துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.5.09

கேண்டீட்பிரெஞ்சுப் புரட்சியின் பிதாமகர்களில் முதன்மையானவராகக் கருதப்படுபவர் வோல்ட்டேர். வாள் முனைகளும், இரத்தக் களறிகளும் சாதித்ததை விடவும் கூடுதலான - ஆக்க பூர்வமானபல செயல்களைத் தன் பேனா முனையால் சாதித்தவர் அவர்.''நீ சொல்வதை நான் ஏற்காமல் கூட இருக்கலாம்; ஆனாலும் அதைச் சொல்வதற்கான உன் உரிமையை என் உயிரைக் கொடுத்தாவது நான் காப்பேன்'' என முழக்கமிட்டபடி ,தனி மனித உரிமையை, மனித குல சுதந்திரத்தைக் கண் போலப் பேணியவர்; அதற்காகவே தன் எழுத்தைப் போர்ப் பரணியாக்கியவர்.

1759 ஆம் ஆண்டில் வோல்ட்டேர் எழுதிய 'கேண்டீட்' நாவல், அண்மையில் பத்ரி சேஷாத்ரியால் தமிழாக்கம் செய்யப்பட்டுக் கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது.

வெஸ்ட்.. பாலியா கோட்டையில் வாழ்ந்து வரும் கேண்டீட் என்னும் இளைஞன், ஜமீன்தாரின் மகள் குனிகொண்டேயின் மீது காதல் வயப்பட்டதால் அங்கிருந்து விரட்டப்படுகிறான். ஒரு வகையில் அவன், ஜமீன்தாரின் சகோதரி மகன்தான் என்ற போதும், அவனது தந்தையின் "பூர்வீகத்தில் 71 தலைமுறைக்கு மட்டுமே உயர்குடி ரத்தம் இருந்ததால்'' அவனது பெற்றோர் முறையான திருமண உறவு கொண்டவர்களாக இல்லை. கோட்டையிலிருந்து விரட்டப்படும் கேண்டீட், பல வகையான சூழல்களின் நெருக்குதல்களில் அகப்பட்டு, பல்கேரியா, ஹாலந்து, லிஸ்பன், பராகுவே, எல்டொராடோ, போனஸ் அய்ரிஸ், சுரினாம், பாரீஸ், இங்கிலாந்து, கான் ஸ்டாண்டிநோபிள் என ஒரு உதைபந்தைப் போலப் பலராலும் விரட்டப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறான். அந்தப் பயணங்களின் ஊடே அவன் எதிர்கொள்ளும் சித்திரவதைகள், காண நேரும் மனிதச் சிறுமைகள் ஆகியவற்றை அவன் நோக்கில் காட்சிப்படுத்திக் கொண்டே செல்லும் வோல்ட்டேர் அச் சம்பவங்களைப் பிணைக்கும் சரடாகத் தனிமனிதப் பேராசையையையும், காழ்ப்புணர்வையும் அங்கதத்தோடு முன் வைக்கிறார்.

அரசர்களிடையே நிகழும் தேவையற்ற பூசல்கள், இராணுவத்தினர் மேற்கொள்ளும் மனிதம் துறந்த இராக்கதக் கொடுமைகளால் மலினமாக்கப்படும் மனித உயிர்களின் அவலங்கள், மத குருக்கள், மத நீதிபதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கடைப் பிடிக்கும் போலித்தனமான இரட்டை நிலைப்பாடுகள், நடைமுறையோடு சிறிதும் ஒத்து வராத தத்துவவாதிகளின் வறட்டுத் தனமான சிந்தனைகள் ஆகிய அனைத்தையும் போகிறபோக்கில் ஒரு பார்வையாளனைப் போலக் கேண்டீட் பார்த்துக் கொண்டே செல்லும்போது அந்தப் படைப்பைப் படிக்கும் வாசகர்களும் கூட அவனுடன் பயணிக்கும் பார்வையாளர்களாக மாறிப் போய் விடுகிறோம் என்பதே இந்நாவலின் சிறப்பு. சிறுமைகளையும், கொடுமைகளையும் குறித்த நேரடியான சாடல்கள் இன்றி, அவற்றைப் பற்றிய விவரணைகளை மட்டும் புறவயப் பார்வையோடு - விலகி நின்று விளக்கமாகத் தந்துவிட்டு, அவை குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தைக் 'கேண்டீ'டத்திலும், படிப்பவர்களிடத்திலும் விட்டு விடுகிறார் வோல்ட்டேர்.

மூலநூல் படைப்பாளியின் இத் தனித்துவம், மொழியாக்கத்திலும் சுருதி பிசகாமல் வெளிப்பட்டிருக்கிறது.

"நான் படுக்கையில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, கடவுள் பல்கேரியர்களைத் தண்டர் - டென் - ட்ராங்க் கோட்டைக்கு அனுப்பி வைக்கப் பிரியப்பட்டார்'' என்று மெலிதான நையாண்டியுடன் தொடங்கி, உக்கிரமான போர்ச் சூழலை ஒரு அன்றாட நடப்பைப்போலச் சர்வ சாதாரணமாக வருணித்துக் கொண்டு போகிறார் வோல்ட்டேர்.

''அவர்கள் என் தந்தையையும், சகோதரனையும் கொன்றனர். என் தாயைத் துண்டு துண்டாக வெட்டினர். இதைக் கண்டு நான் மயக்கமடைந்ததைப் பார்த்த ஆறடி உயரம் உள்ள ஒரு பல்கேரியன் என்னைப்புணர முற்பட்டான். அதனால் என் மயக்கம் தெளிந்தது. நான் சத்தமிட்டேன், போராடினேன், கடித்தேன், கீறினேன்.அந்த பல்கேரியனின் கண்களைத் தோண்டி எறிய முயன்றேன்.....அந்த முரடன் ஒரு குறு வாளால் என் இடது விலாவில் வெட்டினான்.அந்த வடு இன்னும் இருக்கிறது''
என்றோ ஓர் நாள் திடீரென நிகழும் கொடுஞ்சாவுகளை விடத் தினசரி நிகழ்வாகி விடும் உயிரிழப்புக்கள், மனித மனங்களை மரத்துப்போகச் செய்து விடுவதையும், அதனாலேயே எந்த உணர்வுப் பாதிப்பும் இல்லாமல் நடந்ததை நடந்தபடி எடுத்துரைக்கும் சக்தியை அவை பெற்று விடுவதையும் நாவலின் பல இடங்களில் இது போல நுட்பமாக முன்வைக்கிறார் வோல்ட்டேர்.

சாவுகளும், பெண் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும் மட்டுமன்றி, மனிதம் என்பதே ஒரு விற்பனைச் சரக்காகும் இழிவையும் இந்நாவல் முன் வைக்கிறது. கேண்டீடின் காதலி குனிகொண்டேவுக்கு உதவி செய்யும் கிழவி, தான் விற்பனைப் பொருளாக்கப்பட்ட அவலத்தைச் சிறிது கூட உணர்ச்சி கலவாமால் இவ்வாறு சொல்லிக் கொண்டே போகிறாள்.

".....கொள்ளை நோயின் முதல் அலை அடங்கியதும் ஆளுநரின் அடிமைகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். என்னை ஒரு வியாபாரி வாங்கி டூனிஸ் நருக்கு இட்டுச் சென்றான். இவன் என்னை மற்றொரு வியாபாரியிடம் விற்றான். அவன் என்னைத் திரிபோலியில் ஒருவனுக்கு விற்றான். திரிபோலியிலிருந்து அலெக்சாண்ட்ரியாவுக்கு விற்கப்பட்டேன். அலெக்சாண்ட்ரியாவிலிருந்து ஸ்மிர்னாவுக்கு. ஸ்மிர்னாவிலிருந்து கான் ஸ்டாண்டி நோபிளுக்கு. ஒரு வழியாகத் துருக்கி சுல்தானின் கீழ் இருந்த ஒரு படையின் "ஆகா'' (தலைவன்) ஒருவனுக்குச் சொத்தானேன்.''

வலுவற்றவர்கள் மீது வலியவர்கள் நிகழ்த்தும் ஆதிக்கத்தையும், சுரண்டல்களையும் நாவலின் பல பகுதிகள் அருமையாக முன் வைக்கின்றன.
''...தன் அண்டை நகரை அழிக்க விரும்பாத நகரும், ஏதோ ஒரு குடும்பத்தை நாசமாக்க விரும்பாத குடும்பமும் இல்லையென்றே சொல்வேன் ''என்று இக் கருத்தை வெளிப்படையாகவும் பிரகடனம் செய்கிறார் வோல்ட்டேர்.

வசதியானவர்கள், அறிவாளிகள், உயர் பதவியிலுள்ளவர்கள், தத்துவ போதகர்கள் என்று சொல்லப்படும் எல்லோரிடமுமே ஏதோ ஒரு நிறைவின்மையே நிறைந்திருப்பதையும், அதுவே போர் அல்லது சண்டை செய்யுமாறு அவர்களைத் தூண்டுவதையும் கேண்டீட் காண்கிறான்

"நாடாளுமன்றம், தேவாலயங்களுடன், படித்தவர்கள், பிறபடித்தவர்களுடன், விலைமாதர்கள், பிறவிலை மாதர்களுடன், பணம் வட்டிக்குக் கொடுப்பவர்கள், பொது மக்களுடன், மனைவிகள், கணவர்களுடன், உறவினர்கள், பிற உறவினர்களுடன் என்று தேவையற்ற சண்டைகள் போடுகிறார்கள்.'' என்கிறார் நாவலில் வரும் ஒரு அறிவு ஜீவி. இசை, இலக்கியம், தத்துவம் என நாட்களை நகர்த்தும் படிப்பாளிகளும்கூடச் சலிப்புடனேயே இருக்கிறார்கள்.

நாவலின் இறுதிக் கட்டத்தில்,மிகச் சிறிய தோட்டத்துக்குச் சொந்தக்காரரான துருக்கியர் ஒருவரைச்சந்திக்கிறான் கேண்டீட்.அவர் எந்த மத நீதிபதியையோ, அமைச்சரையோ அறிந்ததில்லை.நாட்டு நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் யோசித்துத் தலையைக் குழப்பிக் கொள்வதில்லை.அமைதியான வாழ்வு நடத்தும் அவர், தன் எளிய வாழ்க்கையின் சாரத்தை மிகச் சில வார்த்தைகளில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
''என்னிடம் வெறும் 20 ஏக்கர்தான் உள்ளது......நானும் ,என் பிள்ளைகளும் அவற்றில் விளைக்கிறோம்; எங்களது உழைப்பு எங்களை சோர்வு, பாவம் செய்தல், ஆசை ஆகிய மூன்று பெரும் தீமைகளிலிருந்து காக்கிறது.''
வறட்டுத்தனமான தத்துவங்களை விடவும்,தொடர்ந்த உடலுழைப்பும், சக மனித நேயமுமே முக்கியமானவை என்பதை அவர் வார்த்தைகள், மற்றும் செயல்கள் வழி தரிசிக்கிறான் கேண்டீட்.

கிட்டத்தட்ட 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்தப் பிரெஞ்சு நாவலை ஆங்கில வழி தமிழாக்கம் செய்திருக்கும் பத்ரி சேஷாத்ரி மிகவும் பொறுப்புணர்வுடன், மூலத்தின் சாரத்தை உள் வாங்கிக் கொண்டு இம் மொழியாக்கப் பணியைச் செய்திருக்கிறார். அடுத்தடுத்துச் சம்பவங்களைக் கோர்த்துக் கொண்டே போகும் மூலப் படைப்பாளியை அடியொற்றித் தமிழிலும் அந்த வேகத்தையும், விறுவிறுப்பையும் கொண்டு வர முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சரளமான - உறுத்தாத தமிழ் நடை, சம்பவங்களின் விரைவுக்கேற்ற சிறு சிறு வாக்கிய அமைப்புக்கள், வியாக்கியானங்களை வாசகர் தீர்ப்புக்கு விட்டுவிட்டு செய்திகளை மட்டும் சொல்லிக் கொண்டுபோகும் மூல நூலின் போக்கிலிருந்து துளியும் பிறழாத துல்லியம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து இந்நாவலை வோல்ட்டேர் வழி படித்தால் என்ன பாதிப்பு ஏற்படுமோ, அவற்றையே உண்டாக்குகின்றன.

"செத்துக் கிடந்த பல பிணங்கள், செத்துக் கொண்டிருக்கும் சில உயிர்கள் மீது ஏறி நடந்து பக்கத்து கிராமத்துக்குச் சென்றான். அது எரிந்து சாம்பலாகிக் கிடந்தது. அந்த 'அபேர்' கிராமத்தை பல்கேரியர்கள், போரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எரித்திருந்தனர். ஒருபக்கம் உடல் முழுவதும் காயமடைந்த வயதானவர்கள், தங்கள் முன்னாலேயே படுகொலை செய்யப்பட்ட தங்களது மனைவிகள், குழந்தைகளின் உடல்களைக் கட்டிப் பிடித்தபடி இருந்தனர். மற்றொரு பக்கம், அவர்களது பெண்கள், பல்கேரிய நாயகர்களின் இச்சையைப் பூர்த்தி செய்த பிறகு, வெட்டப்பட்டுக் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருந்தனர். பாதி எரிந்து கொண்டிருந்த சிலர் தங்களைக் கொன்று விடுமறு கெஞ்சிக் கொண்டிருந்தனர். பூமியெங்கும் மூளைகள், கைகள், கால்கள் சிதறிக் கிடந்தன.''
என்று விவரிக்கப்பப்படும் போர்ச் சூழல் வருணனை இன்றைய ஈழப்போரின் அவலத்தைக் கண் முன் நிறுத்துவதோடு வோல்ட்டேரின் தொலைநோக்குப் பார்வைக்கும் தக்க சான்றாகிறது. இதைத் தமிழில் உணர்ச்சிகரமாக வடித்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

காலம் கடந்து நிலைத்திருக்கும் 'கேண்டீட்' போன்ற மகத்தான இலக்கியங்களைத் தமிழுக்குக் கொணர்ந்து நம் தாய் மொழிக்கு மேலும் வளம் சேர்த்திருக்கும் பத்ரி சேஷாத்ரி அவர்களும், இந்நூலை அழகுற வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகத்தாரும் போற்றுதற்குரியவர்கள்.

கேண்டீட்
ஃபிரெஞ்சு நாவல்
வோல்ட்டேர்
ஆங்கில வழி தமிழாக்கம்: பத்ரி சேஷாத்ரி
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 160
விலை ரூ.100/-
Kizhakku, An Imprint of
New Horizon Media Pvt. Ltd.,
No.33/15, Eldams Road
Alwarpet, Chennai-600 018.
Phone: 044-42009601
நன்றி:
வடக்கு வாசல் - மே '09

28.5.09

நைநிடால் பயணத் துளிகள் - 3 -ஜாகேஷ்வர்


ஜோதிர் லிங்கத் தலங்கள் பன்னிரண்டில் ஒன்றாகக் கருதப்படுவது , உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவிலிருந்து 36 கி.மீ.வடகிழக்காக அமைந்திருக்கும் ஜாகேஷ்வர். கடல் மட்டத்திலிருந்து 1870 மீட்டர் உயரத்தில் , ஜடகங்கா பள்ளத்தாக்குப் பகுதியில் ,தேவதாரு மரங்கள் அடர்ந்து செறிந்துள்ள வனப் பகுதியிலிருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்வதென்பது , பத்ரிநாத் ,கேதார்நாத் புனிதப்பயணங்களுக்கு இணையாகக் கருதப்படும் பெருமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.
முந்தைய நாட்களில் ,மானசரோவர்,கைலாச யாத்திரை செல்பவர்கள் , ஜாகேஷ்வர் வழியாகவே சென்றிருக்கிறார்கள். கைலாசப் பயணத்திற்குப் பல வரையறைகளும் , கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுவிட்ட இன்றைய சூழலில் அந்தப் பாதையும் கூட வேறு வழியக மாறிப் போய்விட்டது.

பெரியதும் ,சிறியதுமான 124 கற்கோயில்களை உள்ளடக்கி இருப்பது ஜாகேஷ்வர்.
பிரமிட் வடிவம் கொண்டவையும் ,பூரி ஜகன்னாதர் ஆலயம் போன்ற வடிவமைப்புக் கொண்டவையுமான கட்டமைப்புடன் தண்டேஷ்வர் , சண்டிகா ,ஜாகேஷ்வர் ,குபேர் ,மிருதுஞ்சயர் , நவதுர்க்கை , நவக்கிரகம் ,சூரியன் ஆகிய பல கடவுளர்களுக்கான கோயில்கள் இவ் வளாகத்தில் அமைந்திருக்கின்றன.இவற்றுள் மிகப்பெரியது , தண்டேஷ்வரருடையது ; மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது மிருத்யுஞ்சயருடையது.

ஜாகேஷ்வர் கோயிலின் பலவகைத் தோற்றங்கள்
ஆதி சங்கரர் கேதார்நாத்திற்குத் தன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டபோது , இக் கோயிலுக்கு வருகை புரிந்து புனருத்தாரணமும் செய்ததற்கான குறிப்புக் கிடைக்கிறது.

இக் கோயில்கள் கட்டப்பட்ட காலம் குறித்த ஆதார பூர்வமான - உறுதியான தகவல்கள் சரிவரக் கிடைக்காதபோதும் ,கி.மு.9 முதல் கி.மு.13க்குட்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக எண்ணப்பட்டுத் தொல்லியல் துறையால் 'புராதனச் சின்ன'மாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.ஆனால் புராதனச் சின்னம் என்பதைக் குறிப்பிடும் தொல்லியல் துறையின் கல்வெட்டு ஒன்றைத் தவிர - அப்படிப்பட்ட பராமரிப்புக்கும் , பாதுகாப்புக்கும் இப் புனிதத் தலம் உட்பட்டிருப்பதற்கான தடயங்கள் எதுவுமில்லை . ஆலய வளாகம் அடிப்படைத் தூய்மை கூட அற்றதாகப் புழுதி மண்டிக் குப்பைக் குவியலுக்கு நடுவில் இருப்பது , காணச் சகிக்காத ஒரு காட்சி.

1000 ஆண்டுப் பழமை உடையதாகச் சொல்லப்பட்ட தேவதாரு மரம் ஒன்றை ஆலயச் சுற்றுக்குள் நாங்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சிதிலமான கற்குவியல்கள் மீது அமர்ந்தபடி , கோணல் சிரிப்போடும் , புகை வாயோடும் (கஞ்சா!?)
எங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சில காவி உடைப் பரதேசிகள்.(ஒரு வேளை ...இதுதான் அவர்களின் மாற்றுக் கலாச்சாரக் கலகக் குரலோ?).

காசிக்குப் போனால் எதையாவது விட்டு விட வேண்டுமென்பது ஒரு சம்பிரதாயமாம் . காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப் போகும் வழியைப் பார்க்கும்போது காசிக்கு வந்ததன் அடையாளமாகப் பக்தியையே விட்டுவிட வேண்டும் போலிருக்கிறது என்று என் தோழி ஒருத்தி சொன்னது ஜாகேஷ்வருக்கும் கூடப் பொருத்தமானதாகவே எனக்குத் தோன்றியது.

நைநிடால் பயணத் துளிகள் - 2-சித்தாயி கோலு தேவதா


சித்தாயி கோலு தேவதா கோயில்

இறை வழிபாடு என்பது வினோதமான நம்பிக்கைகளையும்,சடங்கு முறைகளையும் உள்ளடக்கியதாகவே இருந்து வருகிறது. அப்படிப்பட்ட வித்தியாசமான வேண்டுதலுடன் கூடிய ஒரு வழிபாட்டை நைநிடால் பயணத்தில் எதிர்ப்பட நேர்ந்தது.

நைநிடால் அருகிலுள்ள அல்மோராவுக்கு மிக அண்மையில் - சற்று மேலே உள்ள சிற்றூர் ஒன்றில் ,நீதி தேவனுக்கான ஆலயம் ஒன்று மிகப் பிரபலமாக விளங்கி வருகிறது.

'கோல் மந்திர்' என்று அழைக்கப்படும் இக் கோயிலில் குடி கொண்டிருக்கும் நாதனைச் 'சித்தாயி கோலு தேவதா 'என்று பெயர் சூட்டி (நீதி வழங்கும் தெய்வம் என்ற பொருள்பட)அழைக்கிறார்கள் இங்குள்ள மக்கள்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினர் கோயில் வளாகங்களுக்குள் தொட்டில் கட்டித் தொங்க விடுவதை நாம் கண்டிருக்கிறோம்.அது போல மனித நீதியில்....,.மனிதர்கள் அமைத்த வழக்கு மன்றங்களில் நம்பிக்கை இழந்தவர்கள் அல்லது நீதி மன்றங்களிலுள்ள தங்கள் வழக்குகள் வெற்றி பெற வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்ள விரும்புகிறவர்கள் வித்தியாசமான வழிமுறை ஒன்றைக் கடைப் பிடிக்கிறார்கள்.
நீதி மன்றங்களில் வழக்குக்கான விண்ணப்பம் போடுகையில் பயன்படுத்தும் முத்திரைத் தாள்களை வாங்கி அதில் தங்கள் விண்ணப்பத்தைப்பக்கம் பக்கமாய் எழுதிக் கடவுள் சன்னிதானத்தில் பட்டுத் துணிகளுடனும் , மணிகளுடனும் இணைத்துத் தொங்க விட்டு விடுகிறார்கள்.
வேண்டுதலுக்காகத் தொங்கவிடப்பட்டுள்ள மணிகள்,மனுக்கள்

பத்திரப்பதிவு முத்திரைத்தாளில் கடவுளுக்கு விண்ணப்பம்

மாதக் கணக்கில் ஆண்டுக் கணக்கில் நிலுவையில் இருக்கும் தங்கள் வழக்குகள்...., நீண்டு கொண்டே போகும் தங்கள் வழக்குகள் ,அப்படியாவது ஒரு முடிவுக்கு வந்து விடாதா என்ற ஏக்கத்துடன் கூடிய எதிர்பார்ப்பு......அந்தக் கோயில் பிரகாரத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் தாள்களில் படபடக்கிறது ; எண்ணற்ற கண்ணீர்க் கதைகளைத் தாங்கியிருக்கக்கூடிய ( மொழி தெரியாததால் அவற்றைப் படிக்க முடியவில்லை என்றபோதும் அவற்றிலுள்ள செய்திகள் அனுமானிக்கக் கூடியவைதானே?) அந்தக் காகிதங்கள் மனித சுயநலங்களின் மௌன சாட்சியங்களாய்க் காற்றில் சலசலத்தபடி வானிலிருந்து இறங்கி வந்து வரம் கொடுக்கப் போகும் நீதி தேவனின் வரவுக்காய் அங்கே தவம் இயற்றிக்கொண்டிருக்கின்றன......

26.5.09

'பசங்க' -சிறுவர் உலகின் மிகையற்ற சித்தரிப்பு

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் குறித்த பிம்பத்தைத் தமிழ்த் திரை பெரும்பாலும் செயற்கையாகவோ அல்லது மிகைப்படுத்தியோதான் இது வரை காட்டி வந்திருக்கிறது .
வயதுக்கு மீறி வார்த்தையாடுபவர்கள் - அறிவுரை கூறும் அளவுக்கு அதிமேதாவிகள் , தியாகத் திரு உருவங்கள்,குழந்தைகளைக் கடவுளின் அம்சமாக்கி வேப்பிலை அடிக்க வைக்கும் விசித்திரங்கள்(ஆடி வெள்ளி , துர்க்கா போல) என்று தமிழ் சினிமா இதுவரை சிறுவர்களைப் படுத்திவந்த பாட்டை ஒரு பட்டியலே போட்டு விடலாம்.

தன் படங்களில் சிறுவர்களையும் , குழந்தைகளையும் அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ள மணிரத்னம் போன்ற 'சினிமா மேதை'களும் கூட , பால பருவத்தையும் , அதன் யதார்த்தமான குறும்புகளையும் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை ஒட்டி அதற்கேற்ற ஜிலுஜிலுப்பான ஜோடனைக் கிளுகிளுப்புக்களுடன் மட்டுமே சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதற்குச் சரியான ஒரு உதாரணம் 'அஞ்சலி' .அவரிடம் உள்ள மற்றொரு அம்சம் , பெரும்பாலும் அவரது சித்தரிப்பு மேட்டுக்குடிச் சிறார்களைச் சார்ந்ததாக அமைந்து விடுவதுதான்.

தங்கர் பச்சானின் 'அழகி', 'பள்ளிக் கூடம்', சேரனின் 'ஆட்டோக்ரா..ப்'ஆகிய படங்கள் பட்டிக்காட்டுச் சிறுவர்களின் பள்ளிக்கூடப்பின்புலத்தை நடப்பியல் தன்மையோடு காட்டியிருப்பவை (பாக்கியராஜ் , பாரதிராஜா போன்றோரும் ஓரளவு அதை முயற்சித்துப் பார்த்திருந்தபோதும் பெரியவர்களின் சில்மிஷங்களைச் சித்தரிக்கும் ஊறுகாய் போலவே அவர்களது படங்களில் சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்).

சேரன் , தங்கர் பச்சான் ஆகியோரின் முன்குறித்த படங்கள் உண்மைக்குச் சற்று நெருக்கமாகச் சிறுவர் உலகைப் படம் பிடித்துள்ளன என்றபோதும் அந்தச் சிறுவர்கள் ஓரிரண்டு ரீலுக்குப் பிறகு வளர்ந்து பெரியவர்களாகி விடுவதால் , சிறுவர் உளவியலை முழுமையாக முன் வைக்கும் படங்களாக அவற்றையும் குறிப்பிட முடியவில்லை.

தமிழுக்கு மிகவும் புதியதாய் - முழுக்க முழுக்க சிறுவர் உலகத்தை - அதிலும் வறண்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த சிறுவர் உலகை மட்டுமே மையமிட்டதாய்....,அந்த உலகின் இயல்பான சுட்டித்தனங்கள்,கிண்டல்கள், பரிகாசங்கள்,விளையாட்டுக்கள் , போட்டி பொறாமைகள்,வீம்புகள் ,கபடற்ற குழந்தைமை முதலியவற்றைத் திரை ஓவியமாக வடித்துத் தமிழர்களைத் தலை நிமிர வைத்திருக்கும் படம் , அண்மையில் வெளியாகியுள்ள புதிய இயக்குநர் பாண்டியராஜின் படைப்பாகிய (தயாரிப்பு 'சுப்ரமணியபுர'த்தின் இயக்குநர் சசிகுமார் ) 'பசங்க'.

குறிப்பிட்ட அந்தப் பருவத்துக்கே உரித்தான குணாதிசயங்களுடன் படத்தில் 'பசங்க'ள் வெளிப்பட்டிருப்பதே இப் படத்தைக் கவன ஈர்ப்புக்கு உரியதாக்குகிறது. குறும்புகளும் கோபங்களும் அந்தக் குட்டிப்பசங்களிடம் தலையெடுக்கின்றனவேயன்றி அவை வன்மமாகப் பரிணாமம் பெற்று விடுவதில்லை. எதிர்நிலைப்பையனாக வரும் ஜீவாவையும் கூட நம்மால் ரசிக்கவும் நேசிக்கவும் முடிவது இதனால்தான். ஜீவா , அன்புக்கரசு என்ற இரு பாத்திரங்களுமே தத்தமக்குரிய குறை நிறைகளுடனேயே படத்தில் உலா வருகிறார்கள்.

அன்புக்கரசுவும் கூடக் குழந்தைமை மாறாத ஒரு சிறுவனாகத்தான் வருகிறானே தவிர அவன் ஒன்றும் ஒரு இலட்சிய புருஷனில்லை.அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டுவிட்டு ஐ.ஏ.எஸ். கனவு காணும் அதே வேளையில் , கற்பனையாக பைக்கை ஓட்டும் தன் வயதுக்கேற்ற கனவும் அவனிடம் இருந்துகொண்டுதான் இருக்கிறது.தன் சித்தப்பா , ஜீவாவின் சகோதரியை மணக்கும் சூழ்நிலையில் அதைக் கோபத்துடன் எதிர்க்கும் சராசரிச் சிறுவனாகத்தான் அவனும் சித்தரிக்கப்படுகிறான்.

ஜீவா,பக்கடா குழுவினரின் அட்டகாசமான குறும்புகளுடன் தொடங்கும் படம் , இறுதி வரை தொய்வின்றி - ஒரே சீராகச் சிறுவர்களை மட்டுமே மையப்படுத்திக்கொண்டு போகிறது.சோடா பாட்டில் கண்ணாடி அணிந்து 'அப்பத்தா' என்று கத்தும் பையன் ,பால் வாடியில் 'தூங்காதீங்க டீச்சர்'என்று மழலைகள் குரல் எழுப்பும் வரை உறக்கத்தில் ஆழ்ந்து போகும் ஆசிரியை,வீட்டு வாசல்களில் தொங்கும் பால் பை கவர்களைப் பிரித்து அந்த இடத்திலேயே வாயில் ஊற்றிக் காலி செய்யும் 'பக்கடா',அன்புவின் குட்டித்தம்பியின் இனிய சேட்டைகள் என்று ரகம் ரகமான சிறுவர் உலகம் ஒன்று , அதன் இயல்பு மாறாத வகையில் படத்தில் விரிகிறது.

குட்டிப் பையன்கள் மட்டுமன்றிப் பெரியவர்களும் கூட மிக யதார்த்தமான வாழ்வியலில் தோய்ந்தவர்களாகவே வந்து போகிறார்கள். ஜீவாவின் தந்தையும் , ஆசிரியருமான சொக்கலிங்கம் ஓர் இலட்சிய ஆசிரியர் இல்லைதான் ; மகன் அடி வாங்கும்போது பாசத்தால் சற்று உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளைக் கொட்டுபவர்தான் ; ஆனாலும் கூடஅவரிடமும் நல்லாசிரிய இயல்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ரேங்க் வாங்கும் மாணவனுக்குக் கைதட்டி வாழ்த்துவதை.....,நல்ல சிந்தனைகளோடு வகுப்பைத் தொடங்குவதை - இவற்றையெல்லாம் தனியார் பள்ளியிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருக்கும் அன்புக்கரசுவின் வழியாகவே அவர் கற்றுக் கொள்கிறார்; அதில் அவருக்கு எந்த 'ஈகோ'வும் இல்லை. படிப்பில் தன் மகனை விட அன்புக்கரசு முந்திக் கொண்டு போவது அவருக்கு நெருடலாக இல்லை. திறந்த மனத்துடன் அன்புக்கரசைப் பாராட்டும் நல்ல மனமே அவருக்கு வாய்த்திருக்கிறது.

அன்புவின் தந்தையும் குழந்தைகள் நலனில் அக்கறை காட்டும் சராசரித் தகப்பனின் பிம்பத்தையே வெளிக்காட்டுகிறார். பாசம் அவர் நெஞ்சுக்குள் உறைந்து கிடப்பது அவரது சின்னச் சின்ன முறுவல்களால்...உடல் மொழிகளால் வெளிப்படுத்தப்படுகிறதேயன்றி அதை ஆர்ப்பாட்டமாக அவர் தம்பட்டம் அடித்துக் கொள்ள்வதில்லை.

தனியார் பள்ளிகளுக்கும் , அரசாங்கப் பள்ளிகளுக்கும் உள்ள இட்டு நிரப்ப முடியாத இடைவெளி.....,பெற்றோரின் சண்டையால் படிப்பில் கவனமிழக்கும் மாணவன் போன்ற சமூக விமரிசனங்களும் போகிற போக்கில்படத்தில் இடம் பிடித்திருக்கின்றன.

காதலைக் கிளைக் கதையாக்கி , ஒரு வகையில் அதை நகைச் சுவை 'டிராக்' ஆகவும் கூட ஆக்கி விட்ட படம், இது ஒன்றாகத்தான் இருக்க முடியும்.

இன்றைய உலகமய - நகர்மயச் சூழலில் ,தொலக் காட்சிக் கார்ட்டூன்களிலும் , கணினி விளையாட்டுக்களிலும் மூழ்கிக் கிடக்கும் பெருநகரக் குழந்தைகளுக்கு இப் படத்தில் இடம் பெறும் பல பிள்ளைப்பருவச் சொலவடைகளும் ,சாட் பூட் த்ரீ , ரயில் வண்டி ஓட்டம் ,என்ன கோ?டீ கோ முதலிய விளையாட்டுக்களும் அன்னியமாக ஏன் வினோதமாகக் கூட இருக்கலாம்.அதே வேளையில் தங்கள் பாலிய பருவத்தைச் சிற்றூர் ஒன்றின் சிதிலமான பள்ளிக் கூடம் ஒன்றில் கழித்திருக்கும் அவர்களது பெற்றோர்கள் சிலருக்கோ இது மலரும் நினைவுகளைக் கிளர்த்துவதாகவும் கூட இருக்கலாம்.

குத்துப் பாட்டு ,வன்முறை விகாரங்கள் தவிர்த்து - கோடிக்கணக்கான பட்ஜெட்டுடன் வெளிநாட்டுக்கு ஓடிப் போகாமல் திருமயத்தையும் விராச்சிலையையும் சிறுவர்களால் அழகு செய்திருக்கிறது இந்தப்படம். பார்வையாளர்களின் ரசனையின் மீது பழி சுமத்தித் தங்கள் ஆபாசச் சித்தரிப்புக்களை நியாயப் படுத்திக்கொண்டிருக்கும் தமிழ் இயக்குநர்களும்,தயாரிப்பாளர்களும் இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பையும் இது பெற்றுள்ள வெற்றிக்கான பின்புலத்தையும் சற்றே சிந்தித்துப் பார்த்தால் ' பசங்க 'போன்ற பல நல்ல படங்களை அடிக்கடி காணும் வாய்ப்பு தமிழ்த் திரை ரசிகர்களுக்குக் கிடைக்கக் கூடும்

புனைவுகளைக் கட்டுடைக்கும் பெண்ணியக் குரல்


முன் குறிப்பு:


'புதிய பார்வை'
இதழில் வெளியான சங்கிலி என்ற என் சிறுகதையை நான் முதலில் சூட்டிய பெயரான 'தடுத்தாட்கொண்ட புராணம் - பாகம் இரண்டு'என்ற பெயரில் 18.03.09 தேதி இட்ட வலைப் பதிவில் வெளியிட்டிருந்தேன்.அச் சிறுகதை குறித்து 'இந்தியப் பல்கலைத் தமிழாசிரியர் மன்றம் 'நடத்திய ஆய்வுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டுப் பின் 2006 ஆய்வுக்கோவையில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் திரு மதியழகனின் திறனாய்வுக் கட்டுரையை இங்கு வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன்.பெண்ணிய அணுகு முறையையும் , என் சிறுகதை எந்த நோக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவாக உள் வாங்கிக் கொண்டு எழுதிய கட்டுரையாளர் திரு மதியழகனுக்கு என் நன்றி.

தன் படைப்பு சரியான புரிதலுடன் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை அறிய நேர்வது ஒரு படைப்பாளிக்குச் சுகம் தரும் இனிய அனுபவம். அதை எனக்குச் சாத்தியமாக்கி அதைக் கட்டுரையின் ஆய்வுப் பொருளாகவும் தேர்ந்து கொண்ட அவருக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இனி மதியழகனின்கட்டுரை........

புனைவுகளைக் கட்டுடைக்கும் பெண்ணியக் குரல்

புனிதம் என்று சமூகம் எதனைக் கருதுகிறதோ அதனைச் சிதைப்பதும் , அதன் மூலமாகப் புதிய விழுமியங்களை உருவாக்குவதும் , இன்றைய நவீனப் படைப்புக்களில் இழையோடுகின்ற பொது அம்சம்.காலங்காலமாக இம் மண்ணில் வேரூன்றிப் போன ஆதிக்க மரபுகளை அழித்தொழிப்பதும் , பயன்பாட்டு நோக்கில் மீட்டுருவாக்கம் செய்வதும் பெண்ணியச் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்கது. அவ் வகையில் , மூவர் முதலிகளில் ஒருவரான சுந்தரரின் ஆணாதிக்க உறவுகளைச் சிதைத்துவிட்டுப்பெண் தனக்கான அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்வதே எம்.ஏ.சுசீலாவின் ' 'சங்கிலி ' -( தடுத்தாட்கொண்ட புராணம் பாகம் இரண்டு )என்ற சிறுகதையின் மையப் பொருளாக அமைகிறது.

பெண்ணடிமைத்தனத்தைப் பாதுகாக்கும் கவசமாகப் புராணக் கதைகளும் , அப் புராணக் கதைகளை உற்பத்தி செய்யும் சமயம் என்னும் நிறுவன அமைப்பும் கிழடு தட்டிப் போன சமூக அமைப்பில் வேரூன்றியுள்ளன.இச் சூழலில் , பெண்ணைக்காம நுகர்ச்சிப் பொருளாகப் பார்க்கும் புராணத் தொன்மத்தைக் கட்டுடைக்கும் நோக்கில் இச் சிறுகதை புனையப் பெற்றுள்ளது.

பெண் சார்ந்த தொன்மங்களைக் கட்டுடைத்துப் பெண் தனக்குரிய விடுதலையைத் தனக்குள்ளேயிருந்து தொடங்கிடும் வாழ்வியல் தேடலை இக்கதை அர்த்தமாக்கியுள்ளது. பெண் தனக்கான வாழ்க்கையைத் தனக்குள்ளே தேடிக் கொள்வதோடு ஆணாதிக்கச் சொல்லாடல்களைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் - ஆதிக்க உணர்வோடு செயல்படுவது ,இறைவன் , கணவன் ,தந்தை என எவராக இருப்பினும் அதனைக்கலகக் குரலோடு எதிர்கொள்வதாகவும் இக் கதை புனையப்பட்டுள்ளது.
சமூக அமைப்பில் திருமணம் என்பது புனிதமாகவும் ,அதனைக் காப்பாற்றும் குடும்பம் என்ற அமைப்பு நிறுவனமயமாக்கப்பட்டதாகவும் அமைந்துள்ளது. குடும்ப
உறவுகளில் ஆண் அதிகாரம் மிக்கவனாகவும் , பெண் சேவகம் செய்யும் அடிமையாகவும் , இழிபிறவியாகவும் கருதப்பட்டு வந்துள்ளனர்.

''எனக்குப் பெயரில்லை ....முகவரியும் இல்லை....பிறந்தபோது ஏதோ எனக்கு ஒரு பெயர் இடப்பட்டிருக்கலாம் . ஆனால் ,காலம் அதையெல்லாம் அழித்துத் துடைத்து என்றோ தூக்கி எறிந்து விட்டது''
என்ற சடங்கவி மகளின் கூற்று , முகங்களற்றுப்போன பெண்ணின் அடையாளமாக முன் வைக்கப்படுகிறது. ஆணின் பார்வையில் பெண்ணுக்கான முகவரி என்பது தேவையில்லாத ஒன்றாகவும் , தன் சுயத்தை / அடையாளத்தை அழித்துக் கொண்டு வாழ முற்படுவதே அவளது இயல்பாகவும் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது.

பெண் , தனக்கான தேடலைத் தனக்குள்ளிருந்து வெளிப்படுத்துவதும் ,ஆதிக்க மரபுக்கு எதிரான செயலாக்கங்களை விதைப்பதும் இச்சிறுகதையில் மின்னல் கீற்றாக வெளிப்படுகின்றன. சைவத்தின் நாயகரான சுந்தரரின் திருவிளையாடல்கள் , இறைவனின் அனுமதியோடு பெண்ணை அடக்கியாள்வதற்குரிய ஒரு நுகர்வுப்பொருளாகப் பார்க்கின்றன.காலங்காலமாகப் பெண் குறித்த மதிப்பீடுகள் அவளை 'ஒர் உயிரி 'என்ற அளவில் கூடக் கருதவில்லை. இச் சூழலில் இக் கதை பெண்ணியக் குரலாகவும் , மீட்டுருவாக்கக் களனாகவும் அமைகிறது.

சடங்கவி மகள் மீண்டும் உயிரோடு வந்து சங்கிலியைச் சந்திப்பதும் , சுந்தரரின் தடுத்தாட்கொண்ட சூழ்ச்சியை வெளிப்ப்டுத்துவதும் கதையில்முக்கிய திருப்பு முனைகளாக இடம் பெற்றுள்ளன.
''ஏமாந்தவர்களாகவும் , சிந்தனை மழுங்கிப்போனவர்களாகவும் நம்மைப் போன்றவர்கள் இருக்கிற வரைக்கும் இப்ப்டிப்பட்ட நாடகங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்''
என்ற சடங்கவி மகளின் கூற்று , பெண் தனக்கான வாழ்வைத் தானே தேர்ந்து கொள்வதை வெளிப்படுத்துகிறது.

பெண்ணுக்குப்பெண்ணைப் பகையாக்கி ஆண் உலகம் செய்கிற சூழ்ச்சியை வென்றெடுக்கும் பெண்ணியக் குரலைச் சங்கிலியார் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.சடங்கவி மகளும் , சங்கிலியும் பரவையைத் தடுத்தாட்கொள்ளப் பயணப்படுகின்றனர். இறைவன் சுந்தரனைத் தடுத்தாட்கொள்ளும் பெரிய புராண நிகழ்வு ,இங்கே மீட்டுருவாக்கமாக - பரவையைத் தடுத்தாட்கொள்ளும் பெண்ணியப் பதிவாக அமைகிறது.

இருவரும் பரவையைத் தடுத்தாட்கொள்வது என்பது , சுந்தரன் என்னும் ஆணின் செயல்பாட்டிற்குத் தடையாக - பெண்ணைக் காம நுகர்வுப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்கப் போக்கிற்குப் பெண் கொடுக்கும் எதிர்வினையாக - கலகக் குரலாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திரு மு. மதியழகன்,
நாராயண குரு கல்லூரி,
கோயம்புத்தூர்.

இணைப்பு:

'தடுத்தாட்கொண்ட புராணம் - பாகம் இரண்டு'

24.5.09

ஒரு நடிகையின் நாவல் : சில எதிர்வினைகள் , சில அதிர்வுகள்

''பெண்ணின் எழுத்து , அவளது அந்தரங்க டயரிக்குறிப்பாக மட்டுமே எப்போதும் இருந்து விடுவதில்லை . . சில வேளைகளில் சமூக மாற்றத்திற்கான நெம்புகோலாகவும் கூட அது செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான கண் திறப்பை இத்தகைய செய்திகளின் வாயிலாகத்தான் நாம் பெறுகிறோம்.''-எம்.ஏ.சுசீலா

உஷா தீபன்,
மதுரை.
ஒரு புதிய நாவலை அறிமுகம் செய்ததற்கு நன்றி. விரைவில் வாங்கிப் படிக்க ஆவலாய் உள்ளேன்.

பாவண்ணன்
அன்புடையீர்,வணக்கம்.
பழைய காலத்து நடிகையான டி.பி. ராஜலட்சுமி அவர்களுடைய கமலவல்லி நாவலைப்பற்றி சமீபத்தில்தான் ஒரு பத்திரிகையில் குறிப்பொன்றைப் படித்தேன். உடனே படிக்கும் ஆவலு\ட்டும்வகையில் அக்குறிப்பு எழுதப்பட்டிருந்தது. உங்களுடைய குறிப்பையும் இந்த நாவலையொட்டி நீங்கள் இதற்கு முன்பேயே ஆய்வு செய்திருக்கிறீர்கள் என்பதும் என் ஆவலைப் பலமடங்காக ஆக்குகிறது. சென்னை செல்லும்போது தேடி வாங்கிப் படிப்பேன்.


மேற்குறித்த இரண்டு கடிதங்களும் இரண்டு எழுத்தாளர்களிடமிருந்து 'ஒரு நடிகையின் நாவல்' குறித்த பதிவுக்காக எனக்கு வந்தவை.அரிதாகக் கிடைக்கும் ஒரு பழைய நாவலைப் படிக்க வேண்டும் என்ற மன எழுச்சியை இயல்பாகப் புலப்படுத்துபவை.

இவை ஒரு புறமிருக்க.... அந்தப் பதிவை நான் வெளியிட்ட நாள் முதல் என் வலைக்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை திடீரென்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் கணிசமாக அதிகரித்திருப்பது , மிகவும் ஆச்சரியமூட்டுவதோடு , திரைப்படம் என்ற ஊடகத்தின் கவர்ச்சியும் அது கட்டி எழுப்பும் மாயையும் எத்தனை வலிமையானது என்ற பிரமிப்பையும் என்னுள் கிளர்த்துகிறது.
உண்மையில் இந்தப் பதிவு, நான் முன் கூட்டித் திட்டமிட்டு எழுதாமல் , போகிற போக்கில் விரைவாக எழுதப்பட்ட பதிவு. எழுத்தாளர் பாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப்போல் , இந்நாவல் மீள் பிரசுரமாகியிருக்கும் தகவலை ஒரு வார இதழில் தற்செயலாகப் பார்த்தவுடன் , அப் படைப்பு எனக்கு ஏற்கனவே பரிச்சயமாகியுள்ளதாலும் , அதைப் பற்றிய சில கூடுதல் விவரங்களை அளிக்க என்னால் முடியும் என்பதாலும் அவற்றை இணைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விழைந்தேன்.ஆனால் அதற்குக்கிடைத்துள்ள வாசக எதிர்வினை நான் சற்றும் எதிர்பார்த்திராதது.

நவம்பர்2.'08 இல் இந்த வலைப்பூவைத் தொடங்கியது முதல் இலக்கியம், சமூகம், பயணம் என்று பல பிரிவுகளில் பல பதிவுகளை நான் இட்டிருந்தபோதும்....இரவு மூன்று மணி வரை கூடக் கண் விழித்துத் தீவிரமான பல செய்திகளை எழுதியுள்ளபோதும் அதற்கெல்லாம் எனக்குக் கிடைக்காத வாசகர் வரவு ( சென்ற வாரம் கூட என் வலைக்கு ஒரு நாள் வருகை சராசரியாக 5 முதல் 10 வரைதான் ) தற்செயலாக..அதிகம் சிரமப்படாமல் எழுதிய இந்தப் பதிவுக்குக் கிடைத்திருக்கிறது.கடந்த மூன்று நாட்களாக என் வலைக்கு வருவோரின் எண்ணிக்கை 4 மடங்கு கூடியிருக்கிறது என்றால் அதில் ஒளிந்து கொண்டிருக்கும் சமூகவியல் செய்தி ,நடிகையின் நாவல் பற்றிய பதிவாக அது அமைந்தது மட்டுமே என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


ஒரு வேளை நமீதாவையோ ..இன்னும் அதைவிடப் புதிய ஒரு நடிகையின் கதையையோ என் வலையில் எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போயிருந்தாலும் கூட இன்னொரு வகையில் அது அவர்களுக்குப் பயனுள்ள புதிய செய்தியை அளிப்பதாகவே இருந்திருக்கும்.
தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் தான் வாழும் சமூகத்தை அதில் பெண்கள் எதிர்ப்படும் அவலத்தை முன்வைக்கும் சமூக ஜீவிகளாக , நடிகைகளைப் பற்றிய புதிய பரிமாணம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும். .

நடிப்பு என்பது நடிகைக்கு ஒரு தொழில் மட்டுமே. அதற்கு அப்பால் அவளும் கூடச் சக மனித அக்கறை கொண்ட ஒரு உயிரியாகவே இருக்கிறாள் என்பதன் நிதரிசனமான ஒரு நிரூபணமே டி.பி.ராஜலக்ஷ்மியின் 'கமலவல்லி அல்லது டாக்டர் சந்திரசேகரன்'என்னும் நாவல்.


'தேவ தாசி'என்று கேவலமாகவும் எள்ளலோடும் அழைக்கப்பட்டுவந்த பின் புலத்திலிருந்து வந்த மூவலூர் இராமிருதத்தம்மையார் உருவாக்கிய 'தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்' ( 1936 )என்ற நாவல்தான், பொட்டுக் கட்டும் வழக்கத்தைப் புரட்டிப் போட்டுப் பெரியதொரு புரட்சியே உருவாக அடித்தளம் அமைத்திருக்கிறது. சட்டப் பேரவையில் - டாக்டர் முத்து லட்சுமி ரெட்டியால் தேவதாசி ஒழிப்பு மசோதா கொண்டுவரப்படவும் , பின்பு சட்டமாக்கப்படவும் அதுவே தூண்டுதலாக இருந்திருக்கிறது.

பெண்ணின் எழுத்து , அவளது அந்தரங்க டயரிக்குறிப்பாக மட்டுமே எப்போதும் இருந்து விடுவதில்லை ; சில வேளைகளில் சமூக மாற்றத்திற்கான நெம்புகோலாகவும் கூட அது செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கான கண் திறப்பை இத்தகைய செய்திகளின் வாயிலாகத்தான் நாம் பெறுகிறோம்.
இணைப்பு:
ஒரு நடிகையின் நாவல்

23.5.09

நைநிடால் பயணத் துளிகள் - 1
உத்தரகண்ட் மாநிலத்தின் மலைத்தொடர்களுக்கிடையே அமைந்திருக்கும் நைநிடால் , பீம்டால் , அல்மோரா ,பின்சார் ஆகிய இடங்கள், பல இயற்கை வளங்களை,அழகுகளை , அதிசயப்புதிர்களைத் தங்களுக்குள் செறித்து வைத்திருப்பவை. 'மிடில் ஹிமாலயாஸ்' என அழைக்கப்படும் இந்த இடை இமயப் பகுதிகளில் பயணிப்பது பல ஆனந்த அனுபவங்களைக் கிளர்த்தக் கூடியது.
ஒரு காலத்தில் அமைதிக்கும் , தியானத்திற்கும் உரிய இடமாக நைநிடால் இருந்திருந்தாலும், இன்று அங்கும் நுகர்வுக் கலாச்சாரத்துடன் கூடிய சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் பெருகிப் போய்க் கிடப்பதால் , அங்கிருந்து பிற பகுதிகளுக்குப் பயணப்படுகையிலேதான் உண்மையான இயற்கை அழகை நுகர முடியும்.
வித விதமான வண்ணம் கொண்ட கூழாங்கற்களை, இமயப் பிஞ்சுகளை அடித்துக்கொண்டு வரும் கோசிநதி (பீஹாரின் கோசி அல்ல) , குறிப்பிட்ட சில மலைப் பாதைகளில் வாகனத்தை விட்டுச் சற்றே கீழிறங்கிப் பார்த்தால் தூரத்திலிருந்து தரிசனமாகும் வெள்ளிப் பனி இமயம் -அதன் திரிசூல்,நந்தாதேவி சிகரங்கள் -நிலவியலமைப்பு மாற மாற, ஓக் என்றும் தேவதாரு என்றும் மாறிக்கொண்டே வரும் மரக்கூட்டங்கள் என்று வற்றாத பிரபஞ்சத்தின் பேரழகை நெஞ்சு முழுக்க நிரப்பிக் கொண்டு விடலாம். .குறிப்பாக நைநிடாலிலிருந்து அல்மோரா செல்லும் பயணம் மிக அற்புதமானது .அப்பயணத்தின் சில காட்சிகள், நான் எடுத்த புகைப்படங்கள் வழியே.........


நைநிடால் ஏரி.ஒரு காலத்தில் அத்திரி,புலஸ்தியர்,புலஹர் ஆகிய மூன்று முனிவர்களும் ஏரிக்குமேலுள்ள மலைத் தொடரில் தவம் செய்த காரணத்தால் 'திரி ரிஷி சரோவர்' என்ற பெயரும் இந்த ஏரிக்கு உண்டு.ஏரிக்கரையை ஒட்டி அமைந்திருக்கும் நைனாதேவி ஆலயம்வெள்ளிப் பனிமலையின் தரிசனம்


கோசி நதி


நைநிடால் விலங்கியல் காட்சியகத்தில் அடைக்கப்பட்டுள்ள ஆட்கொல்லிப்புலியும், வெண்மயிலும்
அல்மோரா செல்லும் வழியில் மலைத்தொடர் அமைப்பு

20.5.09

குற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்

ச.தமிழ்ச்செல்வன், தமிழ்வீதி
வணக்கம் சுசிலா மேடம்,உங்கள் வலைப்பதிவுகளில் சிலவற்றை மட்டும் இன்று படித்தேன்.ஏற்கனவே தங்கள் மொழிபெயர்ப்பான தாஸ்தாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் படித்து தோழர்களிடமெல்லாம் பேசிக்கொண்டிருந்தேன்.எவ்வளவு நுட்பமும் பிரம்மாண்டமுமான வேலை அது.வாழ்த்துக்கள்.


தமிழ்மகன்,http://www.tamilmagan.blogspot.com/
அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் மொழி ஆக்கம் மலைப்பாக இருந்தது. ருஷ்ய இலக்கியங்களை நா.தர்மராஜன், பூர்ணம் சோமசுந்தரம் போன்ற சிலருடைய மொழி ஆக்கங்கள் மூலமாகவே வாசித்துப் பழக்கப்பட்ட எனக்கு இன்னும் இருக்கும் ருஷ்யப் பொக்கிஷங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்க்க ஒருவர் கிடைத்துவிட்டார் என்ற சந்தோஷம். உங்கள் உழைப்புக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.
தமிழ்மகன்.

புகழினி (http://pukalini.wordpress.com/)
நான் தங்களது மொழிபெயர்ப்பை சற்று முன் தான் படித்து முடித்திருக்கிறேன். எவ்வளவோ படித்திருந்தாலும் இந் நாவலில் நிறைய விடயங்களினை புரிந்து கொள்ள முடிந்துள்ளது. நீங்கள் மொழிபெயர்ப்பு செய்த விதம் மிகவும் அருமை. ஒவ்வொரு வசனத்தையும் மிகவும் கவனத்துடன் படித்தேன். உண்மையில் நான் மறந்து போன ஏராளமான தமிழ்ச் சொற்களை திரும்பவும் நினைவூட்டியுள்ளீர்கள். நான் பாரதி பதிப்பகத்துக்கு நன்றி சொல்ல நினைத்திருந்தேன். அவர்களுக்கும் இங்கு நன்றி சொல்ல வேண்டும். உங்களது பணி தொடந்தும் தமிழ்ச் சமுகத்துக்கு தேவைப்படுகின்றது என்பதை என்னுடன் சேர்ந்தவர்கள்(அறை வாசிகள்) சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சீனிவாசன் கோவிந்தகிருஷ்ணன்,
தற்செயலாக என் நண்பர் பிரேமுடன் தங்கள் மொழியாக்கமாகிய 'குற்றமும் தண்டனையும்' நூலை எனக்குப் பார்க்க நேர்ந்தது.அது என் சிந்தனைகளில் ஒரு புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தத்துவத் துறையில் 'தீமையின் பிரச்சினை' குறித்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ள நான் தாங்கள் சென்னை வர வாய்ப்பிருக்கையில் உங்களைச் சந்தித்து ஒரு நேர்காணல் நிகழ்த்த விரும்புகிறேன். என் ஆய்வுக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன்.
(ஆங்கிலக் கடிதத்தின்மொழியாக்கம்)

இணைப்பு:
குற்றமும் தண்டனையும் : கடிதங்கள்

குற்றமும் தண்டனையும் : மேலும் கடிதங்கள்

குற்றமும் தண்டனையும் : மொழியாக்க அனுபவம்

19.5.09

காயம்பட்ட பெருநிலம்''எல்லோரும் போய் விட்டோம்
கதை சொல்ல யாரும் இல்லை

இப்பொழுது இருக்கிறது
காயம்பட்ட ஒரு பெரு நிலம்
அதற்கு மேலாகப் பறந்து செல்ல
எந்தப் பறவையாலும் முடியவில்லை
நாங்கள் திரும்பி வரும் வரை....''( சேரனின் 'ஊழி' கவிதையிலிருந்து)

15.5.09

ஒரு நடிகையின் நாவல்

சென்ற நூற்றாண்டின் '30 களில் நாடக திரைப்படத் துறைகளில் புகழ்
பெற்ற நடிகையாக விளங்கிய டி.பி.ராஜலக்ஷ்மியின் - பரவலான கவனத்துக்கு வராத - மற்றுமொரு பரிமாணம் , அவர் ஒரு தேர்ந்த நாவலாசிரியை என்பது.1931 இல் வெளிவந்த அவரது 'கமலவல்லி'அல்லது 'டாக்டர் சந்திரசேகரன்'என்ற புதினம் ,( தொடக்க காலத் தமிழ் நாவல்கள் பலவற்றில் இவ்வாறு இரட்டைத் தலைப்பு வைக்கும் போக்கினைக் காண முடியும் ) குறிப்பிட்ட அந்தக் காலச் சூழலில் மிகவும் புரட்சிகரமானதாக அமைந்திருந்தது.

மரபுகளையோ ,வாசகர்களையோ முன்னிறுத்தி வரையறைகளை விதித்துக் கொள்ளாமல் - மனத்தடை எதுவும் இன்றித் துணிவோடு சில கருத்துக்களை இந்நாவலில் முன் வைத்தார் டி.பி.ராஜலக்ஷ்மி அம்மாள்.

விற்பனைப்பொருளாகச் சந்தையில் விலை பேசப்பட்ட பெண் ஒருத்தி , மறுமணம் செய்து கொள்ள முற்படுவதை இப் படைப்பு துணிச்சலோடு நியாயப்படுத்துகிறது.

தாய் தந்தையற்ற அனாதைப் பெண்ணான கமலவல்லியை - 5000 ரூபாய் விலையாகப் பெற்றுக் கொண்டு , அவளது விருப்பத்திற்கு மாறாக மணம் செய்து வைக்கின்றனர் அவளது உறவினர்கள். திருமண நாளன்று அவள் தன் காதலைக் கணவனிடம் கூற ,அவள்
மனம் விரும்பிய காதலனோடு அவளை இணைத்து வைக்க அவன் முன் வருகிறான். அவளும் சிறிதும் தயக்கமின்றி அதை ஏற்றுக்கொள்வதோடு , அவன் துணையுடனேயே தன் காதலனைப் பல எதிர்ப்புக்களுக்கு இடையே மணக்கிறாள்.

தாலி கட்டியதால் மட்டுமே ஒருவன் கணவனாகி விடுவதில்லை என்றும் , மனதிற்கு உண்மையாக இருப்பதே 'கற்பு நிலை' என்றும் கூறும் தெளிவையும் , மன உரத்தையும் பெற்றவளாக அவள் விளங்குகிறாள். இத்தகைய பாத்திரம் ஒன்றனை உருவாக்குவதற்குரிய மனத் திட்பத்தை - மரபுகள் வேரூன்றிப் போயிருந்த கால கட்டத்தில் ஒரு பெண் படைப்பாளி பெற்றிருந்திருக்கிறார் என்பதைக் காணுகையில் ,'சித்திரப் பாவை'களை ஞானபீடம் ஏற்றித் தொழுகிற நாம் சற்றுக்கூசத்தான் வேண்டும்.

டி.பி.ராஜலக்ஷ்மி அம்மாள் , இன்னும் ஐந்து நாவல்களையும் கூட எழுதியிருப்பதைத் 'தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் , வளர்ச்சியும் '(சிட்டி,சிவபாதசுந்தரம்) வழி அறிய முடிகிறது.

'80 களில் என் முனைவர் பட்ட ஆய்வுக்காக - அப்போது ,காரைக்குடி அருகிலுள்ள
கோட்டையூரில் இயங்கிக் கொண்டிருந்த 'ரோஜா முத்தையா நூலக'த்தில் நான் தேடிப் படித்த இந் நாவல் தற்பொழுது புதிய பதிப்பாக வெளி வந்திருக்கிறது என்பது மகிழ்வளிக்கும் ஒரு செய்தியாகும்.

இத்தகைய நாவல்கள் வெறும் பொழுது போக்குக் குப்பைகள் அல்ல;இவை காலத்தின் குரலாய் ஒலிக்கும் சமுதாய ஆவணங்கள்.

இந் நாவலை மறு பதிப்பாக வெளியிடுவோர்க்கு வாழ்த்துக்கள்.

புதிய பதிப்பு விவரம்;

கமலவல்லி அல்லது டாக்டர் சந்திர சேகரன்,
டி.பி.ராஜலக்ஷ்மி,
வெளியீடு; புலம், 72, மதுரை நாயக்கன் தெரு,
சின்ன மேட்டுக் குப்பம்,
மதுர வாயல்,சென்னை - 600095
பக்; 128,
விலை; ரூ.70.

14.5.09

உஷாதீபனின் 'திரை விலகல்'

சமகால சிறுகதைப்போக்கில் மேலை இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கத்தால் , பல புதிய மாற்றங்களும் , பல புதிய 'இஸ'ங்களின் பாதிப்பும் நேர்ந்திருந்தபோதும் - நவீனத்துவம் ,பின் நவீனத்துவம் ,மாய யதார்த்தவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் - யதார்த்தவாதச் சிறுகதைகளுக்கான இடம் எப்போதும் போலவே மதிப்பிழக்காமல் இருந்துகொண்டுதான் இருக்கிறது . இதை மெய்ப்பிக்கும் வகையில் வெற்றிகரமான சிறுகதைகளின் தொகுப்பாக அண்மையில் வெளி வந்திருக்கிறது, எழுத்தாளர் திரு உஷாதீபன் அவர்களின் 'திரை விலகல்' என்னும் சிறுகதைத் தொகுப்பு.

திரு உஷாதீபன் , பல்லாண்டுக் காலமாகத் தமிழ்ச் சிறுகதைக் களத்தில் நின்று நிலை பெற்றிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பு மேலாளராக மதுரையில் பணியாற்றும் இவர் , 'தீபம்' நா.பார்த்தசாரதியால் இலக்கியத் துறைக்கு ஈர்க்கப்பட்டவர்.கி.வெங்கடரமணி என்ற தன் இயற்பெயரை , மனைவியின் பெயரை முன் ஒட்டாக்கி , அத்துடன் தீபத்தையும் இணைத்து உஷா தீபன் எனப் புனைபெயராக்கிக் கொண்டவர்.உள்ளே வெளியே, பார்வைகள், நேசம் , வாழ்க்கை ஒரு ஜீவ நதி , நினைவுத்தடங்கள்,,சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறை ஆகிய ஏழு சிறுகதைத் தொகுப்புக்களும் புயலுக்குப் பின்னே அமைதி , மழைக்கால மேகங்கள் முதலிய குறு நாவல் தொகுதிகளும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள். இலக்கியச் சிந்தனை , திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் முதலிய பல அமைப்புக்களிடமிருந்து தமது படைப்புக்களுக்கான அங்கீகாரத்தையும் ,பரிசுகளையும் பெற்றிருப்பவர்.

18 சிறுகதைகளைஉள்ளடக்கியுள்ள இவரது புதிய தொகுப்பு 'திரை விலகல்' .பொதுவாக இவ்வாறான தொகுப்புக்களின் வழக்கமான தலைப்பிடும் போக்குக்கு முற்றிலும் மாறாகத் திரை விலகல் என்று ஒரு சிறுகதை இத் தொகுப்பில் எங்குமே இல்லை.நூல் முழுவதையும் வாசித்து முடித்தபிறகுதான் இப் பொதுத் தலைப்பு நூலின் எல்லாக் கதைகளுக்குமே பொருத்தமாக இருப்பதையும்,வாழ்வின் அற்பக் கணங்கள் தொடங்கி.......அபூர்வமான கணங்கள் வரை எல்லாத் தருணங்களிலுமே - ஏதோ ஒரு வகையில் மனிதர்கள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் மாயத் திரை விலகி வாழ்வியல் தரிசனங்களைப் பெறுவதை இத் தலைப்பு பூடகமாகச் சுட்டுகிறது என்பதையும் நம்மால் உள் வாங்கிக் கொள்ள முடிகிறது.பாத்திரங்களைச் சிறப்பாக வார்க்கும் கலையில் இப் படைப்பாளி , கைதேர்ந்தவராக இருப்பதைப் பெரும்பான்மையான கதைகள் மிகச் சிறப்பாகப் புலப்படுத்துகின்றன. மிகப்பெரிய கிழியில் ஓவியம் தீட்டாமல் , நுணுக்கமான ஒரு சிறிய தந்தத் துணுக்கினுள் சிற்பம் வடிப்பதைப் போன்ற சிறுகதை ஊடகத்தில் சாதிப்பதற்கு அரியதான இவ்வியல்பு இவருக்கு எளிதாக வசப்பட்டிருப்பதை....
'திருட்டுமணி'யின் படிநிலை வளர்ச்சி கூறும் 'கல்லாமல் பாகம் படும்',
சுதந்திர ஜீவியாக வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பும் வெங்கடாசலத்தின் மனநிலைப் படப் பிடிப்பான 'வெளி தேடும் பறவை',
தவணைக்கு அடிமையாகும் பலவீன மனிதரின் சித்திரமான 'திருவாளர் சாம்பமூர்த்தி',
வளையல்காரர் ஒருவரை அப்பட்டமாக மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் 'நிலை திரும்பும் தேர்' ,
மனித உணர்ச்சிகளை மரக்கடித்துக் கொண்டு இயந்திரமாகிவிட்ட மனிதனைச் சித்திரிக்கும் 'பூக்காமல் ஒரு மரம்'
ஆகிய படைப்புக்கள் அற்புதமாக முன் வைக்கின்றன.

மனிதம் - மனித நேயம் இவரது கதைகள் பலவற்றின் அடிநாதமாக உறைந்திருக்கிறது.
''உழைத்து , உருகி , செத்துச் சுண்ணாம்பாகி வீடு திரும்பிப் பிறகு உலை வைத்து அதற்குப்பின் உயிரை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டியிரு''க்கும் அடி மட்டத் தொழிலாளிகளுக்காக இவரது பல படைப்புக்கள் உருகி ஓலமிடுகின்றன.
தெருவில் உப்பு விற்றுக் கொண்டு போகிறவனை வீட்டின் தேவை தெரியாமல் அழைத்து விடுகிறான் ஒரு கணவன். மனைவி அதை மறுதலித்து விடுவாளோ...,கடும் வெயிலில் உப்பு மூட்டைகளை சைக்கிளில் கட்டி எடுத்து வந்த அந்தத் தொழிலாளியின் பாடு வீணாய்ப் போய் விடுமோ என அவன் உள்ளம் படும் பாடு 'கடல் மல்லிகை' என்ற நல்ல சிறுகதையாக உருவெடுத்திருக்கிறது. அந்தக் கணவனை ஆச்சரியப்படுத்தும் வகையில் - அப்போதைக்கு உடனடித் தேவை இல்லாவிட்டாலும் கூட அவனிடம் உப்பு வாங்குவதன் வழி , ஆர்ப்பாட்டமின்றி ,மிக யதார்த்தமாகத் தன் இரக்க உணர்வை வெளிப்படுத்தி விடுகிறாள் அவன் மனைவி.
'நா' என்ற தலைப்பிலமையும் சிறுகதையிலும் கூடச் சலவைத் தொழிலாளியிடம் சீறிப் பாயும் மனிதமற்ற கணவனுக்கு மாற்றாகத் துணி கொண்டு வரும் சிறுவனை அன்போடு அரவணைப்பவளாக இருப்பது அவனது மனைவியே.செயற்கையான போலித்தனங்கள் அற்ற - இயல்பான அன்பும் ,நேயமும் பெண்களிடம் பொதிந்திருப்பதைப் போகிற போக்கில் இவரது கதைகள் படம் பிடித்துக் கொண்டு போவதைக் காண முடிகிறது.

முதுமை என்பது , நிராகரிப்புக்கும் ,நிர்த்தாட்சண்யமான விலக்கத்திற்கும் உரியதல்ல என்னும் அழுத்தமான இவரது சிந்தனை 'வெளி தேடும் பறவை', 'அப்பாவின் நினைவு தினம்' என இரு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது. பாவண்ணன் எழுதிய 'முதுமையின் கோரிக்கை' என்ற கட்டுரையையும், நீல பத்மநாபனின் 'இலை உதிர் கால'த்தையும் இப் படைப்புக்கள் ஒரு கணம் மனக் கண்ணில் கொண்டுவந்து நிறுத்தி விடுகின்றன.

சிறுகதைக்கே சிறப்பான உத்தியாகச் சொல்லப்படும் 'இறுதிக் கட்டத் திருப்பம்' இவரது சில கதைகளில் - துருத்திக் கொண்டு நிற்காமல் , கதையின் போக்கிற்கேற்றபடி, அதன் அழகியல் குலையாமல் வெளிப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. 'சரஸ்வதியின் குழந்தைகள்' அதற்குச் சரியான ஒரு உதாரணம்.
நூலகத்திலும் , புத்தகக்கடையிலும் மதிக்கப்படுபவனாக இருக்கும் ஒருவன் புத்தகத் திருடனாக இருக்கக் கூடும் என்ற முடிச்சு சற்றும் எதிர் பாராதது. ஆனாலும் அவன் படிக்கும் புத்தகமே அவனுள் மன மாற்றத்தைச் சாதித்துத் திருடிய புத்தகத்தத் திருப்பி வைக்குமாறு அவனைத் தூண்டி விடுவது கதைப் போக்கோடு ஒத்த திருப்பமாகவே அமைந்திருக்கிறது.
'ஆகி வந்த வீடு' கதையிலும் இதே வகையான உத்தியைக் காண முடிகிறது.

நவீன உலகம் , கணத்துக்குக் கணம் பல மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருப்பது. அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதவன் தேங்கிப் போய் விடுகிறான். ஊடகங்களின் பெருக்கம் அரசியல் மேடைப் பேச்சாளனை, அவன் தொழிலை..புகழைப் பாதிக்கிறது( 'தொண்டன்').
உலகமயமாதலால் பெருகும் பன்னாட்டு வணிகம் - அது சார்ந்த குளிரூட்டப்பட்ட கவர்ச்சியான அங்காடிகள், நடைபாதைத் தள்ளு வண்டியில் பழம் விற்கும் சராசரிச் சில்லறை வியாபாரியின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகின்றன.('மாற்றம்').இவை குறித்த சமூக விமரிசனங்களாகவும் இவரது கதைகள் உருப் பெற்றிருக்கின்றன.

உள்ளடக்கச் சிறப்பும், வடிவச் செம்மையும் வாய்க்கப் பெற்றுள்ள இந்தச் சிறுகதைகளுக்குப் படைப்பாளியின் மொழி ஆளுமை மேலும் வலுவும்,பொலிவும் சேர்க்கிறது. பெரும்பாலான கதைகள் பாத்திர நினைவோட்டமாக - எண்ணங்களின் அடுத்தடுத்த அடுக்குகளாக அமைந்திருப்பதை இவரது தனித்தன்மையாகக் குறிப்பிட முடிகிறது.

'யுகமாயினி', செம்மலர்', 'வார்த்தை'. 'உயிரெழுத்து','வடக்கு வாசல்',உயிரோசை,திண்ணை(இணைய இதழ்கள்)ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ள இத் தொகுப்பை முழுமையாகப் படிப்பது நிறைவு தரும் ஒரு அனுபவம்.

''வீட்டுக்கு வீடு...அறைக்கு அறை எவ்வளவு திரைகள்?கணவன் ,மனைவி ,பிள்ளை என்று ஒவ்வொருவருக்கிடையிலும் எத்தனை திரைகள்?வாழ்க்கையே திரை மூடிய பூடகமாக அல்லவா இருக்கிறது?விலக்க முடியாத திரைகள் ! அவிழ்க்க முடியாத திரைகள் !''என்று தனது சிறுகதை ஒன்றில் உஷாதீபனே குறிப்பிட்டிருப்பதைப்போல,
அந்தத் திரைகளைச் சற்றே விலக்கி உண்மைகளைக் காணவும் காட்டவும் முயல்வதே அவரது நோக்கம் ; அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.'திரை விலகல்'- சிறுகதைத் தொகுப்பு,
உஷா தீபன்,
வெளியீடு; உதயகண்ணன்,10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்,சென்னை600011,
டிச.'08 - முதல் பதிப்பு,
பக்;168,
விலை; ரூ.60
bookudaya@rediffmail.com

9.5.09

கண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடும் - 2

மங்கல தேவிகோயிலுக்குக்குச் செல்லும் பாதையிலுள்ள வனத்துறைச் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட்டுப் பயணத்தைத் தொடங்கினால் ஆள் அரவமற்ற அடர்காடுகளில் சில் வண்டுகளின் ரீங்கார ஒலியோடு , முதல் பாதி பயணம் இனிமையாகக் கழியும். பயணத்தின் அடுத்த பாதி சிலிர்ப்பூட்டக்கூடிய அரிதான பல தருணங்களை உள்ளடக்கி இருப்பது. மலைகளையும் , காடுகளையும் கிடைக் கோடாகவும் , சில வேளைகளில் செங்குத்தாகவும் வகிர்ந்தபடி செல்லும் குறுகலான - கரடுமுரடான பாதையில் பயணப்படுகையில் ஏற்படும் உடல்..மன ரீதியான அதிர்வுகளையும், அச்சங்களையும் மட்டும் சற்றே பொறுத்துக் கொள்ளப் பழகி விட்டால்...நம் கண் முன்னே விரியும் இயற்கையின் தரிசனம் அற்புதமானது...மகத்தானது ! உன்னதமான அந்தக் கணத்தை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் தாங்கிக் கொண்டு விடலாம் என்ற மன எழுச்சியை ஏற்படுத்தக்கூடியது. மாசுபடுத்தப்படாத இயற்கையின் மடியில்....பிரபஞ்சப் பெரு வெளியில் ஒன்றிக் கலக்கும் பேரானந்தப் பெருக்கைக் கிளர்த்தக் கூடியது.

மங்கல தேவி கோயிலை நோக்கி....


மனித வாடையோ , ஆரவாரங்களோ அற்ற அந்த மலைமுடியின் உச்சியிலிருந்து அழகழகாக , அடுக்கடுக்காகத் தென்படும் மேற்கு மலைத் தொடர்களும் , அவற்றின் கொடுமுடிகளும் ஒரு புறம் ! ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில் இருளைப் பரத்தி விரித்துத் தரையே தெரியாதபடி போர்த்தியிருக்கும் அடர்ந்த மரச் செறிவுகள் மற்றொரு புறம் ! வெயில் நுழைய முடியாத காட்டில் குயில் மட்டும் நுழைந்து விடுவதைக் கூறும்
''வெயில் நுழைவு அறியாக்
குயில் நுழை பொதும்பர்''
என்ற இலக்கிய வரிகளை நெஞ்சுக்குள் மோத விடும் பசுமைப் பள்ளத்தாக்குகளைப் பார்த்தபடி சிகரத்தின் உச்சியில் சென்றால் ...அட ! வானம் கூடத் தொட்டுவிடும் தூரம்தான் !

பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தித்தால் அந்தச் சிகரத்தின் உச்சி வரை ஏறிப் போன கண்ணகி , அங்கிருந்து கீழே பாய்ந்து உயிரை விட்டிருக்கக்கூடும் என்பதே பொருத்தமாக இருக்கக் கூடும் என்றபோதும் , எட்டிப் பிடிக்கும் தொலைவில் இருப்பதைப் போல் தென்படும் அந்த வான் வெளியைப் பார்க்கும்போது....ஒரு வேளை கண்ணகி , இந்த இடத்தில் நின்றபடிதான் தன் கணவனை அழைத்திருப்பாளோ...., அவனும் கூட , அவளுக்குக் கைலாகு கொடுத்து விமானத்தில் ஏற்றியிருப்பானோ என்ற மன மயக்கம் கண நேரமாவது ஏற்பட்டு விடுவதைத் தவிர்க்க முடியவில்லை.


மலைச் சிகரத்தில் கட்டுரையாளர்
 

பாதுகாக்கப்பட்ட அந்த வனப் பகுதில் , தவறான நடமாட்டங்களைக் கண்காணிப்பதற்காகவே மிக உயரமான கண்காணிப்புக் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது . அதன் உச்சியிலிருந்து பார்க்கும்போது கம்பம் பள்ளத்தாக்கின் செழுமையான வனப்பு நம் கண் முன் விரிகிறது .


கண்காணிப்புக் கோபுரம்

 
Posted by Picasa

கண்காணிப்புக் கோபுரத்தின் உச்சியில் கட்டுரையாளர்

 


கண்காணிப்புக் கோபுரத்திற்குச் சற்றுத் தூரத்தில் 'ஷோலா' காடுகளை ஒட்டி அமைந்துள்ள மங்கல தேவி கோயிலை ஓர் ஆலயம் என்று அழைப்பதை விட ' சிதைவுண்ட கற்கோயில் ஒன்றின் எச்சம் ' என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

Posted by Picasa

கண்ணகிகோயிலில் கட்டுரையாளர்-(கூடவே நட்பும் உறவும்)

 


தொல்தமிழர்களின் சிற்பத் திறமையைப் பறை சாற்றும் ஒரு சில மிச்சங்களையும் , , பண்டைய கற்கோயில் கட்டுமானங்களைநினைவூட்டும் சில சிதைவான அடையாளங்களையும் மட்டுமே அங்கே காண முடிகிறது.
ஏதோ ஒரு காலகட்டத்தில் கோயிலின் முன் வாசலாக இருந்திருக்குமென்பதை நினைவுபடுத்தும் இரண்டு தூண்கள், அவற்றுக்கு முன்னால் சுற்றுச் சுவர் எதுவுமின்றித் தூர்ந்து போய்க் கிடக்கும் மிகச் சிறிய குளம்..கோயிலைச் சுற்றி , முன்பு மதிற்சுவர் இருந்ததற்கு அடையாளமாகப் பெரிய பாறைக் குவியல்கள்...வனத்துறையின் உத்தரவுக்காகக் காத்துக் கொண்டிருக்காமல் , எப்பொழுதும் , எந்தத் தடையும் இன்றி , விலங்குகள் மட்டும் (குறிப்பாக யானைகள் )அங்கே வந்து சஞ்சரித்துவிட்டுப்போவதன் தடயங்களாக அவற்றின் கழிவுகள் !
இன்றைய மங்கல தேவி கோயிலின் சுருக்கமான சித்திரம் இது மட்டும்தான்

சுரங்கப்பாதையைப்போன்ற ஓர் அறைக்குள் தலையைத் தாழ்த்தி உள்ளே நுழைந்தால்..அங்கே ,கருவறைக்குள் தலையில்லாத ஒரு சிலை உருவம் ! (தலைப்பகுதியைச் செயற்கையாக உருவாக்கி -மஞ்சள்,சந்தனக் காப்பு சார்த்தி-அதுவே கண்ணகி சிலையாகக் கருதப்பட்டு வழிபடப் படுவதாக -அங்கிருந்தவர்கள் வழி அறிய முடிந்தது.)

கண்ணகி கருவறையின் நுழை வாயில்


கண்ணகி சிலை இருந்ததாகக் கருதப்படும் இடம்

புராதனச் சின்னங்களைப் பராமரித்து வரும் தொல்லியல் துறையின் பாதுகாப்புக்கு இப் பகுதி உட்படவில்லை என்பதால் இங்குள்ள சிற்பங்கள், அவற்றின் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான குறிப்புக்களோ , அறிவிப்புப் பலகைகளோ அங்கு எதுவுமில்லை.
திறந்த மைதானம்போலச் சிதைவுண்டு கிடக்கும் அந்த வளாகத்திற்குள் , எப்படியோ ஒரு பிள்ளையார் சிலை மட்டும் பிற்கால இடைச் செருகலாக முளைத்து விட்டிருக்கிறது.மிக அரிதான இந்தக் காட்டுப் பகுதி அதிக அளவிலான மனிதர்களின் தொடர்ந்த நடமாட்டங்களால் மாசுபட்டுவிடக் கூடாது என்பதாலேயே மிகுந்த கெடுபிடி காட்டி வரும் வனத்துறை , சித்திரா பௌர்ணமியன்று மட்டும் பொதுமக்களை இங்கே அனுமதிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அந்த நாளில் மட்டும் கண்ணகி கோயில்பற்றிய சர்ச்சைகள் , நாளிதழ்களில் தவறாமல் இடம் பிடிப்பது ஒரு வாடிக்கையாகவே ஆகி விட்டிருக்கிறது. கண்ணகி கோயிலைச் சீரமைத்துப் புதுப்பிக்க வேண்டுமென்றும் , தொடர்ந்த வழிபாட்டுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்றும் குரல்கள் ஓங்கி ஒலிப்பதையும் அச் சமயங்களில் மட்டுமே அதிகமாகக் கேட்கவும் முடிகிறது. எனினும் அக்காட்டுப் பகுதியில் நிலவம் இயற்கைச் சமன்பாட்டை மனித ஆரவாரங்களும் , மனிதப் பயன்பாட்டுக்குரிய பலவகைப்பொருள்களும் குலைத்து விடக் கூடும் என்று அஞ்சுவதனாலேயே சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் , வனத்துறையினரும் இதற்கு ஒப்புதலளிக்க மறுப்புக் காட்டி வருகின்றனர்.

சித்திரை முழு நிலவு நாளில் , கண்ணகியைத் தங்களின் ஆதரிசத் தமிழ்ப் பெண் தெய்வமாகக் கருதும் தமிழர் கூட்டமும் , மங்கல தேவியைப் பகவதியாகப் போற்றி வழிபடும் கேரள மக்கள் கூட்டமும் இக் கோயிலை நோக்கி வந்து பொங்கலிட்டுப் படையல் செய்யும் காட்சியைக் காண முடியும், அந்த ஒரு நாளில் மட்டும் அவர்கள் வந்து செல்வதற்கான ஜீப் முதலிய வசதிகளையும் , குடிநீர் ஏற்பாடுகளையும் கேரள அரசின் வனத் துறையே கொடுத்து உதவுகிறது. தனியார் இயக்கும் வாகனங்களுக்கும் ( ஜீப் மட்டுமே அங்கே செல்லமுடியும் ) அன்று மட்டும் அனுமதி தரப்படுகிறது.

கூட்டமும் , ஆரவாரமும் நிறைந்த அந்த நாளைத் தவிர்த்து விட்டு வனத்துறையின் சிறப்பு அனுமதியோடு - சடங்கு , சம்பிரதாயக் கூச்சல்களற்ற அமைதியான தருணத்தில் அங்கே செல்ல முடிந்தால் , உண்மையான கண்ணகியையும், அவளது தொன்மத்தையும் , சுற்றியுள்ள இயற்கை விடுக்கும் எண்ணற்ற இரகசியப் புதிர்களையும் உணர்ந்து உட் கலக்க முடியும். ( அவ்வாறு கிடைத்த அரியதொரு வாய்ப்பே இக் கட்டுரைக்குத் தூண்டுகோல் ).

கலைந்தும் , சிதைந்தும் போன கண்ணகியின் பல கனவுகளைப் போலவே - அவளுடையதென்று சொல்லப்படும் இந்தக் கோயிலும் இருந்தபோதும்.....ஏதோ வினோதமான ஒரு பண்டைத் தொன்மத்தின் அடையாளமாக ( ஒருக்கால்...கண்ணகி தன் வாழ்வை முடித்துக் கொண்ட இடமாக...) மர்ம முடிச்சுக்கள் பலவற்றைப் பொதிந்து வைத்திருக்கும் இந்த இடம் இனம் பிரித்துச் சொல்ல முடியாத பல மாயப் பிரமைகளை நம்முள் எழுப்புவதை நிதானமான அந்தக் கணங்களிலேதான் நம்மால் ஆழமாக உள் வாங்கிக்கொள்ள முடியும்.

கண்ணகி ஒரு வழிபாட்டின் அடையாளமா அல்லது சமூக அமைப்பின் ஒரு கோளாறைச் சுட்டிக்காட்டும் குறியீடா என்ற சிந்தனையில் சிறிது நேரம் சஞ்சாரம் செய்வதற்காகவாவது....அமங்கலமாகப் போய் விட்ட மங்கலதேவி கோயிலுக்கு - அந்த வனப் பகுதிலுள்ள கானுயிர்களுக்கு நம் மூச்சுக் காற்றால் கூடச் சிரமம் ஏற்படாதபடி ஒரு முறை சென்று வந்தால் ...பரவசத்தில் ஆழ்த்தும் புதுப்புது அனுபவங்கள் நம்மை எதிர்கொள்ளக் காத்திருக்கும் என்பது உறுதி.


நன்றி : வடக்குவாசல் இலக்கிய மலர் , 2008

7.5.09

கண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடும்- 1


(முன்குறிப்பு):

சித்திரை மாத முழு நிலவு நாள் - சித்திரா பௌர்ணமி ,பல வகைகளில் முக்கியத்துவம் பெற்றிருப்பது. புத்தர் ஞானம் பெற்றதாக , புத்த பூர்ணிமா என்ற பெயருடன் வழங்கப்படும் இந்த நாளில்தான் , மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவமும் நிகழ்கிறது. கண்ணகி வழிபாட்டிற்காகத் தமிழர்களும் , பகவதி வழிபாட்டிற்காக மலையாளிகளும் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மங்கல தேவி கோயிலை நோக்கிப் படையெடுத்துச் செல்வதும் இந்த நாளிலேதான்.

மங்கல தேவி கோயிலுக்கு மூன்று முறை சென்று வந்திருப்பதால் , அந்தச் சூழல் பற்றி ஓரளவு நான் அறிந்திருக்கிறேன். பல மர்ம முடிச்சுக்களைக்கொண்டிருக்கும் கண்ணகியின் வாழ்க்கையைப் போலவே மங்கலதேவிக்குச் செல்லும் பயணமும் சுவாரசியமானது. அது குறித்த சில பதிவுகளைச் சிலம்பு காட்டும் கண்ணகியின் வாழ்க்கையோடு இணைத்துத் தொடர்ச்சியான இரு கட்டுரைகளாக அளிக்கிறேன்.

தமிழகத்தில் கண்ணகி குறித்த கற்பிதங்களால் ஏற்பட்டுப் போயிருக்கும் சமூக மனோ பாவங்கள் ,அவற்றை மிக இலேசாகச் சீண்டினாலும் கூடக் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியவை. கண்ணகியின் பிம்பம் ,இலட்சியத் தமிழ்ப் பெண் ஒருத்தியின் பிம்பமாகக் காலம் காலமாகத் தமிழ் உள்ளங்களில் இலக்கிய / அரசியல் வாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்டு வந்திருப்பதே இதற்கான காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

தனக்கு விதிக்கப்பட்ட அக்கினிப் பிரவேசத்தை மறுப்பேதும் சொல்லாமல் வாய் மூடி மௌனமாக ஏற்றுக் கொண்ட சீதை , உடலெல்லாம் அழுகிப் போன கணவனைக் கூடையில் வைத்துப் பரத்தை வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோன நளாயினி ஆகியவர்கள் , பெண்களுக்கான சரியான முன் மாதிரி இல்லை என்பதைத் தயக்கமின்றி ஒத்துக் கொள்பவர்களும் கூடக் கண்ணகி என்று வரும்போது மட்டும் சில மனத் தடைகளோடு ஒதுங்கிப் போய் வாய்ப்பூட்டுப் போட்டுக் கொண்டு விடுவதற்குக் காரணம் , அது தமிழ் இன உணர்வுக்கு எதிரானது என்ற ஒரு வகை மூட நம்பிக்கையே.

'பரத்தையிற் பிரிவு' என்பது ஆணுக்குரிய ஒரு நெறியாகவே ஏற்கப்பட்டுச் சமூக அங்கீகாரத்தைப் பெற்றிருந்த சங்க காலச் சூழலின் நீட்சியாகவே சிலம்பு காட்டும் சமுதாயமும் விரிந்திருக்கிறது. சங்கத்தின் பெண் சார்ந்த . தவறான மதிப்பீடுகளும் கூட அச் சமூகத்தில் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கின்றன. மாதவிக்குக் கொடுப்பதற்காகத் தன் சிலம்பைத் தானே வலிய வந்து முன் நீட்டும் கண்ணகியின் தாராளம்...., ஊர் துறந்து, சுற்றம் துறந்து மதுரை செல்ல அவன் எழுந்தபோது 'எழுக என எழுந்த' அவள் செயல்பாடு -இவை அனைத்தும் அதற்கான சான்றுகள்.

கணவனின் பிரிவுக்காக அழுது புலம்பிக் கலங்கித் தவிக்கும் ''கையறு நெஞ்சத்துக் கண்ணகி''யாகவே அவள் காட்சி தருகிறாளேயன்றித் தன்னைப் பிரிந்து இன்னொருத்தியிடம் சென்ற அவனைத் தட்டிக் கேட்கும் துணிவோ,ஆன்ம வீரமோ ,மன எழுச்சியோ இந்த வீர பத்தினியிடம் இல்லை.

கணவன் பொய்ப் பழிக்கு ஆளாகிக் கொல்லப்பட்டபோது அவளிடமிருந்து பீறிட்டுப் பெருக்கெடுக்கும் வீரம் - மதுரை நகரையே தீக்கிரையாக்க முனையும் அவளது உக்கிரம் ஆகியவை,அவளது வாழ்வின் தொடக்க நிலையில் அவளுள் புதையுண்டு போன உணர்ச்சிகளின் வடிகால் என்றும் அதுவே 'கொங்கைத் தீ' யாக (நன்றி; இந்திரா பார்த்தசாரதி) வெளிப்பாடு கொண்டது என்றும் உளப் பகுப்பாய்வுகளுக்குள் ஆழ்ந்து போய் விடுகிறோம் நாம்.

'கண்ணகியைப் பேச
கண்ணகியே எழுந்தால்
மதுரைக்குப் போய்
மன்னன் முன் சிலம்பை உடைத்து
தெய்வமாகி இருக்க மாட்டாள்
புகாரிலேயே
கோவலனின் மண்டையை உடைத்து
மனுஷியாகி இருப்பாள்''
என்கிறது அறிவுமதியின் கவிதை.

சராசரி மனித உணர்வுகளோடு, பெண் ஒரு மனுஷியாக வாழும் இருப்பை மறுத்து விட்டு , அப்படி மறுத்ததை மறைப்பதற்காகவே அவளைத் தெய்வமாக்கி விடும் சமூகப் போக்கிற்கு ஏற்ப....எப்படியோ கண்ணகியும் அன்றே தெய்வமாக்கப்பட்டு விட்டாள் ; இன்றைய நவீன யுகத்தில் சிலையாகவும் கூடத்தான்.

கடற்கரைச் சோலை ஒன்றில் மாதவி பாடிய கானல் பாட்டு..,.அடுத்தடுத்த மாற்றங்களுக்கு அடியெடுத்துத் தர..வட புல மன்னர்களான கனக விசயர்களின் 'முடித்தலை நெரியும் வண்ணம்' இமயத்திலிருந்து அவர்களைக் கல் சுமந்து வரச் செய்து கோயிலும் அமைக்கிறான் சேரன் செங்குட்டுவன். அந்தக் கோயில் எது என்பதில் ஆய்வாளர்களிடையே பல கருத்து மாறுபாடுகள் நிலவி வந்தபோதும் - கேரள , தமிழக எல்லைப் பகுதியில் -தேக்கடிக்கு மேல்- மேற்குத் தொடர்ச்சி மலை அடுக்குகளுக்கு இடையே ஒளிந்து கொண்டிருக்கும் ' மங்கல தேவி கோயில் ' ,கண்ணகி கோயில்களுக்கான பட்டியலில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. ( 'வஞ்சி' என்ற பெயருடன் சேர நாட்டின் தலை நகராக இருந்து , இன்று கொடுங்கல்லூர் என்றும் கொடுங்கோளூர் என்றும் வழங்கப்படும் ஊரிலுள்ள பகவதி ஆலயமே செங்குட்டுவன் சமைத்த கண்ணகி கோட்டம் என்று குறிப்பிடுபவர்களும் உண்டு).

''மதுரையின் கிழக்கு வாயில் வழியே கணவனுடன் நுழைந்த நான் , இப்போது யாருமற்ற அனாதையாக மேற்குத் திசை வழியே தனியே செல்கிறேன் ''
(கீழ்த்திசை வாயில் கணவனொடு புகுந்தேன்
மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கின்றேன்'')
என்று புலம்பியபடி கண்ணகி பயணிப்பதையும் , மேடு பள்ளங்களைப் பாராமல் மேற்குத்திசையில் நடந்து சென்று நெடுவேள் குன்றம் அடி வைத்தேறி ,நன்கு மலர்ந்த ஒரு வேங்கை மரத்தடியில் அவள் நிற்பதையும், பதினான்காம் நாளன்று இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் , தன்னைத் துதிக்குமாறு கணவனோடு வான ஊர்தி ஏறிச் சென்றதையும் விவரமாக எடுத்துரைக்கிறது , சிலம்பின் 'கட்டுரை காதை'.அந்தக் குன்றத்தில் வசிக்கும் குறவர்கள் அந்த நிகழ்வுக்குச் சாட்சியாகக் காட்டப்படுகின்றனர். மலை வளம் காண வந்த சேரன் , முதன் முதலாக அவர்களின் வழியாகவே கண்ணகியைப் பற்றித் தெரிந்து கொள்கிறான்; அதன் பிறகே சீத்தலைச் சாத்தனார் மூலம் அவளது விரிவான கதையைக் கேட்டறிந்து , வட நாட்டுப் படையெடுப்பை நிகழ்த்திக் கோயிலும் சமைக்கிறான்.

மேற்குறித்த அடிப்படையை வைத்துப் பார்க்கும்போது கேரளத்திலுள்ள மங்கல தேவி கோயில் கண்ணகி கோயிலாக இருப்பதற்கான பல சாத்தியக் கூறுகளைக் காண முடிகிறது.


கண்ணகி பயணித்த திசை , தன்னந்தனியே உணர்ச்சிப் பிழம்பாகப் பயணித்த அவள் ,கால் நடையாக வந்து சேர்ந்திருக்கக் கூடிய தூரம் , ஆவேசத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்த அவள் அடிவைத்தேறிய மலைச் சிகரம் , அவை பற்றிய வருணனைகள் ஆகிய எல்லாவற்றோடும் ஒத்துப் போவதாகவே மங்கல தேவி கோயிலின் நிலவியலும் அமைந்திருக்கிறது.

கடல் மட்டத்திற்கு மேல் , 1200 அடி உயரத்திலிருக்கும் ஒரு சிறிய மலைச் சிகரத்தில் இக் கோயில் அமைந்திருக்கிறது. இதன் அருகிலுள்ள வனப்பகுதி அபூர்வ வகையைச் சேர்ந்த தாவரங்களையும் , அரிதான பல காட்டுயிர்களையும் கொண்டதாக உள்ளது.முற்றிலும் சமன்பாடானதொரு சுற்றுச் சூழலைக்(Perfect eco-system) கொண்டிருப்பதால்,கேரள வனத்துறையின் சிறப்புக் கவனத்திற்கு உரியதாக - அவர்களால் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது இப் பகுதி. இடுக்கி தாலுக்கா, குமுளி பஞ்சாயத்தைச் சேர்ந்த இந்த இடம் இந்தியாவிலிருக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய புலிகள் சரணாலயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றான தேக்கடி - பெரியார் புலிகள் சரணாலயத்திற்குள் உள்ளடங்கியதாகவும் இருக்கிறது.

மங்கல தேவி கோயிலையும், அது சார்ந்த வழிபாட்டையும் தமிழகம் , கேரளம் என இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் தமக்கே உரியதெனச் சொந்தம் கொண்டாடியபோதும் - வருடத்தில் ஒரே ஒரு நாள் சித்திரா பௌர்ணமி அன்று மட்டுமே இம் மலைப்பாதை பொதுமக்களின் அனுமதிக்காகத் திறந்து விடப்படுகிறது. பிற நாட்களில் இப் பாதை பெரும்பாலும் பூட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுவதால் (வனத்துறைப் பயன்பாட்டைத் தவிர) வனத் துறையின் அனுமதி இன்றி இங்கு செல்வது சாத்தியமில்லை.
(தொடர்ச்சி அடுத்த இடுகையில்)

4.5.09

துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே...(மதுரையில் சித்திரைத் திருவிழா)


தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே
நறை பழுத்த துறைத்தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே
அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும்
தொழும்பர் உள்ளக் கோயிற்கேற்றும் விளக்கே
வளர் சிமய இமயப் பொருப்பில் விளையாடும்
இள மென் கொடியே
எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில்
அழகு ஒழுக எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியமே
மதுகரம் வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும்
இள வஞ்சிக் கொடியே வருகவே
மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே

-குமர குருபரர்


தமிழ் மொழியின் சமயப் பாடல்கள் பலவும் இறைச் சக்தியையும், சமய உணர்வுகளையும் வெளிப்படுத்துவதை விட மொழியின் அழகையும், மேன்மையினையும் போற்றுவனவாகவே அமைந்திருக்கின்றன. மொழியால் கடவுளை ஏத்துவதை விட.... அந்த மொழியின் லயமாக அவனைத் தரிசிப்பதையே அவை அதிகமாகச் செய்திருக்கின்றன.


தேவார மூவர்களில் ஒருவரான ஞான சம்பந்தர் 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்' சம்பந்தராகவே அறியப்பட்டிருக்கிறார்.

குமர குருபரர் பாடிய மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழின் வருகைப் பருவத்தில் இடம் பெறும் இப் பாடலும் , சிறுமி மீனாளைத் தளர் நடையிட்டு வருமாறு அழைப்பதைப்போல இருந்தாலும் உண்மையில் தமிழையே நம் கண் முன் அவ்வாறு வரச் செய்து விடுகிறது.

கற்பனையால் புனையப்படும் தெய்வீக அழகு கொண்ட தமிழ்ப் பாக்களின் ஒட்டு மொத்தத் தொகுப்பாக....அவற்றின் பயனாக - 'தொடுக்கும்கடவுட் பழம் பாடல் தொடையின் பயனே' என முதலில் அன்னையை விளிக்கிறார் குமர குருபரர்.

தேன் நிரம்பித் ததும்பும் இனிமைத் தமிழின் சுவையாக - 'நறை பழுத்த துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ் சுவை'யாக அடுத்து அவளைக் காண்கிறார் அவர்.

'தான்' என்ற அகந்தைக் கிழங்கைக் கெல்லி எறிபவர்களின் உள்ளத்தில் ஒளிரும் விளக்காக...,அப்படிப்பட்ட அடியவர்களின் 'உளக் கோயிற்கேற்றும் விளக்காக'த் திகழ்கிறாள் அவள்.

பனி மலைச் சிகரத்தில் இமயப் பொருப்பில் விளையாடும் இள மென் பெண் யானைபோன்ற அவள்...,வண்டுகள் தேன் குடித்துத் துயிலும் குழற் காடு ஏந்தும் அவள்...மலயத்துவச பாண்டியன் பெற்ற பெரு வாழ்வு ;
புவனமெல்லாம் கடந்து நிற்கும் பரம்பொருள், தன் உள்ளத்தில் 'அழகு ஒழுக எழுதிப்பார்த்திருக்கும் உயிர் ஓவியம்'.அவள்... .

ஆண்டாளின் 'ஆழி மழைக் கண்ணா'வைப் போலத் தமிழின் சிறப்பெழுத்தாகிய ழகரத்தைப் பொருட் செறிவோடும், அழகியல் குன்றாத கலை நுட்பத்தோடும் இப் பாடலில் கையாண்டிருக்கிறார் கவிஞர்.

அரசவையில் இந் நூல் அரங்கேற்றம் நிகழ்ந்தபோது , குறிப்பிட்ட இப்பாடலின் தருணத்தில், அன்னை மீனாட்சியே சின்னஞ் சிறுமியாக வந்து, மன்னரின் மடி மீது அமர்ந்து இதைத் தலையாட்டிக் கேட்டாள் என்ற பழங்கதை ஒன்று உண்டு ; அன்னையின் சன்னதிக்குள் நுழையும்போது இக் கதையைச் சித்தரிக்கும் ஓவியம் ஒன்றும் உண்டு.

கதையின் நம்பகத் தன்மை எவ்வாறாயினும்.....இப் பாடலை வாசிக்கையில் - கேட்கையில் ,தமிழே ஒரு குழந்தையாகி நம் கண் முன்னர் தளர் நடையிட்டு வருவதைப் போன்ற பிரமை ஏற்பட்டு விடுவதும் ,குருபரரின் கவி ஆளுமை அதை மெய்யாக்கியிருப்பதும் மறுக்க முடியாத நிஜங்கள்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....