரிசைச் சிறுகதைகள் ஓர் அறிமுகம்-3]

மதுரையில் பணியிலிருந்த காலம் முதலே என் சிறுகதைகளை ஊக்குவித்தவர் ஐயா திரு கோவை ஞானி. அவரால் தொகுக்கப்பட்டு வெளிவந்த பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்கள் பலவற்றில் என் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.இன்றுவரை என் முயற்சிகளுக்கு வாழ்த்தும் ஆசியும் கூறிவரும் திரு ஞானி அவர்கள் தமிழ்ப்பேராய விருது பெறுவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி...
கோவை ஞானி -அவர் துணைவி ஆகியோருடன்...
‘அசடன்’நாவலுக்கு கனடா இலக்கியத் தோட்ட விருதை வழங்கியதன் வழி அதற்கு முதல் மரியாதையும் அங்கீகாரமும் அளித்ததோடு மொழிபெயர்ப்பு முயற்சிகள் பரவலாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்  என்பதிலும் உள்ளார்ந்த ஆர்வம் காட்டி அதையும் என்னோடு பகிர்ந்து கொண்டவர் எழுத்தாளர் திரு அ முத்துலிங்கம் அவர்கள். நான் விரும்பிப்படிக்கும் வலைத்தளம் அவருடையதுஅயலக இலக்கியத்துக்கான தமிழ்ப்பேராய விருது பெறும் திரு அ முத்துலிங்கம் அவர்களுக்கு என் வணக்கமும் வாழ்த்தும்.

அசடன் மொழியாக்கத்துக்கு திசை எட்டும் விருதை அறிவித்திருக்கும் திரு குறிஞ்சி வேலன், மற்றும் இப்பணியை நான் செய்து வந்த காலத்தில் என்னை ஊக்குவித்ததோடு தேவையான உதவிகளும் செய்து உதவிய முன்னாள் புதுதில்லி ஜே என் யூ  பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேரா நாச்சிமுத்து ஆகியோருக்கும் அசடன் நாவலை மிகப் பிரம்மாண்டமான பதிப்பாக ஒளிப்படங்களோடு வெளியிட்டிருக்கும் மதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கும் - 
அனைத்துக்கும் மேலாக  இப்பணியில் இடை தளராது நான் இயங்க உறுதுணையாய் நின்ற இறைப்பேரருளுக்கும் என்  நன்றிகள்....
6 கருத்துகள் :

புதியவன் பக்கம் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி சுசீலாம்மா.
ஞானி அவர்களுக்கு விருது கிடைத்த செய்தியை காலையிலேயே பேஸ்புக்கில் பார்த்தேன். ஆனால் உங்களுக்குக் கிடைத்த செய்தி யாருக்கும் தெரியவில்லை.
வணங்கி வாழ்த்துகிறேன்.

ஷாஜஹான்.

புதியவன் பக்கம் சொன்னது…

வணக்கம் சுசீலாம்மா.
விருது பற்றிய செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி.
ஞானி அவர்களுக்கு எஸ்.ஆர்.எம். விருது குறித்த செய்தியை பேஸ்புக்கில் யாரோ பகிர்ந்திருந்தார்கள்.
அவரை சந்தித்தால் அவருக்கும் என் சார்பில் வணக்கங்களைத் தெரிவியுங்கள்.
பணி சிறக்க வாழ்த்துகள்.

anar சொன்னது…

சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்காக தமிழ்ப்பேராய விருது பெறும் சுசீலா அம்மாவுக்கு அன்பான வாழ்த்துக்கள்.


அனார்
http://anarsrilanka.blogspot.com

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் அம்மா
மிகவும் சந்தோசமாக உள்ளது.

அன்புடன்
தேவராஜ் விட்டலன்

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நன்றி திரு ஷாஜகான்,அனார்,விட்டலன்!
நேற்று மாலை கோவை ஞானியின் இல்லத்துக்குச் சென்று ஒரு மணிநேரம் உரையாடிகொண்டிருந்தேன் ஷாஜகான்!இந்த உடல் தளர்ச்சியிலும் அவரது இலக்கிய ஆர்வமும்.தளராத படிப்பும் உழைப்பும் புத்தக சேமிப்பும்,உருவாக்கமும் பிரமிக்க வைக்கிறது.

tamilbooks சொன்னது…

வாழ்த்துக்கள்
நாகராஜன்
புத்தகம் பேசுது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....