இலக்கிய வாசிப்பில் அக்கறை கொண்டவரும், ஆர்வத்தோடு தன் எழுத்து முயற்சிகளைத் தொடங்கியிருப்பவருமான புதுக்கோட்டையைச்சேர்ந்த திரு தூயன் என்னும் இளம் நண்பர் சிலமாதங்களுக்கு முன் ஒரு விழாவில் என்னிடம் அறிமுகம் செய்து கொண்டு என் தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்கள் பற்றிய தன் மனப்பதிவுகளைக்கிளர்ச்சியோடு என்னிடம் பகிர்ந்து கொண்டார். அந்தச்சூழலில் பேச அதிகம் நேரம் கிடைக்காததால் தன் வாசிப்புக்கள் குறித்த எதிர்வினைகளை சிறு கட்டுரையாக்கி அவர் தனி அஞ்சலில் அனுப்பியிருக்கிறார்,அதை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்;இவ்வாறான பதிவுகளே பல சிக்கல்களையும் மீறி என்னைத் தொடர்ந்து இயங்க வைப்பவை.தூயனுக்கு நன்றி.
தஸ்தயெவ்ஸ்கியை வாசித்தல்
மு.தூயன்
என்னைப் போன்ற இலக்கியத்தினுள் புதிதாக நுழைபவர்களுக்கு தஸ்தயெவ்ஸ்கி போன்ற பேரிலக்கியவாதிகளின் படைப்புகளை வாசிக்க கிடைத்தது மறக்கவியலாத தருணங்கள்.
கா.நா.சுவிலிருந்துதொடங்கிஜெயமோகன்,எஸ்.ராமகிருஷ்ணன்,சி.மோகன் போன்றவர்கள் வரை தஸ்தயெவ்ஸ்கியை குறிப்பிடாத ஆட்களே இல்லை. ‘துன்பத்தின் விந்துவை குழந்தையாக மாற்றினால் அவன் தான்தஸ்தயெவ்ஸ்கி’என்கிறார்சுந்தரராமசாமி.
‘தஸ்தயெவ்ஸ்கியிடம் மட்டுமே நான் உளவியலை கற்றுக்கொள்கிறேன்’ என நீட்ஷே குறிப்பிட்டிருக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில்கொண்டாடுபவரான தஸ்தயெவ்ஸ்கி உண்மையில் பாவத்தின் ஜனனம் .வாழ்க்கை முடியும் வரை பாவப்பட்டு அவமானப்பட்டு இருந்திருக்கிறார். அவராலேயே வாழ்வையும் சாவையும் குறித்த கேள்விகளைநம்மிடையே எழுப்ப முடிந்திருக்கிறது. அவரின் படைப்புகள் தீமை, குற்றங்கள், இருப்பு, காதல் என கட்டமைக்கப்பட்டவை. தஸ்தயெவ்ஸ்கியை வாசிக்காமல் யாரும் இலக்கியத்தை தாண்டியிருக்க முடியாது.
ஜெயமோகனின் மூலமே நான் தஸ்தாவெய்ஸ்கியை கண்டுகொண்டேன்..தஸ்தாவெய்ஸ்கியி ன் உலகம் இருள் சூழ்ந்த வனத்துக்குள் நுழைவது போலவே . அதனுள் பல்வேறு மிருகங்கள் குரூரமாகவசித்திருக்கின்றன....”குற்றமும் தண்டனையும்” தான் நான் முதலில் வாசித்தது. இரண்டு மாதங்கள் ஒரே நேர்க்கோட்டில் என்னை நிறுத்தியிருந்த நாவல் அது. ரஸ்கோல்நிகோவ் எனக்குள் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தினான்.. கொலை செய்துவிட்டு அடையும் உணர்ச்சியின் மோதல்கள் அலைகளித்து விட்டன... என்னை தூக்கிமிழக்கச் செய்திருந்தன. ஒரு கட்டத்தில் ரஸ்கோல்நிகோவாகவும்,தஸ்தயெவ்ஸ் கியாகவும் மாறி மாறி என்னுள் பிம்பங்கள் ஓடின. அதன் பிறகு தஸ்தயெவ்ஸ்கியின் அசடன் நாவலை தேடிப்பிடித்துபடிக்கத்தொடங்கினேன்.அதையும்எம்.ஏ.சுசீலாஅவர்களே மொழிபெயர்த்திருந்தார். அந்நாவல் வேறொரு பரிமாணத்தை எனக்கு காட்டியது. அதிலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் என்னோடு மோதி தர்க்கம் புரியத் தொடங்குகிற நிலைக்குமாறிவிட்டிருந்தேன். கொலை செய்துவிட்டு அடையும் உணர்ச்சியின் மோதல்கள் அலைக்கழித்து விட்டன...
நற்றிணை வெளியீடாக எம்.ஏ. சுசீலா அவர்களின் மொழிபெயர்ப்பில் தஸ்தயெவ்ஸ்கியின் சிறுகதைகள் தற்போதுவெளிவந்துள்ளது.
"கிறிஸ்துமஸ் மரமும் திருமணம்" நூற்றாண்டுக்கான கதை..மனிதர்களின்வெவ்வேறான முகங்களை குரூரமாக படைத்துள்ளார் .... ஜீலியன் மேஸ்டோவிச் என்கிற பாத்திரத்தின் படைப்பைக் காட்சிப்படுத்துவதற்கு முன் மிகச் சாதாராணமாகத் திரியும் சம்மந்தமில்லாத ஒருவனை பற்றி மிகநுட்பமாக சொல்லிக்கொண்டே சென்று பின் ஜீலியன் மேஸ்டோவிச்சை அறிமுகப்படுத்துவார். அவனுடைய குணங்கள் அப்போது நேரெதிராக தெரியும். அவனைப் போல பணத்துக்கு சிறுமியை திருமணம்செய்கிறவர்கள் இப்போதும்இருக்கிறார்கள்.
‘நேர்மையான திருடன் ‘கதை ஒரு நேர்கோட்டு வடிவிலிருந்தாலும் படித்து முடித்ததும் அதன் கதை வடிவ நேர்த்தி புதிதாக இருப்பதைக் காட்டும். வீட்டிற்குவாடகைக்கு வரும் அஸ்தாஃபி என்பவன் தன் பழைய திருடனான நண்பனைப் பற்றி கூறும் நினைவுகளாக கதை சொல்லப்படும். யெமிலியோன் என்ற அவன் நண்பனை பற்றி சொல்லி முடிக்கின்ற போதுமனது கனத்துவிடும். அவ்வளவு உடைபடுவது போன்ற மெல்லிய இழையாக தஸ்தயெவ்ஸ்கி கொண்டு செல்கிறார். அவரின் எல்லா படைப்புகளிலும் இந்தவொரு உணர்வு இழையோடியிருக்கும்.
“மெல்லிய ஜீவன்” என்கிற சிறுகதை மிகச்சிறந்த உலகச் சிறுகதைகளுள் ஒன்று. செய்திதாளில் பார்த்த ஒரு பெண்ணின் தற்கொலை செய்தியை படித்து விட்டு அந்த மனநிலையிலேயே பல நாட்கள் திரிந்து
இச்சிறுகதையை படைத்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தை தன் வாழ்விலிருந்து உயிர் பெறச் செய்திருப்பார். இச்சிறுகதையிலும் ஒரு நகை அடகுக்கடைக்காரர் கதாபாத்திரத்தை படைத்திருப்பார். குற்றமும்தண்டனையில் வரும் இவ்னோவ்னா கதாபாத்திரத்தின் வடிவத்தின் நீட்சியே. அவை தஸ்தயெவ்ஸ்கியின்பல்வேறு படைப்புகளில் வந்து போகின்றன. இக்கதை,பல்வேறு இயக்குநர்கள் மூலமாகதிரைவடிவம் பெற்றுள்ளது. அலெக்ஸான்டா பொரிஸோவ் மற்றும் ராபர்ட் பிரஸன் போன்றவர்கள் சினிமாவாக ஆக்கியிருக்கிறார்கள். இந்தியாவில் இயக்குநர் மணி கல் இதை Nazar என 1991ல் ஹிந்தியில்எடுத்திருந்தார்.
தஸ்தயெவ்ஸ்கியை வாசிப்பவர்களுக்கு இருக்கின்ற முக்கியமான ஒன்று, அவர் நம் உள்ளே ஆழ் மனதில் குற்றம் புரிந்துவிட்டு தூங்கிக்கொண்டிருக்கிறவர்களை தட்டி எழுப்பி விடக்கூடியவர். அவரின்கதாபாத்திரங்கள் நம்மிடையே பேசத்தொடங்கிவிடும். நம் மனதின் மக்கி கிடக்கின்றவைகள் அதன் பின் உயிர்பெற்று திரியத் தொடங்கி விடும்.
இத்தொகுப்பினை படித்துக்கொண்டிருக்கின்ற போது என்னுடைய சிறுவயதில் மிட்டாய் கடை நடத்தும் வயதான கிழவியின் ஞாபகம் வந்து போனது. பழைய செட்டியார் பாணி வீடு அது. கிழவிக்கு கண்தெரியாது. மிட்டாய் டப்பாக்கள் கயிறு கட்டி தொங்கவிட்டிருக்கும். அதை தவிர வேறு யாரும் எடுத்துவிட முடியாது. ஒன்று கயிறு அறுக வேண்டும் இல்லை நாங்கள் வளர்ந்திருக்க வேண்டும்.காசை தடவிபார்த்து தான் வாங்கிக்கொள்ளும்...எப்படியாவது கல்கோனாவை டப்பாவோடு தூக்கிக்கொண்டு ஓடிவிட வேண்டுமென்ற ஆசை..கிழவிக்கு தெரியாமல் மிட்டாயை திருடிவிட எவ்வளவோ முயற்சித்திருக்கிறேன்...தள்ளாத வயது அதற்கு .கிழவியிடமிருந்த பணத்திற்காக அதை யாரோ கொலை செய்து விட்டார்கள். அம்மா என்னை அன்றிலிருந்து அந்த வீட்டுபக்கம் அனுப்பவில்லை.அது இறந்த போது அந்த வீட்டை நான் கடைசியாக பார்த்ததுஇன்னும் என் நினைவிலிருந்து அகலவில்லை..இதுமாதிரியான ஆழ் மன்தினுள் புதையுண்ட நினைவுகளை தஸ்தாவெய்ஸகியின் எழுத்துக்கள் வழியே மீட்டெடுக்கிறேன்.
மொழியாக்கம் செய்பவர் மூலமொழியில் தான் கண்டுணர்ந்த ஒரு தரிசனத்தை படைப்பில் நிகழ்ந்த ஒரு உலகத்தை அதன் வடிவம் மாறாமல் அப்படியே தன் தாய்மொழியில் தருவதென்பதுஅசாத்யமான ஒன்று. நாம் கண்ட அற்புதமான கனவினை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வது போலத்தான்.
மொழிபெயர்ப்பாளர் மூல மொழியிலிருக்கும் சில கரடு முரடானவற்றைத் தவிர்த்து வெகு இலகுவாக செல்ல முடிவது போல மாற்றித்தருகிறார். இன்று நாம் படித்திருக்கின்ற பெரும்பான்மையானபேரிலக்கியங்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவையே. இலக்கியத்தினுள் நுழையும் புதிய வாசகர்களுக்கு உலக இலக்கியத்தினை படித்து அனுபவித்திட மொழிபெயர்ப்பு அவசியம்.. உலகப்பேரிலக்கியங்களான டால்ஸ்டாயின்"போரும் அமைதியும்" நாவல் டி.எஸ்.சொக்கலிங்கம் வாயிலாக நாம் அறிய முடிந்தது.
மொழிபெயர்ப்பு குறைந்து விடும்போது இலக்கிய வறட்சி ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிடும் என்பது உறுதி.
மிகச் சிறந்த மொழியாக்கம், படைப்பின் முதல் முப்பது பக்கங்களைக் கடந்து வரும் வாசகனை மிக இலகுவாக உள்ளிழுத்துச் சென்றுவிடும் . அதன்பிறகு அவன் கானும் உலகமும்,அடையும் கிளர்ச்சியும்அவனை கனவுலகில் திளைத்திருக்கச் செய்கிறது. அதுவே உன்னதமாக மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது.
அவ்வகையில் மிகச்சிறந்த மொழியாக்கத்தை எம்.ஏ.சுசீலா அவர்கள் செய்திருக்கிறார். அவரின் கடினமான உழைப்பு, வாசித்துக்கொண்டிருக்கின்ற போது தஸ்தயெவ்ஸ்கி நம்முடன் நேரடியாக பேசுவது போலஉணர்வில்தெரிகிறது.என்னிடம்தஸ்தாவெய்ஸ்கிshortstorycollection ஆங்கிலத்தில் இருக்கிறது .ஆனால் படிக்கின்ற போது மொழியும் உணர்வுகளும் என்னை முழுமையாக ஆட்கொள்ளச் செய்தது எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா அவர்களின் மொழிபெயர்ப்பே..
தீவிரமாக என் அக உலகினுள் மோதிக்கொள்ளச் செய்தது. தஸ்தாவெய்ஸ்கியை என் தாய் மொழியில் படித்து உணர்வதற்கு மென்மையாக இருக்கிறது. இவ்வளவு ஆழமாக தஸ்தாயெஸ்கி என்னுள்ஏற்படுத்துகின்ற அதிர்வுகளுக்கு எம்.ஏ. சுசீலா அவர்களின் மொழியாக்கமே காரணம்...
புதிதாக தஸ்தயெவ்ஸ்கியை வாசிக்கத் தொடங்குபவர்களுக்கு இச்சிறுகதைத் தொகுப்பு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்கும்.
புதுக்கோட்டை