நன்றி;
[கட்டுரையை வெளியிட்டிருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ப்பேரவை 26ஆவது ஆண்டு மலருக்கும்,கட்டுரையை அனுப்பக்கோரிய எழுத்தாளர் திரு அ.முத்துலிங்கம் அவர்களுக்கும்....]
சிறுகதைப்படைப்புக்களையும் கட்டுரைகளையும் மட்டுமே அவ்வப்போது முயன்று பார்த்திருந்த நான் மொழியாக்க முயற்சியில் முனைய நேர்ந்தது ஒரு தற்செயல். ஃபியோதர்
தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’,‘அசடன்’ என்ற இரண்டு உலகப்பேரிலக்கியங்களை அடுத்தடுத்து மொழி பெயர்க்க நேர்ந்தது,’வாராது போல் வந்த மாமணியாய்’ வாய்த்த அடுத்ததொரு ஒரு தற்செயல்.
சொந்தப்படைப்புக்களை உருவாக்கும் அளவுக்குப் பதற்றங்கள் அற்ற அமைதியான ஒரு சூழலையோ மனநிலையையோ உருவாக்கிக்கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில், எழுத்தோடும், மொழியோடும் கொண்டிருந்த நீண்டநாள் தொடர்பை விட்டுவிடாமல் தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே கைக்கொள்ளப்பட்ட இந்த இரண்டு மொழியாக்க முயற்சிகளும் மறக்க முடியாத சுவடுகளைப் பதிக்கப்போகும் குறிப்பிடத்தக்க இருபெரும் பயணங்களாக அமையவிருக்கின்றன என்பதை அப்போது நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
மொழியாக்கமும்கூடப்படைப்பிலக்கியம் சார்ந்த ஒரு கலையே என்பதை அறிந்து வைத்திருந்தபோதும்,
ஓரளவு எஞ்சியிருக்கும் சொந்தப் படைப்புத் திறனையும் கூட மழுங்கடித்துவிடக்கூடிய இயந்திரத்தனமான ஒரு செயலாக அது ஆகிவிடுமோ என்னும் அச்சமும், மனத்தடையும் தொடக்க நிலையில் என்னைக் கொஞ்சம் ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருந்தன. முதல் முயற்சியான ‘குற்றமும் தண்டனையும்’ மொழிபெயர்ப்பைத் தொடங்கி ஒரு சில அத்தியாயங்கள் முன்னேறியதுமே அத்தகைய பொய்யான பிரமைகள் என்னிலிருந்து விடுபடத் தொடங்கின. மொழி மாற்றம் – அதிலும் குறிப்பாகப் புனைகதை சார்ந்த மொழிமாற்றம் - சுயமான படைப்பாக்கத்தையே அடித்தளமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் படைப்பாக்கத்துக்கான பொறி நம்முள் இருந்து - நம்மைச் செலுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே - நாம் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளராகச் சிறக்க முடியும் என்பதையும் அனுபவ பூர்வமாக நான் கண்டுகொண்ட கணங்கள் அவை.
’’மொழிபெயர்ப்பு என்பது ஓர் உயர்ந்த கலையல்ல.’’ என வைக்கப்படும் சில விமரிசனங்களுக்கு மறுமொழியாகத் “தரமான மொழிபெயர்ப்பு என்பது,இலக்கியப் படைப்பை விடச் சற்றும் தாழ்ந்ததல்ல...,இரண்டாந்தர இலக்கியத்தைப் படைப்பதை விடத் தரமான மொழிபெயர்ப்பைச் செய்வது பெரிய தொண்டாகும்.’’ என்று விடையளிக்கிறார்,இந்திய மொழிபெயர்ப்பாளர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவரான கொல்கத்தா சு.கிருஷ்ணமூர்த்தி.
பாரதி,புதுமைப்பித்தனில்தொடங்கி,சுந்தரராமசாமி,ஆ.மாதவன்,ஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,பாவண்ணன், போன்ற சம காலப் படைப்பாளிகள் வரை பலரும் ,தங்கள் சொந்தப்படைப்புக்களுடன் கூடவே - அவற்றுக்கு இணையாகவே பல நல்ல மொழிபெயர்ப்புக்களையும் செய்திருக்கிறார்கள்.
’’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்..கலைச்செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’’என்றும்,‘’பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்’’ என்றும்கூறிய பாரதியின் வரிகளின் வழி நாம் பெறும் செய்தி,
’மொழிபெயர்ப்பு என்பது அறிவுத் தளத்திலான ஒரு சமூகச்செயல்பாடு’ என்பதே.
‘’துளசிஜெயராமன், சரஸ்வதிராம்நாத், சு.கிருஷ்ணமூர்த்தி, சித்தலிங்கையா,சி ஏ பாலன், ரா.பூர்ணையா, நா.தர்மராஜன், த.நா.குமாரசாமி, த,நா.சேனாபதி, அ.கி.கோபாலன், ஆர். சண்முகசுந்தரம், சு.குப்புசாமி, சா.தேவதாஸ் போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நம் அறிவுச்சூழலில் ஒவ்வொருவரும் கடன்பட்டிருக்கிறோம்’’ என்று எனக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன்.
த நா குமாரசுவாமி, த நா சேனாபதி ஆகியோர் வாயிலாகத் தாகூரையும்,கா ஸ்ரீ ஸ்ரீ வழியே காண்டேகரையும், சு.கிருஷ்ணமூர்த்தியின் மூலம் மஹாஸ்வேதாதேவி மற்றும் அதீன் பந்தோபாத்யாயாவையும்,ரகுநாதனின் துணையால் கார்க்கியையும், டி எஸ் சொக்கலிங்கத்தின் உதவியால் போரும் அமைதியையும் ,க நாசுவால் ஃபேர்லாகர் க்விஸ்டையும் இன்னும் பல இந்திய,உலக இலக்கியங்களையும் அணுக முடிந்திருந்த நான், அத்தகையதொரு சமூகச்செயல்பாட்டுப் பேரியக்கத்தின் சக்கரமாக இருக்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியிருப்பது பெரும்பேறு என்பதை உணர்ந்து கொண்டேன்.
மொழியாக்கம் ஒரு சமூகச்செயல்பாடென்பது ஒரு புறமிருக்க- மூலநூலை உரிய முறையில் உள்வாங்கிக் கொள்வதற்காக- அதன் வாசிப்பு பல முறை நிகழ்த்தப்படுகையில் மூலநூலாசிரியனுக்கு மிக அணுக்கமாகச் செல்லமுடிவதும், அவன் பெற்ற அகக்காட்சிகளை - அவன் உணர்த்த விரும்பிய செய்திகளை - அவனது அலைவரிசைக்குள்ளேயே சென்று இனம் காண்பதும் சாத்தியமாகிறதென்பது ஓர் அரிய அனுபவம். அந்த நுண்வாசிப்பு அளிக்கும் அனுபவத்தின் அடித்தளத்தில் காலூன்றி நிற்கும்போதே மூலமொழியாசிரியனை விட்டு விலகாத மொழிபெயர்ப்பு - இன்னொரு மொழிக்கு அதைக்கொண்டு செல்லும்போது மூலத்திற்கு துரோகம் செய்யாமல் -அதிலிருக்கும் செய்தியை மழுங்கடிக்காமல் – மிகையும் படுத்தாமல் துல்லியமாகக் கொண்டு சேர்க்கும் மொழியாக்கம் வசப்படுகிறது.
''ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச் செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்.’’ என்கிறார் ஜெயகாந்தனின் படைப்புக்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்.
பொதுவாகவே பிறநாட்டு/ பிற மாநிலப் பின்புலம் கொண்ட படைப்புக்கள் நம்மிடம் ஒரு அந்நியத் தன்மையை ஏற்படுத்திவிடுவது போல நமக்கு நாமே கற்பித்துக் கொண்டிருப்பதனாலேயே அவற்றைப் படிப்பதில் நமக்குள் நிரந்தரமான ஒரு தயக்கம் இருந்து கொண்டிருக்கிறது.மொழியாக்கங்கள் போதியஅளவு விற்பனை செய்யப்படாமலும்,அவற்றுக்கான அங்கீகாரம் உரிய முறையில் கிடைக்காமலும் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்ற கசப்பான உண்மையை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அயல்நாட்டு இலக்கியங்களை வாசிக்கையில் / மொழிபெயர்க்கையில் அவற்றில் இடம் பெறும் பெயர்கள் - குடும்பத் துணைப் பெயர்கள்-surname-மற்றும் சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்கள் ,அங்குள்ள தட்ப வெப்ப சூழல்கள்,உணவு வகைகள்,இடப் பெயர்கள் இவை நம்மை அந்த நாவலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது போன்ற ஒரு தயக்கமும் மலைப்பும் ஏற்படுவது இயல்புதான்.
ஆனால், ’’விசித்திர விபரீத உடையுடன், பாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே’’ மொழியாக்கம் முயல்கிறது’’(மணிக்கொடி,நவ.1937.) என்று புதுமைப்பித்தன் குறிப்பிட்டிருப்பதைப்போல,அந்தக்
கட்டத்தை
மட்டும்
தாண்டிச்சென்றுவிட்டால், பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடக்கும் மனிதஇயற்கையும்,மானுட உணர்வுகளுமே பிறமொழி நாவல்களிலும் உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிந்து கிடப்பதை விளங்கிக்கொண்டு விடலாம்.
மொழி இனம்,நாடு என்று பலஎல்லைக்கோடுகளைவகுத்துக்கொண்டாலும்,தனிமனித உணர்வுப்போராட்டங்கள், அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும் உறவுச்சிக்கல்கள், அவற்றை மீறித் தளும்பும் காருண்யம் ஆகியவை உலகின் எந்த இடத்திலும்,எந்தக்காலகட்டத்திலும் சாஸ்வதமாகக்காணக்கூடியவை ,சகலர்க்கும் பொதுவானவை .
ஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு அவதிப்படும் ‘குற்றமும் தண்டனையும்’ ரஸ்கோல்நிகோவை நம்மைச்சுற்றி நாளும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். .’அசடன்’ நாவலில் பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைந்தே கழிவிரக்கம் கொண்டவளாகி - முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாகத் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா , ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துவதில் வியப்பில்லை;
ஒரு சில கலாசார வேறுபாடுகளை மட்டும் சற்று கவனத்தோடு உள் வாங்கிக்கொண்டபடி நாவலின் முதல் ஐம்பது அறுபது பக்கங்களைக் கடந்து விட்டால் உணர்ச்சிமயமானதும், நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதோடு மகத்தான ஓர் உலக இலக்கியத்தைத் தவற விட்டு விடவில்லை என்ற ஆத்ம திருப்தியும் நமக்குக் கிடைக்கும்.
உலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான பலதருணங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள். தஸ்தயெவ்ஸ்கியின் குறிப்பிட்ட இரு படைப்புக்களும் கூட அவ்வாறானவையே.
தஸ்தயெவ்ஸ்கியின் கண்களுக்கு முழுமையான நல்லவர்/ முழுமையான தீயவர் என்று எவருமில்லை. ''குற்றமும் தண்டனையும்''நாவலில்காமுகனாகச்சித்தரிக்கப்படும் ஸ்விட்ரிகைலோவிடமும்கூட மர்மேலோதோவின் அநாதரவான குழந்தைகளின் பால் அன்பு சுரக்கிறது.கண்டிப்பாகச் செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்பிரி பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கொல்நிகொவ் மீதுதோழமை ஜனிக்கிறது. குழந்தையைப் போன்ற அப்பாவித்தனத்துடனும்,களங்கமற்ற பரிசுத்தமான துறவியைப் போன்ற வாழ்க்கை முறையுடனும்காட்சிதரும்’’அசடன்’’ நாவலின்’இளவரசன் மிஷ்கி’னின் பாத்திரத்தைக் கபடுகளும் சூது வாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலைகாட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் முழுக்க முழுக்கக் காட்ட வேண்டுமென முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.
உலகத்தின் லௌகீகப் பார்வையில் அவன் அசடனாகப் பார்க்கவும், பரிகசிக்கவும்பட்டாலும்,அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் எவரும்மறுதலிப்பதே இல்லை.அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.
தானும் கூடக் கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டார்.மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில் எல்லாம் பயணம் செய்து,இண்டு இடுக்குகளை எல்லாம் கூடத்துழாவி,அங்கே மண்டிக்கிடக்கும்சபலங்களை,சலனங்களை,அழுக்குகளை,ஆசாபாசங்களை,அன்பை,அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து விடும் அவரது எழுத்தை முழுமையாக வாசிக்கும்போதுதான் நீட்ஷேயின் கூற்றிலுள்ள உண்மை துலங்கும்.
மேற்குறித்த தருணங்களில்உணர நேரும் இத்தகைய உச்ச கட்ட கணங்களை - அவற்றிலிருந்து முரண்படாத உயிரோட்டத்துடன் தரவேண்டுமெனில் அதற்கேற்றதாக மொழிபெயர்ப்பாளனின் மொழி அமைந்தாக வேண்டும்; தட்டையான-நேரடியான மொழியாக்கத்தைத் தவிர்த்து மூலப்படைப்பிலேயே பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையில் - அதுவே ஒரு தனிப்படைப்பு போலத் தோற்றமளிக்குமாறு செய்வதற்கு மொழிபெயர்ப்பாளன் சற்றுக்கூடுதலான உழைப்பைச் செலவிட்டே ஆக வேண்டும்.
எளிய சொற்களில் ,மிகச்சரளமான இலகுவான நடையில் சிறு சிறு வாக்கியங்களாகத் தெளிவு படச் சொல்லுவதே அந்நிய மொழிச் சூழல் கொண்ட ஒரு படைப்புக்குள்அலுப்புத் தட்டாமல்,சோர்வை ஏற்படுத்தாமல் வாசகனை ஆழ்த்தக்கூடியது.
குறிப்பிட்ட ஒரு மொழியில் உருவாக்கப்பட்ட ஒரு படைப்பு, இன்னொரு மொழியில் உரு மாறி வருகையில்,அதிலும் அப்படைப்பின் ஜீவனும் வீரியமும் குறையாத சொற்களில் அது முன் வைக்கப்படும்போது மட்டுமே முன்னவர் கற்பனை செய்திருக்கும் மூலப்பொருளை இன்னொரு மொழியில் காட்சிப்படுத்துவது சாத்தியமாகிறது.
நவீன- பின் நவீன வாசிப்புப்பழக்கம் கொண்ட வாசகனாயினும், நல்ல எழுத்துக்களைத் தேடிக்கண்டடையும் எளிய வாசகனாயினும் இன்றைய வாசகனை மொழியாக்கத்துக்குள் கொண்டுவர...அதில் அவனை ஈடுபடச்செய்யத் தேவைப்படுவது, இன்றைய காலகட்டத்தோடு ஒட்டிய தேய்வழக்குகள் தவிர்த்த- நவீன நடைமட்டுமே. சமகாலப்புனைவுகள் அ-புனைவுகள் இவற்றோடு
மொழிபெயர்ப்பாளர் கொண்டிருக்கும் தொடர்ந்த ஊடாட்டமும்,தொடர் வாசிப்புமே மொழியின் வாயில்களை நமக்குத் திறந்து விட்டு, அத்தகைய
மொழிநடையை
நமக்கு வசப்படுத்துபவை.
குற்றமும் தண்டனையும் ,அசடன்-இவ்விரு நாவல்களையும் தமிழுக்குக் கொணரும் முயற்சியில் பலரும்
அவ்வப்போது முனைந்திருந்தபோதும் –மூலத்திலிருந்து கொஞ்சமும் சுருக்கப்படாத முழுமையான
வடிவம் தரப்பட்டது குறிப்பிட்ட இந்த மொழியாக்கங்களிலேதான்; எனினும் இவ்விரண்டு மொழிபெயர்ப்புக்களும் - ரஷிய மொழி தெரியாததால்- ஆங்கிலத்தின் வழியாகச் செய்யப்பட்டவையே..
மூல மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்படும் மொழியாக்கங்கள் இன்னும்கூட
நம்பகத்தன்மை கொண்டவை என்பது உண்மையான வாதமே.. ஆனால் அது உரியமுறையில்
நிகழும் வரை -உலக இலக்கியத் தளத்தில் நிகழும் முயற்சிகள் எதையுமே தெரிந்து கொள்ள வழியின்றி முடங்கிப் போய் இருப்பதை விட மூலத்துக்குப் பக்கமான ஒரு மொழிபெயர்ப்பை இன்னொரு மொழி வழி முயற்சிப்பதில் பிழையிருக்க
முடியாது.
நோபல்பரிசு பெற்ற நாவல்கள் உட்பட- உலகின் தலை சிறந்த படைப்புக்கள் பலவற்றையும் பல்வேறு மொழிகளிலிருந்து தமிழுக்குக் கொணர்ந்து தமிழ் வாசிப்பையும்,எழுத்தையும் கிணற்றுத் தவளை நிலையிலிருந்து மீட்டெடுத்த க.நா.சுஅவர்கள் ஆங்கிலத்தையே அதற்குரிய வாயிலாகக் கொண்டார். பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் வழங்கும் அஸ்ஸாமிய,ஒரிய,மணிப்புரிக் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்ய இந்தியே இடை மொழியாக நின்று உதவியிருக்கிறது.
கா.ஸ்ரீ ஸ்ரீ(மராத்தி), சு.கிருஷ்ணமூர்த்தி(வங்கம்), தி.சு.சதாசிவம்,பாவண்ணன்(கன்னடம்), ஜெயமோகன்(மலையாளம்) , ஸ்ரீராம்-யவனிகா(பிரெஞ்ச்) போன்ற வெகு சிலரே- மூல மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்ப்புச் செய்பவர்களாக இருக்கிறார்கள்.
மூல மொழி தெரிந்திருந்தாலும்,போதிய சொல்வளமோ,கதையோட்டத்தைக் காட்சிப்படுத்தும் அனுபவமோ அற்ற ஒரு நபரால் செய்யப்படும் மொழியாக்கங்கள் வறட்சியான மொழிநடையுடன் உயிரற்றதாக
ஆகிவிடுகிறதென்பதையும் கருத்தில் கொள்ளாமல் இருக்க இயலாது.
பொதுவாக பிறமொழிப் படைப்புக்களுக்குப் பல ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் இருப்பதால்,’குற்றமும் தண்டனையும்’மற்றும் ‘அசடன்’நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்தபோது ஒவ்வொன்றுக்கும் கிட்டத்தட்ட மூன்று நான்குஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கித் தெளிவு பெற்ற பின்பே அவற்றுக்கு இறுதி வடிவம் அளிக்கப்பட்டிருக்கின்றன.
மூலத்துக்கு மிக நெருக்கமாகவும் சிறப்பாகவும் CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே கருதப்பட்டு வருவதால் அந்த ஆங்கில மொழிபெயர்ப்பே இவ்விரு நாவல்களுக்கும் அடிப்படையாக அமைந்தது. தெளிவு கிடைக்காத சில இடங்களில்,மாஸ்கோவின் முன்னேற்றப்பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆங்கிலமொழிபெயர்ப்புக்கள், வேர்ட்ஸ்வர்த் கிளாசிக்மொழியாக்கங்கள் ஆகியவற்றை ஒப்புநோக்கி சில புரிதல்களைப்பெற முடிந்தது.
மொழிபெயர்ப்பின் தெளிவுக்காகப்பல முறை,-பல பதிப்புக்களை ஒப்பிட்டுப்படித்தபோது,’நவில்தொறும் நூல் நயமாக’ இந்நாவல்களின் மர்ம முடிச்சுக்கள் ஒவ்வொன்றாக அவிழ்ந்துகொண்டே வந்தன.ஒரு கட்டத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போன்ற மனமயக்கம் கூட என்னுள் ஏற்பட்டதுண்டு.
ஒரு குற்றத்தைப் புரிந்து விட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு ஒருவன் படும் அவதிகளை- அந்த ஒற்றைப் பார்வையை மட்டுமே முன்னிலைப்படுத்திய ஆக்கம் ‘குற்றமும் தண்டனையும்’. இடியட்/அசடன் பன்முகத்தன்மையையும் பற்பல வகைமாதிரியான(types) பாத்திரங்களையும் கொண்டது.பல்வேறு
முடிச்சுக்களும்,உணர்வுப் போராட்டங்களும் இணைந்த ஒரு கலவையாய் இருப்பது. ஆழமான உளவியல்,தத்துவச் சிக்கல்கள் பலவற்றை நீண்ட மனஓட்டங்கள் மற்றும் உரையாடல்கள் வழி விவரித்துக் கொண்டே செல்வது. இடையிடையே ஃபிரெஞ்சுப் பழமொழிகள்,தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவை விரவி வருவது.இந்தக் காரணங்களால் கொஞ்சம் அதிகமான முயற்சி,உழைப்பு,நேரம் ஆகியவை இந்நூலின் மொழிபெயர்ப்பைச் செய்து முடிக்கத் தேவையாகி விட்டன.
குற்றமும் தண்டனையும் மொழியாக்கத்தில்
எட்டு மாதங்களும் அசடன் மொழிபெயர்ப்பில் ஒன்றரை ஆண்டுகளுமாய்த்
தொடர்ந்த இந்த இருபயணங்களையும் மேற்கொண்டிருந்த காலகட்டத்தில் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது என்னுள்
விளைந்த பரவசச் சிலிர்ப்பு சொல்லுக்குள்
அடங்காத மகத்துவமும் உன்னதமும்
வாய்ந்தது; அந்தப் பேரனுபவத்தின் ஒருசில துளிகளையாவது இம்மொழிபெயர்ப்புக்கள் அளித்திருக்குமானால்
அதுவே இம்முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாக அமையும்.