துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.4.10

புத்தகத் திருநாளில் (1)



இணைய எழுத்தும் வாசிப்பும் ஒருபுறம் விரிந்து கொண்டே சென்றாலும் பிடித்ததொரு புத்தகத்தைத் தேர்ந்து கொண்டு... ஒரு மூலையில் அமர்ந்தபடி சுகமான வாசிப்பில் லயித்துக் கலக்கும் அனுபவ ருசியும்,ஆர்வமும் நம்மை விட்டு இன்னும் அகலவில்லை என்பதைக் கொஞ்சம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.
நாளும் வெளிவரும் நூல்களின் எண்ணிக்கையும்,புத்தகத் திருவிழாக்களில் குவியும் கூட்டமும் ஆண்டுக்கு ஆண்டு இதை மெய்ப்பித்துக்கொண்டே வருகின்றன.
(அவற்றுள் தரமான நூல்கள் எத்தனை...தரமானவற்றை வாங்குவோரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதில் சில ஐயங்கள் இருந்தபோதும் தரமானவற்றைப் படிக்கும் கூட்டமும் உயிர்ப்போடு ஒரு பக்கம் இருந்துகொண்டுதானிருக்கிறது என்பதும் அக்கூட்டம் முற்றாக இல்லாமலாகிவிடவில்லை என்பதும் ஆறுதலளிக்கும் விஷயங்கள்)

உலகப் புத்தக நாளை ஒட்டி - முகம் தெரியாத ஊர் தெரியாத இரு இணைய வாசகர்கள் எனக்குப் பேரன்போடு அனுப்பி வைத்திருந்த இரு புத்தகங்களைப் பற்றிய சுருக்கமான பகிர்வுகள் அடுத்தடுத்த பதிவுகளாய்....

.......
தோழர் என விளித்தபடி அன்புமடல் எழுதும்
இரா எட்வினின்
‘’அந்தக் கேள்விக்கு வயது 98 ‘’ என்ற கட்டுரை நூல்

‘’சமுதாயத்தின் மீதான இடது சாரிப் பார்வை,உரிமைக்கான குரல்,தாய்மொழி மீதான அக்கறை,பலரும் கவனிக்க மறுக்கும் நியாயங்களை உற்று நோக்கி வெளிப்படுத்தும் மன உறுதி’’ஆகிய கூறுகளே இந்தத் தோழர் எழுத்தின் சாரம் எனத் தமது அணிந்துரையில் கோவி.லெனின் குறிப்பிட்டிருப்பதில் அணுவளவும் பிழையில்லை என்பதை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரையும் மெய்ப்பிப்பதை வாசித்துத்தான் உணர வேண்டும் என்றாலும்..
பானைச் சோற்றுக்குப் பதச்சோறாய்ச் சில....

இந்த நூலின் தலைப்பு சற்று ஆச்சரியப்படுத்துவதாய் இருக்கவே முதலில் அந்தக் கட்டுரைக்குள் நுழைந்து பார்த்தால் .... தெரிந்த செய்தியாக இருந்தாலும் கட்டுரை முடிவில் எட்வின் வைத்திருக்கும் வித்தியாசமான முத்தாய்ப்பு மானமுள்ள தமிழர்களைத் தலைகுனியச் செய்யும் சாட்டையடியாக வந்து விழுகிறது.
பின்னாளில் பாரதியின் சீடராகி அவரது வாழ்க்கை வரலாற்றை அற்புதமாக வடித்துத் தந்த வ.ரா.என்னும் வ.ராமசாமி அய்யங்கார் முதன் முதலாகப் பாரதியைக் காணப் புதுச்சேரி வருகிறார்.ஆங்கிலத்தில் பேசினால் பாரதி மகிழ்வார் என எண்ணி வ.ரா. ஆங்கிலத்தில் பேச பாரதி செவிட்டில் அறைவது போல
‘’இன்னும் எத்தனை நாளைக்கு ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசப் போகிறீர்கள்’’
என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார்.

அதற்கு எட்வினின் பின்னுரை இதோ....
இது நடந்தது..1910ஆம் ஆண்டு.
பாரதியின் கேள்விக்கு இப்போது வயது 98.இன்னும் இரண்டாண்டுகளில் நூற்றாண்டு.
(எட்வின் நூலெழுதப்பட்டு 2 ஆண்டு கடந்து விட்டதால் இப்போது உண்மையாகவே அந்தக் கேள்வி கேட்கப்பட்டு 100 ஆண்டு முடிந்து விட்டது.)

எட்வின் கேட்கிறார்...
‘இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வியை உயிரோடு வைத்திருக்கப் போகிறோம்?

வண்ண மயமான செம்மொழி மாநாடுகளின் கோலாகல ஆர்ப்பாட்டங்களில் திளைத்தபடி....தமிழை ஆங்கில உச்சரிப்பில் பேசும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களோடு (இரு பாலாரும்தான்)கூச்சமின்றித் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்கும் நமக்குப் போயும் போயும்  இந்தக் கேள்விக்கு பதில் தேடவா நேரம் இருக்கப் போகிறது..? பாவம்..... அப்பாவி எட்வின்கள் ஒருபக்கம் புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

தமிழ்ப் பாடகர் ஒருவர் பாடிய தெலுங்குக் கீர்த்தனைகளை ஒரு முறை கேட்ட சாயிபாபா, தெலுங்கு உச்சரிப்பில் கவனம் செலுத்துமாறு அவரிடம் அறிவுறுத்தியதை எடுத்துக் காட்டும் எட்வின் அதைத் தனக்கே உரிய கோணத்தில் இப்படிப் பார்க்கிறார்.

‘’கடவுளின் அவதாரமாகவே பல கோடி மக்கள் அவரைக் கொண்டாடினாலும்,தமது தாய்மொழி தெலுங்கு என்பதிலும்,தனது தாய்மொழியை வேற்று மொழிக்காரரும் சரியாய் உச்சரிக்க வேண்டும் என்பதிலும் அவருக்குள்ள அக்கறையைப் போற்றுகிறோம்,.
இன்னுஞ் சொல்லப்போனால் அநேக விஷயங்களில் அவரோடு முரண்படுகிற நாம் அவரது மொழிப்பற்றை சிரந்தாழ்த்தி மகிழ்ச்சியோடு வணங்குகிறோம்.
...நாம் தமிழர்.
நமது தாய்மொழி தமிழ் தமிழ் .
இதை நாம் எப்போது உணரப்போகிறோம்?’

உணர்ச்சி வேகத்தில் மொழி உணர்வுக்குக் கொடி பிடித்து ஆவேசத்தைத் தூண்டிவிடும் மலிவான நோக்கம் எதுவும் நூலாசிரியரிடம் இல்லை.அடிப்படையே ஆடிப்போய்விடுமோ என்ற ஆதங்கமே அவரை அங்கலாய்க்க வைக்கிறதென்பதை அவரே பதிவு செய்கிறார்.

‘’எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர் மேல் விட மாட்டேன்’’
என்பார் ஞானக் கூத்தன்.ஆமாம். பிறர் மீது விட வேண்டாம்
ஆனால் நாமாவது சுவாசிக்க வேண்டாமா?

மொழி சார்ந்து எழுப்பும் இந்தக் கேள்விகளோடு
நம் மனச் சாட்சியைத் தொட்டு உலுக்கி ...
சமூகம்,அரசியல்,மதம் எனப் பல களங்களிலும் பல வினாக்களை முன் வைக்கின்றன இவரது கட்டுரைகள்.

சூரியனை மையமாக வைத்துப் பூமி சுற்றுகிறது என்ற கருத்தை 1633 இல் வெளியிட்டுத் திருச்சபையின் கருத்துக்கு எதிராகக் கருத்துச் சொன்ன கலீலியோவின் மீது போடப்பட்ட அதே வழக்கு 360 ஆண்டுகளுக்குப் பின்,1990 இல் மேல்முறையீட்டுக்கு வந்தபோது திருச்சபை தன் முடிவை மாற்றிக்கொண்டு அவரது கருத்தை ஏற்றது என்பதால்
‘மதத்தை விஞ்ஞானம் வென்றது’என ஆத்மார்த்தமாக மகிழும் எட்வின் அத்துடன் வேறொரு சுவாரசியமான தகவலையும் சேர்த்துச் சொல்கிறார்.

‘90 இல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது , தற்போது போப்பாண்டவராக உள்ள பெனடிக் மட்டும் கலீலியோவின் கருத்தத் திருச்சபை நிராகரிக்க வேண்டுமென்று விடாப்பிடியாகச் சொல்லியிருக்கிறார் என்பதும்...
அந்தக் காரணத்தினாலேயே - இப்பொழுது அவர் போப்பாண்டவராகவே இருக்கும் நிலையிலும் ரோமிலுள்ள லா ஸாட்னீஸா என்ற பல்கலைக் கழகம் அவர் அருளாசி தரவிருந்த நிகழ்வைத் துணிவோடு ரத்து செய்து விட்டதென்பதும் (17.01.08)எட்வின் தரும் புதிய தகவல்கள்.

அவர்களும் விசுவாசிகளே ஆனால் அற்ப விசுவாசிகளல்ல.விஞ்ஞானத்தை ஏற்பவர்கள்’ என்று கூறும்கட்டுரையாளர் ‘குற்றம் குற்றமே’ என்ற இக் கட்டுரையை,
‘இந்த நிகழ்வை இந்தியாவிலுள்ள கல்வி நிலையங்கள் அருள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்றும்,மதவாதிகளின் நெருக்கடியைப் பழமைக் கூத்தை’ எதிர்க்க வேண்டும் என்றும் முடித்திருப்பது இந்தியநடப்பியலின் கவலை தரும் போக்கில் அவருக்குள்ள மெய்யான அக்கறையை ஆத்மசுத்தியோடு பதிவு செய்கிறது.

மீண்டும் அதே பூமி பற்றிய ஆராய்ச்சி. ஆனால் இம்முறை தர்க்கத்தில் ஈடுபடுபவர்கள் சின்னக் குழந்தைகள்.
‘’பூமி தட்டைன்னு சொன்ன ஆளுடீ உங்க சாமி ! பூமி உருண்டைன்னு தெரியாத சாமி எப்படிடீ பூமியப் படச்சிருப்பான்’’என்று வாதத்தைத் தொடங்கி வைக்கிறான் கட்டுரையாளரின் மகன்.

‘’...குண்டன் தப்பு தப்பாப் பேசறான் இப்ப்டிப் பேசறதனாலேதான் எப்பவும் செகண்ட் ரேங்கிலேயே இருக்கே ....சாமி தப்பா சொல்வாரா ‘’
என்றெல்லாம் தங்கை ஆதங்கப்பட்டுத் தவித்தாலும்

’பூமி உருண்டைன்னு உனக்கெப்படித் தெரியும்’’ என்ற தன் அடுத்த கேள்வியை அண்ணனிடம் வைக்கத் தவறவில்லை அவள்.

’சயின்ஸ்லே படிச்சேண்டி கத்தரிக்கா’’
என்கிறான் பதிலுக்கு அவன்.

அதற்கு அந்தத் தங்கை சொல்லும் பதிலிலேதான் அப்பழுக்கற்ற குழந்தை மனதைப் பிட்டு வைக்கிறார் கட்டுரையாளர்.

‘’ஏம்பா சாமி காலத்திலே சயின்ஸ் இல்லதானேப்பா. சாமிக்கு சயின்ஸ் தெரியாது.அதனாலேதான் அப்படிச் சொல்லியிருப்பார். சாமி சயின்ஸ் படிச்சிருந்தா உன்னைவிட பர்ஸ்ட் ராங்கா சொல்லியிருப்பார்’’

என்று அந்தப் பிஞ்சுப் பெண் பேசி முடிப்பதைச் சொல்லி

குழந்தை மாதிரி தெளிவாய்ப் புரிந்து கொள்ள தெளிவாய்ப்பேச நமக்கின்னும் பயிற்சி வேண்டும்’
என்று கட்டுரையை நிறைவு செய்கிறார்.பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள்’சிறுகதையை நினைவூட்டும் கட்டுரை ஆக்கம் இது.

பிரபலமானவர்களின் எழுத்துக்களை மட்டுமே மேய்ந்து விட்டு நகர்ந்து செல்லும் நாம் தெரிந்துகொள்வதற்கான நல்ல பல தகவல்களும்,முற்போக்குச் சிந்தனைகளும்,மானுட நேயமும் ...பார்வைக்கு அதிகமாக வந்திராத நூல்களிலும் கூடக் குவிந்துகிடக்கக் கூடும் என்பதற்கான கண் திறப்பு எட்வினின் இந்நூல்.(முகம் தெரியாத எனக்கு இந்நூலை அனுப்பி,இதைப் படிக்கும் அனுபவத்தைச் சாத்தியமாக்கிய  அவருக்கு மீண்டும் நன்றிகள்.)
இனியேனும்...புத்தகக் கடை வரிசைகளை நூலக அடுக்குகளைக் கடந்து செல்கிறபோது நம் கவனம்..அதன் வெளிச்சம் இவ்வாறான நூல்கள் மீதும் சற்று விழட்டும்.

ஏதேனும் ஒன்று என் உசிரைப் பிசையுமானால் அதைப் பற்றி எழுத முற்படுகிறேன்’ என்று தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார் தோழர் எட்வின்.
தனது எழுத்தின் வல்லமை படிப்பவர் இதயத்தையும் பிசையும் வலிமை வாய்ந்ததாக இருப்பதை இதற்குள் பல எதிர்வினைகள் அவருக்கு உணர்த்தியிருக்கக் கூடும்.

மண் பயனுறச் செய்யும் எழுத்து....மனித மாண்புகளைத் தூண்டும் எழுத்து.....மலினமான மோசடிகளைச் சாடும் எழுத்து...அவருக்கு வரமாக வாய்த்திருக்கிறது.
பல நூல்களின் தொடர்ந்த உருவாக்கத்துக்கான மொழித் திறனும்...சொல்வளமும் அவரிடம் குறைவின்றி நிறைந்து கிடக்கிறது.அவற்றை உள்ளே கனல் பரப்பி எழுத்தாக்கமாய் வெளிக்கொணருவதற்கான எழுச்சியும் ,கிளர்ச்சியும்,ஏற்ற மனநிலையும் பொருந்த வாய்க்க வேண்டும் என்பதே நம் பேரவா.

நூல் விவரம்;
இரா.எட்வின்,
‘அந்தக் கேள்விக்கு வயது 98’
சாளரம்-வெளியீடு,
2/1758,
என்பீல்டு அவென்யூ,
மடிப்பாக்கம்,
சென்னை- 600 091

19.4.10

'அங்காடித் தெரு’ - மந்தைகளும்,வதைக்கூடங்களும்


கைப்பிடி உப்பு,கைக்குள் அடங்கும் தீப்பெட்டி இவற்றுக்குப் பின்னாலுள்ள கண்ணீர்க்கதைகள், உழைப்புச் சுரண்டல்கள்,மனிதப் பாடுகள் இவையெல்லாம் பொதுவாக நம் கவனத்துக்கு அதிகம் வருவதே இல்லை.செய்தித்தாள்களில் எப்போதாவது அவை பற்றிய அதிர்ச்சித் தகவல்களைக் காண நேரும்போது மட்டும் ஒரு உச்சுக் கொட்டலோடு...கணநேர அனுதாபத்தை நம் பங்குக்குக் காணிக்கையாக்கியபடி அடுத்த நொடியே அதிலிருந்து நம் கவனத்தை மிகுந்த அவசரத்தோடு மீட்டுக் கொண்டு விடுகிறோம்.குறிப்பிட்ட அந்தக் களங்களின் உழைப்பாளிகள் படும் அவத்தைகளை ஓரளவு அறிந்திருந்தாலும் விரிவான பின்புலத்தோடும்,தகிக்கும் நிஜங்களோடும்- மெய்யான கள ஆய்வில் கிட்டிய தகவல்களோடும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவற்றை நாவலாக்கியபோது('கரிப்பு மணிகள்','கூட்டுக் குஞ்சுகள்') மனம் கனத்துப் போய்....மலிவான அந்தப் பொருட்களை  சரளமாக..சகஜமாகப் பயன்படுத்தக் கூட இயலாத கூச்சம் கலந்த ஒரு குற்ற உணர்வு நெடுநாள் இருந்து கொண்டிருந்தது.
திரு ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’நாவல் பிச்சைக்காரர்களின் குரூர வாழ்வியல் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியபோது - வழக்கமாக முன்பெல்லாம் செய்ததுபோல் சில சில்லறைக் காசுகளை மட்டும் வீசிவிட்டு அவர்களைக் கடந்து சென்றுவிடுவதென்பது இயலாமல் போயிற்று
(காண்க; ஏழாம் உலகமும் நான் கடவுளும்  http://masusila.blogspot.com/2009/02/blog-post_28.html ).

வசந்தபாலனின் இயக்கத்திலும், ஜெயமோகனின் உரையாடல் நயத்துடனும் அண்மையில் வெளிவந்திருக்கும் திரைப்படமான ‘அங்காடித் தெரு’  பெருநகரங்களில் மட்டுமன்றிச் சிறு நகரங்களிலும் தற்போது வானுயர வளர்ந்து நிற்கும் பல்பொருள் அங்காடிகளைச் சற்றும் தயவு தாட்சணியமின்றிப் புறக்கணிக்கத் தூண்டும் உக்கிரமானதொரு மனநிலையை மனதிற்குள் அழுத்தமாகப் பதித்து விட்டிருக்கிறது.

‘திருமணத்துக்கு நாள் மட்டும் குறித்து விட்டுக் குறிப்பிட்ட கடைக்குள் நுழைந்தால் போதும்,திருமணத்தை முடித்து..சீர் செனத்தி செய்து தனிக்குடித்தனம் வைக்கும் வரை உள்ள எல்லாப் பொருட்களையும் வேறெங்கும் அலையத் தேவை இல்லாதபடி அந்த ஒரே இடத்தில் அள்ளிக் கொண்டு வந்து விடலாம்’
என்ற கவர்ச்சியான விளம்பரத் தூண்டிலுக்கு ஆளாகும் மக்கள்  பேரங்காடிகளில் மந்தையாய்க் குவிகிறார்கள்...குவிகிறார்கள்.....குவிந்து கொண்டே இருக்கிறார்கள்.
அது, முதல் குவியல்.....

பணத்தை மூட்டை கட்டி வைத்துக்கொண்டு நுகர்ச்சிக்கான பொருளை வாரிக் கொள்ளத் துடிக்கும்  அந்தக் கும்பலின் தேவைக்கேற்ற தீனி  சரக்கறையில் குவியல் குவியலாகக் கிடக்கிறது.
அது, இரண்டாம் குவியல்.

வாங்கும் கூட்டத்தின் ரசனையறிந்து தேவை உணர்ந்து சரக்குக் குவியலைத் தரம் பிரித்துக் கொடுக்க இன்னுமொரு கும்பல் தேவைப்படுகிறது. நிலம் வறண்டதால் வாழ்க்கை வறண்டு போனவர்களாய்ப் பஞ்சம் பிழைக்க வந்த பராரிகளின் கும்பல் அது.
குறிப்பிட்ட அந்தக் கூட்டத்துக்கு நேரும் உழைப்புச் சுரண்டலும்,அடிப்படை மனித உரிமை மீறல்களும்....அந்தச் சூழலையும் கடந்ததாய்  மானுட உணர்வுகள் இன்னும் கூட மரத்துப் போகாதபடி அதில் சஞ்சரிப்பவர்களுக்குள்  சம்பவிக்கும் மெல்லிய காதல்,ஆழ்ந்த நட்பு முதலிய உணர்வுகளுமே ‘அங்காடித் தெருவி’ன் அடிநாதங்கள்.

இவை தவிர இன்னும் சில குவியல்களும் கூடப் படத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

மிதமிஞ்சிய பொருள் நுகர்ச்சியால் எஞ்சும் அளவு மீறிய குப்பை கூளங்கள்.
படத்தின் முதல் காட்சிதொடங்கி இறுதி வரை அவற்றின் நெடி அடித்துக் கொண்டே இருக்கிறது. அவற்றையும் கூட ஜீவனத்துக்கு முதலாக்கும் சாமானியஜனங்கள்..!
 குப்பை பொறுக்கியும், குப்பைகளில் அரிதாய்க் கிடைக்கும் ஓரளவு நல்ல துணிகளைப் புதியதாக்கியும், பாழடைந்த கழிப்பறையைக் கட்டணக் கழிப்பறையாக்கியும் எப்படியோ பிழைப்பு நடத்தும் மனிதர்கள் !
(எப்படியும் பிழைத்துக் கொள்ளும் அந்தவகை உத்திகள்தான் கதையின் நாயக நாயகிக்கு நம்பிக்கையளித்து,  வாழ்ந்துவிடமுடியும் என்ற உத்வேகத்தை இறுதியில் அளிப்பவை.
‘’விக்கத் தெரிஞ்சவன் வாழத் தெரிஞ்சவன்’’என்கிறார் வசன நெசவுசெய்த ஜெயமோகன்)

வளரிளம் பருவத்தில் வறுமையால் பெருவணிக அங்காடிகளில் வேலைக்குச் சேர்ந்து...உடலின் சக்தி ஒட்டுமொத்தமாகப் பிழிந்தெடுக்கப்பட்டபின் குப்பையாகவே மாறித் தெருவில் வீழ்ந்து கிடக்கும் வேறு சில மனித மாதிரிகள்!

பல்பொருள் அங்காடிகளின் தினசரி ஓட்ட கோரப் பற்சக்கரங்களுக்கடியே  சிக்கிச் சிதறுண்டு கூழாய்ப் போகும் விற்பனைப் பையன்களுக்கும்,பெண்களுக்கும் வாய்த்திருக்கும்
இரண்டு வதைக்கூடங்களை நெஞ்சைச் சுடும் குரூர யதார்த்தமாக முன் வைத்திருப்பதே இத் திரைப்படத்தின் தனிப்பட்டுச் சொல்லத்தக்க பங்களிப்பு.

ஒரு வதைக்கூடம், அவர்களின் பணியிடம். அது அவர்களைக் கசக்கிப் பிழிவதோடு ...... அவர்கள் சோர்ந்து போகும் வேளைகளில் கங்காணிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் மேற்பார்வைக் கருங்காலிகளால் கொடூரக் கசையடிகளுக்கும் ஆட்படுத்துகிறது.
ஒவ்வொரு தளத்திலும் அதற்கென்றே உள்ள திரையிட்ட தடுப்பு.
அந்தத் திரை மறைவில் ஆண் தொழிலாளர்கள் அறை வாங்குகிறார்கள் ;
விற்பனைப் பெண்களோ பெண் என்ற அடையாளத்தாலேயே மானக் கேடான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆட்படுகிறார்கள்.
( வாடிக்கையாளரின் குறிப்பிட்ட ஒரு ரசனையைத் திருப்திப்படுத்த மேல்மாடியிலுள்ள சரக்கறை வரையில் பல முறை அலுக்காமல் ஓட வேண்டிய நிலையிலுள்ள சிறுவர்களைப் பார்த்த பிறகு ...அந்தக் காட்சியைக் கண்ட பிறகு  எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் இருப்பதில் ஒன்றை எடுத்துக் கொண்டு விரைவாக நடையைக் கட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் மனச்சாட்சி உள்ள எவருக்கும் தோன்றாமலிருக்க முடியாது.)

அடுத்த வதைக்கூடம் , வறட்சியான கிராமங்களிலே இருந்து மந்தைகளாகக் கொண்டு வந்து கொட்டப்பட்டிருக்கும் பணியாட்களின் தங்குமிடம்.
ஹிட்லரின் ‘கான்ஸண்ட்ரேஷன் கேம்ப்’பை நினைவூட்டும் அடைசலும் நெரிசலுமான பொதுக்கூடங்கள்,அடுத்தவரின் எச்சில் தட்டைக்கழுவக்கூட முடியாமல் அவசர கதியில் உணவை அள்ளிவிழுங்கும் சாப்பாட்டுக் கூடங்கள்.

இந்த இரு வதைக் கூடங்களை மட்டுமே சார்ந்து...அவற்றை மட்டுமே  நம்பியதாய் மனித வாழ்வு முடங்கிப் போய்விடக் கூடாது என்ற நம்பிக்கை ஒளியை விதைத்திருப்பதே இப் படத்தின் உச்ச கட்ட உணர்த்தல்.

‘யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழ்கிறது’ என்ற ஜெயமோகனின் வசனம் அங்காடித் தெருவின் முழுமையான சாரத்தையும் உள் பொதிந்திருக்கிறது.

கண் பார்வையற்ற நிலையிலும் தெருவோரமாய்ச் சிறு சிறு பொருட்களை விற்றுப் பிழைக்கும்
முதியவரில் தொடங்கி வாழ்வதற்கான பல வழிகளை ஒரு வகுப்பறைப் பாடம் போலப் போதிக்கும் அந்தத் தெருவே இந்தப் படத்தின் மையப் பாத்திரமுமாகிறது.

அந்தப் புரிதலும் தெளிதலும் இன்றி அடுத்தவரின் அடக்குமுறைக்கு ஆட்பட்டுக் கிடக்கும் அடிமைத் தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சில அவலச் சம்பவங்களுக்குப் பிறகு, சுதந்திரமான சிறு வணிகர்களாகக் கதை மாந்தர்கள் மாற்றம் பெறுகிறார்கள்.

வாழ்வதற்கான உரத்தைச் சாமானியர்கள்  பெறும்போது அவர்கள் வாழ்வில் நிகழும் அவல நிகழ்வுகளை  நாடகத் தன்மையானவை  என்று புறந்தள்ளிவிடமுடியாதபடி இயல்பான யதார்த்த நிகழ்வுகளாகவே அவை  படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

வழக்கமான ஒரு காதல் கதைக்கு வித்தியாசமானதொரு பின்புலம்  என்று சில விமரிசனங்கள் இப் படம் பற்றிக் குறிப்பிட்டாலும்  அதை அவ்வாறு கொள்ள முடியாதென்றே சொல்லத் தோன்றுகிறது.
காதலை...நெகிழ்ச்சியை..நட்பை உணரும் பருவத்தில்  குடும்ப உறவுகளிலிருந்து வெகுதூரம் அந்நியப்பட்டுப் போய் -ஆணும் பெண்ணும் அடுத்தடுத்துப் பணியாற்ற வேண்டிய வேலைச் சூழலில் ஒருவருக்கொருவர் ஆதுரமாய் ஆதரவாய் இருப்பதும் அவர்களிடையே காதல் முகிழ்ப்பதும் கதைக் கருவை ஒட்டியதாகவே அமைந்திருக்கிறது.
சொல்லப் போனால் அனல் காற்று வீசும் அந்தச் சூழலில் காதல் ஒரு மெல்லிய பூங்காற்றாய் அந்த இளைஞர்களைத் தழுவி ஆர அணைத்தபடி ஆறுதல் தருகிறதென்றுகூடக் கூறலாம்.



மொத்தத்தில் இதுவரை சொல்லப்படாத களம் ..... !
முறைப்படுத்தப்படாத தொழிற்களத்தை வரித்துக் கொண்டிருக்கும் பேசப்படாத மனிதர்கள் !
சமூக மனச்சாட்சியை ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுத்துப் பிடரி பிடித்து உலுக்குகிறது அங்காடித் தெரு.

பின் குறிப்பு;
புது தில்லியின் சூழலில் புதிய தமிழ்ப்படங்களை சட்டத்துக்குப் புறம்பான...தரம் குறைவான சி.டிக்களில் மட்டுமே பொதுவாகப் பார்க்க முடியும்.
இம்முறை ‘அங்காடித் தெரு’ வெளிவந்த ஒரு சில வாரங்களிலேயே - சித்திரைத் திருநாளன்று - தில்லித் தமிழ்ச்சங்கம் அதைத் திரையிட்டுவிட்டதால் இத்தனை தரமான ஒரு படத்தைத் தெளிவான முறையில் பார்த்து விமரிசனம் எழுதுவது சாத்தியப்பட்டிருக்கிறது.அதற்காகத் தில்லி தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு கை கூப்பு.

படத்தில் பணியாட்களுக்கு அறை விழும்போதெல்லாம் அரங்கில் சின்னச் சலசலப்பும்
’இது கொஞ்சம் ஓவர்’போன்ற வார்த்தைகளும் காதில் விழுந்து கொண்டே இருந்தன.
கும்பமேளாவுக்காக அப்போது வடக்கில் இருந்த படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் திரு ஜெயமோகனோடு உடன் இது பற்றித் தொலைபேசியில் பகிர்ந்தபோது அவர் சிரித்தபடி ‘’நிஜத்திலே இன்னும் அதிகமாவே அடிப்பாங்க’’என்றார் சுருக்கமாக.

சோகத்தின் கனம் தாங்காமல் அரங்கைவிட்டுப் பாதியில் வெளியேறிய கூட்டமும் உண்டு.
ஜிகினா சுற்றிய சினிமாவையே நாடுபவர்களும்,பிறர் துன்பத்தைத் தாங்க முடியாத பேரருளாளர்களாகப் பாவனை செய்தபடி - உண்மையில் தங்களை வருத்தப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுமே இப்படிப்பட்ட எதிர்வினை ஆற்றுபவர்கள்.
இந்தக் கூட்டத்தில் மேல்மட்ட கீழ்மட்ட பேதங்களோ - வர்க்க வேறுபாடுகளோ இருப்பதில்லை .
இவர்கள் ஒரு தனி வர்க்கம்...அவ்வளவுதான்.
இந்தப் போக்கு தில்லிக்கு மட்டும் உரியதென்றும் சொல்லி விடமுடியாது.
மதுரையில் பல்லாண்டுகள் வசித்தபோதும் இப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்ட அனுபவம் உண்டு.
பம்பாய் படத்தில் அரவிந்தசாமிக்குக் கல்யாணம் முடிந்தவுடனும்,சேது படத்தில் சேதுவுக்கு மன நிலைப் பிறழ்ச்சி ஏற்பட்டவுடனும்...அடுத்த நிமிடமே அரங்கைக் காலி செய்து விடுபவர்கள் இவர்கள்.
இப்படிப்பட்ட பார்வையாளர்களே மிகுதியாக உள்ள தமிழ்ச் சூழலில்
 சுடும் உண்மைகளைத் துணிவாக முன் வைத்துக் குத்துப்பாட்டு..இரட்டை அர்த்தம்...அரிவாள்வீச்சு..தெருச்சண்டை தவிர்த்த நல்லதொரு யதார்த்தப் படமாக ‘அங்காடித் தெரு’வை உருவாக்கித் தமிழ்ப் படங்களின் தரம் ஓரளவேனும் உயர உதவியிருக்கும் படக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

7.4.10

சங்கக் காதலில் தாய்மை(2)

காதல் வயப்படும் நிலையில் பெற்றோர் அதற்கு எதிராகவும்,தடையாகவுமே இருப்பார்கள் என்ற எண்ணமே பெரும்பாலான இளம் உள்ளங்களில் படிந்து போயிருக்கிறது.

(இன்றைய திரைப்படங்கள் சிலவற்றில் இதற்கு மாறான ஆரோக்கியமான சிந்தனைப்போக்கு முன்வைக்கப்பட்டு வருவதை வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் எனலாம்.)

சங்ககாலத் தலைவியும் இந்தப் போக்கிற்கு விலக்கானவள் அல்ல.


தாய்மைக்கே உரிய கரிசனத்தால், அக்கறையால் தலைவியை அவள் கண்காணிப்பதும் கூட அவளுக்குத் தவறாகவே படுகிறது.


இந்தத் தாய், பிறக்கும்போதே வயதில் மூத்தவளாகப் பிறந்து விட்டாளோ...அவளுக்கு இளமைப் பருவம் என்ற ஒன்றே இல்லையோ....காதல் போன்ற மெல்லிய உணர்வுகளை அவள் அறிந்ததே இல்லையோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிடுகிறது அவளது நெஞ்சம்.


''இளையளாய் மூத்திலள் கொல்லோ அன்னை''என அவளின் உள்ளத்துக்குள் ஓடும் எண்ணத்தின் தடத்தைத் தாயும் கண்டுபிடித்துவிடுகிறாள்.


தலைவியின் நினைப்புக்கு முற்றிலும் வேறாகத் தான் இருப்பதை அவளுக்கு நிறுவிக் காட்டப் பல முயற்சிகள் செய்தபடி அவள் தவியாய்த் தவிப்பதைப் பல சங்கப் பாடல்கள் மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கின்றன.

சான்றாக இரண்டு சங்கப் பாடல்கள் இங்கே....


காதலித்த தலைவனோடு உடன்போக்காகச் (வீட்டுக்குத் தெரியாமல்)சென்றுவிட்ட மகள் திரும்பி வந்து கொண்டிருக்கும் நற்செய்தியை - அதற்கான  நல்ல சகுனத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காக்கைக்கு விருந்து வைக்கும் 
 சங்கத் தாயைக் காட்டுகிறது ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று.

‘’அழகான கறுத்த இறகுகள் கொண்ட சிறு கருங் காக்கையே ! உனக்கு நான் நெய் வழிந்தோடும் புதிய இறைச்சிச் சோற்றைப் பொன்னால் செய்யப்பட்ட தட்டில் படைக்கிறேன்....அதை உன் கூட்டத்தோடு வந்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் போ!அதன் பிறகாவது...என் மகள் சீக்கிரம் வந்து விடுவாள் என்பதற்கு அடையாளமாகச் சிறிது நேரம்குரலெழுப்பிக் கரைந்து விட்டுப்போ !’’என்று லஞ்சம் கொடுப்பது போல
 அதைக் கூவி அழைக்கிறாள் அவள்.

‘’மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
  அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
  பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
  பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
  வெஞ்சின விறல் வேல் காளையோடு
  அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’’

தாய்மைப் பரிவிலும்,அன்பின் குழைவிலும் இந்தத் தாயையும் கூட விஞ்சுகிறாள் கபிலர் காட்டும் அகநானூற்றுத் தாய்.
மகளின் காதல் உறவை,அவ்வப்போது
அக்கம்பக்கத்தாரிடமிருந்து ஜாடைமாடையாகத் தெரிந்து கொண்டிருக்கிறாள் இவள்.

ஆனாலும் இப்படி ஒரு செயலுக்குத் தன் மகள் துணிய மாட்டாள் என்று தான் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையால் அதைப் பற்றி அவளிடம் விசாரிப்பது கூட நாகரிகமற்ற செயலாக அவளுக்குப் படுகிறது.

மேலும்,அவ்வாறு கூறுவது தன் மகளை வருத்தப்படுத்திவிடுமோ என்று எண்ணியும் அதைச் செய்யாமல் தவிர்த்துவிடுகிறாள் அவள்.

மகளைப் பற்றி இந்த அளவுக்குக் கரிசனத்தோடும்,புரிதலோடும் தாய் இருக்க...மகளின் நினைவோ வேறொரு அலைவரிசையில் சஞ்சரிக்கிறது.தனது காதல் உறவு தாய்க்குத் தெரியவந்தால் அவள் ஒத்துக் கொள்ள மாட்டாளோ என்று நினைத்துக் கொண்டுவிடுகிறாள் அவள்.

அதனாலாயே காதலனோடு இணைந்து ஊரைத் தாண்டிச் செல்வதற்குத் துணிந்து விடுகிறாள் அவள்.
உண்மை வெளிப்பட்டதும் தாயின் உள்ளம் புழுவாய்த் துடிக்கிறது.

மகள் பிரிந்து போன துன்பத்தைக்காட்டிலும் அவள் தன்னைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டாளே என்ற எண்ணமே அவளது நெஞ்சை வாள் கொண்டு அறுக்கிறது.

பெற்ற மகளுக்கோ அவளது காதலுக்கோ தான் எதிரியில்லை என்று நிரூபிப்பதற்காகவே அவள் ஒரு செயலைச் செய்ய முற்படுகிறாள்.

தன் காதலனோடு அந்தப் பெண் உடனாகச் செல்லும் காட்டு வழியில் ஆங்காங்கே சில வீடுகள் இருக்கும்.அங்கே உள்ளவர்கள் வழிப் பயணத்தில் களைத்துப்போன காதலர்களை வரவேற்று விருந்தோம்பல் செய்வது வழக்கம்.அப்படிப்பட்ட ஒரு விருந்துபசாரத்தைத் தன் மகளுக்கும் அவள் துணைவனுக்கும் தானே அளிக்க வேண்டுமென்று விரும்புகிறது அந்தத் தாய் உள்ளம்.
கல்லும்,முள்ளும் நிறைந்த அந்தக் காட்டு வழியில் காதலர்களுக்கு முன்பாகத் தான் சென்றுவிட வேண்டுமென்றும் ,அங்கே வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் மனையிலுள்ள விருந்தோம்பும் பெண்ணாகஇருந்தபடி அவர்களுக்குத் தன் கையால் முதல் விருந்து படைத்துப் பரிமாற வேண்டுமென்று விழைகிறது அந்தத் தாயின் உள்ளம்.



மகளின் காதலுக்குத் தான் எதிரியில்லை எனக் காட்டிக் கொள்ள இதைக்காட்டிலும் வேறு எந்த வழியும் அவளுக்குச் சிறந்ததாகத் தோன்றவில்லை.

அவளது விருப்பம் நிறைவேறுவதென்பது மிகவும் கடினமானதுதான் என்றபோதும் தன் மனதை மகளுக்குப் பிளந்து காட்ட அவள் படும் பரிதவிப்பும்,அன்பின் நெகிழ்வும் அவளது உணர்வை உன்னதப்படுத்திவிடுகின்றன.
மகளைப் பிரிந்த தாயின் மனத் தவிப்பை இவ்வாறு இதயத்தைத் தொடுமளவுக்கு எடுத்துக்காட்டும் நுட்பமான பாடல்கள் தமிழைத் தவிர வேறு எந்த உலக மொழியிலும் இல்லையென உறுதியாகக் கூறிவிட முடியும்.
கபிலரின் அந்தப்  பாடல்;

''நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் பேசாமல் தாய் பார்த்துக் கொள்ளட்டும் என்று சும்மா இருக்காமல்,வம்பு பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் பெண்கள் பல நாட்களாகவே என்னிடம் வந்து'உன் மகள் இப்படி இருக்கிறாள் அப்படி இருக்கிறாள்'என்று பழிசொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் உன்னிடம் பகிர்ந்து கொண்டால் கூட நீ கூச்சப்படுவாய் என்பதால் உன்னிடம் சொல்லாமல் நாசூக்காக என் மனதுக்குள்ளேயே அதை ஒளித்து வைத்திருந்தேன்.


ஆனால் இப்படிப்பட்ட இந்த அன்னைக்குத் தெரிய வந்தால் நம் காதலுக்குத் தடை போட்டுவிடுவாளோ என்று பயந்து போன நீ ,மான்களைக் கூட வழி தடுமாற வைக்கும் மலைக் காட்டுப் பாதையில் உன் காதலனோடு சேர்ந்து எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உடன்போக்காகப் போய்விட்டிருக்கிறாய்.

நீ பயப்படுவது போன்ற தாய் நான் இல்லை என்பதை உனக்கு நிரூபித்துக் காட்டுவதற்காகவே நான் அந்த மலைப் பாதையை உனக்கு முன்பாகவே அடைந்து விட வேண்டும்....அங்கே உள்ள சில சின்னக் குடிசைகளில் களைத்து வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்காகவே பல மூத்த பெண்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்;அவர்களில் ஒருத்தியாக நானும் மாறிப் போய் நீயும்,உன் காதலனும் அங்கு வந்து சேரும்போது உங்களுக்கு என் கையால் சமைத்த உணவை அளித்து விருந்து வைக்க வேண்டும்.அதுவே என் ஆசை ''என்கிறாள் அந்தத் தாய்.

மகளின் மனம் அப்போதாவது தன்னை விளங்கிக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்போடு கூடிய ஏக்கத்தைப் பாசத்தின் மென்மையான இழையால் நெய்தபடி சித்திரமாக்குகிறது கபிலரின் குறிஞ்சித் திணை சார்ந்த இந்த அகநானூற்றுப் பாடல்.


''உவக்குநளாயினும் உடலுநளாயினும்

யாயறிந்து உணர்க என்னார் தீவாய்

அலர்வினை மேவல் அம்பற்பெண்டிர்

இன்னள் இனையள் நின் மகள் எனப் பன்னாள்

எனக்கு வந்துரைப்பவும் தனக்குரைப்பறியேன்

நாணுவள் இவள் என நனிகரந்துறையும்

யான் இவ்வறுமனை ஒழியத் தானே

அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை

எனக்கு எளிதாகல் இல்லெனக் கழற்கால்

மின் ஒளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்

பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான்

அன்னேனன்மை நன்வாயாக

மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி

எய்திடை உறாஅதெய்தி முன்னர்ப்

புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர்ச்

செல்விருந்து ஆற்றித் துச்சில் இருத்த

நுனை குழைத்து அலமரும் நொச்சி

மனைகெழுபெண்டு யான் ஆகுக மன்னே''

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....