துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.1.17

’த்வன்யாலோகா’வில் சில நாட்கள்..



கிட்டத்தட்ட என் இருபத்தைந்து ஆண்டுக்கனவு ’’த்வன்யாலோகா’!.

ஏதோ நாளிதழ்க்குறிப்பாகவோ வார இதழ்ச்செய்தி ஒன்றாகவோ ’’த்வன்யாலோகா’ குறித்தும் அங்கேயே தங்கியிருந்து தங்கள் படைப்புக்களை உருவாக்க எழுத்தாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஓர் இடம் அது  என்றும் அப்போது படித்திருந்தேன். அன்று தொடங்கி என்றாவது ஒரு நாள் அங்கே செல்ல வேண்டும் என என்னுள் கனன்று கொண்டிருந்த ஆசை நனவானது, டிச 2016 இன் இறுதியில்!
அங்கே நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட ஆங்கிலப்பேராசிரியையான தோழி ஒருவர், அங்கிருந்த கல்வியாளர்களுக்கும் எழுத்தாளார்களுக்கும் வாசகர்களுக்கும் என் ‘யாதுமாகி’ நாவல் பற்றி  அறிமுகம் செய்ததோடு அங்கே வருவதில் நான் கொண்டிருக்கும் விருப்பத்தையும் கூறி நான் தங்குவதற்கான அடித்தளம் அமைத்துத்தர, நான்கு நாட்கள் ’த்வன்யாலோகா’வில் தங்கியிருந்து என் அடுத்த படைப்புக்கான சிந்தனையுடன் மட்டுமே சஞ்சரிக்கும் சூழல் எனக்கு வாய்த்தது.


மைஸூரிலிருந்து ஆறு கி மீ தொலைவில் இனிமையான இயற்கைச் சூழலுடன் மிகப்பெரும் பரப்பளவில் அமைந்திருக்கும் ’த்வன்யாலோகா’, இந்தியக்கலைகள்,தத்துவம், இலக்கியம்,பண்பாடு ஆகியவை சார்ந்த கல்வி, மற்றும் ஆய்வுகளுக்கானது..[Centre For Indian Studies].அவை தொடர்பான கருத்தரங்குகளும்,பயில் அரங்குகளும் நிகழும் இந்த இடம், எழுத்தாளர்களின் தனிமைக்கும் சிந்தனைக்கும் ஏற்ற ஏகாந்தமான ஒரு மண். தனித்திருந்து படைப்புக்களை உருவாக்க எண்ணும் எழுத்தாளர்களோடு அயல்நாட்டவரும் கூட இங்குள்ள விருந்தினர் விடுதியில் தங்கி இந்தியச்சிந்தனைகள் பற்றி அறிந்து கொள்ள இடமளிக்கும்  த்வன்யாலோகா, மைஸூரிலுள்ள மகாராஜா கல்லூரியில் ஆங்கிலப்பேராசிரியராகப்பணிபுரிந்த பேராசிரியர் பத்மபூஷண் சி டி நரசிம்மையா அவர்கள் கண்ட கனவில் உருவானது.

இதன் நோக்கங்களை 
The centre has been established for promoting the study, researchand development of Indian Culture, Fine Arts, Literature, Performing andTraditional Arts, Ayurveda, Yoga, Dance and Music in India as well as in the overseas countries, which are influenced, by such Arts and Culture.
என்று குறிப்பிடுகிறது ’த்வன்யலோகா’வின் அதிகாரபூர்வ தளமான http://www.dcismysore.org/home

 ’த்வன்யாலோகா’ என்னும் பெயர் கி பி 9ஆம் நூற்றாண்டில் ஆனந்தவர்த்தனா என்னும் அறிஞர் உருவாக்கிய தலைசிறந்த ஆராய்ச்சி நூல் ஒன்றின் தலைப்பிலிருந்து உருப்பெற்ற ஒன்று. பொதுப்படையான பொருளில் ’த்வனி’ என்பது ஒலியைக்குறிக்கும் சொல்லாக இருந்தபோதும் அதன் உட் பொருள் பற்றி ஆராயும் ஆனந்த குமாரசுவாமி அவர்கள், ஆழ்ந்த மௌனத்தில் திளைத்திருக்கும் மனதின் உள் ஒலிகளை ஒருவரால் உள்வாங்கிக்கொள்ளவும் , காணவும், கேட்கவும் முடிவதே ’த்வனி’  என்கிறார். கலை இலக்கியங்களின்  மீதான தோய்வும் ரசனையும் அப்படிப்பட்ட ஒரு  த்வனியைக்கண்டடைவதே  என்பதே  ஆனந்தவர்த்தனா முன் வைப்பதும் கூட...

இந்தியக் கலைகளை இலக்கியத்தை தத்துவத்தை ஆழ்மன அமைதி கொண்டு உணர வைக்கும்  நோக்கமே மைஸூர்  ’’த்வன்யாலோகா’வின் உருவாக்கத்துக்கும் அடிப்படை. அமைதி ஒன்று மட்டுமே ஆட்சி செய்யும் இடமாக இது இருப்பதும் அதனாலேதான்..!  சந்தை இரைச்சலில் காணாமல் போய்த் தொலைந்து விடும் கலைகளை இலக்கியத்தை மீட்டெடுக்கும் சக்தி கொண்டது. மௌனத்திலே மூழ்கியிருக்கும் மனம் ஒன்று மட்டுமே! உள்ளதிர்வுகளின் ஒலிகளை உணரும் உலகமே த்வனியால் ஆன உலகம். அதுவே ‘த்வன்யாலோகா.’..!

எழுத்தாளரும் திறனாய்வாளருமான திரு நரசிம்மையா உருவாக்கிய இந்த அமைப்பை அவரது புதல்வர் சி என் ஸ்ரீநாத் தலைமையிலான வல்லுநர் குழு தற்போது வழி நடத்தி வருகிறது. மைஸூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப்பேராசிரியராகப் பணியாற்றிய திரு சி.என். ஸ்ரீநாத் தந்தையைப் போலவே சிறந்த அறிஞர், கவிஞர், திறனாய்வாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இவ்விருவரின் சேகரிப்பில் உருவான அரிய புத்தகங்கள் அடங்கிய பெரிய நூலகம்,கூட்ட அரங்குகள்,திறந்த வெளிக்கலையரங்கம்,விருந்தினர் விடுதி இவை அனைத்தையும் உள்ளடக்கியதே ’’த்வன்யாலோகா’.


நூலகமும்   சி டி நரசிம்மையாவின் மார்பளவுச் சிலையும்



மரங்களின் செறிவு,பறவைகளின் கூவல் இவற்றோடு ஒன்றிணைந்து ,இயற்கையை மட்டுமே நுகர்ந்தபடி,







விருந்தினர் விடுதி



ஆரவார இரைச்சல்கள்,அலுப்பூட்டும் பதட்டங்கள் இவற்றிலிலிருந்து விட்டுவிடுதலையாகிப் படைப்பாளிகள் தங்கள்  கனவுகளோடு மட்டுமே சஞ்சாரம் செய்தபடி அவற்றை வளர்த்தெடுக்கவும்...சின்னக்கவலைகள் தின்னத்தகாதபடி பொழுதுகள் ஆக்கபூர்வமாகக் கழியவும் வழி செய்யும் ’’த்வன்யாலோகா’வில் முழுவதுமாய் நான்கு  நாட்கள் செலவிட்டாலும் மீண்டும் மீண்டும் போகத் தோன்றுகிறது அந்த ஏகாந்தத்தை நாடி...! அங்கே ஆரம்பப்புள்ளி வைத்துவிட்டு வந்திருக்கும் என் புதிய ஆக்கத்தைத் தொடரவும்..முடிக்கவும் கூடத்தான்!



25.1.17

'வாழ்க்கையை எழுதுதல்'-உரை




மானுட வாழ்க்கை,  வாழ்க்கைச் சரித்திரங்களாகவும் தன் வரலாறுகளாகவும் நாட்குறிப்புக்கள் மற்றும் நினைவுக்குறிப்புக்களாகவும் தன் வரலாற்று நாவலாகவும்  பல வடிவங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அவற்றைத் தொகுத்து நோக்கும் முயற்சியாக சென்னையிலுள்ள எம் ஜி ஆர் - ஜானகி கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் ’வாழ்க்கையை எழுதுதல்’[ LIFE WRITING] என்னும் பொருளில் தேசியக் கருத்தரங்கு ஒன்று ஜன 6ஆம் நாளன்று  நிகழ்ந்தது.

என் ‘யாதுமாகி’ நாவல், வாழ்க்கை வரலாறு ஒன்றைப்  புனைவுப்பாணியில்  தருவது என்பதால்,அந்தக் கருத்தரங்கில் அது சார்ந்த என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள  நானும் ஒரு சிறப்புச் சொற்பொழிவாளராக அழைக்கப்பட்டிருந்தேன்.



தமிழில் எழுதப்பட்டிருக்கும்  வாழ்க்கை வரலாறுகள் தன் வரலாறுகள் தன் வரலாற்று நாவல்கள் ஆகியவை பற்றிக் குறிப்பிட்ட பிறகு ஒரு ஆளுமையின் தனிப்பட்ட வாழ்வை ஒரு  புனைவிலக்கியமாக மாற்றுவதில் அதை ஒரு  நாவல் வடிவத்துக்குக் கொண்டு வருவதில் நான் எதிர் கொண்ட சிக்கல்கள்,மனத் தடைகள், புனைவுக்காகத் தேர்ந்து கொண்ட உத்திகள் ஆகியவை குறித்து நான் உரையாற்றினேன்.








கருத்தரங்கின் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட  மாணவியர், பேராசிரியர்கள், பிற அழைப்பாளர்கள்  ஆகியோர் ஆங்கிலக்கருத்தரங்கு ஒன்றில் நான் ஆற்றிய தமிழ்ச்சொற்பொழிவுக்குத் தந்த வரவேற்பும் அன்பான ஆர்வம் கலந்த எதிர்வினைகளும் எனக்கு மகிழ்ச்சியூட்டியதோடு,. உரை முடிந்த பிறகு தனிப்பட்ட முறையில்  பல மாணவியர்என்னிடம்  வினாக்களை எழுப்பியதும், ஆலோசனைகள் பெற்றதும்...என்னிடம் கையெழுத்தும் வாழ்த்தும் வேண்டியதும் வளரும் தலைமுறை மீதான நம்பிக்கையையும் என்னுள் தழைக்கச்செய்தன. எளிமையும் இனிமையும் நிறைந்தவர்களாய் அன்று என்னுடன் பழகிய கல்லூரிச் செயலர், முதல்வர் , துறைத் தலைவர், சக பேராசிரியர்கள் ஆகியோர் காட்டிய  அன்பு என்றென்றும் மறக்க முடியாத சித்திரமாய் என்னுள் பதிந்திருக்கும்.




மீண்டும் ஒரு கல்லூரிச் சூழலும் இளம் மாணவியரின் அண்மையும் என் பேராசிரியப்பணிநாட்களை மீட்டெடுக்க அதில் சுகமாய் உலவி விட்டு வந்தது போன்ற பிரமை..!!

23.1.17

சப்பாத்திக்கட்டையும் சகிப்புத் தன்மையும்-ஒருசெய்தி,சிலகேள்விகள்

[கமலா கல்பனா கனிஷ்கா உரையாடலாக]இனம் விளங்காத சில அதிர்வுகளையும் ஓர் இருப்புக்கொள்ளாமையையையும் என்னுள்கிளர்த்தியிருக்கிறது...

 “உத்தரகாண்டில் ஹால்ட்வனி மருத்துவமனையில் ஒரு பெண் வயிற்றுவலியுடன் சேர்க்கப்பட்டார். எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை. குழந்தை பிறக்கவில்லை என்ற கோபத்தில் சப்பாத்தி தேய்க்கும் கட்டையைப் பிறப்புறுப்பில் சொருகிவிட்டார் தன் கணவர் என்று மருத்துவரிடம் அந்தப் பெண் சொல்லியிருக்காங்க. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, 40 செ.மீ. நீளமுள்ள சப்பாத்திக் கட்டையை எடுத்திருக்காங்க. ‘இப்படியொரு கொடூரத்தை நாங்க கேள்விப்பட்டதே இல்லை. அந்தப் பெண்ணின் உள் உறுப்புகள் ரொம்ப மோசமா பாதிக்கப்பட்டிருக்கு. காவல்துறைக்குத் தகவல் சொல்லிட்டோம். இந்தப் பெண்ணின் கணவர் மாயமாகிவிட்டார்’னு தலைமை மருத்துவர் சொல்லிருக்கார்”




செய்தி படிக்க நேர்ந்ததால் ஏற்பட்ட வருத்தத்தையும் மீறியதாய்ச் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன




‘90களில் நான் பேராசிரியப்பணியில் இருந்த காலகட்டத்தில் பயிற்சிப்பணி மனை ஒன்றில் கலந்து கொள்வதற்காக பங்களூரிலுள்ள ஒரு கல்லூரியில் ஒரு வாரம் தங்கியிருந்தேன்.வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண் பேராசிரியைகளும் பங்கேற்ற அந்தப் பயிற்சிக்காலத்தில் இரவு நேரங்களில் உணவு முடிந்து உறங்கச்செல்லும் முன் அவரவர்  சொந்த வாழ்க்கை அனுபவங்களை மனம் கலந்து பேசிப்பகிர்ந்து கொள்வது வழக்கம். மும்பை கல்லூரி ஒன்றில் சமூகவியல் பேராசிரியையாக இருந்த...டாக்டர் பட்டம் பெற்ற ஒரு தோழி அப்போது எங்களோடு பகிர்ந்து கொண்ட செய்தி இன்னும் முள் உறுத்தலாக என் நெஞ்சுக்குள். வசதியான குடும்பத்தைச்சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர் அந்தக்கால கட்டத்திலேயே ஐந்திலக்க சம்பளம் பெறும் உயர் நிர்வாகப்பொறுப்பு ஒன்றில் இருந்தார். இரண்டு மகள்கள். குடும்பத்தோடு கூட வசித்து வந்த மாமியாருக்குப் பேரன் வேண்டுமென்ற தீராத ஆசை.அதை நிறைவேற்றவே மீண்டும் ஒரு முறை கருத்தாங்கிய அந்தத் தோழிக்கு அப்போதும் பெண் குழந்தையே பிறக்க , மாமியார் எரிச்சல் அடையத் தொடங்கியதோடு வீட்டிலிருக்கும் பிஞ்சுப்பெண்குழந்தைகளிடமும் அந்த வெறுப்பு விஷத்தைக் கக்கத் தொடங்கினார். அதோடு விடாமல் வீட்டுக்கு ஒரு ஆண் வாரிசு கட்டாயம் வேண்டும் என்ற வற்புறுத்தலும் பல வழிகளில் விடாமல் தொடர்ந்தது. அதைத் தட்ட முடியாத அந்தத் தோழி பல முறை கருச்சுமக்க ஆயத்தமானார்; ஆனாலும்  மீண்டும் பெண்குழந்தைகளே பிறக்க நேர்ந்தால் வீட்டாரின் துன்புறுத்தலுக்கும் வசைக்கும் அவை ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் அதைத் தவிர்ப்பதற்காகத் தன்னையே சுய வதை ஒன்றுக்கு ஆளாக்கிக்கொண்டார் அவர். சட்ட பூர்வமாகத் தவறுதான் என்றாலும் அதைப்பொருட்படுத்தாமல் ஸ்கேன் நிலையம் ஒன்றை நாடிச்சென்று , தன்னுள்  வளரும் கருவின் பாலினம் பெண் என்பது தெரிய வந்தால் வீட்டுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்து கொண்டு அதை அழித்துக்கொள்வார் அவர். கருக்கலைப்பும் கருச்சுமப்பும் இவ்வாறு தொடர்ந்து கொண்டே போனதில் அவரது உடல்நிலை மிக மோசமான சீர்குலைவுக்கு ஆளானதே  இறுதியில் எஞ்சியது..

நான் அறிந்த மற்றுமொரு உண்மைச் சம்பவம் மிகச்சிறந்த அறிவாளி என்ற  அங்கீகாரத்தையும் அவரது மாணவர்களிடம் பெருமதிப்பையும் பெற்றிருந்த  ஆண் பேராசிரியர் ஒருவரைப்பற்றியது. அவரது  முதற்குழந்தை, மூளை வளர்ச்சி குன்றியதாகப்  பிறந்து விட ,அதற்கான முழுமையான காரணகர்த்தா தன் மனைவி மட்டுமே என்று முடிவு கட்டிக்கொண்ட அந்தப்பெரிய மனிதர், வாழ்நாள் முழுவதும் தன் மனைவியை வீட்டுக்குள்ளேயே ஒதுக்கி வைத்து அந்தக்குழந்தையை ஏறெடுத்து நோக்குவதையும்  தவிர்த்தார். குழந்தைக்காகவே உயிரைப்பிடித்துக்கொண்டு அதுவரை வாழ்ந்து வந்த அவரது மனைவி அந்தக்குழந்தை  இறந்த பத்தே நாட்களில் தற்கொலை செய்து கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களும் இந்துவில் வெளியான செய்தியும் எடுத்துரைக்கும் குடும்ப வன்முறை ஒரு புறம் இருக்க என்னுள் மூண்டெழும் வினா வேறு வகையாகச் செல்கிறது...

சப்பாத்திக்கட்டையைத் தன் உடலுக்குள்  செருகும் வரை அந்தப்பெண் எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருந்தது ஏன்...?  உடல் சார்ந்த கொடூரமான அந்த நிகழ்வுக்குத் தன்னிச்சையான சிறுஎதிர்ப்பையும் கூட அந்தப்பெண்ணால் காட்ட முடியாமல் அவளைத் தடுத்ததுதான் எது  ? அது பற்றிய விவரங்கள் செய்தியில் விரிவாக இல்லையென்றபோதும் வயிற்றுவலி வந்த பிறகே மருத்துவமனையில் அவர் சேர்ந்திருப்பது குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட அவர் காட்டியிருக்கவில்லை என்பதையே உணர்த்துகிறது. அதன் பிறகும் கூட அந்த வாழ்விலிருந்து வெளியேற முடியாமல் அவளைத் தடை செய்தது எது?
 பொருளாதாரத் தற்சார்பின்மையைக் காரணம் காட்டிக்கொண்டிருக்காமல் கூலி வேலை செய்தோ நான்கு வீடுகளில் பாத்திரம் கழுவியோ கூடத் தன்மானத்தோடு தன்னால் பிழைத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவளிடம் ஏற்படாதது ஏன்? அதை அவளிடம் ஏற்படுத்தத் தவறியது யார்?

நளாயினி காலத்து சகிப்புத் தன்மை காலங்காலமாக  அந்தப்பெண்ணுக்குள் மூளைச்சலவையாகிக் கடத்தப்பட்டது இதற்கான காரணமா...?’கல்லானாலும் கணவன்’ ..அவனிடம் அடி வாங்குவதே பேரானந்தம்..அப்படி அடி வாங்கியே செத்தாலும் அடுத்த வீட்டுக்குக்கூடத் தெரியாமல் நம் குடும்ப மானம் காக்கப்பட வேண்டும் என்று சொல்லிச்சொல்லியே  ஆளாக்கிய அவளது பிறந்த வீடு இதற்கான பின்புலமா...? வாழ்க்கை பற்றிய விரிவான கண்ணோட்டமும் புரிதலும் அவளுக்குள் ஏற்படாதபடி குறுக்கிட்ட வேறு தடைகள்தான் என்னவாக இருக்க முடியும்?

பொருளாதார அடிப்படையில் ஆணைச் சார்ந்தாக வேண்டியிருப்பதை மட்டுமே  இதற்கான முழு முதல் காரணமாகக் காட்ட முனைந்தால் நான் குறிப்பிட்டிருக்கும் முதல் உண்மைச்சம்பவத்தில் உயர்கல்வியும் பொருளாதாரத் தற்சார்பும் பெற்றிருந்தவரும் சமூகவியல் பாடத்தில் ஆண் பெண் சமத்துவத்தைக் காலம் காலமாக வகுப்பறையில் கற்பித்தவருமான  அந்தப்பேராசிரியத் தோழியின் கோழைத்தனமான நடவடிக்கைக்குக்காரணமாக  எதை முன் வைப்பது?

சப்பாத்திக்கட்டை செருகப்பட்ட கிராமத்துப்பெண்ணைவிடவும் கொடூரமான முறையில் தன் கணவனால்  வலுக்கட்டாயமாக வாயில் அமிலம் ஊற்றப்பட்டுத் தொண்டையெல்லாம் புண்ணாகி இறக்கும் தருவாயிலும் கூடக் கணவனைக்காட்டிக்கொடுக்காமல் தானே அப்படிச்செய்ததாகத் தன் மீதே பழி சுமத்திக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் தந்தபடி மரித்துப்போனவரும்,... பெண் சுதந்திரம் நாடிக்காலமெல்லாம் கவிதை தீட்டியவருமான என் இன்னொரு தோழியின் செயலை என்னால் எதைக்கொண்டு  நியாயப்படுத்துவது சாத்தியம்?

ஆண்முதன்மை பெற்ற சமூக அமைப்பே பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளியது என்பதும், அதன் ஒரு பகுதியே  குடும்ப வன்முறை என்பதும் வரலாற்று உண்மைகள்தான்...

1903ஆம் ஆண்டு நாவலாசிரியர் அ மாதவையா எழுதிய ‘முத்துமீனாட்சி’ நாவலில் மிக மிக இளம் வயது கொண்டவளான தன் மருமகள் விரைவில் கருவுற வேண்டுமென்பதற்காக உயிருள்ள பிள்ளைப்பூச்சி ஒன்றை விழுங்குமாறு அவளது மாமியார் வற்புறுத்திய சம்பவம் ஒன்றை அவர் விவரித்திருக்கிறார்...

அவையெல்லாம் கடந்த காலத்தின் கசப்பான நிஜங்கள்...

அவற்றின் கொடுமைகளிலிருந்தெல்லாம்  விடுபடத் தொடங்கியவர்களாய்ப் புதிய சிந்தனை மாற்றங்களோடு  வெகுதொலைவுகளை நோக்கிப் பெண்கள் பயணப்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டம் இது. தனக்கு நேரும் கொடுமைகளுக்காகக் கழிவிரக்கம் கொண்டு புலம்புவதோ...சமூக அமைப்பின் கோளாறை மட்டுமே பெரிதுபடுத்திச் சுட்டிக்காட்டி அதன் மீது  பழியைப் போட்டு விட்டுத் தான் தப்பித்துக்கொள்ளப்பார்ப்பதும் 21 ஆம் நூற்றாண்டுப்பெண்ணின்   நிலைப்பாடுகளாக இனிமேலும் தொடர வேண்டியது அவசியம்தானா?

தன் கல்வியை, தான் விரும்பும் பணியை.., தன் வாழ்வைத் தானே முடிவு செய்யும் திடம்.., தன் துணையை எப்படித் தேர்வது../ஒதுக்குவது/ அல்லது தேராமலும் கூட இருப்பது என்பதைத் தானே தீர்மானிக்கும் நெஞ்சுரம்..., தன் கருப்பை இருப்பது தன் வசத்தில் மட்டுமே என்பதை உணர்ந்திருக்கும் உளத் திட்பம் இவையே இந்த நாளின் தேவைகள் என்பதை இன்றைய பெண் எப்போதுதான் உணர்ந்து கொள்ளப் போகிறாள் ?

சமூக மறுஉற்பத்தி தடையின்றித்  தொடர்வதற்கான  கருவியாக மட்டுமே ஒரு காலத்தில்  பெண் எண்ணப்பட்டு வந்திருக்கிறாள் என்பது பழங்கதை.

இன்று அவள்  உற்பத்தி செய்தாக வேண்டியவை வருங்கால வாரிசுகளை மட்டும் இல்லை..எவரது  துணையோ  சார்போ  தேவைப்படாமல் தன்னிடம் உறைந்திருக்கும்  அளப்பரிய சக்தியை தன்னுள்ளே பொங்கிப் பெருகும் ஆற்றலின் ஊற்றை ..அவள் தானாகவே  மறு உற்பத்தி செய்து கொண்டாக வேண்டும்..தன்னை தன் சுயத்தை இனம் கண்டு மீட்டெடுத்தபடி  தேவையற்ற அச்சங்களிலிருந்து தன்னை அவள் விடுவித்துக் கொண்டாக வேண்டும்.. அதுவே  இன்றைய காலத்தின் தேவை என்பதை அவள் எப்போதுதான் விளங்கிக்கொள்ளப் போகிறாள் ?

இவை முடிந்த முடிவுகள் இல்லை...
சிந்தனைக்கான சில தேடல்கள் மட்டுமே...

’நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி’என்று புதுமைப்பெண்ணுக்கு பாரதி முன்வைக்கும் நெறியும் கூட  இதுவாக இருக்கக்கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது...
   

18.1.17

தீரா நதியில்..என் மதிப்புரை

மலையாளத்தில் மனோஜ் குரூரால் எழுதப்பட்டு  கே வி ஜெயஸ்ரீ அவர்களால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் குறித்து நான் எழுதிய மதிப்புரை, டிசம்பர் மாதக் [குமுதம்] தீராநதியில் 
வெளியாகி இருக்கிறது...





               15.7.16 நிகழ்ந்த  'நிலம்பூத்துமலர்ந்தநா'ளின் வெளியீட்டுவிழாவில்...நான்                                                                               உரையாற்றியபோது


நிலம் பூத்து மலர்ந்த நா’ளை முன் வைத்து….[மதிப்புரை-தீராநதி]

சங்ககால வாழ்வியலை,பண்பாட்டை,நிலவியலை  மிக விரிவான பின் கிழியுடன் முன்னிறுத்தும் ஒரு நாவல் - தமிழில் எழுதப்பட்டு மலையாளத்துக்குச் சென்றிருக்கவேண்டிய ஒரு படைப்பு , மலையாளத்திலிருந்து  தமிழுக்கு மாற்றுப் பரிணாமமாக வந்து சேர்ந்திருக்கிறது. மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதியிருக்கும் ’நிலம் பூத்து மலர்ன்ன நாள்’ என்னும் அற்புதமான மலையாளமொழி நாவல்,வம்சிபதிப்பகத்தின் வெளியீடாக, கே வி ஜெயஸ்ரீயின் நேர்த்தியான தமிழாக்கத்தில் ’நிலம் பூத்து மலர்ந்த நா’ளாகத் தமிழ்மரபுக்கும் நவீன தமிழ்இலக்கியப்பரப்புக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அண்மையில் வெளி வந்திருக்கிறது. தமிழும் மலையாளமும் மிகநெருங்கிய உறவு கொண்ட மொழிகள் என்பதால் அத்தகைய மாற்றுப் பரிணாமம் குறித்து வெட்கமோ வேதனையோ  படத் தேவையில்லை என்பதோடு கொடிவழி உறவாக அது இன்னமும் தொடர்வதில் மகிழ்வும் பெருமிதமுமே கொள்ளத் தோன்றுகிறது.

சங்கப்பாடல்களை அவற்றின் அடியாழம் வரை உட்செரித்துத் தனதாக்கிக்கொண்டபடி, மலையாள மூலநாவலாசிரியரான மனோஜ் குரூர் இந்தப்படைப்பை உருவாக்கியிருந்தபோதும், இந்த நாவலின் நோக்கம் சங்கச் சமூகப்பரப்பை விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றாகப் போற்றுதலுக்கு ஆளாக்குவதோ, மேன்மைப்படுத்துவதோ மட்டும் அல்ல. சங்கப்பாடல்களில் தோய்வும் பயில்வும் கொண்டோர்க்கு இதன் முதல் வாசிப்பு பித்தேற்றுவதாகவும், என்றோ தொலைந்து போன பழங்கனவின் சுகமான எச்சங்களாகக் கிளர்ச்சியூட்டுவதாகவும் உள்ளபோதும் இதன் அடுத்தடுத்த வாசிப்புக்கள்..மற்றும் .தொடர்சிந்தனைகள் இப்படைப்பை உள்ளடுக்குகள் நிறைந்த ஓர் ஆழ்பிரதியாக, சங்ககாலத்தின் உன்னதங்களோடு கூடவே, அந்தக்காலகட்டத்தின் கீழ்மைகளையும் சுட்டும் நடுநிலையான பிரதியாகவே இதை எண்ண வைக்கின்றன. சங்கப்பாடல்கள் வழி மேற்கொண்ட படைப்புப் பயணத்தில் அந்தச்சமுதாயத்தின் மீது நாவலாசிரியரால் வைக்கப்படும் விமரிசனங்கள் , சமகால அரசியல் விமரிசனத்தை நோக்கியும்  வாசகரை வழி கூட்டிச்செல்கின்றன; இதுவே இந்தப்பிரதியின் தனித் தன்மையும் கூட.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சமூகம் என நாம் அறிந்திருக்கும் சங்கச்சமூகம், பண்பாடு மற்றும் நாகரிகத்திலும்,பொருளியலிலும்,அரசு சூழ்தலிலும் பூத்து மலர்ந்து  பரிணாமம் பெற்றுக்கொண்டிருந்த அதே நேரத்தில் அந்தப் பூத்தல் என்பது சமூகத்தின் எல்லா வர்க்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் உண்மையான முழுமையையும் மலர்ச்சியையும் ஏற்படுத்துவதாக இருந்ததா என்ற மிக முக்கியமானவினாவை எழுப்பி அது சார்ந்த தேடலுக்கு இட்டுச்செல்வதையே இந்நாவல் தன்  மையமாகக் கொண்டிருக்கிறது..
தங்களுக்கான நிலையான வாழ்விடம் அமைத்துக்கொள்ளாமல், வேறுபட்ட பலவகையான நிலப்பரப்புக்களில் சஞ்சரித்துக்கொண்டிருந்த இனக்குழுவினர், நானிலங்களோடு தங்களை இறுகப் பிணைத்துக்கொண்டு அந்தந்த நிலவியலுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டு விட்ட மாந்தர், குறுநில வேளிர் , சிற்றரசர்கள், பேரரசராகக்கொண்டாடப்பட்ட மூவேந்தர்  எனப் பல்வேறு அடுக்கிலுள்ளோரின்  வாழ்வையும் இந்தப்பிரதி ஊடறுத்துச் செல்கிறது.
சங்ககால மக்களில் ஒரு பகுதியினர், கட்டற்ற இனக்குழு வாழ்விலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு சற்றே நாகரிக மேம்பாடு கொண்டோராய் குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல் என்ற நிலப்பாகுபாட்டுக்குள் தம்வாழ்வைப் பொருத்திக்கொண்டனர்; அவ்வாறு பொருந்த முடியாதோர் குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த பாலைநிலங்களில் ஆறலை கள்வராக மாறி வாழ்க்கை நடத்த, பொருளாதார அடிப்படையில் தங்களை இன்னமும் மேம்படுத்திக்கொண்டவர்கள், பெருநிலக்கிழார்களாய்,.வேளிர்களாய்.,குறுநில மன்னர்களாய்சிற்றரசர்களாய்,.இறுதியில் வேந்தர்களாய்ப் பரிணாமம் பெற்ற வரலாறும் கூடப் பூத்தலும் மலர்தலும்தான்..
ஆனால் அந்த மலருக்குள் ஒளிந்திருக்கும் பூநாகங்களாய். சக மனிதர்களிடையேயான வன்மங்கள்,காழ்ப்புணர்வுகள்,சக அரசுகளிடையே பகைமை,ஆதிக்க அதிகாரக் கைப்பற்றல்கள்,  அதற்கான சூழ்ச்சிகள்,வெற்று நுகர் பொருளாய்மட்டுமே கருதியபடி  பெண்மீது செலுத்தப்படும் ஆதிக்கங்கள், விதவை நிலை போன்ற சமூக வழக்கங்களால் அவள் மீது இழைக்கப்படும் வன்முறைகள்,எந்த முகவரியும் அற்ற சாமானியர்களாய்ப் பாடியும் ஆடியும் அரசர் புகழ் ஏத்தியும் தம் வறுமை தொலைத்துக்கொண்டிருந்த கலைஞர்களும் படைப்பாளிகளுமான பாணரும்  விறலியரும் கூத்தரும்  புலவர்களும் அந்த சூழ்ச்சியின் பகடைகளாக ஆக்கப்படுதல் எனப் பலப்பல சிறுமைகள் அந்தப் பொற்காலப்புகழுக்குள் பொதிந்து கிடப்பது சங்கப்பாடல்கள் காட்டும் மறுக்க முடியாத ஓர் உண்மை.. இந்த நிதரிசனத்தை உள்ளது உள்ளபடி கூற முயன்றிருக்கும் மனோஜ்குரூர் நுட்பமான கீற்றல்கள் போன்ற அவதானிப்புக்களாலும்  வீரியம் மிகுந்த சொற்சேர்க்கைகளாலும் அவற்றை எடுத்துரைத்துச் செல்லும் போக்கில்,மலரின் மணத்தை விடவும் குருதியின் கொடும் வாசத்தையே இந்நாவலில் கூடுதலாய் நுகர முடிகிறது.
வழிப்போக்கர்களாய்ச்செல்வோர்க்கு நானில மக்கள் அவரவர் நிலவியல்தன்மைக்கேற்ற உணவளிக்கும் உபசரிப்பு., மாரி பொய்ப்பினும் தான் பொய்க்காத அரசனின் வற்றாத கொடை, ’’காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை’’ ‘’.எத்திசைச்செலினும் அத்திசைச்சோறே’’ என்னும் புலமைச்  செருக்கு, ஆறலை கள்வரிடமும் கூட முக்கோல் பகவர்களான துறவியர் மீது சுரக்கும் கருணை, இரக்கமின்றி வேட்டையில் மூழ்கிக்கொன்று குவித்தாலும் சக மானுட நேயம் காட்டி வழிப்படுத்தி இரவுத் தங்கலுக்கு ஏற்பாடு செய்யும் எயினர் என்று சங்கத்தின் நல்ல பக்கங்கள் பலவற்றின் பெருந்திரட்டாய் இந்த நாவல் இருந்தபோதும் கூட, இதன் மைய அச்சை  சுழலவைக்கும்  ஆரக்கால்கள் சங்கச் சமூகத்தில் மறைந்து கிடந்த பல  இருண்ட பக்கங்களே.  
மூன்று பகுதிகளாய் விரியும் நாவலின் முதல் பகுதியில் பாணர் வாழ்வைப் பிரநிதித்துவப்படுத்தும்  கொலும்பன் என்னும் பாணன் கதை சொல்லியாகிறான். மகன் மயிலனையும் வறுமைத் தொலைப்பையும் தேடிக்கிளம்பும் அவனது புறப்பாடு அவனது மரணத்தோடு முடிவதான இந்தத் தொடக்கப்பகுதியில், ‘’ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீயும்மே’’  என அறிந்தோஅறியாமலோ சொன்ன புலவர் வாக்கால் தூண்டப்பட்ட மூவேந்தரின் சதிக்கு உண்மையான கூத்துக்கலைஞர்கள் பகடையாக்கப்படுகிறார்கள்; பெண்கொலை புரிந்த நன்னன் குறித்து அறிய நேரும் அறியாச் சிறுமியான சீரை,அவனால்   கொலைப்பட்ட அந்தப் பெண் தெய்வமாக்கப்பட்ட கோயிலில் தானும் ஒரு கற்சிலையாய் மாறிப்போனபடி, சுரண்டலுக்கு ஆட்படுத்தப்பட்ட ஓர் இனக்குழுவின் நிலைத்த தூய அடையாளமாய்த் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவளாய் உறைநிலைக்குச் செல்கிறாள். பிழைகள் மலியத் தொடங்கி விட்ட ஒருசமூகத்தில் - முன்னொரு காலத்தின் அப்பழுக்கற்ற மனச்சாட்சியாய் அப்பட்டமான உண்மை பேசும் அவளின் வார்த்தைகள் பலவும் கிரேக்கசோக நாடகங்களின் கோரஸை ஒத்திருப்பதாகக்கூடச்சொல்ல முடியும். சேரனுக்கு நண்பரான  பரணரும் அவரது நண்பர் கபிலரும்  பாணரையும் கூத்தரையும் பாரியை நோக்கி ஆற்றுப்படுத்துவதன் உள்நோக்கம் நாவலின் முற்பகுதியில்  மறை பொருளாகப் பொதிந்து கிடக்கிறது.
நாவலின் இரண்டாம் பகுதியின் கதைசொல்லியாகும் கொலும்பனின் மகள் சித்திரை ,பெண் வர்க்கத்தின் பாதிப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துபவள்; வேந்தரின் சூழ்ச்சியில் பகடையாக்கப்பட்ட தன் தந்தையைப்போலவே காதல் என்னும் பெயரால் நிகழும் சூழ்ச்சியை அறியாமல்தன் இயல்பான உடல்,உள்ள எழுச்சியால்  தூண்டப்பட்டபடி  தன் வாழ்வைத் தொலைத்தவள்.. முல்லை நிலத்தில் மட்டுமே தங்கியிருக்க மனமின்றி அவள் கூட்டத்தார் சேர நாட்டின் முசிறி நோக்கிப் பயணமாக..வீரன் .மகீரனின் காதல் மொழிகளில் தன்னை இழந்து ஏமாந்த சித்திரையோ அந்தக் குழுவிலிருந்தே தன்னைத் துண்டித்துக் கொள்கிறாள். என்றோ தங்களிடமிருந்து பிரிந்து போன அண்ணன் மயிலனின் நண்பனே தன் கணவன் என்ற உண்மை கூட அவன் பிரிவுக்குப் பிறகே அவளுக்குத் தெரிய வர அனைத்தின் மீதும் அவள் கொண்டிருந்தநம்பிக்கைகள் தகர்ந்து போகின்றன; தன் வாழ்வைத் தன் கையில் ஏற்றபடி தனக்குத் தோழியெனத் துணை வந்த புலவர் அவ்வை போலத் தனி வாழ்வு மேற்கொள்ளும் உரம் பெறுகிறாள் அவள். அரசரைச்சார்ந்து புகழ் மொழி சொல்லியே வாழ்க்கை நடத்துவதாய் இந்நாவலில் சொல்லப்படும் பிற  புலவர்களிடமிருந்து மாறுபட்டவராய் மக்களோடு மக்களாய்த் தெருப்பாடல் பாடியபடி, அதியனின் அன்பில் குழந்தையாகிக் கசிந்தாலும் தன் படைப்பால் விளைந்த  ஆளுமையை எதற்காகவும் விட்டுத் தராத செம்மாந்த ஞானச்செருக்குடன் அவ்வை இப்பகுதியில் உருவாகி இருக்கிறார்.
நாவலின் மூன்றாம் பகுதியின் கதை சொல்லியான கொலும்பனின் மகன் மயிலன், இன்மையின் இளிவரல் தாங்க மாட்டாமல் தன் இளமையிலேயே குழுவிலிருந்து அகன்று சென்றவன்; அரசு சூழ்தலை வலிய முயன்று பயின்று ,புலவர்களும் அரசர்களுமாய்ப்பின்னி வைத்த சூழ்ச்சி வலையின் கண்ணிகளில் வலியப்போய்ச் சிக்கியபடி, அத்தனை  சூழ்ச்சிக்கும் துணைநின்று,அறியாமலேயே  தன் இனக்குழுவின் அவலத்துக்குக்காரணமாகி விடுபவன்.தன் தந்தையின் மரணத்துக்கும் தங்கை சித்திரைக்கு நேர்ந்த அவலத்துக்கும் கல்லாய் உறைந்து விட்டசீரையின் நிலைப்பாட்டுக்கும் தானே காரணம் என இறுதியில் உணர்ந்தபடி கழிவிரக்கத்தில் மூழ்கிக்கழுவாய் தேடி அலைபவன்
குட்ட நாட்டிலிருந்து பயணம் தொடங்கும் கூத்தர்கள், குறிஞ்சி திரிந்து பாலையான எயினர் வாழும் மண், முல்லை திரிந்து பாலையான ஆறலை கள்வர்வாழும் வறண்டநிலம், உழவரின் மருதம், குறவரின் குறிஞ்சி ,ஆயரின் முல்லை, கடல் சார் பரதவரின் நெய்தல், நன்னனின் ஏழிமலை, பாரியின் பறம்பு நிலம், சேரனின் முசிறிப்பட்டினம் எனப்பலநிலப்பகுதிகளிலும் சஞ்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள். குப்பைக்கீரை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கதவடைத்து உண்ட இல்லாமை போக்கும் அலைக்கழிவில் உழவரின் திருவிழாக்களில் கூத்தாடுகிறார்கள்; முல்லை நிலத்து ஏறுதழுவுதலுக்குப் பக்கப்பறை முழக்குகிறார்கள். எதிலும் நிலைக்காத அவர்களின் வாழ்வு, சுரண்டலுக்கும் சூழ்ச்சிக்கும் ஆளாக்கப்படுவதைத் தவிர அரசரிடமிருந்து  அவர்கள் பெற எண்ணிய வறுமைத் தொலைப்பு இறுதி வரை வாய்ப்பதே இல்லை. அதுவே நாவல் உணர்த்தும் யதார்த்தம்..
இனக்குழுவின் இளைய தலைமுறை சார்ந்தோரில்  சீரை இறுகிப் போய்த் தொல் மரபின் அடையாளச்சின்னமாகி விட,[Totemic], சித்திரையோ புதியதோர் பெண்ணாய்ப் பிறப்பெடுக்கிறாள். சந்தன் அவ்வப்போது சிறு சிறுஎதிர்ப்புக்களைக்காட்ட மயிலனோ மகாஸ்வேதாதேவியின் 1084இன் அம்மாவில் தீவிரவாதியாகிவிடும் மகனைப்போல ஏதோ ஒரு கணநேரத்தூண்டுதலில் இனக்குழுவின் கபடம் களையப்பெற்ற சூழ்ச்சிக்காரனாக உரு மாற்றம் பெறுகிறான்; தன் இல்லாமை மீதான வன்மம் துடைக்கும் உத்வேகமேஅவனை ஆட்டுவிக்கிறது.
’’ஒரு தலைப்பதலை தூங்க.’’..…
’’தன் பார்ப்புத் தின்னும் அன்பில் முதலை’’
’’திறவாக் கண்ணசாய்செவிக்குருளை’’
’’நீர்வழிப்படூஉம் புணை’’
’’நாடா கொன்றோ கொன்றோ’’
’’கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி’’
’’செறுநரைநோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே’’போன்ற பலசங்கவரிகளும் குறள்கள் பலவும் நாவல் வாசிப்பின்போது தொடர்ந்து கொண்டே வருகின்றன. ஏறுதழுவலின் வன்முறைகள்…,கணவனின் ஈம நெருப்பில் உடன் வீழ்ந்து இறக்கும் நெருக்கடியில் பெண்கள்.., மன்னனுக்காக உயிரை வழங்க முன்வரும் முகவரி தொலைத்த போர்வீரர்கள், விளைநிலத்தை வெற்று நிலமாக்கும் உழபுலவஞ்சி,மழபுல வஞ்சி போன்ற எரிபரந்தூட்டல்கள்,போரின் அழிவுகள், புலவர்களின் சார்பு நிலைப்பாடுகளில் தோன்றும் ஐயங்கள் ஆகியனவும் கூடவே தொடர்ந்து கொண்டு வருகின்றன.
‘’அரண்மனைக்கான வழிகள் அகலமானவை; ஆனால் அவற்றின் உள்ளே உள்ள இடைநாழிகள் குறுகலானவை’’
‘’பால் மணமும் இரத்தக்கவிச்சியும் ஒருசேர வெளியேவருகிறது’’
‘’பாடல்களில் அரசருக்குத்தானே இடம் இருக்கிறது’’
என இடைஇடையே வரும் வரிகள் இந்தப்பிரதியில் உறைந்து உள்ளோடி விரவியிருக்கும்  அரசியல் எது என்பதை அப்பட்டமாகக்காட்டும் சாட்சியங்கள். நவீன மயமாகியிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் கூட சமகால அரசியல் சூழ்ச்சிகள் சாமானியர்களைக்குறி வைத்தே இயங்குவதைக் குறிப்பாகக் கோடிட்டுக்காட்டுபவை இவை. சங்கப்பின்னணியில் நவீனநாவல் ஒன்றை ஆக்கும் முயற்சி என்று கூட இந்த நாவலை மதிப்பிட முடிவது அதனாலேதான்..
பெரும்பறையின் முழக்கத்தில் ஓரிலைத்தாளத்தின் இல்லாமையை யாரும் அறிய மாட்டார்கள்என நாவலில் இடம் பெறும் ஒருவரி சொல்வது போல நிலம் பூத்து மலர்ந்த நாள் என்னும் நாவல் வரும் வரை, சங்க மக்களில் ஒரு சாராரின் வாழ்வியலில் ஊடும்பாவுமாய்ப் பின்னிப்பிணைந்திருந்த சோகத்தின் தீவிரத்தை இத்தனை ஆழமாய் எவரும் உணர்ந்திருக்க மாட்டார்கள்.

மனோஜ் குரூர் கண்டடைந்த அத்தனை சங்கப்பாடல்களுக்குள்ளும் பயணித்தபடி மலையாள நாவலைத் தமிழ் நாவலாகவே மாற்றிக்கொடுத்திருக்கிறார் கே வி ஜெயஸ்ரீ.  அதற்கான அவரது உழைப்பு அசாதாரணமானது. வேற்று மொழி நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களுக்கேற்ற பொருத்தமான நிகரன்களுக்கான தேடலில் மூழ்கி, சங்க இசைக்கருவிகளின் நுட்பமானஒலி வேறுபாடுகளைப் பற்றி ஆய்ந்து துருவி அவற்றை உள்வாங்கி, நாவலில் இடம்பெறும் சங்க அக,புற பாக்களை இனம்கண்டுதன் உள்ளார்ந்த அர்ப்பணிப்போடு ஆறே மாதத்தில் இந்த மொழிபெயர்ப்பை முடித்திருக்கும் அவர் பாராட்டுக்கும் பலப்பல விருதுகளுக்கும் மிகச்சரியான தகுதி கொண்டவராகிறார்

தொடர்புடைய பதிவுகள்;


'நிலம்பூத்துமலர்ந்தநா'ளின் வெளியீட்டுவிழாவில்...



                 கே வி ஜெயஸ்ரீ,ஷைலஜா, மனோஜ் குரூர்,சந்தோஷ் இச்சிக்காணம்,
                      சு வெங்கடேசன் ஆகியோருடன்..



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....