துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

7.4.10

சங்கக் காதலில் தாய்மை(2)

காதல் வயப்படும் நிலையில் பெற்றோர் அதற்கு எதிராகவும்,தடையாகவுமே இருப்பார்கள் என்ற எண்ணமே பெரும்பாலான இளம் உள்ளங்களில் படிந்து போயிருக்கிறது.

(இன்றைய திரைப்படங்கள் சிலவற்றில் இதற்கு மாறான ஆரோக்கியமான சிந்தனைப்போக்கு முன்வைக்கப்பட்டு வருவதை வரவேற்கத்தக்க ஒரு மாற்றம் எனலாம்.)

சங்ககாலத் தலைவியும் இந்தப் போக்கிற்கு விலக்கானவள் அல்ல.


தாய்மைக்கே உரிய கரிசனத்தால், அக்கறையால் தலைவியை அவள் கண்காணிப்பதும் கூட அவளுக்குத் தவறாகவே படுகிறது.


இந்தத் தாய், பிறக்கும்போதே வயதில் மூத்தவளாகப் பிறந்து விட்டாளோ...அவளுக்கு இளமைப் பருவம் என்ற ஒன்றே இல்லையோ....காதல் போன்ற மெல்லிய உணர்வுகளை அவள் அறிந்ததே இல்லையோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கிவிடுகிறது அவளது நெஞ்சம்.


''இளையளாய் மூத்திலள் கொல்லோ அன்னை''என அவளின் உள்ளத்துக்குள் ஓடும் எண்ணத்தின் தடத்தைத் தாயும் கண்டுபிடித்துவிடுகிறாள்.


தலைவியின் நினைப்புக்கு முற்றிலும் வேறாகத் தான் இருப்பதை அவளுக்கு நிறுவிக் காட்டப் பல முயற்சிகள் செய்தபடி அவள் தவியாய்த் தவிப்பதைப் பல சங்கப் பாடல்கள் மிக நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கின்றன.

சான்றாக இரண்டு சங்கப் பாடல்கள் இங்கே....


காதலித்த தலைவனோடு உடன்போக்காகச் (வீட்டுக்குத் தெரியாமல்)சென்றுவிட்ட மகள் திரும்பி வந்து கொண்டிருக்கும் நற்செய்தியை - அதற்கான  நல்ல சகுனத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே காக்கைக்கு விருந்து வைக்கும் 
 சங்கத் தாயைக் காட்டுகிறது ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று.

‘’அழகான கறுத்த இறகுகள் கொண்ட சிறு கருங் காக்கையே ! உனக்கு நான் நெய் வழிந்தோடும் புதிய இறைச்சிச் சோற்றைப் பொன்னால் செய்யப்பட்ட தட்டில் படைக்கிறேன்....அதை உன் கூட்டத்தோடு வந்து வயிறாரச் சாப்பிட்டுவிட்டுப் போ!அதன் பிறகாவது...என் மகள் சீக்கிரம் வந்து விடுவாள் என்பதற்கு அடையாளமாகச் சிறிது நேரம்குரலெழுப்பிக் கரைந்து விட்டுப்போ !’’என்று லஞ்சம் கொடுப்பது போல
 அதைக் கூவி அழைக்கிறாள் அவள்.

‘’மறுவில் தூவிச் சிறு கருங் காக்கை
  அன்புடை மரபின் நின் கிளையோடு ஆரப்
  பச்சூன் பெய்த பைந்நிண வல்சி
  பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
  வெஞ்சின விறல் வேல் காளையோடு
  அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’’

தாய்மைப் பரிவிலும்,அன்பின் குழைவிலும் இந்தத் தாயையும் கூட விஞ்சுகிறாள் கபிலர் காட்டும் அகநானூற்றுத் தாய்.
மகளின் காதல் உறவை,அவ்வப்போது
அக்கம்பக்கத்தாரிடமிருந்து ஜாடைமாடையாகத் தெரிந்து கொண்டிருக்கிறாள் இவள்.

ஆனாலும் இப்படி ஒரு செயலுக்குத் தன் மகள் துணிய மாட்டாள் என்று தான் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையால் அதைப் பற்றி அவளிடம் விசாரிப்பது கூட நாகரிகமற்ற செயலாக அவளுக்குப் படுகிறது.

மேலும்,அவ்வாறு கூறுவது தன் மகளை வருத்தப்படுத்திவிடுமோ என்று எண்ணியும் அதைச் செய்யாமல் தவிர்த்துவிடுகிறாள் அவள்.

மகளைப் பற்றி இந்த அளவுக்குக் கரிசனத்தோடும்,புரிதலோடும் தாய் இருக்க...மகளின் நினைவோ வேறொரு அலைவரிசையில் சஞ்சரிக்கிறது.தனது காதல் உறவு தாய்க்குத் தெரியவந்தால் அவள் ஒத்துக் கொள்ள மாட்டாளோ என்று நினைத்துக் கொண்டுவிடுகிறாள் அவள்.

அதனாலாயே காதலனோடு இணைந்து ஊரைத் தாண்டிச் செல்வதற்குத் துணிந்து விடுகிறாள் அவள்.
உண்மை வெளிப்பட்டதும் தாயின் உள்ளம் புழுவாய்த் துடிக்கிறது.

மகள் பிரிந்து போன துன்பத்தைக்காட்டிலும் அவள் தன்னைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டாளே என்ற எண்ணமே அவளது நெஞ்சை வாள் கொண்டு அறுக்கிறது.

பெற்ற மகளுக்கோ அவளது காதலுக்கோ தான் எதிரியில்லை என்று நிரூபிப்பதற்காகவே அவள் ஒரு செயலைச் செய்ய முற்படுகிறாள்.

தன் காதலனோடு அந்தப் பெண் உடனாகச் செல்லும் காட்டு வழியில் ஆங்காங்கே சில வீடுகள் இருக்கும்.அங்கே உள்ளவர்கள் வழிப் பயணத்தில் களைத்துப்போன காதலர்களை வரவேற்று விருந்தோம்பல் செய்வது வழக்கம்.அப்படிப்பட்ட ஒரு விருந்துபசாரத்தைத் தன் மகளுக்கும் அவள் துணைவனுக்கும் தானே அளிக்க வேண்டுமென்று விரும்புகிறது அந்தத் தாய் உள்ளம்.
கல்லும்,முள்ளும் நிறைந்த அந்தக் காட்டு வழியில் காதலர்களுக்கு முன்பாகத் தான் சென்றுவிட வேண்டுமென்றும் ,அங்கே வழிப்போக்கர்கள் ஓய்வெடுக்கும் மனையிலுள்ள விருந்தோம்பும் பெண்ணாகஇருந்தபடி அவர்களுக்குத் தன் கையால் முதல் விருந்து படைத்துப் பரிமாற வேண்டுமென்று விழைகிறது அந்தத் தாயின் உள்ளம்.மகளின் காதலுக்குத் தான் எதிரியில்லை எனக் காட்டிக் கொள்ள இதைக்காட்டிலும் வேறு எந்த வழியும் அவளுக்குச் சிறந்ததாகத் தோன்றவில்லை.

அவளது விருப்பம் நிறைவேறுவதென்பது மிகவும் கடினமானதுதான் என்றபோதும் தன் மனதை மகளுக்குப் பிளந்து காட்ட அவள் படும் பரிதவிப்பும்,அன்பின் நெகிழ்வும் அவளது உணர்வை உன்னதப்படுத்திவிடுகின்றன.
மகளைப் பிரிந்த தாயின் மனத் தவிப்பை இவ்வாறு இதயத்தைத் தொடுமளவுக்கு எடுத்துக்காட்டும் நுட்பமான பாடல்கள் தமிழைத் தவிர வேறு எந்த உலக மொழியிலும் இல்லையென உறுதியாகக் கூறிவிட முடியும்.
கபிலரின் அந்தப்  பாடல்;

''நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும் பேசாமல் தாய் பார்த்துக் கொள்ளட்டும் என்று சும்மா இருக்காமல்,வம்பு பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் பெண்கள் பல நாட்களாகவே என்னிடம் வந்து'உன் மகள் இப்படி இருக்கிறாள் அப்படி இருக்கிறாள்'என்று பழிசொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அதையெல்லாம் உன்னிடம் பகிர்ந்து கொண்டால் கூட நீ கூச்சப்படுவாய் என்பதால் உன்னிடம் சொல்லாமல் நாசூக்காக என் மனதுக்குள்ளேயே அதை ஒளித்து வைத்திருந்தேன்.


ஆனால் இப்படிப்பட்ட இந்த அன்னைக்குத் தெரிய வந்தால் நம் காதலுக்குத் தடை போட்டுவிடுவாளோ என்று பயந்து போன நீ ,மான்களைக் கூட வழி தடுமாற வைக்கும் மலைக் காட்டுப் பாதையில் உன் காதலனோடு சேர்ந்து எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உடன்போக்காகப் போய்விட்டிருக்கிறாய்.

நீ பயப்படுவது போன்ற தாய் நான் இல்லை என்பதை உனக்கு நிரூபித்துக் காட்டுவதற்காகவே நான் அந்த மலைப் பாதையை உனக்கு முன்பாகவே அடைந்து விட வேண்டும்....அங்கே உள்ள சில சின்னக் குடிசைகளில் களைத்து வரும் வழிப்போக்கர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்காகவே பல மூத்த பெண்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்;அவர்களில் ஒருத்தியாக நானும் மாறிப் போய் நீயும்,உன் காதலனும் அங்கு வந்து சேரும்போது உங்களுக்கு என் கையால் சமைத்த உணவை அளித்து விருந்து வைக்க வேண்டும்.அதுவே என் ஆசை ''என்கிறாள் அந்தத் தாய்.

மகளின் மனம் அப்போதாவது தன்னை விளங்கிக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்போடு கூடிய ஏக்கத்தைப் பாசத்தின் மென்மையான இழையால் நெய்தபடி சித்திரமாக்குகிறது கபிலரின் குறிஞ்சித் திணை சார்ந்த இந்த அகநானூற்றுப் பாடல்.


''உவக்குநளாயினும் உடலுநளாயினும்

யாயறிந்து உணர்க என்னார் தீவாய்

அலர்வினை மேவல் அம்பற்பெண்டிர்

இன்னள் இனையள் நின் மகள் எனப் பன்னாள்

எனக்கு வந்துரைப்பவும் தனக்குரைப்பறியேன்

நாணுவள் இவள் என நனிகரந்துறையும்

யான் இவ்வறுமனை ஒழியத் தானே

அன்னை அறியின் இவணுறை வாழ்க்கை

எனக்கு எளிதாகல் இல்லெனக் கழற்கால்

மின் ஒளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப்

பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு யான்

அன்னேனன்மை நன்வாயாக

மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி

எய்திடை உறாஅதெய்தி முன்னர்ப்

புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர்ச்

செல்விருந்து ஆற்றித் துச்சில் இருத்த

நுனை குழைத்து அலமரும் நொச்சி

மனைகெழுபெண்டு யான் ஆகுக மன்னே''

1 கருத்து :

விக்னேஷ்வரி சொன்னது…

ச்சே, அழகு. தாய்மை எல்லாக் காலத்திலேயும் ஒரே மாதிரியாய் இருந்துள்ளது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....