துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.3.15

தீதும் நன்றும்……

[பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்]

புறநானூற்றுப்பாடல்களின் அற்புதமான வரிகள் சில,திரும்பத்திரும்ப எடுத்தாளப்படுவதனாலேயே,அவற்றின் அர்த்தச்செறிவை இழந்து நீர்த்துப்போய் விடுகின்றன.வரிகளை மேலோட்டமாக மேற்கோள் காட்டுவதிலுள்ள ஆர்வம்,அவற்றுள் பொதிந்து கிடக்கும் ஆழமான உட்பொருளை நாடிச்சென்று கண்டடையும் தேட்டத்தை மட்டுப்படுத்தி விடுகிறது. அடிக்கடி பயன்படுத்துவதால்,சொற்கள் பழகிப்போயிருந்தாலும்கூடப் பொருள் புதிதாய்..., எந்தக்காலத்திற்கும் உரித்தான கருத்தாக்கம் ஒன்றனை உள்ளடக்கி இலங்குவது, சங்கப்பரப்பில் ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதி இறவாப்புகழ் படைத்த கணியன் பூங்குன்றனாரின் கீழ்க்காணும் பாடல்.

‘’யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’’.-

புறநானூறு 192


எளிய நடையில் – மிகக் குறைவானசொற்களில் ஒற்றை வரியிலும் இரட்டை வரிகளிலுமாக ஆழமான வாழ்வியல் உண்மைகளை விதைத்துக்கொண்டே போகும் இந்தப்பாடல் கூடத் திருக்குறளை மிகச்சுருக்கமாக எழுதுவதற்கு ஒரு தூண்டுகோலாக இருந்திருக்குமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பைத் தவிரப்பிற இடங்களில் அதிகம் சஞ்சரித்திராத ஒரு காலகட்டத்தில் எல்லா ஊர்களையும் சொந்தமாக்கி சாதி மத மொழி இன எல்லைக்கோடுகளைத் தாண்டி எல்லா மக்களையும் சுற்றமாக்கிக்கொள்வதை ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’  என்னும் முதல் வரியே கற்பித்துத் தந்து விடுகிறது.
அவரவர் வாழும் வாழ்க்கை , அவரவர் செய்யும் நன்மை தீமைகளின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டதேபட்டதேயன்றிப் புறக்காரணிகளை அதற்குச் சான்றாய்க்காட்டுதல் பெரும்பிழை என்பதைக் கோடிட்டுக்காட்டும்  ’தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்னும் வாசகம் உலகில் இதுவரை கூறப்பட்ட அனைத்துத்  தத்துவங்களின் பிழிவாகவே அமைந்திருக்கிறது. நம் சினம், நம் சோம்பல்,நாம் செய்த தவறு எனப்பலவற்றாலும் வாழ்வில் பலவற்றைத் தவற விட்டு விட்டு அதற்கான பழியை மிக எளிதாகப்பிறர் மீது சுமத்த முயலும் மனித மனப்போக்கை இந்த வரிகள் வெளிச்சமிடுகின்றன.
பிறப்பும் இறப்பும் அன்றாடம் ஒவ்வொருமனிதனுக்கும் காட்சியாகிக்கொண்டே இருக்கும் நிதரிசனங்கள்; அவ்வாறு சாவிலும் வாழ்விலும் எந்தப்புதுமையும் இல்லை என்றிருக்கும்போது வாழ்வு இனிது எனக்கொண்டாடுவதும்,துன்பகரமானது என துக்கம் அனுசரித்தபடி மூலையில் முடங்குவதும் பொருளற்றவை என்ற தருக்க பூர்வமான அறிவியல் உண்மையை
‘’ சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே ’’
என 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ்க்கவி சொல்லிச்சென்றிருப்பது கண்டு நாம் விம்மிதம் கொள்கிறோம்.

அதுபோலவே,பெருமை,சிறுமை என்ற அளவுகோல்களும் கூட மனிதன்,தானாக ஏற்படுத்திக்கொள்பவை மட்டுமே."நீர் வழிப்படூஉம் புணை போல"-நீரோட்டத்தின் வழியே அடித்துச்செல்லப்படுகிற மரக்கட்டைகளைப்போல, உயிர்களும் கூட இயற்கையின் விதிப்படி இயங்குவது மட்டுமே உண்மை.இதை உணர்ந்து கொண்டால் வரும் தெளிவே "பெரியோரை வியத்தலும் இலமே ,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்று பாடலின் முத்தாய்ப்பாகச் சொல்லப்படும் அரியஉண்மை.

மனிதப்பண்புகளில்,வியப்புக்கு ஒரு தனி இடம் உண்டு.எண் வகைச்சுவைகளில் ஒன்றாக-"'மருட்கை''என்ற பெயரில் வியப்பைக் குறிப்பிடுகிறது,மலர்ச்செடியில் அப்போதுதான் அரும்பியிருக்கும் ஒரு புது மொட்டு,பிரபஞ்ச பிரமாண்டத்தை உள்ளடக்கி ஆர்ப்பரிக்கும் அலைகடல்,நுணுக்கமான சிற்ப சித்திர வேலைப்பாடு,நேற்று வரை பொட்டல் காடாய் இருந்த பூமியில் இன்று முளைத்திருக்கும் விண் முட்டும் கட்டிடங்கள் என இவற்றைஎல்லாம் காண நேர்கையில் எவருக்கும் வியப்புத்தோன்றுவது இயற்கை. இத்தகையவியப்புக்கள்,இயல்பானவை;ஆரோக்கியமானவை;தனிமனித ஆளுமைக்குக் குந்தகம் ஏற்படுத்தாதவை;அவர்களது அழகியல் ரசனைகளை மெருகேற்றி,அவர்களைச்செப்பனிடுபவை..அதனாலேயே அவற்றை விடுத்து,சக மனிதர்கள் மீது சில நேரங்களில் விளையும் பிரமிப்பை..,ஆச்சரியத்தை..,அதிசயத்தை மட்டுமே விமரிசனம் செய்கிறது புறநானூறு.

தான் அடைய விரும்பியதும்,தன்னிடம் இல்லாமல் போனதுமான ஆற்றல்கள்,அழகுகள் ஆகியவற்றை அடுத்தவரிடம் காணும்போது வியப்பு மேலிடுவது இயல்புதான். ஆனால் அதே வியப்பு, வழிபாடாகப்பரிணமித்து விடும்போது மனிதனின் ஆககத்திறனுக்குச் சேதாரம் விளைவித்து,அவனது தனிமனித மேம்பாட்டை,வளர்ச்சியை முடக்கிப்போட்டு விடுகிறது.தான் வியக்கும் ஒருவனுக்குப்பூப்போடுவதிலேயே அவனது காலம் முழுவதும் கழிந்து போய் விடுகிறது.தான்வழிபட்டுவந்த ஒருவரைச்சற்று அண்மையில் நெருங்கிப்பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் கிட்டுகையில்-. அவரது குரூரமான மற்றொரு பக்கத்தை ஒளிவு மறைவுகள் இன்றி நிதரிசனமாக எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது. தான் இத்தனை காலமும் வழிபட்டு வந்த பிம்பம் சிதைவுண்டு போனதும் ,கசப்பான உண்மைகளின் கோரத்தாக்குதலுக்கு ஆட்பட்டுத்தத்தளித்துப்போகிறான் அவன்;வியப்புக்கு நேர்மாறான வெறுப்புணர்ச்சி அப்பொழுது அவனை ஆட்கொள்ளத்துவங்க அவன்,சமநிலை இழந்தவனாகிறான். அதற்கு மாறாக 'அகலாது,அணுகாது தீக்காய்பவர்'போல நம் வியப்புக்குரியவர்களை சற்றே விலகி நின்று அலசிப்பார்த்து,ஒவ்வொருவரிடமும் நாம் வியக்கும் பண்புகளை மட்டும் பட்டியலிட்டு,.அவற்றுள் நம்மால் இயலக்கூடிய நல்லவற்றை மட்டும் சுவீகரித்தபடி,நம்மை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்;ஒரு குறிப்பிட்ட ஆளுமையின் புகைப்பட நகலாக மட்டும் அல்லாமல்,பலரின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக்கொண்டு-அதே நேரத்தில் தன்னுடைய சுயத்தை,தனித்தன்மையை இழந்து விடாத-ஒரு
மனிதனை அப்போது நம்மிலிருந்து பிறப்பித்துவிட முடியும்.

மனித முயற்சிகள் தேங்கிப்போய் விடாமல் தடுப்பதற்கும்,இவ்வுலகில்நிறை மனிதன் என எவருமே இல்லை என்பதைப்புரிய வைப்பதற்கும்
"
பெரியோரை வியத்தலும் இலமே"
என்று சொல்லி வைத்த புறநானூற்றுப்புலவன்,
"
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்று கூடவே இன்னொரு வரியையும் இணைத்துக்கொள்கிறான்.

வயதில்,வாழ்க்கை நிலையில்,அறிவில்,அனுபவத்தில் சிறியவர்கள் என நாம் அற்பமாக எண்ணும் எத்தனையோபேரிடம் நாம் கண்டடைவதற்கானபல செய்திகள்,கருவூலமாகச்செறிந்து கிடக்கின்றன.
மணிக்கொடி முன்னோடிகளில்குறிப்பிடத்தக்கவரான பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக்குழந்தைகள்' ,புகழ் பெற்ற ஒரு சிறுகதை.அப்படைப்பில் இடம்பெறும்ஒரு சிறுமி -'நட்சத்திரம் எப்படிப்பிறக்கிறது?'என்று கேட்க அவளது வினாவுக்கு,"ஒவ்வொரு தடவை உண்மை பேசும்போதும் ஒரு நட்சத்திரம் பிறக்கிறது"என்று பதிலளிக்கிறார் அவள் தந்தை.ஒரு நாள் இரவு வானத்தை நோக்கியிருக்கும் அவள் கண்களுக்கு ஒரு நட்சத்திரம்(அல்லது,எரிகல்)வீழ்வது,கண்ணில் பட ''யாரோ பொய் சொல்லி விட்டதால்தான் நட்சத்திரம் விழுந்து விட்டது"என்று விளக்கமளிப்பதன்வழி,தன் தந்தையையே திகைக்கவும்,வியக்கவும் செய்து விடுகிறாள் அந்தக்குட்டிப்பெண்.

பெரியோர் என வியக்கும்போதும் சிறியோர் என இகழும்போதும் எதிர்பாராத ஏமாற்றங்கள் விளைவதைத் தவிர்ப்பதற்காகவே 'வியத்தலும்,இகழ்தலும் தவிர்க்க' என்ற அற்புதமான செய்தியை முன் வைக்கிறது சங்கஇலக்கியம்.

17.3.15

அமெரிக்கத் தென்றல் வந்தது காணீர்!


நான் முன்பு எழுதிய தரிசனம் சிறுகதையும் அதே இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.

பென்சில்வேனியாவில் வசிக்கும் என் பேராசிரியத் தோழி இரண்டு நாட்களுக்கு முன்பு மிகுந்த மகிழ்ச்சியோடு இச்செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

முன் பின் கண்டு பழகியிராத என்னைக்குறித்து இத்தனை விரிவான நுணுக்கமான தகவல்களுடன் அமெரிக்க மண்ணிலிருந்து ஒரு கட்டுரை எழுதி வெளியிட்டிருக்கும் முகம் தெரியாத திரு அரவிந்த் அவர்களுக்கும்,தென்றல் ஆசிரியர் குழுவுக்கும் என் நெகிழ்வான நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு அக்கட்டுரையை இணைய வாசகர்களோடும் பகிர்ந்துமகிழ்கிறேன்.






15.3.15

’என் பவரும்’,எம்பவர்மெண்டும்-பெண்கள் தினம்

சர்வதேச மகளிர் தின நிகழ்வு ஏதேனும் ஒன்றில் கலந்து கொள்ளாமல் என் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகள் கழிந்ததே இல்லை.

இம்முறை கோவை பேரூர் அருகில் பச்சாபாளையம் -இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிப் பேராசிரியையிடமிருந்து மார்ச் 5ஆம் தேதி நிகழ்ச்சிக்கான [8 ஞாயிறு என்பதால்] அழைப்பு ஃபிப்ரவரி  மாத நடுவிலேயே வந்து விட்டது.



மிகப்பெரியதும் அழகியதுமான கல்லூரி. ஊக்கமும் உயிர்த்துடிப்புமான ஆசிரியர்கள்,பொறியியல் மாணவிகள்.ஆனாலும் அரங்கில் மாணவிகளை மட்டுமே பார்த்தபோது எனக்கு ஏமாற்றம்தான்.பெண்கள் தினத்தின் முக்கியத்துவத்தை ஆண்களும் புரிந்து கொள்ளும்போதுதானே பெண்ணை சக ஜீவியாக நினைக்கும் சம உரிமைச்சிந்தனை அவர்களிடமும் அரும்ப முடியும்? இல்லையென்றால் அதிகம் படிப்பறிவில்லாத நிர்பயா வழக்கின் முகேஷ் சிங்கைப் போலவோ , அதே வழக்கின் மெத்தப்படித்த மேதாவிகளான சில வழக்குரைஞர்களைப் போலவோ ‘வீட்டுக்குள் பெண்ணைப்பூட்டி வைப்பதே சரியானது’என்ற வெட்டி வாதம்தான் பேச முடியும் என்று
நான் கூறிய கருத்து அனைவருக்கும் ஏற்புடையதாக இருந்தது.

இதுவரை கலைக்கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்றது போல பொறியியல் போன்ற தொழிற்கல்லூரி நிகழ்வுகளில் நான் அதிகம் கலந்து கொண்டதில்லை. தமிழ் மொழியில் பேசுவதையே - பேசுவதைக்கேட்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்ட நிலையில் இருந்த மாணவிகள் இந்த நிகழ்ச்சியை ஒரு வரவேற்கத்தக்க மாறுதலாகக்கொண்டாடி விட்டனர்.

பெண்ணை அதிகாரப்படுத்துதல்-அதன் வழி மனித சமூகத்தை அதிகாரப்படுத்துதல் என்பதே இந்த ஆண்டுக்குரிய மையப்பொருள்.
'என் power' உணர்ந்த பின் வருவதே 'empowerment'.
முதலில் தன் ‘பவரை’ [power], தன்னிடம் உள்ள சக்தியைப் பெண் உணர்ந்தால்தான்   'empowerment'.  என்ற பேரிலக்கு  சாத்தியம் என்பதை முன் வைத்து நான் பேசினேன்.

'empowerment' என்பது, உறுதியான முடிவுகளும் தீர்மானங்களும் கொண்டவர்களாலேயே கைக்கொள்ளப்படுகிறது என்பதால்
 ’நான் சக்தி மிக்கவள் நான் ஆற்றல் கொண்டவள்,என்னால் தனியாக சிந்தித்து முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுக்க முடியும்,அதற்கு நான் எவரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை,எவர் சம்மதத்தையும் நான் எதிர்நோக்க வேண்டியதும் இல்லை ’என்று ஒரு பெண் பிரக்ஞை பூர்வமாகத் தானே உணர்ந்து தெளியும் வரை எத்தனை உயர்ந்த படிப்புக்குப்போனாலும் எவ்வளவு உயர்ந்த பதவிகளில் அமர்ந்தாலும் அது உண்மையான அதிகாரப்படுத்தலுக்கு இட்டுச்செல்லாது என்றேன் நான்; ’நாணம்,அச்சம்,மடம்,பயிர்ப்பு எனப் பெண்ணுக்கு வரையறுக்கப்பட்ட இயல்புகள் எல்லாமே  பெண்ணின் தனித்த இயக்கத்தையும் தன்னிச்சையான முடிவுகளையும் கட்டுப்படுத்தும் உள்நோக்குடன் புனையப்பட்டவையே என்றும் ’’நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’’என பாரதி முழங்கியது அது பற்றியே என்றும் சான்றுகளுடன் நான் விளக்கியதை அரங்கிலுள்ளோர் அமைதியான ஒப்புதலுடன் கேட்டுக்கொண்டதாகவே எனக்குத் தோன்றியது.

என் உரைக்குப்பிறகு மாணவியர் பங்கு கொள்ளும் பேச்சரங்கம் ஒன்று நிகழ்ந்தது.

பெண்ணின் தலைமைப்பண்புகள் சிறப்பாக வெளிப்படும் இடம் இல்லமா,பணியிடமா என்ற தலைப்பில் மாணவிகள் இரு அணியாகப்பிரிந்து வாதிட்டனர்.முதிர்ச்சியான உரைகளாக அவை இல்லையென்றபோதும் வழக்கமான பட்டிமன்றக்கொச்சையாக இல்லாமல் அனுபவத் தோய்வுடன் கூடிய சுருக்கத்தோடு அவர்களது உரைகள் அமைந்திருந்தன. வீடு வெளி இந்த இரண்டும்  தலைமைப்பண்புகளின் பயிலிடங்களே,இரண்டு இடங்களில் பெறும் பயிற்சிகளும் ஒன்றுக்கு மற்றொன்று உதவக்கூடியவையே, வீட்டில் உறவினரின் பலவகைத் தேவைகளை சமாளிக்கும்  பயிற்சி பணியிடத்திலும்,பணியிடத்தில் சிக்கல்களைக்கையாண்டு ,கீழுள்ளோரை நிர்வகித்து,நிகழ்ச்சிகளை நடத்துவதில் கிடைக்கும் பயிற்சி இல்ல நிர்வாகத்திலும் உதவுகிறது என்றும் என் இறுதி உரையை நிறைவு செய்தேன்.

இரு அணிகளிலும் சிறப்பாகப்பேசிய மாணவியருக்குப்பதக்கம் அணிவித்தது  மகிழ்வான பணி.

மொத்தத்தில் அது ஒரு நிறைவான மகளிர் நாள்..
கல்லூரி மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் என்னை உலவ விட்டு  என் பணிக்காலத்தை நினைத்துப்பார்க்கச் செய்த மகிழ்ச்சியான நாள்.


9.3.15

சிக்கிமை நோக்கி..-6[காங்க்டாக்.]








காலை கண் விழிக்கும்போது மணி ஆறு. திரைச்சீலையை விலக்கியதும் வெளிச்சம் அழகாக உள்ளே படர்ந்தது. 

பத்து நிமிடத்துக்கெல்லாம் சூடான தேநீர் அறையைத் தேடி வந்தது. கொண்டு வந்த மங்கோலிய முகம் கொண்ட அழகான இளைஞர்கள்,அங்குள்ள பள்ளி கல்லூரிகளில் படித்துக்கொண்டு பகுதி நேரப்பணியாற்றுபவர்கள் என அறிந்து கொண்டோம்.

கோட், மஃப்ளர் அணிந்தபடி காங்க்டாக்கின் காலை நடைக்காகக் கிளம்பினோம். சுற்றுலா ஊர் என்பதால் அந்த நேரத்திலேயே கடைகள் விழிக்கத் தொடங்கி விட்டிரு ந்தன.

என்னுடன் தங்கியிருந்த மோனிகா முகியா என்னும் கவிஞர்-திறனாய்வாளர் , நேபாள இனத்தவராயினும் இந்திய வம்சாவளியைச்சேர்ந்தவர்.டார்ஜீலிங்கில் வாழ்ந்து வரும் அவர் ஒரு கத்தோலிக்கக் கிறித்தவர்
அறைத்தோழி நேபாளக்கவிஞர் மோனிகாவுடன்...

அவரைப்போலப் பிற மதங்களைப் பின்பற்றும் நேபாள இனத்தைச் சேர்ந்த பலரை இந்தியாவின் எல்லை மாநிலங்களில் காண முடியும்.

நாங்கள் நடந்துசென்றுகொண்டிருந்தபோது அடுத்தநாள் ஞாயிறு என்பதால் பூசைக்கு செல்வதற்கான தேவாலயத்தை இன்றே கண்டுபிடித்து வைத்து விட வேண்டுமென்றார் மோனிகா. அங்கிருந்த வாடகைக்கார் ஓட்டுநர்களிடம் சர்ச் இருக்கும் இடத்தை விசாரித்ததில் அருகில் இருப்பதாக அறிந்து அதைப் பார்த்து வைத்துவிடலாமென எண்ணியபடி மேலேறிச்சென்றோம்.

சர்ச்சில் அப்போதுதான் தினசரிப் பூசை முடிந்து பாதிரியார்,சில பெண் துறவிகள் மற்றும் பொதுமக்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.அவர்களில் பலரும் நேபாளிகள் என்பதை ஆச்சரியத்தோடு கண்டேன்.மோனிகாவும் அவர்களோடு நேபாள மொழியில் சற்று நேரம் உரையாடினார்;பிறகு உள்ளே சென்று சின்னதொரு பிரார்த்தனை செய்ய வேண்டுமென அவர் விரும்ப நானும் கூடச்சென்றேன்;மிகவும் சிறிதான-  சுத்தமும் எளிமையும் வாய்ந்த ஆலயம்.

மோனிகா பிரார்த்தனை முடித்தபின் இருவரும் வெளியே வந்து பார்த்தால் சர்ச்சின் இரும்புக்கதவு உட்புறமாகப்பூட்டப்பட்டிருந்தது;சர்ச்சிலும் எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.நாங்கள் உள்ளே செல்வதைத்தான் பாதிரியார் முதல் எல்லோரும் பார்த்தார்களே…..பிறகு ஏன் இந்தப்பூட்டு..? வேறு எவரோ உள்ளே இருக்க வேண்டும் என்று இருவரும் சுற்றி வந்தால் உள்ளே இருந்த சிறிய அறை உட்பட எங்கும் எவரும் இல்லை;அப்படியானால் வெளிப்புறத்திலிருந்துதான் கதவைப்பூட்டிக்கொண்டு சென்றிருக்க வேண்டும்.கோயிலோடு தொடர்பு கொண்ட யாருடைய பெயரோ எண்ணோ -எதுவும் தெரியாத நிலையில் யாரை எப்படித் தொடர்பு கொள்வது? நாங்கள் கலந்து கொள்வதற்காக வந்திருந்த சிறுகதைக்கூடுகையின் தொடக்கவிழா காலை 10மணிக்கு!!; அறைக்குச்சென்று குளித்து சிற்றுண்டி முடித்து அதற்கு ஆயத்தமாக வேண்டும். தெரியாத ஊரில் இருவரையும் பதற்றம் தொற்றிக்கொள்ள டார்ஜீலிங்கில் உள்ள பாதிரியார் வழி முயற்சிக்கலாமா என எண்ணியபடி மோனிகா கைபேசியை எடுக்க அதற்குள் கீழ்ப்பகுதியிலிருந்து ஏதோ வெளிச்சம் வருவது கண்டு நான் எட்டிப்பார்த்தேன்;கீழே இறங்கிச்செல்லும் அந்தப்படிகளில் போனால் ஆலயத்தின் கீழ்த்தளம் சாலையோடு எந்தக் கதவும் இல்லாமல் இணைந்து கொண்டது; மலைப்பகுதிகளிலுள்ள இடங்களில் அப்படிக்கீழிருந்து சாலையோடு செல்லும் வசதி இருப்பது இயல்புதான்;அது எங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணியதால்தான் அவர்கள் பூட்டுப்போட்டு விட்டுப்போயிருக்க வேண்டும்.எப்படியோ, நிம்மதிப்பெருமூச்சு விட்டபடி அறைக்குச் செல்லக்கிளம்பினோம். 

வழியெங்கிலும் சுற்றுலாவுக்கான வாடகைக்கார்கள் நிறைந்து கிடந்தன.

காங்க்டாக்கை சுற்றிப்பார்க்க எங்களுக்குக் கிடைத்திருந்த நாட்கள் 7,8 ஆகிய 2 நாட்கள் [சனி,ஞாயிறு] மட்டும்தான். விமானத் தாமதம் இல்லையென்றால் 6ஆம் தேதி  பிற்பகலே வந்து ஓரளவு பார்த்திருக்கலாம் ; நாங்கள் பங்கு பெறும் அமர்வை விடுத்து மற்ற நேரங்களில் ஊரை சுற்றிப்பார்க்க அமைப்பாளர்கள் முன்பே ஒப்புதல் தந்திருந்தாலும் இந்தியச்சிறுகதைகளை ஒருமித்துக் கேட்கக்கிடைத்த வாய்ப்பையும் முற்றாக விட மனம் வராததால் நாங்கள் இருவரும் பங்கு பெறாத அன்று பிற்பகல் அமர்வை விட்டு விட்டு அந்த நேரத்தில் காங்க்டாக்கை சுற்றிப்பார்க்க முடிவு செய்து ஒரு வாடகைக்காரை ஏற்பாடு செய்து கொண்டோம்.[ஆனால் மறுநாள் தன் ஆய்வுக்கட்டுரையை வாசிக்க வேண்டிய மோனிகா,அன்றே வாசிக்குமாறு நேர்ந்ததால் நான் மட்டுமே செல்ல நேர்ந்தது]

மிகச்சிறப்பாகத் தொடங்கிய சிறுகதை அமர்வின் தொடக்க விழாவும்,முதல் அமர்வின் 4 கதை வாசிப்புக்களும் முடிந்து [காண்க; சிக்கிமில் ஒரு சிறுகதைக்கூடுகை] மதிய உணவுக்குப்பின் சரியாகப் பிற்பகல் 2 மணிக்கு காங்க்டாக்கைச் சுற்றிப்பார்க்க வாடகை வண்டியில் ஏறினேன். காங்க்டாக்கைப் பொறுத்த வரை தனியாகச்செல்வதில் எந்த பயமுமில்லை என்றும் ‘இது பூலோக சுவர்க்கம்’என்றும் கூறி வழி கூட்டி அனுப்பி வைத்தார் விடுதிக்காப்பாளர்.

காரோட்டியான ரோஷனும் கூட இந்திய வம்சாவளியைச்சேர்ந்த நேபாளிக்கிறித்தவர்தான். 4 மணி நேரச்சுற்றுலாவுக்கு 1200 ரூ கட்டணம் என்பதில் பேரத்துக்கு இடமில்லை.

நதுல்லா பாஸ் என்னும் சீன எல்லைப்பகுதி காங்க்டாக்கிலிருந்து 50 கி மீ தொலைவுதான்!!;அங்கே செல்லும் வழியும் காட்சிகளும் அற்புதமாக இருக்கும்,அங்கிருந்து கஞ்சன்ஜங்கா சிகரத்தைத்தெளிவாகப்பார்க்கமுடியும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருந்தும் ஒரு முழு நாள் இருந்தால்தான் அது சாத்தியம் என்று ஓட்டுநர்கள் சொல்லி விட்டதால் உள்ளூருக்குள்ளேயே சுற்றுவதற்கு முடிவு செய்தேன்.[கதைக்கூடுகைக்கு வந்திருந்த மலையாள எழுத்தாளர் பால்சக்காரியா, ஒரு நாள் முன் கூட்டியே வந்து விட்டதால் நதுல்லாவுக்குச் சென்று வந்தததாகப் பிறகு பகிர்ந்து கொண்டார்]

முதலில் சென்ற இடம் மலர்க்கண்காட்சி மையம்[ Flower Exhibition Centre]. எல்லா சுற்றுலா மையங்களிலும் வழக்கமாகப்பார்க்கும் பூந்தோட்டம் போலத்தான் அதுவும் இருக்கும் என்றும் சற்று வித்தியாசமான இடங்களைப்பார்க்கலாமே என்றும்  எண்ணிய நான் இறங்குவதற்கே முதலில் சற்றுத் தயங்க காரோட்டிதான் என்னை வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

திபெத்திய பாணியில் அமைந்திருந்த கொடிவீடுகளுக்கு நடுவிலிருந்த சிறிய பூங்காவைத் தாண்டிச்சென்றதும்


பாதுகாக்கப்பட்ட கூரைகளின் கீழ் வண்ண வண்ண ஆர்க்கிட் மலர்கள்….இத்தனை நுணுக்கமான நிற வேறுபாடு கொண்ட மலர்களா என வியக்க வைத்த பூக்குவைகள்..! 

இயற்கையின் வண்ண வினோதம் தனித்துவம் கொண்டது;எப்படியெல்லாம் நிறங்களை மாற்றி மாற்றிக்கலந்து எவ்வளவுதான் செயற்கையாக வண்ணச்சேர்க்கை செய்தாலும் இயற்கைக்கு அவை நிகராவதில்லை
‘’எத்தனை பொருள் கொடுத்தும் மண்ணில் இது போல் இயற்ற வல்லார் யாவரே’’என அந்திவானில் தெரியும் வண்ணக்கலவைகள் கண்டு வியந்த பாரதியின் வரிகளே மனதில் ஓடின.
நல்ல காலம் இந்தப்பூங்காவைத் தவற விடாமல் இருந்தேன் என நினைத்துக்கொண்டேன்.








சுற்றுலாவுக்குரிய கோடை காலம் இல்லாததால் தேநிலவு தம்பதிகள் தவிர அதிகக்கூட்டம் இல்லை.











மலர்க்கண்காட்சிமையத்துக்கு எதிரிலேயே மலைச்சிகரங்களைப்பார்ப்பதற்கான ‘காண் இடங்கள்’[view points] சில இருந்தன.ஆனால் மேக மூட்டத்தின் அடர்த்தியால் காட்சிகள் தெளிவாகப்புலப்படவில்லை.




அடுத்தாற்போல 'கணேஷ் காண் இடம்’[view point] , 'தஷி காண் இடம்’[view point] என்ற இரு உயரமான பகுதிகளுக்கு அழைத்துச்சென்றார் காரோட்டி.

அவற்றில் கணேஷ் டாக் எனப்படும் பகுதி ,மிக உயரத்துக்கு இட்டுச்செல்லும் நிறையப்படிகளுக்கு நடுவே விநாயகர் கோயில் ஒன்றையும் கொண்டிருந்தது.



கணேஷ் டாக்கும் அங்கிருந்து புலனாகும்
மலை,நிலக்காட்சியும்

கணேசர் கோயில்





மற்றொரு காண் இடமான [view point] தஷி பகுதியில் கணேஷ் டாக்கை விடவும் கூடுதல் உயரம் ஏறிச்சென்றும் என் எதிரியான மேகமூட்டம் மனமிளகுவதாக இல்லை.


கீழ்த்தளத்தில் உணவு விடுதியோடு கூடிய திபெத்திய பாணி நவீனக்கட்டிடம் ஒன்றை அங்கே காண முடிந்தது.







’யானைக்கயிற்றுப்புறத்தன்ன கல் மிசைச்சிறுநெறி’
காண் இடங்களுக்குச் செல்லும் வழியில் பஞ்ச்ஹக்ரி[Banjhakri Falls]என்ற ஒரு சிற்றருவி செங்குத்தான ஓடை போல மேலிருந்து கோடாக வடிந்து கொண்டிருந்தது. [கீழிருப்பது போலக்கூட நீர் வரவில்லை;
இந்த அருவி மட்டும் இணையப்படம்] நொந்து போனபடி,காரிலிருந்து இறங்காமல் தொடர்ந்து சென்றேன்.
Banjhakri Falls
 பௌத்தமதம் தழைத்திருக்கும் திபெத்,நேபாளம்,பூடான் ஆகிய பல நாடுகளை ஒட்டி அமைந்திருக்கும் சிக்கிமிலும் அம்மதத்தைப்பின்பற்றுவோர் மிக அதிகம்;
அதனால் பௌத்த மடாலயங்களை மிகுதியாகக்கொண்டிருக்கிறது சிக்கிம்.

என்ச்சி என்ற பெயர் கொண்ட ஒரு மடாலயத்துக்குப்போய்ச்சேர்ந்தபோது மாலை 5 மணியாகி விட்டதால் அது மூடப்பட்டு விட்டிருந்தது. இலங்கைப்பயணத்தின்போது நிறைய பௌத்த ஆலயங்களையும் மடாலயங்களையும் பார்த்திருந்ததால் இது பெரியதொரு குறையாகப்படவி ல்லை.


காங்க்டாக்கும் ஒரு சுற்றுலா நகரம்தான் என்றபோதும் நாம் வழக்கமாகப்பார்க்கும் சுற்றுலா இடங்களைப் போல நம் மேலே விழுந்து பொருட்களைத் திணித்து வாங்குமாறு நம்மை வற்புறுத்தும் வியாபாரிகளோ...இயற்கை எழிலைக்காண விடாமல் அந்த்தந்தக்காணிடங்களில் மொய்த்துக்கிடக்கும் கடைகளோ சுத்தமாக இல்லை. உள்ளடங்கி அமைந்திருக்கும் ஒரு சில கலைப்பொருள்கடைகளை  மட்டுமே அங்கங்கே காண முடிந்தது.

நாங்கள் தங்கியிருந்த எம் ஜி மார்க், புதிதான மையக்கடைத்தெரு.;மிக நவீனமான விலை உயர்வான பொருட்களை இங்கே அதிகம் பார்க்க முடிந்தது. இந்த வீதியை ஒட்டிக் கீழே இறங்கிச்செல்லும் படிகளோடு கூடிய பாதையில் லால் பஜார் என்ற சாதாரணமான ஒரு கடைத்தெரு கலகலப்பாக ஓரளவு மக்கள் கூட்டத்துடன் இருந்தது. பாரம்பரியமான பட்டுத் துணிப்பைகள்,பலரக பீங்கான் கோப்பைகள்,பளிங்கிலும் பலவகை உலோகங்களிலும் ஆன விதம் விதமான புத்தர் சிலைகள் இவையே சிக்கிமின் அடையாளமாக இந்த இரண்டு கடைத்தெருக்களையும் நிறைத்திருந்தவை.


இரண்டு நாள் காங்க்டாக் தங்கலில் பொதுவான வட இந்திய உணவு வகைகள்தான் [ரொட்டி,பூரி,தந்தூரி ரொட்டி,பனீர்,போஹா என] எங்கள் முழுவினருக்குப் பரிமாறப்பட்டனவே தவிர சிக்கிமின் சிறப்புணவான மோமோ [நம்மூர் கொழுக்கட்டை போன்றது]தரப்படவில்லை;
அந்தக்குறையைப்போக்கிக்கொள்ள இரண்டாம் நாள் மாலை நானும் மோனிகா முகியாவும் எதிரில் இருந்த சுத்த சைவ ‘மோமோ’ உணவகத்துக்குச்சென்று அந்தப்பாரம்பரிய உணவைச்சுவைத்தோம்; இப்போது தமிழ்நாட்டிலும் கூட மோமோ கிடைத்தாலும் சிக்கிமில் இவற்றின் சுவையே அலாதியானதுதான்.

நிகழ்வுகளெல்லாம் முடிந்ததும் ஏற்படும் நிறைவு  ஒரு பக்கமும், மறுபக்கம் வெறிச்சோடலுமாய்  இரு வேறு மனநிலைகளுடன் மறுநாள் 9ஆம் தேதி விடியற்காலையில் பாக்தோக்ரா நோக்கிய சாலைப்பயணம், பிறகு விமான வழி கொல்கத்தா,அங்கிருந்து கோவை....  


காங்க்டாக்கின் எந்தப்பக்கத்திலிருந்து பார்த்தாலும் உலகின் மூன்றாவது உயரமான சிகரமான கஞ்சன்ஜங்கா சிகரம்

கண்ணில் படும் என்று படித்து விட்டு ஆவலுடன் வந்திருந்தாலும் - இது கோடைப்பருவம் இல்லையென்பதால் அது மட்டும் நிறைவேறாமல் போனது சற்று வருத்தம்தான்; ஆனாலும்,தங்கியிருந்த மிகச்சில நாட்கள் நிறைவான,என்றும் நினைவுச்சேமிப்பிலிருந்து அகற்ற முடியாத அரிய அனுபவங்களையும் என்றும் கிடைப்பதற்கு அரிதான எழுத்தாள நட்புக்களையும் பெற்றுத்தந்த காங்க்டாக்கை மறப்பது கடினம்.
[நிறைவு]

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....