அன்புள்ள அம்மா,
தில்லி தமிழ்ச் சங்கத்தின் கருத்தரங்கத்தில் தாங்களும் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்
எனது சிறிய இரு சந்தேகங்களைத் தெரிவிக்கிறேன்.
௧)கருத்தரங்கத்தில் தங்களுடைய பணி நெறியாளுகை.
தொகுத்து வழங்குதலுக்கும் நெறியாளுகைக்கும் என்ன வேறுபாடு. .
௨)புனைவிலக்கியம் என்றால் என்ன?
விளக்கவும்
அன்புடன்
நாராயணசாமி.ம
புது தில்லி
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’ எம்.ஏ.சுசீலா
அன்பிற்குரிய திரு நாராயணசாமி அவர்களுக்கு,
தங்கள் வினா தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்தவிருக்கும்
இலக்கியக் கருத்தரங்கம் தொடர்பாக உள்ளதால் தங்கள் வினாக்களை , என் தளத்தில் புதிதாகத் தொடங்கியுள்ள இலக்கிய உரையாடல் என்னும் பகுதியின் முதல் உரையாடலாகக் கொள்ளலாம் எனக் கருதுகிறேன்.அந்த வாய்ப்பைத் தாங்கள் ஏற்படுத்தித் தந்ததில் மகிழ்ச்சி. 1.தொகுத்து வழங்குதல்-நெறியாளுகை வேறுபாடு
Moderation என்னும் ஆங்கிலச் சொல்லையே நெறியாளுகை எனத் தமிழாக்கியுள்ளோம்.
கருத்தரங்கம் என்பது தொகுத்து வழங்கும் ஒரு கூட்டம் அல்லது நிகழ்வு அல்ல;அதற்கு மேலான சற்றுத் தீவிரத் தன்மை அதற்கு உண்டு.கருத்தரங்கில் பங்கேற்றுக் கட்டுரை வாசிப்போரின் ஆளுமை பற்றிய தெளிவு,புரிதல் இவற்றோடு,அவர்களது கட்டுரைகள் சார்ந்த கருத்துக்களின் மீதான விமரிசனங்களை/அல்லது அந்தக் கட்டுரை தொடர்பான மேலும் சில கருத்துக்களையும் கூறும் உரிமையும்,பார்வையாளர்களிடமிருந்து எழும் விவாதங்களையும்,கேள்விகளையும் - அத்தகைய வாதங்களின் போக்கு - மையக் கருத்துக்கு மாறாகத் திசைதிரும்பிச் சென்றுவிடாமல் நெறிப்படுத்திக் கொண்டு செல்லும் பொறுப்பும் நெறியாளும் நபருக்கு உண்டு.
கருத்தரங்கை நெறிப்படுத்துபவர் குறிப்பிட்ட துறையில் கொஞ்சமாவது பரிச்சயமும்,தேர்ச்சியும் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதே தொகுப்பாளரையும்,நெறியாளுபவரையும் வேறுபடுத்தும் மற்றொரு முக்கியமான அம்சம்.
நாடகம்,திரைப்படம் முதலிய ஊடகங்களில் அனைத்தையும் ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் முழுப் பொறுப்பும் இயக்குநர் வசத்திலேயே இருப்பதால் சில நாடக,திரைப்பட இயக்குநர்கள் ,இயக்கம் என்பதற்கு மாறாக நெறியாளுகை என்று குறிப்பிட்டுக் கொள்வதும் உண்டு.
பி.கு;இறுதியாக..இதைச் சொல்ல வேண்டாமென்று நினைத்தாலும் சொல்லாமலிருக்க முடியவில்லை.
பட்டிமன்றம்,வழக்காடு மன்றம் போன்றவற்றில் முன் வைக்கப்படும் விவாதங்களின் போக்கையும் கூட நடுவர்கள் கிட்டத்தட்ட இந்த முறையிலேதான் சமன் செய்து கொண்டு போக வேண்டுமென்றாலும், (50.60களில் அப்படித்தான் இருந்தது)
இன்றைய இலக்கியச் சூழலில் அவ்வாறு நடைபெறாமல் அவை நீர்த்துப் போய்க் கேலிக் கூத்துக்களாகிவிட்டதால் அங்கே பயன்படும் நடுவர் என்னும் சொல் இங்கே கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
மற்றும் ஒன்று..
தொகுப்பாளர் என்கிற கலாச்சாரமே தொலைக்காட்சி போன்ற ஊடகங்களால் பரவலாக்கப்பட்டு - இலக்கியக்கூட்டங்கள் வரை.-..அண்மையில்,புதிதாக வந்து சேர்ந்த ஒன்றுதான்.
அதற்கு முன்பு வரையில் குறிப்பிட்ட கூட்டத்துக்குத் தலைமை வகிப்பவர்களே அடுத்தடுத்துப் பேச இருப்பவர்களை ஒருங்கிணைத்து நடத்தும் பணியையும் சிறப்பாகச் செய்து கொண்டிருந்தார்கள்.
இன்று...தொகுப்பாளர்களுக்குத் திறமை இருக்கிறதோ,இல்லையோ தோற்ற,நடை உடை பாவனைகள் கவர்ச்சிகரமாக இருந்தால் போதும் என்ற அளவுக்குச் சில இடங்களில் நிலைமை கீழிறங்கிக் கிடக்கிறது.2.புனைவிலக்கியம் பற்றி...
புனைவு என்பது கற்பனை.
நடந்த உண்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கட்டுரைகளைத் தவிரக் கற்பனையான புனைவுகளால் உருவாகும் நாவல்,சிறுகதை,கவிதை ஆகிய அனைத்தும் புனைவிலக்கியங்களே.புனையப்படும் இலக்கியமே புனைவிலக்கியம்.
இன்னும் ஒன்று..
புனையப்படும் எல்லாமே புனைவிலக்கியமாக ஆகிவிடுவதுமில்லை.
புனையப்படும் எழுத்தில்,மெய்யான இலக்கியத் தகுதிகள்,அழகியல்கூறுகள்,உள்ளடக்கச்செறிவு ஆகியவைகளும் உடன் இணையும்போதுதான் புனைவிலக்கியம் என்ற உண்மையான தகுதிப்பாட்டுக்கு அது உரியதாகிறது.