3/10/2021 தினமணி கதிரில் வெளியாகியிருக்கும் என் சிறுகதை
வெயில்
உகந்தாள்
எம் ஏ சுசீலா
வீட்டைப் பூட்டிக்கொண்டு
படியிறங்கும்போதே ஐம்பதடி தூரத்தில் நான்கைந்து தெருநாய்கள் கூட்டமாக நிற்பது
கண்ணில் பட்டுவிட்டது. வாகான காரணம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் அப்படியே
பின்வாங்கி விடலாமா என்ற எண்ணம் நீலாவுக்குள் மின்னலடிக்க, சாவிக்காகக் கைப்பையைத் துழாவும்போது
‘வாக்கிங்’ என்ற ரேஷ்மாவின் வாட்ஸப் செய்தி , ஒரு கேள்விக்குறி ‘இமோஜி’யோடு
மினுங்கியது. ’எப்படித்தான் இவளுக்கு மூக்கில் வேர்க்கிறதோ’ என்று நீலாவுக்குள்
சுள்ளென்று ஒரு கோபம் ஏறியது. இங்கே இப்போது காலை ஏழரை மணியென்றால் அங்கே,டொரண்டோவில் இரவு பத்து மணி. தினமும் இந்த நேரத்துக்கு இப்படி ஒரு
செய்தி என்றால் அதை ‘டெம்ப்ளேட்’ ஆக்கி நேரக்கணக்குப்படி ‘செட்’ செய்து விடுவாளாக
இருக்கும். முழு நேரமும் வேலையே அதில்தானே?
ஒரு
நிமிட அமைதிக்குப் பிறகு ‘சால்ஜாப் ஏதும் இல்லைதானே?’ என்று ரேஷ்மியிடமிருந்து தொடர்ந்து
வந்த தமிழ்ச்செய்தி, அது ‘டெம்ப்ளேட்’ இல்லையென்பதை
நிரூபித்து விட, பையைக் குடைவதை விட்டு விட்டு நடக்க
ஆரம்பித்தாள் நீலா.
‘’நீலாப்பாட்டி, நீங்க அப்பாவோட அம்மாவா? அம்மாவோட அம்மாவா?’’ என்று பேரன் சித்துவே
ஆச்சரியப்படும் அளவுக்கு நெருக்கமானது அந்த பந்தம். ப்ரித்வியைத் திருமணம் செய்து
கொண்டதுமே நீலாவின் உடல்நலம் சார்ந்த விஷயங்களைத் தன் பொறுப்பில்
எடுத்துக்கொண்டாள் ரேஷ்மி. அதிகம் பேசாதவனும், பாசத்தை வெளிக்காட்டத் தெரியாதவனுமான ப்ரித்வி, அந்த வேலைப்பங்கீட்டை மட்டும்
கச்சிதமாய்ச் செய்து முடித்திருந்தான்.
‘’அத்தை, தினமும் காலையிலே ஆறுமணிக்கு அடிக்கிற
மாதிரி உங்க மொபைல்லே அலாரம் வச்சுக்கங்க, அப்பதான் தைராய்ட் மாத்திரை மிஸ் ஆகாம
இருக்கும்’’என்று புது மருமகளாக வந்தபோது சொல்லத் தொடங்கியவள் இப்போது சில
வருடங்களாக கனடாவில் இருந்தாலும் அவளது கண்காணிப்பு வளையத்தில் ஒரு சின்னக் கீறல்
கூட விழுந்ததில்லை. நீலாவின் தனி மருத்துவர் அனுப்பும் மருத்துவக்குறிப்புகள்,பரிந்துரைகள்,அறிக்கைகள் என்று எல்லவற்றிலுமே
தனக்கும் ஒரு பிரதி வருமாறு ஏற்பாடு செய்து கொண்டிருந்த ரேஷ்மி, பத்து நாள் முன்பு ‘ஸ்கைப்’பில்
வந்தபோது
‘’இதோ
பாருங்க அத்தை, கோவிட் முதல் வேவ் வந்தப்ப
தொடர்ச்சியா கிட்டத்தட்ட ஆறு மாசம் போல வெயிலே படாம
ஏசியிலேயே இருந்து நெட்ஃப்ளிக்ஸ்,அமேசான்லே
வர படத்தையெல்லாம் ஒண்ணு விடாம பார்த்ததிலேதான் உங்களோட கழுத்து வலி,முதுகுவலி இதெல்லாம் முன்னை விட
ஜாஸ்தி ஆகியிருக்கு, சுத்தமா வாக்கிங்கே போகாம விட்டதிலே
வெயிட் வேற ஏகத்தாறா ஏறிக்கிடக்கு, அதுதான்
’பையோ மாஸ் இண்டக்ஸே சொல்லுதே’’ என்று பொரிந்து தள்ளி விட்டு
‘’இனிமே நீங்க வேற என்ன செஞ்சாலும்
செய்யாட்டாலும் காலையிலே ஏழரை டு எட்டரை ஏதானும் ஒரு அரை மணி நேரம் நல்லா வெயில்
படற மாதிரி கூட்டம் இல்லாத இடத்திலே மாஸ்க் போட்டுக்கிட்டு வாக்கிங் போயே ஆகணும்,எந்தச் சாக்குப்போக்கும் என் கிட்டே
செல்லாது,சரியா’’
என்று
உத்தரவும் பிறப்பித்து முடித்து விட்டாள்.
அவளது
நிஜமான அக்கறை கொஞ்சம் இதமாகத்தான் இருந்தது; ஆனாலும் மாதக்கணக்கில் ‘படியிறங்கா’
மனுஷியாய் இருந்து பழகியதில் படிந்து விட்ட சோம்பல்! ஒத்திப்போட ஒரு அற்பக்காரணம்
கிடைத்தாலும் அதைப் போய்க் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு இந்த மனம் முரண்டு செய்ய ஆரம்பித்து விடுகிறது என்று நினைத்தபடி நடையைத் தொடர்ந்தாள் நீலா.
நடுத்தெரு நாய்களும் கூட ஏதோ ஒரு வி ஐ பியின் வருகைக்காக விலகி வழி விடுவதைப்போல குரைப்பதை நிறுத்தி விட்டு இருபுறமும்
விலகிப்போக…’இதற்குக்கூட ரேஷ்மி ‘ரிமோட்’ வைத்திருக்கிறாளா என்ன?’ இனிமேல் வேறு
வழியில்லை, நடந்துதான் ஆக வேண்டும்.
நடுத்தர
வர்க்கத்து வீடுகள் இருபுறமும் வரிசை கட்டியிருக்க, ஓரளவு நிழலான குடியிருப்புப் பகுதி
அது. சாலையென்றோ சந்தென்றோ வரையறுக்க முடியாதபடி, ஒரு குடிநீர் லாரி மட்டும் எதிலும்
மோதிக்கொள்ளாமல் போகும் வகையில் அகலக்குறைவான அந்தத் தெருவில் ஒற்றை ஆளாக நடந்து
கொண்டிருந்தாள் நீலா.
நிரந்தரமாய்
பெயிண்ட் கோலம் போட்டுக்கொண்டு விட்ட வீடுகள், இன்னும் தூக்கம் தேங்கிய விழிகளோடு
வாசல் தெளிக்கும் பெண்கள், ஆகச்சிறியதாக
ஒரு கோலத்தை அள்ளித் தெளித்து விட்டு வீட்டுக்குள் விரைபவர்கள், வராந்தாவில் போட்டிருக்கும்
பிரம்பு நாற்காலியில் சரிந்தபடி
கைபேசியின் வம்பு சேனல்களில் மூழ்கிக்கிடக்கும் மனிதர்கள் என்று வழக்கமாகக்
கண்ணில் படும் காட்சிகள்! சில
வீடுகளின் இடையிடையே இருந்த காலிமனைகளில் பாதி எரிந்தும் எரியாத நிலையில்
மண்டிப்போய்க் கிடக்கும் பலரகக்குப்பைகள் எப்போதும் போல இன்றும் அவளுக்கு
எரிச்சலூட்ட ‘இந்த பொல்யூஷன்லே மட்டும் எனக்கு எதுவும் வந்திடாதாக்கும்..’என்று
மருமகளிடம் மனதுக்குள் கேட்டுக்கொண்டாள்.
சற்றே
நீளமான அந்தத் தெருவின் முடிவில் வலது பக்கம் திரும்பி ஐந்து நிமிட நடையில்
நெடுஞ்சாலையைத் தொட்டு விடலாம். நீலாவின் கணக்கு அந்தப் புள்ளியை எட்டி விட்டுத்
திரும்புவது மட்டும்தான். வலப்பக்கம் திரும்பும்போது தெரு ஓரமாய் நின்றபடி
எதிரிலிருந்த காலிப்பொட்டல் வழியே மறைக்கப்படாமல் தெரியும் சூரிய ஒளியையே
பார்த்துக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. அவரது செயலில் தென்பட்ட ஏதோ ஒரு விநோதம்
நீலாவைக் கட்டிப்போட்டு அங்கேயே நிற்க வைத்தது. தன் இரண்டு கண்களையும்
உள்ளங்கையால் மாறி மாறிப்பொத்தியபடி ஒவ்வொரு கண் வழியாகவும் சூரியப்பந்தையே ஒரு
வினாடி உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் அவர். பல முறை அதை செய்து முடித்துக்
கையைத் தாழ்த்திக்கொண்ட பிறகு, பக்கத்தில்
வியப்போடு நின்று கொண்டிருந்த நீலாவைப்பார்த்தபடி
‘’என்ன
செய்றேன்னு பார்க்கறீங்களா, கண்ணுக்குப்
பயிற்சி, ஒரு வகையான சூரிய நமஸ்காரம்னும் இதை
வச்சுக்கலாம், இதை செய்யச் சொன்னது எனக்கு ஆபரேஷன்
செஞ்ச கண் டாக்டர்’’ என்றார்.
அவர்
மாட்டியிருந்த முகக்கவசத்தின் மடிப்புக்கள் சுருங்கி விரிவதை வைத்து அவர்
சினேகத்தோடு புன்னைகைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.’’எங்கே நீங்களும்
வாக்கிங்தானே’’ என்றார் தொடர்ந்து.
‘’ஆமாம்,என்னோடதும் ஒரு
சூரியக்குளியலுக்குத்தான்’’ என்று நீலா பதிலளிக்க, உரையாடலை நீட்டிக்க இயலாத முதல் சந்திப்பின்
இலேசான தயக்கத்தோடு எதிரும் புதிருமான திசையில் இருவரும் விடைபெற்றுக்கொண்டார்கள்.
************************************
இரண்டு நாட்கள் சென்றபின் மீண்டும் ஒரு
காலை நடை முடித்துத் திரும்பும் வழியில் தெருவோரக் கடை ஒன்றில் ஏதோ
வாங்கிக்கொண்டிருந்த நீலா‘’ஹலோ..’’ என்ற குரல் கேட்டுத் திரும்பிப்பார்த்தாள்.
‘’ஓ..அன்னிக்கு
அந்த சூரிய…’’ என்று அவள் முடிப்பதற்குள்..
‘’ஆமாம்
அதே சூர்யாதான், ஆனா என்ன பண்றது, என்னோட சொந்தப்பேரு சந்திராவாச்சே’’
என்றார் அவர்.
கடைக்காரருக்குப்
பணம் கொடுத்தபடியே தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டாள் நீலா.
‘’என்ன
இன்னிக்கு வாக்கிங் கோட்டா முடிஞ்சதா?ஆரம்பமா,முடிவா?’’
‘’முடிச்சிட்டுதான் திரும்பறேன், அதனாலேதான் பழம்’’
‘’அப்ப
வாங்க! நானும் திரும்பிக்கிட்டுதான் இருக்கேன், உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா
சேர்ந்து போகலாம்’’
‘’அட
என்னங்க நீங்க? கூட இப்படி ஒரு பேச்சுத்துணை கிடைச்சா
நடக்கறதிலே அலுப்புத் தெரியாம இருக்குமில்லே. அதுவும் கிட்டத்தட்ட சம
வயசுக்காரங்க’’
கூர்
தீட்டி விடப்பட்ட கொம்புகளோடு தெருவை அடைத்துக்கொண்டு சர்வ சுதந்திரமாய்ச் சென்று
கொண்டிருந்த மாடுகள் கடந்து போவதற்காக் கொஞ்சம் தாமதித்து நின்று விட்டு இருவரும்
நடக்கத் தொடங்கினார்கள்.
இரண்டு
பக்கத்திலிருந்த வீடுகளிலும் காம்பவுண்டைத் தாண்டி எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த
பூச்செடிகளிலிருந்து செம்பருத்தி,நந்தியாவட்டை,அரளி என்று வகைக்குக் கொஞ்சமாய்ப்
பறித்துத் தான் வைத்திருந்த மெல்லிய நைலான் வலைப் பைக்குள் போட்டுக்கொண்டே வந்தார்
சந்திரா.
‘’என்ன..? இதுவும் வித்தியாசமா இருக்கேன்னு
பாக்கறீங்களா?வீட்டுக்காரங்க கோபிக்க
மாட்டாங்களான்னு நினைக்கிறீங்க போல இருக்கு. நான், இங்கே இதே காலனியிலே கிட்டத்தட்ட
இருபது வருஷமா குடியிருக்கேன். எல்லாருக்குமே என்னை நல்லா தெரியும். என்னிக்காவது
பூவைப் பறிக்காம விட்டுட்டேன்னா, ’எங்கே
சந்திரா அம்மாவைக் காணோம் போல இருக்கே, நல்லா இருக்காங்கதானே’ன்னு ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக்க
ஆரம்பிச்சிடுவாங்க..அது சரி , நீங்க
இந்த எடத்துக்குப் புதுசா?’’
’’புதுசு, பழசு ரெண்டுமே சொல்லலாம். இப்போ குடி இருக்கிறது, நான் காலேஜிலே படிக்கிறப்ப அப்பாம்மா
வாங்கிப்போட்ட வீடு. மூணு வருஷம் நானும் இங்கேதான் இருந்தேன். அப்பறம் எனக்குக்
கிடைச்ச வேலை, கல்யாணம்..., அதுக்காக எங்கெங்கேயோ எல்லாம் போனது…அதுக்குப்பின்னாலே மகனோட வேலை,அவன் பிள்ளைங்களைப் பார்த்துக்கிறது
இப்படி…ஒரே இடத்திலே நிலையாத் தங்காம இருந்திட்டு இப்பதான் ஒரு வருஷமா இங்கே
நங்கூரம் போட்டிருக்கேன். நீங்க?’’
‘’இதுவரைக்கும் இங்கேயே காலம் தள்ளியாச்சு…இனிமே
என்ன ஆகுமோ சொல்ல முடியாது. ஏதோ நானும் அவரும் இங்கேயே வேலை பார்த்ததாலே சொந்த
வீடு கட்டிக்கிட்டு செட்டில் ஆனோம். பையனுக்கும் இங்கேயே வேலை
அமைஞ்சு போனதாலே எல்லாரும் ஒரு குடும்பமா இருக்கோம்…ஆனா ஒரு
வருஷத்துக்கு முன்னாலேதான் பொண்ணுக்குக் கல்யாணம் ஆச்சு. கத்தார்லே
இருக்கா. இப்ப குழந்தை வேற உண்டாயிருக்கா, பிரசவத்துக்கு நான்
போயே ஆகணும், ரெண்டு பக்கத்திலேயும் எப்ப ஏர் ட்ராவலுக்கு பச்சைக்கொடி காட்டப்போறாங்கன்னு
காத்துக்கிட்டுதான் இருக்கேன் நான்’’
‘வாராரு வாராரு கள்ளழகரு….’ என்று
பலமாக முழங்கியபடியே மதுரை மாநகராட்சியின் ஸ்மார்ட்சிடி குப்பை லாரி எங்களைத்
தாண்டிச்சென்றது.
‘’ஆனா...நீங்க
பரவாயில்லே..இப்படி ஊர் ஊரா மாறிப்போனாலும் வாக்கிங் போற நல்ல பழக்கத்தை மட்டும்
விடாம வச்சிருக்கீங்க போல?’’என்று
விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார் சந்திரா.
‘’அதை ஏன் கேக்கறீங்க, ஒரு ஆஃபீஸிலே செக்ஷன்
சூப்பரிண்டெண்டா வேலை பார்த்தேன். சீட்டிலே உக்காராம சுத்திக்கிட்டே இருப்பேன்.
ரிடயர் ஆனப்பறம் ஒரே பையனோட சென்னைக்குப் போனேன். பக்கத்திலேயே பார்க் இருந்ததாலே
காலையிலே நடக்க முடியாட்டாலும் சாயங்காலம் அரை மணிநேரமாவது கட்டாயம் நடந்திடுவேன்.
அப்பல்லாம் எதுவுமே வந்தில்லை, இப்ப
ரெண்டு வருஷமா அவன் டொரண்டோவிலே இருக்கான். என் வீட்டுக்காரரும் காலமாயிட்டதாலே
என்னைத் தனியா விட இஷ்டமில்லாம தன்னோட கூட்டிக்கிட்டுப்போனான். அப்படியே ஒண்ணா
இருந்திடலாம்னு எனக்கு க்ரீன் கார்ட் கூட வாங்க ஏற்பாடு பண்றேன்னான். மருமகளும்
தங்கமான பொண்ணு.. ஆனா மூணு மாசம் கூட அந்தக்குளிரிலே தாக்குப்பிடிக்க முடியாம
நான்தான் ஓடி வந்திட்டேன்..அங்கே இருந்தப்ப வீட்டை விட்டே போக முடியாம இழுத்துக்கிட்டதுதான் இந்தக் கழுத்து வலி ,முதுகுவலி எல்லாம்…! டாக்டர் கிட்டே
போனா..’’
‘’வைட்டமின்
’டி’ பத்தலை, வெயில்லே போய் நில்லுங்கன்னு ஸ்கூல்
டீச்சர் மாதிரி சொல்லியிருப்பாரே’’என்று சட்டென்று சந்திரா சொல்லிவிட, இரண்டு பேரும் வாய் விட்டுச்
சிரித்ததில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த ஒன்றிரண்டு பேர் அவர்களை ஒரு தரம் திரும்பிப்
பார்த்து விட்டுப் போனார்கள்.
‘’சொல்லப்போனா வைட்டமின் ‘ப’
இல்லாதவங்களுக்கெல்லாம் இந்தச் சிக்கல் வர்றதே இல்லை, ரொம்ப பணக்காரங்க, வெள்ளைக்காரங்க இவங்க எல்லாம்தான்
பீச்சிலே சன்பாத் எடுப்பாங்க, பார்த்திருக்கோம், இப்போ நம்மை மாதிரி மிடில் க்ளாஸும்
அதே போல ஆயிட்டோம், என்ன செய்யறது? ’’ என்றவர், ‘’சரி என்னோட வீட்டுக்குப் போற
திருப்பம் வந்தாச்சு, மறுபடியும் வெயில்லே
சந்திப்போம்’’என்று விடை பெற்றார்.
************************************
முன்கூட்டி நேரக்கணக்கெல்லாம் பேசி
வைத்துக்கொள்ளாவிட்டாலும் கூட வாக்கிங் போகும்போதோ, திரும்பும்போதோ,எதிரும் புதிருமாகவோ ஒரு வாரத்தின் பல
நாட்களிலும் அவர்கள் இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டுதான் இருந்தார்கள். சேர்ந்து
செல்லும் நேரங்களில் எதைப் பற்றி ஆரம்பித்தாலும் எப்படியாவது சுற்றி வளைத்து அவர்களது பேச்சு ,வெயில் என்ற மையப்புள்ளியைத்
தொட்டு விடுவது அவர்களுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அன்று காலை எட்டு மணிக்கே வெயில் உக்கிரமாய்த் தகித்துக்கொண்டிருந்தது.
வாழை மாதுளை மாம்பழம் என்று விதவிதமான பழங்களை ஒரு மூங்கில் கூடையில் அடுக்கித்
தலைச் சும்மாட்டில் வைத்தபடி போய்க்கொண்டிருந்த ஒரு பெண்ணை அழைத்தார் சந்திரா.
“என்ன தாயம்மா ? வெயில் வந்தாச்சில்லே, அதுதான் மாம்பழ சீஸன்களை கட்டுதாக்கும், ஆமாம்…அழகர்கோயில் மாவடு கொண்டுவான்னு உன்னை எத்தனை நாளாக்
கேட்டுக்கிட்டிருக்கேன்? நீ என்னடான்னா அதைக்கொண்டு வந்து தர மாட்டேங்கிறே.., ஆமாம், மாம்பழம் எங்கே, நத்தத்திலே இருந்துதானே?”
“அட போங்கம்மா நீங்க வேற, சீஸன் சீஸன்னு சொல்றாங்களே தவிர
முன்னை மாதிரி டஜன் கணக்கிலே கிலோ கணக்கிலே எல்லாம் இப்ப யாரு வாங்கறாங்க.? குடும்பங்கள்ளாம் சிறுத்துப்போச்சு
இல்லே? வீட்டுக்கு ரெண்டு பழம் மூணு பழம்னு
நம்பர் எண்ணித்தான் வாங்கறாங்க. சரி அதை விடுங்க, அன்னிக்கே
ஆசையா கேட்டீங்களேன்னு உங்களுக்கு சப்பட்டை மாம்பழம் தனியா எடுத்து வச்சிருக்கேன், இந்தா இருக்கு, வாங்கிக்கங்க”
கூடையைப் பெரும் சிரமத்தோடு இறக்கி வைத்தபடி அவள்
சந்திராவிடம் பழங்களைக் கொடுக்க, நீலாவும்
தனக்காக இரண்டு பழங்களைப்பொறுக்கி எடுத்துக்கொண்டாள்.
அவள் போவதையே தொடர்ந்து சிறிது நேரம்
பார்த்துக்கொண்டிருந்த சந்திரா.
‘’பார்த்தீங்களா நீலா! இவ இப்பதான் வியாபாரமே தொடங்கறா.
இவ்வளவையும் வித்துட்டு வீட்டுக்குப் போய்ச் சேரறதுக்குள்ளே அடிக்கிற சூரியனோட
சூடு முழுக்க அவ தலையிலே இறங்கிடும். ‘வெயிலடிச்சா ஐயோ வேர்வை, மழை பெஞ்சா ஐயோ குளிரு’ன்னு
அலுத்துக்கறதெல்லாம் நாமதான். கத்தரி வெயிலோ, கொட்டற மழையோ இவங்கள்ளாம் அலைஞ்சுதானே
ஆக வேண்டியிருக்கு’’என்றார்.
’’அது ‘கரெக்ட்’தான். ஆனாலும் ’இந்த வருஷம்
வெயில் ரொம்ப கூடுதல் இல்லே?’ ன்னு நாம எந்த வருஷம் சொல்லாம
இருந்திருக்கோம் “ என்றபடி நீலாவும் அதை ஆமோதித்தாள்.
‘’வெயில் உகந்த அம்மன்கள்..’’என்று ஏதோ
யோசனையுடன் எங்கோ பார்த்தபடி சொன்னார் சந்திரா.
‘’விருதுநகர்ப்பக்கம் அப்படி ஒரு கோயில்
இருக்கில்லே?’’
‘’ஆமாமாம், இங்கே திருப்பரங்குன்றம் பக்கத்திலே
கூட இருக்கு, திருச்செந்தூர் கிட்ட இருக்கு. !
சாத்தூர், கோயில்பட்டி, சிவகாசி, தூத்துக்குடின்னு வெயில் குடிச்சே
வளர்ந்து, வெயிலாலேயே பிழைக்கிறவங்களுக்குக்
கும்பிடற சாமியும் கூட வெயில் உகந்த அம்மாதான். மனுஷங்க கிட்ட பேதம் காட்டாத
மாதிரி வெயிலையும் மழையையும் சமமா பாவிக்கிற சாமி! ஆனா, நான் சொன்னது அம்மனை இல்லை, இவங்களை..இந்த மாதிரி ஆட்களை”
‘’சின்ன வயசிலே மொட்டைமாடியிலே காயப்போட்ட வத்தல்
வடகத்துக்குக் காவலா அதோட நாமும் காய்ஞ்சிருக்கோம், வெயில் உறைக்கிறதே தெரியாம நாமளும்
வெளையாட்டுப்போக்கிலே வெயில் குடிச்சவங்கதான் இல்லியா’’
‘’என்ன செய்யறது? அது ஒரு காலம், இப்ப என்னடான்னா , இந்த வயசிலே நாமே
வலிஞ்சு
அதைத் தேடிப் போக வேண்டியிருக்கு. நீலா ! போன வாரமே கேக்கணும்னு நெனச்சேன். இப்ப
ரெகுலரா வெயில் பிடிக்கிறீங்களே…உங்க ‘டி வைட்டமின்’ லெவல் எப்டி இருக்குன்னு
பார்த்தீங்களா?’’
’‘டெஸ்ட் எடுத்து டாக்டர் கிட்டே
கொடுத்திருக்கேன்,என்ன சொல்றாரோ பாக்கணும்’’
‘’சரி, நல்ல ரிஸல்டோட வாங்க, வெயில்லே சந்திப்போம்’’
*******************************
ஆனால் அந்த நாளுக்குப் பிறகு ஏனோ வாரக்கணக்கில்
…மாதக்கணக்கில் சந்திரா கண்ணில் தென்படவே இல்லை. காலையில் வழக்கமாக
நடைப்பயிற்சிக்குக் கிளம்பும் நேரத்துக்குச் சற்று முன்னாலும், கொஞ்சம் பின்னாலும் கூட முயற்சித்துப்
பார்த்து விட்டாள் நீலா. வழக்கமாகத் தன் வீட்டுக்கு சந்திரா பிரிந்து செல்லும் திருப்பத்தின் அருகிலேயே பலநாட்கள்
காத்திருந்து நின்றபடியும் பார்த்தாள். குறிப்பிட்ட அந்தத் திருப்பத்திலிருந்து
கிளை பிரிந்து போய்க்கொண்டிருந்த பல குறுக்குத் தெருக்களில் யாரிடம் எதைச்சொல்லி
எப்படி விசாரிப்பது? எங்கே போய் என்னவென்று தேடுவது?
“ என்னம்மா இப்படித் தனியா நடந்து
போயிக்கிட்டிருக்கீங்க? உங்களோட
நெதமும் இன்னொரு அம்மா சோடியா நடந்து வருவாங்களே...அவங்க எங்கே”
அவர்களது நடைப்பயிற்சிப் பாதையில்
அடிக்கடி எதிர்ப்படும் கீரைக்காரப்பெண் ஒருத்தி, இப்படி ஒரு கேள்வியோடு அவளை
ஒருநாள் எதிர்கொண்டாள்.
“என்னவோ தெரியல போ, கொஞ்ச நாளா அவங்க வர்றதே இல்லை. அவங்களைத்தான்
இப்ப தேடிக்கிட்டிருந்தேன், விசாரிக்கலாம்னா
எனக்கு வீடும் தெரியாது ..நல்லவேளை நீயாவது கண்ணிலே பட்டே, உனக்கு அவங்க வீடு எதுன்னு தெரியுமா ?“
“ அதையெல்லாம் நான் என்னத்தைம்மா
கண்டேன்.. ? உங்க ரெண்டு பேரையும் சேர்ந்தாப்பிலே
பாத்திருக்கேனே தவிர அவங்க வீட்டிலே கீரை கொடுத்ததாவோ அவங்க வாங்கினதாவோ சுத்தமா
எனக்கு நெனப்பில்லை. அவ்வளவு ஏன் ? ஏதோ
போகும்போது வரும்போது பார்ப்பேனே தவிர உங்க வீடு கூடத்தான் எனக்குத் தெரியாது.
ஆனா...இப்பத்தான் எல்லாரும் ’செல்’லு வச்சிருக்காங்களே, அதிலே பேசிற வேண்டியதுதானே” என்று
சுலபமான ஒரு தீர்வை யதார்த்தமாய்ச்
சொல்லிவிட்டு ‘அரைக்கீரை,பொன்னாங்கண்ணிக்கீரை,கீரை கீரை” என்று கூவிக்கொண்டே அகன்று
போனாள் அவள்.
சந்திராவின் வீட்டை மட்டுமல்ல, அவரது கைபேசி எண்ணையோ கணவரின் பெயரையோ
கூடத் தான் கேட்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டோம் என்பது அப்போதுதான் நீலாவுக்கு
உறைத்தது. ஒரு பக்கம் அவளுக்கே அது வியப்பாகவும் கூட இருந்தது.
சந்திராவால் கொய்யப்படாத பூக்கள் இரண்டு பக்கத்து
வீடுகளிலிருந்தும் தலை நீட்டிக்கொண்டிருக்க ..‘ நான், இங்கே இதே காலனியிலே கிட்டத்தட்ட
இருபது வருஷமா குடியிருக்கேன். எல்லாருக்குமே என்னை நல்லா தெரியும்’ என்று சந்திரா
சொன்னது மனதுக்குள் ஒரு கீற்றாக மின்னி மறைந்தது. ஆனாலும் இயல்பாகவே ஊறிப்போன
கூச்ச உணர்வோடு அதிகம் அறிமுகமில்லாதவர்களுடைய வீட்டுக் கதவைத்தட்டி இந்தக்காலை வேளையில் அவரைப் பற்றி எப்படி விசாரிப்பது?
பத்துப்பதினைந்து நாட்களுக்குப் பிறகு
வேகுவேகென்று நடையை முடித்து விட்டு வீட்டை நெருங்கிக்கொண்டிருந்தாள் நீலா.
“அம்மா
நல்லாயிருக்கீங்களா? நல்ல மாம்பழம் இருக்கு வாங்கிக்கிறீங்களா.., ஹ்ம், ஒங்க சிநேகிதக்காரம்மா
இருந்தா என் கிட்ட பழம் வாங்காம ஒரு நாள் கூட இருக்க மாட்டாங்க, என்ன செய்யறது? பொண்ணுக்குப் பிரசவ நேரம்னு
அவங்கதான் யாரையெல்லாமோ பிடிச்சு
எப்டியோ அதோட வீட்டுக்குப் போயிட்டாங்களே! ஆனா இப்படி ஒரு கெட்ட காலத்திலே
அவங்களுக்கு
ஒரு நல்ல நேரம்னுதான் சொல்லணும். அடுத்த கொரோனா அலை வருது
வருதுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்கள்ளே? கொஞ்ச நாளிலே திரும்ப ஊரடங்கு வேற போடப்
போறாங்களாம், இதுக்கும் மேலே காத்திருந்தா, அவங்களாலே
போகவே முடியாம போயிருக்கும், ஹ்ம்..ஆனா…..எங்க பொழப்புதான் இதுனாலே நாறிப்போகுது, சரி, இருக்கிற வரைக்கும்
யாவாரத்தைப் பாத்துட்டுப் போவோம், இந்தாங்க, பழத்தைப்பிடிங்க” என்றபடி
மாம்பழங்களைக் கையில் திணித்தாள் தாயம்மா.
பேச்சு வாக்கில்
மகளைப் பற்றி எப்போதோ அவர் சொல்லியிருந்தை இப்போதுதான் நினைவுபடுத்திக்கொண்டாள் நீலா.
காலை நடையின் துண்டு துணுக்கான சின்னச் சின்ன உரையாடல்கள்…, இடைவெட்டித் தடைப்பட்டுப்
போகும் பேச்சுக்கள்..இவற்றுக்கு இடையே தனிப்பட்ட விலாசங்கள், ஃபோன் எண்கள், குடும்ப
விஷயங்கள் என்று எதையுமே அவர்கள் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கவில்லைதான்..
‘கத்தாரிலுள்ள மகள்
வீட்டில்...,அந்தக் கொடும்பாலை வெம்மையில் சந்திரா இன்னும் கூட
வெயிலை நேசித்துக்கொண்டுதான் இருப்பாரா,அல்லது… அந்த தகிப்புக்கு
மாற்றாகக் குளிரூட்டப்பட்ட வீட்டுக்குள்ளேயே
இருந்து என்னைப்போல அவரும் வலிகளை வரவழைத்துக் கொண்டு விடப்போகிறாரா?’
’எப்படியோ
ரயில் சினேகத்தைப் போல இதுவும் ஒரு வெயில் சினேகம்! ‘ - மனதில் குடையும்
யோசனைகளோடு இயந்திரத்தனமாய்க் காசை எண்ணிக்கொடுத்து விட்டுப் பூட்டைத் திறந்து
கொண்டு உள்ளே வந்த நீலா, அநிச்சையாகத்
தொலைக்காட்சியையும் மின்விசிறியையும் ஆன் செய்தாள்.
‘’சூரியஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்
வீச்சிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாத்துக்கொள்ள எங்கள் ‘சன்ஸ்க்ரீன் லோஷ’
னைப்பயன்படுத்துங்கள்’’ என்ற விளம்பரம் அதில் ஓடியபடியிருக்க, நீலாவின் ‘டி’ வைட்டமின் இப்போது
கூடியிருப்பதைத் தெரிவிக்கும் மருத்துவ அறிக்கை பக்கத்து மேஜையில் கிடந்தபடி காற்றில்
படபடத்துக்கொண்டிருந்தது.