துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

19.5.18

ரோக்ஸானாவுடன் ஒரு மாலை..-சிறுகதை



ரோக்ஸானாவுடன் ஒரு மாலை..
சிறுகதை
எம் ஏ சுசீலா



                         நன்றி; உயிரெழுத்து டிச.2017




ல்லாவற்றிலிருந்தும் தள்ளி இருக்கி்றேன். இப்போது இதுதான் பிடித்திருக்கிறது. கையில் எடுத்திருக்கும் வேலைக்குத் தேவையாகவும் கூட…! வெற்று ஆரவாரங்களிலிருந்து……., அன்றாடவாழ்வின் ஆயாசமூட்டும் அசட்டுக்கூச்சல்களிலிருந்து விடுபட்ட தனிமை…….! மொழியின்…….பேச்சின் ஊடாட்டமற்ற தனிமை ! எப்போதோ ஒரு வருடம் பள்ளியில் ஒன்றாய்ப் படித்த ஆச்சி…,….இந்த மடத்தை நிர்வகித்துவரும் அந்த ஆச்சிதான் அதை எத்தனை லாவகமாக…அழகாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்? நான் எப்போது அங்கே வந்து தங்கினாலும் எனக்கே எனக்கான ஒதுக்கமான அந்த அறை எனக்காகவே காத்திருக்கும். பிரதானக் கட்டிடத்திலிருந்து ஒரேயடியாய் விலகியும்  இல்லாமல்…அதே நேரத்தில் ஒட்டிக்கொண்டும் இல்லாத ஒரு அறை ! ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் உறவைப்போல..! அறையை விட்டு நானாக வெளியே வந்தால்தான் உண்டே தவிர சாப்பிட வருவதற்காகக்கூட எவரும் அதைத் தட்டி அழைக்காத பூரணமான விலக்கம்.

ஒரு நாளின் பெரும்பகுதி நேரம் அமைதியாக மட்டுமே இருக்கும் அந்த மடத்தின் நிச்சலனமான மௌனம், எப்போதாவது சிலநள்ளிரவு நேரங்களில் தங்குமிடம் நாடி யாத்திரிகர்களை அழைத்து வரும் சுற்றுலாப்பேருந்துகளின் உரத்த உறுமல்களால் சற்றே கலையும். மறுநாள் காலையில் அவர்களுக்கான உணவுத் தயாரிப்புகள், பரிமாறல்கள் என்று கொஞ்ச நேரம் எழும் சலசலப்புக்களுக்குப்பிறகு பழகிப்போன வழக்கமான மௌன கதிக்கு அந்த இடம் மீண்டு விடும்.
புனித யாத்திரைக்கும் சுற்றுலாவுக்கும் மட்டுமே பெயர்பெற்றிருக்கும் அந்த ஊரை நான் தேர்ந்தெடுப்பதற்குக் காரணமே…..கங்கையின் மடியில்…அமைதியும் தனிமையுமான அப்படி ஒரு இடம் எனக்கு அமைந்து போனதனாலேதான்… சிந்தனைக்கண்ணிகள் சிக்கலில் மாட்டிக்கொள்ளாத….., அப்படியே தப்பித் தவறி மாட்டிக்கொண்டாலும் அடுத்த நிமிடத்திலேயே இழை பிரித்துச் சிக்கெடுப்பதற்கு வாகான ஒரு சூழல்…! காலை ஆறரை மணிக்குத் தேநீர் அருந்த அழைக்கும் மிக மிக மென்மையான மணி ஓசை, விடிகாலை நான்கு மணியிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் என்னைக் கொஞ்சம் அசைத்தபடி அந்த வளாகத்துக்குள்ளேயே சிறிது நேரம் சுற்றி வரத் தூண்டும். ஆச்சி குளித்து முழுகி விட்டு மடத்துக்குள் இருக்கும் அரசமரத்துப் பிள்ளையாரை சுற்றியிருக்கும் இடத்தையெல்லாம் சுத்தம் செய்தபடி  பூசைக்கு ஆயத்தம் செய்து கொண்டிருப்பார்கள். நான் அவர்களைத்தாண்டிக்கொண்டு போகும்போது ‘எல்லாம் வசதியாக இருக்கிறதுதானே’ என்று விசாரிப்பது போன்ற மென்னகையோடு கூடிய மிக இலேசான ஒரு பாவனை மட்டுமே அந்த முகத்தில் படரும். ஏதோ அதைவிடக் கூடுதலான ஒருவார்த்தையைப் பேசிக் கூட என் மோனத்தைக் கலைத்து விடக்கூடாது என்று திட்டமிட்டு வைத்திருப்பதைப்போல.!

அங்கே வழக்கமாகத் தரும் உப்பு காரம் அதிகம் சேர்க்காத எளிமையான காலை உணவை முடித்துக்கொண்டு மறுபடியும் வேலைக்குள் ஆழ்ந்துவிடும் நான் பத்து மணியிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்தை  எனக்கும் கங்கைக்கும் மட்டுமாகவே ஒதுக்கிக்கொள்வேன். நேர் எதிரே இருக்கும் சந்திற்குள் நுழைந்தால் செங்குத்தாக இறங்கிச்செல்லும் அடுக்கடுக்கான படிகள்…, தொடர்ந்து கருங்கல் பாவியிருக்கும் ஒரு சின்னப்பாதை. அது முடிகிற இடத்தில் இருக்கும் குட்டி குட்டிப் பாறைகளில் கையை ஊன்றிக்கொண்டு இறங்கினால் காலை நனைத்து….இன்னும் கொஞ்சம் கீழே போனால் உடல் முழுவதையும் சுகமாய்த் தழுவும் கங்கை வெள்ளம்…. ! முதல்நாள் மாலை கங்கைக்குச் செய்த ஆரத்தியின்போது விட்ட மண் தீபங்கள்….மலர்த்தட்டுக்கள், அழுகிப்போன பூக்குப்பைகள், பிளாஸ்டிக் உறைகள் என்று ஊருக்குள் ஓடும் ஆற்றில் கலந்து வரும் கசடுகளால் மாசுபட்டுப்போகாத புது வெள்ளம். ஊர் ஓரத்தில் ஒதுங்கிக்கிடக்கும் அந்த நீர்த்துறைக்கு மலையிலிருந்து நேரே இறங்கி வந்துசேரும் படிகமாய்த் தெளிந்த தண்ணீர் அது. சுழித்தோடிவரும் அந்த வெள்ளத்தையும் இன்னொரு பக்கம் அது காலிறங்கிவரும் மலையையும் பார்த்துக்கொண்டே பொழுது மறந்து தன்னை மறந்து அழுந்தி அழுந்தி முழுகியபடி அதில் திளைத்துக் கொண்டிருப்பது என்னைப் புதிய உயிராக்கும்.  

வாரக்கணக்கு, மாதக்கணக்கு என்று அவ்வப்போது அங்கே தங்கிக்கொள்ள வரும் ஆச்சிமார்கள் சிலரும் சில சமயம் அந்த ஆனந்தக்குளியலில் என்னோடு சேர்ந்து கொள்வார்கள்; ஆனாலும் அந்தவேளைகளில் எந்த ஊர்ப் பக்கமென்று ஒருவரை ஒருவர் குசலம் விசாரிக்கக்கூடத் தோன்றாதபடி நதியின் ஓட்டத்தை வேடிக்கை பார்ப்பதும் அதில் ஊறித் திளைப்பதும் மட்டுமே எங்கள் எல்லோரையும் ஆட்கொண்டிருக்கும். ஈரம் சொட்டச்சொட்ட அங்கிருக்கும் கல்லில் அமர்ந்து அவர்கள் சிவபுராணம் சொல்லும் வேகத்தைப் பார்த்தபடியே படியேறிச் சென்று அறைக்குப்போய் உடை மாற்றிக்கொண்டு வந்து பழகிப்போயிருந்த பக்கத்துக்கடையில் ஒரு ஓட்ஸைக் குடித்து விட்டு என் வேலைக்குத் திரும்புவேன்.
அங்கே நான் கழிக்கும் மாலைப் பொழுதுகள் நதி ஓரமாய்ச் செல்லும் நீள நடைக்கானவை… நான் தங்கியிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி விசாலமான ஆசிரமத்தோடு கூடிய ஒரு குஜராத்தி.கோயில். சீரான ஒழுங்கோடு நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருந்த அதன் படித்துறைகளை ஒட்டியிருந்த நீண்ட நடைபாதை, குறுக்கீடுகள் அதிகம் அற்ற வேக நடைக்கு வசதியானது; மக்கள் கூட்டம் மிகுதியாக இல்லாத அந்தப்பகுதியில் -கங்கையின் மீது ஒரு கண்ணைப்பதித்துக்கொண்டே அந்தப்பாதை வழி நெடுந்தொலைவு வரை சென்று விட்டு அந்தி மயங்கும் வேளையில் திரும்பி வருவதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தேன்.  அறைக்குள் தனியே அடைந்திருக்கும் வேளைகளில் வேலை செய்ய மறுக்கும் மூளைப் பகுதிகள் சுறுசுறுப்பாக இயங்கியபடி, சிந்தனையை மூடியிருக்கும் புழுதிகளை அகற்றி விட்டுக்கொண்டு அரிதான ஓரிரண்டு ஒளிக்கற்றைகளைப் படர வைப்பது அப்போதுதான் என்பதால் தொடர் யோசனைக்கான அந்த மாலை நடையைப்  பொதுவாக எந்தக்காரணத்தாலும் நான் இழக்க விரும்புவதில்லை. நடை முடிந்து திரும்பி வரும் நேரம், ஆலயத்தை ஒட்டியிருக்கும் கங்கைப்படித்துறையில் அமைதியாகநடந்து கொண்டிருக்கும் ஆரத்தியைத் தள்ளியிருந்து பார்த்து விட்டு என் பொந்துக்குள் புகுந்து விடுவேன்…

அவ்வாறான மாலை நடை ஒன்றிலேதான் ரோக்ஸானா என் கண்ணில் பட்டாள். நடைபாதை ஒன்றிலிருந்து கீழிறங்கிச்செல்லும் அகலமான கீழ்ப்படிகள் ஒன்றில் அமர்ந்திருந்த அவள், மெல்லிய மஸ்லின் துணியிலான வெள்ளை குர்த்தாவும் பைஜாமாவும் அணிந்திருந்தாள்;  அந்தியின் ஒளியோடு  வெண்ணிறமும் பொன்னிறமும் விரவிக்கலந்தபடி அவளது கூந்தல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. அவற்றோடு கூடவே பளீரென்ற அவளது வெள்ளை நிறமும் ஒன்றிணைந்து அவள் வேற்று தேசத்தவள் என்பதைக் காட்டிக்கொண்டிருந்தது. அதில் எனக்கொன்றும் அதிசயம் இல்லை; இது போல… இமயத்தின் மடிகளில்…கங்கை நதி தீரங்களில் தேசாந்திரிகளாகவும் சுற்றுலாப்பயணிகளாகவும் சந்நியாசிகளாகவும் கூடச்சுற்றித் திரியும் பல்வேறு நாட்டுக்காரர்களும் தங்கள் மண்ணில் உணரத் தவறியதாக உணரும் ஏதோ ஒன்றை இங்கே நுகர்ந்தபடி ,அல்லது நுகர முயன்றபடி  அலைந்து கொண்டிருப்பது நான் பார்த்துப்பழகிப்போயிருக்கும் காட்சிதான்…

ஆனாலும் இது கொஞ்சம் வினோதமாகத்தான் இருந்தது.  அந்த வெளிநாட்டுப்பெண்ணுக்கு மேலும் கீழுமாய் இருந்த படிகளில் அவளைச் சூழ்ந்து மொய்த்தபடி ஆரத்தித் தட்டு விற்கும் சிறுமிகள் பலர்  தங்களுக்குள்ளும் அவளோடும் ஏதோ பேசிச்சிரித்துக்கொண்டிருந்தார்கள். மாதக்கணக்கில் எண்ணெய் தடவிச் சீவாத வறட்சியான தலைமுடி…, அழுக்கும் பிசுக்கும் ஏறிப்போன உடைகள், ஒரு பக்கமாய்க் கிழிந்து தொங்கிக்கொண்டிருக்கும் கீழ்ப்பாவாடை…அதற்கு மேல் அரை இன்ச் மேலேறியபடி இடுப்பில் கொஞ்சத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இறுக்கமான சட்டை அல்லது தொளதொளப்பான - பையன்கள் போடும்- சட்டை….,நார்நாராய்ப் போய்விட்டிருக்கும் முக்காட்டுத்துணி…என்று பலவகைக்கோலங்களுடன் அந்தப் பெண்ணைச் சுற்றி வளைத்துக்கொண்டிருந்த சிறுமிகளின் முகங்களில் குதூகலமான பாவனை ஒன்று மட்டுமே நிரம்பித் தளும்பிக் கொண்டிருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியபடி இருந்தது.

கங்கைக் கரையில் நடந்து கொண்டிருந்த ஆரத்தி முடிகிறநேரம் வந்து விட்டதால் தங்கள் தட்டு விற்பனைக்காக மட்டுமே அவளைச் சூழ்ந்து நச்சரித்துக்கொண்டிருக்கும் கூட்டமாக அது படவில்லை…அவளிடமும் அப்படி ஒரு தட்டு இல்லை…குறிப்பிட்ட அந்தப்பகுதியில் கூட அத்தனை தட்டுக்கள்  விற்பதற்கான வாய்ப்பு இல்லை; வேறெங்கோ கூட்டமான உள்ளூர்ப்பகுதியில் தங்கள் தட்டுக்களை விற்று முடித்து விட்டு ஓய்வான ஒரு மனநிலையில் அந்தக் குழந்தைகள் அவளை வட்டமடித்துப் பேசிக்கொண்டிருந்ததாகவே எனக்குப்பட்டது. தங்களுக்குள் பேசிச்சிரித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அவளது முகத்தையும் அவ்வப்போது ஏறிட்டுப்பார்த்தபடி,  எதையோ சொல்ல முயன்று கொண்டிருந்தார்கள் அந்தச் சிறுமிகள். அவளும் அதெல்லாம் தனக்குப் புரிகிற மாதிரியில் ஒவ்வொருத்தியும் பேசத் தொடங்கும்போது குறிப்பிட்ட அந்தப்பெண்ணையே உன்னிப்பாகக் கவனித்தபடி தனது புன்னகையால் வருடிக்கொண்டிருந்தாள். அந்தக் காட்சியின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்டவளாய் சற்றுநேரம் அப்படியே நின்றிருந்த நான் இருள் படர்ந்து வருவதை உணர்ந்தபடி அங்கிருந்து வேகநடை போட ஆரம்பித்தேன்.

அன்றிலிருந்து தொடங்கிக் கிட்டத்தட்ட ஒரு வாரமாய் மாலைநடையின்போது நான் தவற விடாத ஒரு விஷயமாகவே அது ஆகிப்போனது. அதைத் தவற விட்டுவிடாமல் இருப்பதற்காக..அதை ஒட்டியே நான் போய்வரும் நேரத்தை சிறிது முன்னதாகக்கூட மாற்றி அமைத்துக்கொண்டேன்…அப்படியும் ஒரு நாள் நான் நடைமுடித்துத் திரும்பும்போது அந்தக்கூட்டம் கலைந்து போயிருக்க ரோக்ஸானா மட்டும் படியேறி வந்து கொண்டிருந்தாள்…சற்றுத் தயங்கி நின்ற என்னைப்பார்த்து நட்போடு கூடிய புன்னகை ஒன்றை அவள் உதிர்க்க அவளுடன் கைகுலுக்கியபடி ஆங்கிலத்தில் என்னை அறிமுகம் செய்து கொண்டேன். அவள் பெயரை நான் அறிந்து கொண்டது அப்படித்தான்…
தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜெண்டினாவில் தத்துவக்கல்வி  பயின்று வருவதாகவும் இந்தியத் தத்துவங்கள் குறித்து  இந்தமண்ணின் வாசத்துடன் கூடிய உணர்வு பூர்வமான அனுபவத்தைப்பெறுவதற்காக ஆறு மாதகாலம் இங்கே வந்து தங்கியிருப்பதாகவும் என்னோடு பகிர்ந்து கொண்டாள்… அவளுடையது அத்தனை தெளிவில்லாத சரியில்லாத ஆங்கிலம் என்றாலும் என்னால் அதை விளங்கிக்கொள்ள முடிந்தது..
இத்தனை நாள் சுற்றிப்பார்த்தவரை இந்தநாட்டைப் பற்றி அவள் நினைப்பது  என்ன என்று நான் கேட்டபோது சட்டென்று கண்களில் ஒரு மின்னலோடு இந்த மண்ணை..- குறிப்பாக இந்த ஊரைத் தான் மிகவும் நேசிப்பதாகச் சொன்ன அவள், தனது ஊருக்கும் இந்த இடத்துக்கும் இடையே உள்ள சூழ்நிலை, சுகாதார வித்தியாசங்களைப் பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக்கொண்டதாய்த் தெரியவில்லை…அவள் தங்கியிருந்ததும் கூட ஊருக்கு நடுவில் மிகவும் நெரிசலும் அடைசலுமான பகுதி ஒன்றில் இருந்த ஒரு ’பண்டா’ குடும்பத்தாரோடுதான்…
‘’உங்கள் ஊர் ஜனங்கள்தான் எத்தனை அன்பானவர்கள்….! இங்கே இருந்து போக வேண்டும் என்பதை நினைத்தாலே..’’ என்றபடி அப்போதைக்கு என்னிடம் விடை பெற்றுக்கொண்டாள்.
பிறகு தொடர்ந்த மாலை வேளைகள் பலவற்றில் தற்செயலாக எதிர்ப்பட நேரும்போதெல்லாம் நாங்கள் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொண்டு ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டோம்.ஆனாலும் அவளிடம் பேசத் தவறிய ஏதோ ஒன்று என்னுள் குடைந்து கொண்டேதான் இருந்தது.
                            //////////
டுமையான குளிர்காலம் தொடங்கப்போவதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்ட அந்தக்காலை நேரத்தில் அங்கே இருக்கும் சந்நியாசிகள் சிலரை அழைத்து அவர்களுக்கு உணவு படைத்து குளிர்காலத்துக்குரிய ஆடைகளையும் போர்வைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார் ஆச்சி. குறிப்பிட்ட அந்தப் பருவ காலத்தில் வழக்கமாக நடந்தேறும் மரபார்ந்த அந்தநிகழ்ச்சியில் அங்கே தங்கியிருந்த எல்லோருமே வந்து கலந்து கொண்டிருந்தனர். அதில் பங்கேற்க வேண்டும் என்று ஆச்சி என்னை வற்புறுத்தாவிட்டாலும் கூட  மறுநாள் அங்கிருந்து கிளம்ப இருந்த நிலையில் நானும் கூட அதை வேடிக்கை பார்த்தபடி ஓரத்தில் நின்றிருந்தேன்.

யாரோடும் அதிகம் ஒட்டாமலே நாட்களைக்கழித்து விட்டதால் எவரோடு என்ன பேசுவது என்றுபுரியாவிட்டாலும் கூட இந்த  வாசம் இப்போதைக்கு முடியப்போவதால் இனம் விளங்காத ஒரு படபடப்பும் சின்னதாக ஒரு பிரிவுத் துன்பமும் என்னை ஆட்கொள்ள , .அந்த இடத்தின் ஓர் அங்கமாக மாறி விட்டதைப்போலவே உணர்ந்து கொண்டிருந்தேன். சில தேடல்களுக்கு விடை காணாமலே அங்கிருந்து சென்றுவிடப்போகிறோமோ என்ற வெறுமை உணர்வும் என்னில் வியாபித்திருந்ததது.

அங்கே  தங்கியிருந்த கடைசி நாளின் மாலையை ரோக்ஸானாவுக்காகவும் அவளது இளம் தோழிகளுக்காகவும் மட்டுமே ஒதுக்க விரும்பிய நான் சற்றுமுன்னதாகவே நடையை முடித்துக்கொண்டு, அவர்கள் என் பார்வையில் படும் தூரத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன்… மாதக்கடைசியில் அங்கிருந்து கிளம்பி வாரணாசி சென்று அங்கே ஒரு மாதம் செலவிட இருப்பதாக என்னிடம் சொல்லியிருந்தாள் ரோக்ஸானா.

முதன்முதலாக நான் பார்த்தபோது இருந்ததை விட ரோக்ஸானாவுடனான ஒட்டுதல் அந்தப்பெண்களுக்குக் கூடுதலாகி விட்டிருப்பது நன்றாகவே தெரிந்தது. அவர்கள் அவளிடம் அதிகமாகவே நெருங்கி விட்டிருந்தனர். அவளுடைய இரண்டு கைகளையும் இரண்டு சின்னப்பெண்கள் சுவாதீனமாகப் பிடித்துக்கொண்டிருக்க….இன்னொரு சிறுமியோ அவளது கன்னத்தைத் தொட்டிழுத்துத் தன் பக்கம் பார்வையை செலுத்துமாறு வேண்டியபடி இருந்தாள். தன்னை அவர்களிடம் ஒட்டுமொத்தமாக ஒப்புக் கொடுத்து  விட்டவளைப் போலக் கொஞ்சமும் அலுத்துக்கொள்ளாத முழு மலர்ச்சியுடன் அத்தனை பேருக்கும் ஈடுகொடுத்துக் கொண்டிருந்தாள்ரோக்ஸானா.

வழக்கமாக அந்தக் குழந்தைகள் அங்கிருந்து வேறுபக்கம் கிளம்பிப் போன பிறகு மேலேறி வரும் அவள், அன்றென்னவோ அவர்கள் புடை சூழப் படியேறி வந்தாள்… அவர்களுக்கு அவளிடம் பரிமாறிக்கொள்ள இன்னும் நிறைய பாக்கி இருந்தது… குழந்தைத்தனம் மாறாத சின்னப்பெண் ஒருத்தி  தன் வலது கையை வீசிவீசி ஆட்டிக்கொண்டே… அதற்கு இணையாக ரோக்ஸானாவின் ஒரு கையையும் தன் இடது கையால் ஆட்டியபடி குதித்துக்கொண்டே வந்து கொண்டிருந்தாள். மேல் படியில் நின்றிருந்த என்னைப்பார்த்ததும் அவர்களை விட்டுத் தன்னைச் சற்று விலக்கிக்கொண்டு என்னருகே வந்தாள் ரோக்ஸானா. நாளை ஊர் திரும்ப இருப்பதாக அவளிடம் விடை சொல்லிக்கொண்டேன் நான்,. என் அறிமுகத்தில் தான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தததாகச் சொல்லியபடி என் கைகளைப்பற்றிக்குலுக்கிய ரோக்ஸானா இலேசான ஓர் அணைப்போடு எனக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தாள்.

இரண்டடி முன் வைத்து நடக்க ஆரம்பித்து விட்ட நான் சற்றே தயங்கி நின்றபடி… எனக்கு நேர் எதிர்த் திசையில் செல்லத் தொடங்கிய  அந்தக்கூட்டத்தைப் பார்த்து  ‘’ ரோக்ஸானா ஒரு நிமிடம் ! ‘’ என்றுகுரல் கொடுத்தேன். சட்டென்று திரும்பிப்பார்த்த அவள் என்னை நெருங்கி வந்தாள். என் முகத்தில் அரும்பியிருந்த வினாக்குறியால் சற்றும் பாதிக்கப்படாத அதே மலர்ச்சியுடன் ’’என்ன வேண்டும்’’ என்றாள்.

‘’ரோக்ஸானா… நான் இப்படிக் கேட்பதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள்தானே…? உங்களுக்கு ஸ்பானிஷ் மொழி மட்டுமே தெரியும் என்றும் ஆங்கிலம் கூட சரளமாகப் பேச வருவதில்லை என்பதாலேயே என்னிடம் கூட அதிகம் பேச முடியவில்லை என்றும் ஒரு தரம் சொன்னீர்கள்..’’ என்று தயங்கித் தயங்கி இழுத்தேன். ’அதற்கு என்ன இப்போது’ என்பது போல என்னை வியப்போடு பார்த்தாள் அவள்.

‘’இத்தனை நாட்களாக இந்தப்பகுதியில்… அதுவும் ஊருக்கு மத்தியில்….., கூட்ட நெரிசலில் .தங்கி இருந்திருக்கிறீர்கள்…. …! இந்தி தெரிந்த என்னாலேயே கொச்சைகள் கலந்து கிடக்கும் இந்த ஊர் பாஷையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களால் எப்படி இவர்களோடு ...? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’’ என்றபடி அந்தச்சிறுமிகள் செல்லும் திசையில் பார்வையை செலுத்தினேன்.

நான் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டதைப்போல் மெலிதாக ஒரு புன்னகை செய்தபடி.,என் கைகளை இலேசாகப் பற்றி அழுத்திவிட்டு அவர்களோடு இணைந்து கொண்டாள் ரோக்ஸானா. அந்தக் குழந்தைகள் அவளைச் சுற்றி வளைத்தபடி குதி போட்டுக்கொண்டும் கும்மாளமிட்டுக்கொண்டும் போய்க்கொண்டிருந்தார்கள்

அந்தியின் நிழல் விரைவாகப் படரத் தொடங்கியிருந்த அந்த வேளையில் - மலையடியும் நதிவெள்ளமும் முயங்கி. ஒன்றாகி முகவரி தொலைத்திருந்த தொடுவானக்கோட்டின் பின்னணியில் கரும்புள்ளிகளாகி அவர்கள் காட்சியிலிருந்து மறையும் வரை அந்த திசையை மட்டுமே பார்த்தபடி நின்றிருந்தேன் நான்.


                ////////////////////////////////////////////////////////////////////////////
.



17.5.18

தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க்குரல்-இந்திரா பார்த்தசாரதியின் தலைமை உரை

சென்ற 7 -4-2018 அன்று சென்னை ருஷ்யக்கலாச்சார மையத்தில்  ருஷ்யக்கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து நிகழ்த்திய ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்க்குரல்’ என்னும் இலக்கிய நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமைதாங்கி ஆற்றிய உரை
திரு ஜெயமோகன் அவர்களின் பதிவிலிருந்து

inthira

ரஷ்யக் கலாசார மையமும். விஷ்னுபுரம் இலக்கிய வட்டமும் இணைந்து, பேராசிரியர் எம்.ஏ.சுசீலா வின் இலக்கியப் பணியையும், குறிப்பாக, அவருடைய மொழியாக்கத் திறனையும் பாராட்ட எடுத்திருக்கும் இவ்விழாவில்  பங்கு பெறுவது குறித்து மகிழ்கிறேன்.
சுசீலா அவர்களின் இலக்கியப் பணியைப் பற்றி நான் நிறையக் கேள்விப் பட்டிருந்தாலும் அவரைச் சில ஆண்டுகளுக்கு முன்புதான் நான் தில்லியில் சந்தித்தேன். தமிழ்ப் பேராசிரியர்ர் என்பதோடு மட்டுமல்லாமல், அவருக்கு சர்வ தேசீய நவீன இலக்கியங்களில் இருந்த ஈடுபாடு என்னை வியக்க வைத்தது.
அவர் உலக இலக்கியங்களை ஆழமாகப் படித்திருக்கிறார் என்பதோடு மட்டுமன்றி, அவர் அவற்றை உள்வாங்கி எப்படி உருவாகியிருக்கிறார் என்பதற்கு அவர் தஸ்தொவெஸ்கியின் மூன்று நாவல்களை மொழி ஆக்கம் செய்திருக்கிறார் என்பதே சான்று.
‘மொழி ஆக்கம்’ என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகிய ‘Translation’ என்பதின் லத்தீன் வேர்ச்சொல், ‘அக்கரைக்கு அழைத்துச் செல்லுதல்’ ,என்று பொருள்படும். அதாவது, நாம் இக்கரையில் இருந்துகொண்டே அக்கரையின் வளங்களைப் பயண அலுப்பின்றி ரஸித்தல் என்று பொருள்படும்.
சென்னையில் இருந்து கொண்டே, நாம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர்ப் புறக் காட்சிகளையும், நிகழ்வுகளையும், பத்தொன்பதாம் நூற்றாண்டு ரஷ்யச் சமூக மாந்தர்களையும், அக்காலத்தியப் பண்பாட்டுச் சூழ்நிலையையும் சொற் சித்திரங்களாக நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார் பேராசிரியர் சுசீலா. ‘குற்ரமும் தண்டனையும்’ என்ற இந்நாவல் மூலம். தஸ்தொவெஸ்கியின் ரஷ்ய மொழி மூலம்அநேகமாக, உலக மொழிகள் பெரும்பான்மையானவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆங்கிலதிலேயே நான்கு மொழி பெயர்ப்புகள் இருக்கின்றன. சுசீலா கார்னெட் மொழி பெயர்ப்பைப் பின்பற்றித் தமிழில் ஆக்கியிருக்கிறார்.
உலகத்துச் செவ்வியல் நூல்களின் அடிப்படை இலக்கணம் அவை அந்தந்தக் காலத்து மதிப்பீடுகளுக்கேற்பப் பொருள் கொள்பவை என்பதுதான். உலகத்து முதல் நாவல் நவீன நாவலாகக் கருதப்படும் ‘செர்வாண்டீஸ் எழுதிய ‘டான் குக்ஸாட்’டுக்கு அவர் காலத்திய தாமஸ் ஷெல்டன் மொழிபெயர்ப்போடு மட்டுமல்லாமல், ஏழு மொழிபெயர்ப்புக்கள் வெளியாகியிருக்கின்றன. எடித் க்ராஸ்மென்னின் இக்காலத்திய மொழி பெயர்ப்பைப் படிக்கும்போதுதான், மூலத்தின் காலத்தால் சாகாத அர்த்தத்தின் மேன்மையை அறிந்து கொள்ள முடிகிறது.
அது போல், சுசீலாவின் மொழி ஆக்கத்தின் மூலம், எப்படி தஸ்தொவெஸ்கி எனக்குச் சம காலத்தவர் ஆகிறார் என்பதை நம்மால் உணர முடியும். ஏனெனில், மொழியாக்கம் செய்கின்றவரின் அடிமனப் பிரக்ஞையே யாருக்காக மொழிபெயர்க்கின்றோமென்ற எண்ணத்தைச் சார்ந்திருக்கிறது. அதே சமயத்தில், சுசீலா மூலத்தை மட்டுமன்றித் தம் மொழி ஆக்கத்தையும் அநுபவித்துச் செய்திருக்கிறார். ஒரு பாடகர் தாம் பாடுவதை அநுபவித்துப் பாடினால்தான் கச்சேரி சோபிக்கும். சான்றாக, அமரர் மதுரை மணி அவர்களைச் சொல்லலாம். ஆசையினால் அறையலுறும் மொழி ஆக்கங்கள் மட்டுமே மூலமொழி தரும் இன்பத்தை நல்க வல்லன. இதனால்தான், எனக்கு மொழிபெயர்ப்புப் பட்டறைகளில் நம்பிக்கை இல்லை.
ரஷ்ய நாவல்களை மொழி ஆக்கம் செய்வது பெரிய சவால். குறிப்பாக, தஸ்தொவெஸ்கியின் நாவல்கள். உளவியல் நாவல்களின் பிதாமகன் தஸ்தொவெஸ்கி. எண்ணங்கள், குறுக்கு வெட்டுச் சிந்தனைகள், கேள்விகள், விடைகள், விடைகள் எழுப்பும் கேள்விகள் என்று சங்கிலித் தொடர் போல் விரியும் மன நிகழ்வின் வரைபடத்தை, அவர் மூல மொழியில் காட்டிருப்பது போல்,கலாசார ரீதியாக முற்றிலும் வேறுபட்ட இன்னொரு மொழியில், மூலத்துக்குச் சேதாரம் இல்லாமல்,அதே சமயத்தில் படிக்கின்றவர்களின் சுவாரஸ்யத்துக்குப் பழுதின்றி ஆக்கித் தருவது என்பது ஒரு பெரிய சாதனை.
நான் முதன் முதலில் படித்தது. தஸ்தொவெஸ்கியின் ‘ Possessed’. அது வெவ்வேறு தலைப்புகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. ‘Demons’ என்றும்,’Devils’என்றும். அதுவரை என் அநுபவத்துக்கு உட்படாத முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய உலகத்துக்குள் பிரவேசிப்பது போல் எனக்கு இருந்தது. எனக்கு வயது அப்பொழுது 19. எனக்கு ஏற்கனவே டால்ஸ்டாயுடன் அறிமுகம் ஏற்பட்டிருந்தது.. ‘டால்ஸ்டாயின் 23 சிறுகதைகள்’ என்ற நூலைப் படித்திருந்தேன். டால்ஸ்டாயும். தஸ்தொவெஸ்கியும் வெவ்வேறு துருவங்கள் என்று மேலெழுந்த வாரியாக எனக்குப் புரிந்ததே தவிர, நான் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் பருவத்தில் இல்லை.
‘குற்றமும் தண்டனையும்’ என்ற இந்நாவலில் ரஸ்கோல்னிகோவ் குற்றம் செய்வதே தன்னைதானே தண்டித்துக் கொள்ளத்தான். அவனுடைய டாக்டர் நண்பன் கூறுவது போல (‘Monomania’) அவன் தன்னைத்தானே மனத்தளவில் விசுவ ரூபமாக்கிக் கொண்டு பார்த்து, அதனினின்றும் முற்றிலும் முரண்பட்ட நிலையில் தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவும் முயல்கிறான்.அதன் விளைவுதான் அந்தக் கொலை.
ஒரு வகையில் பார்க்கப் போனால் அவனுடைய மாறிக்கொண்டே இருக்கும் அவனுடைய பல்வேறு விதமான மனப் பிம்பங்களின் பிரதிபலிப்புகளே மற்றைய கதாபாத்திரங்கள். அவன் செய்யும் தவறுகளும் அவ்னே தேர்ந்தெடுத்துச் செய்யும் தவறுகள்தாம். ‘To go wrong in ones’’s own way is better to go right in someone else’s. என்பது அவனை அடையாளம காட்டுகின்றது. ‘God and Devil are fighting there and the battle-fild is the heart of man’ என்று ‘அவர் இன்னொரு நாவலில் கூறுகிறார். பார்க்கப்போனால் அவருடைய எல்லா நாவல்களின் அடிநாதம் இதுதான்.
சுசீலாவின் இம்மொழியாக்கத்தை மூன்று நாட்களில் படித்து முடித்தேன். ஏற்கனவே ஆங்கிலத்தில்(மூன்று மொழிபெயர்ப்பில்) படித்த நூல்தான். இருந்தும் திரும்பத் திரும்ப அலுப்பு சலிப்பின்றிப் படிக்க முடிந்தது என்றால் அதற்குக் காரணம் சுசீலாவின் சுவாரஸ்யம் குன்றாத தமிழ் நடைதான். என் வாழ்த்துக்கள்.




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....