துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.8.18

இரட்டையர் ஓர் எதிர்வினை-ஜான்மேரி ரோஸ்இரட்டையர் ஓர் எதிர்வினை
Johnmary Rose -முகநூலிலிருந்து 
[இரட்டையர் - தஸ்தயெவ்ஸ்கி
தமிழில் - எம்.ஏ.சுசீலா]

மிக நேர்மையாகவும் , பணிவாகவும், அடுத்தவர் மனம் காயப்படாமல் பேச்சிலும் நடத்தையிலும் கூட கண்ணியமாக நடந்து கொள்ளும் அதுவும் தன் வாழ்வை தனிமையில் கழிக்கும் ஒரு மனிதனின் வாழ்வில் அதற்கு நேர் எதிராக போக்கிரித்தனமும் வெறுப்பேற்றி சீண்டிப் பார்க்கும் குணமும் அதுவும் ஒரே உருவத்தில் ஒரே பெயரில் இரண்டு மனிதர்களுக்கிடையே நடக்கும் போராட்டம் தான் இந்நாவல்.

வாசிக்கும் பல இடங்களில் ஜூனியர் கோலியாட்கின் உண்மைதானா இல்லை கற்பனையா என்று என்னை சந்தேகப்பட வைத்து உறுதி செய்ய மீண்டும் வாசிக்க செய்தது ஏன் என்றால் சீனியர் கோலியாட்கின் அப்படிப்பட்ட மனநிலை உடையவர் அவராகவே மனதில் பலவற்றையும் போட்டு வருத்திக் கொண்டு எப்போதும் ஒழிந்து தனிமைப்பட்டு வாழ நினைக்கும் ஒரு மனிதர்
இது இரட்டையர் உருவத்தில் இருக்கும் வெறும் சீனியருக்கும் ஜூனியருக்கும் நடக்கும் போராட்டம் மட்டும் அல்ல, பலபேர் வாழ்க்கையில் - ஏன் நானே கூட ஜூனியர் கோலியாட்கின் போல நபரைக் கடந்ததுண்டு மற்றவரிடத்தில் மிகுந்த நல்லவர்களைப் போலவும் அந்தத் தனிப்பட்ட மனிதரிடம் மட்டும் தன் வேலையைக் காட்டும் அந்தப் போக்கிரி கோலியாட்கின் போன்றுமனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்
எனக்கு இன்னும் கூட குழப்பமாகவே இருக்கின்றது. கதையின் ஆரம்பத்தில் கோலியாட்கின் அந்த பாலத்தின் கீழ் உள்ள ரெஸ்டாரெண்டில் தனியாக உட்கார்ந்து இருக்கும் போது யோசிப்பது போல் தெரிகிறது அதன் பின் அந்த பார்ட்டிக்கு செல்வது போலவும் அங்கே அவமானம் அடைந்தது போலவும் வருகின்றது அதன் பின் சில பக்கங்கள் வரை நான் அவர் அங்கு திரும்ப செல்லாமலேயே தான் சென்றால் அங்கு எப்படி இருக்கும் மற்றவர்கள் தன்னை எப்படி நடத்துவார்கள் என்று அவர் அங்கு இருப்பதை போல் நினைத்துக் கொண்டாரோ என்று தான் நினைத்தேன் அதன் பின் நடந்து செல்வது மாதிரி சொல்லும் இடத்தில் தனக்கு எதிராக ஒரு உருவம் தன்னை போன்றே அதுவும் அவர் அணிந்த அதே உடையில் ஒரு மனிதன் தன்னை கடந்து செல்வதாகவும் கூறும் இடத்தில் கூட கற்பனை என்றே நினைத்தேன்.
உளவியல் ரீதியாக ஒரு மனிதன் படும் துன்பங்கள் , அவனது உணர்வுகளோடு மற்றவர் சீண்டி விளையாடும் கொடுமை தாங்க முடியவில்லை. அவன் உண்மையிலையே இரட்டையர்தானா மன பிரமையா? முழுவதும் வாசித்து முடித்தும் அந்த ஜூனியர் கோலியாட்கின் உண்மைதானா நிஜமா என்று குழப்பமாகவே உள்ளது.
உளவியல் ரீதியாக மனதை சோதித்து பார்க்கிறது இந்நாவல்
எம்.ஏ.சுசீலா மொழி பெயர்ப்பு மிக அருமை
எனது வாழ்த்துகள் அம்மா
அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்
உங்களின் இந்த மகத்தான பணிக்கு வாழ்த்துகள்
Johnmary Rose
salem

7.8.18

நிஜங்களும் கற்பிதங்களும்- இரட்டையர் முன்னுரை

                                


                             இரட்டையர்- நிஜங்களும் கற்பிதங்களும்
                       [இரட்டையர்- மொழியாக்க நாவலில் என் முன்னுரை]

’’துயரத்துடன் தனித்திருக்கும் மனித ஆத்மாதனிமைப்பட்டிருக்கும் அகப்பிரக்ஞைநிலவறைக்குள் தப்பித்து முடங்குதல் ஆகிய சிக்கல்களையே இரட்டையர்நாவலிலும் எதிர்ப்படுகிறோம்’’ என்கிறார் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வையும் படைப்புக்களையும் விரிவாக ஆராய்ந்து நூலெழுதிப் புகழ்பெற்றிருப்பவரான கான்ஸ்டாண்டின் மோசுல்ஸ்கி.[ Konstantin Mochulsky]

இரட்டையர் குறித்த கதைகளும் கருத்தாக்கங்களும் மனிதகுலம் தோன்றிய நாள் தொட்டுத் தொடர்ந்து நிலவி வருபவை  என்றபோதும் நவீனஇலக்கியக்களத்தில் அதை அடிப்படையாகக்கொண்டு புனைவிலக்கியம் படைத்த முன்னோடிகளில் ஒருவராக எண்ணப்படுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.

மிகச்சாதாரண மட்டத்தில் ஓர் அரசு அலுவலக குமாஸ்தாவாகப் பணி புரியும் யாகோவ் பெத்ரோவிச் கோலியாட்கின் , தனக்கென எந்தத் தனி அடையாளமும்அற்ற சராசரிகளில் ஒருவர்சமூக வாழ்க்கையிலோ,காதலிலோ,அலுவல் களத்திலோ சொல்லிக்கொள்ளக் கூடிய அளவுக்கு எதையுமே சாதித்திராதவர்தன்நிழலை ஒத்த இரட்டை மனிதன் ஒருவனை அவர் எதிர்ப்படுவதும் அதைத் தொடர்ந்த சம்பவங்களுமே இக் குறுநாவலின் உள்ளடக்கம்.

நாவலின் தொடக்கத்தில் மனச்சிதறல் நோய் கொண்டவரென மருத்துவரால் சந்தேகிக்கப்படும் கோலியாட்கின்,இறுதியில் தன் சுயக்கட்டுப்பாட்டைமுற்றிலும் இழந்த நிலையில் மனநோய் விடுதிக்கே  இட்டுச்செல்லப்படுவதோடு நாவல் நிறைவு பெறுகிறதுஇடையிலுள்ள அத்தியாயங்களில் அவர்எதிர்ப்பட நேரும் அந்த நிழல் மனிதன்இரத்தமும் சதையும் கொண்ட உண்மையான ஒரு நபர்தானா அல்லது அது அவரது மனமயக்கமா என்பதும்ஒருக்கால்அவன் உண்மையான நபராக இருந்தாலுமே கூட உருவத்தில் அவன் அவரது இரட்டை போலத்தான் இருக்கிறானா அல்லது அது அவரது கற்பிதமா என்பதும்இலைமறை காயாக மட்டுமே இருப்பதே இந்த நாவலின் தனித்துவம் நாவலில் இடம்பெறும் பல பாத்திரங்களும் அந்தஇரட்டை மனிதனைப் பார்த்தாலும்அவனோடு உரையாடினாலும்அவர்களது எதிர்வினைகள் நமக்கு வெளிப்படுவது கோலியாட்கினின்கண்கள் வழியாகத்தான்

ரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட ..இந்த நாவலை சரியானபடி உள்வாங்கும் முயற்சி - கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக - இன்னும் கூடத்தொடர்ந்துகொண்டுதான்  இருக்கிறது.

குழப்பமான மனப்பிரமைகளுக்கு ஆட்பட்ட ஒரு மனிதரின் கதை இது என்பதே இந்த நாவல் குறித்த பரவலான கருத்துதன் சுய அடையாளம் குறித்த தேடல்ஒருவரைத் தன்னையே தொலைத்துக்கொள்ளும் அளவுக்கு தூண்டிவிடுகிறது என்பதை இதன் சாரமாக்கிச் சொல்வதையும் ஒதுக்கி விட முடியாதுகதையின்பின்புலமாக வரும் காலகட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய கெடுபிடிகள் மிகுந்த இறுக்கமான சமூக அமைப்பும்,அதன் அதிகாரப்படிநிலைகளும் பலநெருக்கடிகளை உருவாக்கியிருந்தனஅவற்றுக்குள் சிக்கிச் சிதறுண்டு போன மனிதர்களின் ஒரு ‘மாதிரி’[sample]யாகவே கோலியாட்கினின் பாத்திரஉருவாக்கம் முன்வைக்கப்படுகிறது.

எல்லா மனிதர்களோடும் இயல்பாககலகலப்பாகக் கலந்து பழகும் ஒரு சமூக மனிதனாகபெண்களால் நேசிக்கப்படும் கவர்ச்சிகரமான ஓர் இளைஞனாகவேலைத் தளத்தில் மேலதிகாரிகளிடம் சாமர்த்தியம் காட்டி மேன்மேலும் பதவி உயர்வு பெறும் அலுவலராக – இவ்வாறு பலவற்றையும் கோலியாட்கினின்ஆழ்மனம் விரும்பினாலும் நடைமுறையில் அவற்றை சாத்தியமாக்க அவனால் இயலாதபோது அத்தகைய இயல்புகள் கொண்ட ஒரு நிழல்மனிதனைஅவரது உள்ளம் தானாகவே உருவாக்கிக்கொண்டு விடுகிறதுகூடவே அதனோடு இடையறாத போராட்டம் ஒன்றையும் நடத்துகிறதுமனப்பிரமைகள் வரம்புமீறியதாய்க் கட்டற்றுப்பெருகும் நிலையில் எண்ணிக்கையற்ற நிழல் இரட்டையர்கள் தன்னைத் துரத்துவதான தீவிர உளச்சிக்கலுக்கு ஆளாகும்கோலியாட்கின் சராசரி வாழ்க்கையைக்கூடத் தொடர முடியாதபடி,மனநோய் விடுதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விடுகிறார்,

இரட்டை என்பது மனிதர்களில் மட்டும் இல்லைமருத்துவரோடான சந்திப்பு,அலமாரிக்குப்பின் கோலியாட்கின் ஒளிந்து கொள்ளல்,அலுவலகக்காட்சி,வண்டிச்சவாரி என்று நாவலின் பல சம்பவங்களும் இரண்டிரண்டு முறை நாவலில் இடம் பெற்றிருக்கின்றன.

இரட்டை மனிதன் உட்பட நாவலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் உண்மை எது,கற்பிதம் எது என்று எதையுமே தெளிவுபட வரையறுத்துச்சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கியதொனியில் மட்டுமே இந்தக் குறுநாவலின் தொனியை அமைத்துக்கொண்டிருக்கிறார்தஸ்தயெவ்ஸ்கிஅந்த முடிவுகளை வாசகர்களின் ஊகத்துக்கும் முடிவுக்கும் விடுவதற்கென்றே நுணுக்கமான மறை பொருளாக அவற்றை சொல்லியும்சொல்லாமலும் விட்டிருக்கிறார்இரட்டையர் நாவல்,நம் முன் வைக்கும் சவால் அது என்பதோடு அதுவே இந்நாவலின் வெற்றியும் ஆகிறது.

ஆங்கிலத்தில் பெரும்பாலும் நிலவறைக்குறிப்புக்களோடு சேர்த்தே பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்த நாவலை நான் மொழிபெயர்த்த நிலவறைக்குறிப்புக்களைஅடுத்துத் தொடர்ந்து வெளியிட முன் வந்திருக்கும் யுகனுக்கும்,நற்றிணைப்பதிப்பகத்தாருக்கும்ஆங்கில மொழியாக்கங்களோடு ஒப்பிட்டுப்பார்த்து செம்மைசெய்து தகுந்த இடங்களில் விளக்கங்கள் கூறி இப்பணியில் என்னுடன் துணை நின்ற தோழி பேரா.காதம்பரி அவர்களுக்கும் என் நன்றி.
எம்  சுசீலா
19/6/18

6.8.18

தஸ்தயெவ்ஸ்கியும் இரட்டையரும்

     
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி நாவல் மொழியாக்க வரிசையில் என் ஐந்தாவது மொழியாக்கமான ‘இரட்டையர்’ நாவலை நற்றிணை பதிப்பகம் இப்போது வெளியிட்டிருக்கிறது.


முன்னவை
குற்றமும் தண்டனையும்- 2007,இரண்டாம் பதிப்பு-2012,செம்பதிப்பு 2017
அசடன்-2010
தஸ்தயெவ்ஸ்கி கதைகள்-2015
நிலவறைக்குறிப்புகள்-2018


‘இரட்டையர்’ நாவல் வெளி வந்ததை அறிந்ததுமே

‘’ஒரு சிக்கலான தளத்தை மேலும் சிக்கலாக்கிச் செல்லும் எழுத்தும் உரையாடலும். உண்மையில் வாசிப்பதற்கும் யோசிப்பதற்கும் கடும் பயிற்சி கொடுக்கும் அற்புதமான நாவல் இது.’’
என்று முகநூலில் ஒரு பின்னூட்டம் பார்த்தேன். என் பின்னுரையில் நான் குறிப்பிட்டிருந்ததும் அதுவே.

ரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட ..இந்த நாவலை சரியானபடி 

உள்வாங்கும்
 முயற்சி - கடந்த நூற்றைம்பது ஆண்டுகளுக்கு மேலாக - 
இன்னும் கூடத்தொடர்ந்துகொண்டுதான்  இருக்கிறது.

இரட்டை மனிதன் உட்பட நாவலில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் 
உண்மை எது,கற்பிதம் எது என்று எதையுமே தெளிவுபட வரையறுத்துச்சொல்லாமல் வாசகர்களுக்கு மயக்கம் ஏற்படும் வகையில் உள்ளடங்கிய
தொனியில் மட்டுமே இந்தக் குறுநாவலின் தொனியை 
அமைத்துக்கொண்டிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கிஅந்த முடிவுகளை 
வாசகர்களின் ஊகத்துக்கும் முடிவுக்கும் விடுவதற்கென்றே நுணுக்கமான 
மறை பொருளாக அவற்றை சொல்லியும்சொல்லாமலும் விட்டிருக்கிறார்
இரட்டையர் நாவல்,நம் முன் வைக்கும் சவால் அது என்பதோடு அதுவே 
இந்நாவலின் வெற்றியும் ஆகிறது.

மிகத் தற்செயல் நிகழ்வாக 2006ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றபோது நான் தொடங்கிய மொழிபெயர்ப்புப்பணி இப்போது தஸ்தயெவ்ஸ்கி என்னும் அம்மாமேதையின் குறிப்பிடத்தக்க ஐந்து படைப்புக்களைப் பெயர்த்து முடித்த நிறைவையும் மகிழ்ச்சியையும் என்னுள் உண்டாக்கியிருந்தபோதும் இயன்றவரை அவரது இன்னும் பல படைப்புக்களையும் தமிழில் கொண்டு வந்து விட வேண்டுமென்ற தாகம் ஒவ்வொரு மொழிபெயர்ப்பு முடிந்ததும் என்னுள் தொடர்ந்து மூண்டு கொண்டே இருக்கிறது. தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து வெளிப்படுத்தும் அபாரமான மனிதநேயமும்  மானுட இனத்தின் மீது அவர் கொண்டிருக்கும் எல்லையற்ற காருண்யமும் தமிழ்மொழி வழியே பலருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற எண்ணமே எனக்கு உந்து விசையாகி அந்தப்பணியில் மீண்டும் மீண்டும் என்னை ஆழ்த்திக்கொள்ள வைக்கிறது.
  .
‘’நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்.என்று உரத்துப்பிரகடனம் செய்த தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனின் சொற்கள் தஸ்தயெவ்ஸ்கியின் ஒவ்வொரு படைப்பை வாசிக்கும்போதும் என் நினைவுக்கு வரத் தவறுவதில்லை. வாழ்க்கையின் இருட்டு மூலைகளில் மண்டிக்கிடக்கும் அழுக்குகள் ஆபாசங்கள்...தனி மனிதக்கோணல்கள், விசித்திரமான பாத்திரங்களின் வித்தியாசமான செயல்பாடுகள் என்று எதை எடுத்துக்கொண்டாலும்- எந்தப்பாணியில் கதை சொல்லலை அமைத்துக்கொண்டாலும் நடப்பியல் சித்தரிப்பு என்ற பெயரில் அருவருக்கத்தக்க ஆபாச வருணனைகளோ உரையாடல்களோ சொற்பிரயோகங்களோ அவர் படைப்புக்களில் கிஞ்சித்தும் தலை காட்டியதில்லை.  காதல் வயப்பட்டிருக்கும் பெண்ணானாலும், விலைமகளாக ஆக நேர்ந்த பெண்ணானாலும் அவளை உயிருள்ள ஒரு ஜீவனாக மட்டும்தான் அவர் அணுகியிருக்கிறாரே தவிர ஒரு நுகர்பண்டமாக ஆக்க அவரது எழுதுகோல் ஒருநாளும் துணிந்ததில்லை. 
உலக இலக்கிய மாமேதை என தஸ்தயெவ்ஸ்கியைக் கொண்டாடும் சமகால இளைஞர்களும் எழுத்தாளர்களும்  அந்தப்படைப்பாளியிடமிருந்து  கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் இது மிக முக்கியமானதென்று  கருதுகிறேன்.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....