31.12.09
புத்தாண்டுச் சிந்தனைகள்
உலக நலவேட்பு
’’உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்
உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்
உலகில் போர்பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம் காத்து வாழ வேண்டும்
உலகெங்கும் மனிதகுலம் அமைதி என்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்’’
உலக நலவாழ்த்து
‘’உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்!
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்!
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்!
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டைப் பெருக்கட்டும்!
கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்!
கல்லாமை,கடன்,வறுமை களங்கங்கள் மறையட்டும்!
நல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்!
நம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!’’
1955ஆம் ஆண்டில் தத்துவ ஞானி திரு வேதாத்திரி மகரிஷிகள் அருளிய இக் கவிதை வரிகள் , போரும், பகைமையும் ,பூசலும்,போட்டியும் உலகெங்கும் தலை விரித்தாடும் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது அந்த மகானின் தீர்க்க தரிசனத்தை ஒரு புறம் எடுத்துக் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும்,50 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த நிலைமையில் மாற்றம் எதுவுமில்லை என்பதும், நாளுக்கு நாள் மனித மனதின் வன்மங்களும்,குரூரங்களும் இன்னும் கூடக் கூடுதலாகிக் கொண்டே செல்கின்றன என்பதும் மனச்சாட்சி கொண்டோரை முள்ளாக வதைக்கும் ரணங்கள்.
ஒரு பகல்...ஓரிரவில் மாற்றங்கள் - அதிலும் முழுமையான நன் மாற்றங்கள் சாத்தியமில்லாமல் இருக்கலாம்.ஆனால் மனித குலத்தின் நூற்றாண்டுத் துயில்கள் என்றுதான் கலையும்?
அந்த விடியலின் வெளிச்ச ரேகைகள், புலரும் இந்தப் புத்தாண்டிலாவது ஒளியைக் கூட்டுமென்ற
நம்பிக்கையோடு புத்தாண்டின் வரவை எதிர் கொள்வோம்.
‘’போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாக’’ட்டும்!
17.12.09
ஆண்டாளின் ’பெண்பேச்சு’
ஆணின் எழுதுகோலை இரவல் வாங்கி,அவன் உருவாக்கி வைத்த மதிப்பீடுகளையே வழிமொழிந்து கொண்டிருந்த சில சங்கப் பெண்பாற்புலவர்களைப் போலன்றி,
(சான்று; ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்ற பொன்முடியாரின் புறப்பாட்டு)
இயல்பான சுயேச்சையுடன்,தனித்த ஆளுமையுடன் தமிழ்க் கவிதை வெளியில் முகம் காட்டியவள் ஆண்டாள்.
பெண்ணின் அகவெளியைக் கட்டற்றுப் பதிவு செய்த அவள் பாடல்கள்
(காண்க;
ஆண்டாளின் பெண்மொழி -1
ஆண்டாளின் பெண்மொழி -2
ஆண்டாளின் பெண்மொழி -3)
பெண்கள் சஞ்சரிக்கும் புற வெளிகளையும்,அவ் வெளிகளில் கேட்கும் சிறு சிறு ஒலிகளையும் ,அங்கே பெண்களுக்கே உரியதாய் நிகழும் உரையாடல்கள்,கேலிப் பேச்சுக்கள்,சீண்டல்கள் ஆகியவற்றையும்,அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள்,தயாரிக்கும் உணவுகள்,அணியும் அணிகலன்கள்,ஈடுபடும் தொழில்கள் ,அவர்களுக்கே உரிய கலைத் திறன்கள் ஆகியவற்றையும் மிக நுட்பமாகப் படம் பிடித்திருப்பதைத் திருப்பாவைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.
‘’ உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்...’’-தி.பாவை,7
‘’முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட..’’- 11
(பெண்ணின் வெளி)
‘’புள்ளும் சிலம்பின காண்’’ -6
‘’கீசுகீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ.....’’ -7
(வெளியின் ஒலிகள்)
‘’நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்’’-5
(பெண்ணின் சடங்குகள்)
’’...பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழி வார....’’ -27
‘’காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம்....’’ -7
‘’வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்’’ (நாச்சியார்திருமொழி -2.5)
(பெண்ணின் கலைத் திறன்,அவள் ஈடுபடும் தொழில்கள்)
‘’பெண்மொழியை உருவாக்கப் பேச்சுமொழி மரபில் தோய்வது பயனுள்ளதாக அமையலாம்’’
என்ற நவீனப் பெண்ணியக் கருத்தாக்கத்தை ஒட்டித் திருப்பாவைப் பாடல்களில் ’பெண்பேச்சு’என்பது மிக மிக இயல்பாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
ஒத்த வயதுள்ள இளம் சிறுமியர் ஒருவரை ஒருவர் செல்லமாகப் ‘பிள்ளை’ என அழைத்துக் கொள்ளும் தென்பாண்டித் தமிழும்,
‘’பிள்ளைகளெல்லாம் பாவைக் களம் புக்கார்’’-தி.பா-13
‘’மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை’’-8
‘எலே’என்ற பழகு தமிழ் விளியை ’‘எல்லே இளங்கிளியே’’ என ஆக்கி,அந்தப் பாடல் முழுவதையுமே இரண்டு பெண்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலாகவே அமைத்திருப்பதும் பேச்சுமொழி மரபில் ஆண்டாள் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டும்.
‘பெண் பேச்சு’க்குரியதாகச் சுட்டப்படும் மற்றொரு பண்பான எளிமைத் தன்மையினையும் ஆண்டாளின் கவிதைகள் பெற்றிருக்கின்றன.
ஔவையின் கவித்திறன் பற்றித் தன் கட்டுரை ஒன்றில் விளக்கும் பாரதி,
‘’சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கவிதைத் தொழிலில் ஔவை ஒப்பற்றவள் ....அவள் நூல் ‘மிகத் தெளிந்த , மிக எளிய தமிழ் நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கிறது’’என்பார்.
இதே தன்மைகளை ஆண்டாள் பாடல்களுக்கும் பொருத்திக் காட்ட முடியும்.
‘’கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும்
ஊட்டக் கொடாது செறுப்பனாகில்
உலகளந்தான் என்று உயரக் கூவும்’’(நாச்சியார்திருமொழி-12.9)
என்ற நாச்சியார் திருமொழி வரிகளும்,பாவைப்பாடல்களின் பல பகுதிகளும் ஆண்டாளின் கவிதை எளிமைக்குக் கட்டியம் கூறுபவை.
ஆண்டாளின் கவிதைகள் தன்னுணர்வு வெளிப்பாட்டைப் பெரிதும் தாங்கியுள்ளபோதும்,உலகப் பொது நலன்,சமுதாயப் பொது நோக்கம் ஆகிய கருத்துக்களும் அவற்றில் தென்படாமலில்லை.
பாவை நோன்பு நோற்பதால், கண்ணனுக்கு ஆட்செய்யும் சுய லாபம் தனக்குக் கிடைப்பதோடு,
நீர்வளம்,பயிர்வளம்,பால்வளம் ஆகிய மூன்றும் உலகிற்குக் கிட்டவேண்டுமென்ற தணியாத வேட்கையையும் பாவைப் பாடல்களில் பதிவு செய்கிறாள் ஆண்டாள்.
‘’தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல்’’ விளைந்திடவும்,
‘’வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்க’’ ளின் வழியே‘’நீங்காத செல்வம்’’
நிறைந்திடவும் அவாவுகிறது அவள் மனம்.(தி.பா-30)
மழை வேண்டி ‘’ஆழிமழைக் கண்ண’’னைப் பாடும்பொழுதும் கூட,மிகக் கவனமாக அந்த மழை ,அழிக்கும் மழையாக இருந்து விடாமல்,‘ஆக்கும் ‘மழையாகவே இருக்க விரும்பி,
‘’வாழ உலகினில் பெய்திடாய்’’(தி.பா-4)
என்று உலகைச் செழிக்க வைக்கும் மழையையே மனமார வரவேற்று வாழ்த்துப் பண் பாடுகிறாள் அவள்.
நோன்பு முடிந்து பாற்சோறு உண்ணும் கட்டத்திலும் கூட அனைவருமாய்க் ‘’கூடியிருந்து குளி’’ர்வதையே அவள் விரும்புகிறாள்.
‘’கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்’’(தி.பா -27)
ஆண்டாளின் உலகளாவிய இந்தப் பார்வையே அவளது தனித்த ஆளுமைக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.
மதமும்,சடங்குகளும் கடந்த புரிதலோடு ஆண்டாளின் பாடல்களை அணுகும்போது மேலும் புதிது புதிதான வாயில்கள் நமக்காகத் திறக்கும்.
15.12.09
சுகந்திடீச்சருக்கு வீரவணக்கம்
கல்விக் கொள்ளையர்கள் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வோடு விளையாடும் சாஸ்வதமான அவலம்,கும்பகோணத்தைப் போலவே நாகப்பட்டினத்துக்கு அருகே நிகழ்ந்த ‘வேன்’விபத்தின் மூலமும் சம்பவித்திருக்கும் சூழலில்,இன்னமும் கூட மனிதப் பண்புகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது அந்த விபத்தில் தன் உயிரைத் துறந்திருக்கும் ஆசிரியை சுகந்தியின் வீர மரணம்.
உண்மையில் சொல்லப்போனால்,அந்த ஆசிரியை ,தன் உயிரை வலியத் துறந்திருக்கிறார்என்றுதான் கூற வேண்டும்;அவர் நினைத்திருந்தால் வேன்,குளத்தில் நிலை தடுமாறி விழுந்த மறு விநாடியே அதிலிருந்து வெளிப்பட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்.ஆனால் அவரது தாய் மனம்- மாணவர்கள் மீது மெய்யான நேசம் கொண்டிருந்த அந்த நிஜமான ஆசிரிய உள்ளம் ,தன் துன்பத்தைவிட அந்தக் குழந்தைகளுக்கு நேர்ந்த அவலத்தை எண்ணியே கசிந்தது; கள்ளக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்காமல் காரியத்தில் முனைப்போடு இறங்கித் தன் உயிரையே காணிக்கையாக்கியது.
‘’கட்டளைவெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை சுகந்தி ,பள்ளியில் சேர்ந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது.தினமும் அந்த வேனிலேயே செல்லும் அவர் அந்தக் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராம்.வேன் குளத்தில் விழுந்ததுமே நீந்தி வெளியே வர முயன்றிருக்கிறார்.குழந்தைகள் தண்ணீருக்குள் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பதறி..அடுத்த கணமே உள்ளே மூழ்கியவர் , நான்கு குழந்தைகள் வரை வெளியே கொண்டுவந்து காப்பாற்றி விட்டார்.ஐந்தாவது தடவை உள்ளே போனவர் ...இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் மூச்சு முட்டி உயிரை விட்டுவிட்டார்.உடலைக் கரையேற்றும்போதும் அந்த இரு குழந்தைகளையும் கையில் இறுகப் பிடித்தவாறே சுகந்தி டீச்சர் இருந்த காட்சியைப் பார்த்துக் கிராமமே விம்மியது’’- ஜு.வி.09.12.09
’மகராசி!சுகந்தி ஆசிரியை மட்டும் குப்புறக் கவிழ்ந்த வேனுக்குள்ள இல்லன்னா இன்னைக்கு எங்க எல்லாப் புள்ளைகளையும் இழந்துட்டு நாங்க அனாதையாயிருப்போம்.பாவம் அந்தப் பொண்ணு உசிரக் கொடுத்து எங்க புள்ளகளக் காப்பாத்தியிருக்கு’என,குழந்தைகள் பலரையும் உயிரோடு மீட்ட ஆசிரியை சுகந்தியைப் பற்றிப் பெற்றோர் பலரும் கண்ணீர் ததும்பப் பேசுகின்றனர்.’’-குமுதம்,16.12.09
மிக எளியதொரு வாழ்க்கைப் பின்னணியிலிருந்து கல்வி என்ற பிடிமானத்தால் ஆசிரிய நிலைக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு படிப்படியாகத் தானும் உயர்ந்து,தன் குடும்பத்தையும் உயர்த்துவதற்கு ஆயத்தமாகி வந்த சுகந்தியின் மரணம்,அந்தக் குடும்பத்திற்கு மட்டும் நேர்ந்த ஒரு இழப்பல்ல;மாணவர்களை மரக்கட்டை போல நடத்தி வரும் பல ஆசிரியக் கொடுமனங்களுக்கிடையே அத்தி பூத்தாற்போல எப்போதாவது தோன்றும் இப்படிப்பட்ட நல்லாசிரியர்களின் மறைவு கல்வித் துறைக்குமே கூட ஒரு பேரிழப்புத்தான்.
பள்ளியிலும்,கல்லூரியிலும் முதல் மாணவி என்ற பெருமை பெற்றிருந்த சுகந்தி,
’’உண்டாலம்ம இவ்வுலகம்.....
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’
(தனக்காக மட்டுமே வாழாமல் மற்றவர்களுக்காகவும் வாழும் ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’களால்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது)
என்ற புறநானூற்று வரிகளைப் படித்திருக்கலாம்;படிக்காமலும் இருந்திருக்கலாம்.
அது இங்கே முக்கியமில்லை.
வாழ்க்கையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் ஆக்கிக் கொண்டு விடாமல் தன் இன்னுயிரையே விலையாய் ஈந்து பல இளம் மழலைகளைக் கரை சேர்த்துக் குறைவான தன் ஆயுளுக்கு நிறைவான ஒரு பொருளை...அழியாத ஒரு புகழைத் தேடிக் கொண்டுவிட்டார் சுகந்தி.
வார்த்தைக்குள் அடங்காத அவரது மகத்தான தியாகத்துக்கு முன்பு மண்டியிட்டுக் கண்பனிக்க அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த வேளையில்.....இப்படிப்பட்ட இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும் நாளும் விடியாதோ என்ற சிந்தனையில் இதயம் கனக்கிறது.
11.12.09
பாரதியின் உரைவீச்சு
நன்றி;
பாரதி பிறந்த நாளை ஒட்டி இந்த வலைப் பதிவை இட எண்ணியபோது என் நெஞ்சிற்கு மிகவும் நெருக்கமான பாரதியின் ஓவியம் இப் பதிவில் இடம் பெற வேண்டுமென்று விழைந்தேன்;அது திரு ஞாநியின்(’தீம்தரிகிட’,பரீக்ஷா’,’ஓ பக்கம்’) பாரதியன்றி வேறெதுவுமில்லை.அந்த ஓவியம் முறையான ஒப்புதலின்றிப் பலராலும் பயன்படுத்தப்படுவதும்,விருப்பம் போல மாற்றியமைக்கப்படுவதும் ஞாநியின் உள்ளத்தைப் பலமுறை புண்ணாக்கிக் காயப்படுத்தியிருப்பதை அறிந்திருக்கிறேன்.அதனால் மின் அஞ்சலில் அவரது முழு ஒப்புதலைப் பெற்ற பிறகே என் தளத்தில் அதை வெளியிட முனைந்தேன்.
பாரதியின் சமூகக் கோபத்தை வாழையடி வாழையெனத் தொடர்ந்து, அவன் கொளுத்தி வைத்த ‘அக்கினிக் குஞ்சுக்கு’ எழுத்து நெய் ஊற்றிப் பெருந்தணலாக்கப் பல தடைகளுக்கிடையிலும் இடைவிடாது முயன்றுவரும் சமூகச் சிந்தனையாளரும்,பத்திரிகையாளரும்,நாடக,ஓவியக்கலைஞருமான ஞாநிக்கு-அவர் தந்த ஒப்புதலுக்காக நன்றி.
இனி...கட்டுரை....
கல்வித் தளத்திலும்,அறிவுசார் ஆய்வுத் தளங்களிலும் சிறந்த கட்டுரையாளனாகவும்,உரைநடைப் படைப்பாளியாகவும் அறியப்பட்டுள்ள பாரதியை வெகுஜனத் தளத்தில் அவ்வாறு முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.ஓரளவு படிப்பறிவு பெற்ற மக்கள் மத்தியிலும் கூட மகாகவிஞன் என்ற பாரதியின் பிம்பமே அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது.
மேற்குறித்த நிலைப்பாட்டுக்கு நேர்மாறாகப் பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த பொதுமக்கள்,அவனது உரை வீச்சை நுகரும் பேறு பெற்றிருந்தனர்.பாரதி ஒரு பத்திரிகையாளன் என்பதும்,நாளிதழ்களுக்காக அன்றாட அரசியல்,சமூக நடப்புக்களையும் ,பரவலான பிற செய்திகள் பலவற்றையும் எழுதியாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்ததுமே அதற்கான முதன்மைக் காரணங்கள்.
’சக்கரவர்த்தினி’,’விஜயா’ எனப் பல இதழ்களிலும் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதிக்குத் தான் சொல்ல நினைத்த செய்திகளை உரைநடை என்ற ஊடகம் வழியே கொண்டு சென்றாக வேண்டிய கடப்பாடு இருந்தது.
கவிதைக்கு உரிய இயல்புகளான இறுக்கம், செறிவுஆகியவற்றைத் தளர்த்திக் கொண்டு,நேரடியான நடையில் , மிக எளிமையான போக்குடன் தன் கருத்துக்களை இதழ்க் கட்டுரைகளில் முன் வைத்தாக வேண்டிய பொறுப்பைப் பாரதி மிகத் தெளிவாக உணர்ந்திருந்ததை வசன நடை குறித்த கீழ்க்காணும் அவனது விளக்கம் எடுத்துக் காட்டுகிறது.
‘’தமிழில் வசன நடை இப்போதுதான் பிறந்து பல வருஷமாகவில்லை....ஆதலால்,இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக்காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி,ஒரு கதை அல்லது தர்க்கம்,ஒரு சாஸ்திரம்,ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.....கோணல்,திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும்.....வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு,ஒளி,தண்மை,ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும்.இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை’’(பாரதி கட்டுரைகள்-பக்.232-233)
பிறவிக் கவிஞனாகவே அமைந்திருந்த பாரதி மேற்சொன்ன அளவுகோலின்படி அமைந்த நெகிழ்வான உரைநடையையும் - கவிதையோடு சேர்ந்தாற்போல் -அதே காலகட்டத்திலேயே லாவகமாகக் கையாண்டிருப்பது , மொழியைத் தன் வசமாக்கி வைத்திருந்த அவனது மேதமையினையே எடுத்துக்காட்டுகிறது.
மிக இறுக்கமாகப் பின்னிக்கொண்டுபோகும் கவிதைவரிகள், கூடியவரை வடசொற்கலப்பைத் தவிர்த்தனவாய் அவற்றில் காணக் கிடைக்கும் தமிழ்ச்சொற்கள் எனக் கவிதையில் தான் கையாளும் போக்குக்குக் கொஞ்சம் கூடத் தொடர்பே இல்லாதபடி
‘’ஜீவ ஹிம்சை கூடாது;மதுமாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது.மது மாம்ஸங்கள் இல்லாதிருத்தல் ...பெரிய தவம்.அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடிய அநுஷ்டானம்’’
(பாரதிகட்டுரைகள் பக்.289)
எனச் சரளமாக வட சொற்கள் வந்து விழுவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் சிறு சிறு வாக்கியங்களில் தன் கட்டுரைகளை நேராகக் கட்டமைக்கிறான் பாரதி.
கவிதை அழகியலுக்காகவும்,அதன் வடிவச் சுருக்கத்திற்காகவும் நுட்பமாகவும்,குறிப்பாகவும் கூறிய செய்திகளை எந்தப் புறப்பூச்சும் இல்லாமல் பட்டவர்த்தனமாகப் பிரகடனம் செய்யவும்,உள்ளது உள்ளபடி நேரடியாக முன் வைக்கவும் கூடப் பாரதிக்குக் கட்டுரை என்ற ஊடகம் கை கொடுக்கிறது.
''ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையும் கற்பழிந்திடாதோ?
நாணமற்ற வார்த்தையன்றோ வீட்டைச் சுட்டால்
நலமான கூரையும்தான் எரிந்திடாதோ..’’
என்று தான் முன்வைத்த கவிதை வரிகளுக்குத் தன் கட்டுரை வழி மிக விரிவான-மிகக்கடுமையான விளக்கத்தைப் பின்வருமாறு அளிக்கிறான் பாரதி.
‘’ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.அதிலே கஷ்டம் என்னவென்றால் ஆண்பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தம் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல் இதர ஸ்த்ரீகளின் பதி விரத்யத்திலே காட்டுவதில்லை....அட பரம மூடர்களா ! ஆண்பிள்ளைகள் தவறினால்,ஸ்த்ரீகள் எப்படி பதிவிரதைகளாக இருக்க முடியும்?.....பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனேதான் வாழ்கிறார்கள். இதனிடையே பதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்த்ரீகளைப் புருஷர்கள் அடிப்பதும்,திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன’’
(பாரதி கட்டுரைகள் பக்.293-294)
சமூகச் செய்திகளை எழுதும்போது இவ்வாறு சினத்தோடு வெடித்துக் குமுறும் பாரதியின் உரைநடை , இயற்கை சார்ந்த..ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்துகையில் கவித்துவம் பெற்றுவிடுவதையும் காண முடிகிறது.
சிட்டுக் குருவியைப் போல ‘விட்டு விடுதலை’யாகி நிற்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி,விடுதலையின் குறியீடாகவே அதைக் கொண்டாடிய பாரதி,
‘’சிறிய தானியம் போன்ற மூக்கு;சின்னக் கண்கள்;சின்னத்தலை;அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு;கருமையும்,வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு;சிறிய தோகை;துளித்துளிக் கால்கள்’’
எனச் சிறு சிறு சொற்றொடர்களைத் தொடுத்தபடி தனது உரை வருணனையாலேயே சிட்டுக் குருவிக்கு ஒரு தூல வடிவத்தை அளித்து விடுகிறான்.
தமிழ்ப் புதுக் கவிதைக்கு அடித்தளம் அமைத்துத்தந்த வசன கவிதையின் முன்னோடி,பாரதி.வசன கவிதைக்கான அந்த வித்துக்களைத் தத்துவம் சார்ந்த அவனது கட்டுரைகளில்தான் மிகுதியாகக் காண முடிகிறது.
’’நான் அமரன்;எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக...,நாட்கள் ஒழிக...,பருவங்கள் மாறுக...,ஆண்டுகள் செல்க...,நான் மாறுபட மாட்டேன்.நான் என்றும் உயிர்வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன்.எப்போதும் களித்திருப்பேன்....
நான் கடவுள் , ஆதலால் சாக மாட்டேன்....
நான் எப்போதும் வீர்யமுடையேன்;ஜாக்ரதை உடையேன்;
எப்போதும் தொழில் செய்வேன்;எப்போதும் காதல் செய்வேன்;
அதனால் சாதல் இல்லேன்.......
நான் தீராத இளமை சார்ந்தேன்.....
நான் கவலையை ஒழித்தேன்
ஆதலால் எப்போதும் வாழ்வேன்...எப்போதும் வாழ்வேன்’’
(பாரதி கட்டுரைகள்-பக்.172,173.)
என்பது போன்ற பாரதியின் கட்டுரை வரிகளை அவனது வசன கவிதை வரிகளுக்குப் பக்கத்தில் நிறுத்திப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையிலுள்ள கட்டமைப்பு ஒற்றுமை மிகத் தெளிவாகப் புலப்படுவதோடு,பாரதியின் தத்துவ வேட்கையும்,அதன் மீதான அவனது தேடல்களும் ,தரிசனங்களுமே மரபார்ந்த எல்லைக் கோடுகளை மீறி வசன கவிதைக்கு அவன் வாயில் அமைத்துக்கொண்டதற்குக் காரணம் என்பதையும் புரிய வைக்கின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும்,இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழில் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்த தமிழ் உரைநடையின் புனைகதை வடிவங்களாகிய சிறுகதை,நாவல் ஆகிய உரை ஊடகங்களிலும் பாரதியின் எழுதுகோல் குறிப்பிடத்தக்க முத்திரைகளைப் பதிக்கத் தவறவில்லை.
தமிழ்ச் சிறுகதையின் தளர்நடைப் பருவத்தில் அதன் முன்னோடிகளில் ஒரு சிறப்பிடம் பெற்றவனாகப் பாரதி திகழ்ந்திருக்கிறான். மேலை இலக்கிய அளவுகோல்களை அவனது சிறுகதை வடிவங்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாதென்றபோதும் - இந்திய வாய்மொழி மரபின் வழிவந்த புனைகதைப் பாணியை உட்செரித்துக்கொண்டு,பஞ்ச தந்திரக்கதைகளின் போக்கைத் தழுவி ‘நவதந்திரக் கதை’களையும்,சிறு சிறு வேடிக்கக்கதைகள் பலவற்றையும் உருவகப் போக்கில் உருவாக்கிக் கதை இலக்கியம் சார்ந்த உரைநடைப் பரப்பை விரிவும்,ஆழமும் பெறச் செய்திருக்கிறான் பாரதி.
தலித்தியம்,பெண்ணியம் ஆகிய நவீன இலக்கியக் கோட்பாடுகள் பரவலாக அறியப்பட்டிருக்காத காலகட்டத்தில் அவனது ‘பஞ்ச கோணக் கோட்டை’யும்,’சந்திரிகையின் கதை’யும் முறையே அவ்விரு கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சென்றிருக்கின்றன.நவீன,பின் நவீன இலக்கியத் தளங்களில் இன்று முன்னிறுத்தப்படும் மீயதார்த்த,மாய யதார்த்தக் கூறுகளின் சில சாயல்கள் , பாரதியின் மிகு கற்பனை உரைநடைக் காவியமான ‘ஞான ரத’த்தில் காணக் கிடைக்கின்றன.
விதவை மறுமணத்தை வலியுறுத்துவதற்காகவே பாரதி எழுதத் தொடங்கிய ‘சந்திரிகையின் கதை’என்ற நாவலும்,அவனது தன் வரலாற்றைக் கூறும் ‘சின்னச் சங்கரன் கதை’யும் அரைகுறையாக முடிந்து விடாமல் அவனால் முழுமைப்படுத்தப்பட்டிருக்குமானால்,நாவலாசிரியன் என்ற பரிமாணத்தையும் பாரதி குறைவறப் பெற்றிருக்கக்கூடும்.
பாரதியின் பாடல்களில் ஆங்காங்கே தலை காட்டும் அங்கதச்சுவை , அதன் முழுமை குன்றாமல் விரிவாக வெளிப்பட அவனது கதை இலக்கியம் துணை செய்திருப்பதைப் பல இடங்களில் காண முடிந்தாலும் அவனது ‘சின்னச் சங்கரன் கதை’அங்கத உரைநடையின் உச்சமாகவே விளங்குவதை எடுத்துக் காட்டக் கீழ்க்காணும் ஒரு சான்றே போதுமானது.
‘’....வெளி முற்றத்தில் கோழிச் சண்டை நடக்கும்.வெளியூரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச் சேவல் கொண்டு வருவான்;அரண்மனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டை விட்டுப் பார்ப்பார்கள்....பெரும்பாலும் சண்டை முடிவிலே அரண்மனைக் கோழிதான் தோற்றுப் போவது வழக்கம்....பிறகு பழைய அரண்மனைச் சேவலைத் தள்ளிவிட்டுப் புதிதாக வந்த சேவலைச்’சமஸ்தான வித்வா’னாக வைப்பார்கள்....எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனூர் அரண்மனைக்கு வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது.ஜமீன் போஷணையிலேயே அந்த நயம் உண்டாகிறது’’
(பாரதியார் கதைகள்-’சின்னச் சங்கரன் கதை’ப.278)
தமிழ்க் கவிதைப் பரப்பைச் செழுமைப்படுத்தியது போலவே தமிழ் உரைநடையிலும் வீரியத்தோடும்,முழுவீச்சோடும் முனைந்து இயங்கியிருக்கிறான் பாரதி என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருப்பவை அவனது உரைநடை ஆக்கங்கள் என்பது உண்மை..வெறும் புகழ்ச்சியில்லை.
(04.12.,09 அன்று,மதுரை பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையும்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் இணைந்து நடத்திய ’பாரதியின் பன்முகப் பார்வை’குறித்த தேசியக் கருத்தரங்கிற்கு அனுப்பப்பட்ட கட்டுரை)
5.12.09
மனவளக்கலைக்கு மாண்பு சேர்த்த தமிழ்ச்சங்கம்
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தொப்பியில் மேலும் ஒரு இறகு...
'கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்று காந்தியடிகள் அடிக்கடி குறிப்பிடும் வாசகம்,சமூக,பொருளாதார,வாழ்வியல் முன்னேற்றம் சார்ந்தது மட்டுமல்ல;
ஆன்மீக முன்னேற்றத்தையும் கூட உள்ளடக்கியதாகத்தான் அந்தத் தொடர் அமைந்திருக்கிறது.
ஆன்மீகம் எனப்படும் மெய்ஞ்ஞானம்,காட்டில் சென்று கடுந்தவம் புரிபவர்களுக்கும்,வேத உபநிடதங்களையும்,அவற்றின் சாரங்களையும் கற்றுக் கரை தேர்ந்த பண்டித விற்பன்னர்களுக்கு மட்டுமே சொந்தமானது...,அது அவர்களுக்கு மட்டுமே தேவைப்படுவது..., அல்லது அது அவர்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது ஆகிய மாயைகளெல்லாம் தகர்ந்து கொண்டிருக்கும் யுகம்,இன்றைய காலகட்டம்.
தன்னை அறிவதும்,தன்னில் இறைநிலை உணர்வதும்..படிப்பறிவில்லாத சாமானியன் முதல் லௌகீக வாழ்க்கைப் போராட்டங்களில் நாளும் சிக்கித் தவிக்கும் நடுத்தர..உயர் வர்க்க மனிதன் வரை அனைவருக்குமே இன்று தேவையாக இருப்பவைதான்!
இந்த மகத்தான உண்மையை ஐயமற உணர்ந்திருந்த காரணத்தினாலேதான்,எதிர்ப்புச் சக்திகள் பல இடைமறித்தபோதும் தான் கண்டுகொண்ட மெய்ப்பொருளின் சாரம் சகலருக்கும் போய்ச் சேரவேண்டும் என்று, திருக்கோஷ்டியூர்க் கோயிலின் கூரை மீது நின்று கூவி அழைத்தார் இராமானுஜர்.
’’தாமின்புறுவது உலகு இன்புறக் கண்டு’’ மகிழும் அத்தகைய சான்றோர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதற்குக் கண் கூடான சான்றாக - மிக அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர் , அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
வறுமையானதொரு குடும்பப் பின்னணியில்,ஏழை நெசவாளர் குடும்பத்தில் வாழ்வைத் தொடங்கி, ஏட்டுக் கல்வியில் மூன்றாம் வகுப்பையே எட்டிய அவர்,மெய்ஞ்ஞான அனுபவ சித்தியில் பல சிகரங்களைத் தொட்டவர். அந்தச் சிகரங்களை நோக்கிய பாதையில் அனைவரும் பயணிப்பதற்காகவே
‘எளிய முறைக் குண்டலினி யோகம்’(Simplified kundalini yoga- SKY ),மற்றும் உயிருக்கு உரமூட்டும் ’காயகல்பயோகம் ’ ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்
’மனவளக் கலை’ என்னும் அரிய கலையை மிக மிக எளிய வழிமுறைகளால் இலகுவாக்கி உலகுக்குத் தனது அருங்கொடையாக நல்கிச் சென்றிருக்கும் மகான் அவர்.
‘ஒரு நாமம் ஓருருவம் இல்லாத’ கடவுளுக்கு ஆயிரம் கோயில்கள் சமைக்கும் இந்த மண்ணில் , ‘அறிவுத் திருக் கோயில்’என்ற பெயரில் அறிவுக்கென்றே ஒரு கோயிலை ஆழியாற்றில் அமைத்து , அதன் சேவைகள் தனிமனித அகமுக நோக்குடன் முடங்கிப் போய்விடக்கூடாது என்பதற்காகவே ,தான் நிறுவிய அமைப்புக்கு ‘உலக சமுதாய சேவா சங்கம்’ என்ற பரந்த தளத்திலான அடையாளத்தை அளித்தவர்; எல்லாத் தரப்பினரையும் எளிதாகச் சென்று சேர்வதற்காக ’வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’என்ற எளிதான தாரக மந்திரத்தை வழங்கியிருப்பவர்.
தானுரைத்த செய்திகள் தில்லி வாழ் மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டிய மகரிஷி அவர்கள், தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அடியெடுத்துக் கொடுத்துத் தொடங்கி வைத்த புது தில்லி மண்டல உலக சமுதாய சேவா சங்கம், பல மனவளக் கலை மன்றக் கிளைகளோடு வளர்ச்சி பெற்று 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தலைநகரில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.
இம் மன்றத்தின் செயல்பாட்டுக்கு ஊக்கமும் ஆக்கமும் சேர்க்கும் வகையில்,புது தில்லி தமிழ்ச் சங்கம் அண்மையில்-நவ.8ஆம் தேதி ஞாயிறு மாலையில் - மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்தி, அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்து விட்டது.
மகரிஷியின் அணுக்கத் தொண்டராக விளங்கியவரும், கொங்கு மண்டலத்தின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரும்,
மகரிஷிக்குப் பிறகு அவரது பணியைத் தொடர்ந்து ஆற்றி, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவராக விளங்குபவருமான திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு,
‘அறிவுத் திருக்கோயில்’, மற்றும் ‘தியானம்’ முதலியவை குறித்த ஆவணப் படங்களின் திரையிடல் ஆகியவற்றை அற்புதமாக நடத்திக் காட்டியதன் வழி, மகரிஷி அவர்கள் அருளிய ’மன வளக்கலை’ க்குத் தில்லியில் வலுவானதொரு அடித்தளத்தைத் தமிழ்ச்சங்கம் அமைத்துத் தந்து விட்டதென்றே கூறலாம்.
அதற்கு உறுதுணையாக விளங்கிய தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும்,பொதுச் செயலாளர் திரு.பெருமாள் அவர்களும் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றிய மையப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் திரு.டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள்,உலகளாவிய ஆன்மீக இயக்கங்கள் பலவற்றிலும் தொடர்பு கொண்டிருப்பவர் ; அவற்றிலெல்லாம் காணக் கிடைக்காத எளிமையும்,நேரடித்தன்மையும், பகைவனையும் நெஞ்சில் நிறுத்திப் பாசத்தோடு வாழ்த்துரைக்கும் பண்பும் வேதாத்திரி மகரிஷிகள் அருளிய யோகக் கலையில் செறிந்திருப்பதை உணர்ந்து தெளிந்து, மகரிஷி வாழ்ந்த காலம் முதலாகவே அறிவுத் திருக்கோயிலோடு நெருக்கமான உறவைப் பேணி வருபவர்.
தனது தலைமை உரையில் மகரிஷியின் பாடல்கள் சிலவற்றின் வழி அவரது மேன்மையைக் கோடிட்டுக் காட்டிய திரு கார்த்திகேயன்,காமம்,குரோதம் ஆகிய அறுகுணங்களையும் சீரமைக்கும் அற்புத மருந்தை அறிவியல் அடிப்படைகளோடு நல்கியிருக்கும் ‘மன வளக் கலை’இன்னும் விரிந்த தளத்தில் உலகெங்கும் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்ற தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
திரு கார்த்திகேயனின் தலைமை உரைக்குப் பின்பு சிறப்புச் சொற்பொழிவாற்றிய உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்,
‘’வாழ்வில் வளமை,சிந்தையில் இனிமை’’என்ற பொருளில் மகரிஷியின் கோட்பாடுகளை அடிநாதமாகக் கொண்டு அற்புதமாக உரையாற்றினார். மரபார்ந்த சொற்பொழிவாக அடுக்கு மொழியிலோ,அலங்கார நடையிலோ பேசாமல்,நெஞ்சுக்கு நெருக்கமான எளிமையான நடையில்,மிகவும் யதார்த்தமான பாணியில்,அன்றாட உலகியல் நடப்பை ஒட்டிய செய்திகளை நகைச்சுவையோடு கலந்து அவர் சொல்லிக் கொண்டு போன பாணி,ஆழ்ந்த ஆன்மீக விசாரங்கள் பாமரனையும் சென்று சேர வேண்டும் என்று மகரிஷி கொண்டிருந்த பேரவாவைப் பெருமளவில் நிறைவு செய்தது; தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கம் முழுவதும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ,கொஞ்சமும் கலைந்து போகாமல் - குன்றாத ஆர்வத்துடன் அவரது உரையைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த ஒன்றே அதற்குச் சிறந்த அத்தாட்சி.
‘வடக்கு வாசல்’ ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்,பிறகு மேடையில் குறிப்பிட்டதைப் போல நமக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம் பக்கத்திலிருந்து பேசிக் கொண்டிருந்ததைப் போன்ற மனம் திறந்த ஒரு பேச்சாகக் கபடற்ற எளிமையுடன் -அதே வேளையில் தலைப்பை விட்டு விலகிப் போகாமல் அமைந்திருந்தது திரு மயிலானந்தன் அவர்களின் உரை.
தில்லியில் மண்டலக் கிளை தொடங்கும் ஆர்வத்தை மகரிஷியிடம் தோற்றுவித்தது திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள் அளித்த உந்துதலேஎன்பதைக் குறிப்பிட்ட திரு மயிலானந்தன், தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கிளை பரப்பி விரியவும்,தமிழகப் பள்ளி,மற்றும் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் மனவளக்கலை இடம் பிடிக்கவும் ,தான் மேற்கொண்ட முயற்சிகள் பலவற்றுக்கும் திரு கார்த்திகேயன் அளித்த வழிகாட்டுதல்களே உறுதுணையாக விளங்கியதென்பதை மறவாமல் குறிப்பிட்டார்.
இன்று பாரதியார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ’யோகமும் மனித மாண்பும்’ என்ற பெயருடன் பட்டயப்படிப்பில் தொடங்கிப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு,முதுநிலை,மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வரை மகரிஷியின் கருத்துக்கள்,கல்வி நிலையங்களின் வழி கொண்டு செல்லப்படுவதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், தில்லி வாழ் மக்கள் இந்த யோகக் கலையால் மேலும் பயனுற வேண்டும் என்ற நோக்குடன் - ஆர்.கே.புரம் பகுதியில் விரைவில் அதற்கான அறக்கட்டளை ஒன்று தொடங்கப்படவிருக்கும் நற்செய்தியினையும் மகிழ்ச்சியோடு அறிவித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூட்டத்தினர் அனைவரையும் சிறு தியானம் ஒன்றில் ஈடுபடச் செய்து அதை வழிப்படுத்தி நடத்தியவர்,தில்லி மண்டல மனவளக்கலை அமைப்பின் பொறுப்பாளர் அருள்நிதி திரு பாலச்சந்திரன் அவர்கள்.
தில்லித் தமிழர்கள் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும் தம் கருத்துக்களைப் பதிவு செய்யத் தமது ‘வடக்கு வாசல்’இதழ் வழியாக வாயில் அமைத்துத் தந்திருக்கும் வடக்குவாசல் இதழின் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள்,பார்வையாளர்களின் சார்பில் கருத்துப் பகிர்வு செய்யவருமாறு அழைக்கப்பட்டார்; மகரிஷியின் யோகக் கலையில் பெரும் ஈடுபாடு கொண்டு,தான் உட்படப் பலரையும் அதன்பால் ஈர்த்தவரும்,அண்மையில் காலம் சென்றவருமான திருமதி கலா கார்த்திகேயனை (திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களது மனைவி) நினைவு கூர்ந்து,மேடையிலும்,அவையிலும் இருந்தோரைக் கண நேரம் மனம் நெகிழ்ந்து போகுமாறு செய்து விட்டார் திரு பென்னேஸ்வரன்.
மதம்,சாதி,இனம்,மொழி ஆகிய எல்லைக் கோடுகள் கடந்து மனதுக்கு நெருக்கமாக இதம் தரும் இது போன்றதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காகத் தில்லித் தமிழ்ச்சங்கத்தார்க்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், இம்மாதிரியான நல்ல நிகழ்ச்சிகளுக்குச் சங்கம் அடிக்கடி ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
தில்லித் தமிழர்கள் ‘கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும்’ வகையில் வாய்த்த குளிர் விருட்சம் தில்லித் தமிழ்ச்சங்கம். முத்திரை பதிக்கும் தமிழர்களையும், தமிழ்க் கலைகளையும் என்றென்றும் வாழ்த்தி வரவேற்றுச் சிறப்புச் செய்து பாராட்டி மகிழும் தமிழ்ச் சங்கம் , அண்மையில் தனது புறத் தோற்றத்திலும் புதுப் பொலிவு பெற்றுள்ளது;பழைய கட்டிடங்களும்,நூலகமும் சீரமைக்கப் பெற்றுத் தமிழ் ஆர்வலர்களுக்குப் பல்சுவை விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றன.
தன்னை முன்னிறுத்தாமல்.. தன் செயல்களை மட்டுமே முன்னிறுத்தும் எளிமையான உள்ளம் படைத்த திரு பெருமாள் அவர்களைப் பொதுச் செயலாளராகவும்,பல்லாண்டுக் காலமாகத் தமிழ்ச்சங்கப் பணியே தன் மூச்செனக் கொண்டு வாழ்ந்து வரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தலைவராகவும் பெற்றிருக்கும் தில்லித்தமிழ்சங்கத்திற்கு
அந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதில் எந்தத் தடையுமிருக்காது என்பதோடு...
இன்னும் பல உயரங்களையும் கூட அது எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது.
நன்றி;
கட்டுரையை வெளிட்ட ‘கலைமகள்’(டிச.’09)இதழுக்கு
இணைப்புக்கள்;
'வாழ்க வளமுடன்..!'
ஆழியாறு தந்த அமுதம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)