துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

3.12.20

‘தடங்கள்’ - நூல் அறிமுகம்,பெ.விஜயகுமார்.

 https://bookday.co.in/professor-m-a-susilas-novel-thadangal-book-review/

நூல் அறிமுகம்:

பேராசிரியர் எம்.ஏ.சுசீலாவின் ‘தடங்கள்’ நாவல்: பெண்களின் அகம், புறம் இரண்டையும் சித்தரிக்கும் பெண்மையச் சித்திரம் –
பெ.விஜயகுமார்
நூல்: ‘தடங்கள்’ நாவல்
ஆசிரியர்: பேராசிரியர் எம்.ஏ.சுசீலா
பதிப்பகம்: மீனாட்சி புத்தக நிலையம்

பேரா.எம்.ஏ.சுசீலா மதுரை பாத்திமா கல்லூரியில் முப்பத்தாறு ஆண்டுகள் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணி முடித்து இன்று எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், பெண்ணியலாளர் என்று தமிழ் எழுத்துலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர். தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’, ’நிலவறைக் குறிப்புகள்’, ’இரட்டையர்’ ஆகிய ரஷ்ய நாவல்களை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்க்கும் சிரமமான பணியில் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளார். மொழிபெயர்ப்புப் பணிக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது, நல்லி – திசை எட்டும் மொழியாக்க விருது, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயத்தின் விருது. ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றுள்ளார். எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி சிறுகதை எழுத்தாளர்களுக்கான சுஜாதா விருது, ராஜம் கிருஷ்ணன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். பெண்கள் சார்ந்த செயல்பாடுகளுக்காக ‘ஸ்தீரீ ரத்னா விருது’, ’சிறந்த பெண்மணி விருது’ ஆகியனவும் பெற்றுள்ளார். சொல்வனம்.காம், ஊடறு.காம், தினமணி.காம், கனலி ஆகிய இணைய இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து படைத்து வருகிறார் இவரின் முதல் நாவலான ‘யாதுமாகி’ ஆங்கிலத்தில் ‘Devi the Boundless’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியம், பெண்ணியம் சார்ந்த ஆறு  கட்டுரைத் தொகுப்புகளையும் சுசீலா வெளியிட்டுள்ளார்.

‘தடங்கள்’ நாவலில் கடிதங்கள் வழி எழுதிச் செல்லும் வடிவத்தைக் கையாண்டு சுசீலா வெற்றி பெற்றுள்ளார். மதுரையில் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் சிந்துவும், சமூகச் செயற்பாட்டாளராக பணி நிமித்தம் நாடெங்கும் சுற்றிவரும் நந்தாவும் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்களே நாவலாக விரிந்து செல்கின்றன. மனந்திறந்து எழுதப்பட்ட கடிதங்களைப் படிக்கும்போது இவ்விரு தோழிகளுக்கிடையில் நிலவும் நெருக்கத்தையும், அன்பையும்  தெரிந்து கொள்கிறோம்.
தமிழகம் முழுவதும் நிறைந்துள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியைகள் பணியாற்றுவதை நாமறிவோம். அவர்களில் சிந்து போன்றதொரு அர்ப்பணிப்புள்ள ஆசிரியையைக் காண்பதரிது என்பதை நன்கு அறிவோம். மனித உறவுகளில் அனைத்திலும் உன்னதமானது ஆசிரியர் – மாணவர் உறவாகும். என்பதற்கு சாட்சியமாய் சிந்து விளங்குகிறார். அவரின் ஆருயிர்த் தோழி நந்தாவும், சிந்துவுக்கு இணையான தொழில் அறம், சமூக அக்கறையுடன் பரிணமிக்கிறார். இருவேறு துறைகளில் பணியாற்றினாலும், அவர்கள் இருவரும் பெண்ணியம், மனிதநேயம் ஆகிய புள்ளிகளில் ஒன்றிணைவதைக் காண முடிகிறது.
சிந்து போன்று அர்ப்பணிப்போடு ஆசிரியர் பணியை மேற்கொள்பவர்களுக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கொடுத்து அரசு கௌரவிப்பதில்லை என்பது அவலமே. நல்லாசிரியர் விருதினை எப்படிப்பட்டவர்கள் ‘வாங்குகிறார்கள்’ என்பது தெரிந்ததுதானே. மாணவிகளுக்குப் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்ப்பதோடு அவர்களின் தனிப்பட்ட வாழ்விலும் அக்கறை காட்டும் கடமை உணர்வு மிக்க பேராசிரியராக சிந்து இருக்கிறார். உடன் பணியாற்றும் ஆசிரியைகளுடன் தோழமையுடன் பழகும் சிந்து கல்லூரி ஆசிரியர் சங்கமான மூட்டா எனும் பேரியக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். அதனால் சிந்துவின் உலகம் பரந்து விரிந்து, அர்த்தமுள்ளதாக உள்ளது. “என்னைச் சுற்றி உதிரி உதிரியாய் எத்தனை மாதிரிகள்” என்று அவரே வியக்கும் வண்ணம் மாணவிகள் புடை சூழ வெற்றிகரமான பேராசிரியராக சிந்து திகழ்கிறார்.
கல்லூரி வளாகத்துக்குள் அடைபட்டிருக்கும் மாணவிகளுக்கு நல்லதொரு வழிகாட்டியாக சிந்து திகழ்ந்தாரென்றால், நந்தா சமூகச் செயற்பாட்டாளர் என்ற முறையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காண விழைகிறார். இதனால் நந்தா வழக்கு, விசாரணை, அதிகாரிகளிடம் முறையிடுதல், கருத்தரங்குகளில் பங்கேற்றல் என்று பம்பரமாய்ச் சுழன்று வருகிறார்.
நந்தாவும், சிந்துவுக்கு இணையான தொழில் அறம், சமூக அக்கறையுடன் பரிணமிக்கிறார்.

இருவரின் கடிதங்களிலும் ஆணாதிக்கச் சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களின் சொல்லித் தீராத சோகங்கள் சொற்சித்திரமாய் வரையப்பட்டுள்ளதைக் காண்கிறோம். நந்தாவிடம் சித்ரா, வாணி, செந்தாமரை, ரமணி, ஹேமா, சுஜாதா, பத்மா, கலா போன்ற பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சிந்து பகிர்ந்து கொள்கிறார். நந்தா தன் பங்கிற்கு சோலையம்மா, முத்தரசி, மல்லிகா, நிருபமா ஆகியோர் சந்திக்கும் வாழ்வியல் நெருக்கடிகளைச் சிந்துவிற்கு விளக்குகிறார். ஆக பத்துக்கும் மேற்பட்ட பெண்களின் சோக கீதங்களின் தொகுப்பாக, சிறுகதைத் தொகுப்பு போல இந்த நாவல் காணப்படுகிறது. பெண்ணியம், இல்லறம், மனிதநேயம் போன்ற மனித மாண்புகள் இந்தப் பெண்களின் கதைகளுக்கிடையில் ஊடாடிச் செல்கின்றன.
தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் உரசல்களினால் ஏற்படும் விபரீத விளைவுகளை நாவல் காட்சிப்படுத்துகிறது. மனித உறவுகள் மென்மையான இழைகளால் இணைக்கப்பட்டதுதானே! இதனைப் போற்றிப் பாதுகாப்பதில் சிறு தவறு ஏற்பட்டாலும் விரிசல் ஏற்படுவது இயல்பாகிறது. இல்லறம் கண்ணாடி பாத்திரம் போன்றது. மென்மையுடன் கையாளப்படவில்லையெனில் உடைந்து சிதறி விடுகிறது. அல்லது கீறலேனும் விழுந்து விடுகிறது. கணவனும், மனைவியும் இணைந்து நின்றால் மட்டுமே இல்லறத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை கதாபாத்திரங்கள் வழி நாவலாசிரியர் உணர்த்த விரும்புகிறார். இல்லறம், துறவறம் இரண்டும் அறன் வழிப்பட்டதுதான் என்பதையும் சாட்சியங்களுடன் சுசீலா நிரூபிக்கின்றார்.


நாவலாசிரியர் சுசீலாவின் பெண்ணியம் மென்மையானது. “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வோம்” என்று பாரதி சொல்வது போல் இருபாலரும் மானுடராய்க் கைகோர்த்து அன்புடனும், அறத்துடனும் வாழ்ந்திட வேண்டும் என்று மட்டுமே அவர் விரும்புகின்றார். பெண்ணியம் ஆண்களை எதிரிகளாகக் கருதுவதல்ல. ஆண்களும், பெண்களும் தங்களை இணையர்களாகப் பாவித்துக் கொள்ள வேண்டும் என்பதே சுசீலா வலியுறுத்த விரும்பும் பெண்ணியம் ஆகும். சுசீலா வக்கிர மனம் படைத்த முரளி, வன்முறை வெறியாட்டம் ஆடும் மதன் போன்ற தவறிழைக்கும் ஆண்களை மட்டும் படைக்கவில்லை. ஊனமுற்ற  மல்லிகாவுடன் முழுமையான தாம்பத்திய வாழ்வு வாழ முடியாது என்பது தெரிந்தும் அவளை மணந்து அவளுக்கு உற்ற தோழனாய் வாழ்நாள் முழுவதும் இருந்திடும் தினகரனையும் படைத்துள்ளார். மனைவி மற்றும் பிள்ளைகளின் வாழ்வில் சிறிதும் குறுக்கிடாமல் அவர்கள் விரும்பும் வாழ்வை வாழ்ந்திட வழிவிட்டு நிற்கும் ஃப்ரான்சிஸ் போன்ற ஆண்களும் இவ்வுலகில் இருப்பதை வாசகர்களுக்குக் காட்டுகிறார்.
சிந்துவுடன் பணியாற்றி வரும் ஹேமா, நந்தா குறிப்பிடுகின்ற நிருபமா இவர்கள் இருவரும் வெவ்வேறு வழிகளில் பருமனான பாத்திரங்களாக  நாவலில் பரிணமிக்கிறார்கள். ஹேமாவின் கணவன் முரளி தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்க்கிறான். ஹேமாவின் அழகையும், வசீகரத்தையும் பயன்படுத்தி அவளை மேலதிகாரிகளுக்கு காட்சிப் பொருளாக்கி பதவி உயர்வு பெறவேண்டும் என்று அற்ப ஆசை கொள்கிறான். உயர்ந்த லட்சியங்களுடன் கூடிய தன்மானம் மிக்க ஹேமா தன்னால் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ள முடியாது என்பதை நிதானத்துடன் சொல்லி அவனைத் திருத்த நினைக்கிறாள். அவன் திருந்துவதாக இல்லை. ஒரு நாள் நிலைமை எல்லை மீறிச் சென்று காமுகன் ஒருவனுக்கு அவளை விருந்தாக்கத் திட்டமிடுகிறான். ஹேமா வெகுண்டெழுந்து ஹோட்டல் அறையைவிட்டு வெளிவருவதுடன் தன்னைச் சீரழிக்க நினைக்கும் முரளியுடனான வாழ்க்கையிலிருந்தும் வெளி வந்து விட வேண்டும் என்ற துணிச்சலான முடிவை எடுக்கிறார்.  தன்னையும், குழந்தையையும் கணவனின் உதவியின்றி பராமரித்துக் கொள்ள முடியும் என்ற மனவுறுதியுடன் அவள் வெளியேறுவதைப் பார்க்கிறோம்.
நிருபமா பாரதி கனவு காணும் புதுமைப் பெண்ணாக வலம் வருபவர்.   ’இணையற்றவள்’ என்பதே நிருபமா என்ற சமஸ்கிருதப் பெயரின் அர்த்தமாகும். தன்னுடைய பெயருக்கு இலக்கணமாக வாழ்ந்து வரும் நிருபமாவை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைத்து விட முடியாது. திருமணம் என்ற பந்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் தவிர்க்க முடியாதது என்பதை நிருபமா ஏற்றுக் கொள்ளவில்லை. “பெண்ணோ ஆணோ – அவங்க பொறந்ததிலே இருந்து முகம் தெரியாத; சம்பந்தமே இல்லாத யாரோ ஒருத்தருக்காகவே வளர்க்கப்படுவது எனக்கு ஒரு உறுத்தலா தோணுகிறது. அதிலும் ஒரு பெண்ணோட வாழ்க்கையிலே கல்யாணம்கிறதை மட்டுமே அதீத முக்கியத்துவமுள்ளதாக எல்லோரும் நினைக்கிறது எனக்குள்ளே ஒவ்வாமையை உண்டாக்கியுள்ளது” என்று நிருபமா தன்னிலை விளக்கம் தருகிறார். தன் சொந்த விருப்பத்தினால் மட்டுமே தனி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவள் நிருபமா. காற்றுக்கென்ன வேலி என்பது போல் தனி மனித சுதந்திரத்திற்கு தடையேதும் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது என்பதில் உறுதியாக நம்பும் பெண்மணியாக நிருபமா உயர்ந்து நிற்கிறார்.
குடும்ப வன்முறைகள் நாள்தோறும் நடந்த வண்ணம் இருப்பதைப் பார்க்கிறோம். மனைவியை அடிப்பதைத் தவறாகவே எண்ணாத ஆண்கள் நிறைந்த சமூகமாகவே இந்தியச் சமூகம் இன்றும் விளங்குவது வியப்பளிக்கிறது. கொரோனா தொற்று நோயினால் ஊரடங்கி, வீடடங்கி இருக்கும் காலத்தில் குடும்ப வன்முறைகள் கூடியுள்ளதாக தகவல் உள்ளது. குடிப் பழக்கம் குடும்ப வன்முறை அதிகரிப்பதற்குக் காரணமாகிறது என்ற கூற்றும் நிலவுகிறது. குடும்ப வன்முறையின் உச்சம் சில சமயங்களில் கொலையிலும் முடிவதுண்டு.
தன் கல்லூரி அலுவலகத்தில் வேலை பார்க்கும் ரமணி என்ற ஏழைப் பெண் அவளின் கணவனால் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வை தன் தோழி நந்தாவுக்கு கடிதத்தில் சிந்து விளக்குகிறாள். அரசு ஊழியனான மதன் திருமணத்தின் போதே தன் மனைவி குடும்பத்தின் ஏழ்மையை நன்கு அறிந்தவன்தான். ஆதரவற்ற தன் பெற்றோர்களுக்கு தன்னுடைய மாதச் சம்பளத்திலிருந்து ஒரு சிறுதொகையை கொடுக்க வேண்டும் என்பதை ரமணி அவனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தாள். இருப்பினும் அதை விரும்பாத மதன் அவளைத் தினமும் துன்புறுத்தி வருகிறான். கைக்குழந்தையுடன் இருந்த ரமணியை ஒரு கொடிய இரவில் கொன்று விடுகிறான். வருவாய்த்துறையில் வேலை பார்த்த மதனால் கொலைக் குற்றத்தை மறைத்துத் தப்பிக்க முடிகிறது.
ஆசிரியர்களையும் அலுவலர்களையும் திரட்டி ரமணியின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்றெல்லாம் சிந்து நடத்திப் பார்க்கிறார்.  ரமணியின் மரணம் கொலைதான் என்பதற்கு தக்க ஆதாரங்களாக அவள் பெற்றோருக்கு எழுதிய பல கடிதங்கள் இருக்கின்றன என்பதை சிந்து அறிகிறாள். ரமணியின் பெற்றோரைச் சந்தித்து அந்தக் கடிதங்களை எல்லாம் பெற்று வழக்கறிஞரிடம் கொடுக்கிறார். மகளே இறந்தபின் இந்த வழக்கு விசாரணை எல்லாம் எதற்கு என்று அரை மனதுடன், பயத்துடனேயே கடிதங்களைக் கொடுக்கின்றனர். ஆனால் மதன் அவர்களை மிரட்டித் தனக்குச் சாதகமாக எழுதி வாங்கிக் கொள்கிறான் என்பதறிந்து சிந்து மனம் பதறுகிறாள். மனைவியைக் கொன்ற மதன் தண்டனை ஏதுமின்றித் தப்பித்துவிடக் கூடாது என்ற அவளின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது.
பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவிகள்  சந்திக்கும் பிரச்சனைகள் உயர்கல்வித்துறையில் இருப்போர் அறிந்ததே. ஆராய்ச்சிக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்துமீறி நடந்துகொள்வது வாடிக்கையாகி உள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட முத்தரசி என்ற பெண் நந்தாவிடம் உதவியை நாடி வருகிறாள். இதிலும் குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தருமளவிற்கு முத்தரசியிடம் போதிய சான்றுகள் இல்லை என்பதறிந்து நந்தா வருந்துவதைக் காண்கிறோம்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினரே என்று தரவுகள் சொல்கின்றன. சிந்துவின் கெட்டிக்கார மாணவிகளுள் ஒருவரான வாணி அற்ப விஷயத்திற்காக தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டதறிந்து சிந்து மனம் கலங்குகிறார். அன்றிலிருந்து ”கல்லூரிப் படிப்பு முடித்து விடைபெறும் இறுதியாண்டு மாணவிகளிடம் வாழ்வின் எந்தச் சூழலிலும் தற்கொலைக்குத் துணிய மாட்டோம்” என்று உறுதிமொழி வாங்குவதை வாணியின் நினைவாக சிந்து வழக்கமாக்கிக் கொண்டதை தன் தோழி நந்தாவிடம் தெரிவிக்கிறாள்.

மூட்டாவின் தீவிர உறுப்பினரான சிந்து தான் கலந்து கொண்ட போராட்ட அனுபவங்களையும் தன்னுடைய தோழியிடம் பகிர்ந்து கொள்கிறார். 1970களில் தனியார் கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் பணி நிலை படுமோசமாக இருந்தது. பணி பாதுகாப்பின்றி தனியார் கல்லூரி நிர்வாகங்களிடம் கல்லூரி ஆசிரியர்கள் கொத்தடிமைகள் போல் இருந்தனர். நிர்வாகங்கள் அவர்களுக்குரிய முழுச் சம்பளத்தையும் கொடுப்பதில்லை. பெண் ஆசிரியைகளுக்கு பேறுகால விடுப்பு எடுக்கும் வசதிகூட இல்லாமலிருந்தது. மூட்டா நடத்திய தொடர் போராட்டங்களால்தான் கல்லூரி ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளைப் பெற்றனர். சிந்து தன் தோழிகளுடன் இணைந்து மூட்டா போராட்டம் தங்கள் கல்லூரியில் முழுமையாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறார். மதுரை காக்கா தோப்பு தெருவில் இருக்கும் மூட்டா அலுவலகத்திற்குச் சென்று சங்கத் தலைவர் தேவராஜனிடம் ஆலோசனை பெற்று வருகிறார். போராட்டத்தில் பங்கேற்கத் தயங்கும் ஆசிரியைகளுக்கு போராட்டத்தின் அவசியத்தை விளக்கிச் சொல்கிறார். போராட்டம் வெற்றியுடன் முடிந்து சம்பள உயர்விற்கு அரசு ஒத்துக் கொண்டு ஆணை பிறப்பிக்கிறது. புதிய சம்பள விகிதம் குறித்த செய்திகளை, போராட்டத்திலே பங்கேற்காத பேராசிரியை கலா ஆசையுடன் தெரிந்து கொள்ள விரும்புவது கண்டு சக ஆசிரியைகள் கேலி செய்வதை சிந்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மனமாற்றமடைந்து அடுத்த போராட்டத்தில் அவரும் கலந்து கொள்வார் என்பதே சிந்துவின் நம்பிக்கை. அதுதானே சங்கப் பொறுப்பாளருக்கு அழகு!
நாவலில் உள்ள இரு கதை சொல்லிகளில் ஒருவரான சிந்து மதுரை நகரில் இருப்பதால் மதுரை நகர் குறித்த நிறைய செய்திகள் காணக் கிடைக்கின்றன. கல்லூரி வளாகங்களை மையமாக வைத்து ஏற்கனவே நிறைய நாவல்கள் வந்துள்ளன. தனியார் கல்லூரி நிர்வாகம் இழைத்திடும் கொடுமைகள் குறித்து எழுபதுகளிலேயே ‘பொன் விலங்கு’ நாவலில் நா.பார்த்தசாரதி எழுதியுள்ளார். சுசீலாவின் ‘தடங்கள்’ நாவலும் இன்றைய பெண்கள் கல்லூரி வளாகங்களின் நிலைமையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. உயர்கல்வி பெற்றதனால் பெண்கள் நிலைமைகளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இன்னும் நிறைய போதாமைகள் இருப்பதையும் நாவல் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.
—பெ.விஜயகுமார்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....